Thursday, October 31, 2013

திருவாளர்.கழிவறை

யோசித்துப் பார்க்கிறேன்,

திருவாளர் கழிவறை என்று யாருக்கேனும் பெயர் வைத்து அழைக்க இயலுமா?

கேவலமான பட்டப் பெயரால் விளிம்புநிலை மக்களை அழைப்பதில் எந்தக் கூச்சமும் காட்டாத நம் மண்ணில்கூட இது சாத்தியமில்லை என்றே படுகிறது.

“மண்ணாங்கட்டி”, “மண்வெட்டி” என்பது வரைக்கும் கூட இது நகர்ந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ராமசாமி என்ற தனது பெயரால் அழைக்கப் படும் போது திரும்பிப் பார்க்காத மனிதன் “ மண்ணாங்கட்டி” என்று அழைத்ததும் திரும்பிப் பார்க்கிற நிகழ்வுகள் இங்கு ஏராளம் இருக்கவே செய்கின்றன.

அந்த அளவிற்கு பட்டப் பெயரோடு ஒன்றிப் போகும் விளிம்பு நிலை மனிதன்கூட தன்னை யாரேனும்  ”கக்கூசு” என்றழைத்தால் கொன்றே போடுவான்.

அனால் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய பிரபலமான ஒரு பெரிய மனிதரை “ திருவாளர். கழிவறை” (mr.toilet) என்று அழைப்பதில் ஒரு நாடு பெருமைப் படுகிறது.

அதைவிட முக்கியம் என்னவென்றால் அப்படி தான் அழைக்கப் படுவதில் எதைவிடவும் பெருமை கொள்கிறார் அந்த பெரிய மனிதர்.

இது சாத்தியப் பட்டிருக்கிறது சிங்கப்பூரில்.

ஜாக்சிம் என்ற பெரிய மனிதரைதான் திருவாளர். கழிவறை (MR.TOILET) என்று அழைக்கிறார்கள். அப்படி அழைக்கப் படுவதற்கு அவர் என்ன செய்தார்?

கழிவறைகளின் அவசியத்தை சிங்கப்பூர் மக்களிடம் இயக்கமாகக் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். அதற்காகத்தான் அவரை மக்கள் அப்படி கொண்டாடுகிறார்கள். அவர் தந்த அழுத்தத்தின் விளைவாகத்தான் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த விவதமொன்றில் சிங்கப்பூரின் பிரதிநிதி திரு மார்க் நியோ அவர்கள் நவம்பர் 19 ஐ உலக கழிவறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று மன்றாடினார்.

இந்தக் கோரிக்கையை முன் வைப்பதற்காக தான் கேலி செய்யப் படலாம் என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். அதை வெளிப்படையாக அந்த மன்றத்தில் பதியவுமே செய்தார். யார் தன்னை எவ்வளவு கேவலமாக பகடி செய்த போதிலும்  இந்தக் கோரிக்கையிலிருந்து தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். உலகத்தின் இந்த நொடியின் மிக அவசியமான ஒரு பிரச்சினையைத் தான் பேசிக்கொண்டிருப்பதாகவும், ஆகவே அந்த மாமன்றம் அது குறித்து கவனம் குவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவர் எதிபார்த்தபடியே அவர் பகடி செய்யப் பட்டாரா இல்லையா என்பதற்கு சான்றெதுவும் இல்லை. என்றாலும் அதற்கு வாய்ப்பிருக்கவே இருக்கிறது. ஒருக்கால் வெளிப்படியாக அதை செய்ய தைரியம் இல்லாதவர்கள் மனதிற்குள்ளேனும் அவரை பகடி செய்திருப்பதற்கு வாய்ப்புகளுண்டு.

உலகில் 250 கோடிக்கும் சற்று கூடுதலான மக்களுக்கு சுகாதாரமான கழிவறை இல்லை என்றும் 110 கோடிக்கும் அதிகமான மக்கள் திறந்த வெளியையே கழிவறையாகப் பயன் படுத்துகிறர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எனில், இவ்வளவு வளர்ந்தநிலை விஞ்ஞானத்தை பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் நேரத்தில் 110 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதியே இல்லை என்பது எவ்வளவு கொடுமை. இவர்கள் திறந்த வெளியை கழிவறைகளகப் பயன்படுத்துவது சூழலை பாதிக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இன்றைய உலக மய சூழலில் அதற்கு அவ்வளவு மறைவான இடம் எங்கே இருக்கிறது.

திறந்த வெளியை பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு புதர் உள்ள இடங்களைத்தான் நாடவேண்டும். கிராமங்களில் இத்தகைய இடங்களை மந்தை என்பார்கள். வெளிச்சத்தில் போக முடியாது. இருட்டினால்தான் போக முடியும். புதர், இருட்டு கழிவறை கட்டவே வசதியற்ற கிராமப் புற ஏழை மக்கள் கை விளக்கிற்கு எங்கு போக முடியும்? இரவு நேரத்தில் புதர் பக்கம் ஒதுங்கியவர்களில் பாம்பு கடித்து செத்தவர்களின் எண்னிக்கை யாருக்குத் தெரியும். 

