Saturday, August 25, 2012

“வேணாண்டா வெள்ள மாத்திர”

“ வேணாண்டா
வெள்ள மாத்திர

அடக்
கண்டதுக்கெல்லாம்
முழுங்கி முழுங்கி
தொண்டையும் புண்ணா போச்சுதே

அட
வேணாண்டா
வெள்ள மாத்திர”

முன்பெல்லாம் த மு எ ச கலை இரவு மேடைகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல் இது.

தொடங்கியதுமே ஜனத்திரள் வெடித்துச் சிரித்து கைதட்டி ஆர்ப்பரிக்கும். எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது சுவைத்த பாடல் அது. அந்தப் பாடல் அவ்வளவு தூரம் ஜனங்களிடம் போய் சேர்ந்தமைக்கு அன்றைய தினத்தில் அரசாங்க மருத்துவ மனைகளில் வழங்கப்பட்ட “த.அ” வெள்ளை மாத்திரைகளே காரணம்.

தலை வலின்னு போனாலும், வவுத்து வலின்னு போனாலும், குளிர் காச்சல்னு போனாலும் அதே வெள்ளை மாத்திரையையே மாற்றாமல் கொடுக்கிறார்களே என்று மக்களிடம் இருந்த அயர்வு கலந்த சலிப்பே அந்தப் பாடலின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

“த” னா “ அ “னா என்னா தெரியுமா? தானா ஆனாதான் உண்டு. இந்த மாத்திரையால ஒன்னும் ஆகாது என்று அர்த்தம் என்று அப்போதைய கலை இரவு பேச்சாளர்களில் பெரும்பான்மையோர் பலத்து வெடிக்கும் ஆரவார்த்திற்கு இடையில் பேசுவது வழக்கம். நானும் ஒரு இருபது கலை இரவு மேடைகளிலாவது இதை பேசியிருப்பேன்தான்.

அந்த அளவுக்கேனும், “ த” னா “அ”  னா மாத்திரைகளோடேனும் இன்றைக்கு இருக்கிற அளவில் அரசு மருத்துவ மனைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்பதற்கு சன்னமான அளவிற்கேனும் நம்பிக்கை தரக்கூடிய பதில் தட்டுப்பட மறுக்கிறது.`

அரசு மருத்துவ மனைகளின் அவசியம் குறித்து ஆக சமீபத்தில் உணர ஒரு வாய்ப்பு கிட்டியது.

“உங்க அப்பா செத்துக்கிட்டு இருக்கார், சார். நேரம் கடத்திப் பயனில்லை. இன்னும் பத்து நிமிடங்களுக்குள் அவரை தியேட்டருக்குள் கொண்டு போக வேண்டும்”

என்று மருத்துவர் சொன்னபோது கேட்டேன்,

“எவ்வளவு சார் ஆகும்”

அவர் சொன்ன மாத்திரத்தில்,

“சரிங்க சார், அழைத்து செல்லுங்கள்”

அழைத்துச் சென்றார்கள். ஒரு மணி நேரத்திற்கெல்லாம், செத்துக் கொண்டிருந்த என் தந்தையை உயிரோடு எங்களிடம் எங்களிடம் ஒப்படைத்தார்கள்.

என்ன,

மூன்று வட்டிக்கு ஒரு ஐம்பது , இரண்டு வட்டிக்கு ஒரு லட்சம், கைவசம் இருந்த ஐம்பது போக நண்பர்கள் கைமாற்றாய் கொடுத்த நாற்பது எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஆக கையில் இல்லாவிட்டாலும் புரட்ட முடிந்தது என்பதால் அப்பா இன்று எங்களோடு இருக்கிறார். புரட்ட முடியாது போயிருப்பின் அப்பா படமாகி ஐந்து மாதங்களாகியிருக்கும்.

அதற்கு அடுத்த நாள் தம்பி விஷ்ணுபுரம் சரவணனோடு பேசிக் கொண்டிருந்தேன்,

“எல்லா அப்பாவும் அப்பாயில்லையா சரவணன்?”

“ அப்பான்னா அப்பாதான். ஏண்ணே?”

“ஒருக்கால் புரட்ட முடியாதவனோட அப்பான்னா செத்துட வேண்டியதுதானா, சரவணன்?”

“வேற வழி, சாக சாகப் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்”

உடைந்தார்.

அவரது தந்தைக்கும் அப்பாவிற்குன் வந்ததுபோல் ஏதோ ஒரு நோய் வர புறட்டவும் முடியாது போகவே வேறு வழியேயின்றி ஏதோ அவரை திருப்தி படுத்துவதற்காக மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து அவர் பையப் பைய மரணிப்பதை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

உடைந்தேன்.

முடியாத எல்லா அப்பாக்களும் எல்லா அம்மாக்களும் காப்பாற்றப் படவேண்டும் எனில் பொது மருத்துவ மனைகள் பலுகிப் பெருக வேண்டும்.

ஆனால் இருக்கிற மருத்துவ மனைகளைக் காப்பாற்றவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. புதுச்சேரி ஜிப்மர் சற்றேரக்குறைய பணம் கட்டி வைத்தியம் பார்க்கும் அரசு மருத்துவ மனையாகிப் போய்விட்டது.

 இந்த மருத்துவமனைக்கு தன்னாட்சி அந்தஸ்தை வழங்க முடிவெடுத்த போதிலிருந்தே பிருந்தா காரத் மாநிலங்களவையில் இந்த மருத்துவனையைக் காப்பாற்ற போராடியதையும், மார்க்சிஸ்ட் கட்சியினர் அதற்காக முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களையும் நன்றியோடு கொள்ளவே வேண்டும்.

இது ஒரு புறமிருக்க “ மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக 01.07.2012 தினமலர் கூறுகிறது.

“சுகாதாரக் குறியீடுகள் மோசமாகவே தொடர்கின்றன” என்றும் அவர் கூறியதாகவும் தினமலர் தொடர்ந்து சொல்கிறது.

“ பிரசவ கால மரணங்களும், சிசு மரணங்களும் தனக்கு மிகுந்த கவலையைத் தருவதாக பிரதமர் கூறியிருக்கிறார்.

இவற்றை காரத்தோ, அத்வானியோ சொன்னால் அதில் ஒரு அர்த்தமுண்டு. பிரதமரே இப்படிப் பேசுவது என்பதுதான் எவ்வளவு முயன்றும் பிடிபட மறுக்கிறது.

சிசு மரணங்கள் குறித்து கவலையைப் பதிவதோடு ஒரு சராசரி குடிமகனே நிறுத்திக் கொள்ளக் கூடாது. போதிய மருத்துவ சிகிச்சையின்றி இறந்து போகும் குழந்தைகளில் எத்தனை பகத்களோ, எத்தனை பாரதிகளோ, எத்தனை அன்னை தெரசாக்களோ?

பிரதமர் இப்படி கவலைப் படுவதோடு தனது கடமையை சுறுக்கிக் கொள்வதை எதிர்த்து மக்கள் திரண்டு போராட வேண்டும்.

அவரது வேதனைகளிலேயே மிகவும் ஆழமான வேதனை இதுதான். அவர் சொல்கிறார்,

“இன்றைக்கும் மருத்துவ செலவுகளுக்காக, மூன்றில் இரண்டு பங்கு தொகையை மக்கள் கடன் வாங்கியே செலவிடுகின்றனர். அதிலும் மருந்துகளுக்காகவே அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது”

மக்கள் கந்து வட்டிக்கு கடன் வாங்கி மருந்து வாங்குவது குறித்து நானோ நீங்களோ கவலைப் படுவதில் பொருளிருக்கிறது. ஆனால் மருந்து வாங்குவதற்காக மக்கள் கடன் வாங்குவதைப் பார்த்து ஒரு பிரதமர் கவலைப் படுவதாகக் கூறுவது கூட ஏழை மக்கள் மீதான அவரது நக்கல் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

அவர் எதற்கு விசனப் பட வேண்டும்? ஊர் ஊருக்கு மருத்துவ மனைகளைத் திறந்து மருத்துவத்தை ஒரே கை எழுத்தில் பொதுப் படுத்தி ஏழை எளிய மக்களை கடன் வலையிலிருந்து மீட்க சர்வ வல்லமையுள்ள பிரதமர் இப்படிப் பேசுவதை மிக வன்மையாக கண்டிக்கவே வேண்டும்.

போக இப்படி கந்து வட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் பல சமயங்களில் கிலோமீட்டர் வட்டிக்கும் கடன் வாங்கும் மருந்துகளில் , அதுவும் குழந்தைகளுக்கான “ஃப்ரீ ப்ரோ கிட், மற்றும் லேக்டோபாசில்” போன்ற தர நிலையற்ற மருந்துகள் விற்கப் படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்திருப்பதாய் 22.08. 2012 “தீக்கதிர்” சொல்கிறது.

அமீர்கான் எழுதியதை மொழிபெயர்த்துள்ள “ தமிழால் இணைவோம்” என்ற இணைய குழுமம்,

”சர்க்கரை நோய்க்கு என்ன மருந்து தருவாய்? என தேர்வில் கேட்கப் படும் கேள்விக்கு மருத்துவ மாணவர் “GLIMEPRIDE" என்று பதில் எழுதுகிறார்.
இது சர்க்கரை நோயாளிகளுக்கு தரப்படும் உப்பு. பத்து வில்லைகள் கொண்ட அட்டையின் விலை இரண்டு ரூபாய்.

ஆனால் அதே நபர் மருத்துவர் ஆனதும் சர்க்கரை நோயாளிக்கு “ AMARYL" என்ற மருந்தினை பரிந்துரைக்கிறார்.  மேற்சொன்ன இரண்டின் பெயர்கள்தான் வேறே தவிர இரண்டும் ஒன்றுதான்.

