Thursday, February 15, 2018

உங்களிடம் இருந்தும் நம் மண்ணை....

இது என் மண்,
உங்கள் மண்,
நம்ம மண் இது தமிழிசை அவர்களே.
இது ஆண்டாள் மண், பெரியார் மண் அல்ல என்றால் அது என் மண் இல்லை. இது என் மண் இல்லை என்றால் இது உங்கள் மண்ணும் இல்லை
சோகம் என்னவென்றால் இது ஆண்டாள் மண், நம்ம மண் இல்லை என்ற அவனது கூற்றை நீங்கள் சொல்வதுதான்.
இது உங்களுக்கும் ஒருநாள் புரியும். அதுவரைக்கும் உங்களிடம் இருந்தும் நம் மண்ணைக் காக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்குள்ளது

Wednesday, February 14, 2018

நால்வருக்கும் என் முத்தம்


மூன்றுமுறை ஏலகிரிமலைக்கு சென்றிருக்கிறேன் உரையாற்றுவதற்காக. அத்தனை வாய்ப்புகளும் தம்பி Ilamparithi Parithi மூலம்தான். திருப்பத்தூரில் இருந்து ஒவ்வொரு முறையும் இருசக்கர வாகனத்தில்தான் அழைத்துப் போவான். பேசிக்கொண்டே போவோம்.
எப்படி இத்தனை இழப்புகளையும் தாங்கிக் கொண்டு இவனால் இவ்வளவு உற்சாகத்தோடு இயங்க முடிகிறது? என்று அவனை அறிந்த நொடியிலிருந்து அய்யம் இருந்துகொண்டே இருந்தது. அப்படியான ஒரு மலை ஏற்றத்தின்போது சொன்னான்,
எவ்வளவோ இறுக்கம், கவலை, அவளோடு சண்டை எதுவாயினும் இப்படித்தான் அண்ணே இருவரும் இதே வண்டியில் இதே மலைக்கு கிளம்பிடுவோம். மேலே போகிற வரைக்கும் சண்டை, திட்டு, கண்ணீர், ஆறுதல் என பரஸ்பர பறிமாற்றம் இருக்கும். பிரச்சினைகள் தீரும் வரை பேசுவோம். தீர்ந்துடும். மலர்ச்சியா திரும்பிடுவோம்
அவன் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறான் என்றால், இத்தனை இழப்புகளையும் துரோகங்களையும் தாண்டி அவன் இயங்குகிறான் என்றால் அதற்கு காரணம் அவனோடு இணைந்த பாப்பாவிற்கும் அவர்களது பாப்பாக்களுக்கும் இவனுக்கும் இடையே விரவிக்கிடக்கும் நிபந்தனையற்ற அன்பே காரணம்.
இந்த நாளில் இந்த அன்புதான் என்னை சிலிர்க்க வைக்கிறது.
நால்வருக்கும் என் முத்தம்


Saturday, February 10, 2018

செய்ய வலு உள்ளவர்கள் முயற்சியைத் தொடங்குங்கள்.


பிச்சை எடுத்து அம்மாவை அடக்கம் செய்த இரண்டு குழந்தைகளைப் பற்றிய பதிவுகளைப் படித்து அழுது தீர்த்தாயிறு.
அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு தங்கை இருப்பதாகவும் அவளால் தனது தாயின் முகத்தைக்கூட இறுதியாக ஒருமுறை பார்க்க இயலவில்லை என்றும் தெரிகிறது.
அழுதோம் சரி,
அவர்களுக்கு ஏதாவது செய்யலாமே....
செய்ய வலு உள்ளவர்கள் முயற்சியைத் தொடங்குங்கள்.
என்னால் முடிந்ததையும் என் நண்பர்களிடம் இருந்து பெற்றும் தருகிறேன்


65/66, காக்கைச் சிறகினிலே ஜூன் 2017




இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து மதச் சார்பற்றஎன்ற வார்த்தையை எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இந்தியா இந்து நாடாக மாறுவடற்கு வழி பிறக்கும் என்பது மாதிரி திரு தொகாடியா அவர்கள் கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஒரேமாதிரி திருமணம்தான் தேசம் முழுக்க நடக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால் நாட்டில் இருக்கிற அனைத்துவிதமான திருமண சட்டங்களையும் ரத்து செய்துவிட்டு மதச்சார்பற்ற சிறப்பு சட்டட்தின் அடிப்படையிலேயே அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அதை செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை டிஓஐ ஏட்டினை மேற்கோள் காட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் தோழர் அருணன்.

