Monday, January 22, 2018

நல்லது நடக்கட்டும்.

வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான உறவுநிலையை எதனோடு ஒப்பிடுவது என்று யோசிக்க யோசிக்க எதுவுமே உருப்படியாக சிக்க மறுக்கிறது.
திரு கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதாவோடு ஒப்பிடலாமெனில் இவர்களுக்கிடையேயான வெறுப்பும் பகையும்கூட அந்த அளவு இல்லைதான். போதாமை இருக்கிறது.
இதற்கு இன்னொரு காரணமும் உண்டு
காரணம் இருபக்கிற பகையை ஊதிப் பெரிதாக்க ட்ரம்ப் மாதிரி ஒரு பகையூக்கி இங்கே இல்லை
இந்நிலையில் அடுத்தமாதம் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தமது நாடு பங்கேற்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.
இதைக்கொண்டாடிய தென் கொரியா தொடக்க விழா பேரணியிலும் தம்மோடு இணைந்து வடகொரியா பங்கேற்க வேண்டும் என்ற தனது ஆசையை சொன்னது
இதுகுறித்து சுவிட்சர்லாந்தில் இருநாடுகளும்கூடி ஆலோசனை நடத்துகின்றன
இந்த முயற்சி விளையாட்டையும் கடந்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை கொண்டுவரும் என்ற நம்பிக்கை இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாமஸ் பாச் கூறுகிறார்
செலவின மசோதாவை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் ட்ரம்பிற்கு இந்த நம்பிக்கையை குலைத்து போடுவதற்கான அவகாசம் இல்லை என்பதே நல்லது நடந்துவிடும் என்ற நம்பிக்கையை பலப்படுத்துகிறது
நல்லது நடக்கட்டும்.

Sunday, January 21, 2018

தனியாருக்கு லாவம் எனில்....?

பெட்ரோல் வெல இந்த ஆறு வருஷத்துல எவ்வளவு ஏறிடுச்சு, போக போக்குவரத்து தொழிலாளிகளோட சம்பளத்த வேற எவ்வளவு ஒசத்தியாச்சு. போக்குவரத்துக் கட்டணத்த ஒசத்தாம என்ன பன்ன முடியும்? என்கிகிற லகுவான வாதம் பொதுத் தளத்தில் அங்கங்கே வைக்கப் படுகிறது.
ரொம்ப நியாயம்போலத் தோன்றும் இந்தக் கருத்தில் நிறையவே நியாயம் இருக்கிறது.ஆனால் அதைவிட ஒரு பெருநியாயம் நம்மிடம் இருக்கிறது.
டீசல் விலை ஆறு வருடங்களில் மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது.
ஊழியர்களின் ஊதியம் உயர்ந்திருக்கிறது
இரண்டையும் மறுக்க இயலாது. இரண்டின் காரணமாகவும் அரசுக்கு நிறைய செலவு என்பதையும் மறுக்க இயலாது.
ஆனால் இதற்காகவெல்லாம் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவேண்டிய அவசியம் இல்லை.
2006 இல் இருந்து தனியார் பேருந்துகளுக்கும் பேருந்து கட்டணம் ஏற்றப்படவில்லை. ஆனால் இந்தச் செலவுகளைத் தாங்க இயலாமல் எந்தத் தனியார் நிறுவனமும் தனது பேருந்துகளை நிறுத்தவில்லை.
இன்னும் சொல்லப்ப்போனால் நியாயமான இடைவெளியில் எல்லா தனியார் நிறுவனங்களும் புதிய பேருந்துகளை மாற்றவே செய்தன. ஒழுங்காகப் பராமரிக்கவும் செய்தன.
உண்மையைச் சொல்வதெனில் பல அரசு நகரப் பேருந்துகளில் ஒலிப்பானைத் தவிர அனைத்தும் சத்தம் போடுகின்றன.கிழிந்த இருக்கைகள், சிதைந்த இருக்கைகள்.
ஆனாலும் நான் தொடர்ந்து அரசுப் பேருந்துகளில் மட்டுமே பயணிப்பவன். ஓட்டுநர்களின் தயவினால்மட்டுமே எனது பயணங்கள் சேதாரம் இன்றி தொடர்கின்றன..
தனியார் பேருந்துகளில் ஊதியம் குறைவு. ஆனால் அதை இயக்குவது எளிது. பல அரசுப் பேருந்துகளை இயக்கினால் முதுகுவலி வந்துவிடும்
எந்த முதலாளியும் நட்டத்தோடு பேருந்துகளாஇ இயக்கி இருக்கமாட்டார்.. எனில் லாவம் இருக்கிறது.
தனியாருக்கு லாவம் எனில்....?

Saturday, January 20, 2018

வாழ்க கேட்கும் வளமுடன்.

மணல வெளிமாநிலத்துக்கு அனுப்பி கொள்ள அடிக்கிறான். எவனாச்சும் கேக்கறானா?
பெட்ரோல் விலைய வாராவாராம் ஏத்துறான். எவனாச்சும் கேக்கறானா?
வெங்காயம் வெல அப்பப்ப வானத்த தாண்டுது. இத எவனாச்சும் கேக்கறானா?
இன்னிக்கு பஸ் கட்டணத்த தாறுமாறா ஏத்திருக்கான். யாராச்சும் கேக்கறானா?
ஆமா நாம எதத்தான் கேட்போமாம்?
எவனாச்சும் கேக்கறானானு கேட்போம்.
வாழ்க கேட்கும் வளமுடன்.