ஒரே வித்தியாசம் மேலே சொன்ன "glimepride"  இரண்டு ரூபாய். கீழே உள்ள "amaryl"   நூற்றி இருபத்தி ஐந்து ரூபாய்.

"CENTRIZINE" என்பதும் “ CETZINE" என்பதும் ஜலதோசத்திற்கான வேறு வேறு பெயர்களைக் கொண்ட ஒரே மருந்துகள். ஒரு ரூபாய் இருபத்தி ஐந்து பைசா விலையுள்ள “:cetrizine" ஐ தவிர்க்கும் மருத்துவர்கள் முப்பத்தி ஐந்து ரூபாய் விலையுள்ள”cetzine" ஐயே பெரும்பாலும் பரிந்துரைக்கிறார்கள்.

மட்டுமல்ல "STREPTOKINASE" மற்றும் "UROKINASE" ஆகிய ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாரடைப்புக்கான மருந்துகள் வேறு பிராண்டுகளில் ஐயாயிரம் ரூபாய்க்கு சந்தைகளில் விற்கப் படுகின்றன”

என்று அமீர்கான் எழுதியுள்ளதாக சொல்வதை எளிதாக கடந்து போக முடியவில்லை.

 “ வடகிழக்கு கிராமப் புறங்களில் இரண்டாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் தொடர்வது தமக்கு கவலை அளிப்பதாகவும், ஒரு மருத்துவருக்கு குறைந்த பட்சம் மூன்று செவிலியர்களேனும் தேவை என்ற நிலையில் இரண்டு மருத்துவர்களுக்கு மூன்று செவிலியர்கள் என்ற நிலை நீடிப்பதிலும் தாம் தாங்கொன்னாத கவலையோடிருப்பதாவும்” சொல்லியிருக்கிறார்.

இவர் இப்படி சொல்வதால் ஏதோ தெற்கில் மேற்கில் எல்லாம் போதிய மருத்துவர்களும் செவிலியர்களும் இருப்பதாக் கொள்ளக் கூடாது. இங்கும் சற்றேரக் குறைய அதே நிலைமைதான் என்பதை உள்வாங்க வேண்டும்.

ஒரு பிரதமர் இவ்வளவு புலம்புவது தேவையே இல்லை. சொடக்குகிற நேரத்தில் வணிகர்களிடமிருந்து மருத்துவத்தை தனது நேரடி நிர்வாகத்தில் கொண்டுவர முடியும் அவரால். ஆனால் செய்ய மாட்டார். காரணம் முதலாலிகள் விடமாட்டார்கள். அவர்களிடம்தான் இவர்களுக்குத் தேவையான பணம் இருக்கிறது என்பதென்னவோ உண்மைதான்.

ஆனாலும் அவருக்கு சொல்லி வைப்போம். ஏழைகளின் உயிர் மீது கொஞ்சம் அக்கறை வையுங்கள்.

அவர்களிடம்தான் உங்களுக்கான வாக்குகள் இருக்கின்றன என்பதற்காகவேனும்.
 











Saturday, August 18, 2012

இரண்டாம் சந்திப்பு

யாரையோ யாரோ துவைத்துக் கொண்டிருந்தார்கள் WWசேனலில். மனித ரத்தம் பார்த்து மனிதக் கூட்டம் ஒன்று குதூகலித்துக் கொண்டிருந்தது. எந்த வரையரையும் இன்றி தாறுமாறாய் மனிதனை மனிதன் உதைப்பதை ரசிப்பதிலோ, மௌன சாட்சியாய் அமர்ந்து பார்ப்பதிலோ உடன்பாடு இல்லைதான், ஆனாலும் பார்க்காமல் இருக்க இயலவில்லை ஏவாளுக்கு.

அழைப்பு மணி ஒலித்தது.

தொலைக்காட்சியை மௌனப் படுத்திவிட்டு, அருகில் கிடந்த துண்டை எடுத்து சால் போல் போட்டுக்கொண்டு வாசலை நோக்கி விரைந்தாள்.

திறந்தால்.....,

சாத்தான்!, பார்த்து எவ்வளவு காலமாச்சு.பாம்பாய் பார்த்தது. வசீகரமாய் வந்து நிற்கிறான். ஆனதத்தாலும் ஆச்சரியத்தாலும் அப்படியே உறைந்து போனாள் ஏவாள்.

சந்தன நிறத்தில் காட்டன் பேண்ட், கருஞ்சிவப்பில் டீஷர்ட், ஷாம்பிட்டு உலர்ந்து மணக்கும் தலை, நேர்த்தியாய் நறுக்கப் பட்ட மீசை,மனசை சன்னமாய்க் கிச்சு கிச்சுமூட்டும் மென்மையான இண்டிமேட், மொத்தத்தில் வசீகரமும் கவர்ச்சியும் மிக்க அவனது தோற்றத்தில் கொஞ்சம் சாய்ந்துதான் போனாள் ஏவாள்.

“வா...ங் ...க....! வாங் ...க...!”

அதில் இருந்த ஒரு ரிதத்தை சாத்தானோடு சேர்ந்து ஏவாளும் ரசிக்கத்தான் செய்தாள். சணல் மிதிப்பானை காலால் நகர்த்தியவாறே கேட்டாள்,

“என்னது திடீர்னு இந்தப்பக்கம்?”

”சும்மா பார்க்கனும்போல இருந்துச்சு. வந்தேன். வரக்கூடாதுன்னா சொல்லு, போயிடறேன்”

“ஏய்.. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன். கோவிசுக்காத. வா! வா! இப்படி உட்கார்”

ஒரு பழையத் துணியை எடுத்து சோபாவையும் டீபாயையும் துடைத்துவிட்டாள்.

சோபாவில் சரிந்து இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி நெட்டி முறித்தவன் கண்களில் WW பட்டது.

காசுக்காக மனிதனை மனிதன் உதைக்க வைப்பதும், அதன்மூலம் சிலர் கோடி கோடியாய் சுருட்டுவதற்கு உதவுவதும்தான் இந்தக் குட்டிச்சாத்தானின் வேலை. இது உலகமயமாக்களின் எச்சம். இந்த WW குட்டிச்சாத்தான் இன்று ஏதேனுக்குள்ளும் வந்துவிட்டது.சாத்தானுக்கு சங்கடமாய்த்தான் இருந்தது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“என்ன... தலைவன் ஒரே சிந்தனையில இருக்காப்ல இருக்கு..”

ஞானக் கனியின் தோள்சீவி, துண்டுகளாக்கி ஒரு பூத்தட்டில் வைத்து டீப்பாயின் மேல் வைத்தாள்.

“ சாப்பிடு. நம்ம மரத்துப் பழம். நல்லா தித்திப்பா சுவையா இருக்கும்.”

சாத்தானுக்கு குபுக்கென்று பொங்கிவிட்டது சிரிப்பு. நிமிர்ந்து ஏவாளை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

“எனக்கே ஞானக்கனியா?. விட்டால் பொடி நடையாய் நடந்து போய்உலக வங்கிக்கே கொஞ்சம் கடன் கொடுத்துவிட்டு அப்படியே ஒரு எட்டு போய் உலகத்தை சுருட்டுவது எப்படி என்று அமெரிக்க அதிபருக்கே பாடம் நடத்திவிட்டு வந்துடுவ போலிருக்கு”

சிரித்தார்கள்.

“போப்பா உலகவங்கிக்குக்கூட கடன் கொடுப்பது சாத்தியம்தான். உலகை சுருட்டுவது பற்றி அமெரிக்க அதிபருக்கு பாடம் நடத்த இன்னொருவன் பிறந்து வந்தால்தான் உண்டு.

“அப்படியே ஒருத்தன் பிறந்தாலும் அவன் நிச்சயமாய் அமெரிக்காவிற்கு ஜனாதிபதியாகி விடுவான்.”

மீண்டும் சிரித்தார்கள்.

சிரித்த சிரிப்பில் பொறையேறி கண்களில் நீர்முட்டிவிட்டது சாத்தானுக்கு. கொஞ்சம் தடுமாறித்தான் போனான்.

“இரு! இரு! தண்னீர் கொண்டு வரேன்.”

ஓட்டமும் நடையுமாய் போய் பிரிட்ஜைத் திறந்து மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து வந்தாள்.

சாத்தான் இன்னமும் தடுமாறிக் கொண்டுதானிருந்தான். வந்தவள் சாத்தானின் தலையைத் தட்டிவிட்டுக் கொண்டே சொன்னாள்,

“யாரோ உன்னை நினைக்கிறாங்க சாத்தான்.”

“ வேற யாரு,?, எல்லாம் அந்த பேங்க் மேனேஜராத்தான் இருக்கும். பெர்சனல் லோன் மூனு தவன கட்டல,” என்றவன் கண்களில் ஏவாள் கைகளில் இருந்த மினரல் வாட்டர் பாட்டில் பட்டது. அதிர்ச்சியில் சாத்தானுக்கு பொறையே நின்றுவிட்டது.

ஏதேன் என்பது அழகின் உச்சம். இனிய வனாந்தரம் அது. அந்த இனிய வனாந்தரத்திலுற்பத்தியான ஜீவ நதி, மீசோன்,யெகோன், திகிரிஸ் மற்றும் யூஃப்ரதீஸ் என்று நான்கு கிளைகளாகப் பிரிந்து அமிர்தம் அள்ளிப் போகிற சொர்க்கம் அது. உலகம் முழுமைக்கும் நீரளிக்கவல்ல நதிகள் பிறந்த இடத்தில் மினரல் வாட்டரா? கடலுக்கு உப்பு சேர்க்கும் கயமை அல்லவா இது. என்ன ஆயிற்று. காலம் தலைகீழாய் சுழல்கிறதா?