இவை இரண்டையும் தனித்தனியாக புரிந்து கொள்வதைவிட ஒன்றோடு ஒன்றைப் பொருத்திப் பார்த்திப் பார்த்து புரிந்துகொள்ள முயற்சித்தோமென்றால் இவற்றிற்கு பின்னே இருக்கும் அசிங்கமான சதி புலப்படும்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே வகையான திருமண சட்டம், உச்சமாக பொடு சிவில் சட்டம் என்பதை எவ்வளவுதான் கவர்ச்சிகரமான வார்த்தைகளில் இவர்கள் கூப்பாடு போட்டாலும் அனைத்தையும் கடந்து எதோ ஒரு புள்ளியில் இவர்கள் அம்பலப்படவே செய்கிறார்கள்.

இப்போது உச்சநீதிமன்றமும்கூட புதிதாக ஒரு திருமண சடத்தை கொண்டுவர சொல்லவில்லை. அதற்கு தேவையும் இல்லை. ஏற்கனவே மதச்சார்பற்ற சிறப்பு திருமணங்கள் சட்டம்இருக்கிறது. எனவேதான் ஒரே மாதிரியான திருமணங்கள்தான் நடக்கவேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால் இருக்கிற மற்றைய சட்டங்களை அவை எந்த மதத்தைச் சார்ந்தவையாக இருந்தாலும் ரத்து செய்துவிட்டு இதை கையில் எடுத்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் கூறுகிறது.

இத்தான் சரியானதும்கூட. இந்தியாவில் நடக்கும் திருமணங்கள் இந்திய மதச்சார்பற்ற சிறப்பு திருமணசட்டங்கள்வழிதான் நடக்கும் என்று நடைமுறைப் படுத்தினால் பிரச்சினைகள் இருக்காது.

அனால் இங்குதான் தொகாடியாவின் கருத்தை நாம் இங்கு பரிசீலிக்க வேண்டி இருக்கிறது. ஏறத்தாழ என்றெல்லாம் கொள்ள முடியாது. இருநூறு விழுக்காடு தொகாடியியாவின் குரல்தான் மத்திய அரசின் குரலும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்தே மதச் சார்பற்றஎன்ற வார்த்தையை நீக்கிவிட வேண்டும் என்று சொல்கிறார் தொகாடியா. இதன் பொருள் இந்தியாவை இந்துநாடாகப் பிரகடணப் படுத்த வேண்டும் என்பதுதான்.

இவரின் குரல்தான் மத்திய அரசின் குரல் எனும்போது இந்து திருமணச் சட்டத்தை இந்திய திருமணச் சட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசின் கோரிக்கையாகும். 

நல்லவேளை நீதிமன்றம் இதை நிராகரித்திருக்கிறது. நீதிமன்றத்தின் நிராகரிப்பை மீறி இதை எப்படிக் கொண்டு செல்வது என்று அரசு யோசிக்கவே செய்யும்.

பூனைக்குடி வெளியே வந்துவிட்டது.

இந்துவாக மாறு அல்லது இந்தியாவைவிட்டு வெளியேறு என்பது இப்போது மதவெறியர்களின் குரலாக உள்ளது. பையப் பைய இது ஆளும் கட்சியின் குரலாக மாறும். அதற்கும் பிறகு இது இவர்களது அரசின் குரலாகவும் மாறக்கூடும்.

இந்தக் குரல் மதநம்பிக்கை உள்ள சாமானிய இந்துக்களை ஈர்ப்பதற்கான அவர்களது ஆயுதம்.

