Friday, May 27, 2011

எட்டாவது சனியன் மட்டும்





ஏழும்
நிற்காமல் போன
எரிச்சலை
நின்று துடைத்தது
எட்டாவது பேருந்து

ஜன்னலோர இருக்கை

குந்தவும்
அந்த தைல மரத்துக் கிளிகள்
“காச்”  ”மூச்” என்று கத்தவும்

அடச்சே...
இந்த
எட்டாவது சனியன் மட்டும்
ஏன்
நின்று தொலைத்ததோ?

Tuesday, May 24, 2011

அவர்கள்... குழந்தைகள்...

தங்கையின் திருமண அழைப்பிதழை வைப்பதற்காக திருவையாறு சென்றுவிட்டு திரும்புவதற்காக திருவையாறு பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். வருகிற பேருந்துகள் எல்லாம் பிதுங்கிக் கொண்டு வந்தன. இரண்டு படிக்கட்டுகளிலும் ஒரு பேருந்துக்கான கூட்டம் தொங்கிக் கொண்டு போனது.சரியான முகூர்த்த நாள் என்பது தெரியாமல் புறப்பட்டது தவறாகப் போனது.

பேருந்து நிலயத்தில் கூட்டம் அதிகரித்துக் கொண்டு போனதே அல்லாமல் குறைந்தபாடில்லை. கும்பகோணம் போகிற பேருந்து காலியாகப் போனது. திருக்காட்டுப் பள்ளி, மற்றும் தஞ்சை போகிற பேருந்துகளும் காலியாகவே போயின. அதில் அமர்ந்து போகிறவர்களைப் பார்த்தால் ஒரு வித பொறாமையே வந்தது. ஆக இருக்கிற கூட்டமெல்லாம் அரியலூர் வருகிற கூட்டம் தான் போல. அந்த எண்ணமே ஒரு வித அயர்வை ஏற்படுத்தியது. பத்துப் பேருந்துகள் சுத்தமாய் காலியாய் வந்தாலும் இருக்கிற ஜனங்களுக்கு காணாது என்றே பட்டது.  சரி, உட்கார இடத்தோடு பேருந்து வருகிறவரை காத்திருப்பது என்று முடிவெடுத்தோம்.

ஓரமாய் மூடிக் கிடக்கும் ஒரு கடையின் படியில் அமரலாம் என்று போனோம். படிக்கட்டின் ஒரு மூலையில் ஏற்கனவே ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. ஒரு இளைய ஜோடி அமர்ந்திருந்தார்கள். அவர்களது பையன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அவ்வப்போது அவன் மீதும் அவர்களுக்கு கவனம் இருக்கவே செய்தது. “: ஏய், மண்ணுல விளையாடாத , சிரங்கு வந்துடும். அப்புறம் டாக்டர்ட்ட தூக்கிட்டுப் போய் ஊசி போட்டுடுவேன்” என்று அவனது அப்பா சொன்னதுதான் தாமதம் “நான் பெரிய பையனா வந்து நம்ம ஸ்ப்லெண்டர எடுத்துட்டு போயி அந்தக் கொரங்கு மாமா மேல ஏத்தி அரைக்கப் போறேன்” என்று விளையாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமலே சொன்னான்.

இதைக் கேட்டதும் நானும் விக்டோரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். இருவர் மனதிலுமே ஒரு பழைய சம்பவம் மலரும் நிணைவாய் வந்து எங்கள் புன்னகையை ஆழமாய் அர்த்தப் படுத்தியது. 

அப்போது நாங்கள் பெருமாள் பாளையத்தில் குடியிருந்தோம்.கிஷோருக்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கும். அவனுக்கான சளிப் பிரச்சினைக்கு மருத்துவர் நரசிம்மனிடம் ஹோமியோ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். அவரது மருத்துவமனை நொச்சியத்தில் இருந்தது. ஒரு முறை அவனை வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவரிடம் கிளம்பினோம். போகும் வழியெல்லாம் எதையாவது கேட்டுக் கொண்டே வருவான். நானோ விக்டோரியாவோ ஒருபோதும் அவனது கேள்விகளை அலட்சியப் படுத்தியதே இல்லை.

நொச்சியம் நெருங்கிய பொழுது சாலை ஓரத்தில் மரங்களில் தென்பட்ட குரங்குகளைப் பார்த்து விட்டான்.  குரங்குகளை பற்றிய கேள்விகளாய்க் கேட்டு ஒரு வழி செய்துவிட்டான். அவனுக்கும் அவனது அம்மாவிற்கும் இடையே நடந்த உரையாடல்களுள் ஒரு மெல்லியப் பகுதியைப் பார்ப்போம்,

“ பாப்பாக் குரங்கெல்லாம் ஸ்கூலுக்குப் போகுமா?

“போகும்”

“அவங்களுக்கு யார் ரைம்ஸ் சொல்லிக் கொடுப்பா?”

“ கொரங்கு மிஸ்”

”கொரங்கு மிஸ் அவங்கள ஸ்கேல்ல அடிப்பாங்களா?”

“மாட்டாங்க”

“ அப்புறம் ஏன் எங்க மிஸ் மட்டும் அடிக்கிறாங்க”

“ ஏன்னா அவங்க மனுஷ மிஸ்” (அய்யோ, விக்டோரியா எவ்வளவு ஆழமான பதிலை இவ்வளவு லாவகமாகவும் அலட்சியமாகவும் சொல்வதைக் கேட்டு சத்தியத்திற்கும் சிலிர்த்தே போனேன்) 

“ஓ!, பாப்பாக் கொரங்குக்கு சளிப் புடிச்சா யாரு மருந்து கொடுப்பா?”

“ கொரங்கு டாக்டர்”

இப்படியாக குரங்குகளைச் சுற்றியே அவர்களது பேச்சு சுழன்று கொண்டிருக்க மருத்துவ மனை வந்து விட்டது. காத்திருக்கும் தேவை அன்று ஏற்படவில்லை.

அவருக்கு கிஷோரை மிகவும் பிடிக்கும். “ஹாய் கிச்சு, எப்ப வந்தீங்க?”

” தம்பி சாருக்கு வணக்கம் சொல்லு”

“ சாரெல்லாம் இல்ல மாமாதான்.கிச்சு , எங்க மாமா பேர சொல்லுங்க பார்ப்போம்?”

சட்டென சொன்னான் “கொரங்கு மாமா”

சிரி சிரியென்று சிரித்தார். எங்களுக்கு மிகவும் சிரமமாய் போய்விட்டது. ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டோம். வரும் வழியில் குரங்குகளைப் பார்த்ததையும் , தொடர்ந்து அவன் குரங்குகளைப் பற்றியே பேசிக்கொண்டு வந்ததையும் அதன் விளைவாகத்தான் இப்படிப் பேசிவிட்டான் என்றும் நாங்கள் சொல்லச் சொல்ல அதையெல்லாம் சற்றும் சட்டை செய்யாதவராய் அவனுக்கு சாக்லெட் கொடுத்து தூக்கி வைத்துக் கொண்டு “ எங்க இன்னொரு தரம் சொல்லு” என்று அவனோடு விளையாடிக் கொண்டிருந்தார்.                 

அந்தக் குழந்தை “கொரங்கு டாக்டர்” என்று சொன்னதும் எங்களுக்கு பழைய நினைவு வந்துவிட்டது. விக்டோரியா அவனை நோக்கி கையை நீட்டி சிரிக்கவே விக்டோரியாவை நோக்கி தாவிக் குதித்து ஓடி வந்தான்.

“ தம்பிப் பேரு என்ன?”

“தனுஷ்”

“ஓ! என்னப் படிக்கிறீங்க”

“யு.கே.ஜி” என்றவன் என்னை நோக்கி கை நீட்டி “இவங்கதான் மாமாவா?”

“ஆமாம்”

“அய்ய, நல்லாவே இல்ல, வேணாம்”

“சரி என்ன செய்யலாம்?”

“கா விட்டு தொறத்தி விடுங்க ஆண்டி”

“ சரி செஞ்சுடலாம். நீ ஆண்டியக் கட்டிக்கிறியா?”

இதைக் கேட்டதும் “சரி” என்றவன் விக்டோரியாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “ஓ.கே வா?” என்றான்.

"ஓகே, ஓகே” விக்டோரியாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை.

“ டேய் பெரியவங்கள அப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்கேன்ல” என்று சொல்லிக் கொண்டேஅவனை வாங்க
எழுந்து வந்தார். விக்டோரியா அவனைத் தராமல் இழுத்து வைத்துக் கொண்டு “ விடுங்க சின்னப் பிள்ளைதானே, போகவும் அவன் சரியாய்த் தானே சொன்னான்” என்று சொல்லவும் அவனது அம்மாவும் அப்பாவும் எங்களோடு சேர்ந்து சிரித்தனர். 

குழந்தைகளைக் கவனித்தால் எதையும் மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். சிரித்துக் கொண்டே கற்கலாம். எவனோ ஒருவன் அரை போதையில் உளறி இருக்கிறான் “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்று. எந்தக் குழந்தைக்காவது இது புரியும் என்றால் அது சொல்பவனைக் கொன்றே போடும். இந்த உலகத்தில் குழந்தைகளுக்கு நிகர் எதுவுமே இல்லை.

அவர்கள் போக வேண்டிய பேருந்து வரவே அவனை வாங்கிக் கொண்டு கிளம்பினர். முத்தம் கொடுத்து டாடா சொல்லி விக்டோரியா அனுப்பிவைக்கவே பையன் காற்றிலே ஒரு முத்தம் அனுப்பினான். அதில் ஒரு துளி என் மீதும் விழுந்தது. அயர்வு முழுக்க பறந்தே போனது.

“ பேசாம அவங்க முகவரிய வாங்கி வச்சிருந்தா போயி அப்பப்ப கொஞ்சலாம்ல”

“அதுக்கு அங்க போகனும்னு அவசியமேயில்ல” 

”அப்புறம்”

“ஊர்ல இருக்கிற எல்லாக் குழந்தைகளுமே அவந்தான். எல்லாக் குழந்தைகளுமே ஒரே மோல்டுதாங்க” அப்பா, எவ்வளவு ஞானம். இவ்வளவு நாள் இதை எப்படி கண்டு கொள்ளாமல் போனோம்.

ஒரு வழியாய் எங்களுக்கும் ஒரு பேருந்து வந்தது. நின்று கொண்டுதான் போக வேண்டும். உள்ளே நுழைவதற்கு இடம் கிடைக்கவே ஏறி விட்டோம்.

