Wednesday, February 27, 2013

பெரம்பலூர் வாசிக்கிறது

பாக்தாத் வசப்பட்டு விட்டதால் ஏகத்துக்கும் மகிழ்ச்சி தைமூருக்கு. குதூகலத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தான்.

சுற்றி நிற்பவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உற்சாகமும் துள்ளலுமாய் ஓடி வருகிறான் அவனது தளபதி.

“ இங்கிருக்கிற வழிபாட்டுத் தளங்களையெல்லாம் அழித்து விடலாமா மன்னா?”

பொதுவாகவே ஒரு நாடு வெற்றி கொள்ளப் பட்டபின் அங்கிருக்கக் கூடிய புராதன சின்னங்களையும் வழிபாட்டுத் தளங்களையும் அழித்துவிட்டு செல்வங்களை, அடிமைகளை, அழகு நங்கைகளை, அள்ளிக்கொண்டு போவதுதான் வழக்கம். எனவேதான் அப்படிக் கேட்டான்.

“ அவை என்ன செய்தன உன்னை?. இருக்கட்டும் விடு”

அழிப்பதற்கான அவனது நீண்ட பட்டியல் ஒவ்வொன்றாய் முற்றாய் நிராகரிக்கப் பட்டபின் கேட்டான்,

“ அப்புறம் என்னதான் செய்யட்டும் மன்னா? ”

எதையுமே அழிக்க வேண்டாம் என்றால் பிறகெதற்கு இவ்வளவு சிரமப்பட்டு கைப்பற்ற வேண்டும் என்ற கவலை அவனுக்கு.

“போ, போய் கல்வி நிலையங்கள், நூல் நிலையங்கள், அனைத்தையும் அழித்துப் போடு. கவனத்தில் கொள், பாக்தாத்தில் ஒரு புத்தகம் இருக்கக் கூடாது. கொளுத்திப் போடு”

“ இதில் என்ன லாபம் மன்னா? ” கொஞ்சம் அப்பாவியாய்த்தான் கேட்டான்.

“ முட்டாளே ! நூல்கள் மனிதனுக்கு புத்தியைத் தரும். புத்தி விடுதலைக்காக அவனைப் போராடத் தூண்டும். பாக்தாத் தொடர்ந்து நமது ஆளுகையின் கீழ் இருக்க வேண்டுமென்றால் இவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும். புத்தகங்கள் இதைக் கெடுத்துப் போடும். தொணத் தொணவென்று பேசிக்கொண்டு நிற்காமல் சொன்னதை செய் விரைவாய்”

தொண்ணூற்றி ஒன்பது விழுக்காடு சரியாய்தான் இருக்கும்.

ஆனாலும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கமில்லாத காலத்தில் எங்கோ வாசித்தது என்பதால் பெயர் அல்லது இடம் தவறாகவும் இருக்கலாம். இருந்துவிட்டு போகட்டும். அதனால் ஒன்றும் முழுகி விடாது.விஷயம்தான் முக்கியம்.

ஆக, அடிமைகளாகவே மக்கள் இருக்க வேண்டுமெனில் அவர்களிடமிருந்து புத்தகத்தை அப்புறப் படுத்திவிட வேண்டும்.

புத்தகங்களை வாசிக்காத மனிதன் தன் அடையாளம் இழப்பான். யாருக்கும் தானே விரும்பி அடிமையாவான்.

இதற்காகத்தான் யாழ் நூல் நிலையம் கொளுத்தப் பட்டது. உணர்வுள்ள தமிழ் பேசும் யாவரும் கண்ணீர் விட்டு அந்தத் தருணத்தில்அழுததும் அதனால்தான்.  ஈழத் தமிழினத்தின் அடையாளத்தை, சுயத்தை, வேட்கையை வேரறுக்கும் முயற்சியாகவே யாழ் நூல் நிலையம் கொளுத்தப் பட்டது.

எனில்,

சுதந்திரமாய் சிந்தித்து தமக்கான அடையாளத்தோடும், பகுத்தறிவோடும், எவனுக்கும் பணிய மறுக்கும் சுயமரியாதையோடும்,   மக்கள் இருக்க வேண்டும் என்று ஒரு அரசும் அரசு இயந்திரமும் விரும்பும் என்றால் அது தன் மக்களின் முன் புத்தகங்களைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.

பல ஊர்களில், ஏன், பல மாவட்டத் தலை நகரங்களில் நல்ல புத்தகக் கடைகளே இல்லை என்பதுதான் இன்றைய எதார்த்தம்.

வாசிக்கிற பழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டுமெனில் நாம்தான் புத்தகங்களோடு மக்களை நோக்கிப் போக வேண்டும். புத்தகச் சந்தைகளை ஊர் ஊருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சந்தைக்குள் மக்களைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்.

இதுவெல்லாம் சாத்தியமா?

சாத்தியம் என்பதை புன்னகையோடு செய்து காட்டியிருக்கிறார் பெரம்பலூர் மாவட்ட ஆட்ச்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது.

அவர் பெரம்பலூருக்கு வந்தவுடன் வேறு எதைப் போலவும் வாசிப்புத் தளமும் இங்கு வறண்டு கிடப்பதை உணர்ந்து கொண்டார். ஒரு பெரிய நகரத்தின் பரப்பளவே கொண்ட இந்த மாவட்டத்தை சுற்றி சுற்றி எதை எதையோ செய்தவர் வறண்டு வெடித்துக் கிடக்கும் வாசிப்புத் தளத்தை வளப் படுத்த முடிவெடுத்தார்.