ஒரே மதம் என்று பேசும் இவர்கள் ஒரே சாதி என்று என்று ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

பன்முகத் தன்மையை பாதுகாப்பதற்கு கருத்தாலும் கரத்தாலும் களமேகவேண்டிய அவசியமான காலகட்டம் இது.
*****************************************************************************      
தமிழகத்திலிருக்கிற அனைத்துவகைப் பள்ளிகளிலும் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் கோரியிருப்பது நியாயமானதும் வரவேற்கவேண்டியதுமாகும்.

இவர்கள் இருந்தபோது இதை செய்யாமல் இப்போது கோருவதில் நியாயமில்லை என்றோ , இதை கோருவதற்கு இவர்களுக்கு அருகதை இல்லை என்றோகூட சிலர் எதிர்க்கக் கூடும். ஆனால் இவர்கள் ஆட்சியில் இருந்தபோது இந்த அக்கறை எங்கு போனது என்றுகூட சிலர் கேட்கவும் கூடும். அதில் ஓரளவிற்கு நியாயம் இருக்கவும் இருக்கலாம்.

ஆனால் தமிழகத்துப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக அறிவிக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை. அதை யார் முன்னெடுத்தாலும் அவர்களை வரவேற்கவே செய்வோம். இப்போது ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறார். வரவேற்கிறோம் அவ்வளவுதான்.
பக்கத்து மாநிலமான கேரளாவில் இந்த சட்டம் நிறைவேறியுள்ளது.

மும்மொழிக்கொள்கையை கடைபிடிக்கும் மாநிலமன மேற்கு வங்கத்திலும் வங்கமொழி கட்டாயப் பாடமாக்கப் பட்டுள்ளது. பிரச்சினை என்னவெனில் மும்மொழிக் கொள்கையை மேற்கு வங்கம் ஏற்றிருந்தாலும் இந்தியைக் கற்காமலே மாணவன் அங்கு பள்ளிப் படிப்பை முடித்துவிட முடியும்.

அங்கு பள்ளிப் படிக்கும் பிள்ளைகள் மூன்று மொழிகளைக் கட்டாயம் படிக்க வேண்டும். மேலோட்டமாகப் பார்க்கும்போது வங்கம் இந்தி ஆங்கிலம் ஆகியவற்றை கட்டாயம் படிக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் மம்தாவின் ஏற்பாடு வேறு.

மேற்கு வங்கத்தில் வங்கம் கட்டாயம். மற்றவை தேர்வு மொழிகள். ஆங்கிலம் இந்தி மற்றும் வங்கத்தில் பேசப்படும் மொழிகளில் இருந்து இரண்டு மொழிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். ஆக மும்மொழிக் கொள்கை இருந்தாலும் இந்தியைப் படிக்காமலே அங்கு ஒரு குழந்தையால் பள்ளிப் படிப்பை முடிக்க முடியும்.

ஆனால் இருமொழிக் கொள்கையைக் கடைபிடிக்கும் தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமல் இந்தியைப் படித்து ஒரு குழந்தையால் பள்ளிக் கல்வியைக் கடந்துபோக முடியும்.

எனவே ஸ்டாலினின் இந்தக் கோரிக்கை என்பது நமது நீண்ட காலக் கோரிக்கை என்பதால் அதை நாம் வரவேற்கிறோம்.

கோரிக்கையை வைத்ததில் அவருக்கு பேர் வந்துவிடும் என்பதில் அரசுக்கு சங்கடம் இருக்குமானால் இந்தச் சட்டத்தை இயற்றுவதன் மூலம் அவரைவிடவும் பெரும் பெயரை இந்த அரசால் சம்பாரிக்க முடியும்.
************************************************************  

மக்களின் எழுச்சியான போராட்டத்தால் மிரண்டுபோன மத்திய அரசு வேறு வழியே இல்லாமல் கீழடி ஆராய்ச்சியைத் தொடர்வதற்கு நிதி ஒதுக்கி அனுமதி அளித்தது.

ஆனால் அதைத் தொடர்ந்து தொல்லிய ஆய்வு நடக்கும் இடங்களில் கட்டடங்களைக் கட்டுவதற்கு அனுமதி வழங்கலாம் என்றும் அறிவித்திருக்கிறது.

