Tuesday, March 31, 2015

நல்ல பேனாவும் நல்ல அரசியலும்

சிறுகதைகளை செய்கிறார்கள் சிலர், சொல்கிறார்கள் சிலர். தமிழில் அபூர்வமாக உள்ள கதை சொல்லிகளில் வா.மு.கோமுவும் ஒருவர். இதுதான் “ அழுவாச்சி வருதுங் சாமி” நமக்கு சொல்கிற சேதி.

“ ஒடுக்கி வைக்கப் படுகிறவன் இப்படித்தான் இயல்பாய் கிளர்ந்தெழுவான் என்பதை பிரச்சார நெடி இல்லாமல், அரசியல் கொள்கை பேசாமல், புரட்சி அது இது என்றெல்லாம் வார்த்தைகளைப் போடாமல் உயர்ந்த கலை நுட்பத்துடன் ஒரு முன் மாதிரியாகவும் கதைகளைத் தந்திருக்கிறார் வ. மு. கோமு” என்கிற சுகனின் மதிப்புரையை தொகுப்பில் உள்ள கதைகள் உண்மை என்று நிரூபிக்கின்றன.

அரசியல் கொள்கை பேசாமல் என்ற திட்டமிடல் கோமுவிற்கு இருந்திருப்பின் அதை அவர் அவசியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அரசியல் கொள்கை நல்லதாக இருக்கும் பட்சத்தில் அது இலக்கியத்தின் அழகையும் ஆத்மாவையும் செழுமை படுத்துமே தவிர ஒருக்காலும் சிதைக்கிற வேலையை செய்யாது.

நல்ல பேனாவும் நல்ல அரசியலும் கைகோர்க்கும் போது கோஷங்கள்கூட அழகாய் ஜொலிக்கும். ஒன்றேமுக்கால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒரே கைஎழுத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டபோது தொழிற்சங்கத்தினர் போட்ட கோஷங்களுல் ஒன்று

“திருட்டு கொடுத்தவன்
 திரும்பக் கேட்கிறான்
 திருடியவன் சொல்கிறான்
 யூ ஆர் அண்டர் அரெஸ்ட்”
எந்தச் சூழ்நிலையில் என்று சரியாய் நினைவில்லை. அநேகமாக யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு எதிராய் (போபால் துயரத்திற்கு எதிராய்) என்று படுகிறது. ஊர்வலத்தில் குழந்தைகளின் மழலையில் ஒலித்த கோஷம் ஒன்றினை கவிஞர் இன்குலாப் ஒருமுறை பதிந்திருந்தார்,

“வானம் வேண்டும்
 பூமி வேண்டும்
 வாழும் உரிமை
 வேண்டும் வேண்டும்”

சரியான கண்ணோட்டத்தோடு கூடிய அரசியல் கொண்டால் செய்நேர்த்தி மிக்க பேனா கோஷங்களைக் கூட கவிதைகளாகவே கக்கும்.

“அழுவாச்சி வருதுன் சாமி” தொகுப்பில் முதல் கதை, அம்மா செத்துக் கிடக்கிறாள். இழவு சொல்லியை அண்டை ஊர்களுக்கு  அனுப்பிவிட்டு ஆண்டை இழவு சொல்லியின் வீட்டுக்கு வருகிறான். இழவு சொல்லியின் மனைவி சமைத்த மீனை விழுங்கிவிட்டு அவளோடு உல்லாசித்து இருக்கிறான். அம்மா பிணம் வீட்டில் கிடக்கையிலும் ஷோக்கு குறையவில்லை ஆண்டைக்கு என்பது மேலோட்டமான வாசிப்பில் நமக்கு கிடைக்கும் கதை.

கொஞ்சம் ஆழமாக வாசித்தால் இதற்குள் இருக்கும் சாதி அரசியலும் ஆண்டைகளின் அட்டூழியங்களும் மட்டுமல்ல, இழவு சொல்லியின் மனைவி மாதிரி பெண்களின் இணங்குதலுக்குள் இருக்கும் அரசியலும் எல்லாம் அவிழ்ந்த அம்மண நிலையில் வசப்படும்.

என்ன... இழவு சொல்லியின் கோவத்தை இன்னும் கொஞ்சம் தூக்கலாய் சொல்லியிருக்கலாம் என்று படுகிறது.

வர்க்கமானாலும் வர்ணமானாலும் ஒடுக்குபவர்கள் ஒரு பக்கத்தில் ஒன்றாய் இணைவதும், ஒடுக்கப் படுபவர்கள் ஒன்றுபட முடியாமல்நார் நாராய் கிழிந்து கிடப்பதும் இன்றைய எதார்த்தம். இதன் சூட்சுமத்தை “ கூட்டப்பனை சாவக்கட்டு”  அம்பலப் படுத்துகிறது.

“நீங்க பன்றது அட்டூழியங்க சாமி” யில் இறுதியில் நஞ்சன் பீடி பற்ற வைக்கும்திமிர் கம்பீரனது. ஆனாலும் திரும்பத் திரும்பக் கேட்கும் “சாமி கொஞ்சம் டீத்தண்ணி ஊத்துங்க” என்ற அவனது குரல் சத்தியமாய் நமது இரண்டுநாள் தூக்கத்தையாவது திருடிப் போகும்.

ரெண்டு கிளாஸ் என்பதே கொடுமை. ரெண்டு கிளாசிலும் டீ வாங்க தொங்கோ தொங்கென்று தொங்க வேண்டும். காசையும் கொடுத்துவிட்டு என்பது  கொடுமையிலும் கொடுமை. சுக்சன் சொன்னது போல் பிரச்சார நெடியே இல்லாமல் இன்னொரு கோணத்தை பிரச்சாரம் செய்கிறது இந்தக் கதை.

தோழர் பெரியசாமியை மையமாகக் கொண்ட இரண்டு கதைகளும் நல்ல சோதனை முயற்சி. இவ்விரண்டு கதைகளும் பேசப் பட வேண்டிய அளவிற்கு பேசப்படாமல் போனால் இழப்பு தமிழுக்குத்தான்.

படிப்பு பவுடர் பூசாத பாமர் கிராம மக்கள் ஆணாதிக்கத்தை எப்படி நேர்த்தியாக் எதிர்கொள்வார்கள் என்பதை நேர்த்தியகப் படம் பிடிக்கிறது “திருவிழாவிற்கு போன மயிலாத்தா”

விளக்கெண்ணெய் ஊற்றிய மார்பிள் தரையாய் வழுக்கிக் கொண்டே நகர்கின்றன கோமுவின் கதைகள்.

சாதி அரசியலை அம்பலப்படுத்த வேண்டும் தோலுரிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவோடோ, பிரகடனத்தோடோ, கோமு பேனா திறந்ததாய் தெரியவில்லை.

ஆனால் அதை அவர் சரியாய் செய்திருக்கிறார்.

நன்றி: “ தாமரை “

Monday, March 30, 2015

மகள்களே....


உலகக் கோப்பை என்றாலே எதோ கிரிக்கெட் என்பதாக மட்டுமே பார்க்கக் கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகிப் போனது. அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணி தோற்றுப் போனதும் இந்திய இளைஞர்களில் ஒரு பெரும் பகுதியினர் சோகத்தில் உறைந்திருக்கிறார்கள். சில எண்பதுகள்கூட சோகத்தில்தான் உள்ளனர்.
இந்த நேரத்தில் உலகக் கோப்பையை இந்திய மகளிர் கபடி அணி வென்றிருக்கிறது. தேசத்தின் கொடியோடு அந்தக் குழந்தைகள் மைதானத்தை துள்ளி வலம் வந்தபோது அந்த உணர்ச்சிப் பெரு வெள்ளத்தில் கறைந்து போனேன்.
அவர்கள் நாடு திரும்பி வீட்டிற்கு நடந்து போகையில் யாரும் அவர்களைக் கண்டுகொள்ளப் போவதில்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.
கிரிக்கெட்டில் தோற்றதும் ஒரு பிள்ளை நாக்கை அறுத்துக் கொள்கிறான், ஒருவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறான்.
இதற்கெல்லாம் மாறாக, கோப்பையோடு வந்திருக்கும் உங்கள் சகோதரிகளை, தோழிகளை ஒரு புன்னகையோடு வாழ்த்தலாமே. மகிழ்ந்து கொண்டாடலாமே.


இறகுப் பந்துப் போட்டியில் உலகின் முதலாவது இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறாள் சாய்னா. 2011 காமன் வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றதும் சாய்னா சொன்னாள், “ I won the gold because I did not repeat my mistakes”
இதை சொன்னபோது இன்னும் நான்கு வயது குறைவு அவளுக்கு. எவ்வளவு சரியான புரிதலும் செயல்பாடும் ஆகும் இது. செய்த தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறினை செய்யும் யாரும் தோற்றுத்தான் போவோம்.
சாதித்த இந்த மகள்களுக்கு இந்த அப்பனின் வாழ்த்துக்களும் முத்தங்களும்.

Sunday, March 29, 2015

அரசியலென்பது...

விநோதரனின் நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தலைமையில் விழா இனிதே முடிந்தது. அது குறித்து விரிவாக பிறகு எழுத வேண்டும்.

பிறகு எழுத வேண்டும் என்று விட்டு எழுதாமலே போன நீண்ட பட்டியல் ஒன்று ஏற்கனவே இருக்கிறது.

விழாவை ஒட்டி சந்தித்த நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது சிலர் அரசியலின் தரம் இப்போது மிகவும் தாழ்ந்து போய் விட்டதாகவும், கண்ட கண்ட தகுதியற்றதுகள் எல்லாம் அரசியலில் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பதாகவும் கருத்தோடிருப்பது தெரிந்தது.

அவர்கள் யாரை சொல்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.


யார் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என்பதுதான் நமது அரசியலின் மாண்பே. இதுவும் கூட நீண்ட போராட்டத்திற்கு பின்பே கிடைத்தது. சொத்துவரி ரசீது காட்டினால் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்கிற சட்டம் இருந்த நாடு இது. சொத்துள்ள கனவான்கள் மட்டுமே தேர்தலீல் நிற்க முடியும் என்ற நிலை எளிதில் ஒன்றும் மாறிவிட வில்லை.

அரசு மானியத்தை ஊதியமாக பெற்று பாடம் நடத்தும் ஆசிரியனான நான் அரசியல் செய்யலாமெனில் நடிகை ஒருவர் அரசியல் செய்வதில் என்ன தவறிருக்கிறது.

அவரது அரசியலை விமர்சிப்போம். அது விடுத்து அவரது தொழிலை விமர்சிப்பது கேவலத்தின் உச்சம்.

  • பாடம் நடத்துவது, பேருந்து ஓட்டுவது, மருத்துவம் பார்ப்பது நம் தொழில் எனில் நடிப்பது அவர் தொழில். 

எனக்குமானது என்பதால்

எழுபதுகளில் ஒருமுறை நடந்த ஆசிரியர் போராட்டத்தை அன்றைய அரசு கண்டுகொள்ளவே இல்லை என்றும் இறுதியாக ஆசிரியர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் விவசாயக் கூழித் தொழிலாளர்களும் ஒருநாள் போராட்டத்தில் இறங்கியதாகவும், அடுத்த நாளே பேச்சு வார்த்தைக்கு அரசு ஆசிரியர்களை அழைத்ததாகவும் கேள்வி பட்டிருக்கிறேன்.
போராடிய எல்லா நாட்களுக்குமான ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்டு விட்டது. ஆனால் விவசாயிகளுக்கான அந்த ஒரு நாள் இழப்பு இன்றுவரை ஈடு செய்யப்படாமலேயே இருக்கிறது என்பதையெல்லாம் எங்கள் முன்னோர்கள் சொல்லக் கேள்வி பட்டிருக்கிறேன்.
அந்த நன்றிக் கடனுக்காக அல்ல இன்றைய விவசாயிகள் போராட்டத்தை நான் ஆதரிப்பது. எது செய்தும் அவர்களது அந்த ஒருநாள் இழப்பை, தியாகத்தை எங்களால் ஈடு செய்துவிட முடியாது என்பதை நான் அறிவேன்.
விவசாயிகளின் நேற்றைய போராட்டம் என்பது எனக்குமானது என்பதால் நேற்று மாலை ஆறு மணி வரைக்கும் வீடுதான்.