கழிவறை கட்டவே வக்கற்ற ஏழைமக்கள் எப்படிச் செத்தால் யாருக்கென்ன கவலை?

இதைவிடக் கொடுமை எவ்வளவு அவசரமென்றாலும் இருட்டும் வரை காத்திருக்க வேண்டும்.

”ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது “ என்பார்கள் ஆனால் பள்ளிகளில் எதை கற்றுத் தருகிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு மூத்திரத்தை அடக்கக் கற்றுத் தருகிறோம் என்று ஒரு கட்டுரையில் சொல்வார் தி. பரமேசுவரி.

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். கிராமத்தில் அல்லது, கழிவறை இல்லாத சிறு நகரத்தில் வசிக்கக் கூடிய ஒரு பெண்ணிற்கு மதிய நேரத்தில் இயற்கை உபாதைக்கான அறிகுறி தெரிகிறது எனில் அவர் எங்கு போவார்? பல பர்லாங்குகள் கடந்து போனால்தான் புதர் கிடைக்கும்.அதுவரை அடக்கிக் கொண்டே போகும் அவஸ்தையை, வலியை எப்படி எழுதுவது.

பயணத்தில் இருக்கிறோம். பசிக்கிறது. இன்னும் ஒரு மணி நேரம் பயணித்தால் ஒரு நல்ல உணவகம் கிட்டும் எனில் ஒரு மணி நேரம் பசியை அடக்கலாம். இருட்டும் வரை இதை எப்படி அடக்குவது?

பெரும் பகுதி இயற்கை உபாதைகளுக்காக இவர்கள் ஒதுங்கும் பகுதி சாலை ஓரங்கள்தான். அப்படி இருக்கும் போது சாலையில் வாகனங்களோ, மனிதர்களோ கடக்க நேரிட்டால் இவர்கள் படக் என்று எழுந்து நிற்க வேண்டும்.

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். இயற்கை அழைப்பினை ஏற்று கழித்துக் கொண்டிருக்கும் வேளை யாராவது ஒரு நிமிடம் எழுந்து நில் என்று சொன்னால் கொன்றே போட மாட்டோமா?

ஆனால் கழித்துக் கொண்டிருக்கும் வேளை ஏதேனும் வாகனத்தின் ஒலியையோ ஒளியையோ கண்டு விட்டால் நிறுத்திவிட்டு அப்படியே எழுந்து நிற்க வேண்டுமே அந்தக் கொடூர வலியின் அவஸ்தையை இத்தனை ஆண்டுக்காலம் ஆண்ட நம் தலைவர்கள் உணர்வார்களா? 

தண்ணீர் எடுக்க எம் தாய்மார்கள் இரண்டு மூன்று மைல்கள் கால் கடுக்க நடந்து, அங்கு பல நேரம் கால் நோக காத்திருந்து நீரெடுத்து வரவேண்டுமென்றால் மூத்திரம் போக ஒதுங்க இருட்டும் வரை காத்திருக்க வேண்டிய அவலம்.

ஏறத்தாழ இரண்டு லட்சம் குழந்தைகள் போதிய கழிவறைகள் இல்லாமையால் வருடா வருடம் இறக்கிறார்கள் என்கிற செய்தியை மார்க் நியோ வேதனையோடு குறிப்பிடுகிறார். 

ஆக கழிவறைப் போதாமை இரண்டு லட்சம் குழந்தைகளை வருடா வருடம் கொல்கிறது. இதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் போதிய கழிவறைகளை கட்டுமானித்தால் வருடா வருடம் இரண்டு லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.

போதிய சத்துணவு இல்லாமையாலும் பல லட்சம் குழந்தைகள் வருடா வருடம் செத்து மடிகிறார்கள்.போதிய கழிவறையின்மையாலும் பல லட்சம் குழந்தைகள் செத்து மடிகிறார்கள். இதற்கு ஒரு வழி காணாது சந்திரனுக்குப் போயென்ன? சூரியனைக் கொண்டு வந்து பாராளுமன்றத்தின் கோபுரத்தில் வைத்தென்ன?

பாராளு மன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் நமது பிரதான எதிர்க் கட்சியின் பிரதம வேட்பாளரான திரு மோடி அவர்கள் “ கழிவறை கட்டுவதற்கே முன்னுரிமை. கோயில்கள் இரண்டாம் பட்சமே” என்று பேசத் துவங்கியிருக்கிறார்.

இதைப் பார்த்ததும் வடையை எங்கே அந்த மனுஷன் கொண்டு போய்விடுவாரோ என்ற அச்சத்திலும் பதட்டத்திலும் காங்கிரஸ் எதிர்குரலெடுக்கத் தொடங்கியிருக்கிறது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிரிஜா வியாஸ் இது தங்களது அரசிந்திட்டம் என்றும், கோவிலை விட கழிவறைகளே அவசியம் என்பதை மோடிக்கு முன்பே தங்கள் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பேசியிருப்பதையும் சொல்வதோடு தங்கள் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியுள்ளதையும் குறிப்பிடுகிறார்.