Thursday, January 18, 2018

அணில் கடித்த கொய்யா

அணில் கடித்த கொய்யான்னா டேஸ்டாதானிருக்கும் என்று சொன்ன பொடிசிடம் இன்னொரு பொடிசு சொன்னது "டேஸ்டான கொய்யாவதான் அணில் கடிக்கும்"

Wednesday, January 17, 2018

பெரம்பலூர் புத்தகக் கண்காட்சிகளின் அடையாளம்

கல்வி நிலையங்களே பெரம்பலூரின் அடையாளம்.
பெரம்பலூரை ஒரு மிக நவீன வசதிகளைக் கொண்ட பேரூர் என்றும் சொல்லலாம், மிகக் குறைந்தபட்ச நவீன கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும் சிறு நகர் என்றும் கொள்ளலாம்.
உண்மையைச் சொன்னால் எது ஒன்றை படிப்பதற்காகவும் எங்கள் ஊர் குழந்தைகள் வேறு ஊருக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. மருத்துவக் கல்லூரி உள்ளிட்டு எல்லாம் உண்டு எங்கள் ஊரில்.
அந்தமான் உள்ளிட்டு எல்லா மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து படிக்கும் குழந்தைகளையும் சேர்த்து எங்கள் ஊரில் உயர்கல்வி படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகம்.
இதில் ஏறத்தாழ 75 சதவிகிதம் பிள்ளைகளாவது எங்கள் ஊரில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வந்து நூல்களை வாங்கும் வழக்கத்தில் இருப்பவர்கள். அதிலும் பலர் பலமுறை வந்து வாங்கிப் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள்.
பக்கத்து ஊர் மக்களும் திருவிழாவிற்கு போவதுபோல் வர ஆரம்பித்திருந்த நேரம்.
நிகழ்சீகளை நடத்துவதற்கு ஸ்பான்சருக்கும் பிரச்சினையே இல்லாத ஊர்.
இதுவரை ஆறு பதிப்பகங்கள்வழி பத்து நூல்கள் வந்திருக்கு. அவறில் சில பதிப்பகங்கள் பெரம்பலூர் கண்காட்சியில் ஸ்டால் எடுத்த்வர்கள். அவர்களில் யாரும் முகம் சுழிக்கும் அளவிற்கு விற்பனை இருந்ததும் இல்லை.
கல்வி நிலையங்களே பெரம்பலூரின் அடையாளம் என்று தொடங்கினேன். தொடர்ந்து நடந்தால் புத்த்கக் கண்காட்சிகளே பெரம்பலூரின் அடையாளமாக மாறும்.
இப்படி இருக்க அதைத் தொடர்வதில் இவர்களுக்கு என்ன தயக்கம்?
இந்தத் துறையில் அனுபம் உள்ள என்களைப் போன்றவர்களை அழைத்துப் பேசினால் எந்தச் சிக்கல் தீர்ந்து போகாது?
அருள்கூர்ந்து தொடர்ந்து நடத்துங்கள்.
சத்தியம் செய்கிறேன்
ஒருநாள் பெரம்பலூர் புத்தகக் கண்காட்சிகளின் அடையாளமாக மாறும்.

Tuesday, January 16, 2018

எதனால் மரணம்?


சந்தேகத்திற்கிடமான ஒரு மனிதனின் மரணம் குறித்து விசாரிக்கத் தேவையில்லை என்று சொல்வது அவரது மகனே ஆயினும் அந்தக் கூற்றுக்காகவே அவனும் அவசியம் விசாரிக்கப்பட வேண்டியவன்

எதைப் பேசக்கூடாதென்று யார் அவரை நெருக்குகிறார்கள்?தன்னை என்கவுண்டர் செய்வதற்கு முயற்சி நடப்பதாக வும் ராஜஸ்தான் காவல்துறை தன்னை இம்சிப்பதாகவும் திரு தொகாடியா கூறுகிறார்.
அவர் இருப்பது குஜராத்தில்
அவரைக் கைது செய்ய வந்திருப்பது ராஜஸ்தான் காவல்துறை
இரண்டு மாநிலங்களிலும் மத்தியிலும் அவரது சொல் பேச்சைக் கேட்கக்கூடிய பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி.
அவர்களது ஆட்சி நடக்கக்கூடிய குஜராத்தில் அவர் மாயமாகிவிட்டதாக காவல்துறை சொல்கிறது.
இல்லை சர்க்கரை அளவு கணிசமாகக் குறைந்துவிட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை கூறுகிறது
தனது வாயை அடக்க அரசு முயல்கிறது என்கிறார். எனில்
எதைப் பேசக்கூடாதென்று யார் அவரை நெருக்குகிறார்கள்?
2015 இல் இவர்மீது ராஜஸ்தானில் பதியப்பட்ட வழக்குக்காக இவரை இப்போது தேடி வந்ததாக ராஜஸ்தான் காவல்துறை சொல்கிறது. எனில்,
1) இவ்வளவு காலம் எப்படி , ஏன் இவரைக் கைது செய்யாமல் விட்டு வைத்தார்கள்?
2) இவ்வளவு காலம் விட்டு வைத்தவர்கள் இப்போது அவரைத்தேடுவதற்கு அவரே குறிப்பிடுவதுபோல ஏதேனும் உள்குத்து இருக்கிறதா?
தொகாடியா கலவரத்தைத் தூண்டும்விதமாகப் பேசியதற்காக வழக்கு எனில் தமிழ்நாட்டில் அவர் இதைவிடக் கொடூரமாக பேசியதற்கு ஏன் வழக்குள் ஏதும் இல்லை?
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை சென்று சந்தித்த ஹர்திக் பட்டேல் மற்றும் காங்கிரச் தலைவர்களது இந்த செயலை மனுஇதாபமான நடவடிக்கையாகவே கொள்வோம் இப்போதைக்கு.
நமது அய்யங்களும் தெளிவுபெற வேண்டும், அவரும் நலம் பெற வேண்டும்.

அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?