(28.03.2015 அன்று  தமிழக விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்த மேகே தாட்டில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதை எதிர்த்த போராட்டத்திற்கு ஆதரவாக)

Saturday, March 28, 2015

மேகே தாட்டு....( ஆடு தாண்டும் காவேரி)
மேலே காணும் படத்தைக் காட்டி இது என்னவென்று கேட்டால் பெரும்பான்மையோர் இது ஏதோ ஒருவாய்க்கால் என்றோ அல்லது சின்ன நதி என்றோ சொல்லக் கூடும். ஆனால் இது காவிரி. சத்தியமாய் இது காவிரிதான்.

நம் தமிழ் மண்ணில் ”ஆடு தாண்டும் காவிரி” என்று சொல்வோமே. அந்த ஆடு தாண்டும் காவிரிதான் கன்னடத்தில் மேகே தாட்டு. மேகே என்றால் கன்னடத்தில் ஆடு  என்றும் தாட்டு என்றால் தாண்டு என்றும் பொருள்.

இங்குதான் ஒரு அணை கட்டுவதாக இருக்கிறது கர்நாடக அரசு. இதை எதிர்த்துதான் தமிழக விவசாயிகளும் மக்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏதோ தமிழர்கள் அணைகளுக்கு எதிரானவர்கள் என்றோ அல்லது அணைகளை கட்டி கர்நாடாகா வளம் பெற்றுவிடப் போகிறார்களே என்ற பொறாமையினாலோ தமிழ் மக்கள் இந்தப் போராட்டத்தை கையெடுக்க வில்லை.

காவிரி தமிழ் மண்ணுக்கும் சொந்தமானது. ஏற்கனவே தமிழ் மண்ணுக்கு உரிய உரிமையை வழங்க மறுத்து கர்நாடகம் தகறாறு செய்து வருகிறது. எந்தக் கட்சி அங்கு ஆட்சிக்கு வந்தபோதும் இந்த நிலை அங்கு மாறுவதே இல்லை. இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அதற்கு முன்னால் இருந்த ஆட்சி செயல்படுத்திய திட்டங்களை செயல் படுத்த தயக்கம் காட்டும். பி.ஜே.பி யும் அப்படித்தான்.

ஆனால் இரண்டு கட்சிகள் மட்டுமல்ல மதச் சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மண்ணுக்கு உரிய உரிமை நீரை வழங்குவதில்லை என்பதில் ஒற்றுமையோடு நிற்கின்றன.

இந்த நிலையில் காவிரியின் குறுக்கே இன்னுமொரு அணையைக் கட்டுவதென்ற கர்நாடகத்தின் முடிவென்பது இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும்.

இது தடுக்கப்படா விட்டால் பையப் பைய இன்னும் ஒரு ஐம்பது அறுபது ஆண்டுக் காலத்தில் தமிழ்மண்ணின் ஒரு பகுதி பாலையாய்ப் போகும் அபாயம் இருக்கிறது.

இந்தப் போரட்டத்தை தமிழ் மண்ணிற்கெதிரான போராட்டம் என்று மாண்பமை பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்வதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

இரண்டு மாநில அரசுகளுக்கு இடையே ஒரு பிரச்சினையில் கருத்து முரண்பாடோ தகறாறோ இருக்குமானால் மத்திய அரசு இருவரையும் அமர வைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பேச்சு வார்த்தை தோல்வியுற்றால் மீண்டும் அதைச் செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் தோற்றால் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு இருவரையும் வலியுறுத்த வேண்டும். வழக்கு முடியும் வரை இருக்கும் நிலையிலேயே இருக்குமாறும் சற்றும் யாரும் முன்நகர்ந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். வழக்கு முடிந்துவிட்டால் நீதிமன்றம் சொல்வதை பாரபட்சமின்றி கறாராக செயல்படுத்துவதை கண்கானிக்க வேண்டும்.

தனது இந்தக் கடமையை செய்ய மறுக்கிறது மத்திய அரசு என்பதால்தான் அதை எதிர்க்கிறோம்.

விவசாயிகள் அழைப்பு விடுத்திருக்கும் இந்தப் போராட்டம் வெல்லட்டும் என்று வாழ்த்துகிறேன்.

Friday, March 27, 2015

அழைப்பு வரும் 29.03.2015 ஞாயிறு காலை10 மணிக்கு சென்னை உமாபதி சிற்றரங்கத்தில் பேசுகிறேன்.வாய்ப்புள்ள தோழர்கள் வாருங்கள் சந்திப்போம்.

சொல்லுங்கள்

மாவட்ட நிர்வாகங்களும் மாநில நிர்வாகமும் ஒன்றோடு ஒன்று கடிதப் போக்கு வரத்துக்களை தமிழில் நடத்த சட்டம் இயற்ற முடியாது போயினும் அதற்கென ஒரு திட்டத்தினையாவது அரசாங்கம் போட வேண்டும் என்று சட்ட மன்ற உறுப்பினர் திரு கஜபதி நாயக்கர் என்பவர் ஐம்பதுகளில் சபையில் தீர்மானங்களை கொண்டுவந்து போராடினார் என்ற விவரத்தை இன்று கசக்கி எறிய இருந்த பழைய தாளில் பார்த்தேன்.

உண்மையெனில் அவரைப் பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ஆவணப் படுத்தலாம்.

Thursday, March 26, 2015

ஒரு சோறு பதம்...


கிரிக்கெட்டும் வீடியோ கேம்களும், தொடர்களும் மென்று தின்று , செரித்து ஏப்பம் விட்ட நமது கலாச்சார சமாச்சரங்களில் சொப்புவும் ஒன்று. மரக்கடைகளில் பாத்திரங்கள், தட்டு, திருகை, உரல், உலக்கை என்று வித விதமான வண்ணங்களில் மிளிறும் விளையாட்டி சாமான்கள் சொப்பு. தமிழ்க் குழந்தைகளின் ரத்தத்தோடும் கலாச்சாரத்தோடும் இரண்டறக் கலந்துவிட்ட விளையாட்டு சொப்பு விளையாட்டு.
விஞானம் வளர்ந்துவிட்ட சூழ்நிலையில் விளையாட்டின் முகமும் மாறிக் கிடக்கிறது.இன்றைய விளையாட்டுக்கள் அறிவோடு, வெற்றியோடு சம்பந்தப் பட்டிருக்கின்றன. சொப்பு விளையாட்டில் வெற்ரியுமில்லை தோல்வியுமில்லை. அதில் அறிவுக்கு வேலையுமில்லை. ஆனால் அது குடும்பத்தோடும், இதயம் மற்றும் கலாச்சாரத்தோடும் நேரடித் தொடர்பு கொண்டது.
“சொப்பு” என்கிற தலைப்பே நம்மை அய்யனார் கோயில் மரத்தடியில் நாம் சொப்பு வைத்து விளையாடிய நமது குழந்தை நாட்களுக்கு நம்மை அழைத்துப் போகிறது.
தனது குழந்தைப் பருவத்து குசும்புகளை, விளையாட்டை, மழைக்கு இன்றைக்கும் அழும் தனது கூரைவீட்டுத் திண்ணையை, கதைகளால் இதயம் வருடிய டபேதார் தாத்தாவை, வறுமையை, வாழ்க்கையை, தனது கிராமத்து சேரியின் கலாச்சாரத்தை உள்ளது உள்ளவாறு பதிந்திருக்கிறார் அம்மணி. காரமும் உப்பும் அம்மக்களின் வாழ்வோடும் கலாச்சாரத்தோடும் கலந்திருப்பதன் விளைவில் கதைகள் வீச்சோடும் கலாநேர்த்தியோடும் மிளிர்கின்றன.
சொப்பு, இந்தக் கதையை வாசிக்கத் தொடங்கியதும் நாம் மூப்பனார் கோயிலுக்கே போய் விடுகிறோம். நல்லரிக்கி, சூரன், பாவாடை, மற்ரும் மூக்கன் ஆகிய நான்கு குழந்தைகளும் அங்கு அம்மா அப்பா விளையாட்டு விளையாடுவதை அங்குள்ள பலகைக் கல்லில் அமர்ந்து பார்ப்பது மாதிரி இருக்கிரது படிக்கிறபோது. அவ்வளவு அற்புதமாக காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது.
நால்வரில் நல்லரிக்கி மட்டும்தான் பெண்.எப்போது அம்மா அப்பா விளையாட்டு விளையாடினாலும் அவள்தான் அம்மா. யார் அப்பா என்பதில்தான் எப்போதும் பிரச்சினையே. இதில் அப்பா ஸ்தானம் எப்போதும் சூரனுக்கே வருவதில் ஏகத்துக்கும் எரிச்சல் பாவாடைக்கு.
இதில் பாவாடைக்கு உள்ள மன உளைச்சலை பதிந்திருக்கும் விதம் இருக்கிறது பாருங்கள், அப்பப்பா... கொஞ்சம் பிசகியிருந்தாலும் பிஞ்சிலே வெம்பிய கதையாகி இருக்கும். கம்பியில் நடந்திருக்கிறார் அம்மணி.
நல்லரிக்கி, புருஷன் சூரனுக்கும் பிள்ளைகளுக்கும்சோறு பரிமாறுகிறாள்.கதையானாலும் விளையாட்டானாலும் கதையிலே வரும் விளையாட்டானாலும் அம்மாதான் சமைக்கனும் அம்மாதான் பறிமாற வேண்டும்.
“என்னடி கொளம்பில உப்பே இல்லை. ஒறப்பு ஒழுங்காயில்லை.” சூரன் நல்லரிக்கியை அதட்டினான். பிறகென்ன புருஷன்னா பொண்டாட்டிய விரட்டனும்ல.
வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பாவாடை “ ஆமாம்ப்பா... அம்மாவுக்கு கொளம்பு வைக்கவே தெரியல. பேசாம நாளைக்கு வெளையாட்டுக்கு வேற அம்மாவ வச்சுக்கலாம்.” இந்த இடம் இருக்கிரது பாருங்கள். இந்த நேர்த்திக்கு சரியான ஆளால் மட்டுமே இப்படி காட்சிப் படுத்த முடியும். நமது குழந்தைகள் எத்தனை குசும்பை, குதூகலத்தை இழந்திருக்கிறார்கள் என்ற ஏக்கத்தி விதைப்பதில் இந்தக் கதையின் வெற்ரி தெரிகிறது.
“ கோணமூஞ்சி” என்றொரு கதை, பன்றிக்கு கோணமூஞ்சி என்றொரு பெயர் இருப்பது இந்தக் கதையை படித்த பின்புதான் தெரிகிறது.
தீபாவளிக்கு தீபாவளி இட்லி சுடும் குடும்பங்கள் ஏராளம் இந்த நாட்டில். இந்தக் கதையில் வரும் ஒளறியின் குடும்பமும் இந்த ரகம்தான்.
அடுத்தநாள் கறிக் கொளம்பிற்கு ஒளறி முதல் நாளே மனரீதியாய் தயாராகிறான். அவன் மட்டும் அல்ல, தன் மனைவியையும் தயார் படுத்துகிறான்.
“ ஏ, செர்லூரு ... நாளைக்கு சொடல வீட்டு கோணமூஞ்சியத்தான் அறுக்கிறோம். காத்தாலேயே கொலம்பு செலவெல்லாம் ரெடி பண்ணி வச்சிடு.நல்ல எளங்குட்டி.பள்ளிக் கூடத்துல கயனித் தண்ணி குடிச்சி நல்லா திமு திமுன்னு வளர்ந்து கிடக்கு.கறி நல்லா மணலு மணலா இருக்கும்” என்று தன் மனைவியை தயார் படுத்துகிறான். இதை ஒட்டுக் கேட்ட ஒளறியின் மகன் சின்னான் ராத்திரி பூராம் தூங்காமலடுத்த நாள் கறிக் கனவில் மிதக்கிறான்.
அடுத்த நாள் ஒரு வழியாய் எல்லாம் ஆச்சு. கறி வெந்து கொதி வந்து இறக்கி வச்சாச்சு.ஒளறி வந்ததும் சாப்பிட்ட்ட வேண்டியதுதான். காத்திருக்கிறான் சின்னான்.அப்போது ஒளறி வெட்டப்பட்ட சேதி வருகிறது. வெட்டப் பட்ட அப்பா, ஆக்கி வைக்கப் பட்ட கோணமூஞ்சி கறி,அதற்கிடையில் ஊசலாடும் சின்னான் என்ற குழந்தையின் மனநிலையை இரண்டே வரிகளில் சொல்லிவிடுகிறார் அம்மணி.
“ மாத்துப் புள்ள” முத்தாய்ப்பான கதை. வழக்கமாக குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது ராஜா ராணி கதையோ அல்லது ஏதாவது பற்ரியோதான் கதை சொல்வார்கள். டபேதார் தாத்தா பற்ரி டபேதார் தாத்தாவே கதை சொல்லும் அழகு இருக்கிறதே... அடடா ஒடுக்கப்பட்ட உழைக்கும் குடும்பங்களில் உலகு பூராவுக்கும் பந்தி வைக்க ஏராளமான கதைகள் குவிந்து கிடக்கின்றன.டபேதார் யாரென்ற உண்மை உடைகிற சூழலில் கதைசொல்லியின் கேமரா குழந்தைகளின் கண்களை அழகாக படம் பிடிக்கிறது.
மூன்று கதைகள் மட்டுமே இங்கு பேசப் பட்டுள்ளன.ஒரு சோறுப் பதம் கணக்குத்தான். கிராமத்து சேட்ரியின் சந்தோசங்களை, குசும்புகளை, கோபத்தை, சோகத்தை, உயிர்ப்பை, இயலாமையை,உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறார் அம்மணி.
அற்புதமான தலித் சிறுகதைகள்.
பொன்னி பதிப்பக வெளியீடு இது.
*************
பின் குறிப்பு
.....................
12 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப் பட்ட விமர்சனம். நம் பழைய எழுத்தை நாமே வாசிக்கிறபோது ஒரு புன்னகை வருகிறது. அது ஒரு புறம். இதை வாசித்துவிட்டு அம்மணி மீண்டும் எழுதினால் மகிழ்வேன்.

