Friday, May 29, 2015

அதற்கென்ன செய்யலாம்?

கப்பலா, படகா, இல்லை படகுக் கப்பலா? அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை. பசி, தாகம், அழுகை, கதறல், உயிரின் வாதை போன்றவைகளால் நிரம்பிக் கசிகிறது அது. எந்தக் கரையிலும் இரக்கமேயில்லை.
எரிபொருள் இருக்கும் வரை இயக்கலாம் அதனை. பிறகு, அலைகள் இழுக்கும் திசை இழுபட அனுமதிப்போமா?
கடவுள்கள் இல்லை. ஒருக்கால் அப்படி யாரேனும் இருப்பின் இத்தனை கொடுமைகளையும் வேடிக்கை பார்த்தமைக்காக அவர்களைக் கொன்று போடலாம்.
எந்த மெசையாவும், அவதாரமும், தூதரும் எதுவும் செய்துவிட இயலாது.
நமது அரசாங்கங்களை தலையிடவும் தடுத்து நிறுத்த அந்த அரசை நிர்ப்பந்திக்கவும் நிர்ப்பந்திப்போம்.
அதற்கென்ன செய்யலாம்?

இடைத் தங்கல்

பதறி விடாதீர்கள்.,
விவசாயிகளுக்கான சேனலைத் தொடங்கி வைக்கத்தான் வந்திருக்கிறார்.
ஒரே ஒரு வார ஓய்வுக்குப்பின் புறப்பட்டு விடுவார்

அவர் ரொம்ப நல்லவர்.

சென்ற ஆண்டு இதே நாளில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் திரு கார்மேகம் அவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். பேசிக்கொண்டிருந்தாலும் கவனம் முழுக்க அவர் மேசையிலிருந்த ஒரு புத்தகத்தின் மீது இருப்பதைக் கவனித்தவர்
"முரட்டு வாசகனுக்கு" என்றெழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.
திருடுவதற்கான வாய்ப்பை எனக்கு ஒருபோதும் தருவதில்லை அவர்.
அவர் ரொம்ப நல்லவர்.

Thursday, May 28, 2015

கவிதை 32

பேதமெல்லாமில்லை
எந்த சாமிக்குக் கொடுத்தாலும் சரி
எங்கள் தொகுதியை
கொடுக்கும் கட்சிக்கு என் வாக்கு
வட்டம், சதுரம், நகரமெல்லாம்
புடைசூழ
வாக்குக் கேட்கவேனும் வருமே
ஏதேனுமொரு தெய்வம்
எங்கள் தெருவிற்கும்

Wednesday, May 27, 2015

இளைய திரள் அதற்கெங்களை....

கேட்டுவிட்டார்களே என்பதற்காக வழங்கப்படும் புத்தக அணிந்துரைகள் மிக அதிகம். ஏதாவது அணிந்துரை என்ற பெயரில் போட்டாக வேண்டுமே என்பதற்காக பெறப்படும் அணிந்துரைகளும் இல்லாமல் இல்லை. அணிந்துரை இல்லாமல் நேரடியாக வாசகனை அணுகும் புத்தகங்களும் இருக்கவே செய்கின்றன. புத்தகங்களை முழுமை அடையச் செய்யும் அணிந்துரைகள் நிறைய இருக்கின்றன. புத்தகக்களின் முக்கியமானதொரு உறுப்பாகவே அவை மாறிவிடும்.
அப்படியான மூன்று அணிந்துரைகளை அவ்வப்போது நான் அசைபோடுவது உண்டு.
• தோழர் சுபவீரபாண்டியன் அவர்கள் எழுதிய “பகத்சிங்கும் இந்திய தேசிய காங்கிரசும்” என்ற நூலுக்கான தோழர் இளவேனில் அவர்கள் எழுதிய முன்னுரை. ( நூலின் தலைப்பு இந்திய தேசிய அரசியலும் என்று இருப்பதற்கான வாய்ப்பும் உண்டு. இதுவரை ஏழுமுறை அந்த நூலை வாங்கியிருப்பேன். களவு போய்விடுகிறது.)
• “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற எனது நூலுக்கு தோழன் கோ.வி. லெனின் எழுதிய முன்னுரை. லெனினுடைய அந்த முன்னுரையை எடுத்துவிட்டால் அந்த நூல் ஊனப் படும் என்பதே எனது அபிப்பிராயம்.
• தோழர் இரா.சுப்பிரமணி அவர்கள் எழுதிய “இந்தியாவில் நெருக்கடி நிலை” என்ற நூலுக்கு தோழர் S.V.ராஜ்துரை அவர்கள் எழுதிய முன்னுரை.
தோழர் இளவேனில் அவர்களின் “கவிதா”வை எவ்வளவு மதிக்கிறேனோ அதில் கொஞ்சமும் குறையாமல் தோழர் சுப வீரபாண்டியன் அவர்களது நூலுக்கான அவரது முன்னுரையையும் மதிக்கிறேன். அந்த நூலைப் படித்துவிட்டு அழுததாக இளவேனில் அதில் சொல்வார். அந்த முன்னுரையே என்னை அழ வைத்திருக்கிறது.
எந்து நூலுக்கானதோழன் கோ.வி.லெனினது அணிந்துரையைப் பற்றி சொல்லவேண்டுமெனில் அந்த நூலின் ஆகச் சிறந்த பக்கங்கள் அவரது அணிந்துரைப் பக்கங்கள்தான்.
தோழர் இரா.சுப்பிரமணி அவர்களின் “இந்தியாவில் நெருக்கடிநிலை” நூலுக்கான தோழர் எஸ்.வி.ஆர் அவர்களின் அணிந்துரையைப் பற்றி சொல்லி மாளாது. பிரிட்டிஷ் இந்தியாவின் அடக்குமுறைச் சட்டங்களை, அதன் விளைவுகளை, அதற்கான அன்றைய காங்கிரசின் எதிர் வினையை, அதன் போராட்டங்களை, சுதந்திரத்திற்குப் பிறகு அதே காங்கிரஸ் தான் எதிர்த்துப் போராடிய அதே சட்டங்களை கையெடுத்து அதை முன்னைவிடவும் அதிகமாய் கூர் படுத்தியது போன்றவற்றை மிக அழகாக நமக்கு எளிதில் புரிகிற மாதிரி பாடம் நடத்துகிறது.
நேரு அவர்களின் உண்மையான முகத்தை, ராஜாஜியின் கோரப் பகுதியை, இந்தியாவிற்கென்று சட்டங்கள் ஏற்பட்ட பின்பு ஏன் பழைய பிரிஷ் இந்தியாவின் கொடூரச் சட்டங்களைத் தொடர வேண்டும் என்று சட்ட சபையில் பேசிய தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் அதற்கு அடுத்த ஆறே மாதங்களில் இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடிய தமிழர்கள் மீது பிரிவு 120எ, மற்றும் பிரிவு 120பி ஆகியவற்றைப் பிரயோகித்து அவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று ஏசி அசிங்கமாக அம்பலப் பட்டு நின்றது என்று பலவற்றை பேசுகிறது.
”சமத்துவம் என்னும் பிரச்சினையை அருவமான முறையில் அல்லது பெயரளவுக்கு முன்வைப்பது முதலாளிய ஜனநாயகத்தின் இயல்பு. பொதுவான தனிமனிதச் சமத்துவம் என்னும் வேடத்தின்கீழ் முதலாளிய ஜனநாயகம், சொத்து உடமையாளர்களுக்கும், பாட்டாளிகளுக்கும், சுரண்டுபவனுக்கும், சுரண்டப் படுபவனுக்கும் உள்ள பெயரளவு அல்லது சட்டரீதியான சமத்துவத்தைப் பிரகடனப் படுத்துகிறது. இவ்வாறு அது ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை அப்பட்டமாக ஏமாற்றுகிறது”
என்கிற தோழர் லெனின் அவர்களது முதலாளித்து ஜனநாயகம் குறித்த கருத்தினை அவர் பொறுத்தமான இடத்தில் அவர் மேற்கோள் காட்டியது இந்திய நாடாளுமன்ற ஜனநாயத்தோடு நெருக்கமாகப் பொருந்திப் போவதை உணர முடிகிறது.
உலகின் ஆகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதிலோ ஜனநாயகத்தின் கனிகளை அது எந்தக் குடிமகனுக்கும் முற்றாக அது நிராகரிப்பதில்லை என்பதிலோ நமக்கு முற்றாக முரண்பாடுகள் இல்லை.
இந்த அளவுக்கேனும் பேச முடியுதுன்னா அது ஜனநாயகத்தோட பலன்தான் என்றும் பலர் சொல்லும்படியான சூழல் பல நேரங்களில் வாய்க்கிறதென்பதும் உண்மைதான்.
”பெரிய மந்திரியாயிட்டாப்ல என்ன கொம்பா மொளச்சிருக்கு. எப்பேர்பட்ட கொம்பனாயிருந்தாலும் அவனுக்கும் ஒரு ஓட்டுதான், இந்த ஒட்டுக் குடிசையில் இருந்தாலும் எனக்கும் ஒரு ஓட்டுதான் என்று கிராமத்தில் இருக்கும் எழுதப் படிக்கத் தெரியாத பாமர மனிதன்கூட சொல்வதை பலநேரம் கேட்டிருக்கிறோம்.
“எவனாயிருந்தா என்ன எலக்ஷன் வந்தா ஓட்டுக்கேட்க என் வீட்டு வாசப்படிய மிதிச்சுதானே ஆகனும்” என்கிற மாதிரி ஏசாத வாக்காளனே இல்லை எனலாம்.
ஒரு பக்கம் மேலோட்டமாகப் பார்த்தால் இது எவ்வளவு சரி என்பது மாதிரித் தோன்றும். ஆமாம், அவனுக்கும் ஒரு வாக்கு எனக்கும் ஒரு வாக்கு என்பதாகத் தோன்றும். அவனுக்கும் ஒரு டிக்கட் எனக்கும் ஒரு டிக்கட்தான் என்பதில் ஆகா இருவரும் சமம்தானே என்றுகூட நினைக்கத் தோன்றும்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் வாக்குச் சமநிலை என்பது வாழ்க்கைச் சமநிலை ஆகாது என்பது புரியும்.
அவனுக்கான வாக்கு நமது வாக்கோடு சமப் படுகிறது. அவனது உறைவிடம் நமது உறைவிடத்தோடு பொருந்திப் போகிறதா? என்று பார்த்தால் அவனது செல்ல நாய்க்கான உறைவிட வசதிக்கே நாமின்னும் ஏழேழு ஜென்மம் எடுக்க வேண்டும் என்ற எதார்த்தம் பிடி படும்.
அவனது குழந்தைகளுக்கான கல்வியும் நமது குழந்தைகளுக்கான கல்வியும், அவனுக்கான மருத்துவமும் நமக்கான மருத்துவமும், அவனுக்கான போக்குவரத்தும் நமக்கான போக்குவரத்தும் சமமாகாத போது வாக்குச் சமநிலை என்பது நமது வாக்கினை விலைக்கு வாங்கக்கூடிய வல்லமையை அவனுக்குத் தரவே செய்யும்.
சமமான வாழ்க்கையோடு கூடிய வாக்குச் சமநிலையே வாக்குகளை விலைபொருளாவதிலிருந்து தடுக்கும்.
ஆக, வாக்குகளின் மூலம் நல்ல மக்கள் அரசு வரவேண்டும் என்பதற்கான நிபந்தனையே சமமான வாழ்க்கைதான்.
நமக்கு நல்ல மக்கள் அரசு வேண்டும்.
அதற்கு மக்களின் வாழ்க்கை சமப்பட வேண்டும்.
அதற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும்.
இளைய திரள் அதற்கெங்களை வழிநடத்தும்.

