Saturday, April 30, 2011

ஆனால் நம்மால் முடியும்.உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்திருந்த நேரம். இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையான இளைஞர்கள் ஏதோ இந்தியா தனது பிறவிப் பயனை அடைந்துவிட்டதாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் என்று சொல்லி அவர்களை மட்டும் தனிமைப் படுத்திவிடவும் முடியாது. ஆறிலிருந்து அறுபது வரைக்கும் என்றும்கூட சொல்லிவிட முடியாது. எண்பதைக் கடந்துவிட்ட, கிரிக்கெட்டை அதிகமாய் நக்கலடிக்கிற, எனது தந்தைகூட ”என்னடா ஜெயிச்சுட்டாய்ங்களா?” என்று கேட்டு இந்தியாவின் வெற்றியயைத் தனது பேரனோடு கொண்டாடுகிறார். டோனி அடித்தப் பந்து காற்றிலே பறந்து ஒன்று, இரண்டு, மூன்று,... ஆறாக எல்லைக் கோட்டையும் காற்றிலேயேக் கடந்ததுதான் தாமதம் என் பையன் எனக்கு மிட்டாய்த் தருகிறான். எவ்வளவு முன்னேற்பாடு பாருங்கள். கடந்த தீபாவளி அன்றுகூட எங்கள் ஊரில் இவ்வளவு பட்டாசுகளும் வான வேடிக்கைகளும் இல்லை. இரண்டு மணி நேரத்துக்கு வானத்தை வண்ண வண்ணமாய் கலங்கடித்து விட்டார்கள்.

“ ஒரு வருஷம் ரெண்டு வருஷமா. இருபத்தியெட்டு வருஷக் கனவாச்சே?” கலங்கக் கலங்க அவனது நண்பனிடம் உருகுகிறான் பதினேழே வயதான கிஷோர்.  
எனது தந்தை வைத்தக் கண்ணை எடுக்காமல் தொலைக் காட்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எனக்கு ஆச்சரியமாயிருந்தது. “ பதினோரு முட்டாள்கள் விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிற விளையாட்டுன்னு ஷா சரியா சொன்னாண்டா“என்று கிரிக்கெட்டை கேவலமாகப் பேசும் என் அப்பா அரை இறுதி ஆட்டத்தையும் இறுதி ஆட்டத்தையும் பந்து வீணாகாமல் ரசித்துப் பார்க்கிறார். என்ன ரசாயன மாற்றம் நடந்தது. செய்தியைத் தவிர வேறு எதையும் தொலைக் காட்சியில் பார்க்காத அப்பா எப்படி இப்படி ஆனார்?

ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே இதற்கு விடை கிடைத்தது. 

“ இந்த தோனிப் பயலுக்கு ஒரு மெயில் அனுப்பனுண்டா”  என்று உற்சாகமாய் சொல்லிக் கொண்டே என்னிடம் வந்தார். அடக்க முடியாமல் கேட்டே விட்டேன், “ ஏம்ப்பா, என்ன ஆச்சு உங்களுக்கு?”

“ இது விளையாட்டில்லடா, போர். ஜெயிச்சிருக்கோம். சும்மா இல்ல, அரை இறுதியில பாகிஸ்தான. அதக்கூட விடு, அது அந்த நாட்டுக்கு நாம கொடுத்த செய்தி. பைனல் நமக்கும் அவனுக்குமான யுத்தம். ஒண்ணர லட்சம் பேத்தக் கொன்னு நம்ம இனத்தையே அழிச்சவன ஜெயிச்சிருக்கோம்” கொஞ்சம் மிரண்டே போனேன். இவ்வளவு நீளமாய் விடாமல் அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. உணர்ச்சிப் பிழம்பாய் மாறிப் போயிருந்தார். 

" நம்ம அப்பாவா இது?.” வீட்டிலிருந்த அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. யாரும் அப்பாவை இந்த நிலையில் பார்த்ததில்லை. கொத்து கொத்தாக் கொன்னு குவுச்சுட்டானுங்களே” என்பது மாதிரி அவ்வப்போது புலம்பிக் கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை, நமது இனத்தை அழித்தவனை நம்மால் ஒன்னும் செய்ய இயலவில்லையே என்ற அவரது ஏமாற்றத்தை, ஆற்றாமையை ஆதங்கத்தை ஏறத்தாழ லட்சம் பேர் நேரடியாகவும் , பல கோடி பேர் மறை முகமாகவும் பார்த்துக் கொண்டிருக்கும் போது தோனி துவைத்துத் துவைத்துத் தோற்கடித்ததைப் பார்க்கப் பார்க்க ஏதோ தமிழர்களைக் கொன்றொழித்த இலங்கை ராணுவத்தையே நமது பிள்ளைகள் மட்டையும் பந்தும் கொண்டு சின்னா பின்னப் படுத்தியதாய் ஒரு மகிழ்ச்சி.

” லட்சம் துப்பாக்கிய வச்சிருக்கிற ராணுவம் செய்யாதத ரெண்டு பேட்டையும் ஒரு பந்தையும் வச்சு தோனி சாதிச்சுட்டான்ல தாத்தா,”   உணர்ச்சி வசப்பட்டு அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று நானே பயந்து கொண்டிருந்தால் கிஷோர் குறுக்கேப் புகுந்து அவரை உசுப்பி விடுகிறான். இதைக் கேட்டதும் பேரனோடு கை குலுக்கி ஆமோதிக்கிறார்.

“அப்பா இது விளையாட்டுப்பா. இதுக்குப் போயி இப்படி டென்ஷனாகுறீங்களே,” என்று முடிக்கக் கூட இல்லை,” இந்தக் கம்யூனிஸ்டுகளே இப்படித்தாண்டா கிஷோர். அதனாலதான் அவங்களுக்கு தேச பக்தியப் பத்தி அத்வானியெல்லாம் வகுபெடுக்கிறான் ,” என்று சீறவே ஆரம்பித்துவிட்டார். அவ்வளவுதான் வீட்டில் உள்ள அனைவரும் சிரிக்கிறார்கள். அவர்களுக்கு என்னையோ நான் எனது சொந்தக் கட்சியாய் மதித்து ஏறத்தாழ சார்ந்து வாழ்கிற கட்சியையோ யார் கிண்டலடித்தாலும் சிரிப்பு வரும். விடுங்கள் நாடே சிரிப்பாய் சிரித்துக் கிடக்கிறபோது நம்ம வீட்டில் நம்மை வைத்து கொஞ்சம் சிரித்தால் குறைந்தா போய்விடும்.

கொஞ்சம் வெப்பம் தனிந்தவராய் என்னிடம் வந்து அமர்ந்தார். எப்படி அவரிடம் தொடங்குவது என்று தெரியவில்லை.

“ அப்பா, மேச்ச முழுசாப் பார்த்தீங்களாப்பா?”

“ அந்தப் புள்ளையாண்டான் தோனி கடேசியா அடிச்ச ஆறு வரைக்கும் பார்த்தேன். அதுக்கு என்ன?”

“யார் யாரெல்லாம் மேச்சப் பார்த்தாங்கப்பா?”

“ இந்தச் சின்னப் புள்ள ராகுல் , அவன் எப்படி குதூகலமா இந்த வெற்றியக் கொண்டாடினான் தெரியுமா?”

”அப்புறம்?” 

“ஏன், சோனியா, நின்னுக்கிட்டே கூட பார்த்துச்சே. எந்த வித்தியாசமும் இல்லாம எல்லோருக்கும் கையக் கொடுத்து மகிழ்ச்சியப் பகிர்ந்துகிச்சே”

வளர்க்க விரும்பாமல் நேரடியாய்க் கேட்டேன்,” ராஜ பக்‌ஷே உக்காந்திருந்தாரே பார்த்தீங்களாப்பா?”

“ ‘உக்காந்திருந்தாரே’ என்னடா?, உக்காந்திருந்தான். அவனுக்கெல்லாம் மரியாதைக் கொடுத்துக்கிட்டு”

”சரிப்பா, உக்கார்ந்திருந்தானே ,பார்த்தீங்களா?”

“ம்.. , பார்த்தேன்”
“ அப்புறம் எங்கப்பா நீங்க ஜெயிச்சீங்க?”  

ரொம்பவும் உணர்ச்சி வசப் பட்டுவிடுவாரோ என்று பயந்து கொண்டேதான் சொன்னேன். நல்ல வேலையாக அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. எதையும் காது கொடுத்து அமைதியாக, உணர்ச்சி வசப்படாது விவாதிக்கும் பழைய அப்பாவாக மாறிக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்த்தது. ஆனாலும் விட்டுக் கொடுக்காமல்தான் பேசினார்.

“அதுக்கென்ன இப்ப அவுனுங்க கிழிந்து சின்னா பின்னமான கண்றாவிய அவன் நேர்ல பார்த்ததே ஒரு தண்டனைதானேடா?”

“இல்லப்பா, இதே இறுதி ஆட்டம் லண்டன்ல நடந்திருந்தா ராஜ பக்‌ஷே அங்கப் போய் உட்கார்ந்து இந்த ஆட்டத்தப் பார்த்திருக்க முடியாது தெரியுமா?” 

”அதெப்படி?”

" அங்கிருக்கும் தமிழர்கள் அனுமத்திருக்க மாட்டார்கள்”

”அவங்களால என்ன செய்ய முடியும்?”