Wednesday, March 25, 2015

வசுந்தரா

பெரம்பலூரில் வசுந்தரா என்றொரு காய்கறிக் கடை இருக்கிறது. குளிர்பதனப் படுத்தப் பட்டுள்ள அந்தக் கடையில் ஏறக்குறைய 20 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 20 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் 10 பேராவது இருப்பார்கள்.
நான் முதன்முறை அங்கு சென்று காய்களை வாங்கிவிட்டு பில் போடும் போது விலையைப் பார்த்தேன். மார்க்கெட் விலையை விட கொஞ்சம் கூடுதலாக இருந்தது.
இவ்வளவு கூட இருக்கேப்பா உங்களுக்காவது நல்ல சம்பளம் தருவார்களா? என்று கேட்டேன்.
அந்தக் குழந்தை சொன்னாள், “ எங்களை படிக்க வைக்கிறதே அவங்கதான் சார்”
ஆச்சரியத்தோடு பார்த்தேன். அந்தக் கடையில் உள்ள ஏறத்தாழ 10 பெண் குழந்தைகளும் ஏதோ ஒரு கல்லூரியில் படிக்கிறார்கள். சிலர் காலை ஷிஃப்ட். சிலர் மாலை ஷிஃப்ட். காலை ஷிட் கல்லூரி போகிறவர்கள் மதியம் கடையை பார்த்துக் கொள்கிறார்கள். மாலை ஷிஃப்ட் போகும் குழந்தைகள் காலையில் கடையைப் பார்த்துக் கொள்கிறார்கள். இரவில் அப்படியும் இப்படியுமாக கலந்தடித்து கடையினை கவனித்துக் கொள்கிறார்கள்.
தேர்விருக்கும் பிள்ளைகள் ஒதுங்கி படிக்கிறார்கள். செமஸ்டர் சமயத்தில் கடையில் அவர்களைப் பார்த்தால் “ உங்களை படிக்கிறதுக்குக்காகத்தான் காய் விக்கச் சொல்றது. காய் விக்கறதுக்காக படிக்கச் சொல்லல. போய் படி” என்பாராம். நெகிழ்ந்து போனேன்.
அடுத்தமுறை முதலாளியைப் பார்த்தேன். பிள்ளைகள் சொன்னதை அவரிடம் சொல்லி மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பதாக சொன்னேன். “ அப்படியா சொன்னாங்க.அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க சார், அவங்கதான் நமக்கு ஒரு பிசினச தறாங்க.” என்றார்.
இது நடந்து ஒரு வருடம் இருக்கும். எழுத நினைப்பேன் ஒவ்வொரு முறையும். தட்டிக் கொண்டே போகும். நேற்ரு ஒரு புதுக் குழந்தையை பார்த்தேன். என்னம்ம செய்ற என்ற போது MBA படித்துக் கொண்டிருப்பதாக சொன்னாள். படிக்க சிரமப் படுவதைப் பார்த்த தோழி ஒருவரின் ஏற்பாடு என்றாள்.
நேற்றும் முதலாளி நின்று கொண்டிருந்தார். புன்னகையோடு அவரைக் கடந்தேன். ஏதும் பேசவில்லை அவரிடம். ஒருக்கால் பேசியிருந்தால் இதை எழுதியிருக்க மாட்டேனோ என்னவோ?
இனி நமக்கு வசுந்தராதான்.

Tuesday, March 24, 2015

புத்திர சோகம்....

கடந்த சில மாதங்களில் நண்பர்களின் பிள்ளைகள் மற்றும் நண்பர்களது நண்பர்களின் பிள்ளைகள் என்று நான்கு பேர் சாலை விபத்தில் இறந்திருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் இருசக்கர வாகனங்களில் எதிர் வந்த இருசக்கர வாகனங்களோடு நேருக்கு நேர் மோதி இறந்திருக்கிறார்கள்.

அனைத்து விபத்துக்களுமே பெருநகரங்களில்தான் நிகழ்ந்துள்ளன.  போவதற்கும் வருவதற்கும் தனித்தனியாக பாதைகள் உள்ளபோது ஏனிப்படி?

கொஞ்ச தூரம் போய் முறையாக யூ டர்ன் எடுத்து திரும்புவதற்கு சோம்பேறித்தனம் கொள்வதாலேயே இது மாதிரியான விபத்துக்கள் பெரும்பாலும் நிகழ்கின்றன.

போக, அதிக வேகம், மூன்று பேர் நான்கு பேர் போவது, கவனத்தை சாலையில் வைக்காமல் அலட்சியமாக போவது என்பது மாதிரியும் காரணங்கள் நீளும்.

பிள்ளைகளை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். நீங்கள் போன பிறகு நாங்கள் வாழ்வது இருக்கிறதே,  அது எந்தக் கொடுமையினும், ஏன் முதியோர் இல்ல வாழ்க்கையைவிட  கூடுதலான கொடுமை. அத்தகைய தண்டனையை எங்களுக்குத் தராதீர்கள்.

பிள்ளைகள் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். காவல் துறையும் இதில் கடுமை காட்ட வேண்டும்.

புத்திர சோகம் கொடுமையானது.

Monday, March 23, 2015

39

இணங்கியோ
எதிர்த்தோ
பட்சி சொல்லாத
பிளாஸ்டிக் பல்லியை
எதிர்கடந்து போகும் ஆண் பல்லி
விரகத்தோடு

திறந்த மடல்....

அன்பின் தோழர் ஜேம்ஸ் ( James Vasanthan),
வணக்கம். உங்களது 35 ஆண்டுகால வளர்ச்சியைத் தொடர்ந்து மகிழ்ந்து கவனித்து வருபவன்.
உள்ளே போவதற்குள் சன்னமாக ஒரு அறிமுகம்.
நீங்கள் 1979-1982 இல் பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தீர்கள். நான் 1980-1983 இல் அதே கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவன். அதாவது கல்லூரியில் உங்களது ஜூனியர் நான்.
கல்லூரி காலத்தில் புனித வளனார், பிஷப், ஜமால் முகமது, தேசியக் கல்லூரி, பெரியார் என எங்கு போட்டிகள் நடந்தாலும் நீங்கள் பாடுவதைக் கேட்பதற்காக வந்துவிடுவோம் சிலர். அப்படிப் பார்த்தால் உங்களது ரசிகர்களில் நான்தான் சீனியராக இருப்பேன். என்னை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு மௌனமான வாசகன் நான்.
உங்களது ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியை கூட்டங்கள் ஏதுமின்றி வீட்டில் இருக்கும்போது தவறாமல் கேட்கிறேன். என் மகள் தொடர்ந்து கை தட்டி ரசித்துக் கொண்டாடுகிறாள். ஆரவாரங்களுக்கு மத்தியில் அமைதியான ஆற்றொழுக்கான உங்களது பேச்சு நடை எனக்குப் பிடித்தமானது.
சூப்பர் சிங்கரில் ஸ்ரீஷாவை பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பாட வா என்று நீங்கள் சொன்னபோது அவளொத்த ஒரு குழந்தையின் தந்தையாய் மகிழ்ந்தேன். ஒரு குழந்தை பாடலை முடிக்கும் ஒவ்வொரு முறையும் அழுது முடித்தபோது முதல்முறை கொண்டாடிய நீங்கள் அதை தவறென்று மென்மையாக சுட்டியபோதும் மகிழ்ந்தேன்.
சினிமாவை மிகச் சரியாக அணுகுகிறீர்கள். முற்றாய் அதில் கறைந்து போகாமல் அதே நேரம் உங்களைப் பிரித்துவிட்டு சின்மாவை பேசிவிட முடியாது என்கிற ஒரு எதார்த்தநிலை நோக்கி நகர்கிறீர்கள்.
உங்களிடம் சில எதிர்பார்க்கிறேன் ஜேம்ஸ். எதிர்பார்த்தல் என்பதைவிட கையேந்தல் என்பதே சரியானதாகும்.
சூப்பர் சிங்கர் முடிந்ததும் இப்படி எங்கள் பத்திரிக்கையில் எழுதினேன்.
”அந்தக் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்த திரு ஆனந்த் அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும். தனக்குத் தெரிந்த வித்தையை மிகுந்த அர்ப்பணிப்போடு குழந்தைகளுக்கு கொண்டு செல்வதில் நூறு விழுக்காட்டுக்கும் மேல் வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால் அவரிடம் மடங்கி முறையிட ஒன்றுண்டு.
மழலை மாறாத நான்கு வயது குழந்தைகளை ஐம்பது வயதில் ஜானகி அம்மா பாடிய பாடல்களை அட்சரம் பிசகாமல், சுதி சுத்தமாய், நீளாமல் குறையாமல் சங்கதிகளை கொண்டுவர நீங்கள் கொடுத்த பயிற்சியும் பட்ட சிரமங்களும் மிக அதிகம் என்பதை நான் அறிவேன். அதற்காக உங்களை தலைதாழ்த்தி வணங்குகிறேன்.
ஆனால் அதை குழந்தைகளின் முதிர்ச்சி (maturity) என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.
ஐம்பது வயதில் ஜானகி அம்மாவை ஐந்து வயது குழந்தையின் குரலில் பாடச் சொல்கிறீர்கள். ஐந்து வயது குழந்தையை ஐம்பது வயதில் ஜானகி அம்மா பாடிய பாடலை அப்படியே பாடச் சொல்கிறீர்கள். மாறாக அம்மாவை அவர்களது குரலிலும் குழந்தைகளை குழந்தைகளின் குரலிலும் பாடச் சொல்லலாமே?
உங்களது இவ்வளவு உழைப்பும், அர்ப்பணிப்பும் நீங்கள் கொடுத்த பயிற்சியும் அந்தக் குழந்தைகளின் முயற்சியும் உழைப்பும் அவர்களது மழலை வழி கசிந்திருக்குமானால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதோடு மிகச் சரியாகவும் இருந்திருக்குமே.
அந்தக் குழந்தைகள் பாடியது பேரழகாக இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் மழலையில் திக்கித் திக்கிப் பேசியது அவர்கள் பாடியதைவிடவும் இனிமையாக இருந்ததே ஆனந்த் சார்.
அவர்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் சாக்கில் அவர்களது மழலையையும் குழந்தைமையையும் கொன்றுபோட்டோம் என்றே தோன்றுகிறது
மழலை இசைக்கு உகந்தது என்று சொன்னால் அது குறையுடையது என்று உங்களுக்குத் தெரியும். மழலை இசைக்கு இணையானது. குழந்தையை நேசிப்பவர்களுக்கு மழலை இசையைவிடவும் இனிமையானது.
உங்கள் மீது எனக்கு அளப்பரிய மரியாதையும் நம்பிக்கையும் உண்டு ஆனந்த் சார். அவர்களது மழலையைக் கொண்டே இதைவிடவும் எதைவிடவும் காத்திரமான இசையை உங்களால் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன்.
மிகுந்த நம்பிக்கையோடு உங்களிடம் கை ஏந்துகிறேன் சார்.”
1. ஜேம்ஸ் , குழந்தமை மாறாமல் அவர்கள் மழலையை பயன்படுத்தி இசை செய்து தாருங்கள்.
2. சென்னை புறநகர் ரயில்களில் பாடும் பார்வையற்ற தோழர்களை ஒரு படத்திலேனும் பாட வாய்ப்பு கொடுங்கள். எங்கோ ஏகாந்தமாய் போய்விடுவது அல்லது சாவது என்று முடிவெடுத்து பயணித்துக் கொண்டிருந்த என்னை,
“ நிழல் வேண்டும்போது
மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது
துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது
விளக்கொன்று உண்டு
எதிர்காலமொன்று எல்லோர்க்கும் உண்டு” என்று பார்வையற்ற ஒருவர் பாடியதுதான் இன்றுவரை என்னை உயிரோடு வைத்திருக்கிறது.
கையேந்துகிறேன். கவனியுங்கள் ஜேம்ஸ்.
எதற்கும் எனது எண் 9842459759

