Sunday, August 18, 2019

65/66, காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 2019


சிவன் பிறந்தது எப்போது?
சொல்ல முடியுமா நீங்கள்?

இயேசு பிறந்தது எப்போது?
சொல்ல முடியுமா நீங்கள்?

கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே
நாங்கள் இங்கே இருந்தோம்

நாங்கள் பிறந்து
ரொம்பகாலத்திற்குப் பிறகுதான்
கடவுள்கள் பிறந்தார்கள்

மனிதர்கள் மத்தியிலிருந்துதான்
அவர்கள் பிறந்தார்கள்

நாங்கள்
கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்

தெற்கு பீஹாரில் கட்டப்படவிருந்த, தமது வாழ்வைக் காவு கேட்கக்கூடிய அனைக்கட்டிற்கு எதிராக நடந்த கூட்டமொன்றில் ஆதிவாசி ஒருவர் பாடிய பாடல் இது. இதை தான் தொகுத்தகடவுளுக்கு முன் பிறந்தவர்கள்என்ற ஆதிவாசிகளின் கவிதை நூலில் வைத்திருக்கிறார் தோழர் இந்திரன்.

ஆதிவாசி, காடு, கடவுள் என்கிற வரிசைக்கிரமத்தில் நிச்சயமாக கடவுள்தான் இளையவன். ஏனெனில் ஏதோ ஒரு கட்டத்தில் மனிதனால் படைக்கப்பட்டவனே அவன். ஆதிவாசியா காடா? யார் மூப்பு என்பதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.

ஆதிவாசியும், காடும் ஒன்றிற்காக மற்றொன்று என்ற வரலாற்றிற்கு சொந்தக்காரர்கள். காடு அழிந்தால் கூடவே ஆதிவாசிகளும் அழிந்துவிடுவார்கள். ஆதிவாசிகள் அழிந்தால் காடு அழிந்துவிடும். இன்னும் கொஞ்சம் சரியாய் சொல்வதெனில் இருவரையும் பிரித்துவிட்டால் இருவரும் அழிந்துபோவார்கள்.

அவர்கள் காடுகளில் சுள்ளி பொறுக்கினார்கள். ஆனால் காடு அழிந்துவிடவில்லை. காரணம் ஒரு டசன் கன்றுகளையேனும் நட்டுவிட்டுதான் ஒரு காய்ந்த மரத்தில் அவர்கள் கை வைப்பார்கள்.

வேட்டையாடுவார்கள்தான். ஆனால் அவர்கள் வேட்டையாடி விலங்குகள் அழிந்ததாய் வரலாறு இல்லை.

அவர்கள் காடுகளின் புதல்வர்கள் அல்ல. அவர்களே காடுகள். காடுகளே அவர்கள்.

காடுகளை அழித்து பணப்பயிர்களை விளவித்து கொள்ளை அடிப்பதென்றும், கனிமங்களை சூறையாடிக் கொண்டுபோய் தங்களது ஆயிரமாவது சந்ததிவரைக்கும் சொத்து சேர்ப்பதென்றும் கார்ப்பரேட்டுகளுக்கு வெகுகாலமாய் ஆசை.

இதற்கு காட்டை அழிக்க வேண்டும். எப்படி இத சாத்தியப் படுத்துவது?

யாருக்கு யார் எஜமானன் என்று அறுதியிட முடியாத கார்ப்பரேட்டுகளும் ஆளும் கனவான்களும் இதற்காக நிரம்பக் கசக்கிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. இருவருக்கும் அந்த சூட்சுமம் தெரிந்தே இருந்தது.

காடு அழிய வேண்டும் என்றால் ஆதிவாசிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது புரியாத அளவு மக்குகள் அல்ல அவர்கள்.

இதற்காக அரசுகள் அவ்வப்போது வனச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதை வாடிக்கையாக் கொண்டிருக்கின்றன.

இந்த அடாவடியை 1970 களின் தொடக்கத்தில் இருந்து அரசுகள் ஆரம்பித்துவிட்டன. ஆதிவாசிகளை காடுகளில் இருந்து வெளியேற்ற என்ன வன்முறைகளை எல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்துகொண்டே இருக்கின்றன.

காடுகளில் இருந்து வெளியேறுவதும் செத்து அழிவதும் ஒன்றுதான் என்பதை உணர்ந்த அந்த வன மக்கள் வலுவாக அதை எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் விளைவாக இந்திய வன அமைச்சகம் 18.09.1990 அன்று ஒரு வழிகாடுதலை வெளியிடுகிறது. 25.10.1980 வரை ஆதிமக்கள் அனுபவித்துவரும் நிலங்களை அவர்கள் உரிமை கோருகிற பட்சத்தில் ஒப்படைக்கலாம் என்கிறது அந்த வழிகாட்டுதல் உத்தரவு.

இட்துசாரிகள் பாராளுமன்றத்தில் வலுவாக இருந்த காலத்தில் ஆதிமக்களுக்கான ஒரு ஆதரவுச் சட்டத்தை அவர்கள் கொண்டுவரச் செய்தனர். அதன்படி வனத்தைப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்குக் கிடைத்தது.

இதற்கிடையில் அனுபவ உரிமை கோரிய ஆதிமக்களின் பெரும்பான்மை மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் பி. சண்முகம் அவர்களின் கூற்றுப்படி நாற்பத்தி இரண்டரை லட்சம் கோரிக்கைகளில் பத்தொன்பதே முக்கால் லட்சம் கோரிக்கைகள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. பிரச்சினைகள் வலுவடையவே இதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதன் தீர்ப்பு 24.07.2019 அன்று வரும் என்று தெரிகிறது.