கிரிஜா அவர்கள் சொல்வது உண்மைதான். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஜெயராம்தான் மோடியை முந்தி இதை சொன்னவர். நாம் கேட்பது என்னவெனில் ஜெயராம் பேசியது சரி, நீங்கள் ஒதுக்கியதும் சரி, என்ன விளைவு?

முறையான கழிவறைகளைக் கட்டுவதுதான் எங்கள் செயல்திட்டம் என்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தவர்கள் சொல்வது ஏழைகளை எள்ளி நகையாடுவது அன்றி வேறென்ன? இதை செயல் திட்டமாக சொல்வதற்கே அரை நூற்றாண்டுக்கும் மேலே தேவைப் படுகிறது உங்களுக்கு எனில் நிறைவேற்ற எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்.

கோவில் கட்டுவதாகச் சொல்லியே இதுவரை அரசியலை நகர்த்தியவர்கள் இப்போதுகழிவறையைப் பற்றி பேசுகிறார்கள் என்றால் அது ஏதோமக்களின்பால் ஏற்பட்டுள்ள அக்கறையால் அல்ல, இன்றைய தேவை கோவில் அரசியல் அல்ல, கழிவறை அரசியலே என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பதுதான்.

சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் ஒரு புரிதலைத் தந்தது. ஒரு திருமணத்திற்காக கரூர் சென்றேன். பேருந்து நிலையம் இறங்கியதும் வேக வேகமாக கழிவறை நோக்கி நகர்ந்தேன். “ஒன்னுக்கு ரெண்டு ரூபா, ரெண்டுக்கு மூனு ரூபா “ என்று டோக்கன் கொடுப்பவர் கத்திக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாய் உள்ளே நுழைந்தால் ரேஷன் கடைக் கூட்டத்தில் பாதி தேறும் போல இருந்தது. கைகளைப் பின் கட்டி, கால்களை தரையில் அழுத்தி , இடுப்பை நெளித்து என என்னென்னவோ செய்து கொண்டிருந்தேன். ஏறத்தாழ அனைவரும் அப்படித்தான்.

அங்கு நின்று கொண்டிருந்த இருவர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது. பணி மூப்பை மதிக்காமல் பதவி உயர்வினை பள்ளி நிர்வாகங்கள் வழங்கிக் கொண்டிருப்பது பற்றி விவரங்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

கோவத்தை எள்ளலோடு வெளிப்படுத்தும் ஆற்றல் இருந்தது இருவருக்கும்.
அந்த அவஸ்தையின் உச்சத்திலும் கொடுமை கண்டு எள்ளலோடு அவர்களால் பொங்க முடிந்தது.

என்னாலும் ரசிக்க முடிந்தது.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன். அவர்களும் புன்னகைத்தார்கள்.

“ தனியார் பள்ளி ஆசிரியர்களா சார்?”

“ ஆமாம் சார். நீங்கள்?”

“ நானும்தான்”

இப்படி எங்களுக்குள் ஒரு உரையாடல் துவங்கியிருந்த நேரத்தில் ஒரு அறை காலியாகவே எங்களுக்குப் பின்னால் நின்றிருந்த இளைஞன் உள்ளே நுழைந்து விட்டான்.

“ இங்க வரிசையில நிக்கறவனெல்லாம் மனுசனா இல்லையா?” என்று சகட்டு மேனிக்கு ஒருவர் திட்ட ஆரம்பித்து விட்டார்.

மற்றொரு ஆசிரியர் அவரை சமாதானப் படுத்தினார்.

சிரித்துக் கொண்டே என்னிடம் சொன்னார்,

“ பாருங்க சார், இவனவிட ஏழு வருஷம் ஜூனியரை தலைமை ஆசிரியரா போட்டாங்க. அப்பக் கூட சிரிச்சான். இன்னமும் அந்த ஹெச்.எம் மோட நல்லாதான் பழகுறான். ஆஃப்டர் ஆல் இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி பாயறான் பாருங்களேன்”

 “ எதுடா சின்ன விஷயம்?”

“ இது அவ்வளவு பெரிய விஷயமாடா?”

“ இல்லையா பின்ன. HM ப்ரொமோஷன உட்டுக் கொடுத்ததால என் பேண்ட்டு நாறாது. இங்க அப்படியில்லை”

இதுதான் ஞானத்தின் உசரம்.

மக்கள் தொகையின் அளவுக்கேற்ற கழிவறகளை அரசு கட்டமைக்க வேண்டும். அதை சுகாதாரத்தோடு பராமரிக்க வேண்டும்

இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். மூன்று ரூபாய் கொடுத்து என்னால் போக முடிந்தது . போனேன். காசில்லாத ஏழை என்ன செய்வான். வேறு வழியின்றி பேருந்து நிலையத்திலேயே போவான். கழிவறைகள் வேண்டுமளவும், சுகாதாரத்தோடும், இலவசமாகவும் அமைய வேண்டும்.

