இருப்பே கொள்ளவில்லை காமனுக்கு. எப்படா ஊருக்கு கிளம்புவோம் என்றிருந்தது. அப்படி ஒன்றும் தலைபோகிற வேலையுமில்லை ஊரிலும் கொட்டுகிற மழையில் எந்த வேலையும் கிடைக்கப் போவதில்லை. மட்டுமல்ல, வெயிலுக்குத்தானே தவிர மழைக்கெல்லாம் வீடல்ல அவனுடையது. இதையெல்லாம் சேர்த்துப் பார்;த்துக் கணக்குப் போட்டுத்தான் ஒரு பத்து நாளாவது மகளின் வீட்டில் டேரா போட்டுவிட வேண்டும் என்ற முடிவோடு வந்திருந்தான்.
“இப்படி உடாம கொட்டுதே. நாம அங்க போயிருக்க நேரம் பார்த்து இங்க மழையில் குடிச குந்திக்குச்சுன்னா என்னாய்யா பன்றது” என்று தயங்கிய சாலியையும் பெரும்பாடு பட்டு இழுத்துக் கொண்டு வந்திருந்தான்.
மகள் சொன்ன அந்த எச்சரிக்கை வார்த்தைகள் அவனை எரிச்சலின் விளிம்பிற்குக் கொண்டு சென்றது. இனி இங்கத் தங்கக் கூடாது. கிளம்பிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கும் அவனை உந்தித் தள்ளியது.
“நம்ப ஊர்ல குந்தற மாதிரி இங்க தின்னைல காலத் தொங்கப் போட்டு ஏதும் குந்திராதப்பா. குடியானத் தெரு ஆளுக வந்த மானியும் போன மானியுமா இருப்பாங்க. பாத்தாங்கன்னா ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடும்.
அவள் சொன்னதிலும் ஞாயம் இருக்கவே செய்தது. காமனுக்கு பீடி, சிகரெட்டு, வெற்றிலை, பாக்கு, புகையிலை, பட்டை, ஏன் தேநீர் குடிக்கிற பழக்கம்கூட கிடையாது. இதில் ஒன்றோ, இரண்டோ அல்லது எல்லாப் பழக்கங்களுமோ இல்லாத ஒரு பதினைந்து வயது பையனைக் கூட காலனியில் பார்க்க இயலாது.
“ஒரு பீடி இல்ல, தண்ணி இல்ல, பொம்பள ஷோக்கு இல்ல, ஏன் ஒரு டீத்தண்ணிக்கூட குடிக்கிறது இல்ல. இப்படி ஒன்னையும் அனுபவிக்காம என்னா மசுத்துக்குடா உசிரோட இருக்கிறது? போறப்ப ஒரு மசுரையும் கொண்டு போகப் போறது இல்ல. மனுஷன்னு பொறந்தா மிச்சம் மீதி வைக்காம அனுபவிச்சிட்டு சாகனுன்டா” என்று காமனை நக்கல் செய்யாத ஆட்களே காலனியில் இல்லை.
இப்படி எந்தப் பழக்கத்திற்குள்ளும் விழுந்துவிடாத காமனையும் கடந்த முப்பது வருடங்களாக உடும்பு மாதிரி இறுக்கிப் பிடித்திருக்கிறது ஒரு பழக்கம். காலையில் எழுந்ததும் நேராக ‘பிச்சை’ கடைக்கு போய் தினத்தந்தி பேப்பரை வாங்கி வந்து திண்ணையில் கால் மேல காலத் தொங்கப் போட்டு உட்கார்ந்து படித்தால்தான் ஆகும். விடாது மழை பெய்து கொண்டிருந்தாலும் ஒரு பழைய சாக்கை தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு போய்விடுவான்.
