Thursday, February 25, 2021

கவிதை 18

 ஸ்ரீதேவி இறந்த அன்று எழுதியது

எனவே ஸ்ரீதேவி....
**********************
ஆமாம்தான்
திருடினான்தான்
மூன்றுபிடி அரிசியை
கொஞ்சம் புளியை
ஆமாம் ஆமாம்
திருடினான்தான்
அந்தப் பழங்குடிப் பையனின்
கொள்ளுத் தாத்தனிடமிருந்து
வனத்தைத் திருடி
வயலாக்கி
அதில் விளைந்த நெல்லை
அவனது பாட்டனின் வனத்தில்
ஒரு துண்டு திருடி
ஆலையாக்கி
அவித்து
உலர வைத்து
அரைத்து
அரிசியாக்கி
அவனது அப்பனின் வனத்தில்
சாலை போட்டு
மாமனின் காட்டு மரத்தில்
வண்டி செய்து
பங்காளியின்
காடு திருடி கட்டப்பட்ட
கடையிலிருந்து
ஆமாம்
திருடினான்தான்
மூன்றுபிடி அரிசியையும்
துளியூண்டு
புளித்துண்டையும் திருடினான்தான்
காடு திருடியவர்கள்
துளியூண்டு புளி திருடியவனை
கொன்று போட்டிருக்கிறார்கள்
கொலையைச்
சுடச்சுட
படமெடுத்து
மானுட நெருடலேதுமின்றி
வலை ஏற்றி இருக்கிறார்கள்
படங்களில்
சாவதாய் நடிப்பீர்கள் ஸ்ரீதேவி
அந்தப் படத்தில்
இயல்பாய் செத்திருக்கிறான்
அதாவது
சாவதாய் வாழ்ந்திருக்கிறான்
ஸ்ரீதேவி
இத்தனை எழுதியும்
எவ்வளவு அழுதும் ஆறவில்லை
ஆறும்போது
உங்களுக்கொரு இரங்கலை சொல்வேன்
போய் வாருங்கள் ஸ்ரீதேவி

பார்ப்பணியம் இருக்கிறது கமல்

 எப்படிப் பார்த்தாலும் கலைஞரின் பொதுவாழ்க்கையின் நீளம் 75 ஆண்டுகள்

சரியாக, தவறாக, இயல்பாக, முரணாக எத்தனையோ செய்திருக்கிறார்
கொள்ளவும் விமர்சிக்கவும் ஏராளம் இருக்கிறது அவரிடம்
அதை தாராளமாக யார் வேண்டுமானாலும் செய்யலாம்
75 ஆண்டுகால செயல்பாடுகளை விமர்சிக்காமல் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியும் செயல்பட்டதுதான் குற்றம் என்பது மாதிரி நக்கல் கலந்து நீங்கள் பேசியதை
கைதட்டி ரசித்தவர்களே சிறிது நேரம் கழித்து யோசித்துப் பார்த்தபோது உங்களை அசிங்கமாகப் பார்க்கத் தொடங்கி இருப்பார்கள்
இதை அறியாமல் செய்பவர் அல்ல நீங்கள்
சமீபத்தில் யூ ட்யூப் சேனல் வைத்து நடத்தும் நிகழ்ச்சியில் பேசும்போது
யூ ட்யூப் எப்போதோ வந்திருக்க வேண்டிய தொழில் நுட்பம்
போட்ட முதலுக்கு துரு பிடிக்கிற வரைக்கும் சம்பாதிக்க ஆசைப்படும் முதலாளிகளின் சுயநலம்தான் அதைத் தடுத்தது என்று எவ்வளவு சரியாகப் பேசினீர்கள்
இப்படிப் பேச எவ்வளவு துணிச்சலும் புத்தியும் வேண்டும்
அப்படிப்பட்ட நீங்கள் வயோதிகத்தைக் கிண்டல் செய்கிறீர்கள் என்றால்
அதன் பின்னணியில்
அரசியல் இருக்கிறது
மதம் இருக்கிறது
மத அரசியல் இருக்கிறது
ஜாதி இருக்கிறது
ஜாதி அரசியல் இருக்கிறது
சுத்தி வளைப்பானேன்,
பார்ப்பணியம் இருக்கிறது கமல்

Sunday, February 14, 2021

தேசத்தைக் காத்தல் செய்வோம்

 





வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளின் ரசிகன் நான்

தோழர் கருப்பு அன்பரசன் முகநூல் பக்கத்தில் இருந்து இந்தப் படத்தை எடுத்தேன்

நெகிழ்ந்து போனேன்

ராணுவத்தில் பணியாற்றும் தனது மகனை போராட்டக் களத்தில் இருக்கும் விவசாயத் தந்தை சென்று சந்தித்த

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த தருணமதுஅந்நியர்களிமிருந்து தேசத்தைக் காக்கிற பணியில் இருக்கும் மகன்

உள்ளூர் கார்பரேட்டுகளிடமிருந்து

தேசத்தின் உயிர்த் தொழிலான விவசாயத்தைக் காக்கிற பணியில் இருக்கும் தந்தை

எகிப்தில் மக்கள் போராட்டத்தின்போது

போராட்டக் களத்தில் இருக்கும் தனது தாயை

அவர்களை அடித்து விரட்ட வேண்டிய பணியில் இருந்த மகன் சந்திக்கிறான்

வாழ்த்துகிறான்

ஆனால் அவர்களை அடித்து விரட்ட வேண்டியது தனது பணி என்கிறான் வேதனையோடு

தாய் சொல்கிறார்

போடா மகனே

நீ போய் உன் வேலையைப் பார்

நான் என் வேலையைப் பார்க்கப் போகிறேன்

நமது தந்தை மகனிடம் என்ன சொல்லிப் பிரிந்திருப்பார்?