“செஞ்சாங்களே, இதே ராஜபக்‌ஷேவை லண்டனில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்று உரையாற்ற அழைத்திருந்தது. இவரும் போனார். ஆனால் கடும் பனியையும் பொறுத்துக் கொண்டு ஒன்று திரண்டு, ஒரு போர்க் குற்றவாளியை, ஒரு லட்சத்திற்குமதிகமான மக்களைக் கொன்று குவித்த கொலைக் குற்றவாளியை இந்த மண்ணில் பேச அனுமதிகக்கூடாது என்று போராடவே நியாயம் உணர்ந்த இங்கிலாந்து அரசு அவரை உடனே வெளியேறச் சொன்னது. அவரும் உயிருக்கு பயந்து பேசாமலே ஓடிப் போனார்”

“ஆஹா”

“ செத்துப் போன பார்வதியம்மா உடலுக்கு அஞ்சலி செலுத்தப் போன, இழவுக்குப் போன திருமாவளவனையே அனுமதிக்காம திருப்பி அனுப்பின ராஜ பக்‌ஷேவ நாம நாற்காலி போட்டு கௌரவமா உக்கார வச்சு ஆட்டத்தப் பார்க்க அனுமதித்து இருக்கோம். இப்ப சொல்லுங்க”

எதுவும் பேசவில்லை அவர்.சிறிது நேரம் அமர்ந்திருந்தவர் எழுந்து தூங்கப் போய்விட்டார். நானும் வலைகளை மேயப் புறப்பட்டேன்.யார் வலை என்று சரியாய் ஞாபகமில்லை அநேகமாக ஹேமாவின் வலையாக இருக்கவேண்டும். ஒரு செய்திப் பார்த்து அதிர்ந்தேன். ஒருக்கால் உலகக் கோப்பையை இலங்கை வென்றிருந்தால் அந்த வெற்றியை போரில் தமிழர்களைக் கொன்று குவித்த ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்க இருந்தார்களாம். என்னக் கொடுமை இது. அந்நிய நாட்டை அல்லது எதிரிகளை விரட்டி அடித்து வெற்றி கொண்ட ராணுவ வீரர்களுக்கு என்றால் நாமும் வணங்கி வரவேற்கலாம்.  சொந்த மண்ணில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சொந்த மக்களை கொன்று குவித்து அட்டூழியம் செய்த ஒரு கும்பலுக்கு அர்ப்பணம் செய்ய இருந்த்த ஒரு தலைவனை 
அலங்கார நாற்காலி போட்டு அமரவைத்து ஆட்டத்தைப் பார்க்க அனுமதித்திருக்கிறோம்.

மட்டுமல்ல, உலகக் கோப்பையை இலங்கை தோற்றதை அல்லது இந்தியா வெற்றி பெற்றதை தாங்க முடியாமல் கொதிப்படைந்து நான்கு தமிழக மீனவர்களைக் கொன்று போட்டிருக்கிறார்கள் என்றால் அந்தக் கோப்பை என்ன எங்கள் நான்கு மீனவர்களின் உயிர்களை விடப்பெரிதா? சரியா, தவறா என்றெல்லாம் தெரியாது. அது பற்றியெல்லாம் எனக்கு கவலையுமில்லை.ஆனால் என்னைப் பொறுத்தவரை எனது மண்ணின் நான்கு மீனவர்களின் உயிரென்பது எந்தக் கோப்பையையும் விடப் பெரியது.

அதைவிடக் கொடுமை இந்த நான்கு பேரின் கொலை பற்றி உடனே தெரிய வந்திருந்தும் தேர்தல் முடியும் வரைஇந்த செய்தியைக் கசியவிடாமல் பார்த்துக் கொண்டார்கள் என்பது மட்டும் உண்மையாக இருப்பின் அதை அந்த நான்கு கொலைகளைவிடவும் பெரியக் குற்றமாய்தான் என்னால் பார்க்க முடியும்.முள் வேளியில் விலங்குகளைவிடக் கேவலமாய் நடத்த்ப் படும் மக்களை, தேவைப் படும் போதெல்லாம் அவர்களைக் கேவலமாக நடத்தி அதைப் பார்த்து மகிழ்ந்து களிகூறும் கயவர்களை, நம்மால் ஒன்றும் செய்துவிட முடியாதா?

தமிழ் இனமே இல்லாது போகவேண்டும் என்பதை எழுதாத இலக்காகக் கொண்டுள்ளனர் என்று வருகிற செய்தியும், அதற்காக தமிழ் யுவதிகளை சிங்கள ஆண்களைக் கொண்டு வன்புணரச்செய்து, அவர்களைக் கர்ப்பமாக்கும் அட்டூழியம் தொடர்கிறது என்றும் வருகிற செய்திகள் உண்மையாய் இருப்பதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. நானும், சுத்தத்தை கட்டுடைத்து கலப்புகளை எதிபார்க்கும் பெரியாரை நேசிப்பவன் தான். ஆனால் இந்தக் கலப்பு அசிங்கமானதும், அயோக்கியத் தனமானதும் ஆகும். நம்மால் ஒன்றுமே செய்ய இயலாதா?

இப்போது ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. உறுப்பு நாடுகள் கோரிக்கை வைத்தால் ராஜ பக்‌ஷேவை சர்வதேசக் குற்றவாளியாக நிறுத்தி விசாரிக்க முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கிமூன் சொல்கிறார். ரஷ்யா, சீனா, பொன்ற நாடுகள் கூட இது விஷயத்தில் நேர்மையாக நடந்துகொள்ளும் என்று எதிர் பார்க்கமுடியாது. காரணம் இந்தப் பாவத்தில் நிச்சயம் அவர்களுக்கும் பங்கு உண்டு. 

 இந்தியாவின் நிலையும் அதுதான்.பாவத்தில் பெரும் பங்கு இந்தியாவினுடையது. எனவே இந்தியாவும் இந்தக் கோரிக்கையை முன்னெடுக்காது.

எனில் நம்மால் ஒன்றுமே செய்ய இயலாதா?

ஐ.நா சபையின் அறிக்கையை குப்பைக் கூடையில் போடுவேன் என்று ஒரு இலங்கை அமைச்சர் கொக்கரிக்கிறார். 

நம்மால் ஒன்றுமே செய்ய முடியாதா?

நாமென்ன செய்வது? 

வேறென்ன, முதலில் ஒன்று சேர்வது.

ஒன்று சேர்ந்து?

இந்திய அரசை கோரிக்கையை முன்னெடுக்க வைப்பது. 

“அது என்ன அவ்வளவு சுலபமா?” 

”சுலபமல்லதான்” 

”அப்புறம்?” 

ஆனால் நம்மால் முடியும்.  


-- 

Sunday, April 24, 2011

கனவான்களை என்ன செய்யப் போகிறோம்?


ஆசிரியர் அறை முழுக்க அனல். அலை அலையாய் என்னைத் தாக்க, என்ன காரணம் என்று யோசிக்கத் துவங்கினேன். எல்லார் முகங்களிலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது. என்ன நடந்திருக்கும்? தலைமை ஆசிரியர் யாரையேனும் கடிந்துகொள்ள கொதிநிலைக் கூடிப் போனதா? அப்படியும் தெரியவில்லை. அப்படி ஏதேனும் நிகழ்ந்திருந்தால் இவ்வளவு நேரம் அவரிடம்தானே பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்தேன். நிச்சயம் சொல்லியிருப்பாரே. பழுக்கக் காய்ச்சிய கோபம் எல்லோரது முகங்களிலும் படர்ந்து கிடந்தது. ஒருக்கால் நண்பர்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் ஏதேனும் பிரச்சினையா? தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படாத நிலையில் வாக்குவாதம் சன்னமாய்த் தொடங்கி, வலுப்பெற்று, இப்படிக் கொதி நிலைக்குப் போய்விட்டதா? வாய்ப்புகள் உண்டுதான் எனினும் நன்கு பக்குவப் பட்ட, எந்த ஒரு அனலையும் ஆற்றுப் படுத்திவிடும் வித்தை தெரிந்த செல்வம் போன்றவர்கள் இருக்கும் போது அதற்கும் சாத்தியம் குறைவுதான். அப்புறம் இந்தக் கொதிநிலைக்கு காரணம் என்னவாய்த்தான் இருக்கும்?


எதுவாய் இருந்தாலும் தானாய் வரும். அதுவரைக் காத்திருப்பது. நாமாய் உள்ளே நுழைந்து ஒழுங்காய் இருக்கிற மூக்கை சேதப் படுத்திக் கொள்ள வேண்டாமென்று முடிவெடுத்து கையோடு கொண்டு போயிருந்த சுகுணா திவாகரின் புத்தகத்தைத் (பெரியார் -அறம், அரசியல், அவதூறுகள்)  திறந்தேன். ஓடி வந்து புத்தகத்தை பிடுங்கினார் சேவியர்.

“ மொதல்ல இதுக்கு ஒரு பதில சொல்லிட்டு அப்புறம் இந்தப் பெரியாரவெல்லாம் படிங்க”:

நாமதான் இந்த உஷ்ணத்திற்குக் காரணமா? நம்மை அறியாமலே யாரைப் பற்றியேனும் யாரிடமேனும் தவறாகப் பேசி, விஷயம் கசிந்து , சூடாகிப் போனார்களா நண்பர்கள். எதுவாய் இருந்தாலும் நேரடியாய் உளறி வாங்கி கட்டிக் கொள்வதுதானே நமது இயல்பு. மீறியும் இப்படிக் கோபப்பட்டு பதற வேண்டிய அளவுக்கு நம்மை அவ்வளவு பெரிய பொருட்டாக யாரும் பார்ப்பதில்லையே. ஏதோ லூசுக்கு கொஞ்சம் ஒசரமா நம்மை வைத்திருக்கிறார்கள். அவ்வளவுதானே. ரொம்பவும்தான் குழம்பிப் போனேன்.

