Showing posts with label கவிதை2025. Show all posts
Showing posts with label கவிதை2025. Show all posts

Thursday, July 10, 2025

கவிதை 017

  மருத்துவம் மட்டும்தான்

படிப்பா ?
இப்படியாகத்தான்
இந்த நூற்றாண்டிற்கான
சூத்திரர்களுக்கான
கல்வி மறுத்தல் தொடரோட்டத்தை
ஆரம்பித்தான்
ஒரு புள்ளியில்
படித்தவன்
பக்கோடா போடலாமே என்றான்
சுதாரித்தோம்
இல்லையெனில்
பக்கோடா போட
படிப்பெதற்கென்று
நகர்ந்திருப்பான்
இப்போது
சூத்திர
கல்விமறுப்பு குச்சி
அறுபதாயிரம்
யானைகளை
ஒரே கப்பலில் ஏற்றியவனின்
கைகளுக்குப் போனது
அவனோ
மாடு மேய்க்கப்
பழகு
சம்பளம் தருவேன் என்கிறான்
இப்போது
இன்னொருவன் கைகளில்
சூத்திர கல்வி மறுப்பு குச்சி
இன்று
படிப்பைவிட
பக்தி பெரிதென்கிறான்
நாளை
பக்தி போதும்
படிப்பெதற்கென்பான்
குழந்தைகளே
எதற்கும்
சாணி வாளியில்
துடைப்பங்கள்
ஊறியபடியே இருக்கட்டும்

Monday, June 30, 2025

கவிதை 016 / 2025

 என் சொற்களை
பலவீனமானவைகளாக நீங்கள் கருதலாம் 
கூர்மையற்றும்
தரமற்றும்
பயனற்றவையாகவும்கூட 
அவை
உங்களுக்குத் தோன்றலாம்
ஆனால்
ஒடுக்கப்பட்டவன் பக்கம் நின்று
குரல் கொடுப்பவர்களின்
உடன் நிற்கும் என்ற வகையில்
என் சொற்களை
எனக்குப் பிடிக்கும்

Sunday, June 29, 2025

கவிதை 015/2025

 தேநீரெதற்கு

பெருவிருந்துதானெதற்கு
வந்தார் வந்தமட்டில்
செல்லை நீங்கி
தொலைக்காட்சிதனை நீங்கி
அன்னார்
முகம் பார்த்து
அளாவுதலே விருந்தோம்பல்

Friday, June 27, 2025

கவிதை 014/2025

 ஏவுகணை தாக்கிய இடத்திற்கு

ஒரு மணி நேர
வான்வெளி பயணதூரம்
பயப்பட
ஏதுமில்லை
என்ற மகனிடம்
பார்த்துவிட்டு வந்த
மாப்பிள்ளை வீடு குறித்தும்
சண்டை
அண்ணன் இடத்திற்கு
கொஞ்சம் தள்ளிதான்
பயப்பட ஏதுமில்லை என்று
மகளிடமும்
சொல்லும் என்னிடம்
சொல்வதற்கு
சுவாரசியமாய் ஏதுமில்லை

Wednesday, June 25, 2025

கவிதை 13/2025

 

அமெரிக்காவே
நம்ப முடியாத அளவிற்கு
அசிங்கமானது
அமெரிக்கா

Tuesday, June 17, 2025

கவிதை 12/2025

 ஏவுகணைகள்

நொறுக்கிப்போட்ட
கட்டடங்களின்
சிதிலங்களின்மேல் நின்றபடி
உலகோடு
உரையாடிக்கொண்டிருக்கும்
பத்திரிக்கையாளனின்
இடது காலை
ஏதோ நிமிண்ட
குனிந்து பார்க்கிறான்
அட்டைமாதிரி
ஏதோ ஒன்று
வலது காலால்
தட்டிவிட்டு
விவரணையைத்
தொடர்கிறான்
மீண்டும்
அதே இடது காலை
ஏதோ நிமிண்ட
அட்டையாகத்தான்
இருக்கும் என்று
குனிந்து பார்க்காமலே
சிதிலங்களில் சிக்கிக்கொண்டிருக்கும்
குழந்தையின் விரலை
வலது காலால் தட்டிவிட்டு
விவரணைகளைத்
தொடர்கிறான்
அந்த செய்தியாளன்

Tuesday, June 3, 2025

கவிதை 11/2025

  