நம்பிக்கையிருக்கிறது,

இந்தத் தேர்தலில் அதிகம் பேசப்பட உள்ளவைகளுள் கழிவறையும் உண்டு.

நன்றி: காக்கைச் சிறகினிலே





Sunday, October 27, 2013

சம்மதமில்லையெனக்கு அதிசயங்களை சாப்பிட...

ரட்சிப்பு
மன்னிப்பு

இளைப்பாறுதல்
எது கொண்டும்
பொங்க மறுக்கிறது என் உலை
நீரை ரசமாக்கலாம்
ஐந்து துண்டுகளால் கூடைகளை நிரப்பியும் நீட்டலாம் நீ
சம்மதமில்லையெனக்கு அதிசயங்களை சாப்பிட
போக
உழைத்துதான் உண்ணனும் கர்த்தரே
முடியுமெனில்
கூலிக்கொரு வேலைக்கொடு

Friday, October 25, 2013

சோம்பேறிகளையும் இயக்கும் சித்தன்கள்





படைப்பளிகளைத் தேடிச் சென்று கண்டெடுப்பதில், அவர்களைக் கொண்டாடுவதில், ஒரு நல்லப் படைப்பைப் பார்த்துவிட்டால் ஒரு ஐம்பது நபர்களிடமாவது அதைக் கொண்டு சேர்ப்பதில் யுகமாயினி சித்தன் அவர்களுக்கு இணை சித்தன்தான்.

வடை மடித்த தாளில் ஒரு நல்ல படைப்பைப் பார்த்து விட்டாலும் அவ்வளவுதான். ஓரங்கட்டி நின்றுகொண்டு ஆற அமர ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, அந்த நேரத்தில் நினைவுக்கு வரும் ஏதேனும் ஒரு நல்ல வாசக நண்பரை அலை பேசியில் பிடித்து,

“ அதுல பாருங்க எட்வின், இன்னைக்கு ஜோன்ஸ் ரோட்ல அந்த ஓரக் கடைல வடை வாங்கிய தாளில் ஒரு அழகான கவிதை. என்னமா எழுதியிருக்கான். பேரக் காணோம். விடுங்க எட்வின், பிடிச்சுடலாம். அந்த மனுஷனத் தேடிப் பிடித்து படைப்ப வாங்கி “ யுக மாயினி” யில போடனும்.”

அத்தோடு நிற்க மாட்டார். கையில் காசில்லை என்றாலும் கடனையாவது  வாங்கிக் கொண்டு அந்தப் படைப்பாளியைத் தேடிப் போய் விடுவார்.

எந்தப் பிரதி பலனையும் எதிர்பார்க்க மாட்டார். உண்மையை சொல்லப் போனால் ஏதோ காரணங்களால் எழுத மறுத்துக் கிடந்த சில எழுத்தாளர்களை மீட்டெடுப்பதற்காக இவர் இழந்தது ஏராளம்.

எத்தனை பேர் நம்புவீர்கள் என்று தெரியாது. பத்து வருடங்களாக எழுதாமல் இருந்த என்னைத் தேடி பெரம்பலூருக்கு மகிழுந்தில் வந்து, என்னிடம் இருந்த பழைய கவிதைகளுள் நான்கினை எடுத்துப் போய் “ எட்வின் கவிதைகள் நான்கு” என்று அழகுற வடிவமைத்து யுகமாயினியில் போட்டவர்.

ஒருக்கால் அன்று அவர் சிரமமெடுத்து என்னைத் தேடி வந்திருக்காவிட்டால் இந்த எட்வினை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சராசரி பேச்சாளனாகவும், அதைவிட சராசரியான ஆசிரியனுமாகவே செத்துப் போயிருப்பேன்.

இதுவரை மூன்று, அச்சில் ஒன்று, அச்சுக்குப் போவதற்குத் தயாராய் இரண்டு நூல்கள் என என் கணக்கிலும் ஏதோ இருக்கிறது என்றால் அது அவரால்தான்.

இப்பவும் எப்போதாவது பேச ஆரம்பித்தால் விசாரிப்புகள் முடியும் முன்னமே “ இளங்கோ கிருஷ்ணனை வாசிச்சீங்களா எட்வின்”  என்று தாவிப் போய்விடுவார்.

எதையும் எதிர்பார்க்காமல் இலக்கியத்துக்காக இயங்கும் எனக்குத் தெரிந்த சிலரில் இவரே முதன்மையானவர்.

இவரைக்காட்டிலும் விஷேசமான சிலரும் இவரால்தான் எனக்கு அறிமுகமானார்கள்.

ஒருநாள் அழைத்தார்,

“ எட்வின், தலைவாசலில் இருந்து சிலர் பேசினாங்க. போன மாசம் யுகமாயினியில் போட்டிருந்த உங்களோட ஒரு கவிதையை அவர்கள் நோட்டிஸாப் போடனுமாம். நம்பர் கொடுத்திருக்கேன். பேசுவார்கள். சரி சொல்லிடுங்க”

எதுவும் புரியாத குழப்பத்தோடே அவருக்கு “ சரி “ சொன்னேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அவர்களே அழைத்தார்கள். தலை வாசலை சேர்ந்த சில நண்பர்கள் சன்னமான நல்ல கவிதைகளைக் கண்டுவிட்டால் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அந்தப் படைப்பை நோட்டீஸ் போட்டு பேருந்து நிலையங்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், சந்தை, வீடுகள் என்று கொண்டு சேர்ப்பார்களாம்.