Monday, May 25, 2015

எனக்கும் சேர்த்துதான்

”ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்”
ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு மட்டுமல்ல. எனக்கும் சேர்த்துதான் கிழவி சொன்னது

Sunday, May 24, 2015

குட்டிப் பதிவு 42

விடுமுறை முடிந்து பள்ளி வரும் ஆசிரியர்களிடம் ஆளுக்கொரு தாளைக் கொடுத்து விடுமுறையில் அவர்கள் வாசித்த நூல் குறித்து ஒரு கட்டுரை கேட்டால் எப்படி இருக்கும்

Saturday, May 23, 2015

ரசனை 08




”பள்ளிக்கூடத்துக்கு பீஸு கட்டலபா” என்ற
குழந்தையின்
தலையை வருடியபடியேயான
அவனது தவம்
ஒரு இழவிற்காக
என்ற தேவதா தமிழ் அவர்களின் வெட்டியானின் வலி குறித்த இந்தச் சின்னக் கவிதையை வாசித்ததிலிருந்து வலித்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு ஐந்து வரிக் கவிதை பரட்டைத் தலையோடு சட்டையற்ற கிழிந்த டவுசர் மேனியினனான ஒரு ஏழைச் சிறுவனை, அவனது ஏக்கத்தை, அழுக்கப்பிய கிழிந்த வேட்டிக்காரத் தந்தையின் இயலாமையை வருடலை கண் முன்னே காட்சிப் படுத்துகிறது.
வாழ்த்துக்கள் தோழர்.

கலகல



மதுரையில் நடந்த “கல கல வகுப்பறை” பயிற்சியில் பங்கு பெற்ற ஆசிரியத் தோழர்களோடான உரையாடல்.
எது கல்வி என்பது குறித்தும், வகுப்பறை கல கலவென்றிருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தொடங்கி,
வகுப்பறை கல கல என்றிருக்க வேண்டுமெனில் அது சுயநிதிப் பள்ளியாக இருக்க இயலாது என்பதையும், ஒரு வகுப்பு கல கல என்றிருக்க வேண்டுமெனில் அந்த வகுப்பு அவனது தாய் மொழியில் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசிவிட்டு வந்தேன்.
மகிழ்ச்சியாய்த் தானிருந்தது.

Friday, May 22, 2015

தமிழிலும் கொஞ்சம்....

அது இசைக் கச்சேரிகளில் தமிழிலும் பாடவேண்டும் என்று கல்கி, ராஜாஜி, அண்ணாமலைச் செட்டியார் போன்றவர்கள் போராடிக் கொண்டிருந்த நேரம்.

இதற்காக ஒரு இயக்கமே கட்டி இந்த நியாயமான கோரிக்கைக்காக ஊர் ஊராய் மாநாடுகளை நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்திருக்கிறது. அதுவும் அப்படி ஒன்றும் இவர்கள் கச்சேரி முழுவதையும் தமிழில் கொடுங்கள் என்றும் கேட்கவில்லை. கச்சேரிகளில் கொஞ்சம் தமிழையும் பாடுங்கள் என்ற அளவில்தான் இவர்களது இறைஞ்சல் இருந்திருக்கிறது. 

கேட்டவர்களைப் பார்த்து அவர்கள் புத்திசாலித்தனமாய் கேட்டிருக்கிறார்கள்,

“ சங்கீதத்திற்கு ஏது பாஷை? பாஷையே தேவைப் படாத சங்கீதத்தை தமிழில் பாடவேண்டும் என்று ஏன் அழிச்சாட்டியம் செய்கிறீர்கள்?”

கல்கி கேட்டிருக்கிறார்,

“ பாஷையே இல்லாத சங்கீதத்தை தமிழில் பாடக்கூடாது என்பதிலும் தெலுங்கில்தான் பாடவேண்டும் என்றும் ஏன் சொல்கிறீர்கள்?”

