என்ன அங்கீகாரம் இருக்கு நமக்கு?
எதற்கிந்த வேலைகளை விடாமல் செய்ய வேண்டும்?
என்று அவ்வப்போது சோர்வது வாடிக்கைதான். என்றாலும் ஒருபோதும் இந்த நேரத்தை பணம் பார்க்க செலவிட்டிருக்கலாமே என்று நினைத்ததே இல்லை.
சோர்வது குற்றம் என்பதையும் தகுதிக்கு மீறியே நாம் அங்கீகரிக்கப்படுகிறோம் என்பதையும் கடந்த இரண்டுமாத நிகழ்வுகள் உணர்த்தின.
கருஞ்சட்டைப் பேரணிக்காக திருச்சி வந்திருந்த தம்பி கரு.பழனியப்பன் (Karu Palaniappan) என்னை சந்திக்க விரும்பினார் என்பதையும் என்னுடைய “சாமங்கவிய” மற்றும் “சாமங்கவிந்து” ஆகியவைகுறித்து சன்னமாய் சிலாகித்தார் என்ற தகவலையும் இன்னொரு தம்பி Suresh Kathan கூறியபோது எனது ஆதங்கத்தின்மீது சம்மட்டி ஒன்று செல்லமாகத் தட்டுவதை என்னால் உணர முடிந்தது.
சுரேஷோடு உரையாடியபோது,
ஒருமுறை இடப்பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியைவிட்டு வெளியேறி ஆறு இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியபோதும் தாம் போட்டியிடாத 34 தொகுதிகளில் (புதுச்சேரி உள்ளிட்டு) திமுகவையும் அதன் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரிப்பதாக முடிவு செய்ததையும் சொன்னபோது சன்னமாய் வியந்தான்.
அந்த ஆறு தொகுதிகளுக்குள் சிலவற்றில் (எத்தனை என்று சரியாகத் தெரியவில்லை) பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தியபோது அந்தத் தொகுதிகளில் இருந்து தனது வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கட்சி விலக்கிக் கொண்டதையும், அப்படி விலகிய வேட்பாளர்களில் ஒருவர்தான் சுரேஷ் காத்தான் உள்ளிட்ட தோழர்கள் வம்படியாகவும் மூர்க்கமாகவும் விமர்சித்த டி.கே.ரெங்கராஜன் என்பதை சொன்ன்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக வியந்தான்.
ஜெயலலிதா அம்மையார் ஒன்னேமுக்கால் லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தபோது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து நியாயம் காத்தவர் ரெங்கராஜன் என்று சொன்னபோது,
“இவை எல்லாம் உன்ன மாதிரி ஆளுங்க ஏன் எங்களுக்கு சொல்லல. சொல்லாதது உங்க குற்றமல்லவா?”
என்றபோது சம்மட்டி ஒரு சின்னத் துளி பிசிறை என் ஆதங்கத்தில் இருந்து தகர்த்தது.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் எல்லாக் கிளைகளிலும் AIIEA ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக ஒருநாள் வ்வாயிற்கூட்ட ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் ஆனால் LIC யை தனியாருக்கு தாரை வார்க்க அரசுகள் முயன்றபோதெல்லாம் போராடிய AIIEA உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக நாம் போராடாமல் இருந்தது குற்றமல்லவா? என்று நான் கேட்டதை சுரேஷ் தனது பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததை தோழர் Marx Pandian கூறியபோது நியாயத்தை, உண்மையை சொன்னால் இளைஞர்கள் பற்றிக்கொள்ளவே செய்கிறார்கள் என்பது புரிந்தது.
இரண்டாவதாக ஒரு பெருந்துகள் ஒன்றினை என் ஆதங்கத்தில் இருந்து தெறிக்க வைத்திருந்தது சம்மட்டி.
புதுகை புத்தகத் திருவிழாவில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க உரைகளுள் எனது உரையும் ஒன்று என்று பெருந்தன்மையோடு கூறியிருந்தார் தோழர் Kasthuri Rengan
எனது ஆதங்கத்தில் ஒரு பெரும் பிளவை ஏற்ப்படுத்தியிருந்தது சம்மட்டி
சென்றமாதம் 65/66 பக்கங்களை காக்கைக்குத் தர முடியவில்லை. அப்படியொரு கைவலி. ஒரு கையை மேலே தூக்குவதற்கு இன்னொரு கையின் உதவி தேவைப்பட்டது.
அப்போது தோழர் ஆ.சிவசுப்பிரமணியம் அவர்கள் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை தோழர் முத்தையா எனக்கு அனுப்பி இருந்தார். அதில்,
“ எட்வினது பக்கங்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”
என்றிருந்தது.
எனது ஆதங்கம் சுக்கு நூறாய் உடைந்திருந்தது.
சோர்ந்தது குற்றம்.
மன்னித்துவிடுங்கள் தோழர்களே.
என்னைப்போலவே ஆதங்கத்தில் உழலும் தோழர்களே உங்கள் ஆதங்கத்தில் நியாயம் இருக்கவே செய்யும். ஆனாலும் சொல்கிறேன்,
“சோர்வது குற்றம்”
#சாமங்கவிய சரியாக இரண்டுமணி நேரம்
24.02.2019
24.02.2019