பெரம்பலூர் என்பது கல்வி நிலையங்களின் நகரம். எனவே கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து,

“ஒரு புத்தகத் திருவிழாவை இங்கு நடத்த வேண்டும். பத்து நாட்களுக்கு ஆகும் செலவை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இயலுமா? ”

“செய்துடலாம் சார்”

சென்ற ஆண்டு ஏறக்குறைய 50 கடைகளோடு புத்தகத் திருவிழாவைத் தொடங்கினார்.

ஒவ்வொரு நாள் செலவையும் ஒவ்வொரு கல்வி நிறுவனங்கள் ஏற்றன. தத்தமது மாணவர்களையும் ஊழியர்களையும் அவை தமது வாகனங்களில் கொண்டு வந்து சேர்த்தன. பார்வையாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிடவும் எகிறியது.

கடை எடுத்திருந்தவர்கள் புன்னகையோடு ஊர் கிளம்புமளவிற்கு வணிகம் அமைந்தது.

சென்ற ஆண்டின் அனுபவத்தை நன்கு படித்துக் கொண்ட ஆட்சித் தலைவர்
இந்த ஆண்டு ஒரு பெரும் பாய்ச்சலுக்குத் தயாரானார். அரசு ஊழியகளும் ஆசிரியர்களும் தங்களது குல தெய்வ கோயிலின் கும்பாபிஷேகத்தைப் போலவே பாவித்து சுழன்று சுழன்று உழைத்தார்கள்.

பப்பாசி வழிகாட்டுதலைப் பெற்றார். இந்த ஆண்டு 104 கடைகள். இதில் 64 பதிப்பகங்கள்.

உண்மையை சொல்லிவிட வேண்டும் சென்னை புத்தகக் காட்சியின் பிரமாண்டமே அசைத்துவிட முடியாத என்னை இந்தப் புத்தகத் திருவிழா நிறைய அசைத்துப் போட்டது.

என் மண்ணில் ஒரே இடத்தில் இத்தனைக் கடைகளா? குவியல் குவியலாய் இத்தனை நூல்களா? உணர்ச்சிவசப்பட்டதில் ஓரிரு துளி கசியவே செய்தது.

“ இது கொஞ்சம் அதிகமா தெரியலையா எட்வின்?” என்று கேட்கக் கூடும்.

சத்தியமாய் இல்லை. கை நிறைய புத்தகங்களோடு நடக்கும் எம் மண்ணின் இளைஞர்களையும் யுவதிகளையும் குழந்தைகளையும் பார்க்கும்போது நான் உணர்ச்சி வசப்படுவதை உணர வேண்டுமெனில் எங்கள் மாவட்டத்தின் வாசிப்பு வறட்சி பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

இதில் இருக்கும் தன்னடக்கம் தினசரி மாலையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எனக்கு இல்லை. பெரம்பலூர்க் காரன் என்பதில் அதில் எனக்குத் திமிரே உண்டு. நிகழ்ச்சிகளை கண்கள் திறந்து காது கொடுத்து அனுபவித்தார்கள் எம் மக்கள்.

தினசரி மாலை ஆட்சியர் வந்து விடுவார். பதிப்பகத்து உரிமையாளர்களை வசதி எப்படி, எப்படி போகிறது என்பதை விசாரித்து அறிந்தார்.

தரமான, தீவிர இலக்கியங்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகங்களில் வியாபாரம் கொஞ்சம் மந்தமாகப் படவே ஊராட்சி மன்றத் தலைவர்களை அழைத்து அது மாதிரி ஸ்டால்களில் ஆளாளுக்கு நூல்கள் வாங்க வேண்டும் என்றும், இல்லாது போனால் வரும் காலங்களில் இவர்கள் வராமாட்டார்கள் என்றும் சொன்னார்.இவர்கள் வராது போனால் தரமான நூல்கள் வருங்காலத் தலைமுறையினருக்கு வாய்க்காமல் போய் விடும் என்று புரிய வைத்தார். அது நல்ல பயனைத் தந்தது.

பிறகு போய் அரங்கில் அமர்ந்தால் முடிகிறவரை அமர்ந்து விருந்தினர்களை கை கொடுத்து அனுப்பிவிட்டுதான் திரும்புவார்.

அப்படித்தான் ஒருநாள் ஸ்டால்களை சுற்றி வரும்போது சந்தியா பதிப்பகத்தினுள்ளே நுழைந்தார். அவர்கள் எனக்கும் சின்னதாய் ஒரு கட்வுட் வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கிறார், என்னைப் பார்க்கிறார், அதைப் பார்க்கிறார்...என்னைப் பார்க்கிறார்,

“நான்தான் சார்”

“ கடை உங்களுதா? எப்படிப் போகுது?”

பதறிக் கொண்டு வந்தார் சந்தியா சௌந்திரராஜன்,

“ சார் அவர் எழுத்தாளர். இந்த ஊர்க்காரர்.”

”எங்க ஊர் எழுத்தாளருக்கு கட் அவுட்டா?” என்பது போல் பார்த்தார். இருபது நிமிடம் பேசிக் கொண்டிருந்தோம்.