Rise in BJP's vote share in Tamil Nadu: H Raja - India.comதோழர் P. Sakthi Balan ஒரு சிறிய காணொலியை அனுப்பி வைத்திருக்கிறார்.
ஒரு கூட்டத்தில் திரு எச் ராஜா பேசியதை பிடித்து ஒளிபரப்பினார்களா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியேவா என்பது தெரியவில்லை. அதில் ,
இரண்டு சாதிகளின் பெயரைச் சொல்லி அவர்கள் கோவிலுக்கு போகக்கூடாது என்று உரக்கப் பேசுகிறார்.
இரண்டு சந்தேகங்கள்
1) அது தொலைக்காட்சி தயாரித்த நிகழ்ச்சி எனில் அதை எப்படி ஒளிபரப்பினார்கள்?
2) இப்படிக் கேவலமாகப் பேசிய அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?
(அது எந்தத் தொலைக்காட்சி என்பதை அறிந்த நண்பர்கள் அறியத் தாருங்கள்)
பயமாய் இருக்கிறது ஒரு பெரிய தேசியக்கட்சியின் தேசிய செயலாளரை அவன் இவன் என்று பேசிவிடுவோமோ என்று

வலுத்துப்போயிருக்கிறது வானதி மேம்


வானதி மேம் அச்சேறுமுன் அறிக்கையை ஒருமுறை வாசித்துப் பார்த்து எழுத்துப் பிழை நீக்கி தரக்கூடாதா?
கடவுள் மறுப்புக் கொள்கை வலுத்துப் போயிருக்கிறது என்ற உங்கள் கருத்து கடவுள் மறுப்புக் கொள்கை உலுத்துப் போயிருக்கிறது என்று வந்திருக்கிறது

அகவியின் தலித்திய கவிதைகள்

இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு மூன்று நூல்கள் வந்திருக்க வேண்டும்.( Vetrimozhi Veliyeetagam) என்மீது கொண்ட பேரன்பால் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள். தொகுத்துத் தர இயலவில்லை. விடாது நச்சரித்துக்கொண்டிருந்த தம்பி திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் கோவத்தில் பேசுவதையே நிறுத்திக் கொண்டான். ஆனாலும் புத்தகத் திருவிழா முடிந்ததும் அவற்றைத் தொகுக்க வேண்டும். பெரம்பலூர் புத்தகத் திருவிழா சமயத்தில் கொஞ்சம் மெனக்கெட்டு சிறப்பாக வெளியீட்டு விழாவை பெரம்பலூரில் நடத்திவிட ஆசை. பார்ப்போம் இயற்கை என்ன செய்கிறது என்று. இரண்டு மூன்று நிறுத்தங்களுக்கு முன்னரே காலாவதியாகிவிட்ட பயணச்சீட்டோடுதான் என் பயணம் நகர்வதாகப் படுகிறது. பார்ப்போம்
இந்தநிலையில் எனதுஇளைய தோழன் அகவி Vinayaga Moorthyயின் “தலித் கவிதையியல்” யாளி பதிப்பகத்தின் வழியாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது. அட்டை மிக அழகாகவும் புத்தகத்தின் ஆழத்தை எடுத்துச் சொல்கிறவிதமாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
பெரம்பலூரில் இருந்து யாரேனும் எழுதமாட்டார்களா என்று என் நெஞ்சில் எப்போதும் கனன்றுகொண்டே இருக்கும் ஏக்கத்தை இந்தநூல் நிறைவு செய்திருக்கிறது.
அகவி மிகப்பெரிய எழுத்துக்காரன். என்ன, அந்த இளைஞன் இன்னும் இதை உணர்ந்தானில்லை.அந்த உண்மையை இவன் உணாரும் புள்ளியில் இவனிடமிருந்து நிறைய வெளிவரும்.
வாழ்த்துக்கள் அகவி. போக இன்னும் நிறைய இருக்கிறது.
முடியும் அகவியால்.
க. மூர்த்திDhahir Batcha போன்றோரின் நூல்களை ஆவலோடு ஏங்கி எதிர்பார்க்கும் இந்தப் பொருட்டற்றவனின் ஆசையை இந்த இளைய தோழர்கள் அன்போடு பரிசீலிக்க வேண்டும்.
வாசித்துவிட்டு எழுதுகிறேன்.
இப்போதைக்கு என் வாழ்த்தும் முத்தமும் அகவி

Monday, January 15, 2018

நாத்திகம் என்பது...

"கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனில்"

கடவுளின் பொற்பாதத்தை வணங்காவிட்டால் நீ படித்த படிப்பினால் ஒரு பயனும் விளைந்துவிடாது என்கிறார் வள்ளுவர்.

பார்த்தாயா பார்த்தாயா கடவுளின் திருவடியை வணங்காதவன் படிப்பு பாழென்று  வள்ளுவரே சொல்லிவிட்டார் என்று பலர் தாண்டக்கூடும்

இதை ஏன் வள்ளுவர் சொல்ல வேண்டும்?

வள்ளுவர் காலத்திலேயே யாரோ சிலர் கடவுளை வணங்க மறுத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்படி எழுத வேண்டிய தேவை வள்ளுவருக்கு வந்திருக்கிறது.

ஆக,

கடவுள் மறுப்பென்பது வள்ளுவர் காலத்திற்கும் பழசு. சரியாய் சொல்வதானால் மனிதன் கடவுளைத் தோற்றுவித்த மறுநாளே கடவுள் மறுப்பு ஆரம்பமாகி விட்டது வானதி மேம்

கவிதை 085

காணாமல்போன
பாப்பாவை
கண்டுபிடிக்கனுமாம்
பாப்பாவே கேட்கிறாள்

காதுகொடுக்கும் கல்வித்துறை...