Sunday, March 22, 2015

தம்பி அண்ணனானார்

அடிக்கடி எனக்கு நிகழ்வதுதான்.

அவரை 1987 இல் இருந்து எனக்கு தெரியும். அப்போது நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த கல்விநிலைத்தை விட்டு வெளியேறும்போது அந்த நிறுவனத்தின் தாளாளர் ஒரு நல்ல ஆசிரியரைத் தேடித் தருமாறு கேட்டுக் கொள்ளவே தேடியதில் கிடைத்தவர். அப்போது முதல் நல்ல பழக்கம். எப்போது எங்கு பார்த்தாலும் எவ்வளவு வேலை இருந்தாலும் கொஞ்ச நேரமாவது பேசிவிட்டுதான் நகர்வோம்.

இப்போது அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்.

அண்ணே, அண்ணே அன்று அன்பு கசிய அழைத்துப் பேசுவார். இதுவரை என்னை இத்தனைமுறை என் தம்பிகூட அண்ணே என்று அழைத்திருக்க மாட்டான்.

இன்று காலை ATM இல் அவரைப் பார்க்க நேர்ந்தது. அவருடைய பையனது படிப்பு பற்றி, கிஷோர் பற்றி என்று நகர்ந்தது பேச்சு. பேச்சு வாக்கில் கேட்டார். ஏங்கண்ணே 15 ஆ 16 ஆ ரிட்டயர்மெண்ட். பென்ஷன் பேப்பரெல்லாம் போயிடுச்சா?

22 இல்தானே ஓய்வு என்றதும் அதிர்ந்து போய்விட்டார்.

அவர் 17 இல் ஓய்வு பெறுகிறார் என்ற செய்தியும் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தம்பி அண்ணனானார்.

40

தருவதாய் சொன்ன கந்துக்காரனுக்கும்
தர வேண்டிய கந்துக்காரனுக்குமிடையே
அலைந்தலைந்து
களைத்துப் போய்
போர்வைக்கும் எனக்குமிடையே
அரைத் தூக்கத்தில் கிடக்கிறது
என் தூக்கம்

Saturday, March 21, 2015

கடைத் தேங்காயை....

சுரங்க மசோதா என்பது பொதுச் சொத்தை, அள்ளித் தரும் கனிம வளங்களை ஒரு பத்து பெரு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பது. அரசுக்கு சொந்தமாமான கனிம வளத்தை தனியார் பெயருக்கு பட்டா போட்டு தருவது.

140 கோடி மக்களுக்கு சொந்தமான சொத்தை பிடுங்கி ஒரு பத்து முதலாளிகளுக்கு கொடுக்கிற ஏற்பாடு. இந்த 140 கோடி மக்களுள் தி.மு.க, அ.தி.மு.க, திரிணாமுல் ஊழியர்களும் அவர்களது குடும்பங்களும் அடங்கும்.

தங்களது இயக்கத்திற்கோ தலமைக்கோ பிரச்சினைகள் வரும்போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிர் துறக்கும் மிகவும் உணர்ச்சிகரமான விசுவாசமான ஊழியர்களை கை வைத்திருக்கும் கட்சிகள் இவை.

அப்படி இருக்கையில் அத்தகைய அப்பாவி கட்சி ஊழியர்களின் சொத்தைப் பறித்து எவனோ சிலருக்கு கொடுக்க அனுமதி கேட்ட இந்த மசோதாவிற்கு ஆதரவாக ஏன் இந்த கட்சிகளின் தலைமைகள் தன்னெழுச்சியாக கையைத் தூக்கின.

தன் கட்சி ஊழியர்களை விடவும் அந்த முதலாளிகள் வேண்டப் பட்டவர்களா? . ஆமாம், ஆனால் அது மட்டும் அல்ல.

2G, மகள், பேரன்கள், சாரதா சீட்டுக் கம்பேனி, பெங்கலூர் தீர்ப்பு இப்படி ஏராளம் இருக்கிறதே.

தொண்டர்களை பழிகொடுத்து தங்களை வளப்படுத்தும் செயலுக்கு ஆக சமீபத்திய சரியான உதாரணம் மசோதாவிற்கான இவர்களது ஆதரவாகும்.

Friday, March 20, 2015

41

எங்கள் பூமியெங்குமவர்கள்
அத்துமீறி நுழைந்தது

வெள்ளக் காலத்தில்
தூவப்படும்
உணவுப் பொட்டலங்களைப் போல்
குண்டுகளை வீசியது

விதவிதமாய்
எம் மக்களை
விருந்து தின்ற எமனுக்கு
செரிக்காமல் கசிந்த
ஏப்பத்தின் புளிவாடை

தேனெடுப்பது
ஆடு மாடு மேய்ப்பது
சுள்ளி பொறுக்குவது தவிர
வேறெந்த வேலையும் தெரியாத
வனத்தைத் தவிர
வேறு இடமறியாத
அப்பாவித் திரளை

ஆயுதப் பயிற்சி எடுக்கிறார்கள்
என்று அவன் சொன்ன பொய்

உலக சராசரிகள் உச்சுக் கொட்ட
உள்ளூர் சராசரிகள்
கைகள் தட்ட

பொழுதை போக்க
எங்கள் பெண்களை அவர்கள்
குதறிச் சுவைத்தது

களவு போன
எங்கள் வாழ்க்கையை மீட்க
ஆயுதமேந்துவதும்
மனித வெடிகுண்டாய் நாங்கள்
மாறுவது

எல்லாம் புரிகிறது

“தீவிரவாதிகளுக்கும்
ராணுவ வீரர்களுக்கும்
இன்று நடந்த சண்டையில்”

என்று
வாசிக்கப் படும்
செய்தியய்த் தவிர

Thursday, March 19, 2015

குட்டிப் பதிவு 31

ஆலயங்கள் எதிலும் புனிதமேதும் இருப்பதாகவோ அல்லது குறைந்த பட்சம் அவை தேவை என்பதாகவோ நம்பிக்கை எதுவும் நமக்கில்லை. ஆனாலும் மசூதிகள் வழிபாட்டுத் தளங்கள் அல்ல அவற்றை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் இடித்துக் கொள்ளலாம் என்று கூறும் சுப்ரமணிய சாமி மட்டுமல்ல, இதே போன்று இந்துமத ஆலயங்களைப் பற்றியோ அல்லது கிறிஸ்தவ தேவாலயங்கள் பற்றியோ எவன் பேசினாலும் அவனும் என் எதிரியே.

Wednesday, March 18, 2015

குட்டிப் பதிவு 30

தூக்குத் தண்டனைக்கான தடை நீக்கப் பட்ட. சிறிது காலத்திற்குள்ளேயே 35 பேருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது பாகிஸ்தான்.
மனிதாபிமானம், அது இது என்பதையெல்லாம் தாண்டி தூக்கை கூடவே கூடாது என்பதற்கு ஒழுங்கான விசாரனை ஏதும் இல்லாமல் பாரபட்சத்தோடும் முன்முடிவோடும் நகர்கிற விசாரனைகளுமே பொதுவில் அதிகம். எனவே நிரபராதிகள் தொங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய.
அதுவும் பாகிஸ்தானில் கேட்கவே வேண்டாம். அரசியல் பழி வாங்கலுக்கு அதிக. வாய்ப்புண்டு.
ஒரே நாளில் 12 பேரை தூக்கிலிட்ட பாகிஸ்தானின் அநாகரீகமான மனிதாபிமானமற்ற செயல் கண்டனத்திற்குரியது.

குட்டிப் பதிவு 29

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருவானூர் இருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த அரவிந்தன் என்ற குறவர் இனத்தை சார்ந்த இளைஞன் பெங்கலூரில் வெல்டராக பணியாற்றுகிறார். அவரது ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் திருவிழா வரவே அதைக் காண அங்கு வருகிறார்.
திருவிழாவில் நடந்த தெருக் கூத்தைப் பார்க்கச் சென்றிருக்கிறார். தாழ்த்தப் பட்ட ஒருவர் தங்களுக்கு சமமாக நின்று தெருக்கூத்தைப் பார்ப்பது ஆதிக்க சாதி இளைஞர்கள் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. அவரைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள். மயங்கி விழும் நிலையிலிருந்த அரவிந்தன் குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார். குற சாதிப் பய திருவிழாவிற்கு வருவதுமில்லாமல் தண்ணீர் வேற கேட்பீங்களோ என்றவாறு அவரது வாயில் சிறுநீரைக் கழித்திருக்கிறார்கள்.
தீக்கதிரில் இந்தச் செய்தியை வாசித்ததும் தாங்க முடியாமல் நண்பர்களிடம் அரற்றத் தொடங்கினேன்.
“எப்ப பார்த்தாலும் பீயத் திங்க வைச்சான், மூத்தரத்தக் குடிக்க வச்சான்னே பேசிக்கிட்டு. கேட்கவே அறுவெறுப்பாக இருக்கு” என்றார்கள்.
கேக்கவே அறுவெறுப்பா இருக்கே. அத அனுபவவிச்சவங்களுக்கு எப்படி இருக்கும் என்றவுடன் அத நீ பேசி என்னவாகப் போகுது என்கிறார்கள்.
என்ன ஆகும் என்று மட்டுமல்ல என்ன செய்வது என்றும் சட்டென புரியவில்லைதான். ஆனால் ஆகவே ஆகும். அதற்காக நானும் எதையேனும் செய்யவே செய்வேன்.
அதுவரைக்கும் இதை பேசவே பேசுவேன் , கூடுதல் குரலெடுத்து ஒவ்வொரு முறையும்.

