Monday, November 25, 2013

நிலைத் தகவல் 22

விக்டோரியாவை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வருவதற்காக போய்க் கொண்டிருந்தேன். ஷைரன் ஒலிக்க ஒரு ஆம்புலன்ஸ் வரவே ஒதுங்கினேன். பக்கத்தில் நின்றிருந்த பாட்டி ஒருவர் கை குவித்து கண்களைமூடி யார் இருப்பதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் “ நல்லா இருக்கணும் மகமாயி” என்றார்.

மனசுக்குள் கிழவியைத் தொழுது கொண்டேன்.

எத்துனை முறை வேண்டுமாயினும் திரும்பத் திரும்ப சொல்வேன்,

“இருக்கவே இருக்கிறது ஈரம்”

Saturday, November 23, 2013

கவிதை
நமத்துப் போய்விடாமல்
உலர்த்திக் கொண்டிருக்கிறது வெயில்
மழையின் நினைவுகளை

தேவியர் இல்லம்


ஆயிரத்து இருநூறு மதிப்பெண்களுக்கு ஆயிரத்தி இருநூறி ஐம்பது பெற்றுவிட மாட்டானா தன் பிள்ளை என்று ஏங்குகிற பெற்றோர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தப் பொது ஆசை கல்வியை எந்த அளவு கீழே கொண்டுபோய் தள்ளுகிறது என்பதை அவர்களில் பெரும்பாலோர் கொஞ்சமும் அறிந்திருக்க நியாயமில்லை.

இத்தகைய சூழலில் “ ஏன் என் பிள்ளைகளை மதிப்பெண்களைக் கொண்டு அளவிடுகிறீர்கள்?” என்று ஒரு தந்தை கேட்கிறார் என்பது ஆச்சரியத்தை மட்டுமல்ல மகிழ்ச்சியையும் சேர்த்தே நம்மிடம் அழைத்து வருகிறது.

குறைவான மதிப்பெண்களைப் பெறுகிற குழந்தை ஒருவனின் தந்தை இப்படி கோவப் படுகிறார் என்றால் ஆச்சிரியப் படுவதற்கு அதில் எதுவும் இல்லை. ஆனால் எண்ணூறுக்கு எழுநூற்றி எண்பது பெற்றிருக்கும் ஒரு குழந்தையின் தந்தை மதிப்பெண் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு உரத்தக் குரலெடுத்து இப்படி கேட்கிறார் என்றால் அவரைக் கொண்டாட வேண்டாமா?

அதுவும் அவருக்கு வலை ஒன்றிருந்து அதில் கல்வி குறித்து அவரளவில் நியாயம் என பட்டவற்றை வெளிப்படையாக எழுதுகிறார் என்றால் அவரைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை நாம் இயங்கிக் கொண்டிருக்கும் தளங்களில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கிற நியாயமான ஆசையில்தான் அவரது வலைதளத்தை அறிமுகம் செய்கிறேன்.

அவர் ஜோதிஜி. அவரது வலை “ தேவியர் இல்லம்”

நாள் முழுக்க விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் “ ஏண்டா, படிக்கலையா?” என்று கேட்டால் “நாளைக்கு எதுவும் டெஸ்ட் இல்லை” என்று சொல்வான். இதை சொல்லிவிட்டு ஜோதிஜி சொல்கிறார், “ பரிட்சைகள்தான் பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன”

இதற்குள் போவதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்லிவிட வேண்டும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு டெஸ்ட் இல்லாத நாட்கள் அபூர்வமானவை. ஒவ்வொரு நாளும் நான்கைந்து டெஸ்டுகள் அவர்களுக்கு. ஆக, குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு அடுத்தநாள் டெஸ்ட்  இல்லை என்று அர்த்தம். இதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் டெஸ்ட் இல்லை என்றால்தான் குழந்தைகள் விளையாட முடியும். எனில் இன்றைய சூழலில் குழந்தைகள் எப்போதாவதுதான் விளையாட முடியும் . எனில் “மாலை முழுதும் விளையாட்டு” என்ற பாரதியின் கனவு பொய்த்துப் போகாதா என்ற ஆதங்கத்தோடு இவரது வலை விவாதிக்கிறது.