நீ முகாம் போ

நான் களம் போகிறேன்

தேசத்தைக் காத்தல் செய்வோம்


கவிதை 17

 பேருந்து நிலையம்

ஏதோ ஒரு நடத்துநரின் தொடர் விசில்
ஏதோ ஒரு பறவையின் தொடர் குரல்
எதற்கு எது எச?

கவிதை 16

 அக்காப் பாப்பாவும்

தங்கச்சிப் பாப்பாவும்
படுக்கை அறைச் சுவரில்
வரைய ஆரம்பித்தார்கள்
அக்காப் பாப்பா மரமொன்று வரைய
தங்கச்சிப் பாப்பா மரம்போன்ற ஒன்றை வரைந்தாள்
மரம் போன்றதன் கிளை போன்றதன் மேல்
பறவை போன்ற ஒன்றையும்
வரைந்து வைத்தவள்
மரம் போன்றதில் பறவை போல ஒன்றிருப்பதால்
மரம் போன்றதே மரமென்றும்
அக்கா வரைந்தது மரமே ஆயினும்
பறவை போன்றேனும் ஒன்றில்லாத காரணத்தால்
அது மரம் இல்லை என்றும் சாதிக்கிறாள்
தங்கச்சிப் பாப்பா

Friday, February 5, 2021

கவிதை 15

 தொடர் தும்மலென்னை குலுக்கி எடுத்தபோது

படிகளின் மையத்தில் இருந்தேன்
மூக்கும் கண்களும் உடைந்து ஒழுக
துடைத்து சுத்தமாகி
ஆசுவாசப் படுத்திக் கொண்டபோது
ஏறிக்கொண்டிருந்தேனா அல்லது
இறங்கிக் கொண்டிருந்தேனா என்ற
அய்யம் தொற்றிக் கொண்டது

Wednesday, February 3, 2021

கவிதை 14

 விற்றுக்கொண்டே இருக்கிறோமென்பது

எம் மீதான உங்கள் குற்றச்சாட்டு
கடலை காடுகளை நதிகளை நீரை
மணலை மலைகளை எண்ணெயை
ஆகாசத்தை விமானத்தை வங்கியை
இன்சூரன்சை
ஏ இந்தாப்பா கைவலிக்கிறது
சுருக்கமா சொல்கிறேன்
அனைத்தையும் விற்பதற்காகத்தானே
வாக்குகளை வாங்கினோம்
ஈன விலைக்கு விற்கிறோமென்பது
அடுத்தக் குற்றச்சாட்டு
எமக்கு வாக்களித்த மக்கள் ஆசையற்றவர்கள்
மலிவாகத்தான் கொடுத்தனர் தம் வாக்குகளை
நாங்களும் மலிவாகவே விற்கிறோம்
பாரம் குறைவதென்பது ஜென் சுகம் தெரியுமா
குறைத்திருக்கிறோம்
விற்பதற்கு இனி ஏதுமில்லை என்ற ஏளனம் ஆகாது
அனைத்தையும் அவர்களுக்கு விற்ற எங்களுக்கு
அவர்களை விற்கவும் தெரியும்

01.02.2021 அன்று நிதிநிலை அறிக்கை வாசித்து முடிக்கப்பட்டபோது

Monday, February 1, 2021

கவிதை 13

 நஞ்சுக் கோப்பையை எம் மீது நீட்டுகிறீர்கள்

ஆயுளை இரட்டிப்பாக்கும் பானமென்கிறீர்கள்
நஞ்சு கொல்லுமென்கிறோம்
இருக்கட்டுமே
தயாரித்தாயிற்றென்பதால்
குடித்துவிட வேண்டுமென்று கட்டளையிடுகிறீர்கள்
ஒன்றாய் திரண்டு
நீங்கள்
கோப்பையைக் கிடாசும்ரை
நகரமாட்டோமென்றதும்
ஒன்றரை வருடத்திற்கு
கருணையோடு
நஞ்சு தருவதை நிறுத்தி வைப்பதாகக்
கூறுகிறீர்கள்
ஒன்றரை வருடம் கழித்தாலும்
அது புளித்த நஞ்சுதான்
அறிவோம்

கவிதை 12

 எத்தனை டிராக்டர் பேரணி நடத்தினாலென்ன?

அத்தனை நியாயங்களும்
உம் பக்கம் இருந்தாலும் என்ன?
எத்தனை உயிர்கள் போனாலும்தான் என்ன?
பெரும்பான்மை இருக்கிறது
குதிக்கவே குதிப்போமென்று குதிப்பீர்கள் என்றால்
ஒன்று சொல்வேன்
சாக்ரடீசிற்கு விஷம் கொடுத்த பெரும்பான்மையை
துப்பிக் கொண்டுதான் இருக்கிறது
சாக்டீசை தத்தெடுத்த வரலாறு

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...