ஏறிய பின்புதான் ஏன் ஏறினோம் என்று தோன்றியது. முன்னே இருப்பவர்களை பின்னே போகுமாறும் பின்னே இருப்பவர்களை முன்னே போகுமாறும் ஒவ்வொறு முறை நடத்துனர் தள்ளும் பொழுதும் ஒவ்வொருவரும் எரிச்சலடைந்து சிலர் அவரை கண்டபடி சபிக்கவே செய்தோம்.

ஒவ்வொரு நிறுத்ததிலும் ஏறிக் கொண்டேதான் இருந்தார்கள். ஒவ்வொரு முறையும் நடத்துனரை சபித்துக் கொண்டேதான் வந்தோம். “இப்படிச் சம்பாரிக்கறதுக்கு பதிலா...” என்றுகூட சிலர் அசிங்கமாய் திட்டவே செய்தனர்.  

சட்டையெல்லாம் வியர்வையில் நனைந்து , கசங்கி , இதில் அடிக்கடி நடத்துனர் டிக்கட் போடுவதற்காய் இப்படியும் அப்படியுமாய் நுழைந்து போவது என்பதெல்லாம் சேர்த்து உயிரே போனது. 

இந்த நேரம் பார்த்து மழை வேறு வந்துவிடவே இன்னும் துயரம் அதிகமானது. எல்லா இடங்களிலும் ஒழுகியது. இரண்டு பக்கங்களிலும் ஜன்னல் கண்ணாடிகள் சரியாக வேலை செய்யாததால் சாரல் வேறு. ஏறத்தாழ குளித்தோம்.

 ஒரு வழியாய் பேருந்து அரியலூர் வந்தது. எல்லோருக்கும் அப்பாடா என்றிருந்தது. சிலர் அதை கொஞ்சம் சத்தமாகவே வெளிப் படுத்தினர்.

இறங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை கேட்டான், “ இந்த பஸ் திரும்ப எப்பக் கிளம்பும்?”

“அதை ஏன் கேக்குற. எவ்வளவு ஒழுகுனாலும் உடனே கிளப்பிடுவாங்க”

“ பாவம் இல்ல அந்த கண்டக்டர்”

அதை யாரும் சட்டை செய்தார்களா என்று தெருயவில்லை. ஆனால் எனக்கு பொட்டில் அறைந்தது போல் இருந்தது.

ஆம் நாம் ஏன் இப்படி யோசிப்பது இல்லை. அல்லது குழந்தைகள் மட்டும் ஏன் இப்படி யோசிக்கிறார்கள்?

அவர்கள் குழந்தைகள்.

எனக்கொரு ஆசை, என்னைத் தவிர எல்லோரும் குழந்தைகளாய் மாறிவிட வேண்டும். அல்லது என்னோடு தொடர்புடைய அனைவருமாவது குழந்தைகளாய் மாறிவிட வேண்டும்.

Sunday, May 22, 2011

நனையாத நெருப்பு மட்டும்...

அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வறுகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப

Saturday, May 21, 2011

இத்தனை சாமிகளா?

வியர்க்க வியர்க்க வீட்டுக்குள் நுழைகிறேன். கிஷோர் வெளியேறிக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் கொஞ்சம் சத்தமாக “ அம்மா, அப்பா எங்க போயி சுத்திட்டு வராருன்னு கொஞ்சம் விசாரிச்சு வை” என்று சொன்னவனிடம் “அது சரி அய்யா எங்க சுத்தப் போறீங்க?” என்றேன்.

“  நானும் வித்யாசாகரும் சாரநாதன்ல அப்ளிகேஷன் வாங்கப் போறோம்,”

“வெய்யிலுக்கு முன்ன போய்ட்டு வந்தா என்னடா?, சரி, பாத்து சூதானமா போயிட்டு சீக்கிரமா வந்து சேருங்க” 

வண்டியை எடுத்துக்கொண்டுக் கிளம்பினான்.உள்ளே நுழைந்தால் பையன் பத்தவைத்துவிட்டுப் போன சீனிப் பட்டாசு சன்னமாய் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. 

“ நானும் கரடியாத்தான் கத்துறேன். ரெண்டு ஆம்புளைங்க இருக்குறீங்கன்னுதான் பேரு. இங்க இருக்கறத அங்க நகத்தறதில்ல. சரி,  ரேஷன் கடைக்காச்சும் போயி சக்கரைய வாங்கிட்டு வரக் கூடாதா? நடந்து போர தூரத்தில இருந்தா ஒங்கள யாரு எதிபார்க்கப் போறா?”

“ இன்னைக்கு ஏம்மா ஊருல உலகத்துல ஆம்புளைங்க எப்படி பொறுப்பா இருக்காங்கன்னு போய் பார்க்க சொல்லல” என்று நான் சிரித்துக் கொண்டே இடை மறிக்கவும், “ இந்த நக்கலுக்கெல்லாம் ஒன்னும் கொறைச்சல் இல்ல. போயி ஜோஸ்பின் மிஸ் வீட்லப் பாருங்க, அண்ணன் கிச்சன்ல எவ்வளவு உதவி செய்யிறாருன்னு. நானும் உங்களாட்டம்தானே வேலைக்குப் போயிட்டு வாரேன். கொஞ்சமும் மனசாட்சியே இல்லாத மனுஷங்க கிட்ட பேசி என்னத்துக்கு ஆவுது”

பேசாம முதல் சுற்றோடு சாப்பிடப் போயிருக்கலாம்.குறைந்த பட்சம் இந்த அளவிலாவது போயிருக்கலாம். சுழி விட்டால்தானே. 

“ஏம்மா அவரு என்ன என்ன மாதிரி ரெண்டு மூணு புத்தகமா எழுதி இருக்காரு?” என்று முடிக்கக் கூட இல்லை,

“ ஏங்க பேசாம வந்து சாப்பிட உக்காருங்க. இல்லாட்டி நல்லா வந்துரும் ஆமா”

ஒரு வழியாய் சுதாரித்துக் கொண்டவனாய் , உடை மாற்றிக் கொண்டு, முகம் கழுவி, சாப்பிட அமர்ந்தேன்.சாப்பிட்டு முடிந்ததும் “சுகன்” இல் வந்திருந்த கிருஷ்ணப்ரியாவின் “வேறு வேறு சிகரங்கள்” என்ற கவிதையினை வாசிக்கத் தொடங்கினேன்.கவிதையில் மூன்று வரிகள் மிச்சம் இருக்கும் போது கிஷோரிடமிருந்து அழைப்பு.

”என்னடா?”

“கிஷோருங்களா”, வேறு யாரோ பேசினார்கள். பக்கத்தில் யார் யாரோ பேசுவது கேட்டது.  ”நான் கிஷோரட அப்பா “ என்று பேசிக் கொண்டிருக்கும்போதே துண்டித்து விட்டார்கள். நான் அழைத்தாலும் எடுக்கவில்லை. உதறலெடுத்து விட்டது. பிள்ளைக்கு ஏதோ பிரச்சினை என்று மட்டும் புரிந்தது. யாரோடும் சண்டையா?. அவன் யாரோடும் சண்டைக்கெல்லாம் போகிறவனும் இல்லையே. குழம்பி போனவனாய் மீண்டும் மீண்டும் கிஷோர் எண்ணை அழைத்துக் கொண்டே இருந்தேன். கண்களில் கசிவதை உணர்ந்தேன். எனக்கும் அழுகை வரும் என்பது அப்போதுதான் தெரிந்தது.இதற்குள் மீண்டும் அவன் அலை பேசியிலிருந்து ஒரு வழியாய் மீண்டும்அழைப்பு. பதறிப்போய் எடுத்தேன்.

“ என்னப்பா?”

“சார், கிஷோரோட அப்பாங்களா?”

“ஆமாம்ப்பா, பிள்ளைக்கு என்னப்பா. ஏதேனும் பிரச்சினையா?”

“ ஒன்னும் இல்லைங்க சார், கிஷோருக்கு ஒன்னும் இல்ல , ஓட்டிட்டு வந்த பையனுக்குத்தான் கொஞ்சம் காலில் அடி”

புரிந்து போனது. திருச்சி தாண்டி இருக்கும் சாரநாதன் கல்லூரிக்கு வண்டியிலேயே போயிருக்கிறார்கள்.ஏதோ விபத்து நடந்திருக்கிறது. இதற்குள் விட்டுவிற்கும் லேசாக விஷயம் புரிய ஆரம்பிக்க “ ஏங்க , தம்பிக்கு என்னங்க? “ என்று அழ ஆரம்பிக்கவே,”கொஞ்சம் பொறும்மா, என்னன்னு கேப்போம்” என்று விட்டுவை சமாளித்துவிட்டு , “ ஏம்ப்பா, என்னையா நடந்துச்சு?” என்றேன்.

“சார் பேசறதுக்கெல்லாம் நேரமில்லை. நேரே வந்து சொல்கிறோம். இப்ப ஒரு வேன்ல ரெண்டு பேரையும் எடுத்துக் கொண்டு வரோம். ஒன்னும் பயப்படாதீங்க சார். ரெண்டு பேரும் ரொம்ப நல்லாத்தான் இருக்காங்க. அவுங்கள கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரதா? இல்ல வேற ஏதேனும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரட்டுங்களா?”

”பெரம்பலூர்ல, அன்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துடுங்கப்பா”

“அன்னை ஆஸ்பத்திரியா? அது எங்க சார் இருக்கு?”

“எனக்குத் தெரியுங்க அண்ண”

அப்பாடா, அது கிஷோரோட குரல். 

”தம்பி கொஞ்சம் கிஷோர்ட்ட போன கொடுங்களேன்”.

“அப்பா”

“என்ன சாமி, என்ன ஆச்சு?. வித்யா எப்படிப்பா இருக்கான்?”