“ என்னடா, என்ன பிரச்சினை. புத்தகத்தப் போட்டு கிழிச்சுடாத”

“ நாடே கிழியா கிழிஞ்சு கிடக்காம். உங்களுக்கு புத்தகம்
கிழியறதுதான் பெரிசாத் தெரியுதா?”

“ இந்த நாட்ட நான் ஒன்னும் காசு போட்டு வாங்கல. ஆனா இந்தப்
புத்தகத்த அறுபத்தி அஞ்சு ரூபா கொடுத்து வாங்கியிருக்கேன் தெரியுமா?”

இந்த எள்ளலில் கொஞ்சம் கறைந்தவராய் “ பெரிய எழுத்தாளர், உங்க ப்ளாக் தவிர வேற எதையும் பாக்கறதே இல்லையா?”

”ஏண்டா சேவி ஏம் ப்ளாக்கை யாரும் படிக்கறதில்லேங்கறதுக்காக
நானும் படிக்கலேன்னா எப்படிப்பா?”

“ இந்த நக்கலுக்கெல்லாம் ஒன்னும் கொறச்சல் இல்ல. இதப்
பாருங்க முதல்ல. இன்னிக்குப் போனதும் உங்க வலையில இதப் பத்தி எழுதுங்க”

அவர் வீசிய செய்தித் தாளில் அமெரிக்க அதிபர் ஒபாமா
அமெரிக்கர்கள் செலவு குறைச்சலைக் காரணம் காட்டி மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கும் மெக்ஸிகோவிற்கும் செல்வதற்கு எதிராக சில கருத்துக்களைக் கூறியிருந்தார்.
அது நண்பர்களை உஷ்னப் படுத்தியிருக்கிறது.

சிறிது நேரத்தில் எல்லோரும் தாள் திருத்துவது, மதிப்பெண்
பட்டியல் தயாரிப்பது, தத்தம் வகுப்புகளின் தேர்வு முடிவுகளைத்
தயாரிப்பது என்று அவரவர் வேலைகளில் மூழ்கிப் போனார்கள்.

பொதுவாகவே இங்குள்ள பணக்காரர்களும், பெரியப் பெரிய அரசியல் வாதிகளும் தங்களது மருத்துவ சிகிச்சைக்காக
அமெரிக்கா செல்வதும் அது குறித்த தகவல்கள் தினசரிகளிலும் மற்றும் அனைத்துவகைப் பத்திரிக்கைகளிலும்,காட்சி ஊடகங்களிலும் தொடர்ச்சியாய் வருவதும் வாடிக்கை.

ஏதோ அமெரிக்காவில்தான் எல்லா நோய்களுக்குமான மருத்துவம் உள்ளது போலவும், இந்தியாவில் எதுவுமே இல்லை என்பது போலவுமான பிம்பங்களை இது மாதிரி நிகழ்ச்சிகள் ஏற்படுத்தியிருந்தன.

”வாராத நோய் வந்துவிட்டால் பணக்காரங்களும் அரசியல் வாதிகளும் வேணும்னா அமெரிக்கா போய் மருத்துவம் பார்க்கலாம்.ஏழ பாழைங்க இங்க இந்தியாவிலேயே கிடந்து சாக வேண்டியதுதான்” என்று மக்கள் புலம்புவதைப்
பார்த்திருக்கிறேன்.

ஆனால் ஓபாமாவின் இந்தப் பேச்சு மேற்காணும் பிம்பத்தை
உடைத்துப் போட வல்லதாகவே நான் கருதியிருந்தேன். ஆனால்
அதற்கு நேர் மாறாக ”இந்தியாவுக்குப் போகக் கூடாதுங்குறான். அவ்வளவு கேவலமா இந்தியா? ” என்கிற கோணத்தில் நண்பர்களின் கோபம் வெளிப்பட ஆரம்பித்துள்ளது கண்டு அதிர்ந்தே போனேன்.

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்திவிட வேண்டும். அமெரிக்காவைவிட இந்தியாவில் மருத்துவச் செலவு மிகவும் குறைவு. அது எந்த அளவுக்கென்றால் அமெரிக்காவில் இருந்து குடும்பமே புறப்பட்டு வந்து இந்தியாவிலே தங்கி மருத்துவம் பார்த்துக் கொண்டு திரும்புவதற்கு ஆகும் செலவை விட அமெரிக்காவில் அதே சிகிச்சைக்கான செலவு சில மடங்கு அதிகம் என்கிறார்கள்.

அப்புறம் ஏன் இங்குள்ளவர்கள் அமெரிக்கா பறக்கிறார்கள்?  அதை இரண்டு மூன்று காரணங்களுக்குள் அடக்கலாம்.

1) இந்தியாவை விட அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை தரமாக இருக்கும் என்கிற தவறான நம்பிக்கை
அல்லது
2) அமெரிக்கா சென்று வைத்தியம் பார்ப்பதை கௌரவமாக நினைப்பது
அல்லது
3)வெளி நாட்டுப் பயணத்திற்கான ஒரு வாய்ப்பாக இதைக் கருதுவது.

போக, அமெரிக்காவில் மட்டுமே சிகிச்சைக்கான வசதிகள் உள்ள நோய்களும் இருக்கக்கூடும்.அதை இந்தக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை.

ஏதோ அமெரிக்கா சொர்க்கபுரி என்பது மாதிரியான கருத்துக்களை முதலில் துடைத்துப் போடவேண்டும்.  அங்குள்ள் ஏழையும் இங்குள்ள ஏழையும் ஒன்றான படிநிலை வாழ்க்கையையே கொண்டிருக்கிறான்.

அங்குள்ள ஏழை அமெரிக்கனால் அங்கு வைத்தியம் பார்த்துக் கொள்வது இயலாது. அமெரிக்கா என்பது கோடீசுவரர்களுக்கு மட்டுமே சொர்க்கம்.

கண்புரை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலாத அமெரிக்கர்கள் ஏராளம். வாரா வாரமோ தினம் தினமோ தெரியவில்லை, கியூபா இத்தகைய ஏழை, உழைக்கும், அடித்தட்டு மக்களை இலவசமாக ஹெலிகாப்டரில் அழைத்துப் போய் அறுவை செய்து குணமாக்கி மீண்டும் கொண்டு வந்து இலவசமாகவே விடுகிறார்கள் என்று படித்திருக்கிறேன். இதனால்தான் அமெரிக்க உழைக்கும் மக்கள் கியூபாவைத் தங்கள் தோழனாகப் பார்க்கிறார்கள். ஏழை, உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கும் கியூபாவிற்கும் இடையே உள்ள இந்த வர்க்க ரீதியான உறவுதான் புஷ், கிளிண்டன், ஓபாமா இன்னபிற எந்தக் கொம்பனாலும் கியூபாவை ஒன்றும் செய்ய இயலாமல் செய்து போட்டிருக்கிறது.

மீண்டும் ஒபாமாவின் அறிக்கைக்கு வருவோம். அவரது அறிக்கை ஒன்றைத் தெளிவு படுத்தியிருக்கிறது. அமெரிக்காவை விட இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான செலவு குறைச்சல். ஏழை, உழைக்கும் ,அடித் தட்டு அமெரிக்க மக்கள் தங்களது சிகிச்சைக்காக அமெரிக்காவைவிட இந்தியாவையே அதிகம் சார்ந்து இருக்கிறார்கள்.அதிக அளவு உழைப்பாளி அமெரிக்கர்கள் இந்தியாவில் வந்து வைத்தியம் பார்த்து குணமடைந்து சென்றிருக்கிறார்கள்.

ஆக, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உழைப்பவன் நிலைமை ஒன்றாக ஒத்தே இருக்கிறது. இவர்களது பிரச்சினைகளும் ஒன்றாகவே கிடக்கின்றன. கொஞ்சம் மேலே போனால் இவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான வழியும் ஒன்றாய் ஒத்தே இருக்கிறது. இவர்களது வாழ்வு, சிக்கல், தீர்வு , போராட்டம் ஆகியவை இவர்களை ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கும் நிலையும் உள்ளது.

மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உழைக்கும் மக்களின் சகலமும் ஒருவரை ஒருவர் சார்ந்தேதான் இருக்கிறது. எனவேதான் சரியாய் சொல்கிறோம்” உழைக்கும் தொழிலாளிகளே ஒன்று படுங்கள் “ என்று. சொன்னால் சில பேருக்குப் பொத்துக் கொண்டு வருகிறது. இந்த உயிர்ப்பான முழக்கத்தை எவன் சந்தேகித்தாலும், எவன் கேலி செய்தாலும், எதிர்மறையாய் எவன் பேசினாலும் அவன் உழைக்கும் திரளின் எதிரியே.

சரி, ஒபாமா இந்தியாவைக் கேவலப் படுத்தவில்லையா? என்றால் இல்லை என்பதே எனது பதில். தன் நாட்டு மக்கள் இன்னொரு நாட்டை சார்ந்து வாழ்வதை அவர் விரும்ப வில்லை என்பதை சரியானதொரு பார்வையாகவே நான் பார்க்கிறேன். அங்குள்ள அடித்தட்டு மக்களுக்கு அங்கேயே இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ வைத்தியத்திற்கான  ஏற்பாடுகளை அவர் செய்தால் சத்தியமாய் அவரை நான் பாராட்டவே செய்வேன். நம்மைப் பொறுத்தவரை எந்த நாட்டு உழைப்பாளியாக இருந்தாலும் எங்கள் உறவே.