“ என்ன ஏவாள் இது? தித்திப்பாய் உள்ளிறங்கி இதயம் குளிர்விக்குமே மீசோன் நதித் தண்ணீர். அதற்கென்ன ஆயிற்று? தாவரங்களின் தாகமறிந்து தானாய்ப் போய் அவற்றின் தாகம் தீர்த்த புன்னிய பூமிப்பா இது. இங்கு போய் மினரல் வாட்டரா?”

“ம்ம்ம்... “ பெருமூச்செறிந்தவாறே சலிப்பின் உச்சத்திற்குப் போனாள் ஏவாள்.

“ அடப் போப்பா.. ஜீவ நதியாவது, தண்ணீராவது, மீசோன் குறுக்கே பக்கத்து வயல்காரன் தடுப்பணை கட்டிவிட்டான். அவனுக்கு மிஞ்சினாத்தான் நமக்குத் தருவானாம்.”

“ அடாவடித்தனம் பண்றான்னா அப்படியே உட்டுடுறதா?”

ஏவாள் பதில் சொல்ல வாய் திறக்கும் முன் அழைப்பு மணி ஒலித்தது.

கேபிள் பையன்.

“ இந்த மாசம் பணமே தரக்கூடாதுன்னு பார்த்தேன். ஒலிம்பிக்க ஒழுங்காவே பார்க்க முடியல.”

“இல்லங்க மேடம். டோட்டல் நெட் வொர்க்குமே ப்ராப்ளம் மேடம். இனி எல்லாம் சரியா வருங்க மேடம்.”

“ இனி எல்லாம் ஒழுங்கா வந்தா என்ன? வராட்டிதான் என்ன? ஒலிம்பிக் இன்னும் நாலு வருஷம் கழிச்சுதான வரும். கடைசி நாள் கொண்டாட்டத்தக் கூட பார்க்க விடாம பண்ணீட்டிங்களே”

“ஒரு கால் பண்னியிருக்கலாங்களே மேடம். ஓடி வந்திருப்போம்ல”

“ கொன்னுடுவேன் கொன்னு.அழுத்தி அழுத்தி விரல் தேஞ்சதுதான் மிச்சம்.ஸ்விச் ஆஃப் பன்னி வச்சிட்டு நீங்க மட்டும் ஜாலியா பார்த்துட்டு இருந்திருக்கீங்க”

பணத்தைக் கொடுத்து பையனை அனுப்பிவிட்டு வந்து ஸ்டூலை இழுத்துபோட்டு சாத்தானுக்கு எதிரில் அமர்ந்தாள்.

“ஆமாம் என்ன கேட்ட. அடாவடித்தனம் பன்னா உட்றதான்னுதானே? வேற என்ன செய்றது?

“ நியாயம் கேட்கறதுக்கு இங்க ஆளே இல்லையா என்ன?”

“ ஆளா, நிறைய இருக்காங்க. ஆனா யார நம்பச் சொல்ற? இந்தப் பக்கம் வந்தா ஆத்து நீர தடுப்பது குற்றம்ங்கறாங்க. அவங்களே வரப்பத் தாண்டி அந்தப் பக்கம் போயிட்டா, தேவைக்குப் போக மிஞ்சுன தண்னீரத்தானே தரமுடியும்ங்கறாங்க. என்ன செய்ய சொல்ற?”

“ஏன், கோர்ட்டுக்குப் போறது.” ஞானக் கனியின் விதையைத் துப்பியவாறே சாத்தான் கேட்டான்.

“ அதையேன் கேட்கற. கோர்ட்டுக்கும் போனேனே. எங்க போயி என்ன?”

ஜன்னலைத் திறந்து விட்டாள்.

“ ஏன் கோர்ட்டிலும் ஒன்னும் ஆகலையா?”

“ அப்படியும் சொல்லிவிட முடியாது. ஏதேனுக்கு வருஷம் 3 டி.எம்.சி தண்ணி தரனும்னு தீர்ப்புகூட வந்துச்சு.”

“அப்புறமென்ன?”

“அப்புறமென்ன. தீர்ப்புதான் வந்ததேதவிர தண்ணீர் வரலப்பா.”

“ ஞாயமத்துப் போனதா ஏவாள் இந்தப் பூமி?”

சாத்தானின் குரலில் இருந்த ஆதங்கம் ஏவாளை நெகிழச் செய்தது.

“போராடிப் பார்த்தேன் சாத்தான். முடியல. பார்த்தேன், போகட்டும் கழுதைனு மணலை காண்ராக்ட்டுக்கு விட்டுட்டேன்.இப்ப நல்ல வரவு சாத்தான்.”

“ மணல ஏலத்துக்கா? பாவமில்லையா ஏவாள்? சரி ஏதேனின் பால் நரம்பாய் ஓடும் யூஃப்ரத்தீஸ் என்னாச்சு?”

“ பக்கத்து ஊர் சாயத் தொழிற்சால கழிவெல்லாம் கலந்து அது நஞ்சாய்ப் போனது. அது சரி, இது என்ன வந்ததிலிருந்து வாதியார் கணக்கா ஒரே கேள்வியா கேட்டுகிட்டு”

சிரித்துக் கொண்டே சமையலறை நோக்கி நகர்ந்தவள் எதையோ நினைத்தவளாய் அப்படியே நின்றவள் கேட்டாள்,

சரி, சரி, என்ன இது கம்யூனிஸ்டாட்டம் சிவப்பு கலர்ல சட்டை?”

சிரித்தான்.

” ஆமாம், அது என்ன, சிவப்புன்னா அலறறீங்களே எல்லோரும். ஆதிக்கத்த, ஏதேச்சிகாரத்த எதிர்க்கிறவந்தான் கம்யூனிஸ்ட். அப்படிப் பார்த்தா கடவுள் என்கிற ஆதிக்கத்த, ஏதேச்சிகாரத்த மொத மொதல்ல எதிர்த்த நானும் கம்யூனிஸ்ட்தான்.”

“ சரி, சரி, ஒங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? பேசிப் பேசியே என்னப் பழத்தை தின்ன வச்சவனாச்சே.”

“ நீயே சொல்லு ஏவாள், அப்படிப் பேசலைனா நீ பழத்தத் தின்னுருப்பியா? நீ பழத்த சாப்பிடலைனா இப்படி மிடி , சுடி, நைட்டின்னு வித விதமா உடைகளிப் போட இயலுமா? இன்னும் சொல்லப் போனால் உலகத்துல இருக்கிற எல்லா ஜவுளிக் கடைகளிலும் நியாயமாப் பார்த்தா என் படத்ததான் மாட்டி வைக்கனும் தெரியுமா?”

சிரித்தார்கள், சிரித்தார்கள், அப்படிச் சிரித்தார்கள்.

“ சரி சரி , இரு , தேனீர் போட்டுட்டு வரேன்”

சமையலறைக்கு விரைந்தாள்.

ஆவி பறக்க தேனீர் வந்தது கொஞ்ச நேரத்திற்கெல்லாம் .

“ஆமாமாதாம் எங்கே ஏவாள். அவர் எப்படி இருக்கிறார்?”

“அவருக்கென்ன மாடியில் கிடக்கிறார். கிழவனுக்கு பல் போச்சு, சொல் போச்சு, கண் போச்சு, சுவை போச்சு... ஏன், என் மீதுள்ள ஆதிக்கம் தவிர அந்தாளுக்கு எல்லாம் போச்சு.”

“ ஏம்மா ஆதாம் மேல உனக்கு இவ்வளவு சலிப்பு?”

நெட்டி முறித்துக் கொண்டே எழுந்தான்.

“ இது ஆதாம் மேல எனக்குள்ள சலிப்பல்ல சாத்தான்.புருஷங்கமேல பொண்டாட்டிங்களுக்கு உள்ள சலிப்பும் எரிச்சலும்.”

சிரித்தான்.

“ வர வர ரொம்ப நல்லா பேசுற ஏவாள்... ஆதாமக் கேட்டதா சொல்லு”

ஸ்டூலில் அமர்ந்து சுருண்டு கிடந்த ஸாக்ஸை நீவிக் கொண்டிருந்த சாத்தானிடம் ஏவாள் கேட்டாள்,

“அப்பப்ப வரலாம்ல. அல்லது செல்லிலாவது பேசலாம்ல.”

சாத்தான் இடைமறித்தான்,

“அப்படியும் இல்லாட்டி எஸ் எம் எஸ் ஆவது அனுப்பலாம்ல”

சிரித்தார்கள்.

திடீரென எதையோ நினைத்துக் கொண்டவளாய் ஏவாள் கேட்டாள்,

“ ஆமாம் , கடவுளோட செல் எண் இருக்கா?”

“ஏது, கடவுளோட நம்பரெல்லாம் கேட்கிற. ஏதேனும் வேண்டுதலா?”

“வாயப் புடுங்காத ஆமா.அந்தாள்ட்ட ஒரு கேள்வி கேட்கணும். கேட்கணும் கேட்கணும்னே பல யுகங்கள் ஓடியாச்சு.”

“என்ன கேட்கணும்?”

சாத்தான் முகத்தில் ஆர்வம் அப்பிக் கொண்டது.

