|
Wednesday, December 29, 2010
பூக்களை விற்ற காசில்...
Thursday, December 16, 2010
ஏற்க இயலவில்லை ...
ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு என்கிறார்கள். எனில் இதில் எத்தனை ஆயிரம் கோடிகள் ஊழலாய் மாறியிருக்க வாய்ப்புண்டு என கணக்கிட்டுப் பார்க்கிறார்கள். எனில் யார் யாருக்கு எவ்வளவு கை மாறியிருக்கும் என ஊருக்கே கேட்கும்படி ரகசியமாய் கிசுகிசுக்கிறார்கள். இது குறித்து பாராளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு விசாரனை நடத்த வேண்டும் என்கிறார்கள்.
அமைச்சர் மீது வழக்குப் போட அனுமதி கேட்டபோது எதுவுமே பேசாமல் மௌனம் காத்தமைக்காக பிரதமர் அலுவலகத்தை உச்சநீதி மன்றம் கண்டனித்துள்ளது. இன்னின்ன காரணங்களால் அனுமதிக்க இயலாது என்றாவது சொல்லியிருக்க வேண்டாமா என்று கேட்கிறார்கள் நீதியரசர்கள். அந்த மௌனத்தை உள்நோக்கம் கலந்த அலட்சியத்தின் உச்சம் என்றே அவர்கள் பார்க்கிறார்கள்.
தனது அறுபது ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் உச்சநீதி மன்றத்தின் அதிருப்தி இந்த அளவுக்கு முன்னெப்போதும் பிரதமர் அலுவலகத்தின் மீது விழுந்ததில்லை என்கிறார் அத்வானி. பிரதமர் ஒருவரிடம் உச்சநீதி மன்றம் கேள்வி கேட்பது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை என்கிறார்கள் யெச்சூரியும், பிருந்தா காரத்தும்.
இந்த விஷயத்தில் தான் சட்டத்தி
ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடியை சாக்கிலே கட்டினால் எத்தனை லாரிகளுக்கு தேறும் என்பது குத்து மதிப்பாகக் கூட நமக்குத் தெரியாது. திரும்பிய திசையெங்கும், கண்னில் படுகிற யாவரும் இது பற்றியே பேசுகிறார்கள். போக இதை விட முக்கியமான விஷயம் குறித்து தேவையான அளவிற்கு விவாதம் தொடங்கப் படவேயில்லை என்று படுவதால் அது குறித்து பேசலாம் என்று படுகிறது.
எந்த தொலைக் காட்சி என்று சரியாய் நினைவில்லை. சுப.வீரபாண்டியன் அய்யாதான் தலைமை. அந்த நிகழ்ச்சியில் உச்சத்துக்கே ஏறி நின்று பேசினார் ராசா. " நிரம்பி வழியும் இந்த அவையில் வேண்டுமானால் ஜாதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனது கிராமத்தில் எனது ஜாதிதான் எனது முகவரி" என்கிற மாதிரி உணர்ச்சிப் பிழம்பாய் ராசா அவர்கள் வெடித்தபோது அதில் உள்ள நியாயம் சுட்டது. சத்தியமாய் சொல்கிறேன், பனித்த கண்களோடுதான் கை தட்டினேன். கலைஞரும், கனிமொழியும், ரஜினியும் கூட அதே மனநிலையில் இருந்ததையே தொலைக் காட்சியில் பார்க்க முடிந்தது.
ஸ்பெக்ட்ராம் விஷயம் கசியத் தொடங்கிய நாள் முதலே "ராசா ஒரு தலித் என்பதால் எப்படி வேண்டுமானாலும் அபாண்டமாக பேசலாமா?" என்கிற தொனியில் தொடர்ந்து பேசி வருகிறார் கலைஞர். நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாக நம்
எதிர்வாதம் செய்வதற்கும், தன்னை நிரபராதி என மெய்ப்பித்துக் கொள்வதற்கும்
திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகே, இன்னும் புரியும்படிக்கு சொல்வதெனில் கலைஞர் அவர்கள் தண்டவாளத்தில் தலை வைத்துப் புரட்சித்த கல்லக்குடிக்கு மிக அருகே திண்ணியம் என்றொரு சின்ன கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவராய் செயல் படும் தலைவியின் கணவரிடம் (அவர் ஓய்வு பெற்ர தலைமை ஆசிரியர் என்பதுதான் கொடுமயிலுங் கொடுமை ) தனது தங்கைக்கு தொகுப்பு வீடு ஒதுக்கித் தருமாறு ஒரு தொகையினத் தருகிறார் ஒருவர். அவர் ஒரு தலித். அநேகமாக அவர் அந்த ஊரின் தலையாரியாக இருக்கக் கூடும். வீடு ஒதுக்கப் படாதததல் கொடுத்த்ப் பணத்தைத் திரும்பக் கேட்கிறார். கிடைக்காது போகவே தண்டோரா போட்டு விஷயத்தை மக்களிடம் கொண்டு போகிறார்.
கொடுத்தப் பணத்தை திருப்பிக் கேட்டதற்காகத்தான் கலைஞர் அவர்களே திண்னியத்தில் ஒரு தலித் பீத் தண்ணீ குடிக்க நேர்ந்தது.
"தலித் என்பதால் ராசா மீது அபாண்டமாய் குற்றம் சுமத்துகிறீர்களே. நியாயமா? என்று கொதிக்கும் கலைஞர் அவர்களே...
திண்ணியத்தில் ஒரு தலித் வாயில் ஆதிக்க சாதிகள் பீத் தண்ணியை ஊற்ரியபோது " தலித் என்பதால் பீத் தண்ணியை ஊற்றுவீர்களா பாவிகளே" என்று ஏன் கலைஞரே நீங்கள் குமுறவே இல்லை?
உத்தப்புரத்தில் தலித்துகளுக்கு நிழற்குடை அமைப்பதற்கு திரு. டி.கே.ரெங்கராஜன் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொகை தருகிறார். ஆனால் அங்கே நிழற்குடை அமைத்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என சொல்லி அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மறுத்து விட்டார் என்ற சேதி எனக்கே தெரியும் போது உங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்ல இயலாது.
தலித்துகளுக்கு நிழற்குடை அமைத்துக் கொடுத்தால் என்ன மாதிரியான சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும்?. பச்சையாக சொல்வதெனில் அங்கே நிழற்குடை அமைத்தால் தலித்துகள் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்வார்கள். இது ஆதிக்க சாதிக் காரர்களை கொதிப் படையச் செய்யும். அதனால் அங்கு சட்டம் ஒழுங்கு கெடும் என்பதுதானே மாவட்ட ஆட்சித் தலை
தலித்துக்கள் என்றால் அவ்வளவு கேவலமா? அவர்கள் கால்களைத் தொங்கப் போட்
உச்சமாக ஒன்றை சொல்லிவிட வேண்டும். எது எப்படியோ அதை விசாரனை தீர்மானிக்கட்டும். ஆனால் பெரம்பலூர் கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே பெரம்பலூருக்கு அதிகம் செய்தவர் ராசா அவர்கள்.
பெரம்பலூர் தனித் தொகுதியிலிரு ந்து மாறி பொதுத் தொகுதியானவு டன் நீங்கள் என்ன செய்தீர்கள்? பெரம்பலூர்க் காரரான ராசாவை நீ லகிரிக்கு அனுப்பினீர்கள்.
பொதுத் தொகுதியாய் மாறினாலும் ராசாதான் பெரம்பலூர் வேட்ப்பாளர் என்று ஏன் கலைஞரே நீங்கள் அறிவிக்க வில்லை.
பொதுத் தொகுதியில் தலித் ஒருவருக்கு கட்சிக்காரர்கள் வேலை பார்க்க மாட்டார்கள் என்று அஞ்சினீர்களா? அல்லது பொதுத் தொகுதியில் தலித் நிற்க்கக் கூடாது என்பதுதான் உங்கள் முடிவுமா? எனக்கென்னவோ அப்படித்தான் என்று தோன்றுகிறது கலைஞர் அவர்களே.
எனில், சேரியில் பிறந்த தலித் சேரியில்தான் வாழ வேண்டும், தனித் தொகுதியில்தான் நிற்க வேண்டுமா கலைஞர் அவர்களே?
இதை, உங்களுக்குத் தனித் தொகுதி இருப்பதால் பொது தொகுதி கிடையாது என்றும் கொள்ள முடியுமே கலைஞர் அவர்களே?
ஆமாம் எனில் உங்களுக்கு சேரி இருப்பதால் பொதுத் தெரு கிடையா
"ஒரு தலித் என்பதால் ராசாவின் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தலாமா? என்ற உங்கள் கூற்றை ஏற்க இயலவில்லை , மன்னியுங்கள் கலைஞர் அவர்களே.
Saturday, September 4, 2010
ஓவியத்தில் கசியும் அரசியல்
எடுத்த எடுப்பிலேயே எனக்கு ஓவியம் குறித்து எதுவும் தெரியாது என்பதை சொல்லிவிடுவதுதான் சரி என்று படுகிறது. எதற்கு தேவை இல்லாமல் ஒரு எதிர்பார்ப்பை உங்களுக்குள் வளரவிடும் குற்றத்தை செய்துகொண்டு? எதோ நல்ல ஓவியங்களை கொஞ்சம் ரசிக்கத் தெரியும் என்பதோடு சரி. நான் ரசிப்பவை எல்லாம் நல்லவைதானா என்பதும் கூட எனக்குத் தெரியாது. நான் நின்று நேரமெடுத்து ரசிக்காதவை நல்லவைகள் அல்ல என்றும் சொல்ல முடியாது. இப்படி ரசிப்பதற்கும் தள்ளிவிடுவதற்கும் எனக்குள் எந்த அளவு கோளும் இல்லை. ஏதோ என்னளவில் என்னை ஈர்க்கும் எதையும் அவசியம் ரசிக்கவே செய்கிறேன். இந்த அளவிற்கு எனக்கு ஒரு மிக சன்னமான அளவிற்கு ஓவியத்தின் மேல் ஈர்ப்பும் ரசனையும் வருவதற்கு கூட அய்யா வைகரை அவர்களும் யுகமாயினி சித்தன் அவர்களும்தான் காரணம் என்பதையும் அவசியம் பதியா விட்டால் நான் நன்றி கொன்றவனாவேன்.
இவர்கள் இருவரின் அதிலுங்குறிப்பாக வைகரை அவர்களின் தொடர்பு கிடைக்கும் வரை எழுத்திலக்கியத்திற்கான ஒரு துணைக் கருவி என்றும் எழுத்திலக்கியம் மட்டுமே தனித்து நிற்கும் அளவில் உசத்தியானது என்ற திமிர் என்று சொல்ல முடியாவிட்டாலும் அதை ஒட்டிய அளவில் அது போல ஏதோ ஒன்றோடும் இருந்தவன். ஏதோ ஒரு முறை ஏதோ ஒரு வேலையாக சென்னைக்கு வந்திருந்த போது வைகரை அய்யா அவர்கள் என்னை மருதுவின் ஓவியக் கண்காட்சிக்கு அழைத்துப் போனார். அதுதான் நான் பார்த்த முதல் ஓவியக் கண்காட்சி. அதுதான் முதல் என்பதற்காக ஏதோ அதன் பிறகு நிறைய ஓவியக் கண்காட்சிகளைப் பார்த்திருக்கிறேன் என்றும் பொருள் அல்ல. மருதுவின் கண்காட்சிக்குப் பிறகு இதுதான் என்ற வகையில் இரண்டாவது கண்காட்சி இது. என்றாலும் இந்த இரண்டு கண்காட்சிகளுக்கு மிடையில் எனது ஓவியம் குறித்த பார்வை கொஞ்சம் மாறி இருந்தது என்னவோ உண்மைதான். ஓவியம் மற்ற படைப்பிலக்கியங்களப் போலவே தனித்து நின்று இயங்கி உணர்த்தும் என்ற அளவுக்கு இப்போது எனக்கு புரிதல் உண்டு.
இப்போதும் சென்னைக்குத்தான் வந்திருக்கிறேன். இந்த முறை "தமிழ் நாடு பாட நூல் கழகம்" பள்ளிக் குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் முகாமின் ஒரு ஊழியனாக.
"தமிழ் நாடு பாட நூல் கழகம்" சமச்சீர் கல்விக்கு ஏற்ப நமது பள்ளிக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் பணியினைத் துவக்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கப் பட்டு பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள முகாமில் அதிகாலை தொடங்கி பின்னிரவு வரை பணி நீள்வது உடலையும் மனதையும் சற்று பாதிக்கவே செய்கிறது என்ற போதிலும் நண்பர்கள் சரவணன், சிவா, ஏழுமலை, அண்ணன் முத்து, அண்ணன் ஸ்டீபன்ராஜ், தோழர் லட்சுமி, அண்ணன் சேலம் சுப்பிரமணி, அண்ணன் மோனோ காசி, நண்பன் சேகர், தம்பி தேவதாஸ், தம்பி அறச்செல்வன் ஆகியோரோடான பணி என்பது ஒரு சுகமான அனுபவமாகவே உள்ளது.
அதிலும் தம்பி தேவதாஸோடு என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும் விழித்திருந்து வேலை பார்க்கலாம். எதை எது விரட்டுகிறது என்றே தெரியாமல் நேரமும் வேலையும் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டு ஓடும். அதிலும் அந்தத் தம்பியோடு எப்போதும் இணைந்திருக்கவே எனக்கு விருப்பமாய் இருக்கிறது. காரணம் இதுதான். தான் எப்போதும் சாலமோன் பாப்பையாவோடு இருப்பதையே விரும்புவதாக வைரமுத்து ஒரு முறை சொன்னாராம். ஏனென்று கேட்ட போது பாப்பையாவோடு இருந்தால்தான் தான் கொஞ்சம் சிவப்பாகத் தெரிவதாகவும் சொன்னாராம். எனக்கும் தம்பிக்குமான வண்ண இடைவெளி ரொம்ப சன்னம்தான் என்றாலும் அந்த சன்னமான வித்தியாச்திற்காகவே அவரோடு கூட இருக்கச் சொல்லி என் உள் மனது என்னை கட்டாயப் படுத்துகிறது.