வனம் தவிர ஏதும் அறியாத ஆதிமக்களுக்கே வனம் சொந்தம்.

ஆதிவாசிகளை வனத்தில் இருந்து அப்புறப் படுத்தினால் வனம் அழியும். வனம் அழிந்தால் வன உயிர்கள் அழியும். இது இயற்கை சமநிலையை மிகப் பெரிய அளவில் பாதிக்கும்.

ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன்,

இது குளிர்சாதன அறைகளில் வாழும் நம்மையும் பாதிக்கும்.
****************************************************   

அரசுப்பள்ளி ஆசிரியர்களும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களும் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை, அப்படியே வந்தாலும் பள்ளி  வேலைநேரம் முடியும் வரைக்கும் பள்ளியில் இருப்பதில்லை என்று தமிழக அரசின் அமைச்சர்கள் மிக நீண்டகாலமாகவே புகார் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதைக் கல்வித்துறை அதிகாரிகளும் வழிமொழிந்துகொண்டே இருக்கிறார்கள்.

இதை நெறிப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அதன் விளைவாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் “BIO METRIC ATTENDENCE SYSTEM” கொண்டு வரப்பட்டது.

ஆசிரியர்களின் வருகையை நெறிப்படுத்தவே இந்த நடைமுறை என்று சொல்லப்பட்டாலும் ஆசிரியர்களை அச்சுறுத்தவே என்பது எல்லோருக்கும் புரிந்தே இருந்தது.

ஆனாலும் இந்த நடைமுறைக்குப் பின்னால் நல்ல பலன் இருந்ததை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அந்த வகையில் பையோ மெட்ரிக் சிஸ்டத்தை வரவேற்கவே செய்கிறோம். நாம் இப்போது எழுத வந்தது  அதுகுறித்தெல்லாம் இல்லை.

அந்த APP திறந்ததும் அங்கு அனைத்தும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தன.

“EDIT LANGUAGE” என்றொரு பகுதியும் இருந்தது. அதைத் திறந்து உள்ளே சென்றால் வேறு சில மொழிகளையும் அந்த நடைமுறைக்குள் கொண்டு வருகிற வசதி இருந்தது.

கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் மலையாளம் பேசுகிற மக்கள் அதிகம் இருப்பார்கள். அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளில் இந்த எடிட் ஆப்ஷனைப் பயன்படுத்தி மலையாளத்தை சேர்த்துக் கொள்ள முடியும்.

அதேபோல்தான் ஆந்திராவிற்கு அருகில் உள்ள பள்ளிகளில் தெலுங்கையும், கர்நாடகாவிற்கு அருகில் உள்ள பகுதிகளில் கன்னடத்தையும் இணைத்து பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தது.

திடீரென்று போன வாரத்தில் ஒருநாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்த பையோ மெட்ரிக் இந்தி மற்றும் ஆங்கிலத்திற்கு மாறிப் போயிருந்தது. அனைவருக்கும் அதிர்ச்சி. சரி, மொழியை திருத்துகிற “EDIT LANGUAGE”குள் நுழைந்து தமிழை சேர்க்கலாம் என்று பார்த்தவர்கள் கொதிநிலையின் உச்சத்திற்கே செல்லவேண்டிய நிலை. காரணம் “EDIT LANGUAGE” என்பதே எடுக்கப் பட்டிருந்தது.

தமிழ் மண்ணில் தேவை இல்லாமல் இந்தியை சேர்த்திருந்தாலே கொந்தளிப்பு ஏற்படும்.

இங்கோ தமிழை எடுத்துவிட்டு அந்த இட்த்தில் இந்தி கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இத்தைய நிலையை எப்பாடு பட்டேனும் இந்தியைத் திணிப்பது என்ற முடிவோடு இருக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசு செய்திருந்தால்கூட அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

மூன்றாவது மொழியாக இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று உணர்ச்சி பொங்க முழங்கும் அதிமுக அரசு இதை செய்திருப்பதைத்தான் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பொறுக்க முடியாமல் காக்கை ஆசிரியர் தோழர் முத்தையாவை அழைத்து இதுகுறித்து உரையாடினேன்.

பொறுமையாக அனைத்தையும் கேட்டவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தோழர் முத்தரசன்,  தோழர் திருமாவளவன் ஆகியோரைத் தொடர்புகொண்டு இதைக் கடத்தச் சொன்னார்.

தோழர்கள் முத்தரசனும் திருமாவும் அலைபேசியை எடுக்காத இயலாத நிலையில் தோழர் கே.பி அனைத்தையும் பொறுமையாக காதுகொடுத்து கேட்டார்.  

அவர் உரையாடலை முடித்தவிதம் நிச்சயமாக ஒரு கண்டன அறிக்கையேனும் அவரிடம் இருந்து வரும் என்ற நம்பிக்கையைத் தந்தது.

மாநில செயற்குழுவே கண்டனத் தீர்மனத்தைக் கொண்டு வந்திருந்த்து மகிழ்ச்சியாய் இருந்தது.

அடுத்தநாள் சட்ட சபையில் திமுக உறுப்பினர்கள் கொந்தளித்திருக்கிறார்கள்.

மகிழ்ச்சியாய் இருந்தது

 அமைச்சர் மாண்புமிகு பாண்டியராஜன் இது அதிகாரிகள் மட்டத்தில் நடந்த தவறு என்றும். திருத்திக் கொள்ளப்படும் என்றும் கூரியிருக்கிறார்.

பெரு மகிழ்ச்சியாய் இருந்தது

ஆனால் இன்று மாலை ஆறுமணிக்கு நான் ரேகை வைக்கிறவரை இது மாறவில்லை.
************************************************ 

                  




இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...