“நாளை நீங்க அவசியம் பேச வேண்டும்”

உத்தரவோடு விடை பெற்றார்.

அடுத்த நாள் ஆள் அனுப்பி அழைத்து பேச வைத்தார்.

பெரம்பலூரின் தொன்மச்சிறப்புகளைப் பற்றி பேசினேன். பெரம்பலூரின் வரலாறு எழுதப் படவேண்டும் என்று பேசினேன்.

அதற்கான ஒரு குழுவை அமைத்து வேலையை ஆரம்பித்துவிட்டார். ஆக புத்தகத் திருவிழாவின் உப விளைவாக பெரம்பலூர் வரலாறு வரப் போகிறது.

இன்னொரு பக்கம் உலகத் திரைப் படங்களும் குறும்படங்களும் தினமும் திரையிடப் பட்டன. வழிதக் கூட்டம் சொன்ன தகவல்கள் இரண்டு,

நல்லதைக் கொடுத்தால் நிச்சயம் பார்ப்பார்கள் என்பது ஒன்று.

குறும்பட ரசனை பெரம்பலூரில் தழைத்து வளரும் என்பது இரண்டு.

65000 புத்தகங்கள், 9500000 ரூபாய்க்கன விற்பனை என்பது எங்களுக்கு நம்பிக்கை தரும் விசயங்களே. 120000 பார்வையாளர்கள் , அதில் குறிப்பிடத் தகுந்த அளவு மாணவ மாணவியர் என்பது என்னைப் பொறுத்தவரை தித்திப்பான செய்திகளே.

கனரா வங்கியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் ஸ்டால் எடுத்து புத்தகங்கள் வாங்க கடன் கொடுத்ததன என்பதை கண்ணால்பார்த்த என்னாலேயே இன்னும் நம்ப முடியவில்லை.

பெரம்பலூர் நூலக வாசக வட்டம் ஒரு ஸ்டால் எடுத்து நூல் தானம் கோரியது. மிக நல்ல அறுவடை. ஏறத்தாழ 45000 ரூபா மதிப்பிலான புத்தகங்களை மக்கள் எங்கள் ஊர் நூலகத்திற்கு வழங்கியிருக்கிறார்கள்.

திரைப்பட இயக்குனர் தாமிரா பேச வந்திருந்தார். மிரண்டுப் போய் சொன்னார், “பெரம்பலூரில் நல்ல வாசகத் திரள் உருவாகும் பாரேன்”

நல்லவன் வாக்கு. பலிக்கும்.

இரண்டுமுறை வந்திருந்த மனுஷ்யப் புத்திரனுக்கு இந்தத் திருவிழாவில் கிடைத்த மகிழ்ச்சி வேறு எங்கும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

மற்ற ஊர்க்காரர்களைப் போல எங்களால் விமர்சனம் எல்லாம் செய்ய இயலாது. எங்களைப் பொறுத்தவரை வறண்ட மணற்பரப்பில் நா வறள பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு சுணை கிடைத்திருக்கிறது.

வருங்காலங்களில் எங்கள் பிள்ளைகள் ஏராளமாய் எதிர்பார்ப்பார்கள், நிறைய வளர்ந்து நிறைய விமர்சிப்பார்கள்.

அடுத்தமுறை உறவினர்களையும் நண்பர்களையும் புத்தகத் திருவிழாவிற்கு அழைக்க எண்ணியிருக்கிறேன். கும்பாபிஷேகத்திற்கும், கிடா வெட்டிற்கும் அவர்கள் அழைத்து போய் வெட்டிவிட்டு வரும் நாம் எதுவும் செய்ய இயலவில்லையே என்ற ஏக்கத்தை நேர் செய்ய ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது

ஸ்டால் எடுத்திருந்தவர்கள் சாப்பாடு, தேனீர் போன்றவற்றிற்கு மிகுந்த சிரமப் பட்டதை உடனிருந்து பார்க்க முடிந்தது. பார்வையாளர்களுக்கும் அதே சிரமம் இருக்கவே செய்தது. அடுத்த முறை உள்ளேயே நல்லதொரு கேண்டீன் ஏற்பாடு செய்யப் படுவது நல்லது.

இதைவிடவும் மிகுந்த அத்தியாவசியமானது கழிவறை வசதி.

அடுத்தது சில்லறைப் பிரச்சினை. இதை நானே ஆட்சியரிடம் சொன்னபோது என்ன செய்யலாம் என்று கேட்டார். சென்னையில் ஒரு வங்கி தினமும் சில்லறை பொட்டலங்களை ஸ்டால்களுக்கு விநியோகித்ததை சொன்னேன். கடைசி இரண்டு நாட்களில் இதற்கான முயற்சிகளை அவர் செய்திருந்தார்.

இவை கடந்து எதை வாங்குவது என்பதில் நிறைய குழப்பம் இருந்ததை உணர முடிந்தது. பட்ஜட்டுக்குள் எதை வாங்குவது என்பதில் தெளிவற்று தடுமாறியவர்களையும் பார்க்க நேர்ந்தது. 4000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன். அப்புறம்தான் “தோல் “ பற்றி தெரிந்தது. வாங்க பைசா இல்லை என்றார் நண்பர் ஒருவர்.