ஒரு கட்டத்தில் தமிழில் இசை கோரும் இயக்கத்தை “ அநியாய இயக்கம்” என்று துப்பியிருக்கிறார்கள். தமிழிலும் இசை வேண்டும் என்று கேட்டவர்களைப் பார்த்து தெலுங்கு தூவேஷிகள் என்றிருக்கிறார்கள்.

தமிழ் மண்ணில் தமிழிலும் பாடுங்கள் என்று மாநாடு போட்டு கேட்கவேண்டிய அவலம் இருந்திருக்கிறது.

“ ஏன் தமிழில் கேட்கிறீர்கள்?”

“ தெலுங்கு புரியவில்லை?”

“ ஏன்?”

“ தெலுங்கு எங்களுக்கு தெரியாது”

“ ஏன் உங்களுக்கு தெலுங்கின் மீது வெறுப்பு?”

 கேட்டவரை கல்கி கேட்கிறார்,

“ உங்களுக்கு லத்தீன் தெரியுமா?”

“ தெரியாது”

கல்கி திருப்புகிறார்,

“ ஏன் உங்களுக்கு லத்தீன் மீது இவ்வளவு வெறுப்பு?”

சங்கீதத்திற்கு பாஷையே இல்லை என்று வம்படிக்கும் ஒரு நண்பரோடு ஒரு கிரஹப் பிரவேஷத்திற்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பம் கல்கிக்கு கிடைக்கிறது. பெரிய இடம் என்பதால் கச்சேரி நடக்கிறது. வித்வான் இந்துஸ்தானியில் பாடுகிறார்,

“ இஸ் கர்கே ஆக் லக் கயி”

நண்பர் லயித்து கைதட்டியிருக்கிறார். கல்கி அவரை பார்க்கவே அவர் சொன்னாராம்,

” எவ்வளவு அபூர்வமான பிர்காக்கள்”

“ அர்த்தம் தெரியுமா?”

“ தெரியாதே”

கல்கி சொல்கிறார்,

“ இஸ் கர்கே ஆக் லக் கயி” நா “ இந்த வீட்டிலே தீப் பிடித்து கொண்டது”

இப்படியான நகர்தலின் ஒருகட்டத்தில் தமிழிசைக்கான எதிர்ப்பியக்கம் கூட்டங்களையும் மாநாடுகளையும் ஏற்பாடு செய்கிறது. இதை அறிந்த கல்கி சொன்னாராம்,

“ ரஷ்யாவின் மீது ஜெர்மன் படை எடுத்ததும் பெர்நாட்ஷா ‘ இனி இங்கிலாந்து நிம்மதியாகத் தூங்கலாம். நாஸி ஜெர்மனியை இனி ஸ்டாலின் பார்த்துக் கொள்வார்’ என்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது”

“ அதற்கென்ன?”

“ எப்ப தமிழிசைக்கு எதிரா கூட்டங்களை போட ஆரம்பித்துவிட்டார்களோ இனி அவர்களே தமிழிசையைக் கொண்டுவந்துவிடுவார்கள். நாம் நிம்மதியாகத் தூங்கலாம்”

நாம் தமிழ்ப் பாடல்களைக் கேட்பதற்காக நிறையவே போராடியிருக்கிறார்கள்.

Thursday, May 21, 2015

491 அல்ல என் மகிழ்விற்கு காரணம்

மதிப்பெண் விவரம் தெரிந்ததும் அப்பாயியை பார்க்கப் போயிருக்கும் கீர்த்தனாவிற்கு அலை பேசி 491 எடுத்திருக்கும் விவரம் சொன்னேன்.

சலனமேயில்லாமல் சரிப்பா என்கிறாள்.

இப்படி பேச வாய்ப்புத் தராம முடிக்கிறாளே. என்ன செய்வது என்று தெரியவில்லை.

“ பாப்பா பெரிய சிஸ்டர், சிஸ்டருங்க, மிஸ்ங்க எல்லாம் அழைத்துட்டுட்டு வரச் சொல்றாங்க எப்படா வர?” என்கிறேன்.

“ வேணாம்பா. அடுத்த வாரம் போய் பார்க்கிறேன். போனா மண்டைய ரொப்பாம விட மாட்டாங்க. காலாண்டுப் பரிட்சையும் முழு ஆண்டுப் பரிட்சையும் ஒன்னுதாம்ப்பா”

என்ன பேசுவதென்றுப் புரிய வில்லை. “ அண்ணன் பேசினானாடா?”

“ பேசினான்”

“என்ன சொன்னான்?”

.” நாமக்கல் பன்னைக்கெல்லாம் வேணாண்டி. இங்கதானே இந்த மார்க் கிடச்சுது. இங்கயே படி. லெவன்த் பாடம் முக்கியம் னான் பா”

491 அல்ல என் மகிழ்விற்கு காரணம். குழந்தைகளின் இந்தப் பக்குவமே என்னை மகிழ்விக்கிறது.

பக்குவப் படுத்திய பள்ளிகளுக்கும் ஆசிரியத் தோழர்களுக்கும் குழந்தைகளின் நண்பர்களுக்கும்  நன்றி சொல்கிறேன்.

Wednesday, May 20, 2015

தினமொரு பொய்யா?


"ஒரு வருடத்துக்கு முன்புவரை நீங்கள் இந்தியர் என்பதற்காக அவமானப்படிருப்பீர்கள். இப்போதுதான் பெருமைப்படுகிறீர்கள் " என்று நீங்கள் பேசியதாக தெரிகிறது மாண்பமை பிரதமர் அவர்களே.
அது அப்படியில்லை . எனது ஐம்பத்தியொரு வருட வாழ்க்கையின் மிக அவமானகரமான காலமாகத்தான் இந்த ஒரு ஆண்டு இருக்கிறது. எனக்கு மட்டும் அல்ல என் சார்ந்த பெரும்பான்மையோரும் இப்படித்தான் உணர்கிறார்கள். வேண்டுமானால் இது குறித்து ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துங்களேன்.
திரை கடலோடி தினமொரு பொய்யா? தாங்காது தோழர்.

நாம் ஏன் புரளி பண்ணக் கூடாது?

“ செங்கற்பட்டு, தென்னார்க்காடு, வட ஆர்க்காடு ஆகிய மாவட்டங்களில் இருக்கும் அலுவலகங்களிலும், இவைகளுக்கு இடையேயும், இவைகளுக்கும் சென்னை செகரட்டேரியட்டுக்கும் இடையே நடக்கும் கடிதப் போக்குவரத்துகள் ஆங்கிலத்தில் இருப்பதைத் தவிர்த்து, தமிழ் மொழியில் நடத்தவேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளும்” என்று சென்னை சட்டமன்றத்தில் திரு கஜபதி நாயக்கர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து 19.03.55 அன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திரு ஏ. சீனிவாசன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை நினைவு கூர்ந்தார்.
அவர் அகில இந்திய மாநாடு ஒன்றினில் கலந்து கொள்ள நாக்பூர் சென்றிருந்தபோது மாநாட்டுப் பந்தலில் அந்த மாநிலத்தின் அன்றைய முதல்வர் சுக்லா அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்திருக்கிறார். இருவரும் ஆங்கிலத்தில்தான் உரையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
மேடை ஏறியதும் , அதுவரை ஆங்கிலத்தில் எல்லோரோடும் உரையாடிக் கொண்டிருந்த சுக்லா அவர்கள் இந்தியில் பேச ஆரம்பித்திருக்கிறார்.
பேசி முடிந்ததும் மீண்டும் சீனிவாசனிடம் வந்திருக்கிறார். சீனிவாசன் கேட்டிருக்கிறார்,
“ ஆங்கிலத்தில் பேசியிருந்தால் எல்லோருக்கும் புரிந்திருக்குமே. இந்தியில் நீங்கள் பேசியது ஒன்றுமே புரியாமல் போனதே”
சுக்லா சொன்னாராம்,
“ அதனால் ஒன்றும் நட்டமில்லை பொது மேடையில் நான் இந்தியில்தான் பேசுவேன்”
சீனிவாசனுக்கு அன்று தோன்றியதாம்,
“அவர்கள் மட்டும் அவர்கள் மொழியில் பேசவேண்டும் என்று புரளி பண்ணும்போது தமிழில் பேசுவதற்கு நாம் ஏன் புரளி பண்ணக் கூடாது”

திரு கஜபதி நாயக்கர் மற்றும் ஏ.சீனிவாசன் இருவர் குறித்தும் யாரேனும் தகவல்கள் கூற இயலுமா?

