Friday, May 8, 2015

சாமிக்கு கண்ணவிஞ்சு போச்சே

( இது நடந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது. இதிலிருந்து அப்பாவைக் காப்பாற்றிய எங்களால் சாதாரண சளியில் இருந்து அவரைக் காப்பாற்ற இயலாமல் போனது. ஆனாலும் மருத்துவர் ராமகிருஷ்ணன் ஈஷ்வர் அவர்களை நன்றியோடே நினைத்துக் கொள்கிறோம்)
**************************************************************************************************************** 
என்றைக்கும் இல்லாமல் என் தம்பியின் அழைப்பு என்னை எழுப்பியது இன்று. இந்த நேரத்தில் எப்போதும் அழைப்பவனில்லை.
ஏதோ நடந்திருக்கிறது.
“சொல்லுடா”
“ நீ எங்கண்ண இருக்க இப்ப?”
”வீட்லதான். என்னன்னு சொல்லு”
“ ஒன்னும் இல்ல, அப்பாவுக்கு வலது கை திடீர்னு வரல.பேச்சும் இல்ல”
எப்போதும் தைரியமாய் இருப்பவனது குரல் முதன் முறையாக உடைந்து உதறுவதை உணர முடிந்தது. எதையும் மீறி கண்கள் உடைந்தது.
“ சரி, பால்ராஜ் கார எடுத்துக்கிட்டு திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி போ. நானும் அண்ணியும் வந்து விடுகிறோம்.
“சரி”
“மாமாவுக்கு என்ன”
சொன்னேன். விக்டோரியாவின் தேம்பலை நிறுத்த படாத பாடு பட வேண்டி இருந்தது.
ஒரு வழியாய் திண்டுக்கல் போனோம்.
அப்பாவின் மூளையில் ஒரு கட்டி தெரிவதாகவும் , உடனடியாக அறுவை செய்ய வேண்டுமென்றும் சொன்னவர். அதற்கான வசதி திண்டுக்கல்லில் இல்லை என்றும், உடனடியாக திருச்சிக்கு கொண்டு போக வேண்டுமென்றும் சொன்னார்.
அடுத்த இரண்டரை மணி நேரத்தில் திருச்சி மாருதி மருத்துவ மனையில் இருந்தோம்.
கொஞ்சமும் பயமுறுத்தாமல் அதே நேரம் ஆபத்தான கட்டத்தில் இருப்பதையும் சொன்ன நரம்பியல் நிபுணர் மருத்துவர் ராமக்கிருஷ்ணன் ஈஷ்வர் அவர்கள் ஒரு அறுவை செய்தால் குணப்படுத்தி விடலாம் என்றும் நம்பிக்கை தந்தார்.
“ எப்பங்க சார் செய்யனும்?”
“இப்ப, இப்பவே செய்யனும். நாளை என்றாலும் சந்தேகம்தான்”
”சரிங்க சார். செய்திடுங்க”
தம்பி கையைப் பிடித்தான்.
“ என்னடா?”
காதோடு சொன்னான், “ இவ்வளவு பணத்துக்கு எங்க போறது. யோசிச்சியா?”
“ விடு, பார்த்துக்கலாம்”
கையில் இருந்ததும், புரட்டியதுமாக முன்பணம் மற்றும் இன்றைக்கு வாங்க வேண்டிய மருந்துகளுக்குப் போதுமானதாயிருந்தது.
விஜயலட்சுமி என்ற தாயையும் அப்பாவையும் அறுவை அரங்கிற்கு கொண்டு சென்றனர். விஜயலட்சுமியின் மகள் “ மகமாயி எங்க அம்மாவ கொடுத்துடு, மகமாயி எங்க அம்மாவக் கொடுத்துடு...” என்றே தொடர்ந்து அழுது கொண்டிருந்தார்.
மூன்று மணி நேரம் ஓடிற்று.
மருத்துவர் வெளியே வந்தார். ” விஜயலட்சுமி அம்மா அட்டெண்டெண்ட்ஸ் வாங்க”
போனார்கள்.
கட்டி ஏற்கனவே உடைந்து ரத்தத்தில் கலந்து உள்ளதால் அறுவை செய்தாலும் பிழைக்க இயலாது என்றும், அறுவை நடக்கும் போதே எதுவும் நடக்கலாம் என்பதால் அறுவை செய்ய வில்லை என்றும் , வீட்டிற்கு அழைத்து போகுமாறும் சொன்னார்.
அந்த அம்மா முன்னிலும் சத்தமாய் அழுதார்கள்.
எங்களை அழைத்தார்,
பயந்த படியே போனோம்.
“ அருமையா அறுவை முடிஞ்சிடுச்சு சார். பயப்படாதீங்க. ரெண்டு மூனு நாளில் அப்பா பேசுவார் பழையபடி”
“ரொம்ப நன்றிங்க சார்”
வெளியே வந்து அம்மாவிடம் விஷயத்தை சொன்னோம்.
கொஞ்ச நேரத்தில் அம்மா தேம்ப ஆரம்பித்து விட்டது.
“ ஒன்னும் பயப்படாதீங்க அத்த. மாமாவுக்கு நூறு வயசு”
தேம்பல் நிற்கவில்லை.
ஒருக்கால் பணத்துக்கு என்ன பண்ணப் போறோம்னு அழுகுதா. எப்படி டிஸ்சார்ஜ் செய்யப் போகிறோம்னு பயம் வந்துவிட்டதா.
கேட்டே விட்டேன்.
“ அதுல எந்த பயமும் இல்லடா. 10 வட்டிக்காவது வாங்கி வந்து அப்பாவக் கூட்டிட்டு வந்துடுவன்னு தெரியும். “
“அப்புறம் என்ன?”
“ அந்தப் பொண்ணு எப்படி அழுதுச்சு. இந்தப் பாழாப் போன சாமிக்கு கண்ணு அவிஞ்சு போச்சே”

8 comments:

  1. மனதை பாதித்த ஒரு நிகழ்வை யதார்த்தமாகப் பதிந்து மனச்சுமையைப் பகிர்ந்துள்ளீர்கள். இவ்வாறான நிகழ்வை பலர் எதிர்கொள்ளும் சூழல் வருவது இயற்கையே.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  2. யாருக்கு வரும் இந்த உயர் குணம்
    தங்களின் தாய் வணக்கத்திற்கு உரியவர்
    வணங்குகிறேன் தோழர்
    தம 3

    ReplyDelete
    Replies
    1. எல்லாத் தாய்மார்களும் ஈரத் தாய்மார்கள்தானே தோழர்

      Delete
  3. அதுதான் அம்மாவின் உன்னதம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறேன். மிக்க நன்றி தோழர்

      Delete
  4. மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது! உங்களின் தாய் சொன்ன வார்த்தைகள் உள்ளத்தில் இருந்து வந்தவை!

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...