ஒரு புதன் மாலை "இன்று இத்தோடு எல்லோரும் வேலையை முடித்துக் கொண்டு ஒரு முக்கியமான இடத்துக்குப் போகலாம்,கிளம்புங்க," என்று அவசரப் படுத்தினார்.
முகாமிற்குள்ளேயே அடைந்து கிடந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கும் எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை. காலார, மனதார வெளியே போய் வந்தால் பரவாயில்லை என்று படவே எங்கே என்று கூட கேட்கவில்லை. குளித்து உடை மாற்றிக் கொண்டு கிளம்பினால் நாங்கள் வெளியே வருவதற்குள் இரண்டு ஆட்டோக்களை ஏற்பாடு செய்திருந்தார். ஆட்டோ நகரத் தொடங்கியதும் கேட்டேன்
"ஆமாம் தேவா எங்க போறோம்?"
"வாங்க சொல்லாமலா போய்டுவேன்?" என்று சமாளித்துக் கொண்டே வந்தவர் ஒரு வழியாய் இரக்கப்பட்டு சொன்னார் " நாம இப்ப ஆழ்வார்பேட்டைல நடக்கிற ஒரு ஓவியக் கண்காட்சிக்கு போகிறோம். போதுமா?"
"ஆஹா!, யாரோடது?"
"நம்ம மேனகா மேடத்தோடது"
பொதுவாகவே ஓவியர்கள் குறித்து ஒன்றும் தெரியாதுதான் ஆனாலும் நமக்குத் தெரிந்த வட்டத்திற்குள் மேனகா அகப்படாமல் போகவே
"எந்த மேனகா?"
"நம்ம நரேஷ் சார் வொய்ஃப்."
புரிந்தது. கல்வித் துறை பெற்றிருந்த ஆகச் சிறந்த, ஆக யோக்கியமான, இரண்டு கை விரல்களின் எண்ணிக்கைக்குள் அகப்படும் அதிகாரிகளுள் நரேஷும் ஒருவர். எங்கு போனாலும் மனிதர்களை தரம் பிரிக்கும் சல்லடைகளோடே போகும்எனது நல்ல நண்பர்க்ளில் பலர் சொன்னதை வைத்துப் பார்க்கும் போது, நான் என் வாழ்நாளின் பெரும் பயனாக கருதக் கூடிய பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் சார் அவர்களோடு நான் பொருத்திப் பார்க்கிற தகுதி வாய்ந்த இளைஞர். என் ஊர்தான் இவருக்கும். நூலகத் துறைக்குப் போயிருக்கிறார். என்னை விட குறைந்தது பத்து ஆண்டுகளாவது இளையவர். அந்த வகையில் நான் ஓய்வு பெற இருக்கும் இன்னுமொரு பதினோரு ஆண்டு கால இடைவெளிக்குள் மீண்டும் கல்வித் துறைக்குள் வந்து அவருக்கு கீழ் பணியாற்றும் வாய்ப்பினை எனக்குத் தருவார் என்பதேகூட இனிப்பான நம்பிக்கைதான்.
அவரது மனைவிதான் மேனகா எனில் இன்னும் இளைய பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். எனில் முப்பதை நெருங்கிய அல்லது முப்பதை சற்றே தாண்டிய, ஓவியக் களத்தில் இன்னும் குறைந்த பட்சம் நாற்பது ஆண்டுகளையாவது சேமிப்பில் வைத் திருக்கிற ஒரு குட்டிப் பெண்ணின் ஓவியக் கண்காட்சிக்குப் போகிறோம் என்ற உணர்வே ஏற்கனவே செலவு செய்திருந்த காலண்டர்களில் ஒரு நான்கைந்தையாவது என்னிடம் திருப்பிக் கொண்டு வந்து விட்டது.ஆட்டோவிலிருந்து இறங்குவதற்குள் நான் நான்கைந்து ஆண்டுகள் குறைந்து போனேன்.
உள்ளுக்குள் நுழைந்தோம். அப்போதுதான் நடிகர் சிவக்குமார் அங்கிருந்து கிளம்பிப் போனதாக சொன்னார்கள். நுனி நாக்கு ஆங்கிலமும் அடிக்கப் பட்ட திரவத்தின் நறு மணமும் கம கமக்க அங்குமிங்கும் நடந்து கொண்டிரு ந்த மேல் மட்டத்து சனங்களும் திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையே ஊடாடி, நான் பெரிதும் ரசித்து மதிக்கிற மொழியைப் பேசுகிற, எளிமையையும் ஈரத்தையும் மட்டுமே தங்களது முகவரியாயும் இதயமாகவும் கொண்டிருக்கிற என் சனங்களையும் பார்க்க முடிந்தது.
நூறுக்கு சற்று ஒட்டிய எண்ணிக்கையில், சிறிதாய், பெரிதாய், வண்ண வண்ணமாய் ஓவியங்கள் ஒரு அழகான, நேர்த்தியான வரிசையில் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. மரபு சார்ந்த, நவீன ,இன்னும் என்னென்ன வகைகள் உண்டோ அத்தனை வகை ஓவியங்களையும் அங்கே பார்க்க முடிந்தது. ஒரு சின்ன இலையிலிருந்து ஒரு மிகப் பிருமாண்டமான மரம் வரைக்கும், ஒரு எளிய ஓலைக் குடிசையிலிருந்து அதி நவீன மாட மாளிகைகள் வரைக்கும், ஒரு சிரிய தோப்பிலிருந்து ஒரு பெரிய காட்சி வரைக்கும் என்று வாழ்வின் சகல நிலைகளிலும் உள்ள இரண்டு முனைகளையும் சரியாய் உள்வாங்கி சரியாய் வெளிப்படுத்தும் பாங்கு நிசத்துக்குமே அலாதியானதுதான்
நவீன ஓவியங்களைப் பார்த்து வாயைப் பிளந்தவாறு நின்றுகொண்டிருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. பொதுவாகவே நவீன ஓவியங்களின் மீது ஏகத்துக்கும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சிலர் வறட்டுத் தனமாக நவீன ஓவியங்களின் புரியாமயைக் காரணம் காட்டி அவற்றை நிராகரிப்பதை ஏற்க இயலாது.அதை அப்படித்தான் ஏற்க வேண்டுமெனில் பின் நவீனப் படைப்புகளையும், இருன்மை மற்றும் படிமம் சார்ந்து புனையப்படும் படைப்புகளையும் நாம் நிராகரித்து இழக்க வேண்டி வரும். நல்லது கெட்டது என்ற வகையில் வரும் விமர்சனங்களை மட்டுமே எதிர் கொண்டு மற்றவற்றை நிராகரிப்பதே சரியெனப் படுகிறது.
நுண்கலை வகையை சார்ந்த ஓவியங்களையும் ரசிக்க ஒரு திரள் இருந்தது. இரண்டையும் ரசிக்கும் திரள்தான் அந்த அரங்கில் பெரும்பான்மை என்பதுதான் மிகுந்த ஆரோக்கியமான விஷயமே. நம்மைப் பொறுத்தவரை புனைவும் பின் நவீனத்துவமும் கைவரப் பெற்றவரால் மட்டுமே நவீன ஓவியங்களை படைக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
ஆங்காங்கே கொத்துக் கொத்தாக நின்று சிலாகித்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருந்தார்கள்.சிலரோ அங்கு வைக்கப் பட்டிருந்த குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டுக்குமே நமக்கு ஞானம் போதாது என்பதால் அதற்குள் நான் நுழைய வில்லை. நானும் கொஞ்சம் சொக்கித்தான் போயிருந்தேன். மருதுவின் கண்காட்சியின் போது நான் முற்றிலுமாக அதனோடு ஒட்ட இயலாமல் கொஞ்சம் அந்நியப்பட்டுக் கிடந்தேன். காரணம் அப்போது வந்திருந்தவர்களில் பெரும்பான்மையோர் ஒவியத்தில் அதிகம் புலமை பெற்றிருந்தவர்கள். அதில் அதிகமானோர் ஓவியம் குறித்து பல கருத்தரங்குகளில் மணிக் கணக்காக பேசிக் கொண்டிருப்பவர்கள். ரப்பர் பந்து கிரிக்கெட்டைக்கூட தூர இருந்தே ரசித்துப் பழக்கப் பட்டிருந்த எனக்கு தெண்டுல்கர் மற்றும் தோனியின் அருகிருந்து பாக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது ஏற்படும் படபடப்பும் அந்நியத் தன்மையுமே எனக்கன்று இருந்தது. அன்றிருந்த மிரட்சி இல்லை என்பதால் இந்த ஓவியங்களுக்கு நெருங்கிப் போவது ஒன்றும் கடினமாக இல்லை.
முடிந்து ஏறத்தாழ மூன்று வாரங்கள் ஆன நிலையிலும் அதிலிரண்டு படங்கள் வழக்கமாக எடுத்தக் காரியத்தில் குவிந்துவிடும் என் கவனத்தை சலனப் படுத்திக் கொண்டே இருக்கின்றன.
அதிலொன்று, ஒரு ஓலைக் குடிசைக்கு முன்னால் சகல சக்திகளாலும் சக்கையாய் சுரண்டப் பட்டு எலும்பும், ஏதோ அரைக் கிலோ சதையும், கொஞ்சம் தோளும் என்று இருக்கும் நிலையிலும் நம்பிக்கையின் கங்கை இன்னமும் கண்களில் தேக்கி வைத்து குதிக் காலிட்டு குந்தியிருக்கும் கிழவியின் படம். "காட்டம்மா" என்று கத்த இருந்தவன் படாத பாடு பட்டு அடக்கிக் கொண்டேன். யாருக்கும் தெரியாமல் கசிவை துடைத்துக் கொண்டேன். வெளிப்படையாய் அழுவதுகூட சகிக்கமுடியாத பெருங்குற்றம் என்பதைதான் இந்த பாழாய்ப் போன நாகரீகமும் படிப்பும் கற்றுத் தந்திருக்கிறதே.
களை வெட்டி, நாற்று நட்டு, சித்தாள் வேலை பார்த்து, கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எருமை மேய்த்து என்பதாய் உழைத்து உழைத்தே தேய்ந்து போன நிலையிலும், எண்பதுகளின் மத்தியிலும் யார் தயவும் இன்றி மைல் கணக்காய் நடக்கும் என் அம்மாயி "காட்டம்மா " குதிக் காலிட்டு குந்தியிருப்பதாகவே பட்டது எனக்கு. அவ்வளவு தத்ரூபம். இருபது நிமிடங்களாவது அந்தப் படத்தின் முன் நின்றிருப்பேன். கொஞ்சம் கட்டுப் படுத்த முடியாதபோது கழிப்பறைக்குள் சென்று ஒரு ஏழெட்டு சொட்டு அழுதுவிட்டுத்தான் வந்தேன் மேனகா.
ஒன்று சொல்ல வேண்டும் மேனகா, அந்தக் கிழவியின் சோகத்தில், முற்றாய் முழுதாய் சுரண்டப்பட்ட எங்கள் கிழவியின் வாழ்க்கையில் ஒரு அரசியல் ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, அதுதான் உண்மை மேனகா. அது வர்ணமாய், வர்க்கமாய் விரிந்து பரந்து கிடக்கிறது . இந்த உண்மையும் அதற்குள் மிகக் கவனமாக தன்னை ஒளித்துக் கொண்டு தன்னைப் பாதுகாத்து வரும் அரசியலும் உங்களுக்குள் பிடிபட்டு உங்கள் விரல் வழி கசியும் போது மேனகாவின் படைப்புகள் இன்னுமும் மெருகு பெரும்.
அடுத்ததாய் ஒரு இரண்டு மைல் தொலைவை மிகத் தத்ரூபமாக வரைந்திருந்தார். மலைகளும், மரங்களும், கசியும் வெளிச்சமும் , மக்களும் , பறவைகளும் என்று மிகச் சரியான ஓவியம்.வெளிச்சத்தை சரியானபடி வித்தியாசப் படுத்தி காட்டி இருந்தது சொக்க வைத்தது. அதே போல கல்லை வெட்டி, சுமந்து, செதுக்கி சிலையாக்கியவனெல்லாம் இன்னமும் இரண்டு மூன்று மைல்களுக்கப்பால் நின்றுதான் தரிசனம் பெற முடியும் என்ற உண்மை தரும் கோவமும் மேனகா விரல் வழி ஓவியமாய் கசிய வேண்டும். இது நடக்கும் என்றே நம்புகிறேன்.
என் அம்மாயி பார்த்தால் இப்படித்தான் சொல்லும் "அச்சு அசலா என்ன மாதிரியே வரஞ்சிருக்காளே. என்ன எங்கடா பாத்தா இந்தக் குட்டி?" இதுதான் உங்கள் வெற்றி மேனகா.
Tuesday, August 24, 2010
தந்தி பேப்பர் காமன்
இருப்பே கொள்ளவில்லை காமனுக்கு. எப்படா ஊருக்கு கிளம்புவோம் என்றிருந்தது. அப்படி ஒன்றும் தலைபோகிற வேலையுமில்லை ஊரிலும் கொட்டுகிற மழையில் எந்த வேலையும் கிடைக்கப் போவதில்லை. மட்டுமல்ல, வெயிலுக்குத்தானே தவிர மழைக்கெல்லாம் வீடல்ல அவனுடையது. இதையெல்லாம் சேர்த்துப் பார்;த்துக் கணக்குப் போட்டுத்தான் ஒரு பத்து நாளாவது மகளின் வீட்டில் டேரா போட்டுவிட வேண்டும் என்ற முடிவோடு வந்திருந்தான்.