பரிட்சைக்காவும், பிரகாசமான எதிர் காலத்திற்காகவும்தான் இன்றைக்கு கல்வி என்றாகிப் போனதே என்கிற கவலையை பகிர்வதோடு பிரகாசம் என்பதுகூட உடனடி வேலை வாய்ப்பு என்கிற அளவில் சுறுங்கிப் போனதே என்றும் கவலைப் படுகிற வலையாக தேவியர் இல்லம் இருக்கிறது.

மனிதர்களை உருவாக்க வேண்டிய கல்வி ஊழியக்காரர்களை உருவாக்குவதோடு சுறுங்கிப் போகிறதே என்பதில் அவருக்குள்ள அக்கறை நியாயமாகவே படுகிறது.

பாடத் திட்டங்களின் கட்டமைப்பு குறித்தும் இந்த வலை சன்னமாக பேசுகிறது. பாடத்திட்டத்திற்கு அப்பால் பாடங்கள் போதிக்கப் படுவதில்லை என்றும் ஜோதிஜி இந்த வலையில் கவலைப் படுகிறார்.

ஒரு முறை பெரியார்தாசனும் அவரது பேத்தியும் வெளியே சென்றிருக்கிறார்கள். ஒரு பேருந்தைப் பார்த்ததும் குழந்தைக் கேட்டிருக்கிறாள்,

“ இது என்ன தாத்தா?”

“ பஸ்”

“ பஸ்னா”

“இதுலதான் ஜனங்க எல்லாம் ஓரிடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போவாங்க”

“ ஜனங்கன்னா”

“ நீயும் நானும்தான்”

“ நான் ?”

“நீ”

“நீ னா?”

“நான்”

”நான் னா நீங்கற நீ னாநாங்கற லூசா நீ “ என்றிருக்கிறாள்.

இப்படி கேள்வி கேட்கும் குழந்தைகளைத்தான் “ ஏய் சத்தம் போடாத. கம்முன்னு உக்காருங்கற பள்ளியில கொண்டு போய் தள்ளிடறோம் என்பார் பெரியார் தாசன்.

அதே ஆதங்கம் இந்த வலையெங்கும் தென்படுகிறது. குழந்தைகளை பேசவிடாமலும் கேள்வி கேட்க விடாமலும் மனனம் செய்து வாந்தி எடுக்க வைக்கும் இன்றைய கல்வி முறையை ஏறத்தாழ இந்த வலையின் அனைத்து பக்கங்கங்களிலும் சபித்தவாறே பயணிக்கிறார் ஜோதிஜி.

போக ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் தேர்ச்சி அறிக்கையில் கையொப்பமிட பெற்ரோரை பள்ளிக்கு வரச் சொல்வார்கள். அது பல இடங்களில் செம காமடியாக இருக்கும்.எனக்கே ஒரு முறை இப்படிப் பட்ட அனுபவம் நேர்ந்தது.

கிஷோர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது அவனது ஆங்கில ஆசிரியரைப் பார்க்க வரிசையில் ஒரு ஆளாய் நின்றிருந்தேன். 188 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். அவனது ஆசிரியர் ஒரு இளைஞர். எனக்கு பாடமே நடத்தினார். ஆறு மாதங்களாக 12 ஆம் வகுப்பிற்கு ஆங்கிலம் நடத்தும் அவர் 22 ஆண்டுகளாக ( அதே பள்ளியில் இரண்டு ஆண்டுகள்) 12 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு ஆங்கிலம் நடத்தும் எனக்கு வகுப்பு எடுக்க வேண்டிய சூழல். எதுவும் பேசாமல் சரிங்க சார் என்று சொல்லிவிட்டு கையொப்பமிட்டுவிட்டு வந்தேன்.

இது கூட பரவாயில்லை. பெற்ரோர் கூட்டம் என்பார்கள். ஆனால் தாயார் போனால் அப்பா இல்லையா என்பார்கள். ஏன் தாய் என்பவள் பெற்றவள் இல்லையா?

என்மகள் என் மனைவி வேலை பார்க்கும் பள்ளியில்தான் படிக்கிறாள். அவளது தேர்ச்சி அறிக்கையில் நாந்தான் கையொப்பமிட வேண்டும். “அம்மாவிடம் வாங்கிக்க என்றால் சிஸ்டர் திட்டுவாங்க என்கிறாள்.