”ஒன்னுமில்லப்பா. திடீர்னு ப்ரேக் போட்டான். விழுந்துட்டோம். எனக்கு லேசான சிராய்ப்புத்தான். வித்யாவுக்கு லேசா ப்ராக்‌ஷர் போல”

இதற்குள் விட்டுவிற்கு எல்லாம் ஒரு வழியாய் புரிந்து போகவே, உடை மாற்றிக் கொண்டு இருக்கிற பணத்தை எல்லாம் அள்ளிக் கொண்டு, முத்துவுக்கு தகவல் தரவே முத்து, மோகன், பிரபு என்று ஆளாளுக்கு இருப்பதை எல்லாம் எடுத்து பாக்கெட்டில் திணித்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். நாங்கள் போவதற்கும் வேன் வருவதற்கும் சரியாக இருந்தது. ஒரு மினி லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்தார்கள். நிறைய ரத்தம்.கிஷோர் நடந்தான். வித்யாவால் நடக்க முடியவில்லை. பிள்ளைகளோடு பத்துப் பேருக்கும் குறையாமல் வந்திருந்தார்கள். வித்யாவின் கால் அநேகமாக ஒடிந்திருக்க வேண்டும். நிறைய ரத்தம் வெளியேறி இருந்தது. அவன் காலை இரண்டு இளைஞர்கள் தங்கள் மடியில் போட்டுக் கொண்டு வந்தார்கள். அவர்களது பேண்ட் முழுவதும் ரத்தத்தால் ஊறிப் போயிருந்தது. வித்யா மிகவும் எடை உள்ளவன் என்பதால் மிகவும் சிரமப் பட்டு தூக்கி வந்து அறையில் கிடத்தினர்.

இதற்கிடையில் வித்யாவின் சித்தப்பாவிற்கு தகவல் தந்தோம். அவரும் வந்து விட்டார்.

“ வா கிஷோர், வீர விளையாட்டா?” என்றவாறே வந்த மருத்துவர். சரவணன் இருவரையும் பார்த்துவிட்டு ஒரு பத்து நிமிஷம் , மொதல்ல பசங்களுக்கு குடிக்க எதுனாச்சும் வாங்கிக் கொடுங்க ,வந்துடறேன் “ என்று சொல்லிவிட்டு என்னையும் வித்யாவின் சித்தப்பாவையும் பார்த்து, “ ஒன்னும் பயப்படாதீங்க, “ என்றவர் கண்களில் அழுதுகொண்டிருந்த விக்டோரியா படவே” டீச்சர் அழாதீங்க, ஒண்ணும் இல்ல, இதோ வந்துட்டேன்” என்றவாறு ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த  நோயாளியைப் பார்க்கப் போய் விட்டார். இதற்கிடையில் முத்து இரண்டு பசங்களுக்கும் பதமான சூடில் காபி வாங்கி வந்திருந்தார்.

கிடைத்த இடை வெளியில் அழைத்து வந்தவர்களைத் தேடிப் போனோம். மரத்தடியிலும் , படிக்கட்டிலும் என்று கிடைத்த இடங்களில் அமர்ந்திருந்தனர்.

”வாங்க தம்பி, காபி சாப்பிடலாம்.”

”பொறுங்க சார், பசங்களுக்கு என்னான்னு மொதல்ல தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் அதை எல்லாம் பார்க்கலாம்”

மெதுவாய் விசாரித்தோம்.
கிஷோரும் வித்யாவும் வண்டியிலேயே கிளம்பிப் போயிருக்கிறார்கள். வித்யா வண்டியை ஓட்டிக் கொண்டு போயிருக்கிறான். ஆலத்தூர் கேட் அருகே திடீரென ப்ரேக்கைப் போடவே வண்டி விழுந்திருக்கிறது. வித்யா அங்கேயே விழுந்து கிடக்க கிஷோர் ஒரு முப்பது அடி தூரத்திற்கு வண்டியோடு இழுபட்டு போயிருக்கிறான். அது சென்னை திருச்சி பிரதான தேசிய நெடுஞ்சாலை. எப்போதும் நெரிசலாய் இருக்கும் சாலை. அந்த நேரத்தில் எந்த வண்டியும் வராத காரனத்தால் பிள்ளைகள் இருவரும் பிழைத்திருக்கிறார்கள். சாலையில் நெருப்புப் பொறி பறக்க பாய்ந்துபோன வண்டியையும் அதனோடு உருண்டு போன கிஷோரையும் பார்த்தவர்கள் கிஷோர் பிழைக்க மாட்டான் என்றுதான் நினைத்து ஓடி வந்திருக்கிறார்கள். அனால் கிஷோர் அவர்கள் ஓடிவரும் முன்னமே எழுந்து ஓடி வித்யாவை தூக்கிவிட முயன்றிருக்கிறான்.அவால் முடிய வில்லை. அதற்குள் எல்லோரும் ஓடி வந்து இருவரையும் இழுத்துப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

கிஷோருக்கு உள்ளங்கை சதை முழுக்கத் தேய்ந்து போயிருந்தது. தொடையில் நிறையக் காயம், கைகளில் முதுகில் கால்களில் என்று காயம். சாலையில் உருண்டு போகவே தலையில் ஏதும் பிரச்சினையா என்று பார்க்க சி.டி ஸ்கேன் எடுத்தோம். ஒன்றுமில்லை.வித்யாவிற்கு காலில் அறுவை செய்து ப்ளேட் வைக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார். நாளை (வெள்ளி) இரவு அறுவை.

அழைத்து வந்தவர்களுக்கு என்னத் தருவது? நிறைய கேட்பார்கள் என்றும் . இதுமாதிரி ஆட்களிடம் ஈவு இரக்கமே இருக்காது என்றும் , முடிந்த வரைப் பிடுங்குவார்கள் என்றும், ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக அவர்களிடம் பேச வேண்டும் என்றும் எங்களிடம் சொல்லியிருந்தனர். 

அவர்களிடம் போனோம்.

”பசங்களுக்கு என்னா சார்?” 

 சொன்னோம்.

எல்லோரும் பசங்களிடம் போனார்கள். வித்யாவின் தலையை வருடிக் கொடுத்தார்கள். கிஷோர் தோளில் கை போட்டார்கள். “பயப்படாதீங்க”
தலை அசைத்துக் கிளம்பினார்கள்.

“ தம்பி காபி சாப்பிடலாம்”

“பரவா இல்ல சார்.“ 

எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்தார்கள். 

“ அந்த இடத்துல விபத்து நடந்து இதுவரை யாரும் பொழச்சதே இல்ல சார். விபத்து நடந்தா பொணமாத்தான் சார் எடுப்போம். நசுங்கி கிடக்கிற கார்களில் யாரையாச்சும் உசிரோட எடுக்க மாட்டோமான்னு கிடந்து தவிப்போம் சார். இப்பக் கூட கிஷோர் செத்துருப்பான்னுதான் சார் ஓடியாந்தோம். ரெண்டுப் பசங்களையும் உசிரோடப் பெத்தவங்ககிட்ட சேர்த்திருக்கோம் சார். ஆண்டவன் கொடுத்த இந்த மன நிம்மதி போதுங்க சார்.எதையாவது சாப்பிட்டு இந்த மன நிலைய டிஸ்டர்ப் பண்ணிக்க ஆசப் படலங்க சார். பசங்க நூறு வருஷம் நல்லா இருப்பாங்க சார்” 

”வேனுக்கு ஏதாச்சும்...”

“ அடப் போங்க சார், ரெண்டு ஜீவனக் காப்பாத்தற பெரிய புன்னியத்த கடவுள் எங்களுக்கு இன்னைக்கு தந்திருக்கிறார். ஏற்கனவே உங்களுக்கு நிறைய செலாகும். எங்க கவலை எல்லாம் அதுல எங்களால பங்கெடுக்க முடியலையேன்னுதான் சார். யாரும் பசங்கள திட்டாதீங்க சார்.” 

வண்டி பத்திரமாக இருப்பதாகவும். எப்போது வேண்டுமானாலும் வந்து எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி முகவரியும் எண்ணும் தந்துவிட்டு காத்திருக்காமல் போய் விட்டார்கள்.

கை எடுத்துக் கும்பிட்டோம். தாரை தாரையாய் கண்கள் சுரக்க.

சாமி இல்லை என்றுதான் நினைத்திருந்தோம். இத்தனை சாமிகளா?

பிள்ளைகள் முற்றாய் குணமானதும் இவர்களிட்ம் அழைத்துப் போய் இவர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாய் கொஞ்ச நேரம் கை எடுத்துக் கும்பிட வைக்கப் போகிறேன். அதை விட வேறென்ன செய்ய முடியும் என்னால் 
-- 

Thursday, May 19, 2011

நம்பிக்கை



சொன்னானாம்
மீண்டும் மீண்டும் ஒளிபரப்பான
நீண்ட இரங்கல்
மிகை என்றும்
காட்டப் பட்ட
தனது உடலின் ஒப்பனையில்
கவனம் போதாதென்றும் 

சிக்கனக்காரன்



மேட்டுத் தெரு
குப்பனை
சிக்கனக்காரனென்றுதான்
ஊரே சொல்லும்

சந்தைக்கு
நடந்தே போவான்
நடந்தே திரும்புவான்
இரண்டு மணி செலவழித்து
நான்கு ரூபாய் சேமிப்பான்

முக்கால் மணி நேரம் நடப்பான்
முத்து வீட்டில்
பேப்பர் படித்துவிட்டு
மீண்டும் ஒரு முக்கால் மணி நடந்து
சேமிப்பான் பேப்பர் காசை

மாத்திரை போட்டா
பத்தே நிமிடத்தில் பறந்து போகும்
தலைவலி

சொன்னால்
மாத்திரைக்கு ஒரு ரூபாயா என்பான்

பத்துப் போட்டு
மூன்று நாளில் குணமாவான்

நேரம் செலவழித்து
காசை சேமிக்கும்
மேட்டுத் தெரு
குப்பனை

சிக்கனக்காரனென்றுதான் 
ஊரே சொல்லும்



Tuesday, May 17, 2011

எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.




அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தோழர் ஜெயலலிதா அவர்களுக்கு,

வணக்கமும், வாழ்த்துக்களும்.. இப்படி நான் விளிப்பது தங்களுக்கு பிடிக்காமலும் போகலாம். ஏன், என் மீது கோவமே வரவும் கூடும். நீங்கள் பழைய அம்மையாராக இருப்பின் இதன் விளைவுகள் மிகக் கடுமையாகவும் இருந்திருக்கக் கூடும். நீங்கள் பழைய நிலையிலேயே இருந்திருப்பீர்கள் என்றால் நிச்சயமாய் நானும் இந்தக் கடிதத்தை எழுதியிருக்க மாட்டேன். காரணம் நீங்கள் மாறாத நிலையில் இது மாதிரி எளிய கடிதங்களால் எந்த விளைவும் ஏற்பட்டு விடப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 

ஆனால் நீங்கள் நிறைய மாறியிருப்பதாகவே படுகிறது. அது மட்டுமல்ல நான் உளப் பூர்வமாக யாரை மதிக்கிறேனோ அவர்களை மட்டுமே தோழரே என்று விளிப்பது வழக்கம். நீங்கள் மாறியிருப்பதன் மூலம் தமிழகம் ஆக்கப் பூர்வமான சில அடிப்படை மாற்றங்களை உங்கள் மூலம் அடைவதற்கு வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையும் கூட உங்கள் மீதான எனது மரியாதைக்கும் தோழமைக்குமானக் காரணமாக இருக்கலாம்.

