Saturday, December 21, 2019

அவனோட பேசனும்

மாலை சிறப்பு வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும்போதே நான் எனது அறையைவிட்டு வெளியே வந்து வேப்ப மரத்தடியில் நின்று கொள்வேன்
வகுப்பு முடிந்து போகும் பசங்களை வம்பிழுத்து விளையாடுவதில் அப்படியொரு சுகம்
இப்படி சொல்வதுகூட சரியில்லை
அவனவனும் என்னையும், சில நேரங்களில் தமிழாசிரியர் செல்வத்தையும் வம்புக்கிழுத்து விளையாடிவிட்டு செல்வார்கள்
“சார், நீங்க கூட்டமெல்லாம் பேசுவீங்களாம்ல?”
“அதுக்கென்ன இப்ப?”
“அதுக்கு என்னவா? ஒன்னு கேக்கனும்”
“ன்ன?”
“நல்ல சாதிக்கு பொறந்தவனா இருந்தா ரேங்க் வாங்கிக்காட்டுங்கறார் எங்க அப்பா? சாதில நல்ல சாதி கெட்ட சாதின்னு இருக்கா சார்?”
“மொதல்ல சாதின்னு இருக்காடா?”
“இருக்கு சார். சாதின்னு இருந்தாதானே அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க செய்ய முடியும்”
“அதாவது இன்ன இன்ன சாதி இன்ன இன்ன வேலை செய்யனும்னு”
”ஆமாம் சார். அதுக்குத்தான கடவுள் சரியா படச்சிருக்கார்?”
”கடவுள் நல்லவராடா?”
“நல்லவர் எப்படி ஒருத்தர ஒசத்தியாவும் ஒருத்தர கீழயும் படைப்பாரா?”
“ஆமாந்தானே அதுல அவருக்கு என்ன லாபம்?”
“அப்ப யாருக்கு லாபமோ அவருதானே ஜாதிய படச்சிருக்கனும்?”
“ஆமா சார்”
”அப்ப யாரு படச்சிருப்பா?”
குழப்பத்தோடு நின்னான்.
”ஒசந்த சாதி கக்கூசுக்குப் போகுது. ஒடுக்கப்பட்ட சாதி கக்கூச சுத்தம் செய்யுது.”
“அப்ப ஒசந்த சாதிதான் கீழ் சாதிய உண்டாக்குச்சா சார்”
“ஆமா. ஆனா கீழ் சாதி இல்ல. ஒடுக்கப்பட்ட சாதின்னு சொல்லனும்”
அவனோட பேசனும்

Friday, December 20, 2019

வேணுன்டா எட்வின்

அரையாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது
அறைகளைப் பார்வையிட சென்று கொண்டிருக்கிறேன்
மரத்தடியில் மதியம் தேர்வெழுத வேண்டிய ஏழாம் வகுப்பு குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் செல்வகுமார்
சிலர் அவரை சூழ்ந்துகொண்டு
சிலர் அமர்ந்தபடி
குனிந்த தலையோடு அவர்களைக் கடக்கிறேன்
சாஆஆர், சார் என்று கத்துகிறார்கள்
அவர்களை நெருங்குகிறேன்
என்ன சாமி?
உங்கள யார் கூப்டா?
இப்ப சார்னு கத்துனீங்களே
சார்னா நீங்களா?
நாங்க எங்க சாரக் கூப்டோம்
வேணுன்டா எட்வின்

Tuesday, December 17, 2019

நீங்களே ஒருமுறை நீதி கேட்டு தெருவிற்கு வந்தவர்கள்தானே

அழுதுகொண்டே வந்தவளை என்னடா என்று கேட்கிறேன்
சயின்ஸ் சார் அடிச்சிட்டார்
அய்யோ அவர் யாரையும் அடிக்க மாட்டாரே. ஏதாவது தப்பு செஞ்சிருப்ப
ம்கும் சாரும் விசாரிக்காமயே அடிக்கிறாறு. நீங்களும் விசாரிக்காமலே நாந்தான் தப்புங்கறீங்க
முகத்துல அறையறமாதிரி கேட்கிறாள் குழந்தை
எட்டாம் வகுப்பு குழந்தை அவள்
விசாரிக்காமலே தீர்ப்பை சொல்கிறீர்களே. என் அன்பிற்குரிய நீதியரசர்களே
நீங்களே ஒருமுறை நீதி கேட்டு தெருவிற்கு வந்தவர்கள்தானே