நமக்கான நியாயமான கேள்வி இதுதான். இந்தியாவை சார்ந்து அமெரிக்க மக்கள் இருக்கக் கூடாது என்று நியாயமாக நினைக்கும் போது ஒட்டு மொத்த இந்தியாவையும் அமெரிக்காவை சார்ந்தும் எதிர் பார்த்தும் இருக்கிற நிலைக்கு ”ஒன், டூ, த்ரீ”  என்று தள்ளிய கனவான்களை என்ன செய்யப் போகிறோம்?    

பகவான் தாய் மொழி தெலுங்கு

மரணம் தவிர்க்க இயலாதது. ஆனாலும் அது ஒவ்வொரு முறை நிகழும் போதும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுத்தான் போகும். எனக்கு சாய்பாபா அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. மேடைகளில் நிறைய விமர்சனம் செய்திருக்கிறேன். இனியும் தேவைப் படும் போதெல்லாம் செய்யவே செய்வேன்.   அவரது பெயரால் குவிக்கப் பட்ட சொத்துக்கள், அங்கு உள்ளே நடந்த திறை மறைவு வேலைகள், ஏற்கனவே அவரைக் கொல்ல நடந்ததாக சொல்லப்பட்ட முயற்சி, அது அப்படியே மறைக்கப் பட்டதின் பின்னே உள்ள அரசியல், இந்திய ஜனாதிபதி வரை அவரது காலடியில் கிடந்த கீழ்மை, அவரது மந்திரங்கள் என இவை அனைத்தும் குறித்து எப்போதும் போலவே இனியும் தேவைப் படும் இடங்களில் விமர்சிப்பேன். 


ஆனாலும் அவர் தன்னை ஒரு தெலுங்கராய் உணர்ந்து வைத்திருந்ததும் தன் தாய் மொழியை பிற மொழிக்காரனும் பிழையாக உச்சரித்து விடக் கூடாது என்பதில் அவருக்கிருந்த அக்கறை ஆகியவற்றிற்காக அவரை நான் தலை தாழ்த்தி வணங்குகிறேன். உணர்ச்சி வசப்படாமல், ஆரவாரமில்லாமல், மொழிமீது பற்று வைக்கவும் கவனம் குவிக்கவும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள இருக்கிறது. 


அவருக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய “பகவான் தாய் மொழி தெலுங்கு” என்ற கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 
சற்றே சமீபத்தில் புட்டபர்த்தி சென்று சாய்பாபா முன்னிலையில் பாடிய தனது அனுபவத்தை “கல்கி” யில் பதிந்திருக்கிறார் டி.எம்.கிறிஷ்ணா.சிலாகிப்பினை ஊன் உருக, உயிர் உருகப் பதிந்திருக்கிறார் என்பதே உண்மை.

சற்றேரக் குறைய எழுபது நிமிடங்கள் பாடிய அவரை அழைத்து, காற்றிலே விரல் சொடுக்கி, வலது கை விரலில் ஒன்றும் இடது கை விரலில் ஒன்றும் ஆக இரண்டு மோதிரங்களை சாய்பாபா அவர்கள் அணிவித்ததாக பக்தி கசியக் கசியச் சொல்கிறார் கிறிஷ்ணா.

இது மூட நம்பிக்கையா? மோசடியா? நிறைய பேர் நிறைய எழுதிவிட்டார்கள்.  எனவே அதற்குள் போக நான் அக்கறைப் படவில்லை.

“தெலுங்கு வார்த்தைகளில் கொஞ்சம் கவனம் வைத்துக் கொள்”  என்று தன்னிடம் சாய்பாபா அவர்கள் சொன்னதாய் போகிற போக்கில் கிருஷ்ணா சொல்லிச் சென்றுள்ள விஷயத்தில்தான் நாம் கூடுதல் கவனம் குவிக்க வேண்டும் என்று படுகிறது.

கிருஷ்ணா அவர்கள் தெலுங்கு உச்சரிப்பில் ஏதோ பிசகியிருக்க வேண்டும்.  அதைத் திருத்தும் விதமாகத்தான் சாய்பாபா  அவர்கள் மேலே சொன்னதை சொல்லியிருக்கக் கூடும்.

இதில் ஒன்றும் பிழை இருப்பதாகப் படவில்லை. பகவானேயாயினும் சாய்பாபா அவர்கள் ஒரு தெலுங்கர். அவரது தாய் மொழி தெலுங்கு. கடவுளின் அவதாரமாகவே பல கோடி மக்கள் அவரக் கொண்டாடினாலும் தமது தாய்மொழி தெலுங்கு என்பதிலும் , தனது தாய் மொழியை வேற்று மொழிக்காரரும் சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதிலும் அவருக்குள்ள அக்கறையை நாம் போற்றுகிறோம்.

இன்னுஞ்சொல்லப் போனால் எல்லா விஷயங்களிலும் அவரோடு முரண்படுகிற நாம் , அவரது மொழிப் பற்றை சிரந்தாழ்த்தி மகிழ்ச்சியோடு வணங்குகிறோம்.

அவர் தெலுங்கர். அவரது தாய்மொழி தெலுங்கு. அவரும் அதை உணர்ந்திருக்கிறார். தலை தாழ்த்திப் போற்றுகிறோம்.

நாம் தமிழர். நமது தாய்மொழி தமிழ்.

இதை நாமெப்போது உணரப் போகிறோம்.

Saturday, April 23, 2011

தமிழகம் வாசிக்கிறது

”  நகைக்கடைகளை விடவும் புத்தகக் கடைகளில் அதிக விற்பனையும் லாபமும் கிட்டுகின்றன.”

என்ன மூச்சு நின்று விட்டதா?. என்னைக் கொன்றே போடலாம் என்று தோன்றுகிறதா?.

ஜனத்திரள் நிரம்பி வழியும் புத்தகக் கடைகளைப் பார்க்க 

ஏக்கமாய்த்தான் இருக்கிறது.வருடத்திற்கு ஒரு முறையேனும் நகைக்கடைக்கு, ஆறேழு முறையேனும் துணிக்கடைக்கு 
குடும்பத்தோடு போகும் நாம் மொத்த ஆயுளில் எத்தனை 
முறை குடும்பத்தோடு புத்தகக் கடைக்குப் போகிறோம்? ஜூன் 
மாதத்தில் குழந்தைகளின் பாடப்புத்தகங்களுக்காக புத்தகக் 
கடை வரிசைகளில் நிற்பதோடு நமக்கும் புத்தகக் 
கடைகளுக்குமான உறவு சுருங்கிப் போகிறது.

“படித்து முடித்துவிட்டு சும்மா இருப்பதாகச்” சொல்லிக் கொள்கிற 

அவலம் தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமே உரியது. பத்தாம் வகுப்பில் முப்பத்தொன்பது சதம் மதிப்பெண்களோடு தேற்சி பெற்றவன் 
ஏதோ தான் படித்துக் களைத்துவிட்ட களைப்பை உணர்வது 
என்பதும் நமக்கே  உரிய சோகம்.

படித்தவன் எப்படி சும்மா இருக்க முடியும்? சும்மா இருப்பவன் 

எப்படி படித்தவனாக முடியும்?

எதார்த்தம் இப்படி பல்லை இளித்துக் கொண்டு நிற்க, 

நகைக் கடைகளைவிடவும் புத்தகக் கடைகளில் அதிக 
விற்பனையும் அதிக லாபமும் எப்படி?

27.04.1997 தினமணியில் வந்துள்ள அறிஞர். தமிழண்ணல் 

கட்டுரையின் ஒருவரிதான் இந்தக் கட்டுரையின் தொடக்க வரி. 
இடைத் தொண்ணூறுகளில் “அமெரிக்கா வாசிக்கிறது” என்கிற 
இயக்கம் லட்சோப லட்சம் டாலர்கள் செலவில் தொடங்கப்பட்ட 
செய்தியும் நமக்கு கட்டுரையில் கிடைக்கிறது.

கற்றலும் வாசித்தலும் நுகர்பொருட்களே. அரசாங்கங்கள் 

இதற்கெல்லாம் மானியம் ஒதுக்கக் கூடாது . மீறி ஒதுக்கினால் 
உலக வங்கி நிதியுதவி நிறுத்தப் படும் என்று நேரடியாகவும் 
தனது எடுபிடியான உலக வங்கி மூலமாகவும் உலக 
நாடுகளுக்கெல்லாம் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு உத்தரவு 
போட்டு அதில் பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளது அமெரிக்கா.

பிசகற்று நுணுகினால் ஒரு உண்மை புரியும். கல்வி விலை 

பொருளானால் இருப்பவன் மட்டுமே கல்வியை வாங்க 
முடியும். கற்றலுக்கும் வாங்கலுக்கும் உள்ள இடைவெளி ஒரு 
குறுநூல் அளவுக்கு நீளும்.  கல்வியை காசின்றி கற்க மட்டுமே 
முடிந்த உழைக்கும் , ஏழை, ஒடுக்கப் பட்ட பகுதி மக்களால்
கல்வியைக் காசு கொடுத்து வாங்க முடியாது. மத்தியத் 

தரவர்க்கத்தை இது சற்று தாமதமாகத் தாக்கும்.

ஆக, மேற்சொன்ன உழைக்கும் மக்களிடம் இருந்து கல்வி களவு 

போகும். படித்தப் பணக்காரனுக்கு தன்னைப் பற்றி மட்டுமே 
சிந்திக்க முடியும். எனவே அடங்குதல் அவனது இயல்பாகப் 
போகும். ஆகவே பணக்காரன் படிப்பதால் அமெரிக்காவிற்கு 
ஆபத்தில்லை. ஆனால் , உழைப்பவன் படித்துத் தேர்ந்தால் 
அவனை அடக்க இயலாது. கலியைப் பள்ளியிலிருந்து 
சந்தைக்குத் திருப்பாமெரிக்கா விரும்புவது இதனால்தான். 
ஆனால் அமெரிக்கன் தடையின்றி செலவின்றி நிறைய 
வாசித்துவிட வசதி செய்வதுதான் “ அமெரிக்கா வாசிக்கிறது” 
இயக்கத்தின் னோக்கமாக இருக்க முடியும்.