அப்பொழுது உலக மகளிர் தினம் நெருங்கியதாலும் எனது கவிதை பெண்னுரிமையை மையச் சரடாகக் கொண்டிருந்தமையாலும் 5000 நோட்டீஸ்கள் போட்டு விநியோகிக்க இருப்பதாகவும். அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டார்கள்.

அப்படி அவர்கள் போட்டதுதான் மேலே காணும் பிரதி.

ஒரு நல்ல கவிதைய வாசிக்க நேர்ந்து அதை நான்கு பேருக்கு சொன்னால் அதுவே பெரிய அளவிலான பெருந்தன்மை இப்பொழுது. ஆனால் அதை ஆயிரக் கணக்கில் பிரதியெடுத்து கொண்டுபோய் சேர்க்கும் இவர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது?

கேட்டால் நல்லதுகளை நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.

சித்தன் மாதிரியும் இவர்களை மாதிரியுமான தோழர்களே என்னை மாதிரி சோம்பேறிகளை சோர்ந்து போகாமல் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


Thursday, October 24, 2013

பால் தயிராகும் வரைக்கும்...


பால் வாங்கி வர கடைக்குப் போன மகன் தாமதமாய் வந்ததோடு பாலுக்கு பதிலாக தயிரை வாங்கி வரவே கொதிநிலைக்குப் போனாள் தாய்.

"என்ன வாங்கி வர சொன்னேன், என்னடா வாங்கி வந்திருக்க?"

"பால்தாம்மா வாங்கி வந்தேன். வர வழியில பெரியார்தாசன் கூட்டம் நடந்தது. நேரம் போனதே தெரியல. மெய் மறந்து நின்னுட்டேன். பால் தயிராயிடுச்சு."

பெரியார்தாசனின் பேச்சாற்றல் குறித்து சொல்லும்போது வைரமுத்து இப்படி சொன்னதாக சொல்வார்கள்.இதில் கொஞ்சமும் மிகை இருப்பதாகப் படவில்லை.

அவரது பேச்சில் விமர்சனம் இருக்கலாம். ஆனால் அவரது பேச்சு அவரது எதிரிகளையும் கட்டிப் போடும். 

திருமணங்களில் நான்கு மணிநேரம் அவர் பேசிக் கேட்டிருக்கிறேன். சாப்பிட யாரும் எழுந்திரிக்காமல் அவரது பேச்சில் கட்டுண்டு கிடந்ததையும், செய்து வைத்த சாப்பாடு ஆறிப் போனதையும் கண்கூடாகப் பார்த்தவன் நான்.

அவர் இந்து மதத்தை கடுமையாக சாடினார் என்பதாக பொதுவில் படும். கூர்ந்து கவனித்தால் வைணவத்தை அவர் கடுமையாக சாடியதையும் சைவத்தின்பால் சன்னமான அன்பிருந்ததையேக் காண முடிந்தது.

நிறுவனமயப்பட்ட இந்து மதத்தையே அவர் சாடினார்.

அவர் அடிக்கடிக் கேட்பார்,

முருகன் ஒரு கொலையை செய்தால் முருகன் கொலை செய்தான் என்கிறார்கள்.

நெல்சன் ஒரு கொலையை செய்தால் நெல்சன் கொலை செய்தான் என்கிறார்கள்.

ஆனால், முகமது ஒரு கொலையை செய்தான் என்றால் இஸ்லாமியத் தீவிரவாதி கொலை செய்தான் என்கிறார்களே, இது நியாயமா?

இது கிறுக்கனுக்கும் புரியும் பாஷை. ஆனால் உச்சநீதிமன்றமும் , நாட்டின் பெரியப் பெரிய அவைகளும் ஆலோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா இது?

சைவக் குடும்பத்தில் பிறந்து சேஷாசலமாக வளர்ந்து பெரியார் தாசன் ஆனார்.

”புத்தரும் தம்மமும்” படிக்கிறார். பௌத்தம் ஏற்கிறார். சித்தார்த்தன் ஆகிறார். இறுதியாய் அல்லாவின் தாசனாகிறார்.

சேஷாசலமாக இருந்தபோதும் பெரியார் தாசனாய் இருந்த போதும், சித்தார்த்தனாக மாறிய போதும், இறுதியாக அப்துல்லாவாக மாறியபோதும்  கொஞ்சமும் மாறாமல் மனிதனாகவே இருந்தார்.

எந்த இடத்தில் இருந்தபோதும் அவர் அவராகவே இருந்தார் என்பதற்கு அவர் தனது கண்களையும் உடலையும் தானம் செய்திருப்பதே சாட்சி

எதையும் சோதித்து சோதித்தே செய்து பழக்கப் பட்ட தோழன் தன்னையே அறுத்து சோதித்து மருத்துவத்தில் தேற மாணவப் பிள்ளைகளுக்கு உடலைத் தானம் செய்திருக்கிறார்.