“இப்படி உடாம கொட்டுதே. நாம அங்க போயிருக்க நேரம் பார்த்து இங்க மழையில் குடிச குந்திக்குச்சுன்னா என்னாய்யா பன்றது” என்று தயங்கிய சாலியையும் பெரும்பாடு பட்டு இழுத்துக் கொண்டு வந்திருந்தான்.
மகள் சொன்ன அந்த எச்சரிக்கை வார்த்தைகள் அவனை எரிச்சலின் விளிம்பிற்குக் கொண்டு சென்றது. இனி இங்கத் தங்கக் கூடாது. கிளம்பிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கும் அவனை உந்தித் தள்ளியது.
“நம்ப ஊர்ல குந்தற மாதிரி இங்க தின்னைல காலத் தொங்கப் போட்டு ஏதும் குந்திராதப்பா. குடியானத் தெரு ஆளுக வந்த மானியும் போன மானியுமா இருப்பாங்க. பாத்தாங்கன்னா ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடும்.
அவள் சொன்னதிலும் ஞாயம் இருக்கவே செய்தது. காமனுக்கு பீடி, சிகரெட்டு, வெற்றிலை, பாக்கு, புகையிலை, பட்டை, ஏன் தேநீர் குடிக்கிற பழக்கம்கூட கிடையாது. இதில் ஒன்றோ, இரண்டோ அல்லது எல்லாப் பழக்கங்களுமோ இல்லாத ஒரு பதினைந்து வயது பையனைக் கூட காலனியில் பார்க்க இயலாது.
“ஒரு பீடி இல்ல, தண்ணி இல்ல, பொம்பள ஷோக்கு இல்ல, ஏன் ஒரு டீத்தண்ணிக்கூட குடிக்கிறது இல்ல. இப்படி ஒன்னையும் அனுபவிக்காம என்னா மசுத்துக்குடா உசிரோட இருக்கிறது? போறப்ப ஒரு மசுரையும் கொண்டு போகப் போறது இல்ல. மனுஷன்னு பொறந்தா மிச்சம் மீதி வைக்காம அனுபவிச்சிட்டு சாகனுன்டா” என்று காமனை நக்கல் செய்யாத ஆட்களே காலனியில் இல்லை.
இப்படி எந்தப் பழக்கத்திற்குள்ளும் விழுந்துவிடாத காமனையும் கடந்த முப்பது வருடங்களாக உடும்பு மாதிரி இறுக்கிப் பிடித்திருக்கிறது ஒரு பழக்கம். காலையில் எழுந்ததும் நேராக ‘பிச்சை’ கடைக்கு போய் தினத்தந்தி பேப்பரை வாங்கி வந்து திண்ணையில் கால் மேல காலத் தொங்கப் போட்டு உட்கார்ந்து படித்தால்தான் ஆகும். விடாது மழை பெய்து கொண்டிருந்தாலும் ஒரு பழைய சாக்கை தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு போய்விடுவான்.
இவனுக்காகவே ஒரு தினத்தந்தியை தனியாக மடித்து வைத்திருப்பான் பிச்சை. இவனைக் கண்டதும் அநிச்சையாகவே பேப்பரை எடுத்து நீட்டி விடுவான். இவனும் காசைக் கொடுத்து பேப்பரை வாங்கிக் கொண்டு அங்கு நிற்காமல் கிளம்பி விடுவான். பிச்சையும் வாங்கிய காசை எண்ணிக்கூடப் பார்க்காமல் அப்படியே டப்பாவில் போட்டு விடுவான். சரியாக இருக்கும்.
“பள்ளிக் கூடத்து பெரிய வாத்தியாரே பழநிமுத்து டீக்கடைல வந்து பேப்பர் பார்த்துட்டு போராரு. காசு அழுது வாங்கிட்டு வந்து படிச்சாதான் ஆகும் எங்க வீட்டு சீமைல மொளச்ச இந்த சில்லா கலெக்டருக்கு” எரிச்சலோடு சொல்வது மாதிரிதான் இருக்கும். காலனிக்குள்ள பேப்பர் படிக்கிற புத்திசாலி தன் புருஷன் என்பதில் ரகசியமாய் பொங்கவேதான் செய்கிறது சாலிக்கு.
பெரிய வாத்தியார் வேண்டுமானால் பழநிமுத்து கடையில் உட்கார்ந்து பேப்பர் வாசிக்க முடியும். காலனிக் காரர்களால் அது முடியாது என்பதும் சாலிக்கு நன்கு தெரியும்.
ஊருக்குள் காமன் என்றால் யாருக்கும் தெரியாது. “தந்தி பேப்பர்” என்றால் நேற்றுப் பிறந்த பிள்ளைக்கும் நன்கு தெரியும். உண்மையைச் சொன்னால் இது ஆதித்தனாருக்கே கிடைக்காத கௌரவம். உண்மையைச் சொல்வதெனில் வேலைக்குத் தேவைப்படும்போது” ஏலே செத்தப் போயி நாங் கூப்பிட்டேன்னு அந்த ‘தந்திப் பேப்பர’ இளுத்துட்டு வாங்கடா” என்றால் நேரே காமன் வீட்டுக்கு வந்து விடுவார்கள்.
காலனிக் காரர்களை அவர்கள் அப்பா அம்மா வைத்த பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை. ஊருக்குள் மூன்று ராமசாமிகள். அடையாளம் தெரிய வேண்டி ஊர் மக்கள் அவர்களை வாத்தியார் ராமசாமி, அழைத்தனர். ஆனால் காலனியில் இருக்கும் ராமசாமியை “தொத்தக் காளை” என்றும் கந்தனை “தண்ணி வண்டி” என்றும் மாணிக்கத்தை ‘ப+ச்சி’ என்றும்தான் அழைக்கிறார்கள்.
இப்போது காலனி இளைஞர்களிடம் சின்ன சல சலப்பை இது உண்டு பண்ணியிருக்கிறது.
“நம்ம பசங்களும் படிச்சு அவங்கள மாதிரி டிரைவரா வாத்தியாரா, வந்தாத்தான் நம்மள பேர சொல்லிக் கூப்பிடுவாங்க போலடா” என்றான் சண்முகம். சண்முகம் ஊர் மக்களால் மம்புட்டி மகன் என்றே அழைக்கப்படுகிறான்.
“அப்பவும் கூப்பிட மாட்டங்கடா. அப்பவும் காலனி சண்முகம், காலனி கோவிந்தன் என்றுதான் கூப்பிடுவாங்க” என்று இடை வெட்டினான், வேலு. ஊருக்குள் வேலுவின் பெயர் கடப்பாரை பேரன்.
ஊர்க்காரர்கள் இப்படி அழைப்பதைப் பார்த்து காலனிக் காரர்களும் தங்களை ‘கடப்பாரை’ யென்றும், ‘மம்புட்டி’யென்றும் ‘தொத்தக்காளை’யென்றும் அழைத்துக் கொள்ள ஆரம்பித்து அப்படியே நிலைத்துவிட்டது.
இதில் காமனுக்கு ஏகத்துக்கும் வருத்தம்தான். ஆனாலும் ‘கடப்பாரை’ ‘மம்புட்டி’ ‘பூச்சி’, என்று மற்றவர்கள் அழைக்கப்படுகையில் தான் மட்டும் செய்தித்தாளின் பெயரால் அழைக்கப்படுவது தனக்கான அறிவு சார்ந்த அடையாளமாகவே காமனுக்குப் படும். வெளியே காட்டிக் கொள்வதில்லை என்றாலும் அதில் கொஞ்சம் திமிறேகூட உண்டு காமனுக்கு.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் கலை காமனிடம் அந்த எச்சரிக்கை வார்த்தைகளைப் போட்டு வைத்தாள். ஊர் நிலவரம் தெரியாமல் இவன்பாட்டுக்கு பேப்பரை போட்டுக் கொண்டு உட்கார்ந்து வாசிக்க அதை அந்த சனங்க பார்த்துவிட்டால் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தது. மற்றும் பேப்பர் வாசித்தது என்கிற வகையில்’ அது ரெட்டைக் குற்றமாகி விடுமே என்கிற பயமவளுக்கு.
அது மட்டுமல்லாமல் மருமகன் சங்கிலி மூலமாக கிடைத்த தகவல்களும் அவ்வளவு நல்ல விதமாக இல்லை. எனவே இருக்கப் பிடிக்கவில்லை காமனுக்கு. என்ன பாடுபட்டு சாலியை இங்கு கூட்டிவந்தானோ அதைவிட பெரும்பாடு பட்டு அவளை இங்கிருந்து கிளப்பினான்.
வேறு வழியில்லாமல் சாலியும் புலம்பிக்கொண்டே கிளம்பிவிட்டாள். கலைக்கும் சங்கிளிக்கும் காமனைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் வருத்தமோ கோபமோ கொள்ளவில்லை.
“பேருந்து நிலையம் ஒட்டி சாலையின் ஓரத்தில் கூடைத் தட்டுகளில் வைத்து வாழப்பழங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு கடையில்” ஆன வெல குதிர வெல சொல்றீயேம்மா” என்று முனகிக் கொண்டே ஒரு சீப்பு பூவம்பழம் வாங்கிக் கொண்டான். பையில் இடமில்லாததால் கையிலேயே பிடித்துக் கொண்டான்.
பேருந்து நிலையத்துள் நுழையும் போதே ஏழாம் எண் பேருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. கையை நீட்டிக் கொண்டே நடந்தவனைப் பார்த்து “விடுய்யா, போகட்டும். குந்த இடமில்லாம நிக்கிறாக. அடுத்த பஸ்ல போகலாம்” என்று தடுத்துப் பார்த்தாள் சாலி.” அட ஏறு புள்ள. எல்லா வண்டியிலும் கூட்டமாத்தான் இருக்கும்” என்று அவர்களுக்காக நின்ற பேருந்தில் சாலியை ஏற்றிவிட்டு தானும் ஏறிக் கொண்டான்.
பெண்கள் பகுதியின் முதல் இருக்கையில் சாய்ந்து நின்று கொண்டாள் சாலி. வாழைச் சீப்பை கண்ணாடிக்கும் இஞ்சினுக்கும் இடைப்பட்ட பகுதியில் போட்டு விட்டு இஞ்சினை ஒட்டினார்போல நின்று கொண்டான் காமன்.
முதல் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் அண்ணா சிலையில் இறங்கிக் கொள்ளவே சாலிக்கு உட்கார இடம் கிடைத்தது. உட்கார்ந்தவள் இடுப்பிலிருந்து சுருக்குப் பையை எடுத்து வெற்றிலை போடுவதற்கு ஆயத்தமானாள்;.
“நம்ம வீட்டுத் திண்ணைல காலத் தொங்கப்போட்டு குந்தக் கூடாதுங்குறது என்ன ஞாயம்” என்று விடாது உளைந்து கொண்டே வந்தான் காமன். நெஞ்சு வலியே வந்துவிடும்போல் இருந்தது அவனுக்கு. இது எது பற்றியும் சஞ்சலப்பட்டுக் கொள்ளாத சாலி எச்சில் துப்ப தோதாக இருக்குமென்பதால் சன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் இந்தப் பக்கமாக நகர்ந்து சன்னல் இருக்கையில் தர வேண்டுமாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.
இன்னும் கொஞ்சம் பேசவிட்டால் புகையிலை எச்சில் தெளித்துவிடுமோ என்ற பயத்தில் சரி என்பதுபோல் தலையை ஆட்டி கொண்டே அந்தப் பெண் இடம்மாறி உட்கார்ந்தாள். ஆத்துப்பாலம் வந்ததும் ஏறத்தாழ பேருந்தே காலியானதாக இடது பக்க முதல் ஒற்றை இருக்கை காமனுக்கு கிடைத்தது. உட்கார்ந்தான். பேருந்து பால் பண்ணையைத் தாண்டியபோது தனது வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்ட நடத்துனர் முன்னே வந்து இஞ்சின் மீது சம்மனம் போட்டு உட்கார்ந்து கொண்டே ஓட்டுனரிடம் கை நீட்ட குறிப்பறிந்த ஓட்டுநர் பக்கத்தில் கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினார்.
காலி பாட்டிலை வாங்கிக் கொண்டே ஓட்டுநர் கேட்டார் “எறக்கம் எங்கப்பா?”
“மேட்டுத் தெருல ரெண்டு டிக்கட், காலனில ரெண்டு டிக்கட் அப்புறம் வேற எங்கையும் இல்ல. நேரா பஸ் ஸ்டான்ட்தான்”
“சொசைட்டில லோன் போட போகனும்னியே எறங்;கிப் போகலாமா?” எனக்கேட்ட ஓட்டுனரிடம்” ரவி வரானாப் பாப்போம் கோவிந்து. வந்தான்னா போலாம். அவுங்க அப்பாவ கூட்டிக்கொண்டு ஆஸ்பிடல் போகனும்னான். வராட்டி ஓவர் டைம் பாக்கனும்” என்றவாறு தொடர்ந்து பேசிக் கொண்டே வந்தார்கள்.
காலனி வந்ததும் சாலியும் காமனும் இறங்கிக் கொண்டார்கள். இறங்கிய கையோடு காமன் வாழைப்பழச் சீப்பை எடுக்க மறந்ததைக் கவனித்த சாலி “சத்தம் போட்டு வண்டிய நிறுத்துய்யா. வாழப்பழத்த மறந்துட்ட” என்று இறைந்த சாலியிடம்
“மறக்கல புள்ள. போகட்டும் விடு. ஒரு விஷயமாதான் வச்சுட்டு வந்தேன்”.