Tuesday, March 17, 2015

42

முற்றாய் முடிந்ததும்
போர்த்தினார்களா?

முடிந்துவிடுமென்று
போர்த்தினார்களா?

போர்த்தபட்ட வேட்டி தாண்டி
கசிந்து கொண்டிருந்தது.

“யாரு பெத்தப் புள்ளையோ”

வெடித்தாள்
முன்னிருக்கை தாயொருத்தி

“எங்க போயிட்டிருந்தானோ”
புலம்புகிறாள்
இன்னொமொரு தாயொருத்தி

“இப்படி
செத்துக் கிடக்கிறான்னு
ஊட்டுல
யாருக்குத் தெரியும்?”

புலம்பிய
தாயொருத்தியிடம் கேட்கிறாள்
குட்டி மகள்

“அந்த மாமா செத்தது
அந்த மாமாவுக்கு தெரியுமா
மொதல்ல”

ஆமாம்
தான் செத்ததறிவானா
செத்தவன்?

விஞ்ஞானமும்
மெய்ஞானமும்
மழலையில்
பத்திக் கொள்ள

குதித்தோடுகிறான்
பேருந்து நிற்கும் வரை
நேரமற்று

போகிற
பேருந்தைப்
பிடிக்க

Sunday, March 15, 2015

நான் அங்கே இருப்பேன்

தோழர் அரவிந்தன் அவர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்தை வருகிற 19 ஆம் தேதியன்று காக்கை (Kaakkai Cirakinile​) ஏற்பாடு செய்திருக்கிறது. எழும்பூர் இக்‌ஷா அரங்கில் 19 வியாழன் மாலை ஆறு மணிக்கு நிகழ்வு துவங்கும்.

தேர்வு காலமாக இருப்பதால் இதில் நான் பங்கேற்க இயலாத நிலை. முத்தையாவும், சந்திரசேகரும் நான் பங்கேற்கிற மாதிரியான ஒரு நாளைத் தேடினார்கள்.  எனக்கு தோதான ஒரு நாளில் வைக்கலாம் எனில் அரங்கம் வாய்க்க மறுக்கிறது. அது மட்டுமல்லாமல் தோழர்கள் CMahendran Mahendran​, ட்ராட்ஸ்கி மருது, வீரசந்தானம்,  மாணிக்கம் உள்ளிட்ட அரவிந்தனோடு நெருங்கிப் பழகிய தோழர்கள் ஒருசேர அன்றுதான் கிடைக்கிறார்கள்.

காக்கையின் பெயரால் எங்கே மூன்றுபேர் நான்குபேர் கூடினாலும் நான் அங்கே இருப்பேன் ( இயேசுநாதர் மன்னிப்பாராக அப்படி ஒருவர் இருப்பின்) என்ற வகையில் தோழர்கள் அங்கென்னை உணர இயலும்.

வாய்ப்புள்ள சென்னை தோழர்களை அன்புடன் அழைக்கிறேன்

Saturday, March 14, 2015

குட்டிப் பதிவு 28

எனது கவலையும் கோவமும் என்.எல்.சி க்கு வரவேண்டியது எப்படி தனியார் நிறுவனமான ஹிண்டால்கோவிற்கு போனது என்பதில்தான். குற்றவாளி யாராக இருப்பினும் அது உத்தேசம் ஆறாகவே இருப்பினும் மிகக் கடுமையாக தண்டிக்கப் பட்டே ஆகவேண்டும்

நான் சொல்றது சரிதானே?

காப்பீடு என்பது காப்பீடு எடுத்துக் கொள்ளுபவர்கள் கட்டும் பாலிசி பணத்தால் ஆனது. கட்டுமான செலவுகளைத் தவிர வேறு எந்த முதலீடும் தேவையில்லாதது. இதில் அந்நியருக்கு கதவுகளைத் திறந்து விடுவதால் அந்நிய முதலீடு ஏதும் வந்து குவியப் போவதில்லை. மாறாக அந்நியர்கள் கையில் இந்திய மக்களின் பணம் புரளும். இப்படியாக இந்தியர்களிடம் இருந்து அவர்கள் பெற்ற தொகையினை வேறு துறைகளில் முதலீடு செய்து முதலாளிகள் ஆக வாய்ப்பு ஏற்படும்.

என்னங்க, நான் சொல்றது சரிதானே?

குட்டிப் பதிவு 27மலையல்ல , ஒரு பெருங்கல்தான் இது என்றால் நம்ப மறுக்கும் நீ புதிய தலைமுறை அலுவலகத்தில் வெடித்தது பட்டாசுதான் என நான் நம்பவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த ஊர் நியாயம்?

Friday, March 13, 2015

குட்டிப் பதிவு 26கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு வாருங்கள்.

இருக்கிறோம்

குட்டிப் பதிவு 25
பெரம்பலூரில் 11.03.2014 அன்று த.மு.எ.க.ச மற்றும் கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து நடத்திய படைப்பாளிகளுக்கு எதிரான தாக்குதலை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில்...

Thursday, March 12, 2015

ஆஹா.....
இதைப் போல இன்னும் சிலர் இருக்கக் கூடும். பலருக்கு இது அடிக்கடிப் பார்த்துப் பழக்கப் பட்டதாகவும் இருக்கக் கூடும். ஆனால் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு செவ்வாயன்றுதான் கிடைத்தது.
வழக்கமாக நடத்துனர்கள் எச்சில் தொட்டோ அல்லது தங்களது நெற்றியில் வழியும் வியர்வையைத் தொட்டோதான் பயணச் சீட்டுகளைக் கிழித்துத் தருவதைப் பார்த்திருக்கிறோம். சிலர் இதை நக்கலடிப்பதும் சிலர் இதை வைவதையும் பார்த்திருக்கிறோம்.
போன செவ்வாயன்று சென்னையிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்தில் ( பேருந்து எண் TN 45 N3519 , திருச்சி கண்டோன்மெண்ட் டெப்போ) ஏறினேனேன். நடத்துனரிடம் பயணச்சீட்டு கேட்டதும் அவர் தனது பணப்பையின் பக்கவாட்டில் இருக்கும் ஸ்பாஞ்ச்சிலிருந்து விரல்களை ஈரப் படுத்திக் கொண்டு பயணச்சீட்டுகளைக் கிழித்தார். பிறகுதான் பார்த்தேன். தண்ணீர் பாட்டிலின் மூடியை ஒரு திருகாணி மூலம் தனது பணப்பையில் படத்தில் கண்டுள்ளதுபடி இணைத்து அதனோடு ஸ்பாஞ்ச்சை ஒட்டியுள்ளார். அதை நீரால் நனைத்துக் கொண்டு அதிலிருந்து தனது விரல்களை ஈரப் படுத்திக் கொண்டு பயணச் சீட்டுகளை கிழித்துத் தருகிறார்.
அதைவிட இன்னொரு ஆச்சரியமும் இருந்தது. கிழித்துக் கொடுக்கும் பயணச்சீட்டுகளை வைத்திருக்கும் நடத்துனர்களின் சிரமம் பற்றி தனியாகவே எழுத வேண்டும். 21 ரூபாய்க்கு பயணச்சீட்டு எனில் 21 ரூபாய் பயணச்சீட்டு இருக்காது. இரண்டு பத்து ரூபாய் சீட்டுகளையும் ஒரு ஒரு ரூபாய் சீட்டையும் கிழித்துத் தர வேண்டும். சமயத்தில் இது மூன்று நான்கு சீட்டுகளைத் தருமளவிற்கு நீளும். அவ்வளவு சீட்டுகளையும் கையில் பிடித்துக் கொண்டு வருகிற சிரமம் கொடுமையானது.


இத்தனைச் சீட்டுகளில் ஒன்றிரண்டு பறந்து போக வாய்ப்பும் உண்டு. இந்த நடத்துனர் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய ஸ்டேப்ளரை எடுத்து அந்த பயணச் சீட்டுகளை படத்தில் உள்ளது போல் பின்னடித்தும் தருகிறார்.
எந்தெந்த தொகைக்கெல்லாம் கட்டணம் இருக்கிறதோ அந்தந்த தொகைக்கெல்லாம் பயணச்சீட்டுகளை அச்சடித்து கொடுப்பதால் நிர்வாகம் ஒன்றும் குறைந்து போய்விடாது என்பதை நிர்வாகம் முதலில் உணர வேண்டும். எல்லா வழித் தடங்களுக்கும் பயணச்சீட்டு எந்திரத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு அந்த நடத்துனரையும் வாழ்த்துவோம்.
அந்த நடத்துனரின் பெயர் : ரு. ஜெயபிரகாஷ்
அவரது வில்லை எண் : 34079

Wednesday, March 11, 2015

நமக்கான வாள்....
தோழர் அரவிந்தன் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் சென்னையில் நேற்று நடந்திருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு நேற்றும் இன்றும் எனது பாடத்தில் பொதுத் தேர்வு இருந்ததால் என்னால் பங்கேற்க முடியவில்லை. காக்கையின் சார்பாக தோழர்கள் சந்திரசேகரும், முத்தையாவும் கலந்து கொண்டிருக்கிறார்கள். தோழர் மகேந்திரன், ஓவியத் தோழர்கள் மருது மற்றும் வீர சந்தானம் இவர்களோடு இன்னும் சிலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். தோழர் அரவிந்தனது உடல் அடக்கம் செய்யப் படுவதற்கு முன்னமே அஞ்சலிக் கூட்டத்தை தோழர்கள் நடத்தி முடித்திருக்கிறார்கள். ஏறத்தாழ ஏற்பாடு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொண்ட கூட்டம் அது. கால அவகாசம் அப்படி.

தோழர் இறந்த செய்தி அறிந்ததும் இறுதி நிகழ்ச்சிக்கு போக முடியவில்லை. தோழர்கள் இங்கேயே திரண்டு அவருக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். தோழர் CMahendran Mahendran தான் முன்கை எடுத்திருக்கிறார். மிக விரிவான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதென்று முடிவெடுத்திருக்கிறார்கள். பெருங்கனவுக்காரரும் அதைச் செயல்படுத்தும் முயற்சியில் தனது மரணம் வரை உழைத்தவருமான அரவிந்தன் அவர்களது கனவை கையெடுத்து செயல்படுத்த அந்தக் கூட்டம் உந்தித் தள்ளட்டும்.

வரும் 14 ஆம் தேதி மதுரையில் ஒரு வீரவணக்கக் கூட்டத்திற்கு ஏற்பாடாகிறது. நானும், முத்தையாவும், சந்திரசேகரும் கலந்து கொள்வதாக உள்ளோம்.

உயிர்விடும் தருணத்தில் தோழர் ஆனந்தன், முகிலன் உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்திருக்கிறார்கள். “ புலம் பெயர்ந்த தோழர்கள் எந்தத் தருணத்திலும் ’காக்கைச் சிறகினிலே’ வை விட்டு விடாதீர்கள். நமக்கான வாளும் கேடையமும் அது” என்று சொல்லியிருக்கிறார்.

அவரது கடைசிப் பேச்சு அதுதான். நெஞ்சு அடைக்கிறது தோழர். என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒன்று நிச்சயம், உங்களது நம்பிக்கையை காக்கை தன் மூச்சாகக் கொள்ளும். நானோ, முத்தையாவோ, சந்திரசேகரோ எங்களில் இறுதி நபர் உயிரோடு இருக்கும் வரைக்கும் உங்களது நம்பிக்கையை கொண்டு சேர்க்கிற வேலையை காக்கை செய்யும்.