ஒருமுறை அவரோடு சேர்ந்து பேச ஒரு வாய்ப்பு கிட்டியது. திருச்சி கலையரங்கத்தில் ஒரு கூட்டம். இனிய நந்தவனம் சந்திரசேகர் ஏற்பாடு டெய்திருந்தார். 45 நிமிடங்கள் பேசினேன். என்னைத் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பேசினார். வெடித்துக் கிளர்ந்தோம்.
வெளியே வந்து கொண்டிருந்தபோது, “தோழர்” என்றழைத்தார். திரும்பிப் பார்த்தேன். நீட்டிய கரங்களோடு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

“ பட்டைய கிழப்புறீங்க. அருமையான பேச்சு. பெரியாரையும் மார்க்ஸையும் சரியாய் கலக்குறீங்க. வாங்க வெளில” என்றார்.

ஒரு கூட்டத்தில் கேட்டதற்கே தேடி வந்துப் பாராட்டுகிற குணம். 

அவரிடமிருந்து எவ்வளவோ எடுத்திருக்கிறேன்.  எவ்வளவோ நன்றி சொல்ல வேண்டும். சொல்ல நானிருக்கிறேன். கேட்கத்தான் அவரில்லை.

போய் வாருங்கள் தோழர்.

Saturday, October 19, 2013

வந்து தொலைத்த....

ஊரும் கால்களோ
வருடும் விரல்களோ
நடுநிசியின் நிசப்தத்தில்
என்னவோ செய்தது ஏதோ ஒன்று
தனித்து கிடந்த என்னை
அழுக்கும் பிசுக்குமாய் படுக்கையானதால்
ஊர்ந்திருக்கக் கூடும் ஜந்தெதுவும்
விரல்கள் போலவே உணர்ந்ததால்
வருடலாயுமிருக்கலாம்
கால்களா விரல்களா
ஏதெனக் கண்டடையுமுன்
வந்து தொலைத்தது
தூக்கம்

Friday, October 18, 2013

நிலைத் தகவல்...21


  • நேற்று மாலை சட்டமன்ற விடுதி வரை சென்றுவிட்டு திரும்புகிற வழியில் உட்ஸ் சாலையில் ஒரு வேலை வைத்திருந்தார் நண்பர் சிவா.

    அவரது நண்பரது மகிழுந்துக்கு ஒரு உதிரி பாகம் வாங்க வேண்டி இருந்தது.

    அப்போது உட்ஸ் சாலையில் ஒரு கடையின் பெயர் பலகை வளைத்துப் போட்டது. அந்தக் கடையின் பெயர்

    “ மகிழுந்து அணிகலன்கள்”

    அவர் கேட்ட உதிரி பாகம் அடுத்த சந்தான PG சாலையில்தான் கிடைக்கும் என்றார்கள்.

    போனோம்.

    அங்கு ஒரு கடையின் பெயர்

    “ மகிழுந்து ஒலிப்பான்கள்”

    ஆட்டோவில் திரும்பும் போது அவை பற்றியே சுற்றி சுற்றி பேச்சு வந்தது.

    சொன்னேன்

    “எவ்வளவு அழகான பெயர்கள். ஆனாலும் இப்பவும் சொல்வார்கள் ,

    அசெசரி கு இணையான சொல் அணிகலன் அல்ல என்று”

    சிவா சொன்னார்

    “சொல்லட்டும் எவனாச்சும், போடா போய் அணிகலனுக்கு இணையான ஆங்கிலச் சொல்லைத் தேடுனுவேன்”

    ஆட்டோ ஓட்டுநர் நண்பர் புஷ்பராஜ் ஒருவித குதூகலத்தோடும், ஒரு குலுக்கலோடும் சொன்னார்

    “அய்யா எனக்கு தரவேண்டிய காசுல பத்து ரூபாய சிவா அய்யாக்கிட்ட கொடுத்துடுங்க”

    இந்தத் துள்ளலும் குதூகலமும் பொருப்புணர்வும் மட்டும் வர வேண்டியவர்களுக்கு வந்து விட்டால் தமிழ்தான் இல்லை என்ற தன் வரியை கல்லறையிலிருந்து எழுந்து வந்து பாரதிதாசன் மாற்றிவிட்டு நிதானமாய் மீண்டும் நடந்து போய் நிம்மதியாய் படுத்துக் கொள்வான்.

Monday, October 14, 2013

மிகையின் பெருக்குதான் ஆனாலும்....2

எனது “ இவனுக்கு அப்போது மனு என்று பேர்” நூலுக்கு தோழர் கா. பஞ்சாங்கம் இந்த மாத “ காக்கைச் சிறகினிலே” இதழில் எழுதியுள்ள விமர்சனம்


பக்கம் 2





பக்கம் 3


Tuesday, October 8, 2013

9 களம்




 இளவரசியைக் காதலித்த அடிமையை வட்டரங்கிற்கு அழைத்து வருகிறார்கள். அரசனும் மக்களும் அவரவர் இடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு கூண்டுகள் கொண்டு வருகிறார்கள். ஒன்றில் இளவரசியும் மற்றொன்றில் சிங்கமும் இருப்பதாக சொல்கிறார்கள்.