Tuesday, May 19, 2015

இதே நாளில்

ஒரு மே 19 அன்றுதான் இந்தக் கவிதையை எழுதியுள்ளேன்
**************************************************************    

அழைத்துச் செல்வார் தங்களை 
அடர்ந்த 
தண்ணீரண்டைக் கென்று 
நம்பி 
விசுவசித்து 
மந்தைகள் காத்திருக்க
சில்லறைத் துழாவுகிறார் கர்த்தர்
தண்ணீர் பாக்கெட்டிற்கு

Monday, May 18, 2015

கதையாய் புவியியல்


( கேத்ரின் எழுதிய புவியியலை புரிந்து கொள்வோம்நூலை முன்வைத்து)

இந்த அறிவியல், கணக்கு, ரெண்டையும் ஒரு அஞ்சு வருஷத்துக்கு பள்ளிகள்ள இருந்து அப்புறப் படுத்திட்டு மொழிகளையும் வரலாறு பூகோளத்தையும் மட்டும் சொல்லித் தந்தா இந்த சமூகம் உருப்படும்என்று ஒருமுறை பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது. அறிவியலையும் கணக்கையும் நிராகரித்தால் பிள்ளைகள் மக்குகளாய் போகாதா என்று யோசித்தேன். ஆனால் அவரோடானான தொடர் உரையாடல் எனது எண்ணத்தை சுத்தமாய் கழுவி துடைத்துப் போட்டது. அறிவியல் மற்றும் கணக்கு மீது அல்ல நமது கோவம். இன்றைக்கு இருக்கும் கணிதம் மற்றும் அறிவியல் மீதான அழுத்தமும் கவனமும் மொழியையும், இந்த மண்ணையும், இந்த மண் சார்ந்த தொன்மையையும் மற்றும் மண் அறிவியலையும் புறக்கணிப்பதாக உள்ளது. இந்த அளவிலான அறிவியலும் கணிதமும்கூட கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளோடு இல்லை என்பதும் மனப்பாடத்திற்கான விஷயங்களாகவே அவை மாறிப் போயிருப்பதும் மிகவும் கவலைக்குரிய விஷயங்கள். மொழியை சரியாக கற்றுக் கொள்ளாத குழந்தை தனது கலாச்சாரத்தை தொன்மையை அறியாதவனாவான். வரலாறு அறியாமல் வளரும்போது தனது மண் மீதான பிடிப்பை இழந்தவனாகவே வளருவான்.

இவைவரைக்கும் அவரது கருத்துக்களோடு ஒத்துப்போக முடிந்த என்னால் புவியியல்தான் அனைத்துவகையான அறிவியலுக்குமான அடிப்படை அறிவியல்என்று சொன்னபோது ஏதோ காது கொடுத்து கேட்கிறோம் என்பதற்காக என்னவெல்லாம் சொல்கிறார்கள் பாரேன் என்றுதான் நினைக்கத் தோன்றியது. ஆனால் தோழர் கேத்ரின் எழுதிய புவியியலை புரிந்து கொள்வோம்என்ற நூலை வாசித்தபோதுதான் அந்த அதிகாரியின் கூற்றிலிருந்த உண்மை பிடிபட்டது.

அறிவியலும் புவியியலும் குழந்தைகளுக்கு பிடிக்காமல் போவதற்கான ஆக முக்கியமான காரணம் அவற்றின் மொழிநடைதான். அறிவியல் அறிவியலாளர்களின் பங்களிப்பு. ஆனால் அவற்றை குழந்தைகளுக்கு தரும்போது அறிவியலாளர் தனது கருத்துக்களை கதை சொல்லிகளிடம் சொல்லி அவர்கள் கிரகித்துக் கொண்டபின் அந்தக் கதை சொல்லிகளின் மொழியில் தர வேண்டும் என்று நினைப்பவன். அறிவியல் பாடப் புத்தகங்களின் மொழி இன்னமும் நெகிழ வேண்டும் என்று நினைப்பவன் நான்.
புவியியலை புரிந்து கொள்வோம்என்ற இந்த நூலின் பெரு வெற்றியே அதன் நெகிழ்வான மொழிதான். இந்தப் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் ஒரு படைப்பாளியின் மொழியைப் பார்க்க முடியவில்லை. முழுக்க முழுக்க மக்களின் மொழியாகவும் குழந்தைகளோடான ஒரு தாயின் மொழியாகவுமே இந்தப் புத்தகத்தின் மொழி இருக்கிறது.

இந்த நூலில் எட்டு கட்டுரைகள் இருப்பதாகவும் கொள்ளலாம் அல்லது அவற்றை எட்டு இயல்கள் என்றும் கொள்ளலாம். அவை பெருமாபாலும் உரையாடல் வடிவிலோ அல்லது கேள்வி பதில் நடையிலோ இருப்பது ஈர்ப்பதாகவும் புரிந்துகொள்வதற்கு எளிதாகவும் இருக்கிறது.
மழை எப்படி வருகிறது என்பதை இந்த நூல் அங்கன் வாடி குழந்தைக்கும் எழுபது வயது மனிதனுக்கும் புரிகிற மாதிரி சொல்கிறது. அதே போல்தான் இடி விழுவதில்லை மின்னல்தான் விழுகிறது என்கிற உண்மையையை புரிகிறமாதிரி சொல்லித் தருகிறது. மின்னலில் இருந்து மின்சாரம் எடுப்பது எப்படி சாத்தியம் என்று எல்லா வயதினருக்கும் புரிகிறமாதிரி ஒருவிதமான ஈர்ப்போடு சொல்லித் தருகிறது.

பூகம்பம் சுனாமி என்பதெல்லாம் கடவுள்களின் கோவத்தால் நிழ்வன என்பதுபோன்ற பொய்களை புரட்டுகளை நார் நாராய் கிழித்து ஒரு பந்துபோல் கசக்கி தூர எறிகிறது.

இந்தியத் தட்டு என்பது எது?, பர்மியத் தட்டு என்பது எது? அவை ஏன் மோதிக் கொள்கின்றன? அவ்வாறான மோதல்களை ஏன் தடுக்க முடியாது போன்ற விவரங்களை சுவைபட எழுதுகிறார் கேத்ரின்.

பூமித் துண்டு சூரியனிலிருந்து தெறித்து விழுந்த போது அதிலிருந்த ஆக்சிஜனும் வெளியில் இருந்த ஹைட்ரஜனும் கலந்து நீராகி மழையாக வருடக் கணக்கில் பெய்ததன் விளைவாகவே பூமியின் மேற்பரப்பு குளிர்ந்தது என்கிற உண்மையை இந்த நூல் சொல்கிறது.