“ ஏஞ்சாமி, ஆதாம களி மண்ணுல செஞ்சியே. பிறகு ஏன் ஏதேன்ல களி மண்ணே இல்லைனா அவனோட விலா எலும்ப ஒடச்சு என்னைப் படச்சேன்னு கேட்கனும்”

ஆச்சரியத்தில் அப்படியே உறைந்து போனான். ஞானக் கனியை சாப்பிடச் செய்ததன் மூலம் அழகான, மிகவும் இனியவளான ஏவாளை நாசப் படுத்தி விட்டோமோ என்று அவன் அடிக்கடி தன்னையே நொந்துகொள்வது உண்டு. அது தவறு என்று ஏவாளின் கேள்வி உணர்த்தியது.மகிழ்ச்சி எதுக்களிக்க நினைத்தான்,

“இனி சாவதானாலும் நிம்மதியாய் சாகலாம்.”
      

Tuesday, August 14, 2012

நான்கு கவிதைகள்

1

தேடல் நல்லது
தேடலாம்

தேட
எதையேனும்
தொலைக்கலாம்

முதலில்
தொலைக்க எதையேனும்
தேடலாம்

2

மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி
மணமூட்டுகிறாய் எனக்கு தினமும்

புரட்டும் குடலை
அவன்
புகையிலை நாத்தம்

போவேன் அவனுள்தான்
மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உழிபட்ட காயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்பவன்

மட்டுமல்ல
நல்லவன் என்பதாலும்

“பகவானே!
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”

3

கேட்டிருக்கும்
இடங்களிலிருந்து
ஏதேனும் கிடைக்கும்வரை
எப்படியேனும்
தாக்குப் பிடித்துவிடு தாயே
சாகாமல்

4

புரிந்தது
எழுத்து
போலி மருத்துவர்

Sunday, August 12, 2012

நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது

“ திரைப் படம் தொடங்கி பத்து நிமிடங்கள்கூட கடந்திருக்காது.

‘ உங்கள் திரையரங்கில் ஒரு வெடிகுண்டு வைத்திருக்கிறோம். முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’

தொலை பேசி துண்டிக்கப்பட்டது.

‘ இதோ இப்படீங்கறதுக்குள்ளாக’மொத்த அரங்கமும் காலியாகிறது. தீயணைப்புத் துறையினர் வந்து சேர்வதற்குக் கால தாமதமாகும் சூழல். உள்ளே புகுந்து தேடலாம் என்று ஒரு யோசனை வருகிறது. ஆனால் அதை செய்யும் தைரியம் மட்டும் யாருக்கும் இல்லை.

“டேய் டைசா, இங்க வா! உள்ளப் போயி எங்கயாச்சும் குண்டு இருக்கான்னு பாரு.”

டைசன் ஒரு அநாதை. அப்படியே அவனுக்கு ஏதேனும் நிகழ்ந்தாலும் கேள்வி கேட்க யாரும் இல்லை என்கிற தைரியம் எல்லோருக்கும்.

குழந்தை உள்ளே நுழைகிறான். பென்ச்சுகள் அடியில், நாற்காலிகள் அடியில் என்று அங்குலம் அங்குலமாக அலசி எடுக்கிறான். இறுதியாக தீ என்று எழுதிய வாளி மணலில் இருந்தது. கிடாசும் போது வெடித்தது. அப்படியே மயங்கிப் போகிறான். சிறு சிறு காயங்கள்.

யாரும் கண்டுகொள்ள வில்லை. ஒரு ஏழைக் கிழவி அவனை எடுத்துப் போய் மருத்துவம் பார்க்கிறார்.

தேறுகிறான்.

கொஞ்சம் ஆளாகிறான் அனைத்து வகையிலும்.

ஒரு பஞ்சாயத்தில் மூன்று பிள்ளைகளோடு அப்பாவும் இவன் மற்றும் இவன் தம்பியோடு இவன் அம்மாவும் பிரிய, கொஞ்ச நாட்களிலேயே ஒரு அநாதை விடுதியில் இவர்களை விட்டுவிட்டு அம்மாவும் எங்கோ போய்விட..., இவனே இவனது தம்பியையும் திரை அரங்கத்தில் வேலை செய்து காப்பாற்றுகிறான்.

அந்த வெடிகுண்டு சம்பவம் நடந்த பிறகு இவனது தம்பியைப் பற்றியும் தகவல் இல்லை.

இவன் ஆளாகி தேடுகையில் மீண்டும் அவனது குடும்பம் முழுமையும் ஒன்றாகவும் வளமையாகவும் இருப்பதை அறிகிறான்.

அவர்களோடு இருக்க வற்புறுத்துகிறார்கள்.

“ எல்லோரும் இருந்த போதே என்னை அநாதையாக்கினீர்கள். இனி வேண்டாம். நான் அநாதைக் குழந்தைகளோடும் அவர்களுக்காகவுமே வாழப் போகிறேன் என்று முகத்தில் அறைந்துவிட்டு ஒரு அநாதை இல்லம் தொடங்கி மிகுந்த கஷ்டத்தோடு அதை நடத்தி வருகிறார்”

இதைப் படித்தால் ஏதோ ஒரு நாவலின் அல்லது திரைப் படத்தின் மொழிபெயற்புச் சுருக்கம் என்றுதான் தோன்றும்.சத்தியமாய் இல்லை , புதுக்கோட்டை மாவட்டத்தில் “சாராள் இல்லம்” தோழர் டைசன் அவர்களின் கதைதான் இது. தோழர் சுரேகா தனது வலையில் “சாராள் இல்லம்” என்ற பெயரில் இட்ட இடுகையின் சுருக்கம்தான் இது.

அந்தப் பதிவின் இறுதிப் பாரா

“ நம் பதிவர் சமூகத்தால் முடியாதது எதுவும் இல்லை.என் நோக்கமெல்லாம் நாம் ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நம்மால் ஆன கல்வி, உணவு, உடை,உதவிகளைச் செய்ய வேண்டும்.இது நம் நிலைக்கு மிகச் சிறியத் தொகையாகத்தானிருக்கும். இதை நாம் கூட்டாகவும் செய்யலாம்.இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவைத் தந்துவிட்டால் ஒரு குழந்தை தன் வாழ்வை உங்களின் பெயரால் வாழும்.

வாருங்கள் வடம் பிடிப்போம்”

இந்தக் கடைசிப் பகுதி என்னை என்னவோ செய்தது.

பதிவர்கள் நினைத்தால் சேர்ந்தோ தனியாகவோ அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுக்கலாம் என்கிறார். ஆனால் ஒரு பதிவர் நினைத்தால் இணையத்தை எவ்வளவு லகுவாக நல்ல காரியத்திற்குப் பயன் படுத்தாலாமென்பதற்கு சுரேகா ஒரு நல்ல உதாரணம்.

யார் இந்த ஆள் என்று பார்க்கலாமே என்று அவருடைய தன் குறிப்பைப் பார்க்கலாம் என்றபோதுதான்,

“ நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது. நான் அந்த மிருகம். இதோ காடு நோக்கி...” என்று இருந்தது. ‘ ஐ! நம்ம ஜாதி’ என்று மனசு துள்ளியது. நல்ல வேளையாக அங்கே அவரது அலைபேசி எண் கிடைத்தது.

தொடர்பு கொண்டேன்.

ஆச்சரியம் என்னை அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. ஞானாலயா அய்யா அவருக்கு ஏற்கனவே எனது நூலை வாசிக்கக் கொடுத்திருந்திருக்கிறார்.

பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டே இருந்தோம்.

இணையத்தின் மூலம் அதிலும் குறிப்பாக முக நூல் மற்றும் வலைதளத்தின் மூலம் இந்தச் சமூகத்தை நாம் விரும்புகிறமாதிரி புரட்டிப் போட்டுவிட முடியும் என்பதில் என்னை விடவும் உறுதியாக இருந்தார்.

தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறேன். நல்ல விளைவுகளை மட்டுமல்ல ஒரு நல்ல பதிவு இப்படி சில இம்சைகளையும் சேர்த்தேதான் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை அவர் இப்போது உணர்ந்திருக்கக் கூடும்.

why g?
என்று ஒரு பதிவு.

கல்வி வியாபாரிகள் கையில் சிக்கிக் கொள்ளும் போது இடைத் தரகர்கள் என்னவெல்லாம் வேலை செய்வார்கள் என்பதை அழகாக சொல்கிறது.

சமீபத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் இவரது நண்பரின் குழந்தையை சேர்ப்பதற்காகப் போயிருக்கிறார்கள். எப்படியேனும் அந்தப் பள்ளியில் தன் பிள்ளையை சேர்த்துவிட வேண்டும் என்பதில் அவரது நண்பர் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

எப்படியோ ஒரு இடைத் தரகர் மூலம் பெருந்தரகரைப் பார்க்க சென்றிருக்கிறார்கள்.அந்தப் பெருந்தரகரும் அந்தப் பள்ளியின் முதலாளிகளில் ஒருவர்.சிறந்த நடிகர். ஒரு சிறந்த நடிகரின் மகன். ஒரு பெரும் பெரும் பெரும் நடிகரின் சகலையும் கூட.

பெருந்தரகரை நேரில் பார்க்க இயலாது. எதுவாக இருப்பினும் இடைத் தரகர் மூலமே சொல்லி அனுப்ப சொல்கிறார் பெருசு. இடைத் தரகர் போய் வருகிறார்.

”அய்யா பேசிவிடுவார். குழந்தையை தேர்வெழுத சொல்லுங்கள். முடிந்துவிடும். அய்யாவுக்கு 75000 ரூபாய் வேண்டும் “’ என்கிறார்.

தருகிறார்கள்.

பையன் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இடம் மறுக்கப் படவே பெரியவரைப் பார்க்கப் போகிறார்கள்.

இப்போதும் நேரடியாய் சந்திக்க அனுமதி இல்லை. இடைத் தரகர் உள்ளே போய் வெளியே வருகிறார்.