தேர்தல் கூட்டணி அமைந்தது. மிகச் சிறப்பான ஒரு கூட்டணியை மிக லாவகமாக ஏற்படுத்தினீர்கள். ஆனால் கூட்டணிக் கட்சித் தலைவர்களை கொஞ்சமும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக 160 தொகுதிகளுக்கான உங்கள் வேட்பாளர்களை அறிவித்தீர்கள். அதன் விளைவாக இடதுசாரிகளும் தே.மு. தி. க வும் ஒன்றிணைந்து மூன்றாவது கூட்டணியை உருவாக்கும் முயற்சி வரைக்கும் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் கூடிக் கூடி ஆலோசனை செய்தனர். இந்தச் சூழலில் கருணாநிதியோ தனக்கே உரிய ராஜ தந்திரங்களைப் பயன் படுத்தி அதையும் இதையும் பக்குவமாக செய்து ஏதோ செய்து மக்கள் மத்தியில் அவரது கூட்டணிதான் வெற்றி பெறப் போகும் கூட்டணி என்பது போன்றதொரு பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார்.அவ்வளவுதான் நீங்கள். ஒழிந்தீர்கள் என்றுதான் நினைத்திருந்தோம். அதற்கு தகுந்தாற்போலவே கருணாநிதியும் தான் நிமிடத்திற்கு நிமிடம் முன்னேறி செல்வதைப் போன்றதொரு பிம்பத்தை வலுவாக்கிக் கொண்டே சென்றார்.

பழைய ஆளாக இருந்திருந்தால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கோவத்தில் எதையாவது பேசியிருப்பீர்கள். விளைவாக நீங்கள் தோற்பதோடு இந்த மண்ணும் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு சின்னா பின்னாப் படுவதற்கு காரணமாக இருந்திருப்பீர்கள்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த நிதானத்தோடும் பொறுமையோடும் இந்த சிக்கலை நீங்கள் கையாண்டீர்கள். ஏறத்தாழ அந்த நிமிடத்தில் முறிந்தே போயிருந்த கூட்டணியை மறு கட்டமைப்பு செய்தீர்கள். எல்லா தலைவர்களையும் உரிய மரியாதை கொடுத்து அரவணைத்த விதம் நீங்கள் மாறியிருப்பதையே காட்டியது.மட்டுமல்ல யாருக்கும் கசப்பின் தழும்பே இல்லாமல் பார்த்துக் கொண்டீர்கள். அப்பாடா, நிறைய பக்குவப் பட்டிருக்கிறீர்கள் எனப் புரிந்தது.

எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்று முடிவானதும் அந்த ஒப்பந்த நகலினை வந்து வாங்குவத்ற்கு மறுத்து தோழர் மகேந்திரனை அனுப்பி வைத்த தோழர் தா.பாண்டியன் அவர்களை நீங்களே தொலை பேசி வற்புறுத்தி வரச் சொன்னதாக ஒரு தகவலை உங்கள் கட்சி நண்பர் ஒருவர் சொன்னார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களிடம் மேம்பட்ட செயல்பாடுகளை எங்களால் எதிர்பார்க்க முடியும்.

மட்டுமல்ல, வைகோ அவர்கள் கூட்டணியிலிருந்து வெளியேறி வெளிச் சென்றபோது நீங்கள் உங்கள் நிலையை வெளிப்படுத்தி நீங்கள் வெளியிட்ட அறிக்கை உங்களின் முதிர்ச்சிக்கான அடையாளம். இதுவும் உங்களிடம் நாங்கள் பார்க்கும் புதுசு. கடந்த காலங்களில் நாவலர் உள்ளிட்டவர்களையே உதிர்ந்த ரோமங்கள் என்ற நீங்கள் எங்கே, இப்போது இவ்வளவு பொறுமையோடும் கண்ணியத்தோடும் வெளிப் படுத்தும் நீங்கள் எங்கே? முற்றாய் மாறியிருக்கிறீர்கள். 

தேர்தலில் வரலாறு காணாத அளவு, ஏன் நீங்களே கனவிலும் நினைத்துப் பார்த்திராத இவ்வளவு பெரிதான ஒரு வெற்றியை அடைந்த பிறகு நீங்கள் அதை எடுத்துக் கொண்ட விதம் நாங்கள் உங்களிடம் இதற்கு முன்னர் கண்டிராத ஒன்று. வழக்கமாக எனது ஆட்சியில்,என்னால், நான் என்று சுய முனைப்போடு பேசும் நீங்கள் மிகச் சரியாக ” அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி மக்களின் வெற்றி” என்று இந்த வெற்றியய் உங்களின் அமைப்பின் வெற்றியாக பார்த்தீர்கள். உங்களிடத்தில் இதை நாங்கள் புதிதாகவே காண்கிறோம். “ இது கருணாநிக்கு எதிராக விழுந்த வாக்குகளின் விளைவு “ என்பதை மிகவும் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறீர்கள். தி.மு.க தோற்றதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணமாகக் கருதப் படுவது அவர் தன் குடும்பத்தை இயக்கத்தைக் காட்டிலும் அதிகமாய் முன்னிலைப் படுத்தியதுதான்.

அருள் கூர்ந்து உங்களின் இயக்கத் தொண்டனை, இயக்கத்தை எதையும் விட மேலாய் உழைக்கும் மக்களை முன்னிலைப் படுத்துங்கள்.இறுதி வரைக்கும் அவர்கள் உங்களைக் கை விட மாட்டார்கள்.

தோழர், காவேரிக் கரையில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர்கள். காவேரி நதி நீர்ப் பிரச்சினையை உணர்ச்சி வசப்படாமல், பதட்டப் படாமல் அணுகி ஆக்கப் பூர்வமாகசெயல்பட்டு நமக்கு வரவேண்டிய நீரைப் பெற்றுத்தாருங்கள். காவேரிப் பிரச்சினை என்பது ஏதோ கர்நாடகாவிற்கும் நமக்குமிடையே உள்ள மூன்று அல்லது மூன்றரை டி. எம் .சிக்கான சிக்கல் என்பதாக மட்டுமே இரண்டு மாநிலங்களிலும் சொல்லப் படுகிறது. “ நடந்தாய் வாழி காவேரி” என்றுதான் இள்ங்கோ எழுதினான். இன்று காவேரியின் வேகம் அதிகரித்திருக்கிறது. காரணம் என்ன என்பதை அருள் கூர்ந்து அறிஞர்களைக் கொண்டு ஆராயுங்கள். ஓசை காளிதாஸ் மிகச் சரியாக, குடகில் இருந்த “சோலாஸ்” என்ற அமைப்பு காபி தோட்டங்களுக்காக அழிக்கப்பட்டதே இதற்கான காரணம் என்கிறார். குடகில் “:சோலாஸ்” மீண்டும் அதிகமாய் உருவாக்கப் பட்டால் காவேரியில் நான்கு மாதங்கள் ஓடும் நீர் ஏழு அல்லது எட்டு மாதங்களுக்கு ஓடும். நிலத்தடி நீர் பெருகும். இரண்டு மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினையின் பெரும் பகுதி தீர்ந்து போகும். வருடா வருடம் இரு மாநிலங்களிலும் நடைபெறும் பந்துகளுக்கு தேவை இருக்காது.
உய்ர்ச்சேதம் இருக்காது. அமைதியாய் மக்கள் இருப்பதற்கான சுமூகமான சூழல் ஏற்படும்.

மேலும் குறைந்த நீர் செலவில் அதிக விளைச்சலைப் பெறுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். களவு போன ஏரி குளங்களை கண்டுபிடித்து அவை யாரிடம் இருந்தாலும் இரக்கமே காட்டாமல் பறிமுதல் செய்யுங்கள். தூர் வாரி அவற்றில் நீர் சேமிக்க முயற்சி செய்யுங்கள். புதிது புதிதாய் ஏரி குளங்களையும் தடுப்பனைகளையும் ஏற்படுத்துங்கள். இவ்வளவையும் செய்துவிட்டு நமக்கு உரிமையான நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுவிடுங்கள்.  இதை மட்டும் நீங்கள் செய்து விடுங்கள். பிறகு அடுத்த தேர்தலுக்கு நீங்கள் இலவசங்களை நீங்கள் தேர்தல் அறிக்கையிலே திணிக்க வேண்டியாவசியமே இருக்காது. மாறாக ,மக்கள் தங்கள் வாக்குகளை இலவசமாக உங்களுக்குப் போடுவார்கள். 

 காவேரி வறண்டு கிடப்பதற்கான முக்கிய காரணக்களுள் மிக முக்கியமானது மணல் கொள்ளை. காவேரி என்றதும் காவேரி மணல்தான் எதையும் தாண்டி துறுத்திக் கொண்டு முன்னுக்கு வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுக்கு காவேரி மணலும் ஒரு காரணம் என்பதை அவசியம் உணர்ந்து கொள்ளுங்கள். கோடிக் கணக்கில் ஆங்காங்கே மணல் கொள்ளை அடித்த அக்கிரமத்தை தட்டி கேட்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்த மக்கள் தங்களது கோவத்தை இந்தத் தேர்தலில் வரிசையில் நின்று காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். மணல் கொள்ளையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுருட்டப் பட்ட மக்கள் பணத்தை தைரியமாக மீட்டெடுத்துத் தாருங்கள். இதை செய்யும் போது நீங்கள் எதற்கும் பயடத் தேவை இல்லை ( நீங்கள் எதற்கும் பயபடுகிறவரும் இல்லை). மக்கள் உங்களோடு இருப்பார்கள். ஆனாலும் ஒன்று இந்த மணல் கொள்ளை உங்கள் காலத்தில்தான் தொடங்கியது. இது விஷயத்தில் உங்கள் மந்திரி மார்கள் கோடு போட்டார்கள் அவர்கள் நீளமாய் அகலமாய் ரோடே போட்டார்கள். எனவே உங்கள் அமைச்சர்கள் மற்றும் பொருப்பாளர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். எச்சரித்தும் வையுங்கள்.