தன் எல்லைக்கு எஞ்சிய உலகத்தில் அடிமைகள் மட்டுமே 

குவிந்துகிடக்க ஆசைப்படும் அமெரிக்கா, குறைந்த பட்சம் 
தனது குடிகளாவது அறிவார்ந்து இருக்க வேண்டுமென 
ஆசைப் படுவதற்காக நாமும் அவசரமாக அமெரிக்காவை 
ஒருமுறை பாராட்டி விடலாம். அமெரிக்காவைப் பாராட்ட 
எஞ்சிய நம் வாழ்வில் வாய்ப்பே கிட்டாமலும் போகலாம்.

பெசில்வேனியா பல்கலைகழகத்தில் இன்று வெளிவந்த 

தமிழ் நூல்களும் பைண்டு செய்யப்பட்டு , தூசு தட்டப்பட்டு 
அடுக்கி வைக்கப் பட்டுள்ளன.7,56,640 சதுராடிப் பரப்பளவில் 
பன்னிரண்டு தளங்களில் சிகாகோ நூலகம் இயங்குகிறது
போன்ற தகவல்களும் தமிழண்ணல் கட்டுரையில் 

கிடைக்கின்றன.

இதில் நமக்கும் மகிழ்ச்சிதான். நமது வருத்தெமெல்லாம் 

அமெரிக்காவின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து வளரும் நாடுகள்
 நூலகத்திற்கான செலவை நிறுத்திக் கொண்டதுதான்.

இன்று வெளிவந்த நூல்களும் வாங்கப் பட்டு, பைண்டு 

செய்யப்பட்டு சுத்தமாக பாதுகாக்கப் படுகின்றன 
அங்கே. தமிழகத்து நூல்னிலையங்களில் தமிழ் நூல்கள்
நுழையப் படும் அவஸ்தை நம் நெஞ்சில் வலியைத் தருகிறது.

சமீப காலமாக தமிழகத்தில் வாசகத் தளம் நீண்டு கொண்டும் 
இருக்கிறது. அகன்றுகொண்டுமிருக்கிறது. களகட்டும்
 புத்தகக் கண்காட்சிகள் இதற்கு சான்று. ஆனால், 
பெருகியுள்ள மக்கட் தொகையோடு விகிதாச்சாரப் படுத்த 
இந்த விரிதல் மிக மிகக் குறைவுதான். இந்த முரண்பட்ட 
விகிதாச்சாரத்தை நேர்படுத்த ஓரளவு பலம் கொண்ட சக்தி 
நூலகம்.

தமிழன் வாசிக்க வேண்டும் என்று நாம் ஏன் முட்டிக்கொள்ள வேண்டும்?

“தான்” சார்ந்த சிந்தனையை “சமூகம்” சார்ந்த சிந்தனையாக 
புத்தகங்கள் மாற்றிவிடும்.

ந.முருகேசபாண்டியன் அவர்கள் 1984 ல் ஈழ விடுதலைக்ககப் 
போராடும் ஒரு ராணுவக் குழுவின் தலைவரைச் சந்திக்கிறார். 
(அவர் வெளிப்படையாய் சொல்லவில்லை. ஆனாலும் 
அது பிரபாகரன் அவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள்
அதிகம்). இலங்கைத் தமிழர்களைச் சிதறாமல் ஒன்று திரட்டி 
தங்களது போராட்டத்தில் ஈடுபடுத்த எப்படி முடிந்தது என்ற 
கேள்விக்குத் தான் பெற்ற பதிலை அப்படியே “ யாழ்ப்பாண 
நூல்நிலையம் ஓர் ஆவணம்” என்ற நூலுக்கான தமது
மதிப்புரையில் தருகிறார்.

”யாழ்ப்பாணப் பகுதியில் கிராமங்கள் தோறும் தொடங்கப் 
பெற்ற வாசக சாலைகள் தான் ஈழப் போரட்டத்தின் மையம்,. 
அதாவது வாசக சாலையில் நூல்களை வாசிக்க ஆரம்பித்த 
இளைஞர்களின் மனநிலையில் ஏற்பட்ட விழிப்புணர்வு 
ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக 
மாற்றியமைத்து விட்டது.

உலகின் கழுத்தைப் பிடித்துத் திருகி அதன் கவனத்தைப் 
பல பத்து ஆண்டுகளாக வைத்திருக்கும் ஒரு பெரும் 
போராட்டத்தின் மையமே நூலகங்கள்தான் என்பது 
நூலகங்களின் அழுத்தமான முக்கியத்துவத்தை 
உணர்த்துகிறது. இதை சராசரி அரசியல்வாதிகள் 
உணர்வதில் சிக்கலுண்டு. சராசரிகள் படிக்கப் படிக்க 
அவனுக்குப் பாதிப்பு என்பதால் சராசரி அரசியல்வாதி 
இதில் அக்கறை காட்டுவதென்பது அத்தையின் தாடிதான். 
ஆனால் இடதுசாரி மனங்கொண்ட இளைஞர் மற்றும் மாணவர் 
அமைப்புகள் இதன் அழுத்தம் உணர்வது சமூக மாற்றத்திற்கான 
இந்த நொடித் தேவையாகும்.


தனது வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட பகல் பொழுதுகளைப் போர்க்களங்களிலேயே செலவு செய்த திப்பு இளைஞர்களையும் புத்தகங்களியும் இணைக்க அக்கறைப் பட்டிருக்கிறான். எத்தகைய வளமையும், பாதுகாப்பும் பாழாய்ப் போக ஒரே ஒரு படிக்காத 
தலைமுறை போதும். இது உணர்ந்த திப்பு, நூலகத்தின் மீது 
கவனம் குவித்துள்ளான்.


திப்பு வீழ்ந்ததும் நகைகள் மற்றும் கலைப் பொக்கிஷங்களைச் 
சுருட்டிக் கொண்டு போன பறங்கியரின் நெற்றியடித்து பாடம் 
சொன்னது கீழையியல் ஆராய்ச்சியாளன் வில்கின்ஸ் கவர்னர் 
ஜெனரலுக்கு எழுதிப் போட்ட ஒரு கடிதம். அவன் எழுதினான், 
“ இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிடைத்த ஒப்பற்ற 
பொக்கிஷம் இது.” அவன் சொன்னது திப்புவின் நூலகத்தை.


அழகூட்டும் ஆபரணங்களையும் வளமை கூட்டும் 
செல்வங்களையும் பொக்கிஷமென நினைத்து ஞானப் 
பட்டறையை விட்டுப் போன அறிவினேழைகளாய் தங்களை 
உணர்ந்த பறங்கியர்கள் அதையும் கொண்டு போனார்கள்.


பொதுவாகவே ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட 
மண்பரப்பில் எஞ்சி நிற்கும் புராதன கலைச் சின்னங்களையும், நூலகங்களையும் அழித்துவிடுவார்கள். ஏனெனில் 
ஆக்கிரமிப்பிற்கெதிராய் மண்ணின் குடிகளை கிளர்ந்தெழச் 
செய்யும். நாளந்தா சிதைக்கப்பட்டதற்கும் , பாக்தாத்தை கைப்
 பற்றிய தைமூர் அங்குள்ள நூலகங்களை எரித்ததற்கும், 
புஷ் இராக்கில் இதையே செய்வதற்கும் இதுதான் காரணம்.


எனவே மின் உற்பத்தி, தொழில் வளர்ச்சி, ஆகியவற்றின் மீது 
செலுத்தப்படும் கவனமும், முக்கியத்துவமும் 
நூலகங்களின் கட்டமைப்பின் மீதும் திருப்பப்பட வேண்டும்.


இடதுசாரி சிந்தனைக் கொண்ட அமைப்புகள் குறிப்பாக, 
இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் தங்களது 
வேலைத் திட்டத்தில் நூலகங்களை உருவாக்குதல், 
பராமரித்தல், வளர்த்தெடுத்தல் என்பவற்றிற்கு கூடுதல் 
முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவர்கள் முடிவெடுத்து, 
இயக்கப் படுத்தி, ஒரே நேரத்தில் கல்லூரிகள், பள்ளிகள், 
ரயிலடிகள், பேருந்து நிலையங்கள் , கடைவீதி மற்றும் ஜனங்கள் 
திரளும் பகுதிகளில் உண்டியலடித்தாலே நூலகங்கள் உருவாகும். 
இவர்களது வல்லமையும் அர்ப்பணிப்பும் அத்தகையது.


நூலகங்கள் கட்டுவது, புத்தகங்கள் குவிப்பது என்பதோடு எதைப் 
படிப்பது, எதை விடுப்பது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். 
“கண்டதைப் படிக்க பண்டிதன் ஆவான்” என்பது முதுமொழி. 
கண்டதையும் கற்க ஏது நேரம் இன்று. நேற்றைவிடவும் 
வேகமாய்ச் சுழலும் இன்று சொல்லும் பாடம் இதைவிடவும் 
வேகமாய்ச் சுழலும் நாளை என்பதுதான். கிடைக்கிற சன்னமான 
நேரத்தில் எதை வாசிப்பது என்பதைத் தேர்ந்தெடுக்கும் தெளிவையும் வாசகனுக்கு கற்றுத் தரவேண்டும்.