இதன்மூலம் கீழடி ஆய்வை முடக்கிப் போடவும் அதனால் முடியும். அகழ்வாராய்ச்சி நடக்கும் இடங்களில் குறிப்பிட்ட எல்லைவரை கட்டிடங்கள் கட்ட அனுமதி இல்லை. காரணம் ஆய்வின் பொருட்டு அகழ்வை எந்த நேரமும் விஸ்தீரிக்க நேரிடலாம். அங்கு கட்டிடங்கள் இருப்பின் இந்தப் பணி தடை படலாம். ஆகவேதான் இத்மாதிரி இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப் படுகிறது.

அனுமதி வழங்குவதால் கீழடியில் புதிதாய் கட்டிடங்கள் கட்டப்படலாம். இந்தக் கட்டிடங்கள் எழுந்த இடம் ஒருக்கால் ஆய்விற்காக  அகழ்வதற்கு தேவைப் படலாம். அந்த இடத்தில் கட்டிடம் இருப்பதால் அகழ்வு தடைப் படலாம். அகழ்வு தடைப் படுவதன் மூலம் ஆய்வு தடைப் படலாம். பிறகென்ன கீழடியை ஊத்தி மூடிவிடலாம்.

தொன்மம் காப்போம்
************************************** 

வாகை’ என்றொரு இலக்கிய அமைப்பை தோழர்கள் முருக தீட்சன்யாவும், துவாராகா சாமிநாதனும் மயிலாடுதுறையில் கட்டி இருக்கிறார்கள். அதன் துவக்க விழாவை மயிலாடுதுறைAVC கல்லூரி விழாஅரங்கில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
1)   காக்கைச் சிறகினிலே” அறிமுகம்
2)   என்னுடைய எது கல்வி?” நூல் விமர்சனம்
3)   யவணிகா ஸ்ரீராமின் நூல்கள் விமர்சனம்

என்பதாக விழா நகர்ந்தது.

தம்பி துவாரகா சாமிநாதன் காக்கை குறித்து விரிவாக உரை நிகழ்த்தினார். குழு சாராமல் செயல்படும் காக்கையின் நிலைப்பாடு தம்மை பெரிதாக ஈர்ப்பதாக கூறியவர், எந்த கட்டத்திலும் ஒடுக்கப் பட்டவர்களின் குரலையே காக்கை ஒலிப்பதாகக் கூறியது மகிழ்வைத் தந்தது.

கூட்டம் முடிந்தது என்று அவர்கள் அறிவிக்கும் வரைக்கும் ஒருவரும் வெளியேறவில்லை.

எல்லோர் கைகளிலும் காக்கை இருந்தது. என்னோடு உரையாடிய அனைவரும் காக்கை பற்றி உரையாடினார்கள். பேராசிரியர் தமிழ்வேல் அவர்கள் அந்தப் பகுதியில் காக்கையை கொண்டு போவதற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்வதாகக் கூறினார்.

காக்கையின் கூடு மயிலாடுதுறை.


சபாஷ் சந்திரபாபுசார்

ந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி பட்ஜெட்டில் புதிய திட்டங்களுக்கு நிறைய நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்தார் சந்திரபாபு. அவரது எதிர்பார்ப்பை சுக்குநூறாகச் சிதைத்துப் போட்டது இந்திய பட்ஜட். அவரது கட்சியினர் கொதித்துப் போனார்கள். இவர்களை எப்படி சமாளிப்பது என்று குழம்பிய சந்திரபாபு,
"ஆந்திர மக்களை தாங்கள் இந்தியர் இல்லையோ என்று எண்ணுமளவிற்கு அவர்களை பட்ஜட் வஞ்சித்துவிட்டது" என்று அறிக்கை விட்டார். கட்சிக்காரர்கள் மகிழ்ந்துபோய் அடுத்தவேலைக்கு தாவினார்கள்.
அப்பாடா என்று திரும்பிய சந்திரபாபு கண்களில் சுவரில் மாட்டியிருந்த மோடியின் படம் பட்டது. மிரண்டு போனவராய் ,
" ஆனாலும் பிஜேபியுடன் கூட்டணி தொடரும்" என்று இன்னுமொரு அறிக்கை விட்டார்.
பாம்பும் நோகாமல் பாம்படித்த கோலும் நோகாமல்...
சபாஷ் சந்திரபாபுசார்