Tuesday, March 10, 2015

அழைப்பு 07நாளை மாலை 6 மணிக்கு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே படைப்பாளிகளின் மீதான தாக்குதலுக்கு எதிராக த.மு.எ.க.ச மற்றும் கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறேன். வாருங்கள்

Sunday, March 8, 2015

படிக்காமல் ஏன் போனார்?
நாளை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் முதல் தாள். எனது பிள்ளைகளுக்கு நடத்திக் கொண்டிருக்கிறேன். தோழர் முத்தையாவிடமிருந்து அழைப்பு வருகிறது. மௌனப் படுத்திவிட்டு வகுப்பைத் தொடர்கிறேன். உடனே அழைக்கிறார் முத்தையா. இது எனக்கு புதிது. ஒரு முறை அழைத்து நான் எடுக்கா விட்டால் நான் அழைப்பேன் என்பதறிந்து காத்திருக்கக் கூடியவர். மீண்டும் மௌனப் படுத்துகிறேன். மீண்டும் அழைக்கிறார். ஏதோ அவசரம் என்று படுகிறது. எடுக்கிறேன்.

“அரவிந்தன் செத்துட்டாராம்”

“ என்னங்க தோழர் என்ன சொல்றீங்க?”

“ நெசந்தான். இப்பதான் முகிலன் பேசிட்டு வைக்கிறார். “

ஏதும் பேசாமல் அலைபேசியை அணைக்கிறேன். எப்படியோ ஒரு வழியாய் வகுப்பை முடித்துவிட்டு மீண்டும் அவரை அழைக்கிறேன். ஐந்து நாட்களுக்கு முன்னால் மிகவும் முடியாத நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறார்.
ஐந்தாண்டுகளாகவே அவதிப் பட்டுக் கொண்டுதானிருந்தார். ஆனால் எந்தச் சூழலிலும் மனதைத் தளரவிடாதவராகவே இருந்தார்.

கடைசியாக தோழர் முத்தையாவிடம் பேசியபோதுகூட எதாச்சும் சந்தோசமான செய்தி சொல்லுங்க என்றுதான் ஆரம்பித்திருக்கிறார்.சந்தோசமான செய்தி வேண்டுமா காக்கை நல்லா போகுது. பேசறாங்க என்று முத்தையா சொன்னதும் மகிழ்ந்து கொண்டாடியிருக்கிறார்.

பத்து நாட்களில் இடியைத் தூக்கி எங்கள் மீது எறிந்துவிட்டு போயிருக்கிறார்.

”காக்கைச் சிறகினிலே” ஒவ்வொரு இதழ் கைக்கு போனதும் முத்தையாவிடமும் சந்திரசேகரிடமும் அலைபேசியிலும் என்னிடம் முகநூல் சேட்டிலும் வந்துவிடுவார்.

நானோ, முத்தையாவோ, சந்திர சேகரோ அவர் சொல்லி எதையும் தட்டியதே இல்லை. அவரது நெறிப்படுத்துதலை அவ்வளவு மரியாதையோடு நாங்கள் மூவரும் அணுகியிருக்கிறோம். காக்கையின் மீது எங்களுக்கிருந்த அக்கறையில் கொஞ்சமும் குறைந்ததல்ல அவருக்கு காக்கை மீதிருந்த அக்கறை.

வழக்கமாக அவரது வேண்டுகோள்களை உத்தரவாகவே மகிழ்வோடு கருதி செய்து முடிப்பவர்களாகவே மூவரும் இருந்தோம்.ஒருமுறை அவர் காக்கையின் நலம் பயக்கும் என்று கருதி எங்களிடம் அழுத்தமாகவும் மீண்டும் மீண்டும் வைத்த ஒரு கோரிக்கையை நாங்கள் மிகுந்த மரியாதையோடும் அன்போடும் மறுக்கிற நிலையில் இருந்தோம்.

ஒரு கட்டத்தில் அவரை இழந்துவிடுவோமோ என்றுகூட நான் அச்சப் பட்டேன். முத்தையாவும் சந்திர சேகரும் அப்படியெல்லாம் நடக்காது. காக்கையை விட்டு அவரால் அங்குலம்கூட நகர முடியாது என்றார்கள்.

அதுதான் நடந்தது. எங்களின் பக்கம் இருந்த நியாயத்தை உணர்வதற்கு அவருக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. மட்டுமல்ல, நீங்கள் மூவரும் யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக இருந்ததால்தான் காக்கை தொடர்ந்து வருகிறது என்று என்னுடனான ஒரு உரையாடலில் சொன்ன பெருந்தன்மையாளர்.

ஐரோப்பிய நாடுகளில் காக்கைச் சிறகினிலே போய் சேர்ந்ததற்கு தோழரின் பங்கு மிகப் பெரிது. பாரிசில் காக்கையின் பெயரால் தொடர்ந்து விழாக்களை தோழர் முகிலனோடு இணைந்து முன்னெடுத்ததை காக்கை நன்றியோடு நினைத்துப் பார்க்கும் எப்போதும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு நான் வரவேண்டும், கூட்டங்களில் உரையாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தவர். கூச்சத்தோடு நழுவியபோது உங்களின் பலத்தை நீங்கள் உணர மறுப்பதுதான் உங்களது பெரிய பலவீனம் என்று சொன்னவர்.

இரண்டு இதழ்களில் எனது கட்டுரை வராமல் போகவே என்னை கடிந்து கொண்டவர். உங்கள் எழுத்துக்களுக்கு இங்கு ஒரு கூட்டம் இருக்கிறது என்று என் மீது கொண்ட அன்பால் கூசாமல் பொய் சொல்லி உற்சாகப் படுத்தியவர்.

இந்த இதழில் கட்டுரை ஒன்றும் தொடர் ஒன்றுமாய் எழுதியிருக்கிறேன். வாசிக்காமல் ஏன் போனார்?

அவரது குடும்பத்தையோ தோழர் முகிலனையோ நாங்கள் வேறாக பார்க்காத காரணத்தால் நானும், சந்திரசேகர்ம், முத்தையாவும் அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டு அவர்களோடு சேர்ந்தழுகிறோம்.

Saturday, March 7, 2015

அவ்வளவுதான் போல

இன்று திருச்சி ஆதிசங்கரர் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழாவில் பேசினேன். என்னை அழைத்துப் போவதற்காக அண்ணன் ராமமூர்த்தி அவர்கள் வந்திருந்தார். அவர் வரும்போது என் அறையில் அமர்ந்து ஏதோ வாசித்துக் கொண்டிருந்தேன். இந்த வயசிலும் எப்ப பார்த்தாலும் ஏன் இப்படி படித்துக் கொண்டே இருக்க என்றவரிடம் படிக்கிற வயசுல படிக்காம போனதால இப்ப இப்படி படிக்க வேண்டி கிடக்கு என்றேன்.

இப்படி படிச்சு என்ன செஞ்சிடப் போற என்று விடாது கேட்டவரிடம் தப்பா ஏதும் செஞ்சிடாம பார்த்துக்குது இந்த வாசிப்பு, அவ்வளவுதான் என்றேன்.

யோசித்துப் பார்த்தால் அவ்வளவுதான் போல.

Friday, March 6, 2015

குட்டிப் பதிவு 24

இன்று காலை பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது பயணச் சீட்டையெல்லாம் விநியோகித்து முடிந்தபின் பின் படிக்கட்டில் வந்து நின்ற நடத்துனர் அலைபேசியில் யாரோடோ பேசத் தொடங்கினார்.
" படிக்கட்டுல நின்னு பேசாதப்பா. உள்ள போயி சேபா பேசுப்பா" என்றார் கடைசி இருக்கையில் என்னருகே அமர்ந்திருந்தவர்.
நடத்துனர் அதை கண்டு கொள்ளாமல் போகவே இப்படித்தான் பின் படிக்கட்டில் நின்று பேசிக் கொண்டு வந்த நடத்துனரான தன் தம்பி தவறி விழுந்து இரண்டு மாதங்களுக்கு முன்னால் இறந்து போனதாக சொல்லவே எதுவும் பேசாமல் உள்ளே நகர்ந்தார்.
" ஏண்டா நீதான் ஒத்த நாதாரியாச்சே. இல்லாத தம்பிய ஏண்டா அநாவசியமா கொல்ற?" என்ற தன் நண்பரிடம்,
"சின்னப் பயலா இருக்கான். உழுந்து செத்து கித்து போனானா? ஒரு உசுர காப்பாத்துறதுக்காக இல்லாத தம்பியையும் கொல்லலாம். அண்ணனையும் கொல்லலாம். தப்பே இல்ல." என்றார்.
நல்லா இருக்கனும் அந்த மனுஷன்.

Thursday, March 5, 2015

ஒத்துக் கொள்ளலாம்

ஐ.எஸ்.டி மூலமாகவோ அல்லது தனது இருப்பிடத்திலிருந்து கிடைக்கும் ஏதோ ஒரு நெட்வொர்க் மூலமாகவோ யார் யாரோடோ எதை எதையோ எல்லாம் பேசுவதை நிறுத்திக் கொண்டு உலக நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் மற்றும் மன்னர்களோடு ஒரே நேரத்தில் கான்ஃபரன்ஸ் கால் போட்டு ராணுவத்துக்கு செலவு செய்வதை குறைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களையும், மருத்துவ மனைகளையும் கட்டுங்கப்பான்னு சொல்லட்டும் வணங்கி ஒத்துக் கொள்கிறேன் அவனென்று ஒருவன் இருப்பதை.

Wednesday, March 4, 2015

குட்டிப் பதிவு 23

அது எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்களை வன்புணர்ந்து கொல் என்று பங்களாதேஷில் அவன் சொன்னாலும் இங்கே இவன் சொன்னாலும் எங்கே எவன் சொன்னாலும் அவனை எதிர்ப்பதென்பது நமது எதனினும் முக்கியமான வேலை.

( இஸ்லாமியப் பெண்களை வன்புணர்ந்து கொல்லுங்கள் என்பதாக யாரோ ஒரு யோகி சொன்னதாக வந்த செய்தி தந்த கோவத்தில்)

Tuesday, March 3, 2015

கற்கை நன்றேபன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பத்து லட்சத்தி சொச்சம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றார்கள் என்ற செய்தியை செய்தி ஊடகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வெளியிடும் காலம் விரைவில் வரலாம்.

ஆயிரத்து இருநூறு மதிப்பெண்களுக்கு ஆயிரத்து இருநூறு மதிப்பெண்களை ஆயிரத்து இருநூறு மாணவர்கள் பெற்றிருக்கிறர்கள் என்ற செய்தியும் அதனோடே வரலாம்.

இதுபோன்ற செய்திகளைக் கண்டு மகிழ்ச்சியின் உச்சத்தில் மாரடைப்பு வந்துவிடாமல் இருக்க நம்முடைய மனதை பக்குவப் படுத்தி வைத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

எவ்வளவோ உழைத்தும் எண்பது சதவிகிதம் மதிப்பெண்களைத் தாண்ட முடியாத ஏழாயிரத்தி சொச்சம் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்றும்கூட அதே பக்கத்தின் ஒரு மூலையில் செய்தி வரக்கூடும். இந்தக் காலத்து தோல்வியை விட அப்போதைய எழுபத்தைந்து விழுக்காடு என்பது மோசமானதாக கொள்ளப்படும் காலமாக அது மாறியிருக்கவும் கூடும்.

இவை எல்லாம் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டுதான். ஆனால் இதற்கு நீண்ட காலம் ஆகும், உடனடியாக அச்சப் படுவதற்கு அவசியமில்லை என்று உறுதியாய் சொல்லுமளவிற்கு அடையாளங்களை நம்மால் கல்வி தளத்தில் கண்டெடுக்க இயலவில்லை. இந்த ஆண்டேகூட இது நடந்துவிடவும் கூடும்.

தேர்வு எழுதிய குழந்தைகள் அனைவரும் தேர்ச்சி பெறுவதும்  அதிலும் எழுதிய பத்து லட்சம் குழந்தைகளில் ஒரு ஏழாயிரம் எட்டாயிரம் பேரைத் தவிர அனைவரும் எழுபத்தைந்து சதவிகித மதிப்பெண்களுக்கு அதிகமாய் மதிப்பெண்களைப்  பெறுவதும் நல்லதுதானே. இதில் கவலைப் படுவதற்கு என்ன இருக்கிறது என்றும் எண்ணத் தோன்றும்.