“கல்வி என்பது ஒரு வாளியை நிரப்புவது அல்ல, நெருப்பைப் பற்ற வைப்பது” என்று ஒருமுறை வில்லியம் பட்லர் ஏட்ஸ் கூறினார். அதை தமிழ்நாடு பள்ளிக் கலித்துறை மிகச் சரியாக உள்வாங்கி நடைமுறைப்படுத்தத் துவங்கி இருப்பதாகவே படுகிறது. அதன் பள்ளிக் குழந்தைகளுக்கான பாடநூல் தயாரிப்பு பணிகள் இதை உறுதி செய்கின்றன.
பள்ளிக் குழந்தைகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வரையறுப்பதும், வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கேற்ப பாடநூல்களைத் தயாரிப்பதும் வழமையானதுதான். அந்த வகையில் தற்போது நடைபெற்றுவரும் பாடநூல் தயாரிப்பு பணியும் புதுமையானதெல்லாம் இல்லை. ஆனால் அதன் பின்னால் இருக்கக்கூடிய வருங்கால சமுதாயம் குறித்த கனவு கலந்த திட்டமிடலும் நேர்மையும் நேர்த்தியுமான செயல்பாடுகளும் நிச்சயமாய் புதிது.
வழக்கம்போல் இல்லாமல் இந்தமுறை ஒரு பெருந்திரள் கருத்துக்கேட்புக் கூட்டம் இதற்காக நடத்தப் பட்டது. இப்படியும் அப்படியுமாக ஏராளமான விவாதங்களாய்கூட நிகழ்ந்தன. நடந்த விவாதங்களின் தரம், சார்பு போன்றவற்றின்மீது நமக்கு பார்வை உண்டு. ஆனால் நடந்த விவாதங்களையும் கூறப்பட்ட ஆலோசனைகளையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகமும் பள்ளிக் கல்வித்துறையும் கூர்மையாகக் குறிப்பெடுத்துக் கொண்ட மிகவும் புதியதும் ஆரோக்கியமானதும் ஆகும்.
அனைத்துவகையான ஊடகங்களும் இதைக் கொண்டாடின. ஆனால் இந்தக் கூட்டமல்ல இதற்கான தொடக்கம். இதற்கும் முன்னமே கோடையில் அனைத்துத் துறை வல்லுனர்களையும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உயரதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறைச் செயலர் ஆகியோர் சந்தித்தனர். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு அமர்வுகள் நடந்தன. எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பெற்றோர், பலதுறை வல்லுனர்கள் என்று ஒவ்வொரு அமர்விற்கும் ஆறுபேர் வீதம் அழைக்கப்பட்டிருந்தனர். அனைத்துக் கூட்டங்களுக்கும் மேற்சொன்ன அதிகாரிகள் அனைவரும் வந்திருந்து ஆலோசனைகளை கவனத்தோடு கேட்டறிந்தனர். நான் கலலந்து கொண்ட அமர்வில் என்னோடு பிரபஞ்சன், பேராசிரியர் கல்யாணி, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார், எழுத்தாளார் இமயம் ஆகியோர் கலந்துகொண்டனர். புத்தகம் தயாரிப்பதற்கான பணியில் இத்தனை மெனக்கெடல்கள் இதற்கு முன்னர் நடந்திருக்குமா என்பது அய்யமே.
இப்படியாக துவங்கியிருக்கும் படப்புத்தகத் தயாரிப்புப் பணியை வாழ்த்துகிற அதேவேளை நமக்கான சில கோரிக்கைகளும் இருக்கின்றன.
நமது குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்கள் நம் மண்சார்ந்த கூறுகளோடு (NATIVITY) இருக்க வேண்டும் என்பது நமது முதல் கோரிக்கை. எடுத்துக்காட்டாக திசைவேகம் பற்றி பாடம் வருகிறபோது வழக்கமாக கடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் போல்ட் நூறு மீட்டர் தூரத்தை இத்தனை நிமிடத்தில் கடந்தார் என்று அவரது படத்தோடு பாடத்தை எழுதுவதற்கு பதில் பெரமபலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தகளப் போட்டியில் மாணவி ரம்யா நூறு மீட்டர் தூரத்தை என்று அவளது படத்தோடு வைத்தல் பொறுத்தமாக இருக்கும்.
அடுத்ததாக நமது நமது தொண்மச் சிறப்புகளை மாணவச் சமூகத்திற்கு கொண்டுசேர்க்கும் கருவிகளாக நமது பாடப் புத்தகங்கள் அமைய வேண்டும். வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் நமது தொன்மச் சிறப்புகளை நமது மாணவர்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதன் மூலம் தனது மண்ணின் தொன்மச் சிறப்புகளை அவன் அறிந்துகொள்வதன் மூலம் இந்த மண்ணை காப்பதற்குரிய தேவையை அவன் உணர்வான். மாறாக வறட்டுத்தனமாக முட்டுக்கொடுக்கிற காரியத்தைத் தவிர்க்க வேண்டும்.
ஆழ்கடல் ஆராய்ச்சி மையம் நாகப்பட்டினம், பூம்புகார், காரைக்கால் ஆகியப் பகுதிகளுக்கிடையில் ஆராய்ச்சி செய்ய உத்தரவிட்டது. ஆராய்ச்சியின் துவக்கத்திலேயே அந்தப் பகுதியில் கிடைத்த கற்களின் வயது எப்படிப் பார்த்தாலும் 4000 ஆண்டுகளுக்கு குறையாது என்று நம்பப்பட்டது. உடனே ஆழ்கடல் ஆராய்ச்சி மையம் நிதி இல்லை என்று கூறி ஆய்வினை நிறுத்தச் சொன்னது. அது அந்தப் புள்ளியில் வெளிப்பட்டிருந்தால் இந்தியாவின் தொன்மையான நாகரீகம் தமிழ் நாகரீகம் என்றாயிருக்கும்.
அமெரிக்காவின் ஃபோர்த் சேனல் உதவியோடு கிரஹாம் ஆன் ஹூக் தொடர்ந்த ஆராய்ச்சியின் முடிவு அந்த நாகரீகத்தின் வயது 11000 ஆண்டுகள் என்றது. அது முறையாக பிரகடனப் படுத்தப் பட்டிருப்பின் உலகின் ஆகத் தொன்மையான நாகரீகம் தமிழ் நாகரீகம் என நிறுவப் பட்டிருக்கும். ஆது செய்யப்படாததால் 6500 ஆண்டுகாலமே வயதுடைய மெசபடோமியா நாகரீகம் உலகின் தொன்மையான நாகரீகம் என்று நாமே கூறவேண்டிய நிலை இருக்கிறது.
”கல்” என்றால் தோண்டு என்று பொருள். தோண்டுதல் என்பது தேவையில்லாதவற்றை தோண்டித் தூர எறிவது. அதேபோல மனிதனிடம் இருக்கக்கூடிய தேவையில்லாத அழுக்குகளை தோண்டி எறிந்து அவனை பண்பட்ட மனிதனாக மாற்றுவதால்தான் அது கல்வி. அதைச் செய்து முடிக்கிற கருவிகளாக பாடப்புத்தகங்கள் அமைய வேண்டும்.
குழந்தைகளை பள்ளியிலிருந்து விரட்டுகிற காரியத்தை செய்யாமல் புத்தகங்களை வடிவமைப்பது அவசியம். ரொம்பச் சுறுக்கமாக சொன்னால் நிலாவை காட்டி குழந்தைகளுக்கு அம்மாக்கள் சோறுட்டுகிற மாதிரி பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு புத்தியை உட்டவேண்டும் என்று ரெண்டு கையேந்துகிறோம்.