Monday, December 16, 2019

மக்களின் கொதிநிலை அவர்களை அச்சப்படுத்துகிறது

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை கிழிந்தப் பதாகையாக்கி தொங்க
விட்டிருக்கிறார்கள்
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொந்தளித்திருக்கிறார்கள்
அவர்கள் வென்ற வடமாநிலங்களே கொதித்தெழுந்திருக்கின்றன
அவர்களை பாராளுமன்றத்தின் கொதிநிலை ஒன்றும் செய்யாது
அவர்கள் அந்த நிறுவனத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல
அவர்கள் இல்லையென்று மறுக்கலாம்
ஆனால் மக்களின் கொதிநிலை அவர்களை அச்சப்படுத்துகிறது என்பதுதான் உண்மை
எனவே எதிர்க்கட்சிகள் குறிப்பாக இடதுசாரிகள் அந்த மக்களோடு கலப்பதும் சரியாக வழிநடத்துவதும் அவசியம்

எதற்கும்முதலில் நாம் தமிழைப் புழங்குவவோம்

அவனவனும் அவனவன் மக்களோடு அவனவன் மொழியைப் புழங்காமல்
அவனவன் பிள்ளைகளுக்கு அவனவன் மொழியில் கல்வியைக் கொடுக்காமல்
அலுவலகங்களில்
மருத்துவனையில்
நீதிமன்றத்தில்
பாராளுமன்றத்தில்
அவனவன் மொழியை புழங்காமல் நகர்ந்தால்
பேச ஆளேயில்லாத மொழியை தேவ பாஷை என்றும்
அந்த மொழியைப் பேசினால் நோய் அகலும் என்றெல்லாம்
அந்த மொழி தெரியாதவரெல்லாம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பேசத்தான் செய்வார்கள்
எதற்கும்முதலில் நாம் தமிழைப் புழங்குவவோம்

Friday, December 13, 2019

சகிக்கவில்லையே மருத்துவர் அய்யா

இந்தச் சட்டம் குறைபாடுள்ளது
எனவே இந்தத் திருத்தம் தவிர்க்க இயலாதது
ஆகவே இதை நாங்கள் ஆதரிக்கிறோம்
என்று சொல்வதில்கூட ஒரு பொருள் இருக்கிறது
அது குறித்து விவாதிக்கலாம்
ஆனால்,
கூட்டணி தரமம் என்று இருக்கிறது. அதைக் காப்பாற்ற வேண்டும். எனவேதான் இந்தியக் குடியுரிமை சட்டத்தில் கொண்டு வருகிறப் படுகிற திருத்தங்களை ஏற்கிறோம் என்கிறீர்களே மருத்துவர் அய்யா
மீண்டும் சொல்கிறேன்,
இந்தத் திருத்தம் அநியாயமானது ஆகவே எதிர்க்கிறோம் என்கிறோம்
இந்த திருத்தம் நியாயமானது, ஆகவே ஆதரிக்கிறோம் என்று ஏன் உங்களால் கூற முடியவில்லை
எனக்குத் தெரியும் ,
இந்த திருத்தத்தில் நியாயம் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் என்று
இளைய மருத்துவர் மேல் வழக்குகள் உண்டு என்பதும் கூட்டணித் தர்மங்களில் ஒன்றா
இந்திதான் தேசிய மொழி என்றாலும் ஏற்பீர்களா?
சகிக்கவில்லையே மருத்துவர் அய்யா

Thursday, December 12, 2019

நம்பிக்கை பிறக்கிறது






பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு விளம்பரம் தொலைக்காட்சிகளில் வரும்
அநேகமாக ஏர்டெல் விளம்பரம் என்று நினைக்கிறேன்
நமக்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையிலான கம்பி வேலி
வேலிக்கு அந்தப்பக்கம் ஒரு பாக்கிஸ்தான் குழந்தை
இந்தப்பக்கம் ஒரு இந்தியக் குழந்தை
இந்தப்பக்கம் இருந்து உதைபந்தை அந்தப் பக்கத்திற்கு வேலியில் இருக்கும் இடைவெளி வழியாக உதைத்து அனுப்புவான்
அந்தக் குழந்தை இன்னொரு இடைவெளி வழியாக திருப்புவான்
அப்படி ஒரு நெகிழ்ச்சி
அந்த விளம்பரம் வரும் நேரங்களில் காத்திருந்து பார்த்த அனுபவம் உண்டு
ஆனால் அதை எடுத்து பத்திரப்படுத்தும் தொழில் நுட்பமெல்லாம் நமக்கு கைவராத நேரம்
மனித நல்லிணக்கம் குறித்து ஏர்டெல் நமக்கு பாடம் எடுத்ததாகவே பட்டதால் ஏர்டெல் எண்ணிற்கு மாறிய அனுபவமும் உண்டு
அந்த விளம்பரம் நின்றுபோனது எதையோ இழந்தது மாதிரி இருந்தது
ஆனால் பையப் பைய அதுவும் கடந்து போனது
இன்று தம்பி தாஹிர் தனது பக்கத்தில் வைத்திருந்த இந்தப் படம் அப்படியே நெகிழ்த்திப் பிசைந்து விட்டது
இந்தியக் குடியுரிமை குறித்த நம்பிக்கையில் தங்களது நகங்களால் சிலர் மகிழ்ந்து வெறித்து கீறத் துவங்கியப் பொழுதில் இந்தப் படத்தை வைத்திருக்கிறார் தம்பி
நம்பிக்கை பிறக்கிறது
முத்தம் Dhahir Batcha