“எண்ட்ரென்ஸ்ல ஃபெயில்னா ஒன்னும் செய்ய முடியாதாம்”

ஒரு வழியாக கிடைக்காத இடத்திற்கு தொலைபேசி செலவிற்கு என்று 6000 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதியை பெறுகிறார்கள்.

இந்தப் பதிவில் அவர் அந்தப் பள்ளியின் பெயரையோ, பெருந்தரகர் யார் என்றோ சொல்லவில்லை. ஆனால் தலைப்பின் வழியும் அந்த பெருந்தரகரின் புகைப் படத்தையும் போடுகிறார். அந்தப் பதிவை இப்படி முடிக்கிறார்,

“இதுபோல் எத்தனை ஆறாயிரம் ரூபாய்களில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?”

இதற்கு பெரிய துணிச்சல் வேண்டும்.

அந்தப் பெரிய தரகரின் தாயார்தான் அரசு கல்வி குறித்து முடிவெடுக்க நியமித்த் குழுவில் இருந்தவர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாய் கிழிய தரமான கல்வி குறித்தும் எப்படியெல்லாம் அர்ப்பணிப்போடு கல்வி சேவை செய்ய வேண்டும் என்றும் கிடைக்கிற ஊடகங்களின் வழி முழங்குகிறவர்.

“யாருன்னு கேட்காமலே சின்னக் குழந்தையும் சொல்லும்”  எஜமானரின், தளபதியின் சகளை. அவரை அம்பலப் படுத்தி ஒரு பதிவை அதுவும் சினிமாத் துறையில் இருப்பவரால் எப்படி போட முடியும்?

 உண்மையைச் சொன்னால் உயிரை உயிலெழுதி கொடுத்துவிட்டு வந்தவனால் மட்டுமே இதை இப்படி எழுத முடியும்.

மிகுந்த கவனத்தோடும் அக்கறையோடும் கட்டப்பட்டு ஏறத்தாழ மூன்று தலைமுறைகளாக படாத பாடுபட்டு காப்பாற்றப்பட்டு வந்த ஒரு குடும்பத்தின் போலியான பிம்பத்தை ஒரே ஒரு பதிவின் மூலம் பொடிப் பொடியாக தகர்த்து எறிகிறார்.

ஒருமுறை வண்ணை வளவன் சொன்னார்,

“எப்போதுமே
என் கையில்
பேணாதான் இருக்கும்
என்று சொல்வதற்கு
நான் ஒன்றும் நீயல்ல
நண்பனே

தேவைப் படும்போது
காலம் தரும் கருவி
என்
வலது கைக்கு வரும்

தானாகவே பேணா
மறைந்து போகும்”

இதற்கு பெயர்தான் மக்கள் எழுத்தாளன் என்பது. மக்களுக்காக எழுதுவதும் தேவைப் படும் எனில் எழுதியதை செயலாற்ற களமிறங்குவதும்தான் நல்ல எழுத்தாளனின் அடையாளமாகும்.

“சுரேகா” நல்லதொரு மக்கள் தளம்.

எழுதுவதோடு நிற்கவில்லை இவர். தனது நண்பர் கேபிள் சங்கரோடு இணைந்து “கேட்டால் கிடைக்கும் ” என்றொரு குழுமத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஏராளம் செய்து வருகிறார்.

NIIT யில் பணம் கட்டி ஏமாந்த பாலாஜி அவர்களது பணத்தை போராடி வாங்கித் தந்திருக்கின்றனர். அதே நேரத்தில் நடந்த விஷயத்தை அம்பலப் படுத்தவும் செய்கிறார் தனது வலை மூலம். படிப்பவர்கள் ஏமாந்து விடாமல் இருக்கலாம்.

எழுதி என்னத்தக் கிழிச்சீங்க? என்று கேட்பவர்களுக்கு தோழர் சுரேகாவின் வலையையும் செயல்பாடுகளையும் திமிறோடு சொல்ல முடியும்.

இவரது வலை ஆக்கப் பூர்வமானது. மட்டுமல்ல நல்ல கருத்துக்களில், உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துவோர் அழகியலில் கவனம் செலுத்த மாட்டார்கள் என்று ஒரு பேச்சு உண்டு. அதையும் உடைத்திருக்கிறார் தோழர் சுரேகா.

மிக அழகான, ஈர்க்கிற வலை இவருடையது.

கலையாயினும் வலையாயினும் மக்களுக்காகவே என்று உரத்து சொல்கிறது “சுரேகா”

பாருங்கள்
http://www.surekaa.com/

Thursday, August 9, 2012

”ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள்”

“சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
 இனிதென மகிழ்ந்தன்றும் இலமே”

இதை கனியன் எழுதி ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்திருக்கும்.

சாவது எங்களுக்கு ஒன்றும் புதிது இல்லை. என்ன செய்தேனும் வாழ்வை நீட்டிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை. சாதல் என்ற ஒன்று இருப்பதை உணர்ந்தே வாழ்க்கையைத் துவக்கினோம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தை வாழ்க்கை என ஏற்பதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பிறப்பிற்கும் சாவிற்கும் இடைப்பட்ட காலத்தில் உருப்படியாய் நம் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறோம் என்பதையே நம் வாழ்க்கையின் அளவாக கொள்கிறோம்.

வாழ்க்கையை, சாவைப் பற்றி வேறெந்தச் சமூகம் இந்த அளவிற்கு யோசித்திருக்கிறது என்று தெரியவில்லை.

“சாதலும் புதுவது இலமே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே”

என்கிற வரிகளுக்கு இப்போது ஒரு தமிழ் இளைஞன் பொழிப்புரையை உண்ணாதிருந்து எழுதிக் கொண்டிருக்கிறான்.

இனவெறி பிடித்ததும், அதன் விளைவாக ஒரு இனத்தை வேரோடு அழித்தொழிக்கும் முயற்சியில் பெருமளவு வெற்றி பெற்றும், அப்படியும் பசி அடங்காமல் மிச்சமிருக்கிற தமிழர்களைக் கொன்றழிக்க தொடர்ந்து முயன்றும் வருகிற இலங்கை அரசு அனுப்பியுள்ள இலங்கை விளையாட்டு வீரர்களை இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க அனுமதிக்கக் கூடாது என்பது அவனது முதல் கோரிக்கை.

அது இந்த நேரத்திற்கெல்லாம் நிறைவேறாது போனது வேறு விசயம்.

ஆனால் அதில் உள்ள நியாங்களை அரைக்காலே வீசம் அளவிற்கு சுய நினைவு இருப்பவனாலும் தள்ளிவிட முடியாது.

இதை அவன் சொல்லும்போதும் அதில் உள்ள நியாயங்களை நாம் சொல்லும்போதும் சொல்கிறார்கள்,

“விளையட்டை விளையாட்டாப் பாருங்க தோழர், விளையாட்டு இணைப்பதற்காக, பிரிக்கிற வேலைக்கான உங்கள் அரசியலை இதில் திணிக்காதீர்கள்,ஆமாம்.”

 நிற வெறியோடு ஆட்டம்போட்டமைக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு விதிக்கப் பட்டிருந்த தடை நியாயம் என்றால் இனவெறியோடு சதிராடும் இலங்கைக்கு எதிராக சிவந்தன் கேட்கும் தடை ஆயிரம் மடங்கு நியாயம் கொண்டது.

ஜூலை மாதம் இறுதியில் ஒரு நாள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த இருபத்தி மூன்று தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை வன்மத்தோடு பிடித்துச் சென்று இம்சித்து சிறை வைத்தது.

இதை எதிர்த்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தது. சமீப காலத்தில் எனக்கு மிக அதிகமாக ஆறுதல் அளித்த ஒரு விசயம் இது. அப்போது இடது சாரிகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியை உச்ச நிலையில் நின்று பல நேரங்களில் தவறாகவும் கொஞ்சம் விசமத்தோடும்கூட எழுதுகிற வழக்கம் கொண்ட “தினமலர்”  “இவரும் ஒரு அரசியல்வாதிதான்” என்று எழுதி அந்தப் போரட்டத்திற்கு ஒரே ஒரு தோழரோடு எந்த வித பந்தாவும் இன்றி மிக எளிமையாக நடந்து வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜி.ராமக்கிருஷ்ணன் அவர்களது படத்திப் போட்டிருந்தது

இந்தப் பத்தியை நான் எழுதியது எனது சொந்த விருப்பத்தின் பொருட்டே ஆகும்.உலகில் நடக்கும் அநீதிகளுக்கெல்லாம் எதிராக எந்த வித தியாகத்தின் விளிம்புவரைக்கும் சென்று போராடுகிற, மிக எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக் காரர்களாகத் திகழக் கூடிய தலைவர்களை உள்ளடக்கிய இந்த இயக்கம் ஈழப்பிரச்சினையை ஒரு இன அழிப்புப் பிரச்சினையாக கையில் எடுக்கவில்லையே என்கிற ஆதங்கம் எனக்கும் உண்டு. மட்டுமல்ல அவர்கள் இதை கையெடுக்கும் பட்சத்தில் இன அழிப்பிற்கெதிரான இயக்கம் வலுப்பெறும் என்றும் நான் நம்புகிறேன்.

அந்த இருபத்திமூன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அத்து மீறி நுழைந்து பிடித்துச் சென்றதற்கு அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடந்த இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா அடைந்த பெரு வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாததன் விளைவுதான் என்றும் சொல்லப்படுகிறது. மட்டுமல்ல இந்தியா தொடரை வென்ற நாளில் இருந்து கடலுக்குள் போகும் மீனவர்கள் மிகுந்த அச்சத்தோடே போவதாகவும் கடலுக்குள் போகும் மீனவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கக் கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஜூலை இருபத்தி நான்காம் தேதி தினகரனில் ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகி சேகர் ‘ இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று கோருகிறார்.