நேரம் நாட்டுக்கு நாடு ஏன் வேறுபடுகிறது? அவை எப்படி தீர்மானிக்கப் படுகின்றன? என்பதுபோன்ற விவரங்களும் இருக்கின்றன.
புவியீர்ப்பு விசை பூமியின் இயக்கங்கள் போன்றவை குறித்த அறிவியல்தான் இயற்பியல் என்றும், பாறைகளில் உள்ள கனிமங்களின் வேதியியல் பண்புகளைப் பற்றிய இயல்தான் வேதியியல் என்றும் பூமியில் வாழக்கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கிகளைப் பற்றிய இயல்தான் உயிரியல் என்றும் இவர் சொல்லும்போதுதான் அந்த அதிகாரி புவியியல்தான் அனைத்துவகையான அறிவியலுக்கும் மூலம் என்ற கூற்றின் உண்மை பிடிபட்டது.

ஒரு எழுத்தாளராகவோ, புவியியல் நிபுணராகவோ தன்னை பாவித்துக் கொள்ளாமல் முதல் தலைமுறைக் குழந்தைகள் படிக்கும் ஒரு எளிய அரசு பள்ளியின் ஆசிரியையாகவே இந்த நூலை அவர் எழுதியிருப்பதால்தான் இந்த நூல் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

குறுகிய காலத்தில் மூன்றாம் பதிப்பினை பெற்றிருக்கிறது என்பது நல்ல நூல் என்பதோடு போயும் சேர்ந்திருக்கிறது என்கிற உண்மையை சொல்கிறது.
குழந்தைகளுக்கான நூல் என்று பின்னட்டையில் போட்டிருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கும் நமக்குமான புவியியல் உண்மைகளை நம் தோள்மீது கைபோட்டபடி உரையாடும் நூல்.

இந்தப் பொண்ணுக்கிட்ட புவியியல் படிக்காமல் போனோமே என்கிற ஆதங்கம்தான் நமக்கு.

புவியியலைப் புரிந்து கொள்வோம்
ஆசிரியர்: கேத்ரின்
பாரதி புத்தகாலயம்
30
ரூபாய்


குட்டிப் பதிவு 40

"ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல"
ஷேஷாசம் 35 வருடங்களுக்கு முன்னால் எழுதிய கவிதை நூலின் பெயர்.
ரப்பர் மரத்திற்கு ரணங்கள் நிலையல்ல.

Sunday, May 17, 2015

அய்யம்

நான் தொல்காப்பியம் எல்லாம் படித்தவன் இல்லை. ஆனால் கீழே உள்ளது தொல்காப்பியத்திலிருந்து என்று அறிகிறேன்.
“ ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே
தா என் கிளவி ஒப்போன் கூற்றே
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே”
எனில்,
இழிந்தவன் தன்னைவிட உயர்ந்தவனிடம் ஒரு பொருளை வேண்டிக் கேட்பதற்கு ”ஈ” என்ற சொல்லையும், தனக்கு சம நிலையில் இருப்பவனிடம் கேட்கும்போது “ தா” என்று கேட்க வேண்டும் என்றும், உயர்ந்தவன் தன்னைவிட தாழ்ந்தவனிடம் கேட்குமொபோது “ கொடு” என்று கேட்க வேண்டும் என்றும் ஆகிறது.
எனில்,
இழிந்தவன், ஒப்போன், உயர்ந்தவன் என்பது சாதியப் படிநிலைகளைக் குறிப்பதாகத்தான் எனக்குப் படுகிறது.
எனில்,
சாதிக்கொரு வார்த்தையை தொல்காப்பியம் பரிந்துரைப்பதாகவே படுகிறது.
அது அப்படித்தான் எனில் சொல்கிறோம்,
“ குற்றம் குற்றமே”
அல்லது இதற்கு வேறு ஏதும் பொருளிருப்பின் சொல்லுங்கள் சரியாயிருப்பின் ஏற்கிறோம்.

Saturday, May 16, 2015

வேலை இன்னும் அதிகமாயிருக்கிறது...

சென்ற ஆண்டு பி.ஜே.பி வெற்றி பெற்ற நிலையில் எழுதியது. அவர்கள் அசுர பலத்தோடு மக்களுக்கெதிராக ஒருங்கிணைகிறார்கள். கருத்துக் களத்தில் நமக்கான வேலை இன்னும் அதிகமாயிருக்கிறது.
**********************************************************************************************
நமது தோல்வியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம். அவர்களது வெற்றியை மனப்பூர்வமாக ஏற்று வாழ்த்துவோம்.

நாம் எந்தக் காரணங்களுக்காக இவர்கள் வந்துவிடக் கூடாது என்று போராடினோமோ அந்தக் காரணங்கள் அப்படியே உயிரோடே இன்னமும் இருக்கின்றன..
அந்தக் காரணங்களை இவர்கள் இல்லாது போக முயற்சிப்பார்களேயானால் மகிழ்ந்து கொண்டாடுவோம்.

இல்லாத பட்சத்தில் முன்பைக் காட்டிலும் நமக்கு கூடுதலான வேலை காத்திருக்கிறது என்பதை உணர்வோம்.

குட்டிப் பதிவு 39

சௌக்கியம்தானே என்று 1326 ரூபா 40 காசுக்கு வாங்கிய மருந்துகளுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த என்னிடம் கேட்ட 1700 ரூபாய்க்கு வாங்கிய மருந்துகளுக்கு பணம் கொடுக்க வந்த நண்பரிடம் சொன்னேன்,
ரொம்ப சவுக்கியம் தோழர். ஆமா நீங்க எப்படி இருக்கீங்க?

Friday, May 15, 2015

ரசனை 07



இவனைப் போலவேதான் நானும் மகனாகவே நாயை வளர்க்கிறேன். வெளிப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் விட்டுவும் அப்படியேதான்.
ஆனால் ஜானகி (நந்தன் ஸ்ரீதரன்) அளவிற்கெல்லாம் எங்களால் எவ்வளவு முயன்றாலும் முடியாது. உயிர்களிடத்து அப்படியொரு அன்பு.
உனக்கும் மீனாளுக்கும் எங்களது அன்பு, மரியாதை, வணக்கம்.
கீழ் உள்ள அவனது பதிவை பாருங்கள். உங்களுக்கே புரியும்.
********************************************************************************
ஞாபகம் வரும்போதுதான் நேரமிருந்தால் உணவிடுகிறேன்.. ஜிஜ்ஜு இளைத்த மாதிரி இருக்கிறது. கறுப்பும் ஜில்லுவும் கொஞ்சம் பரவாயில்லை எங்காவது குப்பைத் தொட்டிகளில் அவற்றின் உணவு கிடைத்துவிடக் கூடும்.. ஆனாலும் அவற்றை நான் பார்க்கும்போது நினைவிருந்தால், நேரமிருந்தால் உணவிட்டபடிதான் இருக்கிறேன்.. இரண்டு மூன்று நாட்களாக கறுப்புவும் ஜில்லுவும் சரியாக வீட்டுப் பக்கம் வருவதில்லை..
சாயாவும் அதன் நண்பர்களும் முன்பு போல ஜன்னலில் உட்கார்ந்து கத்துவதில்லை. காலையில் ஜன்னலை திறந்ததும் சத்தமில்லாமல் அங்கே வந்து உட்காருவது சாயாதான் என நினைக்கிறேன். நான் கிச்சனில் வேலை பார்த்தபடி இருக்க, பத்து நிமிடம் ஆனாலும் அரை மணி நேரம் ஆனாலும் சத்தமே போடாமல் பொறுமையாக காத்திருக்கிறது.. சற்று தள்ளி காம்பவுண்டில் சத்தமிடாமல் உட்கார்ந்திருக்கும் மற்ற காகங்களும் கண்ணில் படத்தான் செய்கின்றன.. நோ சவுண்டு..
மிழற்றலாக மீனாளிடம் கொஞ்சுவது போலெல்லாம் நம்மிடம் இல்லை.. வாங்கி வைத்திருக்கும் மிக்சரை அவ்வப்போது போட்டு விட்டால் சத்தமில்லாமல் தின்றுவிட்டுப் போய்விடுகிறார்கள்..
என்னங்க.. புதன் கிழமை புறப்பட்டு வியாழன் வர்றேன் என்றாள். அவ்வளவு நாள் அங்க இருந்து என்ன பண்ணப் போற..? பாலாஜிய திங்கக் கிழமை டிக்கெட் எடுத்து தரச் சொல்லி செவ்வாய் காலைல வா.. எனக்கு எக்கச்சக்கமா வேலை இருக்கு.. என்றேன்.
வேலை இருக்கு என்பதை விட இந்த பசிப் பார்வைகள் தாள முடியாதனவாகக உள்ளன என்பதே உண்மை..
நேரத்துக்கு
ஜன்னலுக்கு வெளியே நீண்டு
சோறிட்டு
தற்போது காணாமல் போன வளை கரத்தை
கைவிட்டு விட்டு காணாமல் போன
தாய்ப்பறவை என்றே
நினைத்திருக்குமோ அந்த காகங்கள்..