“ஏய்யா கிறுக்கு ஏதும் புடுச்சிறுக்கா ஒனக்கு. தெரிஞ்;சே வச்சிட்டு வந்தாராமுல்ல தொர. பதினஞ்சு ரூவா வெளங்குவியா நீ”
கத்திக் கொண்டிருந்த சாலியிடம் “விடு புள்ள. அந்தக் கண்டக்டரு மேட்டு தெருவுல ரெண்டு டிக்கட், காலனில ரெண்டு டிக்கெட்டு சொன்னாருல்ல”.
“அதுக்காவ?”
“ரெண்டு சனங்களையும் ஒரே பேரால கூப்பிடுற மனசு வேற யாருக்கு இருக்கு?”
“அதுக்காவ”
“அதான் அவரோட மனசுக்கு ஏதாவது செய்யனும்னு தோணிச்சு. அவருக்காகத்தான் அங்கேயே அத உட்டுப்புட்டு வந்தன்”
சாலியின் முறைத்தலை அலட்சியம் செய்தவாரே நடையைக் கட்டினான் காமன்.
நன்றி: "கல்கி"
Tuesday, August 17, 2010
Wednesday, August 11, 2010
சரஸ்வதி ஒரு தரம்... சரஸ்வதி ரெண்டு தரம்..... சரஸ்வதி மூன்று தரம்...!
எந்த ஒன்று நடந்திருக்கக் கூடாதோ அந்த ஒன்று நடந்தே விட்டது. இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ஒரே ஒரு குழந்தையும் மாற்றுச் சான்றிதழோடு வேறு இடம் நோக்கி நகர்ந்து விடவே வேடசந்தூர் அருகே உள்ள சீத்தப் பட்டியில் அறிவாலயம் ஒன்று இழுத்து மூடப் பட்டிருக்கிறது. ஆறு குழந்தைகள் படித்துக் கொண்டிருந்த பள்ளி இரண்டு குழந்தைகள் பள்ளியாய் மாறி, இரண்டும் ஒன்றாகி இப்போது பூட்டியேயாகி விட்டது.
இது ஏதோ சீத்தப்பட்டி என்னும் ஒரு கிராமத்தின் நிகழ்வு என்று மட்டும் கொண்டுவிடக் கூடாது. இரண்டு வகுப்பரைகளே இருந்த பள்ளியில் இரண்டு வகுப்பரைகளுமே மூடப்பட்டு விட்டதால் மொத்தப் பள்ளியும் மரணித்துப் போகவே விஷயம் வெளிசசத்திற்கு வந்திருக்கிறது. இதுவே இருபது வகுப்பரைகள் கொண்ட ஒரு பள்ளியில் இரண்டு வகுப்புகள் மூடப் பட்டிருந்தால் அது யாருடைய கவனத்திற்கும் வந்திருக்காது. இப்படித்தான் தமிழகத்தின் பல நூற்றுக்கணக்கான பொதுப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்று இரண்டென்று மூடப் பட்டு வரும் வகுப்பரைகள் குறித்த தகவலெதுவும் தமிழகத்துப் பொதுப் புத்திக்கு கொண்டு போகப் பட்டதாகவே படவில்லை
பொதுவாகவே பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் "ஒன்று" , "ஆறு", "ஒன்பது", மற்றும் பதினொன்றாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பெற்றோரின் பணியிட மாற்றம், பிழைப்பு சார்ந்த புலம் பெயர்வு, மற்றும் இதையொத்த காரணங்களை முன்னிட்டு மற்ற காலங்களிலும் எல்லா வகுப்புகளிலும் பள்ளி விட்டு பள்ளி மாறும் மாணவர்களும் உண்டு.
தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சுமார் நான்காயிரத்து ஐநூறு தேறும். இத்தோடு அரசு உதவி பெறும் பள்ளிகளையும் சேர்த்தால் குத்துமதிப்பாய் ஆறாயிரத்துக்கும் சற்று கூடுதலான எண்ணிக்கையில் பொதுப் பள்ளிகள் தேறும். இதில் பெரும்பாலான பள்ளிகள் ஒவ்வொன்றிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் ஐம்பது முதல் நூறு வரை துண்டு விழுந்திருக்கக் கூடும்.
தொகுத்துப் பார்த்தால், இந்த ஆண்டு சற்றேரக் குறைய மூன்று லட்சத்தை ஒட்டிய எண்ணிக்கையிலான குழந்தைகள் பொதுக் கல்வியை நிராகரித்திருக்கிறார்கள். இது குறித்த கவலை பொதுத் தளத்தில் இல்லை என்பதுதான் நாம் கவலைப்பட வேண்டிய முக்கியமான விஷயம். இதை இப்படியே விட்டு விட்டால் பொதுக் கல்வியின் மரணத்தை நம் காலத்திலேயே பார்த்துவிட்டு சாகும் சாபம் தவிர்க்க முடியாதது.
"கள்வர்களால்
கொள்ளை போகாது
கடைத் தெருவில் விற்காது"
என்ற நமது மூத்தக் கிழவியின் நம்பிக்கை பொய்த்துப் போகும். கல்விக் கூடங்களே கல்விச் சந்தையாய் மாறிப் போகும்.
" சுத்த பேத்தல்அதெல்லாம். எங்களுக்கு தெரியாததா? எவ்வளவு செஞ்சிருக்கோம். கட்டணம் இலவசம், புத்தகம் இலவசம், பேருந்து இலவசம், மிதி வண்டி இலவசம், சத்துணவு, வாரம் மூன்று முட்டை, என்று எவ்வளவு செஞ்சிருக்கோம். நபார்டு வங்கி உதவி, மற்றும் நமக்கு நாமே திட்டம் மூலம் சகல வசதிகளோடும் கட்டப் பட்டுள்ள கட்டிடங்கள் .அப்புறம் எப்படி பொதுக்கல்வி சாகும்? வேலயத்தவனுங்களோட பொலம்பலுங்க இது" என்றும் சிலர் வரலாம்.
எனவே புரியும் படிக்கு பேசிவிடுவதே உத்தமம் என்றே படுகிறது.
உதாரணத்திற்கு ஒரு பொதுப் பள்ளியை எடுத்துக் கொள்வோம். அந்தப் பள்ளியில் சென்ற ஆண்டு ஆறாம் வகுப்பில் மூன்று , ஏழாம் வகுப்பில் மூன்று , எட்டாம் வகுப்பில் மூன்று , ஒன்பதில் மூன்று , பத்தாம் வகுப்பில் மூன்று என்று மொத்தம் பதினைந்து பிரிவுகள் இருந்தன என்று வைத்துக் கொள்வோம். என்றால் ஆறு முதல் எட்டு வரை உள்ள வகுப்புகளுக்கு பாடங்களை போதிக்க ஒன்பது ஆசிரியர்களும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த ஆறு ஆசிரியர்களும் இருந்திருப்பார்கள். இது போக மாணவர்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு தமிழாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கலை மற்றும் தொழில் ஆசிரியர்கள் என்று இருந்திருப்பார்கள். குறைந்த பட்சம் பதினைந்து வகுப்பறைகளாவது இருந்திருக்கும்.
அந்தப் பள்ளியில் இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் ஒரு நாற்பது அல்லது ஐம்பது என்று துண்டு விழுகிறது எனக் கொள்வோம். வளைவாக ஆறாம் வகுப்பில் இரண்டு பிரிவுகள் மட்டுமே என்றாகும். ஒரு அறை இழுத்து மூடப்படும். ஒரு ஆசிரியர் நிரவலில் வேறு பள்ளிக்கு சென்று விடுவார். இதன் விளைவாக அடுத்த ஆண்டு ஏழாம் வகுப்பில் ஒரு பிரிவு குறைந்து இரண்டு பிரிவுகளாகி விடும். இந்த ஆண்டும் ஆறம் வகுப்பில் சேர்க்கை குறைந்தால் ஆறாம் வகுப்பில் இன்னும் ஒரு பிரிவு குறைந்து ஒரே ஒரு பிரிவாக மாறும். ஆக மொத்ததில் அடுத்த ஆண்டு இரண்டு வகுப்பறைகள் புதிதாய் பூட்டப் பட்டு விடும் . இன்னும் இரண்டு ஆசிரியர்கள் பணி நிரவலில் வேறு பள்ளிகளுக்கு போய் விடுவார்கள்.
இப்படியே ஐந்தாறு ஆண்டுகள் தொடர்கிறது என்று கொள்வோம்.இப்போது ஆறாம் வகுப்பில் சேர அந்தப் பள்ளிக்கு ஒரு பத்து மாணவ்ர்கள் வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தப் பள்ளியில் போதுமான அளவிற்கு வகுப்பறைகள் இருக்கும். ஆனால் ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். அந்த மாணவர்கள் நிச்சயம் தனியார் சுய நிதிப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க இயலாத ஏழை மாணவர்களாகத்தான் இருப்பர்.
ஆக அந்த மாணவர்களால் காசு கொட்டியும் படிக்க இயலாது. பொதுப் பள்ளியும் என்ற நிலையில் மீண்டும் குலத் தொழில் நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க இயலாததாகி விடும்.
இரண்டு கேள்விகள் நம் முன் நிற்கின்றன. ஏன் பொதுக் கல்வி நிராகரிக்கப் படுகிறது? என்பது ஒன்று. பொதுக் கல்வியை காப்பாற்ற என்ன செய்யலாம்? என்பது இரண்டு.
முதலில் மக்கள் பொது கல்வியை நிராகரிப்பதற்கு முன் வைக்கும் காரணங்களைப் பார்ப்போம்.
1) போதுமான ஆசிரியர்கள் இல்லை.
2) ஆசிரியர்கள் தேவையான அளவு அக்கறையோ சிரத்தையோ எடுப்பதில்லை
3)போதுமான அளவிற்கு தளவாடங்களோ, கட்டட வசதியோ, கழிப்பிட வசதியோ இல்லை
4) சாதகமான கல்விச் சூழல் இல்லை.
5) ஆங்கில வழியில் படித்தால் மட்டுமே நல்ல வேலை வாய்ப்பை பெற முடியும்
6) தரமான மற்றும் மதிப்பெண்களுக்கு உத்திரவாதமான கல்வி சுயநிதி பள்ளிகளில் மட்டுமே சாத்தியம்
7) இவை போல இன்னும் சில
இவற்றுள் பொதுப் பள்ளிகளில் போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் இல்லை என்பதை நாம் கவலையோடு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். கல்வியை சேவை பட்டியலிலிருந்து காசுக் கேற்ற கல்வி என்ற வகையில் நுகர் பொருளாக மாற்றி சந்தைக்கு கொண்டு போய்விட வேண்டும் என்று உலக மயமும் தாராள மயமும் விரித்த வஞ்சக வலையில் நமது அரசுகள் மகிழ்ச்சியோடு தாமாய் சென்று பதுங்கி கொண்டதன் விளைவே இது.
"one eight particulars" என்ற விவரம் ஒன்றினை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளியும் ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைக் கல்வி அலுவலருக்கு வழங்க வேண்டும் என்றிருக்கிறது. இந்த விவரத்தில் பள்ளியின் வகுப்பு வாரியான மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பற்றிய விவரங்கள் இருக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் ஒவ்வொரு பள்ளிக்குமான ஆசிரியர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப் படும். இரண்டு மூன்று மாணவர்கள் குறைந்தமைக்காகக் கூட ஒரு ஆசிரியரை மிகுந்த கடமை உணர்ச்சியோடு நிரவலில் வேறு பள்ளிக்கு மாற்ரிய நிறைய அதிகாரிகளை எனக்குத் தெரியும்.
இது மட்டுமல்ல இந்த விவரங்கள் கிடைக்கப் பெற்றதும் இந்த அறிக்கையை சரி பார்க்க குழுக்கள் அமைக்கப் பட்டு அவர்கள் பள்ளிகளை பிரித்துக் கொண்டு வந்து மாணவர் வருகைப் பதிவேடுகளை கையில் எடுத்துக் கொண்டு வகுப்பு வகுப்பாக தலை எண்ண அலைகிற காட்சி இருக்கிறதே, அப்பப்பா கண்கள் பூத்தே போகும் போங்கள்.
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பணி நிரவலில் மாற்றப் படும் ஆசிரியருக்கு அந்த ஆண்டு இடையில்தான் உத்திரவு வருமென்பதால் அவரது குழந்தைகளை பள்ளி மாற்றுவது குடும்பத்தை இடம் பெயர்ப்பது என அவர் படும் சிரமங்கள் இருக்கிறதே, அது சொல்லி மாளாது.
கேட்டால் குறைந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலிருந்து உபரி ஆசிரியர்களைத்தானே எடுக்கிறோம். எடுத்த ஆசிரியர்களை வீட்டுக்கா அனுப்புகிறோம். அதிக மாணவர்களோடு போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவதிப் படும் பள்லிகளுக்குத்தானே அனுப்புகிறோம் என்கிறார்கள். மேம்போக்காய் கேட்டால் இது சரியென்றே படும். அடிப்படையில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு அதிக ஆசிரியர்கள் தேவை என்றுதான் நாமும் சொல்கிறோம். ஆனால் பணி நிரவலில் அதை ஈடு கட்டாமல் புதிய ஆசிரியப் பணியிடங்களை உருவாக்குவதன் மூலம் ஈடு கட்ட வேண்டும் என்பதே நம் கோரிக்கை.