ஏற்கனவே உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதுவது உறுதியானபின் ஒருக்கால் அந்தக் கோப்பையை இலங்கையை வென்றிருக்குமானால் அதை தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்க இருந்தார்களாம்.

நல்ல வேளை தோற்றார்கள். அதன் விளைவு நான்கு தமிழ் மீனவர்களைக் கொன்று குவித்தார்கள்.

இவ்வளவிற்குப் பிறகும் “ விளையாட்டை விளையாட்டாய்ப் பாருங்கள் தோழர்” என்று நம் முன்னே வைக்கப் படும் கருத்துக்களை நம்மால் ஏற்பதற்கு இயலவில்லை.

இதே லண்டனில் இருந்துதான் பேச வரவழைத்திருந்த கூட்டத்தில் பேச வேண்டாம் என்று சொல்லி ராஜபக்‌ஷேவைத் திருப்பி அனுப்பியது இங்கிலாந்து அரசு. மைனஸ் அளவில் இருந்த குளிரையும் தாண்டி தெறித்த தமிழ்த் திரளின் கோவக் கொதி நிலையை அது அங்கீகரித்தது.

ஆனால் ஒலிம்பிக் என்பது இங்கிலாந்து மட்டும் சம்பந்தப் பட்ட ஒரு விஷயமல்ல. அனைத்து தேசங்களும் உள்ளடங்கிய அமைப்பு சம்பத்தப்பட்ட விசயம் என்பதால்தான் அனைத்து தேசங்களின் கவனத்தையும் இது விசயத்தில் ஈர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த இளைஞன் ஏறத்தாழ இருபது நாட்களாக உண்ணாதிருக்கிறான்.

பெரிதாய் எதையும் சாதித்துவிடுவோம் என்ற எந்தவிதமான மிகை நம்பிக்கையும் சிவந்தனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் மிகச் சரியாய் சொல்கிறான்,

“ ஈழமக்களின் பிரச்சினை மீது சர்வ தேசத்தின் கவனத்தைத் திருப்பவே எனது இந்தப் போராட்டம்.”

உலகில் எங்குமே காண இயலாத ஒரு விசயம் இந்தத் தமிழ் இனப் படுகொலைதான். வரலாற்றில் எத்தனையோ இன அழிப்புகளும் இனப் படுகொலைகளும் பதிவாகி இருக்கின்றனதான். ஆனால் இது அவை எதனோடும் சன்னமாகவேனும் பொருந்திபோகாது தனித்திருக்கும் தன்மை கொண்டது. வரலாற்ரில் பதிவாகி உள்ள எந்த இனப் படு கொலாஇயும் இன அழிப்பும் அதன் அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப் பட்டதல்ல. அப்படி தன் சொந்த மக்களையே கொன்றழித்த ராஜபக்‌ஷேமீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரனை நடத்த வேண்டும் என்பது அவனது இரண்டாவது கோரிக்கை.

09.01.2011 அன்று சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ‘பாகுபாடுகள் மற்றும் இனவெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின்’ தலைவர் நிமல்கா ஃபெர்னாண்டோ பேசியதைஅதே மாதம் பதினாறாம் தேதி வெளியான ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்தது. அதை நினைவு கூர்வது இந்த நேரத்தில் அவசியமாகிறது.

“கிழக்கு மாகானத்தில் நல்ல வளங்கள் இருந்த போதும் மக்கள் வேலையின்றி வறுமையில்தான் வாழ்கிறார்கள். இதனால் தமிழ் மக்கள் சொந்த கிராமங்களை விட்டு வெளியேறுகிறார்கள். உடனடியாக, அந்தப் பகுதிகளில் மற்றவர்களைக் குடியமர்த்தி அங்கே இனப் பரப்பல் விகிதத்தை மாற்றி வருகிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில் உருவாகிறது.அதுவும் சீனா போன்ற நாடுகளின் உதவியோடு நடக்கிறது.”

இவர் ஒன்றும் தமிழ்ப் பெண்ணுமல்ல. இன்னும் சொல்லப் போனால் தமிழ் பேசவேத் தெரியாத சிங்களப் பெண். இவர் இப்படிப் பேசி இருபது மாதங்களாகின்றன. இந்தக் காலத்தில் நிலைமை இன்னமும் மோசம் அடையவே செய்திருக்கிறது.

தமிழர் பகுதிகளில் சிங்களவர்களை குடியமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்பதே சிவந்தனின் மூன்றாவது கோரிக்கை.

மட்டுமல்ல தமிழ் யுவதிகளை சிங்கள ஆண்களை விட்டு வன்புணரச் செய்து , அவர்களைக் கர்ப்பமாக்குவதன் மூலமும் இன அழிப்பு வேலையை செய்கிறது சிங்கள அரசு.

முள்ளி வாய்க்கால் பொன்ற வதை முகாம்களிலும் சிறைகளிலும் வாடும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது இவனது நான்காவது கோரிக்கை.

அகதிகளாக வருவோரை கருணையோடும், மனிதாபிமானத்தோடும் உலக நாடுகள் ஏற்க வேண்டும் என்பது அவந்து இறுதி கோரிக்கை.

நியாயமில்லாத எந்தக் கோரிக்கையையும் அவன் முன் வைக்கவில்லை.

உலகச் சமூகமே சாவின் விளிம்பின் விளிம்பு வரைக்கும் உண்ணாது சென்று கொண்டிருக்கும் அந்த இளைய மகனது கோரிக்கையைக் காது கொடுத்து கேள். சரி எனப் பட்டால் வினையாற்று.

போதும் சிவந்தா,

இன்னும் நீண்டு போகவே செய்யும் இந்தப் போராட்டம். போராட உன்னைப் போன்ற இளைஞர்கள் வேண்டும். விரதத்தை முடி.

மீண்டும், தமிழர்களைப் பார்த்து நிமல்கா சொன்னதை நினைவு கூர்வது அவசியம்,

“ நடந்ததை மறந்து விடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது.போரில் அழிக்கப் பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.”







Sunday, August 5, 2012

வீரியமுள்ள ஊர்ப் புறக் கவிதைகள்

“வெயில் நதி” வெளியீட்டு விழா மே மாதம் இருபதாம் தேதியன்று செஞ்சியில் நடந்தது.

இதழ் குறித்துப் பேச வருமாறு இதழின் ஆசிரியர் தோழர் இயற்கை சிவம் அழைத்திருந்தார்.

போயிருந்தேன்.

எண்பதுகளில் காணக் கிடைத்த ஆழமும் அடர்த்தியும் மிக்கதொரு இலக்கியக் கூட்டமாகவே அதைக் கொள்ள முடிந்தது.

சில தோழர்கள் பேசினார்கள்.

தோழர் செஞ்சி தமிழினியன் பேசுவதற்கு முன்னால் சட்டைப் பைக்குள்ளிருந்து எடுத்த ஒரு துண்டுத் தாளை விரித்தார்.

தெரிந்துவிட்டது,

கவிதை.

இப்படி கவிதை வாசிக்கும் ஆர்வமும்கூட எண்பதுகளுக்கான ஆர்வம் என்றும் கொள்வதில்கூட நியாயமுண்டு.

அவர் வாசித்த கவிதை மிகவும் பிடித்துப் போகவே அந்தத் தாளைக் கேட்டேன். பெருந்தன்மையோடு கொடுத்தார். கூடவே தனது “ராக்காச்சி பொம்மை” என்ற நூலையும் கொடுத்தவர் வாசித்து சொல்லுங்கள் சார் என்றார்.

அந்தத் தாளில் இருந்த கவிதையையும் , அந்த நூலிலிருந்த கவிதைகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

முதலில் அந்ததாளில் இருந்த கவிதை,

விளையாட்டின் மீதமறும் சண்டை

மூலை மடியாத
வெள்ளைத் தாளில்
கருப்புப் பூனை வரைந்தாள்
சின்ன மகள்

நேர்த்தியான கண்களில்
மின்னல் ஒழுகியது

உயரமும்
வாலின் அளவும்
அவ்வளவு
கச்சிதமாய் இருந்தது

மடங்கி இருந்ததால்
பின்னங்கால்கள்
சரிவரத் தெரியவில்லை

வீட்டில் இருந்த எல்லோரோடும்
பூனையை
விளையாட விட்டாள்

அவளோடு
விளையாட வந்த லிசாவும்
அதேபோல்
அதே வண்ணத்தில்
பூனை வரைந்தாள்

ஆனால்
கால்களில் இருந்த
நகங்கள்

இவளின் பூனையினும்
கூர்மையாக இருந்தது

இருவரும்
மாறி மாறி
கீறிக் கொண்டு

தனித் தனியே
பிரிந்தார்கள்

இரண்டு பூனைகளும்
அழகாய்
விளையாடிக் கொண்டிருந்தார்கள்

இதை அழகானக் குறியீட்டுக் கவிதையாகவும் கொள்ளலாம். அந்தக் குழந்தைகள் படைத்த பூனைகளோடு மனிதர்கள் படைத்த எவற்றையும் பொருத்திப் பார்க்கலாம்.

குழந்தைகள் பூனைகளைப் படைத்தார்கள். பூனைகள் அன்போடும் இணக்கத்தோடும் மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருக்க பூனைகளைப் படைத்தக் குழந்தைகள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்கள் படைத்த பலவற்றை இதோடு பொருத்திப் பார்க்கலாம் என்றாலும் அவர்கள் படைத்த மதங்களும்ம் கடவுள்களும் மிகவும் பொருந்திப் போவதைப் பார்க்கலாம்.