Wednesday, December 11, 2019

“மாபெரும் ஏதோ ஒன்றைச் சொல்ல வேண்டும்”

இந்த டிசம்பர் பதினொன்றில்,
”பெரிதினும் பெரிது கேள்”
என்ற பாரதியின் வரியோடு
“மாபெரும் ஏதோ ஒன்றைச் சொல்ல வேண்டும்”
என்ற ரோசா லக்சாம்பர்க்கின் வரியும் சேர்ந்தே என்னை கிள்ளிக்கொண்டிருக்கிறது
மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுமே வேறு வேறு பணிக்கானவை
ஒன்று,
அற்பம் தவிர்த்து பெரியதாய்த் ஜனங்களிடமிருந்து தேடி உள்ளெடுக்கச் சொல்லும்
மற்றொன்று,
அற்பம் தவிர்த்து மிகப் பெரியதாய் ஜனங்களுக்குத் தரச் சொல்லும்
ஆனால் இரண்டிற்கும் தொடர்புண்டு
நல்லதைத் தரவேண்டும்
எனில்,
நல்லதை எடுக்க வேண்டும்
இரண்டிற்கும் முயற்சிப்போம்

Monday, December 9, 2019

பகடிகளுக்கு அளவே இல்லை

நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியவில்லை
அவர் தான் வாங்கியுள்ள ஒரு தீவில் இருக்கிறார் என்கிறார்கள்
அந்த தீவிற்கு கைலாஷ் என்று பெயர் வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்
அவர் இமயமலையில்தான் இருக்கிறார் என்கிறார்கள்
காவல்துறை தேடிக்கொண்டிருக்கிறார்கள்
அவர் தினமும் தினமும் வீடியோவில் உரையாற்றுகிறார்
தனது தீவை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐநா சபைக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் என்கிறார்கள்
அது ஒரு இந்துநாடு என்கிறார்கள்
அதை அர்ஜுன் சம்பத் மகிழ்ந்து வரவேற்றிருப்பதாக செய்திகள் கூறுகின்றன
அவரது கடவுச்சீட்டை ரத்து செய்துவிட்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன
பகடிகளுக்கு அளவே இல்லை. அதில் உச்சம் என்னவென்றால் அவரது கடவுச்சீட்டு காலாவதியாகி பல காலமாச்சு என்பதுதான்

Sunday, December 8, 2019

சங்கர் தயாள் சர்மாவின் சாதிய வன்மம்

தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டபோது இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு சங்கர் தயாள் ஷர்மா
அதைத் தாங்கிக்கொள்ள முடியாதவராய் அவர் இருந்திருக்கிறார். அதை இப்படியாக வெளிப்படுத்தியும் இருக்கிறார் என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 25.09.1994 இல் வெளிவந்திருக்கும் அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. அவர் கூறுகிறார்
“although the quota system might have taken away posts from brahmin, no one could take away brahmin's brain"
அதாவது,
இடஒதுக்கீடு மூலமாக பார்ப்பனர்களிடம் இருந்து பணியிடங்களை, வாய்ப்புகளைப் பறிக்கலாமே தவிர மூளையைப் பறிக்க இயலாது.
மொத்த இந்தியாவின் தலைமகனாக இருந்தவருக்குள்ளேயே இவ்வளவு சாதிய வன்மம் இருந்திருக்கிறது என்பது எவ்வளவு துயரமானது