இருபத்தி ஐந்து மாணவர்களுக்கு ஒருஆசிரியர் என்ற நீண்ட நாள் நியாயமான கோரிக்கையை அரசு நிறை வேற்ற வேண்டும்.
மற்றபடி பொதுப் பள்ளி ஆசிரியர்களின் அக்கரை மற்றும் அர்ப்பணிப்பு இவையெல்லாம் மிக நன்றாகவே உள்ளது. ஆனால் பொதுக் கல்வியை காப்பாற்ற வேண்டியதில் தங்களுக்குரிய பொறுப்புணர்வினை அவர்கள் போதுமான அளவிற்கு உணர்ந்திருக்கிறார்களா என்ற ஐயத்தில் நியாயம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.
மற்றபடி ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே வேலை வாய்ப்பு என்கிற தவறான பொதுப் புத்தியை உடைக்க வேண்டிய பொறுப்பு சமூக அக்கறையுள்ள எல்லோருக்கும் உண்டு என்றாலும் அரசுதான் இதில் கூடுதலான முழு அக்கறை கொள்ள வேண்டும்.
சுய நிதி மற்றும் ஆங்கிலப் பள்ளிகளை அதிக அக்கறையோடு கண்காணிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களும், பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களும் நடத்தப் படுகின்றன. இதன் மூலம் பொதுப் பள்ளிகளில் ஓராண்டில் படிக்க வேண்டிய பாடங்களை இந்தப் பள்ளிகளில் இரண்டாண்டுகள் படிப்பதன் மூலம் நிறைய மதிப்பெண்கள் பெற வாய்ப்பாகிறது. மதிப் பெண்களே குறியாகிப் போன இந்த சமூகத்தில் பொதுக் கல்வி நிராகரிக்கப் படுவதற்கான ஆகப் பெரிய காரணம் இதுதான். அரசும் அதிகாரிகளும் பொறுப்புணர்வோடு இதை கண்காணிக்காவிட்டால் பொதுக் கல்வியின் மரணத்திற்கான பெரும் பொருப்பாளிகளாவார்கள்.
பொது மக்கள் தங்கள் குழந்தைகளை நம்பிக்கையோடு பொதுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு தரமான கல்வியை தரவேண்டும் என்று போராடும் சமூக அக்கறையுள்ள அமைப்புகளோடு இணைந்து போராட வேண்டும். பொது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டுமெனில் முதலில் படித்தவர்கள், அரசு ஊழியர்கள் மிக முக்கியமாக ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை பொதுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
இல்லையேல் பொதுக் கல்வி பையப் பைய மரணித்துப் போகும்
நன்றி: "கீற்று" மற்றும் "கவண்" மற்றும் "ஈகரை"
Monday, July 26, 2010
சண்முகம் MBA
சண்முகம் MBA
ஆசிரியர் அறையில் ஏதோ வேளையாக இருந்த போது வணங்கியவாறே வந்தான் அந்தப் பையன். நிமிர்ந்து பார்த்தேன். வெளிர் நீலத்தில் ஜீன்ஸ், வெள்ளை சட்டை, டை, ஷூ, வதைக்காத வாசனை திரவியம் என்று அமர்க்கலமாக இருந்த அவனுக்கு இருபத்தி ஐந்திற்குன் ஒன்றிரண்டு குறைச்சலாக இருக்கலாம். நன்கு பரிச்சயமான முகமாகத்தான் இருந்தது.ஆனாலும் சட்டென யாரென்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. என் தடுமாற்றத்தை ரசித்தவாறே புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
எவ்வளவோ வற்புறுத்தியும் அமர மறுத்தான். வற்புறுத்தியும் அமராமல் நிற்கும் அவனது மரியாதை (அமர மறுத்து நிற்பதில் மரியாதை எதுவும் இல்லை என்பதுதான் எனது நிலை) "என்ன வேணும்?" அல்லது " யாரைப் பார்க்கணும்?" என்று முகத்திலடித்துவிடக் கூடாது என்று என்னை பக்குவப் படுத்தியது.
எனவே "என்னப்பா செய்ற? " என்ற வழக்கமான கேள்வியைப் போட்டேன். தான் MBA முடித்து விட்டு ஏதோ ஒரு தனியர் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் மாதம் 26000 ரூபாய் சம்பளம் பெருவதாகவும் கூறினான். " எல்லத்தையும் எறச்சிடாம கொஞ்சம் சேத்து வை. இல்லாட்டி என்ன மாதிரி சிரமப் பட வேண்டி இருக்கும்" முடிப்பதற்குள் ரெண்டு ரூபா சீட்டு ஒன்னு போட்டுடுட்டு வரேன் சார்" என்று சொல்லிக் கொண்டே வந்தவன்"என்னத் தெரியுதுங்களா சார்" என்றவாறே புன்னகைத்தான்.
நிணைவுக் குகைக்குள் மீண்டும் நுழைந்து எவ்வளவோ சிரமப்பட்டு முயன்றும் பயனில்லை. எனவே " வயசாகுதேப்பா, அதுதான் கொஞ்சம் தடுமாறுது. ரொம்ப நல்லா பரிச்சயமான முகமாத்தான் தெரியுது. ஆனா சட்டுன்னு யாருன்னு புடிபட மாடேங்குதுப்பா" என்று சொன்னால் "உங்களால என்ன மறக்கவே முடியாதுங்க சார்" என்று புன்னகைக்கிறான். நமது பலவீனம் கண்டு புன்னகைக்கிறானா, அல்லது புன்னகைக்காமல் அவனால் இருக்கவே இயலாதா தெரியவில்லை. இவனால் சிரிக்காமல் அழக்கூட முடியாது என்றே தோன்றியது.
அப்போது "வாடா சண்முகம், என்ன திடீர்னு பள்ளிக்கூடதத்துப் பக்கம். எட்வின் சாரப் பாக்கனுமா?" என்றவாறே நுழைந்தார் தட்டச்சு ஆசிரியர் தெய்வீகன்.அவன் என்னருகில் நின்று கொண்டிருந்ததால் என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறான் என்று அவர் நிணைத்திருக்கக் கூடும்.
"என்ன யாருன்னே சாருக்கு தெரியலீங்க சார்"
"என்னதிது எட்வின்,நம்ம சண்முகத்த தெரியல?"
ஆமாம் எஸ்.டி, ரொம்பப் பரிச்சயமான முகம், அதைவிட ரொம்பப் பரிச்சயமான புன்னகை. ஆனாலும் யாருன்னு புடிபட மாட்டேங்குது. எந்த செட் இவன்?"
"அடப் போங்க நீங்க எட்வின். ஒரு வருஷம் உங்க பாடத்துக்கு ப்ராக்டிகல்ஸ் இருந்துதே ஞாபகம் இருக்கா? அப்ப ஒரு பையன காணாம வண்டி எடுத்து வண்டி எடுத்துட்டு போய் தெருத் தெருவா சுத்தினோமே. அதுவாவது ஞாபகம் இருக்கா?. .."
" அடப் பாவி, சண்முக சுந்தரமாடா நீ...?. " இப்போது முற்றாய் முழுதாய் எல்லாம் நிணைவுக்கு வந்து விட்டன. பழைய நிணைவுகளை அசை போட அசை போட அவனது புன்னகை என்னைத் தொற்றிக் கொண்டது.
பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப் பாடங்களுக்கு செய்முறைத் தேர்விற்கென்று இருபது மதிப்பெண்கள் உண்டு. வழக்கமாக நாங்களே தேர்வு மாதிரி ஏதாவது வைத்து உள் மதிப்பீடு முறையில் மதிப்பெண்களைப் போட்டு விடுவோம். ஒரே ஒரு ஆண்டு மட்டும் புறத் தேர்வர்களைக் கொண்டு நடத்தப் பட்டன.
அந்த ஆண்டு எங்கள் பள்ளிக்கு வேறு பள்ளியிலிருந்து புறத் தேர்வராக ஒரு ஆசிரியை வந்திருந்தார். மொத்தம் உள்ள நூற்றி எட்டு மாணவர்களை இருபத்திஏழு மாணவர்கள் வீதம் நான்கு குழுக்களாகப் பிரித்திருந்தோம். ஒரே ஒரு மாணவனை மட்டும் காணோம். அவன் தொழிற் கல்வியில் தட்டச்சு பிரிவில் படிக்கும் மாணவன். எங்கள் பள்ளி கிராமத்துப் பள்ளி என்பதாலும் பெரும்பான்மை மாணவர்கள் முதல் தலைமுறையை சேர்ந்தவர்கள் என்பதாலும் ஆங்கிலத்தைக் கற்பதில் அவர்களுக்கு சிரமம் இருந்தது. அதுமட்டுமல்ல பொதுவாகவே பத்தாம் வகுப்பில் குறைச்சலான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைத்தான் தொழிற் பிரிவில் சேர்ப்பது வழக்கம். எனவே அவர்கள் செய்முறைத் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவது கடினம் என்றுகூட சொல்ல இயலாது. தேர்ச்சி பெறவே இயலாது. எனவேதான் முதல் நாளே ஒவ்வொரு பிரிவாக சென்று அனைத்து மாணவர்களும் அடுத்த நாள் அவசியம் வந்துவிட வேண்டும் என்றும் வராத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அடுத்த நாள் அவசியம் வரச் சொல்லிவிடுமாறும் சொல்லியிருந்தேன்.
இதற்குள் முதல் பேச் மாணவர்கள் அறைக்குள் சென்றிருந்தனர். புறத் தேர்வாளராக வந்திருந்த ஆசிரியை மாணவர்களை அமரச் செய்து தேர்வின் நெறிகள் பற்ரி சொல்லிக் கொண்டிருந்தார். பன்னிரண்டு அல்லது பன்னிரண்டரைக்குள் நான்காவது பேச் தொடங்கி விடும்.
" நேத்து அவ்வளவு நேரம் படிச்சு படிச்சு சொன்னேனே. எங்கடா தொலஞ்சான்?"
எல்லோரும் மௌனமாக நின்றார்கள். அதற்குள் விஷயம் கேள்விபட்டு தெய்வீகன் வந்து விட்டர். அவரைக் கண்டதும் தட்டச்சு மாணவர்கள் அவரைச் சுற்றி தனியாக ஒதுங்கினர்.
"உண்மைய சொல்லுங்க. இப்ப எங்கடா இருப்பான்?" கொஞ்சம் அதட்டலாகவே தெறித்தார்.
"ஆதி மாரியம்மன் கொவில்ட்ட சீட்டு விளையாடிட்டு இருப்பான் சார்" என்னிடம் மௌனித்த மாணவர்கள் அவர்கள் ஆசிரியரைப் பார்த்ததும் தயங்கித் தயங்கி மௌனம் கலைத்தனர்.
என்னை நெருங்கினார்." என்ன செய்யலாம் எட்வின்?"
வண்டிய எடுங்க எஸ்.டி முடிப்பதற்குள் வண்டியை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். ஏறி அமர்ந்ததும் விரட்டினார். " அவுங்க அம்மாவ பாத்தீங்கன்னா பாத்த மாத்திரத்துல கண்ணுல தண்ணி வந்துடும் எட்வின். கோவில்ல தட்டேந்தி கண்னடக்கம் வித்து இவன படிக்க வைக்குது இந்தம்மா. இந்த நாயி என்னடான்னா இப்படி பன்னுது பாருங்க எட்வின்" புலம்பிக் கொண்டே வந்தார்.
அது ஒரு பழைய இற்றுப் போன கீற்றுக் கொட்டகை. ரவுண்டு கட்டி சீட்டாடிக் கொண்டிருந்தனர். அழுக்காய் இருந்தான். ஆனால் நல்ல வேளையாக பள்ளிச் சீருடையில் இருந்தான்.
எங்களைக் கண்டதும் எழுந்தான். "வாடாத் தாயோளி வாடா. ஆயி அங்க கஞ்சிக்கு உசிர விக்குது. இங்க சீட்டாட்டம் கேக்குதாடா ஒனக்கு, பொறம்போக்கு" கையை ஓங்கிக் கொண்டு அடிக்கப் போனார். அவரது குரலும் கைகளும் நடுங்குவதைப் பார்த்தேன். இப்ப விழலாமா இன்னுங் கொஞ்ச நேரம் கழித்து விழலாமா? என்பது மாதிரி இரண்டு கண்களிலும் ததும்பி நின்றது கண்ணீர். படிக்கும் மாணவனுக்கான அவரது அக்கறையும் , கண்ணீரும், கோவமும், பதட்டமும் அவர் மீது இருந்த அபிப்ராயத்தையும் மரியாதையையும் கணிசமாக கூட்டியது.
"வாடா இங்க"
வந்தான். ஒரே புகையிலை நெடி. ஒரே அறை. காலரைப் பிடித்து இழுத்து சட்டைப் பையில் கையை நுழைத்தார். "ஹான்ஸ்" பொட்டலம் இருந்தது. "பொழைக்கறப் பொழப்புக்கு இது ஒன்னுதான் கொறச்ச மசுறு." மீண்டும் இரண்டு மூன்று விழுந்தது அவனுக்கு. கையைக் கட்டிக் கொண்டு புள்ளப் பூச்சி மாதிரி நின்றான்.
எனக்கும் அவருக்குமிடையில் அவனைத் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பினோம். வழியெல்லாம் வசவிக் கொண்டே வந்தார். இறங்கியதும் கூட்டம் கூடிவிட்டது. ஆசிரியர்களில் பலர் எங்களை கோவித்துக் கொண்டார்கள். இப்படியெலாம் இறங்கி செய்வதனால்தான் பசங்களுக்கு துளிர் விட்டுப் போகிறது என்பது அவர்கள் வாதம். ஒருத்தன் ஒழிந்தால்தான் பசங்களுக்கு புத்தி வந்து ஒழுங்கா இருப்பங்க என்பது சிலரது கருத்து.