எதை வாங்குவது, தங்களது பட்ஜெட்டுக்குள் எதை எதை வாங்குவது என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனில் நல்ல நூல்கள் குறித்த புரிதலை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இதனை இங்குள்ள இலக்கிய அமைப்புகள்தான் செய்ய வேண்டும். இதற்கு தொடர்ந்து கூட்டங்களை இவர்கள் நடத்த வேண்டும். இதற்கு எளிய வாடகையில் அரங்குகள் கிடைக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் ஆனதை சேய்ய வேண்டும். உள்ளூர் கல்லூரிக்ளும் இதில் தங்களது பொறுப்பை உணர வேண்டும்.

இவை எல்லாம் கடந்துஎங்களூர் புத்தகத் திருவிழா இரண்டு விசய ங்களை சொல்கிறது,

ஒன்று,

மாவட்ட ஆட்சியர்கள் நினைத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழாக்கள் சாத்தியம்.

இரண்டு,

பெரம்பலூர் வாசிக்கத் தொடங்கியிருக்கிறது.

நன்றி : “காக்கைச் சிறகினிலே”


Tuesday, February 26, 2013

திண்ணியம்


ஆயிரம் பேர் கூடி நிற்க
ஆதிக்கம்
ஆணவம்
ஜாதித் திமிர்
ஏளனங்கள்
எகத்தாளங்கள்
இவற்றிடையே
அவமானம்
என்னைத் தின்னத் தின்ன
நான்
மலம் தின்றால் மட்டுமே
கிடைக்கும்
நீ
மலம் தின்ற அவஸ்தை

Monday, February 25, 2013

குற்றம் குற்றமே

முன்னுரை:

இந்தக் குறுங்கட்டுரை2008 ஆண்டு எழுதப் பட்டு எனது “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற நூலில் உள்ளது. அவசியம் கருதி இந்த முன்னுரையும் ஒரு பின்னுரையும் தரவேண்டி உள்ளது.

ஏறத்தாழ 600 ஆண்டுகளாக இல்லாத ஒரு வழக்கமாக இன்றைய போப்பாண்டவர் ஆக விரைவில் ஓய்வு பெறுகிறார். இந்த 600 ஆண்டுக்கால இடைவெளியில் ஒரு போப்பாண்டவரின் மரணத்தின் பொருட்டே புதிய போப்பாண்டவரை கத்தோலிக்கத் திருச்சபை கண்டிருக்கிறது. 

ஆக கத்தோலிக்கத் திருச்சபையில் ஒரு புதிய வரலாறினை இவர் படைக்கிறார். இயங்க இயலாத போது ஒதுங்கி ஒய்வெடுத்துக் கொண்டு புதிய ஒருவருக்கு இயங்க வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற அவரது சரியான முடிவினை தலை வணங்கி ஏற்கிறோம்.

அதே நேரம் திருச்சபை வரலாற்றில் இவரது பெயர் ஏற்கனவே ஒரு முக்கியமான இடத்தில் இடம் பெற்றுள்ளது. அதைத்தான் இந்தச் சின்னக் கட்டுரை பேசுகிறது.

.....................................................................................................................

“மதச் சார்பற்ற தன்மையுடைய விஞ்ஞானத்தின் பெயரால் நல்லிணக்கத்திற் கெதிரான இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப் படுகிறது என அறிவிக்கிறோம் “

இது ஏதோ ஒரு மதவெறியைத் தூண்டக் கூடிய மத வெறியர் ஒருவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டதற்கான அறிவிப்பு எனில் கவனம் குவிக்காமல் விட்டுவிடலாம்.

உலகத்தில் வாழும் மக்களில் பெரும் திரளான ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராகத் திகழும் போப்பாண்டவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி ரத்துச் செய்யப் பட்டுள்ளது என்பதும், அதுவும் அவரது ஆளுகைக்கு உட்பட்டுள்ளபல்கலைக் கழகமே அதைச் செய்துள்ளது என்பதை அறிந்தது , ஏன்? என்ற ஆவல் இயல்பாகவே பிடித்துத் தள்ள உள்ளே நுழைந்தேன்.

“எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கி ” என்று சொல்வார்கள். உலகின் பெரும்பகுதி ரோமன் கத்தோலிக்கர்கள் என்ற பெரும்பான்மையின் செருக்கு மிகுந்த வெளிப்பாடாக நாம் இதைப் பார்க்கலாம். மேன்மைமிக்க வெளிப்பாடாக இதைக் கொண்டவர்களும் உண்டு. போப்பாண்டவரின் ஆளுமையும், செல்வாக்கும், உலகைக் கோலோச்சும் அந்த நிலை கொஞ்சமும் மாறாமல் இன்றும் அப்படியேத்தான் உள்ளது.

பிறகெப்படி இது சாத்தியப் பட்டது? ஏன் தேவைப் பட்டது?

லா சாட்னீஸா என்று ஒரு பல்கலைக் கழகம் ரோமில் உள்ளது.17.01.2008 அன்று போப்பாண்டவர் அவர்களின் அருளாசியுடன் அது அந்த ஆண்டிற்கான தனது மணியினஃஇத் துவங்கும் என்று முன்னர் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த அறிவிப்புதான் பின்னர் திரும்பப் பெறப் பட்டது.