என்ன விலை கொடுத்தேனும் கல்வியைப் பொதுப் படுத்துங்கள். அதிக்காரத்தைப் பயன் படுத்தி கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கொள்ளை அடித்தவர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்களை அரசுடமை ஆக்குங்கள். கல்வியை மட்டும் பொதுப் படுத்திப் பாருங்கள். காலா காலத்துக்கும் மக்கள் உங்களை இதயத்தில் வைத்துக் கொண்டாடுவார்கள்.

கல்வியை சந்தை சரக்காக மாற்றியவர்களை ஈவு இரக்கமற்று தண்டியுங்கள்.எதிர்ப்பவர்களை இரும்புக்கரம் கொண்டே அடக்குங்கள்.

ஸ்டார் காப்பீட்டுக் கழகத்திற்கு செல்லும் பணத்தில் அரசு மருத்துவமனைகளை சீர் படுத்துங்கள். ஏழைகள் பயன் பெறுவார்கள்.

அரசு ஊழியர்களை எதிரியாகப் பார்க்கும் உங்கள் பழையப் பார்வையை அருள் கூர்ந்து மாற்றிக் கொள்ளுங்கள்.

மின்சாரத் தட்டுப்பாடு அவர்களது தோல்விக்கான ஆகப் பெரிய காரணங்களுள் ஒன்று. தமிழகத்தில் மின்சாரத்திற்கு இவ்வளவு தேவை இருக்கும் போது இந்தியா மின்சாரத்தை இலங்கைக்கு வழங்க இருப்பதாக கேள்விப் படுகிறோம். மத்திய அரசின் சட்டையைப் பிடித்து உலுக்கி அதை தமிழகத்தின் பக்கம் திருப்பி வாங்குங்கள்.

ஈழத்தில் நடந்த இனப் படு கொலைகளுக்கு மத்திய அரசும் வெளியேறும் மாநில அரசும் பெரும் காரணங்களாக ஆனார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு வார காலத்திற்குள் சொந்த அரசால் கொல்லப் பட்டிருக்கிறார்கள். செத்தவர்கள் நானும் நீங்களும் பேசுகிற தமிழைப் பேசிய நம் மொழிக்காரர்கள். இப்போதும் முள் வேலியில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த விதமான அவதிப் படுகிறார்கள் என்பதை விளக்க எந்த மொழியிலும் வார்த்தைகளே இல்லை.

இதுவரைக்கும் ஈழப் பிரச்சினையில் இருந்தது போல் இருந்து விடாமல் நீங்கள் சரியான நடவடிக்கையை இது விஷயத்தில் எடுக்க வேண்டும். 

1974 ல் கச்சத் தீவினை தாரை வார்த்தப் பொழுது எழுதிப் பரிமாறப்பட்ட ஒப்பந்த ஷரத்துகளைக் கூட இப்போது நடைமுறைப் படுத்த முடியாத சூழல் ஏன் வந்தது? 2008 ல் இரு நாட்டு அரசு அதிகாரிகளின் அளவில் ஒரு ஒப்பந்தம் கை எழுத்தாகி இருப்பதாகவும் அந்த ஷரத்தின் விளைவாகவே பல பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க தடை செய்யப் பட்டிருப்பதாகவும் அறிகிறோம். இது உண்மையா எனப் பார்த்து அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.

இலங்கை ஒன்றும் ஏதோ உணர்ச்சி வசப்பட்ட சூழலில் இதை செய்ய வில்லை. ஏற்கனவே பெட்ரோல் கிணறு அமைக்க இந்தப் பகுதியில் சீனாவிற்கு அனுமதிக்கப் பட்டு அவர்கள் பணிகளை ஆரம்பித்து விட்டதாகவும், இப்போது அடுத்ததாய் இங்கிலாந்து நாட்டின் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப் பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இதன் விளைவாகவும்தான் அந்தப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல இயலாத நிலை உருவாகி வருகிறது. 1974 ஒப்பந்தப் படி இந்தப் பகுதியில் இலங்கையும் இந்தியாவும்தான் பெட்ரோல் கிணறுகளை அமைக்க முடியும். அருள் கூர்ந்து இது விஷயத்தில் கவனம் செலுத்தி தமிழக மீனவர்களை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். இது வரைக்கும் ஐநூறுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் ஈவு இரக்கமற்ற முறையில் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு அமைச்சருக்கு 700 விழுக்காடு சொத்து அதிகரித்ததாய் சொல்கிறார்கள். நீங்கள் இது விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு உங்கள் அமைச்சர்களைக் கண்காணிக்க வேண்டும். வெளிப்படையான சொத்துக் கணக்கை நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்களும் இந்த ஐந்தாண்டுகாலமும் அவ்வப்போது மக்களிடம் சொல்லுங்கள். 

இந்தத் தேர்தல் தரும் பாடம் இதுதான். காசு சேர்ப்பவன் மக்களை சேர்க்க முடியாது. நீங்கள் மக்களை சேர்க்கிறவராய் மாறவேண்டும். 

கொட நாடை விடவும் போயெஸ் தோட்டத்தை விடவும் வேறெந்த சொர்க்க பூமியை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.

வாழ்த்துக்கள் தோழர்.         

Sunday, May 15, 2011

தந்தையா?,கணவரா?




"கனிமொழி ஒரு பெண் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் அவர் மேல் பரிவு கொண்டு அவரை சிறைக்கு அனுப்பாமல் பிணை வழங்க வேண்டும் " என்பது மாதிரியான ஒரு வாதத்தை இந்தியாவின் ஆகப் பிரபலமான வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ராம்ஜெத்மலானி அவர்கள் பாட்டியாலா சிறப்பு நீதி மன்றத்தில் வாதாடிய போதுதான் இவ்வளவு வலுவானதா இந்த வழக்கு என்ற ஆச்சரியம் பிறந்தது. வழக்கமாக இது மாதிரியான சிறிய அளவிலான நீதி மன்றங்களில் அவர் வாதாடுவதில்லை. எடுத்த எடுப்பிலேயே "பரிவு" வேண்டி இறங்கி விண்ணப்பித்த அனுபவம் இதற்கு முன்னால் அவருக்கு உண்டா? என்பது தெரியவில்லை. ஆனால் அப்படி இருக்க வாய்ப்பில்லை.


தான் நேரில் வந்து வழக்காடுவதற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத இடமாக அவர் கருதக் கூடிய இடத்திற்கு அவரை அழைத்து வந்து வாதாட வைத்த சக்தி எது? ஆயிரம் விமர்சனங்கள் அவர்மீது இருந்தாலும் அவரது கம்பீரமான ஆளுமையில் நமக்கு கொஞ்சமும் சந்தேகம் கிடையாது. அப்பேற்பட்ட கம்பீரம் இறங்கி வந்து "பரிவை" பணிந்து இறைஞ்ச வேண்டியத் தேவை என்ன? 

இரண்டுக்கும் காரணம் கருணாநிதி எனும் தந்தைதான். வர மறுத்து, வேண்டுமானால் தனது உதவி வழக்கறிஞர்களில் ஒருவரை அனுப்புவதாகவும் சொன்ன ஜெத்மாலினியிடம் கருணாநிதி அவர்களே நேரடியாகத் தொலைபேசி, வரச் சொல்லி மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாகவும், அன்றைய தினம் வேறு ஒரு முக்கியமான வழக்கு சம்பந்தமாக வெளியூரில் இருந்த அவர் பாட்டியாலா வருவதற்கு அவர் கேட்டபடி ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து தரப் பட்டதாகவும் செய்திகள் சொல்கின்றன. அவர் நீதிமன்றத்தில் பரிவுக்காக இறைஞ்சியதற்கு “ என்ன செய்தேனும் , என்ன விலை கொடுத்தேனும்,  தம் மகளைக் காப்பாற்ற வேண்டும் “ என்ற தந்தை கருணாநிதியின் உருக்கமும் கண்ணீரும் காரணமாக இருந்திருக்கக் கூடும்.      

” குற்றம் நடக்கவில்லை என்றோ, இந்த வழக்கில் சேர்த்துப் பேசப்படுபவர்கள் எல்லாம் இந்தக் குற்றத்தில் பங்கில்லாதவர்கள் என்றோ நான் வாதிட வரவில்லை” என்று ஜெத்மலானி நீதிமன்றத்தில் எடுத்துச் சொன்னபோதே இந்த வழக்கு எவ்வளவு வலிமையானது என்பதோடு ஜெத்மலானி அல்ல அவரைப் போல ஆயிரம் மடங்கு வல்லமை வாய்ந்தவர்களாலும் யாரையும் காப்பாற்ற முடியாது என்பதும் தெளிவானது. இவ்வளவும் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கே தெளிவாய்ப் புரியும் போது கருணாநிதிக்குப் புரியாதா?.  நிச்சயமாய் புரியும்தான். தெரிந்தும் ஏன் இவ்வளவு செலவு செய்கிறார்.

இங்குதான் தனது குடும்பத்திற்காக யாரையும் பலிக் கடா ஆக்கக் கொஞ்சமும் தயங்காத, தன் மீது உயிரையே வைத்திருக்கக் கூடிய தொண்டனைப் பலிகொடுத்தேனும் தன் குடும்பத்தைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு கொடூரமான குடும்பத்தலைவரான கருணாநிதி வெளிப் படுகிறார். அவர் இவ்வளவு தூரம் துடியாய்த் துடிப்பது, ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று நிறுவ அல்ல. அது இயலாது என்பதும் அவருக்குத் தெரியும். இந்த ஊழலில் கூட்டுச் சதியாளராக குற்றம் சுமத்தப் பட்டுள்ள தனது மகள் கனிமொழியை, யாரைக் காவு கொடுத்தேனும் அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து பத்திரமாக வீட்டிற்கு கூட்டி வந்துவிடவேண்டும் என்பதுதான்.  அதன் விளைவுதான் “ இந்தக் குற்றத்திற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் ஆ.ராசாதான் “ என்று ராம் ஜெத்மலானி நீதிமன்றத்தில் சொல்கிறார்.