இதில் எதிலும் கவனம் செலுத்தாது அவனை முகம் கழுவ வைத்து , பேனாவை கையில் கொடுத்து ஒரு வழியாய் அவனை அறைக்குள் தள்ளிவிட்டு வந்தோம்.
அந்தப் பையன்தான் இபோது என்னெதிரே நிற்கிறான். ஒரே ஆச்சரியம். என்னையுமறியாமல் எழுந்து நின்று கை குலுக்கினேன்.
அன்ன்னைக்கு விட்டுட்டு போயிருந்தீங்கன்னா இன்னைக்கும் அதே கொட்டகையில ஒக்காந்து சீட்டு விளையாட்டுதான் சார் இருந்திருபேன். அவனோடு சேர்ந்து என் கண்களிலும் ஈரம். தோளில் கை போட்டு "வாப்பா போய் ஒரு டீ சாப்ட்டுட்டு வரலாம்" , இருவரும் தெய்வீகனைப் பார்க்க அவரும் கிளம்புகிறார்.
ஆக ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நம் வாழ்க்கையிலும் இருக்கு.
Wednesday, July 7, 2010
பாகவதமேளா – புதுப்பிக்கப்படும் பொறுப்புணர்வு
“All mothers are great but my mother is the greatest” என்று இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசியபோது பாலுமகேந்திரா பேசியதாக ஞாபகம்.
“எல்லோரும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி கொண்டவர்கள்தான், எல்லாத் தாய்மார்களும் ஆனால் எல்லாத் தாய்மார்களும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றவள் எனது தாய்” என்று இதை தமிழ்ப் படுத்திக் கொள்ளலாம்.
“தாய்” என்பதை ‘மொழி’ என்பதன் குறியீடாகவும் கொள்ள முடியும். எனில்,
“எல்லா மொழிகளும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்ற மொழி எனது தாய் மொழி” என்று ஆகும். அவரவரும் அவரவர் தாயை, தாய்மொழியை இப்படிப் பொருத்திப் பார்த்து பூரித்துக் கொண்டாட உரிமை உண்டு.
தனது மொழியின் தொன்மத்தை, பழமையை, வளத்தைக் குறித்து வறட்டுப் பெருமை பேசும் எந்த மொழியைச் சார்ந்த மேதைகளைக் காட்டிலும், தனது மொழியோடு தன்னை அடையாளப்படுத்தி, அதனைப் புழங்கி, காலாகாலத்திற்கும் தன் மொழி உயிர்த்திருப்பதற்கு பங்காற்றும் சனத்திரளின் மொழி அக்கரையே மெச்சத் தக்கதாகும்.
தங்களது மொழிப்பற்றை, மொழி குறித்த அக்கறையை, தங்கள் கலாச்சாரத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் பணியை எந்த ஆராவாரமும் இன்றி, விளம்பரமின்றி ஓராண்டு, ஈராண்டல்ல முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளாக உழைத்துவரும் ஒரு தெருவின் சனங்களை சமீபத்தில் சந்திக்க முடிந்தது.
“சாலியமங்களம்” என்றதும் அங்கு 365 ஆண்டுகளாக விடாது, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வைகாசி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் ‘பாகவத மேளா’ தான் நினைவுக்கு வரும்.
முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளா? அதுவும் விடாது தொடர்ந்தா? சாத்தியமா?
சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் சாலியமங்களத்தின் அக்ரஹாரத்தை சாந்த தொன்னூறு குடும்பத்தினர்.
பதினேழாம் நூற்றாண்டின் தஞ்சையை விசயநகர அரசர் அச்சுதப்ப நாயக்கர் வெற்றி கொள்கிறார். மன்னர், மந்திரிமார்கள், மற்றும் தம்மோடு வந்திருக்கும் தமது உறவினர்களது சமயச் சடங்குகளை நிறைவேற்றவும், தமக்கு ராச ஆலோசனைகள் வழங்கவும் தனது சொந்த நாட்டிலிருந்து தெலுங்கு பேசும் பிராமணர்களை அழைத்து வருகிறார். அவர்களை, “சாலியமங்களம்”, ‘மெலட்டூர்’ “தேபெருமாநல்லூர்”, ‘ஊத்துக்காடு’ மற்றும் சூலமங்களம் ஆகிய கிராமங்களில் அக்ரஹாரங்களை ஏற்படுத்தி குடியமர்த்துகிறார். அவர்களுக்கு ஏராளமான விளைநிலங்களை தானமாக வழங்குகிறார்.
அந்த வகையில் சாலியமங்களம் அக்ரஹாரத்தில் சற்றேரக்குறைய தொன்னூறு தெலுங்கு பிராமணக் குடும்பங்கள் குடியேறுகிறார்கள். வெற்றியின் விளைவாக தம்மோடு தஞ்சை நாட்டில் குடியேறிய தனது குடிகள் இந்த மண்ணோடும், மக்களோடும் கலந்து, கரைந்து பையப் பையத் தமது மொழியை, கலாச்சாரத்தின் விழுமியங்களை மறந்து போவார்களோ, என்ற அச்சம் மன்னருக்கு வருகிறது.
உடனே அய்ந்து கிராமங்களிலும் உள்ள தெலுங்கு பிராமணர்களை அழைத்து தனது கவலையை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். தமது மொழியை கலாச்சாரத்தின் வேர்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கிறார். “ஏதாவது செய்யுங்கள்” என்று உத்தரவிடுகிறார்.
விளைவு, மேற்சொன்ன அய்ந்து கிராமங்களிலும் பாகவத மேளாக்கள். இதில் சாலியமங்களம் தவிர மற்ற ஊர்களில் நின்றுபோகிறது அல்லது தொடர்ச்சியற்று விட்டுவிட்டு நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் சாலியமங்களத்தில் மட்டும் விடாது 365 ஆண்டுகளாக தொடர்ந்து “பாகவத மேளா” நடைபெற்று வருகிறது.
“வெற்றி விழா” ‘பொன்விழா’ ‘வைரவிழா’ என்பது போன்று 365 ஆண்டுகளாக தொடர்ந்து சாலியமங்களத்தில் நடைபெற்று வரும் பாகவதமேளாவை என்ன பெயரிட்டு அழைக்கலாம்.
1645 ஆண்டு முதல் தொடர்ந்து நடப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பக்த சமாசத்தின் பொருளாளர் எஸ்.சி.வெங்கடகிருஷ்ணன் கூறுகிறார். அவரும், சென்னை ரயில்வேயில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் திரு.சுப்பிரமணியன் அவர்களும் நிறையப் பகிர்ந்து கொண்டார்கள்.
பாகவத மேளாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம். ஒரு நாள் “சீதா கல்யாணம்” ஒரு நாள் “ருக்மணி கல்யாணம்” ஒரு நாள் ‘ருக் மாங்கதா’ ஒரு நாள் “பிரகலாத சரித்திரம்” என்று கடந்த காலங்களில் அமர்க்கலப்பட்டிருக்கிறது. அந்தத் தெருவின் சனங்கள்தான் நடிப்பதும் பார்ப்பதும். நரசிம்ம அவதாரம் பூண்டு இறைவன் இரணியனை வதம் செய்யும் காட்சிகாண மொத்த ஊரும் திரண்டு விடுமாம்.
ஏறத்தாழ தொண்ணூறு குடும்பங்களில் இருந்தும் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். எவர் எங்கு இருப்பினும், என்ன செலவேயாயினும் அனைவரும் அந்த காலத்தில் வந்துவிடுகின்றனர்.
இப்போது நாடகங்களைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார்கள். இளந்தலை முறையினருக்கு தெலுங்கு எழுதப்படிக்கத் தெரியாததே காரணம் என்பதை கவலையோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
“இங்க நாங்க குடியேறியபோது எல்லா குடும்பத்து சனங்களுக்கும் தெலுங்கு எழுதப் படிக்க பேசத் தெரிந்திருந்தது. இப்போது ஒன்றிரண்டு குடும்பத்து இளைய தலைமுறை தவிர ஏனையோருக்கு இது இயலாததாகி உள்ளது. நாங்கள் எங்கள் மொழியை, கலாச்சாரத்தை என்ன செய்தேனும் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை கலந்த அக்கறை எங்களுக்கு” வேதனையோடு சொல்கிறார் வெங்கடகிருஷ்ணன். பாகவத மேளாவில் கூடும் பெரியவர்கள் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சொல்கிறார்.
பாகவத மேளாவில் பக்தி உண்டு. ஆனால் அதில் உள்ள பக்தியை மட்டுமே நாம் தவறாகக் கண்டிருக்கிறோம். நாயக்க மன்னரோடு புலம் பெயர்ந்த ஒரு நூறு குடும்பத்தினரின் மொழி மற்றும் கலாச்சார விழுமியங்களைக் காப்பாற்றத் துடிக்கும் கவலை கலந்த அக்கறையை எடுத்துக் கொள்ளத் தவறியிருக்கிறோம்.
படாதபாடு பட்டு, வருடா வருடம் இங்கு கூடுவது பக்தியோடு சேர்ந்து தங்களது மொழி மற்றும் கலாச்சார வேரினை தரிசிக்கவும், அதனைக் காக்க வேண்டிய தங்களது பொறுப்புணர்வினை புதுப்பித்துக் கொண்டு போகவும் சேர்த்துதான்.
அவசர அவசரமாக அழிந்துவரும் மொழிகளுள் தமிழும் ஒன்று என்கிறது யுனெஸ்கோ. மொழி குறித்து அக்கறையுள்ள தமிழர்களுக்கு கற்றுக்கொள்ள சாலியமங்களத்து அக்ரஹாரத்தில் நிறைய இருக்கிறது.
நன்றி; "கல்கி"
Thursday, June 17, 2010
(கல்கி துணை ஆசிரியர் திரு கதிர் பாரதி அவர்கள் "காற்று வரும் பருவம் " என்ற நாவலை விமர்சனம் செய்ய வேண்டி அனுப்பியிருந்தார். விமர்சனம் 20.06.2010 "கல்கி" இல் வந்திருந்தது. நல்ல நாவல் குறித்த தேடல் உள்ளவர்களுக்கு இந்த புதினத்தை சிபாரிசு செய்கிறேன்)
................................................................................................................................................................
காற்று வரும் பருவம்
"ருசி என்பது பண்டத்தில் மட்டுமல்ல ருசிக்கும் நாக்கின் தன்மையிலும்தானே இருக்கிறது" என்கிறார் பாரதி பாலன் முன்னுரையில். படைப்பாளி மற்றும் படைப்போடு வாசகனும் சேர்ந்தே ஒரு படைப்பின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறான் என்கிற சரியான புரிதலோடுதான் இந்த புதினத்தை அவர் நெய்திருக்கிறார். வாசிக்கும் ஒவ்வொருவரும் புதினத்தில் வரும் ஏதோ ஒரு பாத்திரத்தோடு பொருந்திப் போவதே இதன் விளைவுதான்.
கிராமத்தின் அழகை, வனப்பை, வளத்தை, சாதியை, காதலை, மேன்மையை, இழிவை, எள்ளலை, ஆணாதிக்கத்தை, பாமர சனங்களின் பகடியை,அன்பை, வன்மத்தை, உழைப்பை, சுரண்டலை கொஞ்சமும் மிகையின்றி உள்ளது உள்ளபடி போகிற போக்கில் பதிந்து செல்கிறார் பாரதிபாலன்.
இந்தப் புதினத்தின் மையம் எதை சுற்றி?
கோவிந்து பஞ்சவர்ணம் காதலை சுற்றியா? குடியானத் தெருவுக்கும் வடக்குத் தெருவுக்கும் இடையே பேயாட்டம் போடும் சாதி மோதலை சுற்றியா? என்றால் இந்தப் புதினம் தனித்த எது குறித்தும் பேசவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் சீலையம்பட்டி கிராமத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பதிவாகவே இந்தப் புதினத்தைப் பார்க்க முடிகிறது.
கொல்லப்பட்ட கோவிந்துவின் அண்ணன் ஜெயபாலின் உடல் ஊருக்குள் கொண்டு வரப்பட்டபோது "எவன் அடிச்சானோ அவன சங்க நெறிச்சு கொல்லுங்கப்பா. நா கண்ணுல கண்டேன் வெளெக்க மாத்துக் கட்டையக் கொண்டே அவன கொண்டு போடுவேன்" என்று கொந்தளித்துப் பொங்கிய முத்தம்மாவை
" ஏ முத்தம்மா நீ சித்த சும்மா இருடி. ஆம்பளையாளுக பேசிக்கட்டும்" என்று அடக்கிய குரலில் மட்டுமல்ல, "நம்ம ஊர்ல ஆம்பளை ஆளுகளும் இருக்காங்களாக்கும்" என்ற முத்தம்மாவின் பதிலும்கூட கிராமத்து ஆணாதிக்கத்தின் முகவரிதான் என்றால் சாமத்தில் வேலியின் ரகசிய சந்து வழி நுழைந்து கத்தரி வயல் கடந்து பஞ்சுவை சந்திக்கும் கோவிந்து
"ஒன்னிய தனியாவா வுட்டுட்டு போயிட்டாங்க?"
"ஆம்பளைத் துணை வெச்சிட்டுத்தேன்"
"யாரு?"
"எந்தம்பியத்தேன்"
அந்த ஆம்பளைத் துணை குப்புறக் கிடந்தது. ஒரு கால் பாய் விரிப்பிலும் மறு கால் தரையிலுமாக தவளை மாதிரிக் கிடந்தது என்று பதிகிற இடம் ஆணாதிக்கம் குறித்த எள்ளளின் உச்சம்.