சரி, அப்படி என்ன தவறினை இன்றைய போப்பாண்டவர் செய்துவிட்டார்?

1633 ஆம் ஆண்டு கலிலியோ மீது ஒரு விசாரனை நடத்தப் பட்டது. திருச்சபையின் முன் கலிலியோ நிறுத்தப் பட்டார். எதற்கந்த விசாரனை?

சூரியனை மையமாக வைத்து பூமி இயங்குகிறது என்று 1633 இல் கலிலியோ அறிவித்தார். கத்தோலிக்கத் திருச்சபையோ , பூமி நிலையானது, அசையும் தன்மை அற்றது என்று நம்பியது. நம்பவும் சொன்னது. நம்ப மறுத்தவர்களைத் தண்டிக்கவும் செய்தது.

இந்த நிலையில் கலிலியோ சற்று உரத்துக் குரலெடுத்து “ பூமி நிலையானது அல்ல, சூரியனைச் சுற்றி அது இயங்குகிறது” என்று அறிவித்தார்.  இவருக்கு முன்னரே கோபர் நிக்கஸ் இதைக் கண்டு பிடித்திருந்தார். காயம் படாமல், கழுமரம் ஏறாமல், அவஸ்தைக் கால ஜெபத்தோடு அமைதியாக செத்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை அவருக்கிருந்ததால், உயிருக்கு பயந்து அதை வெளியே சொல்லாமல் செத்துப் போனார்.

ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத கலிலியோ இதை கொஞ்சம் உரத்துச் சொன்னார். இது, திருச்சபையின் நம்பிக்கையை, விசுவாசத்திக் கேள்வி கேட்டதாக திருச்சபைக்குப் பட்டது. இது திருச்சபையின்பால் நம்பிக்கைக் கொண்டுள்ள கத்தோலிக்கர்களின் தேவ விசுவாசத்தை, கத்தோலிக்கக் கட்டமைப்பை உடைத்து விடுமோ என்று திருச்சபை அச்சப் பட்டது. திருச்சபையே விசுவாசத்தினால் கட்டப் பட்டது. “நம்பி விசுவாசிப்பவனைவிட நம்பாமல் விசுவாசிப்பவன் பாக்கியவான்” என்றும் சொல்லப் பட்டது. நம்பிக்கையைக் கேள்வி கேட்க அனுமதித்தால் அது விசுவாசத்தினால் மட்டுமே கவனத்தோடு கட்டமைக்கப் பட்டுள்ள திருச்சபையைக் குலைத்துப் போடும் என்று திருச்சபை நம்பியது. ஆகவே இதை அப்படியே விடுவது என்பது திருச்சபையை முடிவுக்குக் கொண்டு வருகிற ஒரு தொடர் செயலுக்கு கால்கோலும் என்று திருச்சபைக் கருதியது.

எனவே அன்றைய போப்பாண்டவர் தலைமையில் விசாரனைத் தொடங்கியது. விசாரனை என்பதை விட கட்டப் பஞ்சாயத்து என்ற பதமும், போப்பாண்டவரை அன்றைய நாட்டாமை என்பதுமே பொருத்தமாகப் படுகிறது.

பஞ்சாயத்து கலிலியோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்ப்பு சொன்னது. திருச்சபையின் அழுத்தமான குரல் தந்த பயத்தில் கொஞ்ச ஆடித்தான் போனார் கலிலியோ. வேடிக்கைப் பார்க்கத் திரண்டிருந்த ஜனத் திரளின் முன் கலிலியோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெற்றார். ஆனாலும் அப்படியான கருத்தைச் சொன்னதற்காக அவர் சிறைப் பட்டார். பிறகு பைத்தியம் பிடித்துச் செத்தும் போனார்.

ஏறத்தாழ 360 ஆண்டுகளுக்குப் பிறகு 1990 வாக்கில் எந்த மேல் முறையீடுமின்றியே இது மறு விசாரனைக்கு வந்தது. இப்போது திருச்சபை தனது முடிவினை மாற்றிக் கொண்டது.பூமிதான் சூரியனைச் சுற்ருகிறது என்ற கலிலியோவின் கருத்தினை ஏற்ரது.

சுருங்கச் சொன்னால் மதத்தை விஞ்ஞானம் வென்றது.

அப்போது தற்போதைய போப்பாண்டவர் பெனெடிக் 16 ஆம் கார்டினல் ரட்சசிங்கர் என்றழைக்கப் பட்டார். அப்போது நடந்த விவாததில் இவர் மட்டுமே 1633 இல் திருச்சபை எடுத்த முடிவு சரி, கலிலியோவின் கருத்துதான் தவறு. ஆகவே கலிலியோவின் கருத்தை திருச்சபை நிராகரிக்க வேண்டுமென்று விடாப் பிடியாக வாதிட்டார். நல்ல வேளையாக அன்றைய பெரும்பான்மை இவருக்கெதிராகப் போகவெ, திருச்சபை தனது கருத்தை மாற்றிக் கொண்டது.

விஞ்ஞானத்தின் சகல கனிகளையும் ருசித்துக் கொண்டிருக்கக் கூடிய மதப் பழமைவாதியான தற்போதைய போப்பாண்டவர் தங்களது பல்கலைக் கழகத்தில் நுழைவதை, அருளாசி பகர்வதை அதே பல்கலைக் கழகத்தைச் சார்ந்த கல்வியாளர்களின் எதிர்ப்பைத்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம்.