Friday, February 9, 2018

அமைதியைக் கொண்டுவரட்டும்

குளிர்கால ஒலிம்பிக் தென் கொரியாவில் நடக்கிறது. இதில் தமது நாடும் கலந்துகொள்ள வேண்டும் என்று தாம் விரும்புவதாக வடகொரிய அதிபர் கிம்ஜாங் கூறினார். இதனை தென்கொரியா ஒருவித நக்கலோடு நிராகரிக்கும் என்றுதான் பகை வியாபாரிகள் எதிர்பார்த்திருக்கக் கூடும்.
ஏன்,கிம் ஜாங் உன்கூட இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கக் கூடும்.
ஆனால் மலர்ந்த முகத்தோடும் விரிந்த கைகளோடும் தென்கொரியா இதை வரவேற்றது. மட்டுமல்ல, நடக்கவுள்ள தொடக்கவிழாப் பேரணியில் வடகொரியா கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைத்தது.
சுவிட்சர்லாந்தில் இருநாட்டு அதிகாரிளும் கூடிப் பேசினர். விளைவாக,
ஒரே கொடியின்கீழ் இருநாடுகளும் இந்த குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்கின்றன.
ஐஸ் ஹாக்கியில் இருநாடுகளும் இணைந்து கொரிய அணி என்ற பதாகையின்கீழ் விளையாடுகின்றன
இவை உலகப் போலீஸ் உள்ளிட்ட பகை வியாபார வல்லூருகளுக்கு அதிர்ச்சியாய் இருக்கக் கூடும்.
இருநாடுகளும் பகைமறந்து அன்பில் இணைய இந்தக் குளிர்கால ஒலிம்பிக் வழிவகுக்கட்டும்
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாமஸ் பாச் எதிர்பார்ப்பதுபோல் விளையாட்டு பகைமுறித்து கொரிய தீபகற்பத்தில் அமைதியைக் கொண்டுவரட்டும்

Thursday, February 8, 2018

கல்வித் துறையை மறு கட்டுமானம் செய்ய

முந்தாநாள் ஒரு தலைமை ஆசிரியரை அவரது பள்ளிக் குழந்தைகள் சிலர் கத்தியால் குத்தியிருக்கின்றனர்.
நேற்று பள்ளிப் பிள்ளை ஒருவனை அவனது ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்தியிருக்கிறார்.
முந்தாநாள் குத்துப்பட்ட தலைமை ஆசிரியரும் நேற்று குத்துப்பட்ட பிள்ளையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒருவன் தோழன், ஒருவன் பிள்ளை.
உள்ளே நுழையும் முன் இருவரும் மிக விரைவில் குணமடைய வேண்டும்
முந்தாநாள் தலைமை ஆசிரியர் குத்துப் பட்டதும் மாணவச் சமூகமே சீரழிந்து போய்விட்டது போலவும் நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்பதாகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எதிர்வினைகள். இருபது ஆசிரியர்களாவது கொதிச் சூட்டோடு என்னோடு அலைபேசியில் உரையாடினார்கள்.
இன்று மாணவர் மற்றும் பெற்றோரின் சுற்று. பாரேன் பாரேன் பள்ளிக்கூடத்து வாத்தியாரே கத்தியெடுத்து குத்தினா யார நம்பி பிள்ளைகள பள்ளிக்கு அனுப்பறது?
இரண்டிலும் நியாயம் இல்லாமல் இல்லை.
நானொரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியன். மேல்நிலைக் கல்வியை கடந்த ஆண்டு முடித்து கல்லூரி முதலாமாண்டு படிக்கும் குழந்தையின் தகப்பன்.
இரண்டு பக்கத்திலும் பதிக்கப்பட்டவன்.
பிரச்சினை பிள்ளைகளிடத்திலோ, ஆசிரியர்களிடத்திலோ இல்லை என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். இத்தகைய நிகழ்வுகளுக்கு கல்விக் கட்டமைப்பும் தேர்வுக் கட்டமைப்புமே காரணம் என்பதையும் என்னால் உணர முடிகிறது.
இந்தப் பிரச்சினையை இந்த இரு சாராரால் மட்டும் தீர்த்துவிட முடியாது என்பதையும் உணர முடிகிறது
உணர்ச்சிவசப்படாமல், அக்கறையோடு இந்தப் பிரச்சினையை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொது மக்கள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள், கல்வியாளர்கள், மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அமர்ந்து பேசி கல்வித்துறையை மறு கட்டுமானம் செய்ய முயற்சிக்க வேண்டும்