தலைமை ஆசிரியை உள்ளிட்டு எல்லா ஆசிரியர்களும் பெண்களாகவே இருக்கும் ஒரு பள்ளியிலேயே இதுதான் நிலைமை எனில் எங்கு சென்று முட்டிக் கொள்வது.

இத்தகைய கேவலமான ஆணாதிக்க மனோபாவத்தை எதிர்த்தும் அவர் இன்னும் எழுதுவார் என்றே எதிர் பார்க்கிறேன்.

சேவை என்ற நிலையிலிருந்து வணைகமாகிப் போயிருக்கிறது இன்றைய கல்வி. ஏறத்தாழ மளிகைக் கடையில் துவரம்பருப்பு வாங்குவது போல் கல்விக் கடையில் கவ்வி வாங்க வேண்டிய சூழல். இங்கு ஒரு ஆசிரியரின் நிலை என்பது ரேக்கில் இருக்கும் பருப்பு பொட்டலத்தை எடுத்து தருவது மட்டும்தான். இதை இன்னும் கொஞ்சம் ஆழமான அளவில் இவர் புரிந்தெழுத வேண்டும் என்பது நேயர் விருப்பம்.

இந்த வலையில் நான் முக்கியமானதாகக் கருதும் இன்னொரு பதிவு  “தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்கள்” என்பது ஆகும். இன்றைய ஆங்கில வழிக் கல்வி எப்படி பாட்டியையும் பேரப் பிள்ளைகளையும் அந்நியப் படுத்துகிறது என்பதை அழகாக விளக்குகிறது.

மருத்துவம் குறித்து, வவ்வால் பறவையா விலங்கா என்பது குறித்து இப்படி ஏராளம் இருக்கிறது. கல்வியை மட்டுமே நான் எடுத்துக் கொண்டேன்.

அவசியம் பார்க்க வேண்டிய வலை. பாருங்கள்
http://deviyar-illam.blogspot.in/

நன்றி : புதிய தரிசனம்

Monday, November 11, 2013

மாத்தி யோசி

இது 2012 பொங்கலை ஒட்டிய ஒரு தினத்தில் நடந்தது.

ரயிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தொலைக் காட்சியிலிருந்து வெளிப்பட்ட குதூகலமும் கூச்சலும் கொப்பளிக்கிற சத்தமும் கீர்த்தனாவின் கைதட்டலும் ஆவென்ற கூப்பாடும் போகிற போக்கில் அதை பார்க்க வைத்தன. 

ஏதோ ஒரு சேனலின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியின் முன்னோட்டம் அது. 

அனிதா (புஷ்பவனம் குப்புசாமியின் மனைவி ) அமர்ந்திருக்கிறார். கண்கள் கட்டப்பட்ட நிலையில் புஷ்பவனம் ஒரு கம்பினால் பானைகளை உடைக்க முயன்று கொண்டிருந்தார்.

“ மூனு பானைகளையும் உடைச்சுட்டா உங்க அறுபதாம் கல்யாணத்த ஜாம் ஜாம்னு கொண்டாடலாம்” என்று உற்சாகமும் நக்கலும் கொப்பளிக்க அனிதா சொல்ல...

“ஆமாம் என்னோட அறுபதாம் கல்யாணத்துக்கு பொண்ணு யாரு?”

“ஏய்...”

எங்கள் வீட்டில் எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏன் , அனிதாகூட ரசித்து சிரிக்கிறார்.

ஒருக்கால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அனிதா ஒரு கம்பினால் பாவைகளை உடைக்க முயற்சி செய்வதாகவும், “ மூனு பானைகளையும் உடைச்சிட்டா உனது அறுபாதவது கல்யாணத்த ஜாம் ஜாம்னு கொண்டாடலாம்” என்று குப்புசாமி சொல்ல,


 “ஆமாம், அறுபதாம் கல்யாணத்துல எனக்கு  மாப்ள யாரு?” என்று அனிதா கேட்டிருந்தால் குப்புசாமியோ, புஷ்பவனம் கேட்டபோது ரசித்து சிரித்த என் மனைவி மகள் உள்ளிட்டவர்களோ  ரசித்து சிரித்திருப்பார்களா?

Friday, November 8, 2013

10 வெளிச்சம் மாணவர்கள்எனது தாத்தாவின் தந்தை பெயர் எனக்குத் தெரியாது. அதாவது எனது தந்தையின் தாத்தா பெயர் எனக்குத் தெரியாது.