"மண்ட கொல்லப் பக்கமா வா சாப்ட்டுட்டு போவ" (பக்கம் 58) என்று கோவிந்துவின் அம்மா அவரை அழைப்பது கிராமத்து சாதியத்தை தோலுரித்து சொல்லும்.
"இந்த மழைக்கு அரிசி கஞ்சி காச்சி குடிக்கலாமுண்டு ஒரு ஆசைங்கைய்யா" என்று மண்வெட்டியான் கோவிந்துவிடம் சொல்லுமிடம் கிராமத்து உழைக்கும் திரளுக்கு குருனைக் கஞ்சியே எவ்வளவு பெரிய கனவாக உள்ளது என்பதை பிரச்சார நெடி துளியுமில்லாது பிரச்சாரம் செய்யும் இடம்.
"தூண்டிகள் சாம்பலாவதில்லை
திரிகள்தான்"
என்பது மாதிரி மேத்தா எழுதியதாக ஞாபகம். இதை நன்கு உணர்ந்த நல்லவர்கள் குடியானத் தெருவிலும் வடக்குத் தெருவிலும் இருக்கவே செய்கிறார்கள் என்பது எல்லா கிராமங்களிலும் விரவி கிடக்கும் எதார்த்தம்.
எவனோ உசுப்பி விட நரம்பு புடைத்து யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எதையோ செய்துவிட்டு நாயாய் பேயாய் பொளப்பைக் கெடுத்துக் கொண்டு நீதி மன்றம் அலையும் இளைஞர்களை நிறைய ஊர்களில் பார்க்க முடியும்.
"இந்த நாவலை எங்கு தொடங்க வேண்டுமோ அங்கு தொடங்கவில்லை, முடிவும் அப்படித்தான்" என்கிறார் பாரதிபாலன் .
ஆனால் சரியான இடத்தில் தொடங்கி சரியாய் முடித்திருக்கிறார்.
வெளியீடு
புதுமைப் பித்தன் பதிப்பகம்
சென்னை 83
044--24896979
Thursday, June 10, 2010
முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
இறங்கினேன் என்று சொன்னால் அது பொய். விழாத லாட்டரி சீட்டினை கசக்கி எறிவது மாதிரி சக பயணிகள் என்னை கீழே எறிந்தார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். சட்டையை கழற்றிப் பிழிந்தால் இரண்டு குவளை தேறும். அது தந்த எரிச்சலோடுதான் இரண்டு சக்கர வாகனத்தை எடுக்க கிளம்பினேன்.
தலைக் கவசத்தை அணியப் போன நேரம் அலை பேசி யுகமாயினி சித்தன் என்று எழுதிக் காட்டி செல்லமாய் சிணுங்கியது.
"அது வந்து ரெண்டு விஷயம் எட்வின், ஒன்னு, நீங்க கல்கிக்கு அனுப்பியுள்ள காற்று வரும் பருவம் நாவல் விமர்சனத்த விரிவாக்கி எனக்கு அனுப்பிடுங்க. அத இந்த மாசம் வச்சுடுவோம். ரெண்டு, செந்தமிழனோட வலை தளத்த மெயில்ல இணைச்சிருக்கேன் . ரொம்ப நல்லா செய்றார். அவர் யாரு தெரியுமா? தோழர் மணியரசனோட பையன். அதுல ஒன்ன இந்த மாசம் வச்சுடலாம். அதுல இன்னொரு விஷயம் இருக்கு. அதப் பாத்துட்டு அதப் பத்தி கொஞ்சம் காலைல அவசியம் பேசுங்க."
கனிவென்றும் கொள்ளலாம், கட்டளையென்றும் கொள்ளலாம், இரண்டின் கலவையாகவும் கொள்ளலாம். இதுதான் சித்தன்.
தேவையான விஷயங்களை ஒன்று ஒன்றாய் கடகட வென்று சொல்லி முடித்து விட்டு சட்டென துண்டித்து விடும் வித்தையை அவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். "ஏதோ சொல்ல வந்தேன். சட்டென வர மாட்டேங்குது. மறந்து போச்சு," என்பதெல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது. தேவைக்கு மேல் ஒரு வார்த்தை இருக்காது. பேசுவதற்கு முன் மனுஷன் ஒத்திகை பார்த்துவிட்டு வருவாரோ என்றுகூட எண்ணுவதுண்டு.
செம்மொழி மாநாட்டிற்குள் இதழைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதால் அவர் சுமக்கும் பளுவின் சுமை அறிந்தவன் என்பதால் இரண்டு வேலைகளையும் அன்றிரவே முடித்துவிடுவது என்று தீர்மானித்தேன்.
இணையத்திற்குள் நுழைந்து அவர் அனுப்பியிருந்த வலையைத் திறந்தேன். "காட்சி" என்ற தனது வலையை மிகுந்த கவனத்தோடும் அழகுணர்வோடும் வடிவைமைத்திருந்தார். நாமும்தான் வைத்திருக்கிறோம் வலையை. எப்படி மற்றவர்கள் பார்க்க வருவார்கள் என்று என்னை நானே நொந்து கொண்டே உள்ளே போனேன். "அது ஒரு பெரிய விஷயமே இல்ல எட்வின், அரை மணி நேரத்துல முடிச்சுடலாம்" என்று சொன்ன சித்தனுக்கும் இன்னும் நேரம் வாய்க்க வில்லை. நானும் அதற்கப்பறம் அது பற்றி பேசவே இல்லை என்பதையும் சொல்லத்தான் வேண்டும். சரி விடுங்கள். அதற்கெல்லாம் ஒரு அக்கறை வேண்டும்.
" கடவுள் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தாரா?" என்ற செந்தமிழனது பதிவைப் பார்த்ததும் அப்படியே மிரண்டு போனேன். தாத்தா பாட்டிகளின் வடிவில் கடவுள்களை கண்டுணர இயலாத நமது அறியாமையை, கீழ்மையை குழந்தைகளின் தளம் நின்று குழந்தைகளின் மொழி கொண்டு நச்சென்று நெய்திருந்தார்.
"திண்ணையிலிருந்த தாத்தா
வீட்டிற்குள் வந்தார்
படமாக"
வீட்டிற்குள் வந்தார்
படமாக"
என்ற சேது மாதவனின் கவிதையையும் இந்தப் பதிவு என் அசைக்கு கொண்டு வந்தது.
எனது மிரட்சிக்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவரது "கடவுள் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தாரா?" என்ற இந்தக் கட்டுரையையும் எனது "சாமிக்கு சயின்ஸ் தெரியாது" என்ற கட்டுரையையும் இருவரது பெயரையும் போடாமல் சுற்றுக்கு விட்டால் இரண்டையுமே அவர் எழுதியதாக அவரது நண்பர்களும் நான் எழுதியதாக எனது நண்பர்களும் சத்தியமே செய்யக் கூடும்.
குழந்தைகளுக்கான வெளியும் மொழியும் எங்கள் இருவருக்கும் மிக நெருக்கமாய் வருகிறது.
" உளுந்து சாகுபடிக் காரனின் சாபம்" கட்டுரையை வாசித்தால் நேர்மையுள்ள யாராலும் வேறு எதற்கும் சட்டென கடந்துவிட முடியாது. உளுந்துப் பண்டங்கள் எதைத் தின்னும் போதும் உளுந்து சாகுபடியாளர்களின் வியர்வையும் செந்தமிழன் முகமும் நம்மை சபித்துக் கொண்டே இருக்கும். " உளுந்தின் நிறம் கருப்பு. உங்கள் வீட்டிற்கு வரும் போது தோல் உரிக்கப் பட்டிருக்கும்" என்று முடித்திருப்பார். அது குறித்து நிறையப் பேச வேண்டும்தான். அந்தக் கட்டுரையே "யுகமாயினி" ஜூலை இதழில் வருகிறது. அவசியம் வாசியுங்கள்.
செந்தமிழனைக் கடந்து போகும் தெம்பற்றவனானேன். சரி, விஷ்ணுபுரம் சரவணனோடு பேசலாம் என்று பார்த்தால் அவர் ஒரு இழவு வீட்டில் இருந்தார்.
மனம் போன போக்கில் எலி கொண்டு வலையோடு விளையாடிக் கொண்டிருந்தேன். எலி என்னை இழுத்துக் கொண்டுபோய் மாதவராஜின் "தீராத பக்கங்கள்" வலையில் தள்ளியது. வலையுலகை ரொம்பவும் வெப்பப் படுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை கண்ணில் பட்டது. பதிவுலகை கொந்தளிக்கச் செய்த அந்த பிரச்சினை குறித்த அரிச்சுவடிகூட தெரியாமல் இருந்திருக்கிறேன் பாருங்கள். இன்னும் கொஞ்சம் உன்னிப்பாய் கவனிக்க வேண்டுமென்று உறுதியேற்றேன்.
பதிவர் நர்சிம் தனது வலையில் தோழர் சந்தன முல்லைபற்றி ஆணாதிக்கத் திமிரோடு பதிந்தது பற்றியும், அது குறித்து நீண்ட விவாதங்கள் நடந்தது பற்றியும், இறுதியாய் நர்சிம் முல்லையின் கணவர் தோழர்.முகிலிடம் மன்னிப்பு கேட்டது பற்றியும், முல்லையிடமே அதை கேட்பதுதான் சரி என்று மாதவராஜ் ஆலோசனைத்திருந்ததையும் அறிய முடிந்தது.
இது ஓராண்டாகவே நீண்டு வருவதாக படுவதாலும் முல்லை எங்கு என்ன பின்னூட்டமிட்டார் என்பதும் தெரியாமல் நர்சிம் என்ன எழுதினார் என்பதும் தெரியாமல் அபிப்பிராயம் சொல்லக் கூடாது. தப்பித்தல் முயற்சியல்ல இது. சாராக் கொள்கையோடு நமக்கென்றும் உடன்பாடில்லை. யாவரும் நமக்கு கேளிருமல்ல. உழைப்பவனும் யோக்கியனும் மட்டுமே நமக்கு உறவாக முடியும்.
இந்த நேரத்தில் முல்லையின் வலை கிடைதது. "பூக்காரிகளுக்கும் தன் மானம் உண்டு" என்ற தனது பதிவில் (பூக்காரி என்ற புனைவில்தான் நர்சிம் முல்லையைக் காயப் படுத்தி இருந்தார் என்று சொல்லப் படுகிறது)
"பதிவெழுத முகிலைக் கேட்டு நான் வரவில்லை.முகிலைக் கேட்டு கமெண்ட் போடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.
சித்திரக்கூடத்திலும் பதிவுலகிலும் சந்தனமுல்லையாகவே முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேனே தவிர முகிலுடைய மனைவியாக அல்ல. நான் முகிலின் சொத்தோ கவுரவமோ அல்ல. அதைக் குறித்த தெளிவு என்னிடம் இருக்கிறது.
முகிலிடம் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்?
இதன் மூலம் மனைவி, கணவனது சொத்து என்பதே திரும்ப நிறுவப்படுகிறது. கணவனும் மனைவியும் சேர்ந்த குடும்பத்தில் கணவன் அங்கமே தவிர, கணவன் என்றைக்கும் மனைவியை ரெப்ரசெண்ட் செய்ய முடியாது!
அப்படியே நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், கேட்க வேண்டிய நபர் யாரைப் பற்றி புனைவெழுதி எல்லார் பதிவுகளிலும் ஒரு வருடமாக சீண்டி வருகிறேனென்று கமெண்ட்களிட்டு திரிந்தீர்களோ அவளிடம்.
ஏன், ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்க உங்கள் ஈகோ பின்வாங்குகிறதா?"
என்று கொதித்திருந்தார். பிரச்சினை என்னோடு என்கிறபோது அதில் உங்கள் பக்கம் தவறிருப்பதை உணர்ந்தவுடன் என்னிடம் கேட்காமல் மன்னிப்பை என் கணவரிடம் கேட்பதும் கேவலமான ஆணாதிக்கச் சிந்தனையன்றி வேறென்ன என்ற முல்லையின் வாதம் சரியெனப் படவே அந்த அதிகாலை மூன்று மணி வாக்கில் முல்லைக்கு பின்னூட்டமிட்டேன்.
இதில் முல்லையின் கோபம் பிடித்துப் போக இன்னொரு காரணமும் உண்டு.
இப்போது ஆறாவது படிக்கும் கீர்த்திக் குட்டி அப்போது மூன்றாவது படித்துக் கொண்டிருந்தாள். அவளது தமிழ் புத்தகத்தில் "கீர்த்தனா" என்று தனது பெயரை அழகாக எழுதியிருந்தாள். அதற்கு முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ "மக்கு" என பென்சிலால் சேர்த்தேன். ஒன்று "மக்கு கீர்த்தனா" என்றோ அல்லது "கீர்த்தனா மக்கு" என்றோ வந்திருக்க வேண்டும்.
"நானா மக்கு?. நீ மக்கு, உங்க அப்பா மக்கு, உங்க மிஸ் மக்கு, உன்னோட ப்ரண்ட்ஸ் மக்கு" என மெல்ல ஆரம்பித்த புயல் தீவிரமைந்தபோது ஒரே ரணகளமானது வீடு. அவள் கைகளில் போனவை எல்லாம் பறந்தன.அழுகை என்றால் அப்படி ஒரு அழுகை. "அழுச்சுக்கலாண்டா" என்று என் அம்மா சமாதானப் படுத்த முயன்றபோது "ஓம் பையன ஸ்கேல்லயே அடிச்சு கொன்னுடுவேன். ஒழுங்கா இருக்க சொல்லு அப்பாயி" என்று தெரிக்கிறாள்.