Tuesday, February 6, 2018

சட்டவிரோதமான அமைப்புகள் என்று தெளிவாகத் தெரிந்த இந்த விசயத்தில் ,,,

ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ’காப் பஞ்சாயத்து’ என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து அமைப்புகள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இந்த அமைப்புகள் காதல் திருமணம் செய்துகொள்பவர்களை கடுமையாக தண்டிக்கின்றன. இதன் விளைவாக பலர் தற்கொலை செய்துகொள்ளவும் செய்கின்றனர். எனவே உச்சநீதிமன்றம் இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்டவேண்டும் என்றும் சக்திவாகினி என்ற தொண்டுநிறுவனம் உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டது.
அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இத்தகைய சட்டவிரோத அமைப்புகளிடம் இருந்து காதலர்களை காப்பதற்கான ஆலோசனைகளை மனுதாரரும் அரசும் தமக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு வழக்கை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.
ஒரு நல்ல விசயத்திற்காக ஆலோசனை கேட்பது நல்லது. இந்த ஆலோசனைக்கான கோரிக்கையை பொதுமக்களாஇ நோக்கி வைத்திருந்தால் இன்னமும் நலமாக இருந்திருக்கும்.
ஆனால், மணல் கொள்ளை, பாபர் மசூதி விவகாரம், ஊழியர்களின் நியாயமான வேலை நிறுத்தங்கள் போன்றவற்றில் தலையிடும்போது மட்டும் தன்னிச்சையான ஒருதலை பட்சமான முடிவுகளாஇ எடுப்பதை கைவிட்டு அப்போதும் பொதுத்திரள் ஆலோசனையை கேட்பதும் தேவை என்பதை மாண்பமை நீதிமன்றங்கள் செயலபடுத்த வேண்டும் என்பது கைஏந்தி நாம் வைக்கும் கோரிக்கை.
மற்றபடி இதைப் பொறுத்தவரை சட்டவிரோதமான அமைப்புகள் என்று தெளிவாகத் தெரிந்த இந்த விசயத்தில் அவர்களை முட்டிக்கு முட்டித் தட்டி உள்ளே தள்ளுவதும் இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் அரசுகளை குற்றவாளிக் கூண்டிற்கு கொண்டுவருவதும் இந்த அமைப்புகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசியல் அமைப்புகளை தயவு தாட்சன்யமின்றி தடை செய்வதும் போதும்

எவ்வளவு குறைவாக விமானக் கட்டணம் இருப்பினும்....