இரண்டில் ஒன்றைத் திறக்க வேண்டும்.

காதலி வந்தால் திருமணம். சிங்கமெனில் மரணம்.

இல்லாத சாமியையெல்லாம் வேண்டிக் கொண்டு திறக்கிறான்.
இரண்டுமில்லை. 

அங்கே கருநாகம். கருநாகத்திடமிருந்து தப்பிக்க வேண்டி அடுத்த கூண்டைத் திறக்கிறான். அங்கோ சிங்கம்.

இந்தக் கதையில் வரும் அடிமையின் நிலையில்தான் இன்றைய இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதாக விரிந்து நுட்பத்தோடு ஆழமாகப் பயணிக்கிறது ”களம்” என்ற வலையில் இருக்கும் “ மாற்று அணி உருவாகுமா?” என்ற கட்டுரை.

எந்தச் சிக்கலுமின்றி அழகாக அவிழ்ந்து விடுகின்றன குறியீடுகள்.

அடிமைதான் இந்திய வாக்காளர்கள். இளவரசிதான் அவர்களது வாழ்க்கை.
நமக்கிருக்கும் சிரமம் கூண்டுகளுக்குள் இருக்கும் கருநாகம் மற்றும் சிங்கம் இவற்றுள் எது காங்கிரஸ், எது பாரதிய ஜனதா கட்சி என்பதைத் தீர்மானிப்பதில்தான்.

ஆட்சி மாற்றமோ மாற்றுத் தலைமையோ இந்திய மக்களின் வாழ்க்கையை உத்திரவாதப் படுத்தப் போவதில்லை. அரசியல் மாற்றமும் மற்றும் சிந்தனை மாற்றமும் மட்டுமே இந்திய மக்களைக் காப்பாற்ற முடியும் என்பதை நுட்பமாக சொல்கிறார் அரிஅரவேலன்.

கொஞ்சமும் வறட்டுத் தனமின்றி சுவையாகவும் லாவகமாகவும் ஒரு மாற்று அரசியலுக்கான தேவையை முன் வைப்பதன் மூலம் தனது சமூக அக்கறையோடு கூடிய அரசியலை முன்வைக்கிறது “ களம் ”

பொது நிலங்களை தனியார் சுரண்டுவதையும் அதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகங்கள் ஆகியவை துணைபோவது பற்றியும் அவற்றிற்கு எதிரான வழக்குகள் பற்றியும் பேசுகிறது “ பூனைக்கு மணி கட்டித்தானே ஆகவேண்டும்” என்ற கட்டுரை.

பொது நிலங்களைக் களவாடுவது குற்றம் எனில் பொதுக் குளங்களை, ஏரிகளை அழித்து கட்டிடங்கள் கட்டுவது என்பது கொலைக் குற்றமே ஆகும்.

தமிழ்நாட்டில் இருக்கிற நீர்ப் பிரச்சினைக்கு கர்நாடகம் எந்த அளவிற்கு காரணமோ அதே அளவு காரணம் நம்மிடம் இருந்த ஏரிகளையும் குளங்களையும் அழித்து கட்டிடங்களாக்கியது. இதை அயோக்கியத்தனமான, மக்களுக்கெதிரான தேசத்துரோகமாகவே கொள்ளவேண்டும்.

இப்படித்தான் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் இருந்த ஒரு குளத்தினை அழித்து வீடாக்கிக் கொள்கிறார் ஜெயபால்சிங். ஒருகட்டத்தில் இவரது எதிரியாக மாறிய தேவ்சிங் என்பவர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு முறையிடுகிறார். அரசு அலுவலகங்கள் முறைப்படி சரி செய்யப் படவே அரசு நிர்ணயித்த விலையை கட்டிவிவிட்டு இடத்தை ஜெயபால்சிங் வைத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிடுகிறார்.

பகையின் அழுத்தம் தேவ்சிங்கை தூங்க விடவில்லை. ஆணையாளருக்கு மேல் முறையிடுகிறார். கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று அவர் ஆணையிடுகிறார்.. ஜெயபால்சிங் உச்சநீதிமன்றம் வரை செல்கிறார். உச்சநீதிமன்றம் உடனடியாக கட்டடம் இடிக்கப் பட்டு ஆக்கைரமிப்பு அகற்றப் படவேண்டும் என்று உத்திரவிட்டதுடன் இதுமாதிரி ஆக்கிரமிக்கப் பட்டுள்ள நிலங்கள் குறித்த தகவலை மே மாதத்திற்குள் நீதிமன்றத்திற்கு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது.