வணக்கம்
நான்
கலெக்டர் பேசறேன்.
கர்னலோட அம்மாங்களா?
ஆமாம் சார்

பாகிஸ்தானோடான சண்டையில்
உங்கள் மகளின் பங்கு
அலாதியானது
மகிழ்ச்சிங்க சார்
உங்கள் குடும்பத்திற்கு
மரியாதை செய்ய
ஆசைப்படுகிறார் ஜீ சார்
மகிழ்ச்சிங்க சார்
நீங்க வந்து
ஜீ சாருக்கு பூ தூவி
என்ன சார் சொல்றீங்க?
சாருக்கு
பூத்தூவ
உங்களுக்கு
நாங்கள் தரும் வாய்ப்புதான்
உங்கள் மகளின்
தியாகத்திற்கு
தேசம் தரும் கௌரவம்
ஏற்றுக்கொள்ள வேண்டும்
நீங்கள்
சார்
என்ன சொல்றீங்க
வண்டி வரும்
வந்து சேருங்க

Tuesday, May 27, 2025

கவிதை 10/2025

 அன்றொரு நாள்

கடலைப் பார்க்க
போனபோது
அங்கே
கடலிருந்தது

Monday, May 26, 2025

கவிதை 09/2025

 காந்தியை
வரைவதற்காக
அமர்ந்தவர்
வரைந்து முடித்தது
அச்சு அசலாக
அவரது சித்தப்பாவை

என்றாவது
யாரையாவது
வரைய ஆரம்பித்து
காந்தியையும் 
வரைந்து விடுவார்
அவர்

யாரை ஆரம்பித்து 
யாரில் முடித்தாலும்

அவை
ஓவியங்கள்

அவர்
ஓவியர்

Wednesday, May 21, 2025

கவிதை 08/2025

 தேநீரின் வயது

அறுபத்தியொன்று ஆண்டுகள்
பதினோறு மாதம்
ஒரு நாள் என்பதையே
நம்பமுடியாத உங்களால்
அதன் எடை
போட்டிருக்கும் உடையோடு சேர்த்து
ஐம்பத்தி ஒன்பது கிலோ என்பதை
நம்பவா முடியும்?
உங்களுக்குத் தெரியுமா
தேநீருக்கு
மீசை உண்டு
அதுவும்
நரைத்த மீசை

தேநீருக்கு
நிறைய பெயர்கள் உண்டு
ஒரு பெயர்
எட்வின்
தேநீரின் தோழர்களிடம்
தேநீருக்கு
ஒரு கோரிக்கை உண்டு
எட்வின் எனும்
தேநீரும் ஒருநாள்
மரிக்கவே மரிக்கும்
தேநீரின்
சிதைமீது
ஊட்டி காபி பாரிலிருந்து
வாங்கி வந்த
ஐந்து குவளை
தேநிரைக் கொட்டி
பிறகு தீமூட்டுங்கள்
தேநீரின் சிதை
எரியத் தொடங்குகையில்
மரித்த தேநீர்
உயிர்பெற்று இருக்கும்
All react

Tuesday, May 20, 2025

கவிதை 07/2025

 

ஏதிலிகளை
சத்திரங்கள்தான்
ஏற்கவேண்டுமெனில்
ஒரு சத்திரமே
என்
தாய் மண்ணாகட்டும்

Monday, May 19, 2025

கவிதை 06/2025

 

விரல்களுக்கிடையே
வியர்வை ஈரமாய்
மரணம்
ஒளிந்துகொண்டிருக்கிறது
அலைபேசியை எடுத்ததும்
பேச முடியாது
விசும்புவதென்பதுகூட
சாகாமல் இருக்கிறோம் என்பதன் வெளிப்பாடுதான்
காரணம் வேறாயினும்
செத்தவர்களுக்காகவும் அழுகிறோம்
இன்னும்
சாகாமல் இருப்பதறிந்தும் அழுகிறோம்
அழுவதற்குத்
தெம்பில்லாதபோது
நான்
வாசிக்கிறேன்
வாசிக்க முடியாது கண்ணெரிந்தால்
உறங்குகிறேன்
வாசித்தலும்
உறக்கமும்
அழுகைதான் என்பது
பெருந்துயர்தான்
சாவுச் செய்தியின்
முகத்தில் முழிக்காத
ஒரு விழிப்புக்காக
செத்தே தொலைக்கலாம்