நன்றி: தி இந்து 10.12.2017

கவிதை 084

வீடு வந்ததும் பேத்தியிடம் காண்பிக்கிறேன்
கொள்ளுத்தாத்தனின் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் கொள்ளுப்பேத்தியாய்
என் சட்டை ஜோபியின்மேல் வந்து ஒட்டிக் கொண்ட அந்த வண்ணத்துப்பூச்சியை
”நோட்லதான வரைஞ்சேன்
தாத்தாட்ட ஏன் போன”
என்ற அதட்டலுக்கு பயந்து
மீண்டும் அது
பேத்தியின் நோட்டில் படமானது
“ஐ, குட் பாய்” என்று
கைதட்டி குதித்து குதூகலிக்கிறாள் பேத்தி
‘கொள்ளுத்தாத்தனின் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் கொள்ளுப்பேரனாய்’ என்று
அருள்கூர்ந்து மாற்றித் தொடங்குங்கள்
இரண்டாவது பத்தியை

குருமூர்த்தி எனும்.....

சமீபத்தில் உச்சநீதி மன்றத்தின் நான்கு நீதிபதிகள் இந்தியத் தலைமை நீதிபதி குறித்து சில விமர்சனங்களை பத்திரிக்கையாளர்களிடம் வைத்தனர். உடனே அந்த நீதிபதிகளுக்குப் பின்னால் மோடிக்கு எதிரானவர்கள் இருந்து இயக்குகிறார்கள் என்கிறார் குருமூர்த்தி.
*******

அந்த நான்கு நீதிபதிகளுக்குப் பின்னாலோ முன்னாலோ மோடியின் எதிர்ப்பாளர்கள் இருப்பதாகவே இருக்கட்டும்
அவர்கள் நால்வரும் தலைமை நீதிபதியின் சமீபகால செயல்பாடுகள் குறித்துதானே விமர்சனம் வைத்தனர்
அதற்கு ஏன் மோடியின் ஆதரவாளரான உங்களுக்கு கோவம் வருகிறது திரு குருமூர்த்தி?
புரிகிறதா?

ஞாநி எனும் எழுத்தாளுமை

1983 கோடையில் “தேன்மழை” பத்திரிக்கை இளம் படைப்பாளிகளுக்கான 15 நாள் பயிற்சிப்பட்டறையை சென்னையில் நடத்தியது.
அடுத்தநாள் தோழர் ஞாநியும் மாலன் சாரும் வகுப்பெடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் ரெக்கை கட்டிக் கொண்டது.
தோழர் ஞாநி அப்போது “தீம்தரிகிட” பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்தார். A4 அளவில் வண்ணமயமாக அது வந்துகொண்டிருந்தது. மாலன் சார் (மாலன் நாராயணன்) அப்போது திசைகள் நடத்திக் கொண்டிருந்தார். இரண்டின்மீதும் .அன்றைய இளைஞர்களுக்கு ஒரு மோகம் இருந்தது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஒரு கட்டுரையை எங்கு தொடங்கி எப்படி நகர்த்தி எங்கு முடிக்க வேண்டும் என்பதில் எனக்கு ஏதேனும் இருக்கிறது என்று சொன்னால் அதி அன்றைய அவர்கள்து வகுப்புகளுக்கும் அதற்குப் பிறகான மாமரத்தடி நிழலில் அவர்களோடான எனது உரையாடலுக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது. அதற்காக ஞாநி தோழருக்கும் மாலன் சாருக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன்.
தோழரோடான எனது நெருக்கம் “காக்கை”யின் (Kaakkai Cirakinile) வெளியீட்டு விழாவிலிருந்துதான் தொடங்குகிறது. தோழர் இன்குலாப், தோழர் ட்ராட்ஸ்கி மருது, தோழர் வீர சந்தானம், அருள்மொழி, 
தோழர் ஞாநி ஆகியோர் பங்கேற்ற நிகழ்விற்கு நான்தான் தலைமை.
பங்கேற்றவர்களில் இன்குலாப், ஞாநி, மற்றும் அருள்மொழி ஆகியோரது உரைகள் வெகுவாய் ஈர்த்தன. அபோது சொன்னேன் ‘கருப்பும் சிவப்பும் சரியாய் இணையனும்”. இதுகுறித்து ஒரு தொடர் ஞாநி எழுத வேண்டும் என்று.
அடுத்தநாள் ஞாநி என்னை அழைத்தார்
”கருப்பும் சிவப்பும் மட்டும் போதாது எட்வின், நீலமும் இணைந்தால்தான் முழுமை பெறும். நிச்சயம் முயற்சி செய்கிறேன்” என்று சொன்னார்.
அதன்பிறகு நிறையமுறை அவரது வீடு சென்று சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது.
”தொடராக எழுதுவதில் சிரமம் இருக்கிறது. உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. வேண்டுமானால் கேள்விகளைக் கேளுங்கள். பதில்களைத் தந்து விடுகிறேன்” என்றார். இந்தப் பொறுப்பை நாந்தான் ஏற்றேன். இதன்பொருட்டும் அவரோடான உறவு கூடியது.
காக்கையில் அவரது கேள்வி பதில் பகுதி சிறப்பானதொரு கவனத்தைப் பெற்றது.
எட்வின், நீங்கள் பத்தி எழுதலாம், எழுதனும் என்று என்னை உற்சாகப் படுத்தியவர். ’65/66, காக்கைச் சிறகினிலே’ தொடங்கியபோது அழைத்து கொண்டாடி வாழ்த்தியவர்.
தனது அறுபதாவது பிறந்தநாளுக்கு அலைபேசி என்னை அழைத்திருந்தார். தம்பி நந்தனோடு (நந்தன் ஸ்ரீதரன்) போனபோது இருவரையும் அணைத்து மகிழ்ந்தவர்.
இரண்டு நாட்களுக்கு முன்னாள் புத்த்கக் கண்காட்சியில் வைத்து ஞாநியை தோழர் முத்தையா சந்தித்திருக்கிறார். வாரத்திற்கு மூன்றுமுறை டையாலிசிஸ் செய்யவேண்டிய நிலையிலும் மிகுந்த உற்சாகத்தோடு பேசியிருக்கிறார். ”காக்கை எஸ்டாப்ளிஷ் ஆயிடுச்சு” என்றிருக்கிறார்.
காக்கையை எஸ்டாப்ள்ஷ் செய்ததில் ஞாநியின் பங்கு மகத்தானது. போகிற திசை எல்லாம் காக்கையைச் சுமந்து திரிந்தவர்.
நாளையோ நாளை மறுநாளோ இல்லை இன்னும் கொஞ்சம் காலம் கடந்தோ என்னைத் தழுவ இருக்கிற மரணம் இன்றைக்கே தோழரை ஆரத் தழுவியிருக்கிறது.
எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் அழுகை வருகிறது ஞாநி.
எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்த எழுத்தாளுமைக்கு என் சார்பாகவும் காக்கையின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