எனது தந்தையின் கரும காரியத்தில் அமர்ந்திருந்த என் தம்பியை புரோகிதர் என் தாத்தாவின் அப்பா பெயரைக் கேட்ட போது அவனுக்குத் தெரிய வில்லை. எனக்கும் தெரியாது என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இந்தப் புள்ளியில் அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த கிஷோருக்கு எனது தாத்தாவின் பெயர் தெரிய வில்லை. அதாவது அவனது அப்பாவின் தாத்தா பெயர் தெரிய வில்லை. எனது தந்தையின் தாத்தா பெயரை சரியாய் சொன்ன எனது சித்தப்பாவிற்கு அவரது அப்பாவின் தாத்தா பெயரை சத்தியமாய் தெரியாது.

ஆக, யாருக்கும் தனது அப்பாவின் தாத்தா பெயர் தெரியாது என்பது தெளிவாகிறது. விதிவிலக்குகள் இருப்பின் என் மீது வழக்குப் போடலாம்.

1965 இல் இறந்த, அதாவது நான் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்த எனது கொள்ளுத் தாத்தனின் பெயர் தெரியவில்லை. ஆனால் நான் பிறப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செத்துப் போன பாரதியின் தகப்பன் பெயர் எனக்கு அத்துப் படி. அது ஏன்?

ஏன் எனில் பாரதி எனது மண்ணின் மகாகவி. ஏன் அவன் மகாகவி? அவனை ஏன் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்?

என்னைப் பொருத்தவரை அவனை நான் நினைத்துக் கொண்டிருப்பதற்கும், அவனை மகாகவி என்று அழைப்பதற்கும் ஒரே காரணம்,

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்என்ற அவனது ஒரு வரிதான்

இந்த ஒற்றை வரியை ஒரு இயக்கமாகவே  மாற்றியிருக்கிறார் செரின். அந்த இயக்கத்தின் செயல்பாடுகளை எடுத்துப் போகவும் கல்வி குறித்து சிந்திப்பவர்களை செயல்படுபவர்களைக் கொண்டாடவும் அது குறித்த ஆக்கங்களை கொண்டு செல்லவும் அவரால் ஆரம்பிக்கப் பட்ட வலைதான் “ வெளிச்சம் மாணவர்கள்”

“ கல்வி என்பது கடைச் சரக்கல்ல. அது சமூக மாற்றத்திற்கான ஆயுதம்” என்கிறது இந்த வலை.

வெளிச்சம் மாணவர்கள் என்ற அமைப்பும் வலையும் வேறு வேறாகத் தெரியவில்லை.  தங்களது கள செயல்பாட்டினை, போராட்டங்களை கருத்துத் தளத்தில் விவாதிக்கவும் வெகு சனத்திடம் கொண்டு செல்லவுமான ஒரு ஊடகமாகவே அவரது வலை இருக்கிறது.  இந்த ஊடகத் தளத்தில் விவாதித்து பயணித்து கண்டறியபட்ட போக்குகளை செயல் படுத்துகிற களமாகவே அவரது அமைப்பு இருக்கிறது.

சக மனிதனுக்காக கவலைப் படும் இயல்பான மனித குணத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடாகத்தான் இந்த வலையை செரின் பார்க்கிறார்.

எந்த ஒரு மாணவனும் பணம் இல்லை என்ற காரணத்திற்காக தனது கல்வியை இழந்துவிடக் கூடாது. அவனும் உயர் கல்வியை அடைய வேண்டும் என்பதே வெளிச்சம் மாணவர்களின் குறிக்கோள் என்று பிரகடனம் செய்கிறது இந்த வலை. அதிலும் முதல் தலைமுறை மாணவர்களையே இது இலக்காகக் கொண்டுள்ளது.

எல்லாம் கெட்டுக் கிடக்கு. நாம ஒரு ஆளு நெனச்சு என்ன ஆகப் போகுது என்கிற பொதுப் புத்தியைத் துப்பி தூரக் கிடாசியிருக்கிறது வெளிச்சம் மாணவர்கள்.