தோழர் இன்குலாப்

15.05.2012 பதிவு
**********************

வேறு வேறு இயங்கு தளங்கள்

பல சமயங்களில் கடுமையான முரண்பாடுகளோடு கூடிய, இன்னும் சொல்லப் போனால் முற்றாய் எதிர் நிலை செயல் திட்டங்கள்

இன்னும் கொஞ்சம் கூடுதலாக நுணுகினால் பரஸ்பரம் ஒருவரை எதிர்த்து மற்றவர் செயல்பட வேண்டிய சூழல்

ஆனாலும்

எந்த கட்டத்திலும்

நமக்கு நேர் எதிராக கருத்துக் களத்தில் அவர் இயங்கிய வேளையிலும்

அவரை “ மக்கள் கவிஞர்” என்று கொண்டாடவே செய்திருக்கிறோம்

கருத்துக் களத்தில் அவரது பாதிப்போடும், அவரது கருத்தாளுமையை, அர்ப்பணிப்பை, தியாகத்தை மதித்துக் கொண்டாடியதோடு மட்டுமில்லாமல் அதற்காக பெருமையேப் பட்டிருக்கிறோம்

இது எப்படி சாத்தியம்

வெகு காலமாக புரியாத புதிராகவே இருந்த இந்தக் கேள்விக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் நாங்கள் “காக்கைச் சிறகினிலே” சார்பாக எடுத்த விழாவில் விடை கிடைத்தது

அதில் பேசும் போது நமது மக்கள் கவிஞர் இன்குலாப் சொன்னார்

“இப்பொழுது ஈழத் தமிழர்களுக்காக எழுதும் நான்,

ஒரு வேளை அங்கே தமிழர்கள் பெரும்பான்மையாகவும், சிங்களவர்கள் சிறுபான்மையினராகவும் இருந்து பெரும்பான்மைத் தமிழர்கள் சிறுபான்மை சிங்கள இனத்தை அழிக்க முயன்றிருப்பின் என் பேனா சத்தியமாக சிங்களவர்களுக்காகவே இயங்கியிருக்கும்”

அது...அது...

அதுதான் எங்கள் மக்கள் கவிஞர் இன்குலாப்

Thursday, May 14, 2015

கவிதை 31

ஏகத்துக்கும் சிதைந்த
முகமும் உடலும்
எஞ்சித் தெரிந்த
சிறுபகுதி இட முலையும்
எண்ணெய்ப் பிசுக்கும்
துண்ணூறும் குங்குமமும் போதுமந்த
அசலூர்க் காரனுக்கு
பொம்பள சாமி அது எனப் பிடித்துக் கொள்ள
நொடிக்கு நொடி தாயேயெனக் கும்பிட்டான்
சுத்திக் கிடந்த செத்தைகளை பெருக்கித் தள்ளியவன்
சுகத்தையும் படிப்பையும்
வேலையையும் 
கலங்காத நல்ல வாழ்க்கையையும்
தன் ஒத்தை மகளுக்காய் யாசித்தவாறே
வரவா தாயே 
மழ ஓஞ்சிருச்சு என நகர்ந்தவனுக்கு
கேட்டிருக்க நியாயமில்லை
போய்வா தந்தையே என்ற தெய்வத்தின் குரல்

ரசனை 06



எதுவுமே தேவையில்லை...
விவாகரத்து கேட்டிருக்க வேண்டிய தேவை இல்லை
விவாகரத்து கிடைத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை...
அவரவர் தந்த பொருட்களை அவரவர் திருப்பித் தர, பெறும் வேளையில் நாம் கொடுத்திருந்த கவிதை டைரியினை அவர் திருப்பித் தர நாம் பெற்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை....
இதில் எந்தத் தேவைக்கும் வேலையே வைக்காமல் அதன் வலியை நம்முள் ரசனையோடு கடத்துகிறது ப. செல்வகுமார்அவர்களின் இந்தக் கவிதை...

”வழக்குத் தீர்ப்பாகி
பொருள்களை பிரித்துக் கொண்டிருந்த வேளையில்
எனது கவிதைகள் நிறைந்த டைரியினை கொடுத்தபோதே
நான் செத்துப் போயிருக்க வேண்டும்.”

அவரது முழுப் படைப்புகளையும் வாசிக்க...
https://www.facebook.com/sengunamselva…

14.05.2013

கீர்த்தனா ஏதோ ஒரு தொடர் பார்த்துக் கொண்டிருந்தாள். விசாரித்தபோது " மறுமணம் " என்று சொன்னாள்.
நானும் அவளருகே அமர்ந்தேன்.
ஒரு யுவதியின் கையை இளைஞன் ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தான்.
அவள் " கையை விடுங்கள், கையை விடுங்கள் " என்று கத்திக் கொண்டிருந்தாள்.
அவன் அப்படியே பேதலித்துப் போனவனாய் நின்று கொண்டிருந்தான். கையை விடவும் தோன்றாதவனாய் பட்டது.
" இங்க பாருங்களேன் ,ஏங்கையைப் பிடித்துக் கொண்டு விட மாட்டேங்கறார் " என்று அந்தப்
பெண் கத்தவே கூட்டம் கூடிவிடுகிறது.
ஆளாளுக்கு அந்த இளைஞனை வறுத்து எடுக்கிறார்கள். போலீஸைக் கூப்பிடப் போவதாக ஒருவர் மிரட்டுகிறார். சிலர் தாக்க நெருங்குகிறார்கள்.
" அவங்க என்னோட மனைவிங்க " என்று அவன் சொன்னதும் எல்லோரும் ஒரு கணம் உறைந்து போகிறார்கள்.
" ஏம்ப்பா வொய்ப்னாலும் அவ கையப் பிடிக்காதன்னா பிடிக்கக் கூடாதுதானேப்பா. ஏன் அதை யாரும் உணரவேயில்ல"
கீர்த்தனா சரியாக வளர்ந்து வருவதாகவே படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்