கவலைப் படுவதற்கு ஏராளம் இருக்கிறது. குறைந்த பட்சம், கல்வி குறித்து அக்கறை கொண்டோர் கவலைப் படுவதற்கேனும் அவசியம் இருக்கிறது.

அறுபது விழுக்காடு மதிப்பெண்கள் என்பது முதல் வகுப்பு என்று கொள்ளப் படுகிறது. எழுபத்தைந்து விழுக்காடு மதிப்பெண்கள் என்பது டிஸ்டிங்க்‌ஷன் என்ற முதல் வகுப்பிற்கும் உயரிய நிலையில் வைக்கப்படும். ஆனால் எழுப்பத்தி ஐந்து விழுக்காடு பெற்றவனே தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் காலம் வரும் என்றால் அந்தக் கல்வி முறை அய்யோ என்று போக வேண்டாமா?

எழுபத்தி அய்ந்து மதிப்பெண்கள் பெற்றவர்களைக் கண்டால் நம் காலத்தில் ஒரு பயம் கலந்த மரியாதை வரும். ஆனால் இப்போது அவர்கள் தற்கொலைசெய்து கொள்கிற நிலை வந்துவிடும் அபாயம் இருக்கிறது என்றால் அது ஏன் என்று ஆராயவேண்டாமா?

எழுபத்தி அய்ந்து விழுக்காடு என்பது மதிப்பற்றது. அதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாது என்கிற கையறு நிலைதானே இதற்கு காரணம். எனில் எழுபத்தி ஐந்து விழுக்காடு எடுத்தவன் எதற்கும் லாயக்கு அற்றவனா?

முன்பெல்லாம் அறுபது எடுத்தவரெல்லாம் மருத்துவராக, பொறியியல் வல்லுனராக, விஞ்ஞானிகளாக, பொருளாதார வல்லுனர்களாக, தணிக்கையாளர்களாக, தொழிலதிபர்களாக மிளிர்ந்தார்களே, இப்போது எழுபத்தி ஐந்து எடுப்பவனால் அபடியெல்லாம் சோபிக்க இயலாதா என்றால் இயலும். பிறகு ஏன் இந்த அவலம்?

ரொம்பச் சுலுவானது காரணம். எண்பது விழுக்காடு, தொன்னூறு விழுக்காடு நூறு விழுக்காடு என லட்சக் கணக்கான குழந்தைகள் மதிப்பெண்களைப் பெறுவதால் அதற்கு குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று கருதப் பட்டு வாய்ப்புகளை இழக்கிறார்கள்.  ஆக, நிறைய குழந்தைகள் அதிகமாய் மதிப்பெண்களை எடுப்பதால் மதிப்பெண்கள் அவ்வளவாக மதிப்பற்று போகின்றன என்றும் கொள்ளலாம்.

எனில், உற்பத்தி அதிகரித்தால் விலை குறையும் என்கிற வணிக யுத்தியை கல்வி சுவீகரித்துக் கொண்டிருக்கிறது என்பது புலனாகிறது. சமூகத்திற்கான மனிதர்களை உருவாக்குகித் தருகிற கடமையிலிருந்து நழுவி சந்தைக்கான விளைபொருட்களை கல்வி நிறுவனங்கள் உற்பத்தி செய்யத் துவங்கிவிட்டன என்பதே இது நமக்குத் தரும் செய்தி.

கல்வி வணிகப் பட்டால் என்ன விபரீதங்களெல்லாம் நடக்கும் என்று கத்திக் கொண்டிருக்கிறோமோ அவை எல்லாம் உண்மை என்று உறுதிப் பட்டுக் கொண்டே வருகின்றன.

மதிப்பெண்கள் என்பது கல்வியின் அடையாளமாக அறிவின் அடையாளமாக ஊடகங்களாலும் கல்வித் தொழிற்சாலைகளாலும் மிகையாக ஊதிப் பெருக்கப்படும் சூழலில் மதிப்பெண்களின் மரியாதையோ உண்மையில் அப்படி ஒரு உன்னதமான நிலையில் இல்லை என்பதையே சமீபத்தைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

கட் ஆஃப் 197 வாங்கினாலும் நல்ல கல்லூரிகள் கிடைப்பதில்லை என்பதாக புலம்புகிறவர்களை ஏராளமாக நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நல்ல கல்லூரிகள் என்றால் என்ன? என்பது பற்றி நாம் தனியாகத்தான் எழுத வேண்டும்.

சனி ஞாயிறுகளில் கூட வகுப்புகளை வைத்து மாணவர்களைப் பிழிந்து மதிப்பெண்கள் எடுக்க வைத்து வேலையோடு வெளியே அனுப்புவார்கள் என்கிற நம்பிக்கைக்கு பாத்திரமான கல்லூரிகளே நல்ல கல்லூரிகள் என்கிற வரையறைக்குள் வருகின்றன.

பொருள்மயப் பட்ட இந்தச் சூழலில் பெற்றோர்களும் பிள்ளைகளும் இதை எதிர்பார்ப்பது சரிதான். ஆனால் இந்தக் கல்லூரிகள் பெரும்பாலும் வறட்டுத்தனமான பொறியியல் எந்திரங்களையே உருவாக்கித் தள்ளுகின்றன. அதைப் பற்றியோ அல்லது அவ்வாறு பொறியியல் படித்து வெளியே வரும் லட்சக் கணக்கான மாணவர்களில் பெரும்பான்மையோர் வேலையற்று இருப்பதைப் பற்றியோகூட தனியாகத்தான் விவாதிக்க வேண்டும். அதைவிட முக்கியமாக விவாதிக்க நமக்கு சில இருக்கின்றன.

ஒரு காலம் வரைக்கும் 80 விழுக்காடு என்கிற அளவில்தான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு இருந்தது. அப்போது பொறியியல் தேர்ச்சிவிழுக்காடு மிக நன்றாக இருந்தது. ஆனால் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு சற்றேரக் குறைய 100 விழுக்காட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் பொறியியல் தேர்ச்சி விழுக்காடு 50 விழுக்காட்டிற்கும் சற்று கீழே போயிருப்பது உலக மயமாக்கலின் வலையில் பள்ளிக் கல்வித்துறை சாய்ந்ததின் விளைவே ஆகும்.

ஏறத்தாழ 65 விழுக்காடு மதிப்பெண்களோடு பொறியியல் கல்லூரிகளுக்கு வந்தவர்கள் சாதமைகளோடு திரும்பியபோது இப்போது இருநூறுக்கு இருநூறு கட் ஆஃப் எடுத்து வரும் பிள்ளைகளால் இயலாமல் போவது மதிபெண்கள் மற்றும் தேர்ச்சி விழுக்காட்டில் எகிரி நிற்கும் பள்ளிக் கல்வித்துறை தனது கல்வியின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது.

முன் எப்போதையும் விட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் மிக அதிக அளவில் உழைக்கிறார்கள். அலுவர்கள் அலுவலகங்களிலேயே அமராமல் பம்பரமாய் பறக்கிறார்கள். அதிகாரிகளின் கூட்டங்களை வாரா வாரம் உயரதிகாரிகள் கூட்டுகிறார்கள். அதிகாரிகள் ஏறத்தாழ வாரா வாரம் தலைமை ஆசிரியர்களின் கூட்டங்களை கூட்டி அவர்களை முடுக்கிவிடுகிறார்கள்.

தலமை ஆசிரியர்கள் ஆசிரியர்களை முடுக்கிவிட முக்கியமான பண்டிகை நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் பிள்ளைகளுக்கு விடுமுறையே இல்லாமல் வகுப்புகள் நடக்கின்றன. ஆக மாணவர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரைக்கும் ஓய்வின்றி உழைக்கவே செய்கிறார்கள். அதில் எல்லாம் யாருக்கும் இரண்டாவது கருத்தே இல்லை.

ஏற்கனவே சொன்னதுபோல் தேர்ச்சி விழுக்காடும் மதிப்பெண்களும் எகிரித்தான் பறக்கின்றன. இவை எல்லாம் இருந்த போதும் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பள்ளிக் கல்வியில் ஏதோ குறை இருப்பதாக உணர்கிறார். அதனால் பொறியியல் கல்வி மிகவும் பாதிக்கப் படுவதாக கவலை[ப் படுகிறார். பொறியியல் கணிதம் என்கிற ஒரு தாளில் பன்னிரண்டாம் வகுப்பில் கணிதத்தில் இருநூறுக்கு இருநூறு எடுத்து வந்த மாணவர்களில் பெரும்பான்மையோர் தோல்வியுற்றபோது அன்றைய துணை வேந்தார் என்னதான் நடக்கிறது மேல்நிலைக் கல்வியில் என்று நொந்து கொண்டதாக அறிய முடிந்தது.

இதற்குக் காரணம் கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற நிலையிலிருந்து  மதிப்பெண்கள் பெற வைக்க வேண்டும், ஒன்றுமே புரியா விட்டாலும் தேர்ச்சி பெற வைத்துவிட வேண்டும் என்கிற நிலைக்கு பள்ளிக் கல்வித்துறை சாய்ந்ததுதான் காரணம். ப்ளூப்ரிண்ட்டை கையில் வைத்துக் கொண்டு அதற்கேற்றார்போல் பாடம் நடத்த வந்ததின் மோசமான விளைவு இது. பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தில் பாதியை படித்தாலே 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெறலாம் என்கிற சூட்சுமத்தை இவர்கள் கையெடுத்துக் கொண்டதன் விளைவு இது.

புரிகிற மாதிரி சொல்வதெனில் ஒரு ஆங்கில ஆசிரியர் ஹோமோபோன் (HOMO PHONE) நடத்துவதாகக் கொள்வோம். அவர் ஹோமோ போன் என்றால் என்னவென்று நடத்துவார். ஒரே மாதிரி ஒலிக்கும் இரு சொற்களை எப்படி சரியாகக் கையாள்வது என்று சொல்லித் தருவார். சரியாகக் கற்ருக் கொண்டால் இரண்டுக்கு இரண்டு மதிப்பெண்கள் பெறலாம். தவறாகப் போகும் பட்சத்தில் இரண்டு மதிப் பெண்களும்  போய்விடும்.

உதாரணமாக,

Our PRINCIPAL is a man of PRINCIPLE என்று எழுதினால் இரண்டு மதிப்பெண்கள் கிடைக்கும். இதையே our PRINCIPLE is a man of PRINCIPAL என்று எழுதினால் ஒரு மதிப்பெண்ணும் கிடைக்காது. இதையே our PRINCIPLE is a man of PRINCIPLE என்று எழுதினால் ஒரு மதிப்பெண் கிடைக்கும். ஆங்கில ஆசிரியனும் மாணவரும் இப்போது ஒரு மதிப்பெண் போதும் என்கிற நிலைக்கு வந்து விடுகிறார்கள்.  ஒரு மதிப்பெண் மட்டுமே போதும் என்றால் அதற்கேன் படித்துக் கொண்டு, நடத்திக் கொண்டு. இரண்டு கோடுகளிலும் ஒரே வார்த்தையைப் போடு என்கிற அளவில் சுளுவாக்கிக் கொள்கிறார்கள்.

ஆக எந்த மாணவனும் ஹோமோபோன் பற்றி எதுவும் தெரியாமலேயே ஹோமோபோனுக்கு ஒரு மதிப்பெண் பெற்றுவிட முடியும். இது ஆபத்தானது என்பதை பள்ளிக் கல்வித்துறை உணர்ந்தாக வேண்டும்.

உணராத பட்சத்தில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை நடத்த வேண்டும் என்கிற மாதிரியான துணைவேந்தரின் எண்ணத்தை நடைமுறைப் படுத்த வேண்டி வரும்.