மனிதனை ரசிகனாக்குகிற வேலையை ஊடகங்கள் 
பார்க்கின்றன. நாம் ரசிகனை வாசகனாக்க வேண்டும். 
இந்நிலையில் இருக்கிற வாசகனும் ரசிகனாவது ஆபத்தானது. 
வாசகனை ரசிகனாக்குவது உலகமயமாக்களின் ரகசிய வேலைத் திட்டங்களில் ஒன்று. இதன் விளைவிலொரு சிதறல்தான் 
பாக்கெட் நாவல். பேருந்து ஏறும் போது ஒரு பாட்டில் மினரல் 
வாட்டரும், ஒரு பாக்கெட்நாவலுமாய் ஏரி இறங்கும்போது 
இரண்டையும் கிடாசிவிட்டுப் போகும் பழக்கம் வளர்வதை 
அனுமதிக்கக் கூடாது. காலிக் குப்பியையும் புத்தகத்தையும் 
ஒன்றாக நினைக்கும் அயோகியத் தனத்தை மாற்றியே ஆக 
வேண்டும்.


வாய்ப்புக் கொடுத்தால் தமிழகம் வாசிக்கும்.


வாசிக்கும் தமிழகம் நிச்சயம் சாதிக்கும்.


சரி, என்ன செய்யலாம்?


(இது சில ஆண்டுகளுக்கு முன்னால் “இளைஞர் முழக்கம்” 
இதழில் வந்தது. சென்னையில் உருவான நூலகம் ஒன்று தவிர 
வேறு எந்த மாற்றமும் இல்லை என்பதாலும், பெரிதாய் இதை 
யாரும் அப்போதும் , பிறகு “அந்தக் கேள்விக்கு வயது 98”  என்ற 
எனது நூலில் வந்தபோதும் படித்துவிடவில்லை என்பதாலும் 
இதைப் ‘உலக நூலக தின ‘ அடையாளமாகப் பதிவு செய்கிறேன்.) 

Thursday, April 21, 2011

அதை நாங்கள் சரியாய் செய்வோம்.சமீபத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப் பட்டவர்கள் இரண்டு பேர். அதில்
ஒருவர் இந்த உலகமே இதுவரை நினைத்தும் பார்த்திராத அளவில் 
நடைபெற்ற ஒரு ஊழலோடு சம்பந்தப் பட்ட முன்னாள் அமைச்சர் 
ராசா அவர்கள். இன்னொருவர் ஊழலை உண்ணாவிரதமிருந்து 
கேள்வி கேட்ட அன்னா ஹசாரே.  ஊடகங்கள் ஊதிப் 
பெரிதுபடுத்துவதாக கலைஞர் திரும்பத் திரும்பச் சொன்னாலும் 
ராசா விசயத்தில் அவை முடிந்த வரை மூடிப் பாதுகாக்கவே 
முயற்சித்தன என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஹசாரே 
விசயத்தில் ஊடகங்கள் ஆன மட்டும் ஊதிப் பெரிதாக்கவே செய்தன. 
அதன் தாக்கமாக ஹசாரே மிகப் பெரிய கதாநாயகராகக் கட்டமைக்கப் 
பட்டார். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் ஹசாரேவிற்கு 
கவிதைகள் இயற்றப்பட்டன, பல மொழிகளில் அவரை வாழ்த்தி 
பாடல்கள் தோன்றின, படைப்பாளிகள் அனைத்து வடிவங்களிலும் 
அவரை வாழ்த்தியும் ஆதரித்தும் படைப்புகளத் தந்தனர், இயங்கும் 
பெரும்பான்மையான வலை தளங்கள் ஹசாரேவுக்கு ஆதரவாகப் 
பிரச்சாரம் செய்தன. இளைஞர்களும் யுவதிகளும் போட்டிப் 
போட்டுக் கொண்டு அவர் குறித்த குறுஞ்செய்திகளைப் 
பரிமாறினார்கள்.   இந்த இடைப் பட்ட காலத்தில் ஏதேனும் 
குழந்தைகளுக்கு அவரது பெயர் சூட்டப் பட்டதா என்று உறுதியாகத் 
தெரியவில்லை. ஆனால் அதற்கு வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

மிகுந்த சிரமம் எடுத்து இயல்பாகவே நடந்ததுபோல காட்டிக்கொள்ளப் 

பட்டாலும் படு செயற்கையாக இவரை இப்படி வலிந்து கட்டிக் 
கொண்டு தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமென்ன?. அவசர 
அவசரமாக அறக்கட்டளைகள் , அவசர அவசரமாக நிதிக் 
குவிப்பு அதைவிட அவசரமாக அவரைப் பற்றி பொது மக்களுக்கு 
எடுத்துச் சொல்லவே இந்தப் பணம் பயன்படும் என்பது மாதிரியான 
அறிவிப்பு,  குவிந்த பணமும் கொட்டிய மனிதர்களும் இதற்குப் 
பின்னால் ஏதோ அரசியல் இருக்கக் கூடும் என்றே சொல்கின்றன.

யார் இந்த ஹசாரே? என்பது குறித்து நாம் அதிக அக்கறை காட்டப் 

போவதில்லை. இவ்வளவு பரபரப்பாகப் பேசப்பட இவர் 
செய்ததுதான் என்ன?இதை இதற்கு முன்னால் யாருமே செய்தது இல்லையா? ஏற்கனவே 
யாரேனும் இதற்கான உழைப்பைத் தந்திருக்கிறார்கள் என்றால் 
இளைஞர்களும் கிழவர்களும், யுவதிகளும், கிழவிகளும் சில 
அரசியல் வாதிகளும் ,அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் 
ஒருவரை ஒருவர் முந்தித் தள்ளிக் கொண்டும், சுவற்றில்
முட்டிக் கொண்டும் உணர்ச்சிக் கொந்தளிக்க அவரைக் 

கொண்டாடுவதேன்? ஜனத்திரளின் உணர்ச்சிகளைக் 
கொந்தளிக்கச் செய்து அவர்களை ஹசாரேவை நோக்கித்
தள்ளுவதற்கு ஊடகங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் 

உழைப்பிற்கும் பின்னால் இருக்கக் கூடிய அவசியமும் 
அரசியலும் என்ன?

ஹசாரேவின் சொந்த வாழ்க்கைக் குறித்து மாதவராஜின் பதிவில் 

இருப்பதைத் தவிரக் கூடுதலாய் ஒரு ஐந்து வார்த்தைகள் 
அளவுக்குக் கூடத் தெரியாது. அதுத் தேவையுமில்லை. ஹசாரே 
என்ன செய்தார்? ”தீராத பக்கங்களிலும்” மற்ற செய்தி 
ஊடகங்களிலுமிருந்து நான் தெரிந்து கொண்டவகையில்
 லோக்பால் வரைவுக் குழுவில் பொது சேவகர்களையும் சேர்க்க 
வேண்டும் என்பதே இவரது கோரிக்கை. இது நிராகரிக்கப் படவே 
உண்ணாவிரதத்திற்கு பந்தல் போட்டு விட்டார். எனக்குத் தெரிய 
அன்னா ஹசாரே செய்தது இவ்வளவுதான். இது அவரது உரிமை.
எங்கள் ஊருக்குப் பக்கத்தில் அவர் பந்தல் போட்டிருந்தால் ஒருக்கால்
நானும் கூட சென்று வாழ்த்திவிட்டு வந்திருக்கக் கூடும். லோக் பால்
வேண்டும் என்றுகூட அவர் என்றைக்கும் போராடியதாகத் 

தெரியவில்லை. லோக்பால் வரைவுக் குழுவில் பிரதிநிதித்துவம் 
கேட்ட அளவில் மட்டுமே அவரது போராட்டம்.

அவருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து பயந்துபோன மத்திய அரசு 

அவரது பெயரையும் கபில் சிபில், நம்ம ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி 
போன்ற ஊழல் எதிர்ப்பாளர்களை உள்ளடக்கிய குழுவில் இவரையும் 
இணைக்கிறது.  பழரசம் குடித்து போரை முடித்துக் கொள்கிறார்.  
இதைவிட நகைச்சுவை என்னவெனில்அடுத்தநாள் 
வரைவறிக்கையை நாடாளுமன்றம் நிராகரிக்கும் என்றால் அதை 
நான் ஏற்பேன். இதில் இறுதி முடிவெடுக்க வேண்டிய இடம் அதுதான் 
என்பதை தான் உணர்ந்தே இருப்பதாக சொல்கிறார்.

இதில் நாமென்ன சொல்ல இருக்கிறது? ஒரே கேள்விதான், இதற்கு ஏன் 

இத்தனை ஆர்ப்பாட்டம்?

உண்ணாவிரதம் இருந்த போது வசூலானத் தொகை ஏறத்தாழ 

தொண்ணூறு லட்சத்தைத் தாண்டும் என்றும் அதில் ஜிண்டால் 
மட்டும் இருபத்தி ஐந்து லட்சம் வழங்கியுள்ளதாகவும், பந்தல் 
செலவுக்கு பத்து லட்சம் வரை செலவானது என்றும் மீதித் 
தொகயைக் கொண்டு மேலும் நிதி வளர்த்து அது கொண்டு 
ஹசாரேவை மக்களிடம் கொண்டு செல்லும் 
எண்ணத்தோடு செயல் படுவதாகவும் மாதவராஜின் 
பதிவிற்கு பின்னூட்டமிட்ட காஸ்யபன் சொல்கிறார்.