இவனுக்காகவே ஒரு தினத்தந்தியை தனியாக மடித்து வைத்திருப்பான் பிச்சை. இவனைக் கண்டதும் அநிச்சையாகவே பேப்பரை எடுத்து நீட்டி விடுவான். இவனும் காசைக் கொடுத்து பேப்பரை வாங்கிக் கொண்டு அங்கு நிற்காமல் கிளம்பி விடுவான். பிச்சையும் வாங்கிய காசை எண்ணிக்கூடப் பார்க்காமல் அப்படியே டப்பாவில் போட்டு விடுவான். சரியாக இருக்கும்.
“பள்ளிக் கூடத்து பெரிய வாத்தியாரே பழநிமுத்து டீக்கடைல வந்து பேப்பர் பார்த்துட்டு போராரு. காசு அழுது வாங்கிட்டு வந்து படிச்சாதான் ஆகும் எங்க வீட்டு சீமைல மொளச்ச இந்த சில்லா கலெக்டருக்கு” எரிச்சலோடு சொல்வது மாதிரிதான் இருக்கும். காலனிக்குள்ள பேப்பர் படிக்கிற புத்திசாலி தன் புருஷன் என்பதில் ரகசியமாய் பொங்கவேதான் செய்கிறது சாலிக்கு.
பெரிய வாத்தியார் வேண்டுமானால் பழநிமுத்து கடையில் உட்கார்ந்து பேப்பர் வாசிக்க முடியும். காலனிக் காரர்களால் அது முடியாது என்பதும் சாலிக்கு நன்கு தெரியும்.
ஊருக்குள் காமன் என்றால் யாருக்கும் தெரியாது. “தந்தி பேப்பர்” என்றால் நேற்றுப் பிறந்த பிள்ளைக்கும் நன்கு தெரியும். உண்மையைச் சொன்னால் இது ஆதித்தனாருக்கே கிடைக்காத கௌரவம். உண்மையைச் சொல்வதெனில் வேலைக்குத் தேவைப்படும்போது” ஏலே செத்தப் போயி நாங் கூப்பிட்டேன்னு அந்த ‘தந்திப் பேப்பர’ இளுத்துட்டு வாங்கடா” என்றால் நேரே காமன் வீட்டுக்கு வந்து விடுவார்கள்.
காலனிக் காரர்களை அவர்கள் அப்பா அம்மா வைத்த பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை. ஊருக்குள் மூன்று ராமசாமிகள். அடையாளம் தெரிய வேண்டி ஊர் மக்கள் அவர்களை வாத்தியார் ராமசாமி, அழைத்தனர். ஆனால் காலனியில் இருக்கும் ராமசாமியை “தொத்தக் காளை” என்றும் கந்தனை “தண்ணி வண்டி” என்றும் மாணிக்கத்தை ‘ப+ச்சி’ என்றும்தான் அழைக்கிறார்கள்.
இப்போது காலனி இளைஞர்களிடம் சின்ன சல சலப்பை இது உண்டு பண்ணியிருக்கிறது.
“நம்ம பசங்களும் படிச்சு அவங்கள மாதிரி டிரைவரா வாத்தியாரா, வந்தாத்தான் நம்மள பேர சொல்லிக் கூப்பிடுவாங்க போலடா” என்றான் சண்முகம். சண்முகம் ஊர் மக்களால் மம்புட்டி மகன் என்றே அழைக்கப்படுகிறான்.
“அப்பவும் கூப்பிட மாட்டங்கடா. அப்பவும் காலனி சண்முகம், காலனி கோவிந்தன் என்றுதான் கூப்பிடுவாங்க” என்று இடை வெட்டினான், வேலு. ஊருக்குள் வேலுவின் பெயர் கடப்பாரை பேரன்.
ஊர்க்காரர்கள் இப்படி அழைப்பதைப் பார்த்து காலனிக் காரர்களும் தங்களை ‘கடப்பாரை’ யென்றும், ‘மம்புட்டி’யென்றும் ‘தொத்தக்காளை’யென்றும் அழைத்துக் கொள்ள ஆரம்பித்து அப்படியே நிலைத்துவிட்டது.