Sunday, May 18, 2025

கவிதை 05/2025


ஒரு போதும்
யார் மீதும்
சேறை இறைப்பதில்லை
வெயில்

Wednesday, April 2, 2025

கவிதை 04 /2025

 படித்தோரை

படித்த படிப்பிற்கு
பணி தேடித் திரிந்தோரை
பணியில் அமர்ந்தோரை
பணி தந்த ஊதியத்தில்
சொகுசள்ளிப்
புசித்தோரை
காதைத்
திருகி
கரம்பிடித்து
இடதிழுத்து
பசித்தோரை
பசிக்கான காரணத்தை
அறியாத எளியோரை
நினை
அவனுக்காய்
களமேகி உழை என்றுரைத்த
ஊனே
எங்கள் உயிரே
செங்கொடியே
வைகை நீராட
மாமதுரை போனவளே
பார்க்க வாய்க்காமல்
நான் போக வாய்ப்புண்டு
பிள்ளைக்கும்
பேரனுக்கும்
வாய்க்காமல் போனாலும்
என்
எள்ளோ
கொள்ளோ
இல்லை
அடுத்தடுத்து வருபவரோ
உன்னை
கோட்டை ஏற்றி
வருங்காலம்
காப்பார்கள்
இன்குலாப்
இன்குலாப்
இன்குலாப்
ஜிந்தாபாத்

02.04.2025

Sunday, March 2, 2025

கவிதை 03/2025

யார் கண்டது

ஜன்னலில் வந்து அமர்ந்த அதை
கவனிக்காது
அலைபேசிக்கொண்டிருந்தேன்
என்ற கோபத்தில்
பாப்பா, பாப்பா என்று
கத்தக் கத்த
காதில் வாங்காமலே பறந்து போன
சிட்டுக்கு
சளி சரியாயிடுச்சா என்று
என்னிடம்
கேட்க இருந்திருக்கும்

கவிதை 02 | 2025

எழுவதற்கு கொஞ்சம்
தாமதமானாலும் பரவாயில்லை
மெனக்கெட்டேனும்
இன்னும் கொஞ்சம் தூங்கி
விழிப்பு வரும்போது வரும் கனவை
பார்த்துவிடுங்கள்
இன்று அப்படியாக
என் கனவில் வந்த
ஒரு பாப்பாக்குருவி
நெஞ்சில்
வலிக்காமல் கொத்திப் பார்த்தது
கழுத்தில் மூக்கைத் தேய்த்தது
பிறகு
எப்போதாவது
கிரிஷ் பயல் திருட்டுத்தனமாய் பார்ப்பதுபோல்
பார்த்துவிட்டு
பறந்துவிட்டது
மெனக்கெட்டேனும் கொஞ்சம் தூங்கி
விழிப்பு வரும்போது வரும் கனவை
பார்த்துவிடுங்கள்
ஏதேனும் ஒரு பாப்பாக்குருவி
உங்களையும் ஆசிர்வதிக்கக்கூடும்

Saturday, March 1, 2025

கவிதை 01/2025

 ஒவ்வொரு

நஞ்சுக் குப்பியிலும்
ஒட்டுத்தாள் ஒட்டினார்கள்
ஒவ்வொரு குப்பியின்
ஒட்டுத் தாளிலும்
ஒவ்வொரு நாட்டின் பெயரை எழுதினார்கள்
மூன்று குப்பிகள்
மிச்சப்படவே
எல்லா நாடுகளின் பெயரும் எழுதியாயிற்றா என்று
சரி பார்த்தார்கள்
எல்லா நாடுகளின் பெயர்களை எழுதியபின்னும்
மூன்று குப்பிகள் மிச்சமாய்தான் இருந்தன
என்ன செய்வதென்று முதலாளியைக் கேட்டார்கள்
பத்திரமாய்
வைக்குமாறும்
ஏதேனும் நாடொன்று உடையும் நேரத்தில்
தேடித் தயார் செய்ய இயலாது என்றும் சொன்னவனை
யாரென்று மட்டும்
கேட்டுவிடாதீர்கள்
வெள்ளையாய் இருக்கும்
அவன் வீடு என்பதைத் தவிர
சொல்வதற்கு ஏதுமில்லை
என்னிடம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...