அவர்கள் நாத்திகர்களோ, திருச்சபைக்கு எதிரானவர்களோ அல்ல. தீவிர விசுவாசிகளே அவர்கள். இருதியாக பல்கலைக் கழகம் தவறு செய்தது போப்பாண்டவரே ஆயினும் அது தவறுதான் என்று முடிவெடுத்தது. போப்பாண்டவரின் நிகழ்ச்சியை ரத்து செய்தது.

முதலில் மதப் பழமை வாதிக்கும், மதப் பழமை வாதத்திற்கும் எதிராகத் திரண்டு கொதித் தெழுந்த அந்த 67 கல்வியாளர்களையும் சிரம் தாழ்த்தி, வணங்கி வாழ்த்துகிறோம்.

நியாயம் போப்பாண்டவருக்கு எதிர்த் தளத்தில் இருப்பதை உணர்ந்த திருச்சபை நியாயத்தின் பக்கம் நின்றதற்காக அதனை வணங்குவோம்.

இந்த நிகழ்வை இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்கள் அருள்கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், மதவாதிகளின் நெருக்கடியை, பழமைக் கூத்தை வெறி கொஉ எதிர்க்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறோம். அன்றைக்கே ஒருவன் தமிழில் சொன்னான்,

“நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

முடிவுரை:

போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் போப்பாண்டவராகவே மரணிப்பார் என்ற நடை முறையை மாற்றி இயலாமையை உணர்ந்து அடுத்தவருக்கு வழி விட்டிருக்கும் இன்றைய போப்பாண்டவரின் செயல் அவர் மிகவும் பக்குவப் பட்டிருக்கிறார் என்பதையே உணர்த்துகிறது. இந்தப் பக்குவத்தின் நீட்சியாக அவர் ஓய்வு பெறும் இந்த்த் தருவாயில் பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

Sunday, February 24, 2013

செப்டம்பர் 05

செப்டம்பர் 05.

ஆசிரியர்கள் தினம்.

ராதாகிருஷ்ணன் அவர்களது பிறந்த நாளை ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

மத்திய அரசும் மாநில அரசுகளும் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி அவர்களைக் கௌரவப் படுத்துவதாக வாங்கிய ஆசிரியப் பெருமக்களும் நாமும் நினைத்துக் கொண்டாடுகிறோம். அதில் பேச இருக்கிற விஷயங்களை இங்கு பேசத்தான் போகிறோம் என்றாலும் எது கடந்தும் நிறைய நல்ல ஆசிரிகளையும் அவ்விருதுகள் சென்றடைந்து பெருமை கண்டுள்ளன.

ஒரு நாள், முனைவர் ராதாக்கிருஷ்ணன் அவையை நடத்திக் கொண்டிருந்த போது அன்றையப் பிரதமர் நேரு அவர்கள் அன்றைய அமைச்சர் டி டி கே அவர்கள் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அவரைப் பார்த்து சொன்னாராம்,

“mr.nehru, go to your seat"

பவ்யமாய் எழுந்த நேரு அதைவிடவும் பவ்யமாய் சொன்னாராம்,

“yes sir, i am going sir"

நினைத்துப் பார்க்கவே இயலாதபடிக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. இன்றைக்கு இருப்பது போல் ஆறேழு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தனது சொந்தக் கட்சித் தலைமையும் சொல்கிறபோது உட்காரவும் சொல்கிறபோது எழுந்திரிக்கவும் ஒப்புதல் பெற்றபிறகே எதையும் பேச வேண்டிய நிர்ப்பந்தமும் அற்றவராக , இன்னும் சொல்லப் போனால் ஓராயிரம் விமர்சனங்கள் நமக்கு அவர் மீது இருந்த போதும்

அந்தக் கேள்விக்கு வயது 98

உலகில் மொத்தம் எத்தனை மொழிகள் உள்ளன என்று சரியாய்த் தெரியவில்லை. ஆனால்தமிழைத் தவிரவேறு எந்த மொழிக்காகவும் தேகம் எரித்து செத்ததற்கான சான்று இல்லை.

தன்னை அழித்தேனும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவன் தமிழன்.

“தமிழ் மணி, தமிழ் நம்பி” என்று  பெயரைக்கூட மொழியோடு சேர்த்தே அடையாளப்படுத்தியவன் தமிழன். இதையும் வேறு எந்த மொழியிலும் பார்க்க முடியாது.

ஆனாலும் போயிருக்க வேண்டிய உயரத்திற்கு இன்னும் தமிழ் போகமுடியவில்லையே அது ஏன்? இன்னமும் நீதிமன்றத்தில், மருந்துச்சீட்டில்,ஆலயங்களில், அலுவலகங்களில் முழுமையாய் தமிழ் இல்லையே அது ஏன்?

இத்தனை இடங்களில் தமிழ் இல்லாத போதும் தமிழ் இன்னும் மாறாத இளமையோடு ஜீவித்திருக்கிறதே அது எப்படி? 

காரணம் மிக எளிதானது. மெத்தப் படித்த அறிஞர்களோ, அர்ச்சகர்களோ, அலுவர்களோ அல்ல, காட்டில், மேட்டில், கழனியில் உழைத்த பாமரத் தமிழனும், தமிழ்ச்சியும் பேசிப் பேசியே பாதுகாத்து வைத்துள்ள மொழி தமிழ் மொழி.