முதல்வரின் மகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி சார்பாக வாதாடுகிற ஒரு வழக்கறிஞர் என்றால் தி.மு.க சார்பில் வாதாடுகிற வழக்கறிஞர் என்றுதானே பொருள். தனிப்பாட்ட கனிமொழியைக் காப்பாற்ற அவரது வீட்டில், அவரது அம்மாக்கள், அப்பா, அண்ணன்கள் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கூடி நாம் இவ்வளவு தூரம் பேச வேண்டிய அவசியமில்லை. ராசாவைக் காப்பற்ற இவ்வளவு வேகமாகக் கூட்டப் படாத கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டப் படுகிறது. கனிமொழியைக் காப்பாற்றுவது கட்சியைக் காப்பாற்றுவது என்கிற மாதிரி முடிவெடுக்கப் படுகிறது. அமைச்சர்களும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லிக்குப் பறக்கிறார்கள். ராசாத்தி அம்மாளும் அமைச்சர் பூங்கோதையுடன் பறக்கிறார். முதல்வரும் இந்த விசாரனையைப் பார்ப்பதற்காக டில்லி போக ஆசைப் பட்டிருக்கிறார். அவருக்கும் விமான பயணச்சீட்டு போடப் பட்டிருந்தது என்றால் ராம் ஜெத்மலானி இந்த வழக்கின் தி.மு.க வழக்கறிஞர் என்பதுதான் பொருள். இவர் இந்த ஊழலுக்கு ராசாதான் முழுப் பொறுப்பெற்க வேண்டும் என்று சொல்கிறார் என்றால், ” ராசாதான் ஊழலுக்கு முழுப் பொறுப்பு” என்று தி.மு.க வழக்கறிஞர் சொல்வதாகத்தான் கொள்ள முடியும்.இன்னும் கொஞ்சம் பாமரத்தனமாகக் கொள்வதெனில் “இந்தக் குற்றத்திற்கு முழுப் பொறுப்பும் ராசாதான்” என்ற ஜெத்மலானியின் குரல் தி.மு.க வின் குரல்தான்.

இல்லை என்று கருணாநிதியோ மற்ற யாருமோ சொல்ல வந்தால் நமது கேள்வி ஏன் அதை வெளிப்படையாக யாரும் மறுக்கவில்லை என்பதுதான். ராசா குற்றவாளி என்று எல்லோரும் சொன்னபோது ,”ராசா தலித்துகளின் தகத்தாய சூரியன்” என்றும் அவர் ஒரு தலித் என்பதால்தான் எல்லோரும் அவர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார்கள் என்றும் சொன்ன கருணாநிதி ஜெத்மலானி சொன்னபோது மறுக்கவே இல்லையே, ஏன்?. அவரை விடவும் ஒருபடி மேலே சென்று கொதித்துக் குரல் கொடுத்த வீரமணி இந்த நொடி வரை ஜெத்மலானிக்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே, ஏன்?

காரணத்தைத் தேடி காத தூரம் போக வேண்டியதில்லை.அது நம் காலடியிலேயே கிடக்கிறது. ராசா, விட்டால் உண்மையை சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில்தான் ராசாவுக்காக பேசினார்களேயொழிய வேறில்லை. இன்று தன் மகளை நோக்கி குற்றச்சாட்டு நீள்கையில் ராசாவைக் காவு கொடுத்து தன் மகளைக் காப்பாற்றத் தயாராகி விட்டார் கருணாநிதி. வேறு மொழியில் சொல்வதெனில் “அப்பாவி தலித் ராசா தி.மு.க வால், குறிப்பாக அதன் தலைவர் கருணாநிதியால் பலிகடா ஆக்கப் பட்டுவிட்டார்”. 

இப்படிச் சொல்வதால் ராசா ஏதோ குற்றமற்றவர் என்று சொல்வதாகவோ, அல்லது அவர் தண்டிக்கப் படக் கூடாது என்றோ நாம் சொல்லவில்லை. குற்றவாளிகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும், அவர்கள் சூறையாடிய மக்கள் பணத்தை மீட்க வேண்டும். நமது ஆதங்கமெல்லாம் ராசா என்பவர் வெறும் கருவி மட்டுமே. இந்தக் கருவியைப் பயன்படுத்திய கரங்களும் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும் என்பதுதான். 

ராசா என்பவர் தி.மு.க.வில் சாதாரண நபரல்ல. அதன் ஆளுமைமிக்க கொள்கை பரப்புச் செயலாளர்.மத்திய அமைச்சர். அவரைக் காப்பாற்ற இப்படி ஒரு வேகத்தைக் காட்டாத கட்சியும் தலைமையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்காக கிடந்து அலைகிறது என்றால் அவர் தலைவரின் மகள் என்பதைத் தவிர வேறு என்ன?

 நீரா ராடியாவும் கனிமொழியும் பேசிக்கொண்ட தொலைப்பேசி உரையாடல்களை அவரோ கருணாநிதியோ இன்றுவரை மறுக்கவில்லை. எனில் நீரா ராடியா மூலம் ராசாவுக்கு கனிமொழி தொலை தொடர்புத் துறையை வாங்கித் தரத் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமென்ன? இதில் டாடா போன்ற தொழில் அதிபர்கள் அக்கறை காட்ட வேண்டியதின் அவசியம்தான் என்ன?

எவ்வளவு சப்பைக் கட்டு கட்டினாலும் உண்மை இதுதான். தனக்கு சாதகமான அமைச்சரை டாடா கனிமொழி மூலமாக உருவாக்குகிறார். ஒரு பெரிய ஊழல் உருவெடுக்கிறது. ராசாவை பயன்படுத்தி சிலர் சுருட்டுகிறார்கள் அவர்கள் யார் யார் என்பது வெளிச்சத்துக்கு வரவேண்டும். அவர்கள் ஈவு இரக்கமற்ற முறையில் தண்டிக்கப் படவேண்டும்.

இத்தோடு விடவில்லை ஜெத்மலானி.  “ கலைஞர் தொலைக் காட்சியில் வெறும் இருபது சதவிகிதப் பங்குகளை மட்டுமே வைத்திருக்கக் கூடிய அப்பாவி கனிமொழி . அவருக்கு தொலைக் காட்சி நிர்வாகத்தில் எதுவும் தெரியாது. அனைத்துக்கும் பொறுப்பு சரத்குமார் ரெட்டிதான்” என்றும் சொல்லியிருக்கிறார்.  இது ஏதோ விளையாட்டு விஷயமில்லை.

. ”புதிய தமிழகம்” பத்திரிக்கை சொல்கிறது கலைஞர் தொலைக் காட்சியின் ஆண்டு வரவு 63,12,45,076 ரூபாய், ஆண்டு செலவு 61,47,55,422ரூபாய்.ஆக தொலைக் காட்சியின் ஆண்டு வருமானம் 63.12 கோடி, செலவு 61.47 கோடி. நிகர லாபம் வரி செலுத்துவதற்கு முன் 1.64 கோடி, வரி செலுத்திய பின் 1.36 கோடி. இது அவருக்கு நன்றாகத் தெரியும். வருடத்திற்கு 1.36 கோடி ரூபாய் வருமானம் பெறும் ஒரு நிறுவனத்திற்கு 214 கோடி ரூபாய் ஒருவன் கடனாகக் கொடுத்தான் என்பதையோ,1.36 கோடி மட்டுமே வருவாய் ஈட்டக் கூடிய ஒரு நிறுவனம் தடாலடியாக ஏறத்தாழ 30 கோடி ரூபாய் வட்டியுடன் சேர்த்து திருப்பியது என்பதையோ எந்த நீதி மன்றமும் ஏற்காது என்பது ஜெத்மலானிக்குத் தெரியும். அதனால்தான் அவர் கலைஞர் தொலைக் காட்சியின் அனைத்துக்கும் ரெட்டிதான் பொறுப்பென்கிறார்.

ஆக அவர்கள் தெளிவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஊழலுக்கு ராசாவையும், தொலைக் காட்சிப் பிரச்சினைக்கு சரத்குமார் ரெட்டியையும் பலிகொடுப்பதென்று. 

ஆக, முதலில் ராசாவின் மீது எதிர் கட்சியினரும் பத்திரிக்கைகளும் குற்றம் சாட்டினார்கள். கருணாநிதிக்கு யாரைச் சார்ந்து நிற்பது என்பதில் பிரச்சினையே இருக்க வில்லை. ராசாவா அவர்மீது குற்றம் சாட்டுபவர்களா என வந்தபோது தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் சம்பாதித்துத் தந்த ராசாவைக் காப்பாற்ற முயற்சி செய்தார்.

பிறகு ராசாவா? மகள் கனிமொழியா என்று வந்தபோதும் அவருக்கு பிரச்சினை எழவில்லை. ராசாவைக் காவு கொடுத்து கனிமொழி பக்கம் நிற்கிறார்.

ஆனால் இன்னொரு நெருக்கடி அவருக்கு வரப் போகிறது.  மனைவி தயாளுவா? மகள் கனிமொழியா ? யாரைப் பழிகொடுத்து யாரைக் காப்பாற்றுவது என்ற நெருக்கடி வரும் போது அவர் யார் பக்கம் நிற்கப் போகிறார்? அது இரண்டு குடும்பங்களின் பிரச்சினையாகவும் உருவெடுக்கும். ஆனால் உறுதியாய் நம்பலாம், அப்போதும் யார் அவருக்கு அதிகம் தேவையோ அவரை சார்ந்து நிற்பார்.

நமக்கு சந்தேகம் ஒன்று இருக்கிறது. மகள் கனிமொழிமேல் வழக்கு பாய்ந்ததும் இவ்வளவு பதற்றத்தோடு அவரைக் காப்பாற்றுவதற்காக ராசாவை பலி கொடுக்கத் தயாராகிவிட்டீர்கள். கேட்டால் சொல்வீர்கள் ராசாவா? கனிமொழியா என்றால் கனி மொழிதானே. ஒரு தந்தை அதைத் தானே செய்ய முடியும் என்று அவர் சொல்லக் கூடும். அது சரி, தனது தொண்டனா?, மகளா என்று வந்தபோது அவர் சராசரித் தந்தையானது சரிதான் என்று ஒரு வாதத்திற்கு வைப்போம். அடுத்து வருகிற மூன்றாவது குற்றப் பத்திரிக்கையில் அவரது மனைவி தயாளு அவர்களது பெயர் வரக்கூடும் என்றே தகவல்கள் சொல்கின்றன. அப்படி நடந்து, தயாளுவா? கனிமொழியா? , யாரைப் பழி கொடுத்து யாரைக் காப்பது என்று ஒரு நிலை வந்தால் யார் ஜெயிப்பார், கணவர் கருணாநிதியா? தந்தை கருணாநிதியா?  

