போர்க்குணத்தோடு கூடிய திரு ராகுல் அவர்களின் பாராளுமன்ற உரையை நேற்று தொலைக் காட்சியில் பார்த்தேன். அவர் இந்தியில் பேசியதாலும் கீழே அதைத் தமிழ்ப் படுத்தி ஓடிக் கொண்டிருந்ததாலும் மௌனப் படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரித்து அதானிக்கும் அம்பானிக்கும் தாரை வார்க்கத் துடிக்கும் இந்த அரசு பாமரனுக்கு எதிரான அரசு என்பதையும் பெரு முதலாளிகளுக்கான அரசு என்பதையும் அம்பலப் படுத்திக் கொண்டிருந்தார். அவரது போர்க்குணம் ஒரு சன்னமான நம்பிக்கையையும் ரசிப்பையும் என்னுள் விதைத்திருந்தது.
மாண்பமை அமைச்சர் எழுந்து “உங்களது மைத்துனர் அபகரித்த ஏழை விவசாயிகளின் நிலம் எவ்வளவு தெரியுமா?” என்பதாக ராகுலைப் பார்த்து எள்ளலோடு கூறினார்.
அதை ஏன் அவர் ராகுல் அவர்களிடம் கேட்கிறார் என்று தெரியவில்லை. ஆட்சி உங்களிடம்தானே அமைச்சரே இருக்கிறது. நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு இப்படி பகடி செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. ராகுலின் மைத்துனர் ஏழைகளின் நிலத்தை அபகரித்திருந்தால் அவரை சிறைக்கு அனுப்பி அந்த நிலங்களை மீட்டு உரிய ஏழைகளிடம் அளிக்க விடாமல் உங்கள் கைகளை கட்டிப் போட்டிருக்கும் சக்தி எது?
அவர் அபகரித்த விவரம் முழுமையாக தெரியும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அதுவே குற்றம்தானே?
ராகுல் அவர்களிடம் இரண்டு,
1) அந்த அமைச்சர் சொல்வதில் நியாயம் இருக்கிறதா என்று அருள்கூர்ந்து பாருங்கள் . இருப்பின் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். மற்றவர்களைப் போலவே நீங்களும் அவர்கள் மட்டும் யோக்கியமா என்பது மாதிரி பேச மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். நீங்களும் அப்படியே பேசினால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஒதுங்கி விடுகிறேன்.
2) நீங்கள் இந்த அரசை சாடுகிற அதே வேளையில் உங்களது கட்சியின் கடந்தகால ஆட்சியை அருள் கூர்ந்து சுய பரிசீலனை செய்யுங்கள். ஏறத்தாழ இந்த ஆட்சியின் பெரும் சாயல் அங்கும் இருப்பதைக் காண்பீர்கள்.
எந்தவிதமான சமரசமும் இல்லாமல் உங்களை நீங்கள் முழுமைப் படுத்திக் கொள்ளுங்கள்.
இப்போது எதை எல்லாம் எதிர்க்கிறீர்களோ அதை ஒரு போதும் நீங்கள் செய்வதில்லை என்று உறுதி பூணுங்கள்.
கடந்த தேர்தலில் மட்டும் அல்ல வரும் தேர்தலிலும் உங்கள் இருவரையுமே எதிர்நிலையில் நின்றுதான் களமாட வேண்டும் நான்.
என்றாலும், நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாடு உங்கள் கையிலும் வரும் என்பதாலேயே இந்தக் கோரிக்கைகள்.
சுய பரிசீலனை செய்தால் சரி...
ReplyDeleteசெய்தால் நல்லது தோழர். பார்ப்போம்
Delete