இங்கு கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவெனில் ஒருக்கால் தேவ் சிங்கிற்கும் ஜெயபால் சிங்கிற்கும் பகை ஏற்படாமல் போயிருப்பின் இந்த ஆக்கிரமிப்பு வெளிச்சத்திற்கே வந்திருக்க வாய்ப்பில்லை.

அரசின் கையிலிருந்த புறம்போக்கு நிலம் மொத்த நிலபரப்பில் 15 சதவிகிதமாகும். இது ஆண்டுக்கு1.9 சதவிகிதம் அளவில் பெருமுதலாளிகளால் ஆக்கிரமிக்கப் படுகிறது என்ற தகவலையும் 2010 ஆண்டு வரை 834000 ஹெக்டேர் நிலம் இவ்வாறு ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என்ற தகவலையும் இந்த வலை நமக்கு சொல்கிறது.
எந்த இடத்திலும் புள்ளிவிவரங்களைப் படிக்கிற சோர்வோ அயர்வோ நம்மிடம் வருவதில்லை. புள்ளிவிவரங்களைக் கூட புனைவுமாதிரி சுவையோடு சொல்கிறது இந்த வலை.

பெருகும் புலம் பெயர்தலினால் சுருங்கி அழிந்து வரும் வேளாண்மை குறித்து அக்கறையோடும் கவலையோடும் உரையாடுகிறது இந்த வலையில் உள்ள ஒரு கட்டுரை. 91 ஆண்டு 73.3 சதவிகிதமாக் இருந்த ஊரக மக்கள் விகிதாச்சாரம் 2011 ஆம் ஆண்டு 51.6 சதவிகிதமாக சுருங்குவதையும், புலம் பெயர்ந்து நகர்ப் புறங்களுக்குப் போன அவர்கள் அங்கு அனுபவிக்கும் பிரச்சினைகளையும் வலிக்க வலிக்கத் தருகிறது “ களம் “

சிறந்த காந்தியவாதியான ஏக்தாத் பரிசத்தின் தேசியத் தலைவர் ராஜகோபால் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஒரு கட்டுரை அலசுகிறது.  

தலித்துகளுக்கான விடுதலைக்காக  போராடும் அவரிடம் காந்திய வாதிகள் சிலரே தலித்துகளுக்குள்ளேயே பிரிவினைகள் இருக்கிறதே. அதிலிருந்து அவர்கள் முதலில் மீண்டு வரட்டும் , நாம் பிறகு பேசலாம் என்பதும் அப்படியே பதியப் படுகிறது. அதை தலித்துகள் பார்த்துக் கொள்வார்கள். நாம் இதை பார்க்கலாம் என்று இவர் வரும்போது இவரை கிறிஸ்தவர் என்றும் இவர் மக்களை மதம் மாற்றுகிறார் என்றும் புரளியைக் கிளப்பிவிடுகிறார்கள்.

இவரது காந்திய நண்பகளில் சிலரே இவர் தன்னை இந்து என்று பிரகடனப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றபோது “நான் மனிதன்” என்ற ராஜகோபாலின் பதில் சிலிர்ப்பைத் தருகிறது.

பகுத்தறிவுச் சூடிஎன்ற தலைப்பில் இந்த வலையிலும் சில ஆத்திச் சூடிகள் இருக்கின்றன.

“ நேர்மையே கற்பு” என்கிறது ஒரு ஆத்திச்சூடி.கற்பு என்பதை ஆணாதிக்கத்தின் குறியீடாகப் பார்ப்பதால் அந்த வார்த்தையின் மீதே ஒரு வெறுப்போடிருக்கும் நமக்கு அந்த வார்த்தையை ஒரு புது கோணத்தில் தருகிறது இந்த வலை.

மொழி அரசியலை நுணுக்கமாக முன்வைக்கின்றன இவரது இரண்டு ஆத்திச் சூடிகள்.

” தாய்மொழி வழி பயில்” என்கிறது ஒரு ஆத்திச் சூடி. ஆஹா என்று மகிழ்வதற்குள் அடுத்து ஒரு கவளம் மகிழ்ச்சியை பிசைந்து தருகிறது “மொழி பல அறி” என்கிற ஆத்திச் சூடி.

இதுதான் சரியான மொழிப் பார்வை.

“ கருவறைக் கல்லுக்கு
பூசை பண்ண
பூணூல் பார்ப்பான்

தெருக் கூட்ட
சாக்கடை வார
பீயள்ள
அருந்ததியக் குடும்ப ஆள்

அட
யாருங்க இப்ப
சாதி பார்க்கிறா?

என்று நீண்டு போகும் ஒரு கவிதை இன்றைய சாதியக் கட்டுமானத்தை தோலுரிக்கிறது.

மாற்று அரசியலுக்கான தேவையை, மாற்றுத் திட்டத்திற்கான தேவையை கொஞ்சமும் வறட்சியின்றி சுவைக்க சுவைக்க தருகிறது “ களம்” மாற்றத்தை விரும்பும் யாவரும் அவசியம் வாசிக்க வேண்டிய வலை.

பாருங்கள்: http://ariaravelan.blogspot.in/

நன்றி : “ புதிய தரிசனம்.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...