Friday, December 6, 2019

கவிதை

நீண்ட தவத்தை இடைமறித்த
இறைவனிடம்
வரமாய்
சாத்தானின்
அலைபேசி எண் கேட்டான்

வெங்காயம்

வெங்காயத்தின் கைங்கரியத்தால் மத்திய நிதி அமைச்சர் மாண்பமை நிர்மலா சமூக வலைதளங்களின் பகடிக்கும் மீம்சிற்கும் ஆட்பட்டிருக்கிறார்
இன்றைக்கு அவையில் வெங்காயமும் பூண்டும் அவ்வளவாக எடுத்துக்கொள்ளாத குடும்பத்தில் இருந்து வந்திருப்பதாக அவர் கூறியதில் இருந்து வலைதளம் அவரை எடுத்து கொண்டது
தோழர் ஜெயதேவன் இதுகுறித்து வைத்திருந்த ஒரு பதிவில் பின்னூட்டம் இட்டிருந்த ரவி (Ravi S) ,
வெங்காயப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக துருக்கி மற்றும் எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதாகவும், பிரச்சினை விரைவில் தீர்ந்துவிடும் என்றும் திருமதி நிர்மலா குறிப்பிட்டார் என்றும்
அப்போது ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் அந்த நாடுகளின் வெங்காயத்தை அமைச்சர் ருசித்துப் பார்த்திருக்கிறாரா என்று கேட்டபோது வெங்காயம் சாப்பிடும் பழக்கம் தமக்கில்லை என்று அமைச்சர் கூறியதைத்தான் சிலர் இப்படி திரித்துவிட்டார்கள் என்றும் கூறுகிறார்
அது உண்மையாகவே இருக்கட்டும்
துருக்கியில் இருந்தும் எகிப்தில் இருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்யவேண்டியத் தேவை ஏன் வந்தது?
இந்தியாவில் வெங்காய சாகுபடி குறைந்து போனதா?
இந்தியாவின் வெங்காயத்தேவை 1,60,00,000 டன் என்றும் ஆனால் இந்தியாவின் சராசரி வெங்காய உற்பத்தி ஆண்டொன்றிற்கு 2,30,00,000 டன் என்றும் இன்றைய (05.12.2019) தீக்கதிர் தலையங்கம் கூறுகிறது
பிறகு ஏன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டியத் தேவை வந்தது?
இந்த ஆண்டு 12,40,000 டன் வெங்காயத்தை இந்தியா ஏற்றுமதி செய்ததும்,
செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு அரசாங்கத்திடம் இருந்த வெங்காயத்தில் 30,400 டன் அழுகிப்போனதும்
இன்றைய வெங்காயத் தட்டுப்பாட்டிற்கான முக்கியமான காரணங்கள் என்றும் இன்றைய தீக்கதிர் சொல்கிறது
ஆக இந்த அரசாங்கம் பதில் சொல்ல வேண்டியது இந்தக் காரணங்களுக்குத்தான்
தேவை உணராமல் வெங்காயத்தை குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்ததும்
அழுகாமல் பாதுகாக்கத் தவறியதும்
இன்றைய வெங்காயத் தட்டுப்பாட்டிற்கும் விலை உயர்விற்கும் காரணங்கள் என்பதைத் தவிர்க்க இயலாது
போக,
இவ்வளவு விலைக்கு வெங்காயம் மார்க்கெட்டில் விற்கப்படும் சூழலில் விளைவித்தவன் இந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயத்தை ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு விற்றான் என்ற கொடுமையையும் மறந்துவிடக் கூடாது

இருக்கேன்பா

நீண்ட நாட்களுக்குப் பிறகு நலக்குறைவால் ஆசிர்வதிக்கப்பட்டு
காலையிலிருந்தே படுக்கையில்
அவ்வப்போது எழுந்து அமர்வதும் எதாவது படிப்பதும் மீண்டும் விழுவதுமாய்
ஜெயாபுதீன் (Jeyabudheen) அழைத்தான். உங்களால பேச முடியல, பிறகு பேசறேன் என்று வைத்துவிட்டான்
மாலை பிள்ளை தமிழ் (Vetrimozhi Veliyeetagam) அழைத்திருக்கிறான். எடுக்கவில்லை என்றதும் எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கிறேன்
“அப்பா, தமிழ்ப்பித்தனோட (Poondi Jeyaraj) அப்பா இறந்துட்டாங்க”
அப்பா இறந்து கொஞ்ச நாட்களில் வந்திருந்த எனது கணக்கு சாரிடம் (ரெங்கராஜ் சார்)
அவர் கிளம்பும்போது சொன்னேன்,
“அப்பாவும் போயிட்டாங்க, நீங்களும் கிளம்பறீங்களே”
சார் சொன்னார்,
“அப்பா போயிட்டாரா?
இருக்கேனேடா”
தமிழ்ப்பித்தனிடம் நான் சொல்வது இதுதான்,
“இருக்கேன்பா”

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...