இறுதியாய் விக்டோரியா வந்து அவளை சமாதானப் படுத்தும் விதமாக என்னைக் கடிந்து கொண்டு "எப்ப பாத்தாலும் நீங்க இப்படித்தான். புள்ளக் கிட்டயே வம்பு பன்னிக்கிட்டு. "என்றபோது அவள் கன்னம் சிவந்திருந்ததை பார்த்தேன் . உடனே சாரி விட்டு இனிப் பாப்பாவ மக்குன்னு சொல்ல மாட்டேன் என்றேன்.
"அப்பாதான் சாரி சொல்லிட்டான்ல. அழுவாதடா செல்லம் என்றவாறு அவளை தூக்கப் போன என் அம்மாவை தள்ளி விட்டு
"லூசாப்பா நீ. என்னதானே மக்குன்ன அப்புறம் ஏன் ஏங்கிட்ட சாரி கேட்காம அம்மாக்கிட்ட சாரி கேக்குற"
அசந்தே போனேன். ஆமாம் மக்கு என அவளை அழைத்தது நான். அவள் காயப்பட்டிருக்கிறாள் என்று உணர்ந்ததும் நான் அவளிடம்தானே சாரி கேட்டிருக்க வேண்டும்.
அப்புறம் அவளிடம் சாரி கேட்டு ஒரு வழியாய் சமாதானம் அடைந்தவுடன் விட்டு ரப்பர் எடுத்து அதை அழிக்கப் போன போதும் அவளுக்கு கோபம் வந்தது. "
நீயா எழுதன ? அப்பாதான எழுத்தனார். அப்ப அப்பாதான அழிக்கனும்"
என் மகளை இந்த மாதிரியான நியாயமான கோவங்களுக்காகவே ரசித்து மதிப்பேன் அல்லது மதித்து ரசிப்பேன்.
அன்று கீர்த்திக் குட்டியிடம் நான் கண்ட கோபத்தின் உச்சத்தைதான் இன்று முல்லையின் கோபத்தில் பார்க்கிறேன்.
இன்றைய முல்லையின் இந்த நியாயமான கோபத்தில் கீர்த்தியின் கோபத்தைக் காண்கிறேன்.
இப்படிக்கூட சொல்லலாம்
முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும்
அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
Wednesday, May 26, 2010
காயா பழமா?
ராஜ்ய சபாவின் காலி இருக்கைகளுக்கு ஆள் நிரப்பும் திருவிழாவிற்கு அநேகமாக நாள் குறித்ததிலிருந்து குழந்தைகளிடமிருந்த "காயா பழமா?" விளையாட்டு அரசியலுக்கு நகர்ந்திருக்கிறது.
காய் விட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் வசைந்து கொண்டிருந்தவர்கள் "பழம்" விட்டுக் கொள்ளலாமா என்று பரிசீலிக்கத் தொடங்கி விட்டார்கள். "காய்" காலத்தின் லாப நட்டக் கணக்கே பழம் விடுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கப் போகிறது.
"காய்" , "பழ" சைகைகளால் " தோட்டங்களும்" , "ஆலயங்களும்" , சந்தடி சாக்கில் சில "பவன்" களும் சுறு சுறுப்பாய் மாறும்.
"லாபம்" மட்டுமே குறியாகிப் போன "காய்" , "பழ" கூட்டணி விளையாட்டு ஏதோ அரசியலில் மட்டுமல்ல , வாழ்க்கையில், வணிகத்தில், தொழிலில் என்று சகல தளங்களுக்கும் விரிந்து பொருந்தும்.
" இல் வாழ்க்கை கூட்டணியே" கூட இவரோடு சம்பந்தம் கொண்டால், இவரோடு இணைந்தால், பிள்ளை கண்ணை கசக்காமல் இருப்பாள், அல்லது சாகிற வரைக்கும் நமக்கு நிம்மதியான சோறு என்கிற வகையில் ஏதாவது ஒரு லாபக் கணக்கோடுதான் பெரும்பாண்மை அமைகிறது.
இன்னொரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். "காய்" விட்டு பிரிவதில் பெரும் பகுதி கூட லாபம் கருதிதான்.
விடுங்கள் போகட்டும்.
" நட்டம்" தான் என்பது உறுதியாய் தெரிந்த பின்பும், அது சமூகத்திற்கு நன்மை தருமெனில் அதை மகிழ்வோடு ஏற்று அமைந்து விடும் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி ஒரு அபூர்வ கூட்டண் "தியாக தீபங்கள்" மோகன கிருஷ்ணனுக்கும் "யுகமாயினி" சித்தனுக்கும் இடையில் வாய்த்திருக்கிறது.
அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து கை காசை செலவழித்து
, "நட்டம்" விரும்பி ஏற்று ஊர் ஊராய் சென்று விழா எடுத்து கொண்டாடி நல்ல புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அதில் இரண்டு ஊர்களில் பேசுகிற வாய்ப்பை பெருந்தன்மையோடு தந்தார்கள்.
அதிலொன்று சென்னை கருணாநிதி நகரின் பிரதான சாலையில் முதல் தளம் முழுவதும் வியாபித்து நிற்கும் "டிஸ்கவரி புக் பேலஸில்" . மிகப் பெரிய தளம். கூட்டத்திற்காக புத்தகங்களை ஒதுக்கி வைத்து உதவிக் கொண்டிருந்தார்கள் புத்தகக் கடையின் உரிமையாளர் வேடியப்பனும் அவரது மொத்தக் குடும்பமும். சழுவாய் கசியக் கசிய யாரைப் பார்த்தும் பொக்கை வாய் புன்னகைத்து வரவேற்றாள் அவரது ஒரு வயது குழந்தை.
இத்தனை சின்ன வயதில் இத்தனை பெரிய முதலீட்டை ஒரு புத்தகக் கடையில் முடக்குவது சற்றேரக் குறைய தற்கொலைக்கு சமமான ஒன்றாகவே எனக்குப் பட்டது.
வேடியப்பனிடம் கேட்டேன்.
"யோசித்துப் பார்த்ததில் தற்கொலைக்கு புத்தகக் கடை கொஞ்சம் தேவலாம் எனப் பட்டது. அதுதான்."
எத்துனை மேன்மை. எத்தகைய மேன்மை. மோகனக் கிருஷ்ணனும் , சித்தனும் நட்டம் ஏற்று விழா எடுப்பதில் எனக்கான வரவு வேடியப்பன்.
விழா தொடங்கியது. பேசப் போனால் எதிரே ஐயா இ.பா. எத்தனை அழகு எத்தனை இளமை, அடடா, எத்தனை இனிமையான கம்பீரமான உடை ரசனை. அவரைப் பார்த்ததும் நான் எண்பதுகளிலும் அவர் இன்னு நாற்பதுகளிலுமாய் வாழ்வது புரிந்தது.
அவரது மேன்மைகளுள் ஆகப் பெரியதாய் நான் பார்ப்பது வேலு சரவணனை குழந்தைகள் வெளிக்கு மடை மாற்றம் செய்தது.
சித்தன் குழந்தைகளிடமிருந்து களவாடப் படும் குழந்தைத் தனம் குறித்தும், வெம்பிப் போன பக்குவத்தை குழந்தைகளின் மீது திணிப்பதோடு அதைக் கொண்டாடி ரசிக்கும் பெரியவர்களின் அயோகியத் தனம் குறித்தும் கொஞ்ச நாட்களாக மனதுக்குள் அழுது கொண்டிருந்தார். அதனால்தான் அன்றையக் கூட்டத்தில் "மழலைப் பக்குவம்" குறித்து பேசுவது என்று முடிவெடுத்தோம்.
குழந்தைகளிடமிருந்து கேள்விகளை அப்புறப் படுத்தி விட்டோம். அதற்கு ஒரே காரணம் அவர்களின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்பதுதான் எனப் பேசிக் கொண்டே வந்தவன் "எங்க பக்கத்து வீட்டுப் பையன் மறக்குறதுன்னா என்ன மாமாங்கறான். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் என்றேன். என் பேச்சில் இந்த இடம் சேர்த்து ஆறேழு முறை
இ.பா சிரித்தார். அது போதும்.
பேசிக் கொண்டிருக்கும் போது தொண்டை பழுது படவே தண்ணீர் பாட்டிலை மூடி திறந்து நீட்டுகிறார் தோழர். மோகனக்கிருஷ்ணன். எவ்வளவு பெரிய பாரம்பரியம். அப்ப அந்தக் காலத்திலேயே பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். அண்ணன் பத்திரிக்கை ஆசிரியர். இவர் பதிப்பகம் நடத்துகிறார். மூன்று பேரும் எழுத்தாளர்கள். மூன்று பேருமே எழுத்து கொண்டு சம்பாரிக்காதவர்கள்.
மோகனக்கிருஷ்ணன் நல்ல நூல்களாகத் தேடிப் பிடித்து வெளியிடுகிறார் என்பதுகூட அல்ல விஷயம். எனது நூல்களை நூலகங்களுக்கு தர மாட்டேன் என்ற அடத்தோடு கூடிய இவரது வைராக்கியத்தின் கம்பீரமே இங்கு கொள்ளத் தக்கது.
இதுவும் மேன்மைதான். ஆனாலும் தோழர் அவர்கள் தனது விரதத்தை கூடிய விரைவில் முரித்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடும் மிகுந்த அக்கறையோடும் வேண்டுகிறோம். நூலகங்களை மட்டுமே நம்பி சார்ந்து நிற்கும் சில நூறு ந்ல்ல ஆழமான படிப்பாளிகளையாவது எனக்குத் தெரியும்.
டஜன் கணக்கில் நூல்களை ஒரே மேடையில் வெளியிடுவது என்பது தற்போது மிகச் சாதாரன நிகழ்வுகளாய் போனது. தினமும் தினமும் புத்தக வெளியீடுகள். வரவேற்கத்தான் வேண்டும். ஆனால் வருகிற விளைச்சலில் எத்தனை தேறும்?
பணம் இருக்கிற காரணத்தால் "போல" படைப்புகளும் குப்பைகளும்கூட வெளி வந்து விடுவதும் , வாய்ப்பும் போதிய வழி முறைகளும் தெரியாத காரணத்தால் வீரியமிக்க படைப்புகள் கூட கை எழுத்துப் பிரதிகளாகவே செல்லரித்து, மக்கி மண்ணோடு மண்ணாய் அழிந்து போவதும் நடக்கிறது.
"உலகம் உன்றன் கைகளில்தான்
உருளுமோ?----ஏழை
உரிமை பெற்றால் இயற்கை என்ன
மருளுமோ?
கலகம் செய்யும் ஏற்றத்தாழ்வை
நீக்கடா---- பேதம்
முறைமயைத்
தூள் ஆக்கடா"
உருளுமோ?----ஏழை
உரிமை பெற்றால் இயற்கை என்ன
மருளுமோ?
கலகம் செய்யும் ஏற்றத்தாழ்வை
நீக்கடா---- பேதம்
முறைமயைத்
தூள் ஆக்கடா"
என்று கொதித்த தமிழ் ஒளிக்கே இதுதான் நடந்திருக்கிறது. நல்ல வேளையாக படாத பாடு பட்டு அய்யா செ. து. சஞ்சீவி அவர்கள் தமிழ் ஒளி நூல்களை தனது "புகழ் புத்தகாலயம்" மூலமாக கொண்டு வந்திருக்கிறார். அதற்காக தமிழ் வாசகர்கள் அவருக்கு நிறையவே கடன் பட்டிருக்கிறோம்.
கொள்ளுதலுக்கும், விமர்சனத்திற்குமான படைப்புகளை சகல வடிவங்களிலும் போதும் போதும் என்கிற அளவிற்கு எழுதித் தளியிருக்கிறார்.
சாகிற காலமட்டும் சரியான வெளிச்சமின்றியே இருந்திருக்கிறார்.
பாரதி தாசனுக்கும் இவருக்கும் நண்பராயிருந்ஹ ஒருவர் இவரது படைப்புகளை நூலாக்க வாங்கி சென்றிருக்கிறார். நூல் வெளி வரவே இல்லை. அதற்கு காரணமாக கையெழுத்துப் பிரதி தொலைந்து போனதாக தமி்ழ் ஒளியிடம் சொல்லியிருக்கிறார்.
அதே நண்பர் பிரிதொரு நண்பரிடம் பேசும் போது " இருபது வயதுகூட ஆகல. அதுக்குள்ள புத்தகங்கள் வந்துட்டா பிறகு நம்ம எப்படி மதிப்பான். அடான் போடல" என்று சொன்னதாகவும் தகவல்கள் உண்டு.
இன்னொரு பக்கம், தமிழ் ஒளி போக வேண்டிய உயரம் போகாததற்கு அவர்தான் காரணம். யாரோடும் ஒத்துப் போகாதவர் எங்இற கருத்தும் உள்ளது.
இன்றைக்கும் தமிழ் மண்ணில் கவனம் பெறாத தமிழ் ஒளிகள் ஏராளம்.
சமூகம் அவர்களை கண்டு கொள்ள வேண்டுமென்பதும் தமிழ் ஒளிகள் புரிதலோடு கொஞ்சம் ஒத்திசைய வேண்டும் என்பதும் நம் ஆசை.
Subscribe to:
Posts (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நேற்று “ஆற்றுப்படை” மின்னிதழில் அய்யா சதீஷ் எழுதியிருந்த “நவாப் அமைத்த லிங்கம்” கட்டுரை குறித்து எழுதியிருந்தேன் முருகனின் ஐந்தாம் படை வீட...
-
அத்வானி இல்லாமலா ராமர் கோவில் சாத்தியமானது அவரையே ஆலயத் திறப்பு விழாவிற்கு வரவேண்டாம் என்பதா இது எந்த ஊரு நியாயம் என்கிறீர்கள் அத்வானிக்கே...