 நாடாளுமன்றம் நிராகரித்தால் அதை தான் ஏற்பதாக 

சொன்னவரை, ஊழலை வாய்ப்புக் கிடைத்த 
போதெல்லாம் கொண்டாடியவர்களோடு இணைந்து 
ஊழலுக்கெதிராக செயல் பட சம்மதித்த ஒருவரை 
இப்படி வம்படித்து மல்லு கட்டிக் கொண்டு பெரிய
போராளியாய் சித்தரிக்க வேண்டிய அவசியம் 

ஊடகங்களுக்கு ஏன் வந்தது?

லோக்பால் வரைவு கமிட்டியில் இடம் கேட்டல்ல , 

லோக்பால் மசோதாவைக் கொண்டுவருவதற்காக 
பல ஆண்டுகளாகப் போராடி வரும் இடது சாரிகளை 
நீங்கள் கண்டு கொள்ளாமல் போனதற்கு என்ன 
காரணம்?

அதைக் கூட விடுங்கள், இடது சாரிகள் செய்வதை 

சொல்லிவிட்டால் அமெரிக்கா பணப்பையை இறுக்கி 
மூடிக் கொள்ளும், இன்னும் சில வெறுப்புகளையும்
இழப்புகளையும் சம்பாரிக்க வேண்டும் என்று நீங்கள் 

அச்சப் படுவதில் கூட ஒரு நியாயம் இருக்கிறது.சகாயம் மாதிரி ,சங்கீதா மாதிரி ஊழலுக்கெதிராய்ப் போராடிக் கொண்டிருக்கும்
அதிகாரிகளை நீங்கள் ஏன் கொண்டாடவில்லை?

கூறியது கூறல் குற்றமென்பார்கள். திரும்பத் திரும்ப, சலிக்க சலிக்க, 

அருவருப்பாய் தோன்றுமளவுக்கு நீங்கள் எல்லோரும் ஹசாரேயை 
கொண்டாடியதால் நான் ஒரே ஒருமுறை  இதை சொல்வது நியாயம் 
என்றே படுகிறது. மகளுக்கு உடல் நலம் மோசமாகிறது. உடனே 
அவளை மருத்துவமனையில் சேர்க்க சொல்கிறார்கள். அந்தக் 
குழந்தையின் தந்தையிடம் பணம் இல்லை. ஒரு நண்பரிடம் கடன் 
பெற்று மகளை மருத்துவ மனையில் சேர்க்கிறார். சம்பளம் வந்ததும் 
அந்தக் கடனைத் திருப்பி விடுகிறார். இவ்வளவு நேர்மையான அதிகாரி 
கிடைப்பது எவ்வளவு அரிது.

இவர் யார் என்பது தெரியும் உங்களுக்கு. தெரிந்தும் அந்தக் 

குழந்தையின் தந்தையும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருமான 
சகாயம் அவர்களை ஏன் நீங்கள் கண்டு கொள்ளவே இல்லை.

பின்னிரவில் , தன்னந்தனியாக சென்று வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக
வைக்கப் பட்டிருந்த ஐந்தேகால் கோடி ரூபாயை , அது பெரிய இடத்துப் 
பணம் ,கை வைப்பதால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க 
வேண்டி வரும் என்று தெரிந்திருந்தும் அதைக் கைப் பற்றி நடவடிக்கை 
எடுத்த சங்கீதா என்ற இளம் அதிகாரியை நீங்கள் ஏன் 
கண்டுகொள்ளவில்லை?

இதற்கெல்லாம் காரணம் என்னவென்று மண்டையைப் போட்டுக் 

குடைந்துகொண்டிருந்த போது ஹசாரே, தான் குஜராத் முதல்வர் 
மோடியை பெரிதும் சிலாகித்து மதிப்பதாகக் கூறினார். அப்பாடா,  
நம்மருகே இருக்கும் சகாயத்தை, சங்கீதாவைக் கொண்டாடாத 
நீங்கள் ஹசாரேவை ஏன் கொண்டாடுகிறீர்கள் என்று புரிந்து 
போனது.

உடைத்தே ஆக வேண்டும் என்று நாங்கள் போராடிக் 

கொண்டிருக்கும் ஜாதியைக கவ்விப் பிடித்து பாதுகாக்கும் 
மதத்தை வெறியோடு கைக்கொண்டு அலையும் ஒரு மனிதரை 
சிலாகிக்கும் ஒருவரை நீங்கள் மக்களிடத்திலே கொண்டு 
போவோம் என்று கிளம்பும் போது ஜாதியை அழித்தொழிக்க
 அதைப் பாதுகாத்து வரும் மதக் கட்டுமானத்தை எதிர்க்கும் நாங்கள் 
அதற்கெதிராய் இயங்க வேண்டியது அவசியம்.

அது உங்கள் அரசியல். அதை எதிர்த்து போராடவேண்டிய 

எதிர் அரசியல் எங்களுடையது. 


அதை நாங்கள் சரியாய் செய்வோம்.


( நேற்று நள்ளிரவுக்கு பத்துப் பதினைந்து நிமிடங்கள் இருக்கும் 
போது பேசிய ப்ரியாவிடம் ஹசாரேவைப் பற்றிய மாதவராஜ் 
பதிவு குறித்து பேசிக் கொண்டிருந்த போது சரி, நீ ஒன்னு போடு 
என்று என்னை விரட்டி எழுதச் சொன்ன ப்ரியாவிற்கு இந்தப் பதிவு)

Tuesday, April 19, 2011

இத்தோடு சேர்க்க

இயற்பியல்
வேதியியல்
உயிரியல், கணிதம்
முதல் பிரிவில்

இயற்பியல்
வேதியியல்
கணிதம், கணினி
இரண்டாம் பிரிவில்

வரலாறு
பொருளியல்
வணிகவியல், கணிதவியல்
மூன்றாம் பிரிவில்

கணினி
தட்டச்சு
தையல் என நீளும்
தொழிற் பிரிவுகள்

இவற்றோடு
எல்லாப் பிரிவிற்கும்
சேர்க்க

தமிழ் அல்லது விருப்ப மொழி
ஆங்கிலம்
மற்றும்
நன்கொடை

தண்ணீர் சாபம்

”என் லைப்ல இது மாதிரி மழையப் பார்த்ததே இல்ல” என்கிறான் மேல் வீட்டுப் பையன் லோகித். அவனது வயது ஆறு.

கழனி எடுக்க வந்த மீனா பாட்டி, “எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து இது மாதிரி மழையப் பார்த்ததே இல்ல” என்கிறார். அவருக்கு எழுபத்தி ஐந்து வயது.

எனக்கும்கூட அப்படித்தான் தோன்றுகிறது. இருபது நாட்களாகக் கொட்டித் தீர்த்து விட்டது.எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு இருபது சதவிகிதம் அதிகம் மழை பெய்துள்ளதாக செய்தித் தாள்கள் கூறுகின்றன.

“மாமழைப் போற்றுதும்
மாமழைப் போற்றுதும்”
என்று இளங்கோ அடிகள் மழையை வணங்கிப் போற்றுகிறார்.

இன்றோ , “இந்தச் சனியம் புடிச்ச மழை பேஞ்சும் கெடுக்குது: காஞ்சும் கெடுக்குது” என்று தெருவெங்கும் திசையெங்கும் பாதிக்கப் பட்ட மக்கள் மழையைச் சபிக்கிறார்கள்.

வைகையாற்றில் வரலாறு காணாத வெள்ளம். வெள்ளம் எனில் வெள்ளம், அப்படி ஒரு வெள்ளம்.

“கூட்டம் கூட்டம் கூட்டம்
கூடல் மாநகரில்
கூட்டம் பார்க்க
கூட்டம் கூட்டம் கூட்டம்”
என்பார் மீரா.கூட்டம் பார்க்கவே கூடும் தமிழ் ஜனத் திரள் அன்று தண்ணீர் பார்க்க வைகைக் கரையில் திரண்டது.

இளைஞர்கள் தண்ணீரைக் கொண்டாடிக் கொண்டாடிக் கூத்தாடியதைப் பார்க்க முடிந்தது.

“தண்ணீரைப் பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா?. லீவு போட்டுட்டு இதைப் பார்க்க வந்தேன் என்கிறான் ஒரு இளைஞன்.

தொலைக் காட்சியில் நாம் கண்ட அந்தக் காட்சி, சிலம்பில் வரும் ஒரு காட்சியோடு பெருமளவு ஒத்துப் போனது. இளங்கோ அடிகள் காவிரியில் வெள்ளம் கண்டு பொங்கிப் பூரித்துக் கொண்டாடிய ஜனங்களின் ஆர்ப்பரிப்பை சிலம்பில் இப்படிப் பதிகிறார்.

“உழவர் ஓதை
மதகோதை
உடை நீர் ஓதை
தன் பதங்கொள் விழவர் ஓதை
சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி”

காவிரியில் பெருகி ஆர்ப்பரித்து ஓடி வரும் நீரின் ஓசை, பெண்களின் குலவை ஒலி,  விவசாயிகளின் ஆனந்தக் கூப்பாடு எல்லாம் அந்தக் காலம் எனில், கரவொலி, விசில், குத்தாட்டம் என்பன இந்தக் காலம்.

ஆறுகளில் அன்றும் தண்ணீர் வந்தது, இன்றும் வருகிறது.

ஆனால் அன்று இல்லாத தண்ணீர்ப் பஞ்சம் இன்று தலை விரித்து ஆடுகிறது. அது ஏன்?

“ அப்ப இருந்ததை விடவும் இப்ப ஜனத் தொகை கூடிப் போச்சு இல்ல” என்று சொல்லக் கூடும்.

ஆமாம், ஒத்துக் கொள்ள வேண்டும்தான். ஆனால் அதுமட்டும்தான் காரணமா?