இதில் காமனுக்கு ஏகத்துக்கும் வருத்தம்தான். ஆனாலும் ‘கடப்பாரை’ ‘மம்புட்டி’ ‘பூச்சி’, என்று மற்றவர்கள் அழைக்கப்படுகையில் தான் மட்டும் செய்தித்தாளின் பெயரால் அழைக்கப்படுவது தனக்கான அறிவு சார்ந்த அடையாளமாகவே காமனுக்குப் படும். வெளியே காட்டிக் கொள்வதில்லை என்றாலும் அதில் கொஞ்சம் திமிறேகூட உண்டு காமனுக்கு.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் கலை காமனிடம் அந்த எச்சரிக்கை வார்த்தைகளைப் போட்டு வைத்தாள். ஊர் நிலவரம் தெரியாமல் இவன்பாட்டுக்கு பேப்பரை போட்டுக் கொண்டு உட்கார்ந்து வாசிக்க அதை அந்த சனங்க பார்த்துவிட்டால் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தது. மற்றும் பேப்பர் வாசித்தது என்கிற வகையில்’ அது ரெட்டைக் குற்றமாகி விடுமே என்கிற பயமவளுக்கு.
அது மட்டுமல்லாமல் மருமகன் சங்கிலி மூலமாக கிடைத்த தகவல்களும் அவ்வளவு நல்ல விதமாக இல்லை. எனவே இருக்கப் பிடிக்கவில்லை காமனுக்கு. என்ன பாடுபட்டு சாலியை இங்கு கூட்டிவந்தானோ அதைவிட பெரும்பாடு பட்டு அவளை இங்கிருந்து கிளப்பினான்.
வேறு வழியில்லாமல் சாலியும் புலம்பிக்கொண்டே கிளம்பிவிட்டாள். கலைக்கும் சங்கிளிக்கும் காமனைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் வருத்தமோ கோபமோ கொள்ளவில்லை.
“பேருந்து நிலையம் ஒட்டி சாலையின் ஓரத்தில் கூடைத் தட்டுகளில் வைத்து வாழப்பழங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு கடையில்” ஆன வெல குதிர வெல சொல்றீயேம்மா” என்று முனகிக் கொண்டே ஒரு சீப்பு பூவம்பழம் வாங்கிக் கொண்டான். பையில் இடமில்லாததால் கையிலேயே பிடித்துக் கொண்டான்.
பேருந்து நிலையத்துள் நுழையும் போதே ஏழாம் எண் பேருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. கையை நீட்டிக் கொண்டே நடந்தவனைப் பார்த்து “விடுய்யா, போகட்டும். குந்த இடமில்லாம நிக்கிறாக. அடுத்த பஸ்ல போகலாம்” என்று தடுத்துப் பார்த்தாள் சாலி.” அட ஏறு புள்ள. எல்லா வண்டியிலும் கூட்டமாத்தான் இருக்கும்” என்று அவர்களுக்காக நின்ற பேருந்தில் சாலியை ஏற்றிவிட்டு தானும் ஏறிக் கொண்டான்.
பெண்கள் பகுதியின் முதல் இருக்கையில் சாய்ந்து நின்று கொண்டாள் சாலி. வாழைச் சீப்பை கண்ணாடிக்கும் இஞ்சினுக்கும் இடைப்பட்ட பகுதியில் போட்டு விட்டு இஞ்சினை ஒட்டினார்போல நின்று கொண்டான் காமன்.
முதல் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் அண்ணா சிலையில் இறங்கிக் கொள்ளவே சாலிக்கு உட்கார இடம் கிடைத்தது. உட்கார்ந்தவள் இடுப்பிலிருந்து சுருக்குப் பையை எடுத்து வெற்றிலை போடுவதற்கு ஆயத்தமானாள்;.