அஃப்ரியலூருக்கு அருகில் உள்ள பிச்சிக்குழி என்ற கிராமத்தைச் சார்ந்த செந்தில் என்கிற பையன் பள்ளியிறுதித் தேர்வில் நிறைய மதிப் பெண்களைப் பெற்றிருந்தும் பணம் இல்லாத காரணத்தினால் முந்திரிக்காட்டுக்கு வேலைக்குப் போவதாக செய்தித் தாளில் பார்த்த அந்தப் புள்ளியில்தான் “ வெளிச்சம் மாணவர்கள்” அமைப்பின் செயல் பாடு தொடங்குகிறது.

அந்த மாணவனது படிப்புக்கான ஏற்பாடுகளை செய்கிறார். அலைகிறார். காசு சேர்க்கிறார். படிக்க வைக்கிறார். அந்த செந்தில் இன்று ஓமனில் பணி புரியும் ஒரு இளம் விஞ்ஞானி என்பதை இந்த வலை நமக்குத் தருகிறது.

எந்த இடத்திலும் பணத்தை கையால் வாங்குவதில்லை. மாணவர்களுக்கான கல்வித் தொகையை காசோலையாக வாங்கி கல்லூரிக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

“ நல்லாப் படிடா. பிச்சை எடுத்தாவது உன்னைப் படிக்க வைக்கிறேன்” என்று பெத்தப் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் சொல்வது வாடிக்கை. ஆனால் 2009 ஆம் ஆண்டு போதிய ஸ்பான்சர்கள் கிடைக்காத காரணத்தால் அமைப்பினர் மக்களிடம் உண்டியலடித்து 48 மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டியுள்ளனர் என்பதை இந்த வலையில் பார்க்க முடிகிறது.

இவர்களது இந்தப் போராட்டத்தை தமிழக அரசியல், டெக்கான் குரோனிகல், NDTV போன்ற ஊடகங்கள் வெளிட்டதன் விளைவாகவே முதல் தலை முறைக்கான இலவச உயர் கல்விக்கான அரசானை வந்தது என்கிற தகவலை இந்த வலை தருகிறது. 

அதை செயல்படுத்த சொல்லி நீதி மன்றம் சென்று போராடி வென்ற கதை இதில் உள்ளது.

2012 ஆம் ஆண்டைய  “ child morality estimates" என்கிகிற யூனிசெப்பின் அறிக்கையை வேதனையோடும் வெளிப்படையாகவும் விவாதிக்கிறது இந்த வலையின் ஒரு பதிவு.

போதிய சத்துணவு இன்மையால் ஒவ்வொரு நாளும் 19000 இந்தியக் குழந்தைகள் செத்து மடிகின்றன ஒரு விவரத்தை அதில் பார்க்கிறோம்.2011 ஆம் ஆண்டு மட்டும் 15 லட்சத்து ஐம்பதாயிரம் இந்தியக் குழந்தைகள் சத்துணவு இன்மையால் இறந்திருக்கிறார்கள் என்ற தகவவலை நம்மைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனத்தில் அந்த ஆண்டு 2 லட்சத்தி நாற்பத்தி ஒன்பதாயிரம் குழந்தைகள் மட்டுமே ஒப்பிட்டுக் காட்டுகிறது அந்தப் பதிவு.

இதைப் படிக்க வேண்டியவர்கள் படித்தால் நலமாகும்.

“ உயர் கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம்” என்கிறது இந்த வலை. 

சபிக்கப் பட்ட ஒரு தேசத்தில் வாழ்கிற, எல்லோருக்கும் கல்வி என்கிற நியாயமான கோரிக்கையை ஏற்கிற யாவரும் பார்க்க வேண்டிய வலை. 

உறுதியாய் சொல்கிறேன் இந்த வலை நம்மை இயக்கப்பட உந்தித் தள்ளும்.  பாருங்கள்

http://velichamstudents.blogspot.in/

நன்றி : “ புதிய தரிசனம்”
 

 

Monday, November 4, 2013

கேளிர்?

சேறு
நாற்று நடும் 
கருப்பாத்தா

வேப்பமர நிழல்
கயிற்றுக் கட்டில்
ஆண்டை

ஏசி அறை
இருண்ட வெளிச்சம்
மேசை துடைக்கும்
சிறுவன்

ருசித்து உண்ணும் 
மந்திரி

குமட்டும் நாற்றம்
சாக்கடை அள்ளும் 
காத்தான்

சாரதி காட்டன்
செண்ட்
சேர்மன் பவுடர்பழனி

மன்னித்து விடு 
பூங்குன்றா

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...