சமயபுரம் SRV மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் நண்பர் துளசி ” காக்கைச் சிறகினிலே “ இந்த மாத இதழில் நான் எழுதியிருந்த ‘ என் கல்வி என் உரிமை’ கட்டுரையை வாசித்துவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
அடிப்படையில் இந்தக் கட்டுரையோடு பல இடங்களில் முரண்படுவதாகவும் அது குறித்து என்னோடு விவாதிக்க தயாராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார். இரண்டு விஷயங்கள் என்னை மகிழ்ச்சிப் படுத்தின,
1 ) அவரது அன்பான, மிக நேர்மையான , நாகரீகமான, எல்லாவற்றிற்கும் மேலாக கல்வி குறித்த அக்கறையோடு கூடிய அவரது எதிர்விணை.
2 ) கட்டுரை சேர்ந்திருக்கிறது.
கசியும் மகிழ்வோடு அழைத்தேன். எடுக்கவில்லை.
பத்து நிமிடத்தில் அவரே தொடர்பில் வந்தார். முக்கியமான பணியில் இருந்ததால் அழைப்பை ஏற்க இயலாது இருந்தமைக்காக வருந்தினார். அவருக்கு இருக்கும் பணிச்சுமை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவரது அந்தப் பண்பு என்னுள் இருக்கும் அவரது பிம்பத்தை இன்னும் கொஞ்சம் அழகுபடுத்தியது.
ஒரு மரியாதைக் குரிய பிம்பம் அவரைப் பற்றி என்னுள் இருப்பதற்கு பெருங்காரணம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்றினை தலைமைப் பொறுப்பேற்று அவர் வழி நடத்திக் கொண்டிருந்தாலும் மருத்துவமும் கல்வியும் பொதுப் பட வேண்டும் என்பதில் அவருக்குள்ள அக்கறைதான். அதற்கான அவரது பங்களிப்பும் நான் அறிந்ததே.
வெறிகொண்டு வாசிப்பவர். நல்ல எழுத்தை வாசிக்க நேர்ந்தால் அந்த எழுத்தாளனை தேடிப் பிடிப்பவர்.
நோயில் சிரமப் பட்ட நான் தொழும் ஒரு மரியாதைக்குரிய மூத்த எழுத்தாளரை வருடக் கணக்கில் வைத்து வாஞ்சையோடு அவர் பராமரித்ததை நான் அறிவேன்.
நல்ல வேலை, நல்ல ஊதியம், சொகுசான வாழ்க்கைக்கு மட்டுமே மாணவர்களை பெரும்பகுதி தயார் செய்யும் தனியார் கல்வி நிறுவனங்கள் மத்தியில் தனது மாணவர்களுக்கு சமூகம் குறித்த அக்கறை வேண்டும் என்பதில் முனைப்போடு செயல்படுபவர். நல்ல சமூக அக்கறையுள்ள சிந்தனையாளர்களையும், களப் பணியாளர்களையும் கொண்டு தனது மாணவர்களுக்கு முகாம்களை ஏற்பாடு செய்பவர்.
இடது சாரி எழுத்தாளர்களைத் தொடர்ந்து தமது பள்ளிக்கு அழைப்பவர்.
பேசியதில் அவர் சொன்னது இதுதான்,
இதுமாதிரி விமர்சனங்களோ, போராட்டங்களோ இந்தக் கட்டமைப்பை உடைக்காது. பொதுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்துவது மட்டுமே இதனைத் தகர்க்கும் என்கிறார்.
நியாயம்தான் . ஆனால் இதனூடேதான் அதை செய்ய முடியும். ஆகவே பொதுப்பள்ளிக் கட்டமைப்பை பலப் படுத்துவதன் ஒரு பகுதியாகவே இதை நான் இதை கொள்கிறேன் துளசி.
இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும் தனியார் பள்ளிகள் பற்றிய எனது குற்றச்சாட்டுகள் இவரது பள்ளியில் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் குறைவு என்பது மட்டுமல்ல சமூக மனிதனாக மாற்றுகிற பணியையும் அது செய்யவே செய்கிறது.
ஆனால் அதற்கு முழுக் காரணம் துளசி என்கிற சமூக அக்கறை கொண்ட மனிதன்தான். இவரில்லாத அந்தப் பள்ளி இவற்றை உதறிக் கொண்டு பயணப் படவே செய்யும்.
அவர் சொன்ன இன்னொரு விஷயம் “ தெய்வங்களுக்கு சொல்லிக் கொடுத்தவன்” என்ற எனது கட்டுரையை ஆசிரியர் கூட்டத்தில் வைத்து விவாதித்தார்களாம்.
மிக்க நன்றி துளசி.
உங்களது ஆக்கப் பூர்வமான விவாதத்தை கை ஏந்தி யாசிக்கிறேன் தோழர். விவாதத்தில் பங்கெடுக்க காத்திருக்கிறேன்.
தமிழகத்தின் குறிப்பிடத் தக்க ஒரு தனியார் பள்ளி முதல்வரை கல்வி குறித்த விவாதத்திற்கு இந்த முகம் தெரியாத எளியவனின் கட்டுரை அழைத்து வந்திருக்கிறது என்கிற வகையில் மகிழ்கிறேன்.

Wednesday, May 13, 2015

ராகுலின் ஆவேசம்



போர்க்குணத்தோடு கூடிய திரு ராகுல் அவர்களின் பாராளுமன்ற உரையை நேற்று தொலைக் காட்சியில்  பார்த்தேன். அவர் இந்தியில் பேசியதாலும் கீழே அதைத் தமிழ்ப் படுத்தி ஓடிக் கொண்டிருந்ததாலும் மௌனப் படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரித்து அதானிக்கும் அம்பானிக்கும் தாரை வார்க்கத் துடிக்கும் இந்த அரசு பாமரனுக்கு எதிரான அரசு என்பதையும் பெரு முதலாளிகளுக்கான அரசு என்பதையும் அம்பலப் படுத்திக் கொண்டிருந்தார்.  அவரது போர்க்குணம் ஒரு சன்னமான நம்பிக்கையையும் ரசிப்பையும் என்னுள் விதைத்திருந்தது.

மாண்பமை அமைச்சர் எழுந்து “உங்களது மைத்துனர் அபகரித்த ஏழை விவசாயிகளின் நிலம் எவ்வளவு தெரியுமா?” என்பதாக ராகுலைப் பார்த்து எள்ளலோடு கூறினார்.

அதை ஏன் அவர் ராகுல் அவர்களிடம் கேட்கிறார் என்று தெரியவில்லை. ஆட்சி உங்களிடம்தானே அமைச்சரே இருக்கிறது. நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு இப்படி பகடி செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. ராகுலின் மைத்துனர் ஏழைகளின் நிலத்தை அபகரித்திருந்தால் அவரை சிறைக்கு அனுப்பி அந்த நிலங்களை மீட்டு உரிய ஏழைகளிடம் அளிக்க விடாமல் உங்கள் கைகளை கட்டிப் போட்டிருக்கும் சக்தி எது?

அவர் அபகரித்த விவரம் முழுமையாக தெரியும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அதுவே குற்றம்தானே?

ராகுல் அவர்களிடம் இரண்டு,

1)  அந்த அமைச்சர் சொல்வதில் நியாயம் இருக்கிறதா என்று அருள்கூர்ந்து பாருங்கள் . இருப்பின் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். மற்றவர்களைப் போலவே நீங்களும் அவர்கள் மட்டும் யோக்கியமா என்பது மாதிரி பேச மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். நீங்களும் அப்படியே பேசினால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஒதுங்கி விடுகிறேன்.

2) நீங்கள் இந்த அரசை சாடுகிற அதே வேளையில் உங்களது கட்சியின் கடந்தகால ஆட்சியை அருள் கூர்ந்து சுய பரிசீலனை செய்யுங்கள். ஏறத்தாழ இந்த ஆட்சியின் பெரும் சாயல் அங்கும் இருப்பதைக் காண்பீர்கள்.

எந்தவிதமான சமரசமும் இல்லாமல் உங்களை நீங்கள் முழுமைப் படுத்திக் கொள்ளுங்கள்.

இப்போது எதை எல்லாம் எதிர்க்கிறீர்களோ அதை ஒரு போதும் நீங்கள் செய்வதில்லை என்று உறுதி பூணுங்கள்.

கடந்த தேர்தலில் மட்டும் அல்ல வரும் தேர்தலிலும் உங்கள் இருவரையுமே எதிர்நிலையில் நின்றுதான் களமாட வேண்டும் நான்.

என்றாலும், நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாடு உங்கள் கையிலும் வரும் என்பதாலேயே இந்தக் கோரிக்கைகள்.