மனிதர்கள் படைத்த மதங்களும் கடவுள்களும் எவ்விதப் பிணக்குகளுமின்றி இணக்கமாய் இருக்க அவற்றைப் படைத்த மனிதர்களோ அவர்களின் படைப்பின் பொருட்டே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், கொன்று அழிந்தும்...

எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது கவிதை.

“வீட்டைப் பூட்டிவிட்டு
ஊருக்குப் போய்
மீண்டும் வந்தோம்
சில கடிதங்கள் தவிர
வேறு எதுவும்
வந்ததாகத் தெரியவில்லை
உற்றுப் பார்த்தேன்

உள்ளேயிருந்து வெளியேயும்
வெளியேயிருந்து உள்ளுமாய்
வரிசையாய் எறும்புகள்
பூட்டுகளைப் பொருட்படுத்தாமல்”

நிறையப் பேசுகிறது இந்தக் கவிதை.

வார்த்தைக்கு வார்த்தை இந்தக் கவிதையை பொழிப்புரைத்தால்,

கதவை பூட்டி மூன்று நான்குமுறை பூட்டை இழுத்துப் பார்த்து மனது திருப்தியானபின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு வீடு வந்து கிரில் கதவிற்குள் எட்டிப் பார்த்தால் கடிதங்கள் கிடக்கின்றன என்பதைத் தவிர நல்ல வேலையாக வேறு யாரும் வந்ததற்கான சுவடுகள் இல்லை என்கிற நிம்மதி ஒருபுறம் எனில், கதவின் கீழ் இருக்கும் சன்னமான சந்தில் எந்தப் பூட்டைப் பற்றியும் துளியும் சட்டை செய்யாமல் “ போங்கப்பா , நீங்களும் உங்கள் பூட்டும்...” என்று ஏளனித்துக் கொண்டே சாரை சாரையாய் உள்ளேயும் வெளியேயும் போகிற அழகு.

சாரை சாரையாய் ஊறும் எறும்புகளே கவிதைதான்.

இதையே குறியீடாகக் கொண்டால்,

 உள்ளே இருப்பதை சாகும் வரைக்கும் வெளியேற விடாமல் பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், வெளியே இருந்து தேவை இல்லாத எதுவும் உள்ளே போய்விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்ர்வோடும் மனசை இழுத்து எப்படித்தான் இருக்கிப் பூட்டி வைத்தாலும் எதையும் மீறி மந்திலிருந்து ஏராளம் வெளியேறிக்கொண்டும் ஏராளம் உள் புகுந்துகொண்டும்தான் இருக்கின்றன என்று ஆகும்.

முதல் பகுதியை நீக்கிவிட்டு,

“உள்ளேயிருந்து வெளியேயும்

வெளியேயிருந்து உள்ளுமாய்
வரிசையாய் எறும்புகள்
பூட்டுகளைப் பொருட்படுத்தாமல்”


என்பதை மட்டும் கொண்டால் கவிதையின் உசரம் இன்னமும் கூடும் என்று தோன்றுகிறது.

“என் இரண்டு குழந்தைகளும்
மனைவியும்
உட்கார்ந்திருந்தார்கள்
செல்லமே எனக் கூப்பிட்டேன்

மூவருமேதிரும்பினார்கள்
யாரைக் கூப்பிட்டேன்
கடைசிவரை சொல்லவில்லை”

பொதுவாகவே குழந்தைகளைக் கொஞ்சுவதே அருகி வருகிற காலம் இது. கொஞ்சுவது போகட்டும், சனியனே, பிசாசே, மூதேவி என்றெல்லாம் குழந்தைகளை கூப்பிடாமல் இருந்தாலே தேவலாம் என்றுகூட தோன்றுவது உண்டு.

ஆனால் கவிஞரோ குழந்தைகளை “செல்லம்” என்று விளிக்கிறார். குழந்தைகள் மட்டுமல்ல குழந்தைகளோடு அமர்ந்திருந்த கவிஞரின் மனைவியும் திரும்பிப் பார்க்கிறார்.

ஒன்று,

இரண்டு குழந்தைகளுக்குப் பிறகும் மனைவியை “செல்லம்” என்று அழைக்கிற காதலும் அன்பும் இன்னமும் இவரிடம் மிச்சமிருக்க வேண்டும்.

அல்லது,

தனது குழந்தைகளில் ஒருவராகவே தனது மனைவியை பாவிக்கிறவராக இருக்க வேண்டும்.

எதுவாயிருப்பினும் அதற்காகவே இவரை கொண்டாட வேண்டும்

சந்தை, திருவிழா போன்ற நம் மண்ணின் தொன்மம் சார்ந்த விழுமியங்கள் இவரது கவிதைகளில் ஆழமாய் விரவிக் கிடக்கின்றன.

பௌடர் பூசாத புழுதிக் கிராமங்களில் திருவிழாவும் கூத்தும் இரண்டறக் கலந்தவை. பௌடர் பூசாத புழுதிக் கிராமங்களிலும் திருவிழ்ழ்க் கூத்துப் பார்க்க பௌடர் பூசிக் கொண்டு போகும் கிழவன் கிழவியைப் பற்றி ஒரு கவிதை பேசுகிறது.

“முற்றத்தில்
சேறு பூசிய கலப்பை

ஆடும் மாடும் அருகில்
மூத்திர நாற்றம்

காதுக்கு அருகில்
கொசுவின் அதட்டல்கள்

கோணிப்பை மார்புவரைப்
போர்வையாக
வீரியமில்லாத
விதை நெல் உரலில்

பக்கத்து ஊரில் திருவிழா

பாட்டியும் தாத்தாவும்
பவுடர் பூசிக்கொண்டு
கூத்துப் பார்க்கப் போனார்கள்”

திருவிழாவில் சாமி வந்த பாடில்லை. மக்கள் கூத்தில் லயித்து விடுகிறார்கள்.  அப்போது பார்த்து சாமி வருவதாய் யாரோ சொல்ல ஒருவர் சொல்கிறார்,

“கூத்து ஆரமிச்சு
பொம்பள வேசமே வந்திடுச்சி
இப்ப போயி
சாமி வந்து என்ன செய்ய?”

அதானே கூத்து ஆரம்பித்து பொம்பள வேசமே வந்த பின்பு சாமி எதுக்கு வரணும்?

“ஒவ்வொரு முறையும்
பசுமலைத் தேரில்
புதுசு புதுசாய்
உண்டியல் வாங்கி வருவோம்
இன்று வரை யாரும்
நிறைக்கவில்லை”

கிராமத்து சம்சாரிகளின் பொருளாதார வாழ்நிலையை எவ்வளவு எதார்த்தமாய் சொல்ல முடிகிறது இவரால்.

குழந்தைகள் பரிசுத்தமானவர்கள். அவர்கள் எதையும் அதுவாகவே பார்க்கிற உன்னதம் உள்ளவர்கள். இருப்பதன் மேல் சேறு பூசியோ அல்லது சந்தனம் பூசியோ பரிசீலிக்கிற பச்சோந்தித் தனம் அவர்களிடம் இல்லை.

அவர்களைப் பொருத்தவரை ஒரு மனிதன் என்றால் அவன் மாமாதான். ஒரு மனுஷி என்றால் அத்தைதான். அதற்குமேல் இந்துவாகவோ இஸ்லாமியனாகவோ,செட்டியாராகவோ, பிள்ளையாகவோ பார்க்கத் தெரியாது அவர்களுக்கு.

அவர்களுக்கு ஐந்து ரூபாய் பொம்மையும் பொம்மைதான், ஐயாயிரம் ரூபாய் பொம்மையும் பொம்மைதான். சின்னது பெரிது தவிர வேறு எதுவும் புலப்பப்பட்டு குழப்பாத அற்புத உலகம் அவர்களுடையது. கவிஞர் அவரது குடும்பத்தோடு பொம்மையை வாங்கப் போகிறார். யார் யார் பொம்மையை எப்படி எப்படிப் பார்க்கிறார்கள் பாருங்கள்,

“என்னங்க
என்ன வெல இருக்கும்”

இது மனைவி. அவருக்கு எந்த பொம்மை வாங்குவது என்பதை அதன் விலைத் தீர்மானிக்கிறது.

“”எதுக்குடா
இவ்வளவு விலையில

பாத்து
செலவு செய்ப்பா”

இது அப்பா அல்லது அம்மா. அவர்களுக்கும் மகன் அதிகமாய் செலவு செய்து கடனாளியாகக் கூடாது.

“எனக்கு சின்னது
பாப்பாவுக்கு மட்டும்
பெரிசா?”

குழந்தைகள் உலகம் கபடமற்றது.அது அப்படியே நீடித்து விடக் கூடாதா?

இந்தக் கவிதையையும் இந்த இடத்தில் நிறுத்தி விட்டாலே எல்லாம் புரிவதாகவேப் படுகிறது.

பன்னாட்டு முதலைகளுக்கு மடை மாற்றம் செய்யபடாமல் சுயமாக மூச்சு விட்டுக் கொண்டிருப்பவை இன்னமும் எஞ்சியிருக்கிற சில கிராமத்து சந்தைகளே.

எங்கள் கிராமத்து சந்தைகள்தான் இன்றைய பன்னாட்டு ஷாப்பிங் மால்களுக்கு முன்னோடி. உடைந்த தக்காளி முதல் அன்றையப் பெரு வாகனமான மாட்டு வண்டி வரை ஒரே இடத்தில் சந்தைப் படுத்தியவன் தமிழன்தான். இதைப் பார்த்துதான் மேட்டுக் குடி வர்க்கமும், படித்த வர்க்கமும் ஒரே கூரையிகீழ் எல்லாம் என்று அலங்காரம் செய்தன. ஆனால் கூரையே இல்லாது வானத்தின் கீழ் அனைத்தையும் சந்தைப் படுத்தியவன் ஆதித் தமிழன்.