மொழி வளர்ச்சி குறித்தும் மொழிச் சீர்திருத்தம் குறித்தும் கவலைப் படுகிற சான்றோர்களிடம்கூட மொழிப்பாதுகாப்பு குறித்த அக்கறையும் புரிதலும் இருப்பதாய்ப் படவில்லை.மொழி வளர்ச்சியும், மொழிச் சீர்திருத்தமும் மிக மிக அவசியம்தான். ஆனால் மொழியின் வளர்ச்சிக்கும், சீர்திருத்ததிற்கும் மொழி உயிரோடு இருப்பதென்பது அதைவிட மிகவும் அவசியம்.

ஆங்கிலத்தில் பேசினால் அவன் உயர்ந்தவன், அறிவாளி என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது.இன்றோ அதைவிட மோசமாய்ப் போய் ஆங்கிலம் பேசத் தெரியாதவனும் தமிழில் பேசுபவனும் தாழ்ந்தவன், முட்டாள் என்றே கொள்ளப் படுகிறது. நுனி நாக்கு ஆங்கிலம் என்பது அறிவின் அடையாளமாகவும், வேலைவாய்ப்பின் வாயிலாகவும் தவறாகக் கொள்ளப் படுகிற்து. 

லண்டனில் கிறுக்கன் ஆங்கிலத்தில்தான் உளறுகிறான் என்பதையும் பிச்சைக்காரன் ஆங்கிலத்தில்தான் பிச்சை கேட்கிறான் என்பதையும் எப்போதுதான் உணரப் போகிறோமோ தெரியவில்லை.

“தமிழ்த் தெரியாது என்பதே தனித் தகுதியாய்ப் போனது” என்பார் மேத்தா. எல்லாப் பாடங்களிலும் 95க்கு மேல்தான். தமிழ்தான் சுட்டுப் போட்டாலும் வரமாட்டேன் என்கிறது” என்று தங்கள் பிள்ளைகள் குறித்து வெளிப்படும் தமிழர்களின் பெருமிதம், உணர்வுள்ளவனை நிச்சயம் கொன்றே போடும்.

ஆங்கிலம் உலக மொழி. அதைக் கற்றுக் கொண்டால் சாளரம் திறக்கும். ஆகவே ஆங்கிலத்தை கூடுதலாக கற்று வைப்பது என்பது சரிதான். ஆனால் அதற்காக தமிழைப் புழங்குவதைத் தவிர்ப்பது என்கிற நிலைக்கு தமிழன் போனதுதான் சோகம்.

ஒரு பக்கம்  “தமிழில் எதுவுமே இல்லை” என்ற கூச்சல் கேட்கிறது.  இந்தக் கோஷ்டிக்கு மனப் பிறழ்வுக்கான மருத்துவம் பார்க்க வேண்டும். இன்னொரு பக்கம் “தமிழில் எல்லாம் இருக்கிறது” என்ற கூச்சல் காதுகளைக் கிழிக்கிறது. இந்தக் கூச்சல்தான் மிகவும் ஆபத்தானது. இதுதான் மொழியின் வளர்ச்சியய்த் தடுக்கும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு இதைத் தள்ளிவிட வேண்டும்.

தமிழில் ஏராளம் இருக்கிறது, தேவையும் இருக்கிறது என்கிற புரிதல்தான் இந்த நிமிடத்தின் அவசியமாயிருக்கிறது.

புழங்காத எதுவும் அழிந்து போகும் என்பதை தமிழன் முதலில் உணர வேண்டும். வீட்டில், பணியிடத்தி, வெளியில் என்று எந்த இடத்திலும் தமிழ் தெரிந்தவர்களோடு தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும். தாய் மொழியய்ப் புழங்கு மொழியாக்க வேண்டும்.

சீதயைக் காண அசோகவனம் போகும் போது அனுமனுக்கு ஒரு தடுமாற்றம் வருகிறது. உலகின் ஆக அழகானவளும் இனிமையானவளுமாகிய சீதையிடம் அவளைப் போலவே அழகான, இனிமையான மொழியில் பேசவேண்டும் என்று முடிவெடுக்கிறான். அப்படியான மொழி எது என்பதில் குழம்பி , தெளிந்து இறுதியாய் அவளிடம் தமிழில் பேசினான் என்கிற தகவல் கவிஞர் மீனவன் எழுதிய “ பண்டைத் தமிழரும் பரதவர் வாழ்க்கையும்” என்கிற நூலில் கிடைக்கிறது. அனுமனுக்குப் புரிந்த தமிழின் அழகும் இனிமையும் தமிழனுக்கு எப்போது புரியப் போகிறது என்பதுதான் கேள்வி.

பாரதியைக் காண வ.ரா புதுச்சேரி வருகிறார். அதுதான் அவர்களது முதல் சந்திப்பு. கதவைத் தட்டுகிறார். பாரதி வருகிறார். வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும். எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்ந்து போவார், தமக்கும் மரியாதையாக இருக்கும் என்று நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார். 