குட்டிப் பதிவு 38

அரசியல் கடந்து, நீதி, நியாயம் கடந்து, பெயர் தெரியாத எது எதையோ கடந்து இந்த தீர்ப்பைக் கண்டு அச்சப்படவும் இதனை எதிர்க்கவும் கடனை நம்பியே பிழைப்பு நடத்தும் என் போன்ற மக்களுக்கு ஒரு காரணமிருக்கிறது.
வாங்கும் கடனெல்லாம் வருமானமாகிவிட்டால் அதற்கும் சேர்த்தல்லவா வருமான வரி கட்ட வேண்டும்.

13.05.2014

இன்று சமயபுரம் SRV மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் திரு துளசி அவர்களை நண்பர் கனகராஜோடு சென்று சந்தித்தேன்.
பேசிக்கொண்டிருந்தபோது எனது “ இவனுக்கு அப்போது மனு என்று பேர் “ என்ற நூலில் வரும் சம்பவத்தை ஸ்கிட்டாக மாற்றி 10 நிமிடம் நிகழ்த்தியிருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் என்பதைச் சொன்னார்.
தயாரித்த ஆசிரியையிடம் எப்படி இதை தேர்வு செய்தீர்கள், எட்வின் யார் என்பதோ தனது நண்பர் என்பதோ தெரியுமா என்று கேட்டிருக்கிறார். தெரியாது என்று சொன்னவர் பள்ளி நூலகத்தில் படித்ததிலிருந்து அதே நினைவில் இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். அநேகமாக மகள், அல்லது மகன் வயதுதான் இருக்கிறது அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு. அந்த மகளை வாழ்த்தி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
எத்தனையோ அமைப்புகளுக்கு எத்தனையோ நூல்களைப் பற்றி பேசப் போனாலும் ஒரு அமைப்பேனும் விவாதிக்க எடுத்துக் கொள்கிறமாதிரி ஒரு நூலையும் இன்னும் எழுத வில்லையே என்று என்னையே நான் நொந்து கொள்வது உண்டு.
ஆனாலும் தொடர்ந்து இயங்க இதுமாதிரி நிகழ்வுகளே நம்மை உந்தித் தள்ளுகின்றன.
நன்றி மகளே. நன்றி துளசி.

Tuesday, May 12, 2015

11.05.2014

தாராபுரம் தாண்டி திருப்பூர் நோக்கிய பயணத்தில்
ஏதோ ஒரு பொட்டல் காட்டில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு என்னைப் பார்த்து தலையை ஆட்டியது.
ஏதோ சொல்வது போல் தோன்றியது.
ஒருக்கால் அது சொல்லியிருக்கக் கூடும்,
" பார்த்து கைய பத்திரமா உள்ள வச்சிட்டுப் போப்பா"

Monday, May 11, 2015

ரசனை 5



பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்ததும் நிறைய பேர் தனது பிள்ளைகளின் மதிப்பெண்களைப் பகிர்ந்து சிலாகித்திருந்தனர். ஆயிரத்திற்கும் குறைவாகவே பெற்றாலும் மனப்பாடம் செய்யும் பழக்கம் இல்லாது எதையும் புரிந்து கொண்டு படித்த தன் மகனை உச்சி முகர்ந்து கொண்டாடும் ஒரு தந்தையின் (அருள்மொழி சின்னசாமி​) பதிவு இது
*************************************************************************** 

என் மகனை இன்று வாாியணைத்து முத்தமிட்டேன் நான்...
உணர்ச்சிப் பெருக்குடன்...
தேர்வு முடிவுகளில் இவன் பெற்ற
மதிப்பெண் ஆயிரத்திற்கும் குறைவு....
சுயசிந்தனை உள்ள மகன்....
மனப்பாடங்களை மறுதலித்து இருக்கிறான்....
வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுவான்...
சூளுரைக்காத எதிர்கால சாதனையாளன் என் மகன்....
அவனுக்கு என் வாழ்த்துக்கள்....!!!

ஆலங்குடி எனும் இனிய களம்



09.05.2015 அன்று ஆலங்குடியில் பத்திரிக்கை சுதந்திர தின விழா. ஒன்பது மணிக்கெல்லாம் கூட்டத்தை முடித்துவிட வேண்டும். விரைவாக வரவும் என்று சொல்லியிருந்தார்கள்.
நான், தோழர் ரமா ராமநாதன் மற்றும் கிருத்திகா ஆகியோர் கூட்டம் நடக்குமிடம் சேர ஏழரை மணி ஆகிவிட்டது. ஆறு மணிக்கே கூட்டம் என்று போட்டிருந்தும் ஏழரை மணிக்கு வந்ததற்காக கொஞ்சம் வருத்தப் பட்டார்கள் நண்பர்கள். ஒரு வழியாய் சமாதானம் செய்தோம்.
என்ன ஆச்சரியம் எனில் மிகச் சரியாக ஒன்பது மணி ஐந்து நிமிடத்திற்குத்தான் என்னிடம் ஒலி வாங்கியைத் தந்தார்கள்.
என்னைப் பேச அழைத்த தோழர் ”:வெகு தாமதமாக வந்தாலும் தோழர் நல்ல தகவல்களைத் தருவார்” என்பதாக அழைத்தார்.”நண்பர்களே” என்று தொடங்கினேன் “ஒரு நிமிஷம் சார்” என்றவாறு ஆலங்குடி வட்டாட்சியர் பத்திரிக்கையாளர்களை கௌரவப் படுத்தினார். இப்படியாக ஒரு வழியாக நான் மீண்டும் “நண்பர்களே” சொல்லும் போது மணி ஒன்பது பதினொன்று.
எல்லோரும் அயர்ந்திருப்பதைப் பார்த்த நான் ஒரு ஐந்து அல்லதுபத்து நிமிடங்களில் எனது பேச்சை சுறுக்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன்.
இரண்டு மூன்று தோழர்கள் எழுந்து நின்று, “சார். நீங்க நிறைய பேசுங்க. உங்க பேச்சக் கேட்கத்தான் காத்திருக்கிறோம்” என்றார்கள். ஆலங்குடியின் மூத்த பத்திரிக்கையாளர் திரு. கருப்பையா அவர்கள் என்னிடம் ஓட்டமும் நடையுமாக வந்தார். “ எவ்வளவு நேரம் பேச முடியுமோ அவ்வளவு நேரம் பேசுங்கள். ஒருத்தர் எழுந்திரிக்க மாட்டோம்” என்றார்.
இத்தனையாண்டு மேடை அனுபவத்தில் எனக்கிது புதிது. பேசுகிற மனநிலையிலேயே இல்லாதவனாகத்தான் அதுவரை இருந்தேன்.
ஆலங்குடி வட்டாட்சியர் கோட்சேவைப் பற்றி கொஞ்சம் பேசியிருந்தார். கோட்சே எனும் பத்திரிக்கை ஆசிரியனைப் பற்றி, அக்ராணி பற்றியும், இந்து ராஷ்ட்ரா பற்றியும் தொடங்கி பேசிக் கொண்டே இருக்கிறேன்.

பத்து மணி வாக்கில் நண்பர்கள் என்னை நெருங்கினார்கள். முடிக்கச் சொல்கிறார்கள் போல என்று நினைத்தேன். முடித்து விடாதீர்கள் என்றார்கள். ஒரு வழியாக பத்து பதினைந்திற்கு முடித்தேன்.
தொடங்கிய போது இருந்த அனைவரும் முடித்த போதும் இருந்தார்கள்
கீழே இறங்கியதும் சூழ்ந்து கொண்டார்கள். பேசுகிறார்கள், பேசுகிறார்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்னோடு. இதுவும் புதிது.
எங்களோடு சாப்பிட்டுவிட்டு ஒரு மணி வாக்கில் எங்களை தனது ஜீப்பில் இறக்கி விட்டுதான் போகிறார் ஆலங்குடி வட்டாட்சியர்.
பேசுவதற்கான இனிய களம் ஆலங்குடி.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...