ஜெயதேவனின் முச்சூலம்கைக்கு வந்துவிட்டது ஒருவழியாய் ஜெயதேவனின் “முச்சூலம்”
அவர் அதை அனுப்பி நான்கைந்து நாட்களாகி விட்டது. இன்றுதான் கைக்கு வந்தது. அதற்குள் மனிதர் படாதபாடு பட்டுவிட்டார். இது சகஜம்தான் என்பதை அவர் அறியாதவரும் அல்ல.


தமது படைப்பை வாசிக்கவேண்டிய முதல் பத்து நபர்களில் என்னையும் ஒருவனாக வைத்திருப்பவர். அந்த அன்பிற்கு நான் காலகாலத்திற்கும் கடமைப்பட்டவன்..
தற்போது இரா. முருகவேள் அனுப்பிய ”செம்புலம்” ஓடிக்கொண்டிருக்கிறது
போனவாரம் ஷாஜியின் (Shajahan) ”காட்டாறு” முடித்தேன்.
செம்புலத்தை முடித்துவிட்டு இதைத் துவங்க வேண்டும். இந்த நூலை ஆரூர் தமிழ்நாடனோடு சேர்த்து முத்தையாவிற்கும் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கென் நன்றி.
இதில் வந்த பெரும்பான்மைக் கவிதைகள் காக்கையில் (Kaakkai Cirakinile) வந்தவை. அவற்றில் பல எப்போதும் நான் அசைபோடும் கவிதைகள்.
’சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என்றொரு பஞ்ச் தெறித்த காலத்தில் இவர் எழுதினார்
“கடவுள் எப்போதும் தனியாக வருவதில்லை” என்று.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அதே கவிதையில் ஓரிடத்தில்
“கடவுள் அழுததில்லை” என்றும்
பிரிதோர் இடத்தில்
“எந்தக் கடவுளும் வாய்விட்டுச் சிரித்ததில்லை” என்றும் எழுதியிருப்பார்.
முத்தாய்ப்பாய்
“நமக்கான கடவுள் நம்மோடு சாப்பிட வேண்டும்” என்பார்.
இந்தக் கவிதையை அதிலுள்ள பகடியை, ஆழத்தை, ஆன்மாவை போகிற இடமெல்லாம் பைத்தியம்போல் கூறித் திரிகிறேன்.
நமது கடவுள் என்று சொல்லியிருந்தால் இது பத்தோடு பதினொன்று. ’நமக்கான கடவுள்’ என்கிறார். கொண்டாடுகிறோம்.
இந்தக் கவிதையை நிச்சயம் தொகுப்பில் வைத்திருப்பார் என்றே நம்புகிறேன்.
முழுக்க முழுக்க அரசியல் கவிதைகள் என்கிறார். எனில் இந்தக் கவிதைதான் அவரது ஆன்மீக அரசியலின் சாரம்.
இதுதான் ஆன்மீக அரசியல் எனில் அதைக் கொண்டாடத்தானே வேண்டும்.
படித்துவிட்டு முழுக்க எழுத வேண்டும்.
என் சார்பாகவும் காக்கையின் சார்பாகவும் கவிஞருக்கு வாழ்த்துகள்

Sunday, January 14, 2018

வண்ணக்கதிர் 14.01.2018


65/66, காக்கைச் சிறகினிலே மே 2017

எதைச் சொன்னாலும் நம்புமளவு நல்லவர்கள்தான் நாம். ஆனால், தெர்மாகோல் ஷீட்டால் வைகையை மூடினால் வைகை நீர் ஆவியாவதிலிருந்து தடுக்கலாம் என்று சொன்னாலும் அதை நம்ம்புமளவு நல்லவர்கள் இல்லை என்பது கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு செல்லூர் ராஜு அவர்களுக்கு தெரியாமல் போனதுதான் சோகம்.