அவர்களது ஷாபிங் மால்களில் ஏழைகள் வாங்க எதுவும் இல்லை. ஆனால் எங்கள் கிராமத்து சந்தையில் எங்களுக்கும் வாங்க பொருள்கள் உண்டு.

தமிழினியன் ஒரு கவிதையை இப்படி முடிக்கிரார்,

“அரிவாள் மண்வெட்டி களக்கட்டு
பழையத் துணி பூட்டு சாவி மளிகைசாமான்
கம்மங்கூழ் ஊறுகாய் முதல்
உடைந்த தக்காளி
சொத்தைக் கத்தரிக்காய் வரை

எங்களுக்கு வேண்டியவை
எல்லாமே கிடைக்கும்”

பாசுமதி சாப்பிடுபவர்களைப் பற்றியே பாடுபவர்கள் இருக்கும்போது குருணை வாங்கிக் கஞ்சிக் காய்ச்சுபவர்களைப் பற்றிய இவரது அக்கறை அவரிடம் நமக்குள்ள மரியாதையைக் கூட்டுகிறது.

இந்த நூலுக்கான மதிப்புரையில் அய்யா பழமலய் அவர்கள் இப்படி சொல்கிறார்,

“ஆழ உணர்வதும் உணர்த்துவதும்தான் கவிதை”

செஞ்சி தமிழினியன் ஆழ உணர்ந்து ஆழ உணர்த்துகிறார்.

இவற்றை வீரியமுள்ள ஊர்ப்புறக் கவிதைகள் என்று அறிவுமதி சொல்வதை நான் வழிமொழிகிறேன்.

”ராக்காச்சி பொம்மை”
கவிதை நூல்

நறுமுகை
29/35 தேசூர் பாட்டை,
செஞ்சி
விழுப்புரம் மாவட்டம்---604202

தமிழினியனின் அலைபேசி எண் 9578612544







Wednesday, August 1, 2012

வறண்டாலும் வாழி காவேரி

“ காவிரியைக் கடக்க
ஓடங்கள் தேவையில்லை
ஒட்டகங்களே போதும்”

என்று ஒரு முறை தோழர் தணிகைச் செல்வன் எழுதினார்.

“விற்பதற்கு 
சிலம்பிருந்த காரணத்தினால்
என்னை விற்கவில்லை
கோவலனின் 
குணம் புரிந்ததா?”

என்று கண்ணகி சொல்வதாய் தோழர் எழுதியபோது எவ்வளவு கொண்டாடினோமோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இதற்கும் கொண்டாடி மகிழ்ந்தோம். எங்கள் தோழர் எதை எழுதினாலும் அது இப்படித்தான் கொண்டாட்டத்திற்கு உரியதாகவே இருக்கும். “எங்கள் தோழர் தோழர் எழுதி எது தவறாய்ப் போகும்?” என்ற திமிறே உண்டு எங்களுக்கு.

ஆனால் எங்கள் செம்மாந்தத் திமிரில் மண் அள்ளிப் போட்டார்கள் மணல் கொள்ளையர்கள்.

 காவிரியைக் கடக்க ஓடமா? என்று சிலர் நக்கலாய் சிரிக்கக் கூடும். ஆனால் உண்மை அதுதான். நானே சிறு பிள்ளையாய் இருந்த பொழுது குளித்தலையிலிருந்து முசிறிக்கு பரிசலில் போன அனுபவம் உண்டு. இவ்வளவு பாலங்கள் இல்லாத காலத்தில் ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு போவதற்கு ஓடங்களே பயன் பட்டன.

ஆனால் அதற்கு ஆற்றில் தண்ணீர் வர வேண்டும். கர்நாடகத்து நதி அரசியல் கறைபட்டு போனதிலிருந்து காவிரியில் தண்ணீர் வராது வறண்டு கிடந்த மணல்பரப்பாய் காவிரி காட்சியளித்தபோது அது தந்த வலியை தனக்கே உரிய எள்ளலோடு தணிகை அப்படி எழுதினார்.

அன்றைக்கு காவிரியில் தண்ணீர் இல்லை. எனவே காவிரியைக் கடக்க ஓடங்கள் தேவைப் படவில்லை. கொதிக்கும் மணல் பரப்பைக் கடக்க ஒட்டகங்கள்தான் பொருத்தமாகப் பட்டது.

ஆனால் இன்றைக்கு அவரது கவிதையையும் பொய்யாக்கிக் காட்டினார்கள் இந்தச் சண்டாளர்கள். “ஒட்டகங்களே போதும் ”  என்று அவர் எழுதிய காலத்தில் காவிரியில் மணல் இருந்தது. மணலே இல்லாமல் கட்டாந்தரையாக காவிரி காட்சியளிக்கும் போது ஒட்டகம் எப்படிப் பொருத்தமாய்ப் போகும்.

  நானும் கூட ஒரு முறை,

“யாரது
ஆடிப் பெருக்கன்று
நடுக்காவிரியில்
ஊற்று தோண்டுவது?”

என்று ஆடிப் பெருக்கன்றும் நீரற்றுக் காட்சியளித்த காவிரி தந்த வலியை எழுதினேன். இன்று ஊற்றுத் தோண்டுவதற்கு காவிரியில் மணலேது? கிணறு வேண்டுமானால் காவிரியில் வெட்டலாம். இப்படியாக என் கவிதையும் பொய்த்துப் போனது. என் கவிதை பொய்த்துப் போனதில் எனக்கொன்றும் வருத்தமெல்லாம் இல்லை. தணிகைக் கவிதையே சாலையைக் கிழித்துப் பறக்கும் மணல் லாரிகளில் நசுங்கும் போது என் கவிதை எம்மாத்திரம்?

எவ்வளவு முயன்றும் கவிதை முழுமையாக சரியாக நினைவிற்கு வரவில்லை. எழுதிய திருவைக் குமரனையும் அலை பேசியில் பிடிக்க இயலவில்லை. 

மணல் காற்றில் பறக்கக் கூடாது என்பதற்காக லாரி மணலில் நீர் ஊற்றுவார்கள். அப்படி ஊற்றப்பட்ட தண்ணீர் போகிற வழியெங்கும் சாலையில் கசிந்து கொண்டே போகும். அந்த நீரின் கசிவை திருவைக் குமரன் “ நதியின் கண்ணீர்” என்பார். ஏனடா கழிசடைகளே என் மணலை கொள்ளையடிக்கிறீர்கள் என்று கதறும் நதியின் கண்ணீராக அது அவருக்குப் பட்டிருக்கிறது.  

ஆடி மாதத்து தமிழ் நாட்டுக் காவிரியை இளங்கோ வர்ணிப்பார்,

“உழவர் ஓதை
மதகோதை
உடை நீர் ஓதை
தன் பதங்கொள் விழவர் ஓதை
சிறந்து ஆர்ப்ப 
நடந்தாய் வாழி காவேரி”

தமிழ் பூமிக்கு வருகிற காவிரியை தமிழகத்து விவசாயிகள் பெரும் சந்தோசக் கூச்சலிட்டும் பெண்கள் குழவி ஒலியோடும் வரவேற்க, மதகு தாண்டி வரும் நீர் மகிழ்ச்சியாய் சளசளவென்று சத்தமிட்டு நடந்து வரும் காவேரி என்கிறார் இளங்கோ.

எவ்வளவு பெரிய விஞ்ஞானக் கூற்று இது. நதி நீர் நடக்க வேண்டும் .ஓடக்கூடாது. னதி நீர் பைய நடந்து போகும் பூமிதான் வளப்படும்.. பயிர் செளிக்கும் , நிலத்தடி நீர் செழித்தோங்கும். ஓடுகிற நீர் விரந்து கடலில் போய் தனது கதையை முடித்துக் கொள்ளும். பூமியும் செழிக்காது நிலத்தடி நீரும் உயராது.

இளங்கோ காலத்தில் நடந்த காவேரி ஓடும் காவேரியாய் மாறி இப்போது வறண்ட காவேரியாய் மாறியிருக்கிறது.  நடந்த காவேரி ஓடும் காவேரியாய் மாற மணல் கொள்ளையே காரணம். நீரும் மனிதன் போலத்தான், மணலில் ஓட முடியாது. 

ஒலிம்பிக்கோ, ஆசிய விளையாட்டுப் போட்டிகளோ, எதுவென்று சரியாய் நினைவில்லை அப்போதைய அமைச்சர் காளிமுத்து அவர்கள் எழுதினார்,

“சடு குடு போட்டி 
நடத்த இடம் தேடி அலையாதீர்
இங்கே அனுப்புங்கள்
நீரா இருக்கிறது
 மணல்தானே காவிரியில்” என்று

இப்போது காவிரியில் சடுகுடுவும் விளையாட இயலாது.

ஆடிப் பெருக்கன்று காவிரிக்கு வரும் புது மணத் தம்பதிகள் நீராடி மகிழ்ந்தார்கள். பிறகு ஊற்று தோண்டி தலையில் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொண்டார்கள். 

இனி ஆடியில் காவிரியில் நீராட வரும் புது மணத்தம்பதிகள் குடங்களில் நீரெடுத்து வர வேண்டியதுதான்.

இன்று ஆடி 18.

நமக்கு கிடைத்த வாய்ப்பு நம் பிள்ளைகளுக்கு இல்லை. இரண்டு மோசமான சக்திகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. 

ஒன்று,
கர்நாடகாவோடு நீருக்காய்

இரண்டு
மணல் கொள்ளையை எதிர்த்து

இதை செய்யாது போனோமெனில் ஆடி 18 கும் ஏப்ரல் ஒன்றிற்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது.

  

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...