Tuesday, March 31, 2015

நல்ல பேனாவும் நல்ல அரசியலும்

சிறுகதைகளை செய்கிறார்கள் சிலர், சொல்கிறார்கள் சிலர். தமிழில் அபூர்வமாக உள்ள கதை சொல்லிகளில் வா.மு.கோமுவும் ஒருவர். இதுதான் “ அழுவாச்சி வருதுங் சாமி” நமக்கு சொல்கிற சேதி.

“ ஒடுக்கி வைக்கப் படுகிறவன் இப்படித்தான் இயல்பாய் கிளர்ந்தெழுவான் என்பதை பிரச்சார நெடி இல்லாமல், அரசியல் கொள்கை பேசாமல், புரட்சி அது இது என்றெல்லாம் வார்த்தைகளைப் போடாமல் உயர்ந்த கலை நுட்பத்துடன் ஒரு முன் மாதிரியாகவும் கதைகளைத் தந்திருக்கிறார் வ. மு. கோமு” என்கிற சுகனின் மதிப்புரையை தொகுப்பில் உள்ள கதைகள் உண்மை என்று நிரூபிக்கின்றன.

அரசியல் கொள்கை பேசாமல் என்ற திட்டமிடல் கோமுவிற்கு இருந்திருப்பின் அதை அவர் அவசியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அரசியல் கொள்கை நல்லதாக இருக்கும் பட்சத்தில் அது இலக்கியத்தின் அழகையும் ஆத்மாவையும் செழுமை படுத்துமே தவிர ஒருக்காலும் சிதைக்கிற வேலையை செய்யாது.

நல்ல பேனாவும் நல்ல அரசியலும் கைகோர்க்கும் போது கோஷங்கள்கூட அழகாய் ஜொலிக்கும். ஒன்றேமுக்கால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒரே கைஎழுத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டபோது தொழிற்சங்கத்தினர் போட்ட கோஷங்களுல் ஒன்று

“திருட்டு கொடுத்தவன்
 திரும்பக் கேட்கிறான்
 திருடியவன் சொல்கிறான்
 யூ ஆர் அண்டர் அரெஸ்ட்”
எந்தச் சூழ்நிலையில் என்று சரியாய் நினைவில்லை. அநேகமாக யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு எதிராய் (போபால் துயரத்திற்கு எதிராய்) என்று படுகிறது. ஊர்வலத்தில் குழந்தைகளின் மழலையில் ஒலித்த கோஷம் ஒன்றினை கவிஞர் இன்குலாப் ஒருமுறை பதிந்திருந்தார்,

“வானம் வேண்டும்
 பூமி வேண்டும்
 வாழும் உரிமை
 வேண்டும் வேண்டும்”

சரியான கண்ணோட்டத்தோடு கூடிய அரசியல் கொண்டால் செய்நேர்த்தி மிக்க பேனா கோஷங்களைக் கூட கவிதைகளாகவே கக்கும்.

“அழுவாச்சி வருதுன் சாமி” தொகுப்பில் முதல் கதை, அம்மா செத்துக் கிடக்கிறாள். இழவு சொல்லியை அண்டை ஊர்களுக்கு  அனுப்பிவிட்டு ஆண்டை இழவு சொல்லியின் வீட்டுக்கு வருகிறான். இழவு சொல்லியின் மனைவி சமைத்த மீனை விழுங்கிவிட்டு அவளோடு உல்லாசித்து இருக்கிறான். அம்மா பிணம் வீட்டில் கிடக்கையிலும் ஷோக்கு குறையவில்லை ஆண்டைக்கு என்பது மேலோட்டமான வாசிப்பில் நமக்கு கிடைக்கும் கதை.

கொஞ்சம் ஆழமாக வாசித்தால் இதற்குள் இருக்கும் சாதி அரசியலும் ஆண்டைகளின் அட்டூழியங்களும் மட்டுமல்ல, இழவு சொல்லியின் மனைவி மாதிரி பெண்களின் இணங்குதலுக்குள் இருக்கும் அரசியலும் எல்லாம் அவிழ்ந்த அம்மண நிலையில் வசப்படும்.

என்ன... இழவு சொல்லியின் கோவத்தை இன்னும் கொஞ்சம் தூக்கலாய் சொல்லியிருக்கலாம் என்று படுகிறது.

வர்க்கமானாலும் வர்ணமானாலும் ஒடுக்குபவர்கள் ஒரு பக்கத்தில் ஒன்றாய் இணைவதும், ஒடுக்கப் படுபவர்கள் ஒன்றுபட முடியாமல்நார் நாராய் கிழிந்து கிடப்பதும் இன்றைய எதார்த்தம். இதன் சூட்சுமத்தை “ கூட்டப்பனை சாவக்கட்டு”  அம்பலப் படுத்துகிறது.

“நீங்க பன்றது அட்டூழியங்க சாமி” யில் இறுதியில் நஞ்சன் பீடி பற்ற வைக்கும்திமிர் கம்பீரனது. ஆனாலும் திரும்பத் திரும்பக் கேட்கும் “சாமி கொஞ்சம் டீத்தண்ணி ஊத்துங்க” என்ற அவனது குரல் சத்தியமாய் நமது இரண்டுநாள் தூக்கத்தையாவது திருடிப் போகும்.

ரெண்டு கிளாஸ் என்பதே கொடுமை. ரெண்டு கிளாசிலும் டீ வாங்க தொங்கோ தொங்கென்று தொங்க வேண்டும். காசையும் கொடுத்துவிட்டு என்பது  கொடுமையிலும் கொடுமை. சுக்சன் சொன்னது போல் பிரச்சார நெடியே இல்லாமல் இன்னொரு கோணத்தை பிரச்சாரம் செய்கிறது இந்தக் கதை.

தோழர் பெரியசாமியை மையமாகக் கொண்ட இரண்டு கதைகளும் நல்ல சோதனை முயற்சி. இவ்விரண்டு கதைகளும் பேசப் பட வேண்டிய அளவிற்கு பேசப்படாமல் போனால் இழப்பு தமிழுக்குத்தான்.

படிப்பு பவுடர் பூசாத பாமர் கிராம மக்கள் ஆணாதிக்கத்தை எப்படி நேர்த்தியாக் எதிர்கொள்வார்கள் என்பதை நேர்த்தியகப் படம் பிடிக்கிறது “திருவிழாவிற்கு போன மயிலாத்தா”

விளக்கெண்ணெய் ஊற்றிய மார்பிள் தரையாய் வழுக்கிக் கொண்டே நகர்கின்றன கோமுவின் கதைகள்.

சாதி அரசியலை அம்பலப்படுத்த வேண்டும் தோலுரிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவோடோ, பிரகடனத்தோடோ, கோமு பேனா திறந்ததாய் தெரியவில்லை.

ஆனால் அதை அவர் சரியாய் செய்திருக்கிறார்.

நன்றி: “ தாமரை “

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...