நமது ஆசையும் கோரிக்கையும் இரண்டு. 

ஒன்று, இவர்களின் உண்மையான கோர முகத்தை இப்போதாவது ராசாவும் ரெட்டியும் புரிந்துகொள்ள வேண்டும். 

இரண்டு, இவர்கள் இருவரும் இனியும் இவர்களை நம்பாமல் உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும்.
     

Thursday, May 12, 2011

பழைய எண் 229 / புதிய எண் 29







இது...

என் மகன் வீடு 
அவன் நண்பர்களுக்கு

என் தங்கையின் வீடு 
அவள் தோழியர்க்கு

என் மனைவியின் வீடு
அவர் அக்கா, அம்மா, மற்றும்
தோழியர்க்கு

என் வீடுதான்
இது
என் நண்பர்களுக்கு

தொண்ணுறு விழுக்காடு 
இன்னமும்
கனரா வங்கியின் வீடு
இது

Tuesday, May 10, 2011

கொண்டாடுவோம்

கிஷோர் எனது பெருமைமிகு சந்தோஷங்களுள் ஒன்று. 

குழந்தைகளை தாய்மொழி வழியாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஊர் ஊராய் போய் அடுத்தவர்களிடம் திமிரோடு பேசுவதற்குக் காரணம் நான் அவனைத் தமிழ் வழியில் படிக்க வைத்ததுதான். 

ஊர் சுற்றுவான், விளையாடுவான், கணினியில் மணிக் கணக்காய் செலவு செய்வான், தொலைக் காட்சியில்
 கிரிக்கெட் போட்டிகளை விடாது பார்ப்பான், வெள்ளைச்சியோடு வம்படிப்பான். 

இந்த வயதில் ஒரு பத்து பிள்ளைகள் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். அவர்களுக்குள் எந்த ஒளிவு மறைவோ, பொறாமையோ கிடையாது. அந்தக் குழுமத்தின் எல்லாப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரையும் தாயாய் தந்தையாய் பார்க்கிறார்கள். 

”உங்கள நம்பித்தாண்டா இம்புட்டு கடன வாங்கி வச்சிருக்கோம்” என்றால் எங்களுக்கு கமிஷனா கொடுத்தீங்க என்பான் ஒருவன்.  இதுதான் எல்லாத் தளங்களிலும் நடக்கும். பிள்ளைகள் பெரும்பாலும் சரியாய்த்தான் இருக்கிறார்கள். 

குழந்தைகளை சதாப் படி என்று சதா புலம்பக் கூடாது. நானோ விட்டுவோ அதை எப்போதும் செய்ததில்லை.

ஒரு முறை அவனது தாத்தா "வேண்டுமானால் தனிப் பயிற்சிக்குப் போ" என்றபோது எங்க சாருங்கள விட வேற யாரு நல்லா நடத்துவா? என்று கேட்டவன்.

இன்று காலை ஒரு நண்பரைப் பார்க்க சமயபுரம் போயிருந்த போது அலை பேசியில் அழைத்தான்.

“ என்னடா தம்பி?”

”ம்ம்... அப்பா நான் 1082” சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

1190 எடுத்த பிள்ளைகளும் உண்டு. ஆனாலும் இவன் எடுத்த 1082 என்னைப் பெருமையோடு துள்ள வைத்தது. 

என்ன கொஞ்சம் பீற்றிக் கொள்வது போல் தோன்றுகிறதே என்றுகூட தோன்றலாம். இல்லை நண்பர்களே, கொஞ்சம் அல்ல நிறையவேதான். அவன் வெறும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இப்படித்தான் குதித்திருப்பேன். 

தோல்வியே எனினும் தோள் பிடித்து அணைத்திருப்பேன்.

நம் பிள்ளைகளை நாம் கொண்டாட மறுத்தால் யார் கொண்டாடுவார்கள். 

ரஜினிக்கு வாந்தி வந்தால் பதிவு போடுகிறோம். தோனிக்கு நான்கு கோடி கிடைத்தால் வெறியோடு கொண்டாடுகிறோம். 

அருள் கூர்ந்து அவரவரும் நம்பிள்ளைகளின் சிறிய வெற்றியே ஆயினும் பகிர்ந்து கொண்டாடுவோம். பிள்ளைகள் பிரும்மாண்டமாய் வளர்வார்கள். 

நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். நீங்களும் வஞ்சனையின்றி வாருங்கள்.

Wednesday, May 4, 2011

பத்து கிலோ ஞானம்


"நடத்துனரிடம்
மீதிச்சில்லரை
எதிர்பார்த்தே
ரசிக்க முடியாமல்
போய் விடுகின்றன
பெரும்பாலான
பேருந்துப் பயணங்கள்" 


என்கிறார் ராஜிவ் காந்தி. அநேகமாக அனைவரும் அனுபவித்தேயிருக்க வேண்டிய அவஸ்தைதான் இது. தரை வழி போக்குவரத்தை தவிர்ப்பவர்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும். இருக்கிற ஒரே ஒரு நூறு ரூபாய் தாளினை கொடுத்து விட்டு உட்கார்ந்தால் பூம் தொலைக் காட்சியில் ஓடும், நரசிம்ம ராவையே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிக்கு கூட நரசிம்மராவைவிட இறுக்கமாய் உட்கார்ந்திருப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். மறக்காமல் மீதிச் சில்லறையை வாங்க வேண்டுமே எச்சரிக்கை உணர்வே சகல ரசனையையும் கொன்றுபோடும். கையில் இருந்த ஒரே நூறு ரூபாய் தாளினை நடத்துனரிடம் கொடுத்து விட்டு சில்லறை வாங்க மறந்து போய் வீட்டிற்கு நடந்து போன அனுபவம் எனக்குமுண்டு.

இது மாதிரியான தொடர் அனுபவங்கள் நடத்துனர்கள் அனைவருமே சில்லறையை ஆட்டை போடும் கொள்ளை காரர்கள் என்பதான ஒரு பொதுப் பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளன. எனக்குத் தெரிந்த வரை ஏழு ரூபாய் டிக்கெட்டிற்கு ஏழு ரூபாயை கொடுத்தால் வாங்க மறுக்கும் நடத்துனர் யாரும் இருப்பதாகப் படவில்லை. எத்தனை முறை இழந்தாலும் சரியான சில்லறையோடு பேருந்து ஏறவேண்டும் என்ற பொது அக்கறை மட்டும் பெரும்பாலும் யாருக்கும் வருவதில்லை.

ஆனால் எத்துனை இடையூறுகள் ஏற்படினும் அத்தனையையும் தாண்டி பேருந்துப் பயணங்களில் ரசிக்கவும் கற்றுக் கொள்ளவும் முடிகிறது என்னால். எனக்கென்னவோ அள்ள அள்ளக் குறையாத அட்ச்சயப் பாத்திரங்களாவே பேருந்துகள் அமைகின்றன. ஒவ்வொரு முறையும் எனக்கு கற்றுக் கொடுப்பதும் என்னையறியாமலே எனக்குள் ஒளிந்து கிடக்கும் "நான்" என்ற அழுக்கை தங்கள் ஒழுகும் சழுவாயால் துடைத்தென்னை தூய்மை படுத்துவதும் குழந்தைகள்தான்.


ஒரு முறை நான் கூட எழுதினேன்

"உனக்கு ஒன்னுந் தெரியாதுப்பா" 
குழந்தையின் மழழையில் கசியும் 
ஞானம்'" 

என்று. அனேகமாக எனது எல்லாப் பயணங்களிலும் குழந்தைகள் இந்தக் கவிதையை நிசப்படுத்தியே வருகிறார்கள். நமக்கு ஒன்றும் தெரியாது என்பதையோ அல்லது குறைந்த பட்சம் அவர்கள் அளவுக்கு தெரியாதென்பதையோ ஒவ்வொரு முறையும் நிரூபித்தே வருகிறார்கள்.

அதிலிரண்டை பந்தி வைத்துவிடவேண்டுமென்று படுகிறது.
...

அன்று அதி காலை எழுந்ததிலிருந்தே ஒன்று மாற்றி ஒன்றாக தவறுகளாகவே செய்து கொண்டிருந்தேன். எல்லாம் அவசரம் தந்த பதற்றத்தால் வந்தது. தாள் திருத்தும் மையத்தில் அன்று வாயில் கூட்டம். சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜயகுமார் நேற்றே வந்துவிட்டார். திருச்சிக்குப் போக ஒன்றரை மணி நேரமாவது ஆகும். விடுதி அறையிலிருந்து விஜியை அழைத்துக் கொண்டு போக வேண்டும். ஏழரை மணிக்குள் முகாம் வாசலில் இருந்தால்தான் தாள் திருத்த வரும் ஆசிரியர்களை கூட்டத்திற்கு தடுத்து நிறுத்த முடியும்.

பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த பேருந்தை நிருத்தி ஏறினேன். இடமிருக்கா இல்லையா என்றெல்லாம் பார்த்து ஏறுவத்ற்கு அவகாசமில்லை. நல்ல வேளை கடைசி இருக்கையில் ஒரு இடம் இருந்தது. அப்பாடா என்றிருந்தது. அமர்ந்ததும் செல் எடுத்து மணியைப் பார்த்தேன். சரியாக ஐந்து. வழியில் ஏதும் பிரச்சினை இல்லாத பட்சத்தில் சரியான நேரத்தில் சேர்ந்து விடலாம்.

பேருந்து புற வழிச்சாலையில் திரும்பிய அந்தப் புள்ளியில்தான் அந்த அம்மாவின் பேச்சு என் கவனத்தை இழுத்தது. எனக்கு முன்னிருக்கைக்கும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். அப்பழுக்கில்லாத கிராமத்து பெண்மணி. அவரோடு சுமார் நாற்பது மதிக்கத் தக்க அளவில் ஒரு ஆண். " இல்லடா தம்பி", "இதக்கேளுடா" என்று அடிக்கடி அந்த அம்மா சொன்னதிலிருந்து ஒன்று அவர் அவரது தம்பியாக இருக்க வேண்டும் அல்லது தம்பி போன்ற உறவுடையவராக இருக்க வேண்டும்.