“உன் அளவுக்கு அந்த ஆள் இங்கிலீஷ் பேசறாண்டா பாலு.  நீயே பேசி அனுப்பு” என்று வ.ரா விற்கு கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக் கொண்டெடெ பாரதி உள்ளே போகிறார்.

“சாமி உங்ககிட்டதான் பேசனும்”

திரும்பி வந்த பாரதி வ.ரா விடம் கேட்டார்,

“இன்னும் எத்தனை நாளைக்குத் தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள் ?”

இது நடந்தது 1910 ஆம் ஆண்டு.

“ இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்?” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்.

பின் குறிப்பு

இந்தக் கட்டுரை எழுதி “தமிழ் ஓசை” யில் வந்து பிறகு “அந்தக் கேள்விக்கு வயது 98” என்று நூலாகத் தொகுக்கப் பட்டபோத் பாரதியின் அந்தக் கேள்விக்கு வயது 98.  அந்தக் கேள்வியின் இன்றைய வயது 103.


Wednesday, February 20, 2013

6B னா சும்மாவா


மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

“AHM சாரப் பார்க்கனும்.”

அன்பழகன் கை நீட்டிச் சுட்டவே என்னிடம் வந்தாள் அந்தக் குட்டி தேவதை.

“ என்னை ஏன் சார் கீழ உட்கார வச்சீங்க. பெஞ்ச் ல உக்கார வையுங்க சார்”

ஒன்றும் புரியாது போகவே திரு திருவென முழித்தேன்.

“ஏங்கிளாசு பாப்பாதான்” சேவியர் சொன்னான்.

இடது கையால் அவளை அணைத்தபடியே கேட்டேன்,

“ என்ன சாமி”

“ கீழ உட்கார முடியல. கால் வலிக்குது. பெஞ்ச் வேணும்”

இப்பொழுதும் ஒன்றும் புரியாது போகவே திறு திறு என்று விழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

விழித்தேன்.

“ வேற ஒன்னும் இல்ல சார், ரெண்டு புள்ளைங்கள கீழ உட்கார வச்சோம்ல. அதுல ஒன்னுதான் இது”

சேவியர் சொன்னான்.

புரிந்தது.

திருப்புத் தேர்வுக்காக அறை ஒதுக்கிய போது இரண்டு ஆறாம் வகுப்பு குழந்தைகளுக்காக ஒரு அறை ஒதுக்க வேண்டி வந்தது. சிறு பிள்ளைகள் தானே என்று இருக்கிற அறை ஒன்றிலேயே கீழே உட்கார வைத்தோம். வந்து விட்டாள்.

சிரித்துக் கொண்டே சொன்னேன்,

”சரிங்க கிழவி, போங்க வரேன்”

“ பெஞ்ச் எடுத்துட்டு வாங்க” சிரித்துக் கொண்டே ஓடி விட்டாள்.

“சரியாந்திர வெடிப் புள்ளடா சேவி”

“6B னா சும்மாவா?”

அவன் வகுப்புக் குழந்தை அவள்.

எல்லோரும் என்னை நக்கலடித்தார்கள். அவளிடம் நான் வறுபட்டதில் எல்லோருக்கும் ஏகத்துக்கும் மகிழ்ச்சி.

போய் ஒரு பெஞ்ச் போட்டு அவளை உட்கார வைத்தேன்.

சிரித்தாள்.

இப்ப சந்தோசமா கிழவிக்கு. அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வந்தேன். 

சிரித்தாள்.

பெரிய பெரிய பள்ளிகளெல்லாம் தங்கள் பள்ளிகள் உருவாக்கிய மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையில் பெருமை பட்டுக் கொள்வார்கள்.

உறுதியாய் சொல்லலாம்,

நாங்கள் கங்குகளை தயாரித்து சமூகத்திற்கு தருகிறோம்.

முதலில் சேவியருக்கு கை கொடுக்க வேண்டும். சரியாய் வளர்த்திருக்கிறான்.

Sunday, February 3, 2013

மிகையின் பெருக்குதான் ஆனாலும்....இந்த மாத தீரா நதியில் எனது “இவனுக்கு அப்போது மனு என்று பேர் ” நூல் விமர்சனம் வந்துள்ளது.


ப்ரியாராஜ் எழுதியிருக்கிறார். கொஞ்சம் என்று சொல்லக் கூடாது, நிறையவே மிகைதான். கொஞ்சம் கூச்சமாகக்கூட இருக்கிறது. மனிதர் பெருந்தன்மையால் பிசைந்து செய்யப் பட்டிருக்க வேண்டும்.அவர் சொல்கிற கருத்துக்களோடு எந்த அளவு விகிதாச்சாரத்தில் நூல் தகுதியில் பொருந்திப் போகிறது என்று தெரியவில்லை.

என்றாலும் முதல் முறையாக ஒரு வெகுஜன இலக்கிய இதழில் எனது படைப்பு விமர்சிக்கப் பட்டிருப்பதில் எவ்வளவுதான் மொத்தமான போர்வை கொண்டு மூடினாலும் எல்லாம் கடந்து மகிழ்ச்சி கசிவதைத் தடுக்க முடியவில்லை.

இந்தப் புள்ளி வரை ப்ரியாராஜ் யாரென்று தெரியவில்லை. தோழரது பெருந்தன்மைக்கும், தீராநதிக்கும் என் அன்பும் நன்றியும்.
இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...