வைகை அணையில் தண்ணீரின் அளவு  இருபது அடி அளவிற்கு குறைந்து போயிருக்கிறது. இது மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை கொண்டுவரும். இந்த நிலையில் கொட்டித் தீர்க்கிற கடுமையான வெப்பமானது இருக்கிற தண்ணீரிலும் ஒரு பகுதியை ஆவியாக்கிவிடுகிறது. அதை எப்படித் தடுப்பது என்று யோசித்த சில விஞ்ஞானிகள் தண்ணீரின் மீது தெர்மாகோல் அட்டைகளை மிதக்கவிட்டால் தண்ணீர் ஆவியாவதைத் தடுத்துவிடலாம் என்று அமைச்சருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். அதை அதிகாரிகளும் ஆமோதித்திருக்கிறார்கள்.

அமைச்சரும் தெர்மாகோல் அட்டைகளோடு புறப்பட்டு இரண்டு மூன்று அட்டைகளை நீரில் பயபக்தியோடு மிதக்க விட்டு அந்தப் பணியினைத் துவக்கி வைத்திருக்கிறார். அமைச்சரும் ஊழியர்களும் கரையில் நின்று வேடிக்கைப் பார்க்க ஊழியர்கள் படகிலே சென்று அட்டைகளை வீசியிருக்கிறார்கள். இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளாக வீசிய அட்டைகள் எல்லாம் கரையிலே ஒதுங்கிவிட்டன. பெரும்பகுதி அட்டைகள் பொடிப் பொடி துகள்களாய் மாறி மிதக்க ஆரம்பித்துவிட்டன.

நதியில் தெர்மாகோல் அட்டைகளைப் போட்டால் சிறிய காற்றிற்கே அவை பறந்துபோய்விடும் என்ற உண்மையோ அல்லது தெர்மாகோல் துகள்கள் மீன்களை அழித்துப் போடும் என்பதோ இந்த அறிவாளிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ அமைச்சருக்கோ எப்படித் தெரியாமல் போனது என்பதுதான் தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்க இந்த தெர்மாகோல் அட்டைகளுக்கான செலவு பத்து லட்சம் ரூபாய் என்று சொல்கிறார்கள்.

இவர்கள் அட்டைகளை மிதக்கவிட்ட ஏரியாவின் நீளம் சுமாராக எழுபது அடி அகலம் கிட்டத்தட்ட எழுபது அடி என்று அறிய முடிகிறது. எனில், இவர்கள் தெர்மாகோல் அட்டைகளை மிதக்கவிட்ட நீரின் பரப்பளவு 4,900 சதுர அடி. எனில், இவர்கள் பயன்படுத்திய தெர்மாகோளின் அளவு 4,900 சதுர அடி. ஒரு கணக்கிற்காக 5,000 சதுர அடி என்று வைத்துக் கொள்வோம்.

50,000 சதுர அடி என்கிற அளவிற்குதெர்மாகோள் அட்டைகளை மொத்தமாக வாங்கும் போது மொத்த விலைக்கே கிடைக்கும். ஒரு சதுர அடி பத்து ரூபாய்க்கு கிடைக்கும் என்கிறார்கள்.எனில் வாங்கப்பட்ட 5,000 சதுர அடி தெர்மாகோல் அட்டையின் விலை 50,000 ரூபாய் என்றாகிறது. மிச்ச செலவு என்கிற வகையில் மிகத் தாராளமாகக் கணக்கிட்டாலும் இன்னுமொரு 25,000 ரூபாய் அளவிற்கு வரும். ஆக எப்படித்தான் தாராளமாய் கணக்குப் பார்த்தாலும் மொத்த செலவு 75,000 ரூபாயய்த் தாண்டாது.

ஆக, எஞ்சிய 9,25,000 ரூபாய் எங்கு போனது என்ற அய்யம் பாமர ஜனங்களுக்கு வருகிறது.

9,25,000 ரூபாய் செலவான வகையில் 75,000 ரூபாய் ஊழல் என்றால்கூட ஒரு அர்த்தம் இருக்கிறது. 75,000 ரூபாஇ செலவு செய்த ஒரு வேலையில் 9,25,000 லஞ்சம் என்பதை எப்படி ஏற்பது?

இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது தோழர் முத்தையாவோடு பேசிக்கொண்டிருந்தபோது பண்ணை பசுமைக் கடைகள்மூலம் கூட்டுறவு சொசைட்டிகளையே ஏறத்தாழ திவால் நிலைக்கு இதே அமைச்சர் கொண்டு வந்திருக்கும் சோகத்தை விவரித்தார்.

பண்ணை பசுமை கடைகள் 50 ரூபாய் லிலையுள்ள காய்களை விவசாயிகளிடமிருந்து 25 ரூபாய்க்கு வாங்கும். மிச்சமுள்ள 25 ரூபாயை அரசு கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் நடத்தப்படும் பண்ணை பசுமை கடைகளுக்குத் தரும் என்பது ஏற்பாடு,. ஆனால் அந்தப் பணத்தை இதுவரை அரசு தராததாலும் இதில் நடந்த மற்ற சில ஊழல்களாலும் சொசைட்டிகள் ஆட்டம் கண்டிருப்பதாக உடைந்த குரலில் கூறினார்.

ஒன்றை மீண்டும் சொல்வோம் அமைச்சருக்கு,


எதை செய்தாலும் ஏற்கிற அளவிற்கு அவ்வளவு நல்லவர்கள் இல்லை நாங்கள்.’
****************************************************************************************  

ஸ்ரீவில்லிப்புதூர் அருகேயுள்ள தொட்டியபட்டி கிராமத்தில் உள்ள அருந்ததியர்களின் குடிசைகள் கொளுத்தப்பட்டு தரைமட்டமான கொடுந்துயரம் நிகழ்ந்துள்ளது. ரெய்டு குறித்தும் கிழிந்து கிடக்கும் அதிமுக அணிகளின் இணைப்பு குறித்தும் அக்கறைப்படுமளவிற்கு ஊடகங்கள் இது விஷயத்தில் ஏன் அக்கறை கொள்ளவில்லை என்பது தெரியவில்லை.