“நம்ம வீட்டுத் திண்ணைல காலத் தொங்கப்போட்டு குந்தக் கூடாதுங்குறது என்ன ஞாயம்” என்று விடாது உளைந்து கொண்டே வந்தான் காமன். நெஞ்சு வலியே வந்துவிடும்போல் இருந்தது அவனுக்கு. இது எது பற்றியும் சஞ்சலப்பட்டுக் கொள்ளாத சாலி எச்சில் துப்ப தோதாக இருக்குமென்பதால் சன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் இந்தப் பக்கமாக நகர்ந்து சன்னல் இருக்கையில் தர வேண்டுமாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.
இன்னும் கொஞ்சம் பேசவிட்டால் புகையிலை எச்சில் தெளித்துவிடுமோ என்ற பயத்தில் சரி என்பதுபோல் தலையை ஆட்டி கொண்டே அந்தப் பெண் இடம்மாறி உட்கார்ந்தாள். ஆத்துப்பாலம் வந்ததும் ஏறத்தாழ பேருந்தே காலியானதாக இடது பக்க முதல் ஒற்றை இருக்கை காமனுக்கு கிடைத்தது. உட்கார்ந்தான். பேருந்து பால் பண்ணையைத் தாண்டியபோது தனது வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்ட நடத்துனர் முன்னே வந்து இஞ்சின் மீது சம்மனம் போட்டு உட்கார்ந்து கொண்டே ஓட்டுனரிடம் கை நீட்ட குறிப்பறிந்த ஓட்டுநர் பக்கத்தில் கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினார்.
காலி பாட்டிலை வாங்கிக் கொண்டே ஓட்டுநர் கேட்டார் “எறக்கம் எங்கப்பா?”
“மேட்டுத் தெருல ரெண்டு டிக்கட், காலனில ரெண்டு டிக்கட் அப்புறம் வேற எங்கையும் இல்ல. நேரா பஸ் ஸ்டான்ட்தான்”
“சொசைட்டில லோன் போட போகனும்னியே எறங்;கிப் போகலாமா?” எனக்கேட்ட ஓட்டுனரிடம்” ரவி வரானாப் பாப்போம் கோவிந்து. வந்தான்னா போலாம். அவுங்க அப்பாவ கூட்டிக்கொண்டு ஆஸ்பிடல் போகனும்னான். வராட்டி ஓவர் டைம் பாக்கனும்” என்றவாறு தொடர்ந்து பேசிக் கொண்டே வந்தார்கள்.
காலனி வந்ததும் சாலியும் காமனும் இறங்கிக் கொண்டார்கள். இறங்கிய கையோடு காமன் வாழைப்பழச் சீப்பை எடுக்க மறந்ததைக் கவனித்த சாலி “சத்தம் போட்டு வண்டிய நிறுத்துய்யா. வாழப்பழத்த மறந்துட்ட” என்று இறைந்த சாலியிடம்
“மறக்கல புள்ள. போகட்டும் விடு. ஒரு விஷயமாதான் வச்சுட்டு வந்தேன்”.
“ஏய்யா கிறுக்கு ஏதும் புடுச்சிறுக்கா ஒனக்கு. தெரிஞ்;சே வச்சிட்டு வந்தாராமுல்ல தொர. பதினஞ்சு ரூவா வெளங்குவியா நீ”
கத்திக் கொண்டிருந்த சாலியிடம் “விடு புள்ள. அந்தக் கண்டக்டரு மேட்டு தெருவுல ரெண்டு டிக்கட், காலனில ரெண்டு டிக்கெட்டு சொன்னாருல்ல”.
“அதுக்காவ?”
“ரெண்டு சனங்களையும் ஒரே பேரால கூப்பிடுற மனசு வேற யாருக்கு இருக்கு?”
“அதுக்காவ”
“அதான் அவரோட மனசுக்கு ஏதாவது செய்யனும்னு தோணிச்சு. அவருக்காகத்தான் அங்கேயே அத உட்டுப்புட்டு வந்தன்”
சாலியின் முறைத்தலை அலட்சியம் செய்தவாரே நடையைக் கட்டினான் காமன்.
நன்றி: "கல்கி"