அவ்வப்போது யாராவது ஒரு அமைச்சர் நீரோ இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறான் என்று நிறுவிக்கொண்டே இருக்கின்றனர்.
அப்படியாக நீரோவின் இருத்தலை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்பமை ஜெயந்த் சின்கா தனது பேச்சால் நிறுவியுள்ளதை இன்றைய (05.02.2018) தீக்கதிர் செய்தியிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது
ஆட்டோவைவிடவும் விமானக்கட்டணம் குறைவாக உள்ளது என்று இந்தூரில் இன்று அவர் கூறியிருக்கிறார்.
இதைவிட அழகாய் ஏழைகளை யாராலும் கேவலப்படுத்த முடியாது
விமானம் பணக்காரர்களின் வாகனம்.
ஆட்டோ ஏழைகளின் வாகனம்
ஆட்டோவைவிட இவர்களது ஆட்சியில் விமானக் கட்டணம் குறைவென்றால்
இவர்களது ஆட்சி பணக்காரர்களின் பயணத்தை இலகுவாக்கி ஏழைகளின் பயணத்தை முடக்கிப்போட்டிருக்கிறது என்று பொருள்
நோய்வாய் பட்ட ஏழையை, வயலில் பாம்பு கடித்த விவசாயக் கூலியை மருத்துவமனைக்கு விமானத்தில் கூட்டிப்போக இயலாது அமைச்சரே
விமானக் கட்டணம் குறைவாய் இருப்பதில் எங்களுக்கு சங்கடமெல்லாம் இல்லை. மகிழ்ச்சிதான்
ஆனால் ஏழைகளும் மக்கள்தான் என்ற அடிப்படை புரிந்தவர்களின் ஆட்சி எனில்
எவ்வளவு குறைவாக விமானக் கட்டணம் இருப்பினும் அதை விடக் குறைவாகத்தான் இருக்கும் ஆட்டோக் கட்டணம்

Monday, February 5, 2018

உங்கள் எதிர் பட்டியலில் சேர்த்தமைக்கு

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் பிற மதத்தினரும் இறைநம்பிக்கை இல்லாதவர்களும் கடை வைத்திருப்பதால் தீவிபத்து குறித்து விசாரனை நடத்த வேண்டும் என்று திருமதி தமிழிசை கூறியிருப்பதாகத் தெரிகிறது.
இந்த தீ விபத்தின் மீது அவருக்கு அங்கு கடை வைத்துள்ள பிற மதத்தவரின் மீதும் இறைநம்பிக்கை இல்லாதவர்களின் மீதும் சந்தேகம் இருப்பதையே இதன்மூலம் அவர் கூற வருகிறார்.
பொதுவாக இதுமாதிரி விஷயங்களில் நான் தலை கொடுப்பது இல்லை. ஆனால் போகிற போக்கில் இறைநம்பிக்கை இல்லாதவர்களையும் அவர் இதில் கோர்த்து விட்டிருப்பதால் நமக்கான தேவை இருக்கிறது.
இரண்டு நாட்களாக முகநூலில் ஒரு ஆழமான கருத்து வந்துகொண்டே இருக்கிறது. அதை எழுதியவருக்கு என் நன்றி. அந்தக் கருத்து இதுதான்,
“ஆத்திகர்கள் தாம் வணங்கும் தெய்வத்தைத் தவிர ஏனைய தெய்வங்களை நம்ப மறுப்பவர்கள். நாத்திகர்கள் இருப்பதாய் ஆத்திகர்கள் நம்பும் எல்லா தெய்வங்களையும் நம்பாதாவர்கள்.”
இந்த வகையில் ஆத்திகர்களும் 99.99999999999999999%
நாத்திகர்களே.
மனிதர்கள் புழங்கும் எந்த ஒரு இடத்தின் பாதுகாப்பு குறித்தும், அது எந்த மதத்தின் வழிபாட்டு இடமாக இருப்பினும் நாத்திகன் அக்கறையோடே இருப்பான். காரணம் எல்லா மக்களும் அவனது மக்களே.
நாத்திகனையும் உங்கள் எதிர் பட்டியலில் சேர்த்தமைக்கு நன்றி தமிழிசை

ஈஸ்வரியம்மான்னா ஈஸ்வரியம்மாதான்

யாரோ ஒரு ஆண் தோழரின் குரலில் " செல்லாத்தா... செல்ல மாரியாத்தா" ஓடிக்கொண்டிருக்கிறது பேருந்தில்
இதன் ஒரிஜினலை எல்.ஆர். ஈஸ்வரியம்மா பாடியிருப்பார்கள். நாத்திகனென்னை கிறக்கிக் கட்டிப்போட்ட பாடல் அது. இன்றென்னவோ ஈர்க்கவே இல்லை.
எல்லாவற்றையும் நகலெடுக்காதீர்கள் கனவான்களே. எரிச்சல் வருகிறது
சான்சே இல்ல ஈஸ்வரியம்மான்னா ஈஸ்வரியம்மாதான்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...