முன்பெல்லாம் எவ்வளவு மழைப் பெய்தாலும் ஆறுகளில் இவ்வளவு வெள்ளப் பெருக்கு வராது என்றும், பெய்த மழை நீர் ஒன்பது முதல் பத்து மாதங்களுக்கு நதிகளில் சீராக ஓடி வரும் என்றும், இப்போதோ பெய்கிற மழை நீர் மூன்று அல்லது நான்கே மாதங்களில் அவசர அவசரமாய்ப் பாய்ந்தோடி, கடலில் கலந்து வீணாவதாகவும் ஓசை காளிதாஸ் சொல்கிறார்.

மட்டுமல்ல, மழை நீர் வெள்ளமாய் வருகிறபோது உயிர்ச் சேதம் உட்பட அனைத்துச் சேதங்களையும் உப விளைவுகளாகத் தருவதாகவும் சொல்கிறார்.

அப்போது மிதமாய் ஓடிய ஆற்று நீரை இப்போது வேகம் பெறச் செய்த சக்தி எது? அவரிடமே கேட்டோம்.

”அதற்கு நதி எப்படி உற்பத்தியாகிறது என்பது புரிய வேண்டும்.அப்போதுதான் இது விளங்கும்,” என்றார்.

”நதி ஏரியில் இருந்துதான் பிறக்கும்”

“இல்லை” என்று அவர் மறுத்த போது வியப்பின் உச்சிக்கே போனேன்.

மலைகளில் ‘சோலாஸ்’ என்று அழைக்கப் படும் சோலைக் காடுகள் உண்டு.அந்தக் காடுகள் ஒரு விதமான சிறப்புத் தன்மை கொண்டவை.

சோலாஸ் அமைந்துள்ள நிலப் பகுதி மழை நீரை முற்றாய் உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை.அவ்வாறு சேமிக்கப் பட்ட நீர் முற்றாய் வழிந்து விடாமல் பையப் பையக் கசியச் செய்யும் தன்மையை சோலாஸ் கொண்டுள்ளன. இவ்வாறு பையப் பைய நீர் கசிந்ததால் தென்னக நதிகளில் நீண்ட காலத்திற்கு நீர் வரத்து இருந்தது. சோலாஸ் எனப்படும் சோலைக் காடுகளில் இருந்து கசியும் நீரே நமது தென்னக நதிகள் என்கிற உண்மையை அவர் சொன்னபோது இருபத்தி ஐந்து ஆண்டுகால ஆசிரியன் மாணவனாய் ஆனேன்.

இவைதான் நீர்ப்பிடிப்பு ஆதாரங்கள். இந்தக் கசிவு ஏறத்தாழ பத்து மாதங்கள் வரை நீடித்தது.

“இப்போது ஏன் இப்படி?”

தேயிலைத் தோட்டங்களுக்காகவும், காபித் தோட்டங்களுக்காகவும் இச்சோலைக் காடுகள் அழிக்கப் பட்டதன் விளைவாக, நீர்ப்பிடிப்பு ஆதாரங்கள் குறைந்துபோய் ,  பெய்கிற மழை நீர் முற்றாய் விரைவாய் செலவழிக்கப் படுகிறது.

அன்றைக்கு நதி மிதமாக ஓடியிருக்கிறது. அதனால்தான் இளங்கோ அடிகள்  ”நடந்தாய் வாழி காவேரி” என்று பாடியிருக்கிறார்.

இவ்வளவு மழை பெய்தும் இவ்வளவு தண்ணீர்ப் பஞ்சம் வருவதற்கான ஒரு காரணம் இது.

பணப் பயிர் வளர்க்க வேண்டியும், பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்புமாய் எஞ்சியிருக்கின்ற சோலாஸென்று அழைக்கப் படும் நீர்ப் பிடிப்பு ஆதாரங்களை முற்றாய் அழித்துப் போடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இது அதிக அளவில் தண்ணீர்ப் பஞ்சத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.

இரண்டாவதாக இயற்கை தரும் தண்ணீரைச் சேமித்து வைக்காமல் ஊதாரித் தனமாய் செலவு செய்யும் மனிதர்களாய் நாம் மாறிப் போனோம். நீரைச் சேமித்து செலவு செய்யும் பழக்கம் நமது முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது. நாம்தான் நல்லப் பழக்கங்களையெல்லாம் பையப் பையத் தொலைப்பதில் மன்னர்களாயிற்றே.

மன்னர்களுக்கும் அந்தக் காலத்து மந்திரிகளுக்கும் நீரின் அருமையும் நீர் சேமிப்பின் முக்கியத்துவமும் நன்கு தெரிந்திருக்கிறது. பள்ளியில் நமக்குக் கொட்டிக் கொட்டிச் சொல்லிக் கொடுத்தார்கள். ராஜராஜச் சோழன் குளம் வெட்டினான், ராஜேந்திரச் சோழன் குளம் வெட்டினான், திருமலை நாயக்கர் குளம் வெட்டினார் என்று. எல்லா மன்னர்களும் ஏரி, குளங்களை வெட்டி நீரைச் சேமித்து வளமான ஒரு வாழ்க்கையைத் தம் மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

கேட்கலாம், ராஜ ராஜன்தான் நிறைய ஏரிகளையும் குளங்களையும் வெட்டினானே பிற்கு ஏரிகளையும் குளங்களையும் வெட்ட வேண்டிய அவசியம் ராஜேந்திரச் சோழனுக்கு ஏன் வந்தது?. வரலாற்றின் பரந்த பக்கங்களில் இந்தப் பூமியின் எல்லப் பரப்பிலும் ஒவ்வொரு மன்னனும் ஏரிகளையும் குளங்களையும் வெட்டியிருக்கிறார்களே. அவர்களுக்கெல்லாம் என்ன பைத்தியமா?

ஒவ்வொரு நாளும் பெருகி வரும் ஜனத்தொகை நீர்த் தேவையை அதிகரிக்கும் என்ற அடிப்படை அறிவு, இன்றைய தொழில் நுட்ப அறிவுக்கு வாய்ப்பே இல்லாத அன்றைய மன்னர்களுக்கும் மந்திரிகளுக்கும் இருந்திருக்கிறது. அவர்கள் புதிது புதிதாய் ஏரிகளையும் குளங்களையும் வெட்டி நீரைச் சேமித்து இருக்கிறார்கள்.

எனில் மக்களாட்சியில் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இன்னமும் கூடுதலான பொறுப்புணர்வுமக்கறையும் இருந்திருக்க வேண்டும். இருந்திருக்கும் பட்சத்தில் ஏரிகளும், குளங்களும், தடுப்பணைகளும் நிறையப் பெருகியிருக்க வேண்டும்.

செய்தோமா?

இருந்த ஏரிகளையும் குளங்களையும் ப்ளாட் போட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தும் பாவப் பட்டல்லவா போனோம்.

ஒரு பக்கம் நதி நீரின் விரைந்த பயணம், மறுபக்கம் நீரைச் சேமிக்க புதிய ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதோடு இருந்த ஏற்பாடுகளையுமழித்தொழித்த குற்றவாளிகளாய்க் குறுகி நிற்கிறோம்.

இன்னொருபக்கம் ஒரு தனிப் பதிவிற்கே தேவை இருக்குமளவிற்கு நீள்கிறது மணல் திருட்டு.

ஏரிகளில் குளங்களில் நீர் தேங்கி நின்றால்தான் நிலத்தடி நீர் சமனிலைப் படும். நிலத்தை நீரைச் சமனிலைப் படுத்தத் தவறியதோடு இருக்கிற நிலத்தடி நீரையும் பன்னாட்டு நிறுவனங்கள் உறிஞ்சிக் கொழுக்க அனுமதித்து இருக்கிறோம்.

இப்படியே போனால் இன்னும் இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் ஒரு குடம் குடிநீருக்காக நம் போமியில் கொலையேகூட நடக்கலாம்.

சரி, என்ன செய்யலாம்?

ஒன்று, சோலாஸ் எனப்படும் இயற்கை நீர்ப் பிடிப்புஆதாரங்களைப் புதிதாய் ஏற்படுத்த முடியுமா என்பதை ஆராய வேண்டும்.இதற்காக நிதி நிலை அறிக்கையில் போதுமான அளவு நிதி ஒதுக்க வேண்டும்

அண்டம் நோக்கி, வெளி குறித்து, நமக்கு இருக்கும் அக்கறையை நாம் இது குறித்தும் நீட்டிப்புச் செய்ய வேண்டும். விஞ்ஞானிகளின் நேரத்தை, செயலை இது நோக்கியும் நகர்த்த நிர்ப்பந்திக்க வேண்டும்.

இரண்டாவதாக, ஏற்கனவே இருக்கிற நீர்ப் பிடிப்பு ஆதாரங்களை அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.

ஏரிகள், குளங்கள் இருந்த இடங்களில் கட்டப் பட்டுள்ள வீடுகளைத் தகுந்த மாற்று ஏற்பாடுகளோடு அப்புறப் படுத்தி அவற்றை மீட்டெடுக்க வேண்டும். அஙே பன்னாட்டு நிறுவனக்களினாலைகள் இருப்பின் அவற்றை அ ந்நிய ஆக்கிரமிப்பாகவே கருதி அகற்ற வேண்டும்.

புதிது புதிதாய் ஏரிகளை குளங்களை தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டும்.

நிலத்தடி நீரை உறிஞ்சி கொழுக்கும் நிறுவனங்களை அடித்து விரட்ட வேண்டும்.

இல்லாது போனால் முன்பே சொன்னதுதான்.

ஒரு குடம் குடி நீருக்காய் இந்தப் பூமியில் கொலைகளே விழும்

எனது “ பத்து கிலோ ஞானம்” என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...