படிக்க வைப்பதல்ல கற்பித்தலும் கற்க வைத்தலுமே தங்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை இந்தப் புள்ளியிலாவது பள்ளிக் கல்வித்துறை உணர வேண்டும்    

நன்றி: காக்கைச் சிறகினிலே


அழைப்பு
06.03.2015 வெள்ளியன்று திருச்சி இருங்கலூர் ஆதிசங்கரர் கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் பேசுகிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் வாருங்கள். சந்திப்போம்

குட்டிப் பதிவு 22

வட்டிக்காரர் மீது இருக்கும் பயம்கூட மரணத்தின் மீது எப்போதும் இருந்ததில்லை எனக்கு. கலியன் கடையில் எமனோடு ஒரு கோப்பை தேநீர் பருகிவிட்டு அவனோடு புறப்பட தயாராய்தான் இருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் மரணத்திற்கும் எனக்குமான இடைவெளி ரொம்பவும் குறைந்து விட்டதாகவே சமீப காலமாய் உள்ளுணர்வு சொல்கிறது. உண்மையை சொன்னால் எதற்கும் தயாராகவே இருந்த என்னை தோழர் மாயாண்டி பாரதிக்காக தோழர் தணிகை இன்றைய ( 03.03.15) தீக்கதிரில்எழுதிய கவிதை புரட்டிப் போட்டுவிட்டது.
இப்படி ஒரு இரங்கலை என் தலைமுறையின் மக்கள் கவிஞன் ஒருவன் எனக்கு எழுதுவான் என்று நம்பிக்கை வரும் வரைக்கும் உழைத்துவிட்டுத்தான் போக வேண்டும்.

Monday, March 2, 2015

63/64 காக்கைச் சிறகினிலே, மார்ச் 2015

கணையாழியில் சுஜாதா அவர்கள் “ கணையாழியின் கடைசி பக்கம்” எழுதியபோது அதற்கென்று திரண்ட வாசகர் திரளுள் நானும் ஒருவன். கணையாழி நின்று பிறகு அது கைகள் மாறிக்கொண்டிருந்த வேளையில் ”யுகமாயினி” இதழில் அதைத் தொடருமாறு அதன் ஆசிரியர் சித்தன் சுஜாதா அவர்களை அணுக “ கணையாழியின் கடைசிப் பக்கங்கள்” யுகமாயினியில் வந்தது. அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோதும் அவர் எழுதிக் கொடுத்தார். இதற்கென்று இங்கும் ஒரு திரள் உருவானது.

கொஞ்சம் அதிகம்தான் என்பது தெரிந்தே இருந்தாலும் கக்கையில் அப்படி ஒரு முயற்சியை செய்து பார்க்கும்  ஆசை எனக்கு வந்தது. தயக்கத்தோடுதான் ஆசிரியர் முத்தையாவிடம் கேட்டேன். ”எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால் எழுதுங்கள்” என்றார். அவருக்கும் சந்திரசேகருக்கும் இப்படி ஏதாவது ஒன்றில் நான் சிக்கிக் கொண்டால் தொடர்ந்து எழுதிவிடுவேன் என்பதில் அவ்வளவு நம்பிக்கை. என்னிடம் கட்டுரை எழுதி வாங்க அவர்கள் படும் சிரமம் அவ்வளவு. என்னைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் தூக்கிப் போட்டுவிட்டு வேறு யாரிடமேனும் கட்டுரை வாங்கிப் போட்டிருப்பார்கள். அவர்களைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் என்னைத் தூக்கிப் போட்டிருபார்கள்.

என் மீதான அன்பு அவர்களை என்னை தூக்கிச் சுமக்க வைத்திருக்கிறது. எனது வலது தோளும் இடது தோளுமாய் மாறி காக்கையின் என் பங்குச் சுமையையும் தூக்கிச் சுமக்கிறார்கள். அவர்களுக்கென் நன்றியை சொல்லியே ஆக வேண்டும்.

இப்படியாக நடந்த ஏற்பாட்டின்படி “63/64, காக்கச் சிறகினிலே” வருகிறது. இது ஒரு முயற்சிதான். நீங்கள் ஏற்கிற மாதிரியும் வாசிக்கிற மாதிரியும் எழுதி தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றே நம்புகிறேன்.

*******     ******     *******        ****** 

விஜய் தொலைக்காட்சியின்  “ சூப்பர் சிங்கர் ஜூனியர் 4” இன் இறுதிப் போட்டியை பார்த்தேன். அவ்வப்போது இந்த போட்டியை பார்ப்பதும் உண்டுதான். அன்றைய தினம் பாடிய ஆறு குழந்தைகளும் மிக அற்புதமாகப் பாடினார்கள். போட்டி என்றால் அப்படி ஒரு போட்டி. வழக்கமாக ஒரு ஒப்புக்காக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்பிப் போனோம் என்போம் இல்லையா. நெசத்துக்குமே அப்படி ஒரு குழப்பம் எல்லோருக்கும். எனது வாக்கென்னவோ ஸ்ரீஷா என்ற குழந்தைக்கு என்றாலும் வெற்றி பெற்ற குட்டியும் அதற்கு தகுதியானவளே.

அந்தக் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்த திரு ஆனந்த் அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும். தனக்குத் தெரிந்த வித்தையை மிகுந்த அர்ப்பணிப்போடு குழந்தைகளுக்கு கொண்டு செல்வதில் நூறு விழுக்காஸ்ட்டுக்கும் மேல் வெநி பெற்றிருந்தார்.

ஆனால் அவரிடம் மடங்கி முறையிட ஒன்றுண்டு.

மழலை மாறாத நான்கு வயது குழந்தைகளை ஐம்பது வயதில் ஜானகி அம்மா பாடிய பாடல்களை அட்சரம் பிசகாமல், சுதி சுத்தமாய், நீளாமல் குறையாமல் சங்கதிகளை கொண்டுவர நீங்கள் கொடுத்த பயிற்சியும் பட்ட சிரமங்களும் மிக அதிகம் என்பதை நான் அறிவேன். அதற்காக உங்களை தலைதாழ்த்தி வணங்குகிறேன்.

ஆனால் அதை குழந்தைகளின் முதிர்ச்சி (maturity) என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.

ஐம்பது வயதில் ஜானகி அம்மாவை ஐந்து வயது குழந்தையின் குரலில் பாடச் சொல்கிறீர்கள். ஐந்து வயது குழந்தையை ஐம்பது வயதில் ஜானகி அம்மா பாடிய பாடலை அப்படியே பாடச் சொல்கிறீர்கள். மாறாக அம்மாவை அவர்களது குரலிலும் குழந்தைகளை குழந்தைகளின் குரலிலும் பாடச் சொல்லலாமே?

உங்களது இவ்வளவு உழைப்பும், அர்ப்பணிப்பும் நீங்கள் கொடுத்த பயிற்சியும் அந்தக் குழந்தைகளின் முயற்சியும் உழைப்பும் அவர்களது மழலை வழி கசிந்திருக்குமானால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதோடு மிகச் சரியாகவும் இருந்திருக்குமே.

அந்தக் குழந்தைகள் பாடியது பேரழகாக இருந்தது என்பது உண்மைதான். ஆனல் அவர்கள் மழலையில் திக்கித் திக்கிப் பேசியது அவர்கள் பாடியதைவிடவும் இனிமையாக இருந்ததே ஆனந்த் சார்.

அவர்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் சாக்கில் அவர்களது மழலையையும் குழந்தைமையையும் கொன்றுபோட்டோம் என்றே தோன்றுகிறது.

மழலை இசைக்கு உகந்தது என்று சொன்னால் அது குறையுடையது என்று உங்களுக்குத் தெரியும். மழலை இசைக்கு இணையானது. குழந்தையை நேசிப்பவர்களுக்கு மழலை இசையைவிடவும் இனிமையானது.

உங்கள் மீது எனக்கு அளப்பரிய மரியாதையும் நம்பிக்கையும் உண்டு ஆனந்த் சார். அவர்களது மழலையைக் கொண்டே இதைவிடவும் எதைவிடவும் காத்திரமான இசையை உங்களால் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன்.

மிகுந்த நம்பிக்கையோடு உங்களிடம் கை ஏந்துகிறேன் சார்.
******************         ***************       ****************

நமது மற்றும் நமது குடும்பத்தினரின் பிறந்த நாட்கள் மற்றும் திருமண நாட்களின்போது அருகில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கி அவர்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம்.

ஒரு சிலர் ஒரு வேளை உணவினை அவர்களுக்கு வழங்கி மகிழ்கிறோம். அந்தக் குழந்தைகளும் முதியோர்களும் நமக்காக வாழ்த்துப் பாடி நாமக்காகப் பிரார்த்திக்கிறார்கள்.

பல ஆதரவற்றோர்  இல்லங்கள் இதுபோன்ற நாட்களில் வந்து தங்களோடு கொண்டாடுமாறு ஊடகங்களின் வழியே அழைப்பு விடுக்கிறார்கள்.

அங்கு சென்று நமது பிறந்த நாளைக் கொண்டாடுவதைவிட அங்குள்ள குழந்தைகளின் பிறந்த நாட்களின் போது அங்கு சென்று கொண்டாடினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று தோன்றியது.

ஐம்பது பேர் கொண்ட ஒரு இல்லம் தேர்வு செய்திருக்கிறேன். நான்கு அல்லது ஐந்து குழந்தைகளின் பிறந்த நாளை நானே கொண்டாடிவிட முடியும். மற்றவர்களை என்ன செய்யலாம்? எந்தக் கவலையும் இல்லை.

நண்பர்கள் இருக்கிறார்கள்.

 ******      **************         ****************

காக்கை இதழ் அச்சுக்குப் போய்விட்டது. அட்டையும் தயாராகிவிட்டது. அப்பாடா என்று ஆசுவாசப் படுத்திக் கொள்ள எத்தனித்தபோது இந்த மண்ணை நேசிக்கிற எந்த ஒரு மனிதனையும் உலுக்கிப் போடுகிற அந்த செய்தி வருகிறது. ”தோழர் மாயாண்டி பாரதி காலமானார்” இந்த மண்ணின் விடுதலைக்காக சற்றேரக் குறைய இருபது ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.
அப்படி ஒருமுறை சிறைப் படுத்தப் பட்டபோது அத்தோடு விதிக்கப் பட்ட அபராதத் தொகையான ஐம்பது ரூபாயைக் கட்ட சொத்து இருக்கிறதா என்று நீதிபதி கேட்டபோது மீனாட்சியம்மன் கோயிலும், மங்கம்மா சத்திரமும் தனது தகப்பன் சொத்தென்றும், பாரத நாடு தனது பாட்டனார் சொத்தென்றும் கூறியவர். அதற்காக சிறையில் சித்திரவதை பட்டவர்.
தோழர் மாயாண்டி பாரதி சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று கூறி இவர் அளித்த சான்றை ஏற்று ஒருவருக்கு தியாகிகள் பென்ஷன் வழங்கியுள்ளார் நீதியரசர் சந்துரு.
இருபது வருடங்களுக்கும் மேலாக ஜனசக்தியிலும் பிறகு தீக்கதிரிலும் பணியாற்றியவர்.
ஒரு பை நிறைய மிட்டாய்களோடுதான் வீட்டைவிட்டு வேலைக்கு கிளம்புவாராம். வீட்டு வாசலில் இவருக்காக காத்திருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்துவிட்டுதான் நகர்வாராம். குழந்தைகளை அப்படி நேசித்தவர்.
மிச்சமிருந்த விரல்களின் எண்ணிக்கையளவு சுதந்திரப் போராட்ட வீரர்களில் இன்னுமொருவரை காலம் களவாண்டுவிட்டது. 
இவர் சார்ந்திருந்த இயக்கத்தை கடுமையாக விமர்சிப்பவர்களும் ஏற்றுக் கொண்ட ஆளுமை இவர்.
அவர்குறித்த எந்தத் தகவலும் பாடப் புத்தகங்களில் இல்லை.
அந்தத் தியாகப் பெருமகனுக்கு அஞ்சலியையும் வணக்கத்தையும் செலுத்தும் அதே வேலையில் அவரை எங்களால் இயன்ற அளவு கொண்டு சேர்க்க அவர் குறித்து தெரிந்தவர்கள் பங்களிப்பை அளித்துதவுமாறு வேண்டுகிறோம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...