பொதுக் குழாயில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலாக தண்ணீர் பிடித்ததற்காக அருந்ததிய மக்களின் குடிசைகள் கொளுத்தப்பட்டு தரைமட்டமாக்கப் பட்டிருக்கின்றன.

இதைப் பற்றியும் பேசுவதாகக் காட்டிக்கொள்ளும் ஊடகங்களும் தலைவர்கள் சிலரும்கூடதொட்டியப்பட்டியில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில்என்றுதான் குறிப்பிடுகிறார்கள். இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட தகறாறு எனில் ஒரு பிரிவினருக்கு மட்டும் எப்படி பொருட்சேதமும் காயங்களும் ஏற்படும்?

இருசாராரும் தெலுங்கு பேசுபவர்கள் என்பது மனிதர்களை இணைக்க மொழி மட்டும் போதாது என்பதை உணர்த்துகிறது.  
*************************************************************************************  

இப்போது நடந்து கொண்டிருக்கும் அஇஅதிமுக வின் இரண்டு அணிகளுகளுக்கு இடையேயான சகலத்தையும் பிஜேபி தான் இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற கூற்றில் பொய் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த ஆட்சியை கலலைத்துவிட்டு தேர்தலை நடத்தினால் என்ன நடக்கும் என்பது பிஜேபிக்கு நன்கு தெரியும். போக ரெய்டு, நடவடிக்கை போன்ற பம்மாத்துகளால் வர இருக்கிற குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்தில் இருந்து வாக்குகளை அறுவடை செய்வத்ஜற்காக அது முயன்றுகொண்டு இருக்கிறது.


தேர்தலுக்குப் பிறகும் இவர்களது ஆட்சியை நீட்டிக்கவே அது விரும்பும். இவர்கள் அரங்கேற்றும் அசிங்கங்களைதிராவிடத்தின்கூறுகளாக அம்பலப் படுத்த முயற்சிக்கும்.

புதிது புதிதாக திட்டங்களை தமிழகத்திற்கும் அவர்கள் வழங்கக் கூடும். அதைப் பயன் படுத்திக் கொண்டு பிரதமரை, மத்திய அமைச்சர்களை, பிஜேபி தலைவர்களை தமிழகத்திற்கு அடிக்கடி கொண்டு வந்து காலூன்ற முயற்சிக்கும்.

அனைத்து கட்சியினரும் உஷாராக இருக்க வேண்டிய நேரம் .

******************************************************************************************* 

பன்முகத் தன்மைதான் இந்தியாவின் சிறப்பு. இன்னும் சொல்லப்போனால் மற்ற நாடுகள் ஒருவிதமான பொறாமையோடு இந்தியாவை மதிப்பதற்கே இந்தப் பன்முகத் தன்மைதான் காரணம்.

பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் இந்தப் பன்முகத் தன்மையை உடைத்து நொறுக்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

இந்தி தெரிந்த மந்திரிகள் இந்தியில்தான் பாராளுமன்றத்தில் இந்தியில்தான் உரையாட வேண்டும்என்று முடிவெடுத்திருப்பதும் அப்படியான ஒரு நடவடிக்கைதான்.

ஒற்றைக் கலாச்சாரமும், ஒற்றை மொழியும் இந்தியாவைக் கூறுபோடவே செய்யும் . எனவே பன்முகத் தன்மையை பாதுகாத்திடுமாறு ஒரு வேண்டுகோளை தமிழ் மக்கள் சார்பில் வைப்போம்.

*************************************************************** 

கடந்த காலத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் நல்ல பல நூல்களையும் மொழி பெயர்ப்புகளையும் வெளியிட்டிருக்கிறது. அவற்றில் பெரும்பான்மை தொட்டால் ஒடிந்துவிடும் நிலையில் இருக்கின்றன.


தமிழ், உளவியல், வரலாறு, பூகோளம், கணிதம், விஞ்ஞானம் என்று சகல தளங்களிலுமான நூல்கள் விரவிக் கிடக்கின்றன.

ஏறத்தாழ அழிந்துபோகும் நிலையில் இருக்கக் கூடிய இந்த நூல்களை மறுபதிப்பு செய்யும் முயற்சி நடப்பதாக அறிய முடிகிறது.

மிக நல்ல விஷயம்.
*********************************************************************************** 

நினைத்துப் பார்க்கவே முடியாத வீச்சோடு நிறைய இளைஞர்கள் முகநூலில் இயங்குகிறார்கள். அவர்களது கற்பனையை என்னமோ எதோவென்று ஒதுக்கிவிட முடியவில்லை.

சி.சு.முருகேசன் அப்படியொரு கவிதையை எழுதிருந்தார்.

தடுமாறும் நிலா.
முகம் திருத்திக் கொள்ள
ஒரு தடாகம் காணாமல்.
மாலை நெருக்க

நிலவின் கைகளில் பௌடரும் பொட்டும். அது தனது முகத்தை அழகுபடுத்திக் கொள்ள விரும்புகிறது. நீர்தழும்பும் தடாகம்தான் நிலவு முகம் பார்க்கும் கண்ணாடி. அதன் பொருட்டு தடாகம் தடாகமாக நிலவு அலைகிறதாம். எல்லாத் தடாகங்களும் வறண்ட பள்ளங்களாகவே இருப்பதால் தடுமாறுகிறதாம் நிலா.

தடாகம் தேடும் நிலா
முகம் திருத்திக்கொள்ளஎன்பது மதிரி செதுக்கினால் தேவலாம் என்று பட்டது.

வறட்சியை இவ்வளவு அழகாக சொல்ல முடியும் என்பதை எழிதி நிறுவியிருக்கிறார் முருகேசன். வாழ்த்துக்கள்.

*************************************************888

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...