அந்த அம்மாவின் குரலால் நிரம்பிக் கசிந்தது பேருந்து. எரிச்சலை தரக்கூடிய குரல். அவரது மகன் மற்றும் மருமகளைப் பற்றியே அவரது பேச்சு சுற்றியது. "ம்" " ம்ம்" , " சொல்லுக்கா" , "ச்ச்" என்பதைத் தாண்டி அந்த மனிதன் ஏதும் பேசவே இல்லை.

ஓட்டுநரே இரண்டு முறை திரும்பி பார்த்து விட்டு திரும்பி தலையிலடித்துக் கொண்டார். ஒவ்வொரு முறை அவரைக் கடக்கும் போதும் அந்த அம்மாவை ஒரு மாதிரி எரிச்சல் கசிய பார்த்துப் போனார் நடத்துனர்.

பாடாலூரைக் கடந்து சென்று கொண்டிருந்தது பேருந்து. புலம்பல் நிற்கிற பாடாய் தெரியவில்லை. பேருந்து புறப்பட்டு ஏறத்தாழ முப்பது நிமிடம் கடந்திருக்கும்.

திடீரென அழுவார். பிறகு அவரே சமாதானமாகி முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கி விடுவார்.

"அவ நல்லா இருப்பாளா? அவள விடு. ஒரு ஈ எறும்பு கடிக்க விட்டுருப்பேனா, இன்னிக்கில்ல அவன் இவ்ளோ பெரிய ஆம்புள. புள்ள வளரதுக்குள்ள ஒவ்வொரு ஆத்தாவும் ரெண்டு லாரி பீயாவது அள்ளிப் போடனும்ப்பா. அவ என்ன சொன்னாலும் தலய தலய ஆட்டுறானே. வெளங்குவானாடா இவன். " அவர் குரல் தந்த எரிச்சலைத் தவிர எதையும் உள் வாங்க முடியவில்லை.

"பெரம்பலூர்ல ஆரம்பிச்சது. எப்ப முடியுமோ" அடங்க மறுத்து என்னிடமிருந்து சன்னமான குரலில் எனது எரிச்சல் வெளியேறியது.

" அடப் போங்க சார், நான் விருதாச்சலத்துல ஏறினேன். அதுக்கு முன்னாலேயே அந்த அம்மா ஏறியிருக்கனும். இந்த இம்சய மூனு மணி நேரமா தாங்க முடியல சார்."

கொள்ளிடம் செக்போஸ்ட் கடக்கும் போதே அந்த அம்மா எழுந்தார். உடன் வந்த மனிதரும் எழுந்தார். திருவாணைக் கோவிலில் இறங்குவார்கள் என்பது புரிந்தது. அவர்கள் இறங்கப் போகிறார்கள்என்பதே எல்லோருக்கும் பெரிய நிம்மதியை தந்தது.

நின்றதும் இறங்குவதற்கு வசதியாக பைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு இருக்கைக்கு வெளியே வந்து கொண்டிருந்தார்.

"பாட்டி"

எனக்கு முன்னிருக்கையில் பெரும்பகுதி நேரம் நின்று கொண்டே வந்த மூன்று வயதுக் குழந்தை கத்தினாள்.

"ஏஞ்சாமி, என்னடா தங்கம்?"
குழந்தையின் கன்னத்தை வருடியவாரே அந்த அம்மா கேட்டார்.

" நீ பயப்படாம போ பாட்டி. குச்சி எடுத்து வந்து உனக்கு சோறு போடாத அத்தையையும் மாமாவையும் வெளு வெளுன்னு வெளுக்கிறேன்."
"நீ இருக்கப்ப எனக்கென்ன சாமி கவல." குழந்தையை தூக்கி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு கண்களை துடைத்துக் கொண்டே போனார்.

" யாரு பெத்த புள்ளயோ, ஒனக்குப் புரியுது என் வேதன. நீ நல்லா இருக்கனும் மவராசி"

அவர் பாட்டுக்கு அவர் இறங்கிப் போய்விட்டார். குழந்தையோ எதுவுமே நடக்காதது மாதிரி ஜன்னலில் வேடிக்கை பார்த்து விளையாட ஆரம்பித்து விட்டாள்.

எனக்கோ வாயில் கூட்டம் உட்பட அணைத்தும் மறந்து போய் ஒரே ஒரு கேள்வி மட்டும் சுழன்று சுழன்று உறுத்திக் கொண்டே இருந்தது. அநேகமாக பேருந்தில் இருந்த அனைவருக்கும் ஏன் உங்களையும் கூட இது நெருடவே செய்யும்.

அந்த சின்னக் குழந்தைக்கு புரிந்த அந்த அம்மாவின் வேதனையும் வலியும் நமக்கு ஏன் புரியாமல் போனது.

......

பாண்டியில் ஒரு வேலை. பேருந்தில் அதிக கூட்டமில்லை. வசதியான இருக்கை கிடைத்தது. ஜன்னலோர இருக்கை. எனக்கு அடுத்து முப்பத்தி ஐந்து மதிப்பில் ஒருவர். அடுத்து அவர் மனைவி. அவர்களது மூன்று வயது மதிக்கத் தக்க மகள்.

எதையும் ரசித்தாள். பேசிக் கொண்டே வந்தாள். நிறைய கேட்கவும் செய்தாள்.

அவளது பெற்றோர்கள் இவளை சட்டை செய்ததாகவே தெரியவில்லை.
அவர்கள் எதிர் வீட்டு ஷர்மி பற்றி , அவளது அண்ணி பற்றி , பைனான்சில் இருக்கும் நகையை திருப்பி வங்கியில் வைத்து வட்டியை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றி , இப்படியாக எது எது பற்றியோ இடைவெளி இன்றி பேசிக்கொண்டேதான் வந்தார்கள்.

"ஐ! அம்மா அங்க பாரேன் ரெண்டு கொரங்கு" என்ற அவளது கொண்டாட்டத்தை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் பேசிக் கொண்டே வந்தார்கள்.

அவளும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.

இப்போது அவள் எனக்கும் அவளது அப்பாவிற்கும் இடையில் வந்து நின்றாள். "ஏய் மாமாவ தொந்தரவு பன்னாத" ஏதோ சடங்குக்காய் சொல்லி விட்டு மீண்டும் அவர்களது பேச்சிலே கறைந்து போனார்கள்.

என் விரல்களை பிடித்துக் கொண்டாள். நான் ஒரு புன்னகையோடு அவளைப் பார்த்தேன். எனது புன்னகை அவளை உற்சாகப் படுத்தியிருக்க வேண்டும்.

" மாமா ஏன் உங்க கைல மோதிரமே இல்ல. எங்க அப்பா ரெண்டு மோதிரம் , ப்ரேஸ்லெட் எல்லாம் போட்டிருக்கங்களே"

"ஏய் எரும, மாமாவ தொந்தரவு பன்னாதன்னு சொன்னேனா" என்று சத்தம் போட்டவாறே அவளைத் தன் பக்கமாக இழுத்தார் அவளது அம்மா.

"விடுங்கம்மா. சின்னக் குழந்ததானே" என்று அவர்களை சமாதானப் படுத்தி அவளை மீட்டேன். அத்தோடு அவளை விட்டு விட்டு அவர்கள் மீண்டும் பேசத் தொடங்கி விட்டார்கள்.

அவர்களது எரிச்சல் பற்றியோ , கோபம் பற்றியோ இவளும் கவலைப் படவில்லை.

"மாமா கேட்டேன்ல , சொல்லுங்க ஏன் நீங்க மோதிரம் போடல"

"மாமாட்ட இல்லடா. நீ வேனா வாங்கித் தரயா?"

"ம்..சரி , நான் பெரியவளானதும் அப்பாவாட்டம் வேலைக்க்கு போய் உங்களுக்கு மோதிரம் வாங்கித் தாரேன். சரியா?"

அவ்வளவுதான் அடுத்த விஷயத்திற்கு தாவி விட்டாள். ஏதோ பத்து வருடங்களாய் பழகுபவள் போல ஒட்டிக் கொண்டாள் அந்த மூன்று வயது பிள்ளை .

நானும் அவளும் நல்ல நண்பர்களாக மாறியிருந்தோம். பேருந்து சுல்த்தான் பாளையத்தில் நின்றது. சாலை ஒரத்தில் இருந்த கோழிக் கறிக் கடையின் பெயர்ப் பலகையை காட்டினாள். "மாமா அந்தக் கோழி ரொம்ப அழகா இருக்குள்ள"

"ஆமாண்டா"

"ஒங்களுக்கு மந்திரம் தெரியுமா?"

"தெரியுமே.." நானும் அவளுக்கு ஏற்ற விளையாட்டுக் கூட்டாளியாக மாறத் தொடங்கியிருந்தேன்.

" அப்ப ச்சூ காளி மந்திரம் சொல்லி என்ன அந்தக் கோழிப் படமா மாத்துங்க ப்ளீஸ்"

"எதுக்குடா கோழிப் படமா மாத்திட்டு . அழகான கோழியாவே மாத்திடவா?"

" வேனாம். லூசு மாதிரி பேசாம என்ன கோழி படமா மாத்துங்க"

"ஏண்டா . கோழியாவே மாத்திடறேனே."

" மக்கு , மக்கு கோழியா மாறினா அறுத்துறுவாங்கல்ல.."

ஒருமுறை எழுதினேன்

"தோளில் தூங்கும்
குழந்தையின் சழுவாயில் கசியும்
ஞானம்" என்று. அடடா நாம் கூட சரியாய்த்தான் எழுதுகிறோம் போல.

அவள் பத்து கிலோ இருப்பாள் அநேகமாக. எனில் பத்து கிலோ ஞானம் அவள்.

அது சரி இவளது ஞானத்தை ரசிக்காமல் வேறு என்னத்தை பேசிக் கிழித்து விடப் போகிறார்கள் . சுத்த ரசனை கெட்டதுகள்.

........

"பின்னிருக்கையில் ஒரு போதி மரம்" என்று தனது சிறு கதை நூலுக்கு பெயர் வைத்தான் தம்பி ஆங்கரை பைரவி.

ஆக ஆங்கரைபைரவிக்கு பின்னிருக்கயில் ஒரு போதி மரம்

வைரமுத்துவிற்கு வானம் போதி மரம்

எனக்கு மொத்த பேருந்துகளும் வரம் தரும் போதி மரங்கள்தான்.



(சாளரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ”பத்து கிலோ ஞானம் என்ற எனது நூலில் இருந்து எடுக்கப் பட்ட கட்டுரை)

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...