லேபில்

Sunday, August 31, 2014

கவிதை 16

மரத்தின் நிழலைக் 
கடத்த முடியாத கோவத்தில் 
வெள்ளமாய் பெருத்து வந்து 
மரத்தைக் கடத்திப் போனது 
நதி

Saturday, August 30, 2014

குட்டிப் பதிவு 8

"அங்குலி மாலா " என்ற கன்னட திரைப்படத்தின் கதாசிரியர் பரகூர் ராமசந்திரப்பாவிற்கு 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த கதாசிரியருக்கான விருதினை கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
ஆனால் அது தனது சொந்த கதை அல்லவென்றும் வரலாற்றை கொஞ்சம் புனைவு படுத்தியதைத் தவிர தாம் எதுவும் செய்யவில்லை என்றும் நிறைய நண்பர்களிடமிருந்து இதற்கான தரவுகளைப் பெற்றுள்ளதாகவும் எனவே எழுதாத கதைக்கு விருது வாங்குவது நியாயமல்ல என்பதால் அதை நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தாங்களே எல்லா செலவுகளையும் செய்து அடுத்தவர் தருவதுபோல் பிம்பத்தை ஏற்படுத்தி விருதுகளை வாங்குவோர் மத்தியில் இவர் பளிச்சென மாறுபடுகிறார்.
வணங்கி வாழ்த்துகிறேன் ராமசந்திரப்பா சார்.

Friday, August 29, 2014

45

அபிட் எடுக்கத் தவறியதால்
ஆணிக்காயம்
பம்பரத்திற்கு

46

உறையைப்
பிரித்தேன்
நகை எதுவும்
முழுகவில்லை

47

மாலை நூத்தி ஐம்பது ரூபா

அறுபதே தேரல

ஜோப்பு,
கடுகு டப்பா, 
எல்லாம் குடைந்த பின்னும் 

கேட்டாச்சு பட்டவனிடமெல்லாம் 

நாளைக்கு தரானுங்களாம் 
நாரப் பயலுக 

போன மாசம் முப்பது ரூபாதான் மால 

தாயோளி பயப் புள்ள
நாளைக்கு செத்திருக்கலாம் 
இல்லாட்டி

போன மாசமே
போய் தொலஞ்சிருக்கலாம்  

Saturday, August 23, 2014

இதுவா கல்வி 2

ஒரு பள்ளியியில் மாலை 6,20 கு மேலும் வாசிக்கவே முடியாத அளவிற்கு இருட்டு விழுந்திருந்த நிலையிலும் மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருநதார்கள் என்றும் அதையெல்லாம் பார்க்கிறபோது தனது பள்ளி ஆசிரியர்களின் வேலை குறைவு என்றும் அது மாதிரி உழைப்புக்கு தயாராக வேண்டும் என்றும் இன்று நடந்த தனது பள்ளியின் ஆசிரியர் கூட்டத்தில் ஒரு தலைமை ஆசிரியர் பேசியிருக்கிறார்.

ஆசிரியர்கள் இன்னமும் கூடுதலான அர்ப்பணிப்போடும் அக்கறையோடும் பணியாற்ற வேண்டும் என்பதிலோ அதற்கு தயாராக இல்லாதவர்கள் தண்டிக்கப் படுவதிலோ நமக்கு மாற்றுக் கருத்தெதுவும் இல்லை.

ஆனால் வாசிக்கவே இயலாத அந்த நேரத்தில வாசிக்க வைப்பது என்பது எதில் சேர்த்தி?

அது நடிப்பு என்பதோடு குழந்தைகள்மீதான வன்முறை என்றே படுகிறது. இது மாதிரியான வன்முறைகளை செய்பவர்களையும் செய்யத் தூண்டுபவர்களையும் என்ன செய்யப்போகிறது கல்வித்துறை

Friday, August 22, 2014

செய்தி 1

17.08.2014 அன்று பொள்ளாச்சியில் நான் பேசியது குறித்து 18.08.2014 அன்று தி இந்து எழுதியது....





Thursday, August 21, 2014

இதுவா கல்வி?

பல கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களை மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்து எழுதி வாங்குவதில் ஆசிரியர்களை முடுக்கி விட்டு நூறு விழுக்காடு தேர்ச்சியை வாங்குங்கள் என்று கடுமையாக உத்திரவிடுவதாக அறிகிறோம்.

தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களிடம் வேறு எதுவும் செய்ய வேண்டாம் மனப்பாடம் செய்யச் செய்து எழுதி வாங்குங்கள் போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டனர்.

பேசாமல் செத்துப் போய்விடலாமா என்றிருக்கிறது

அழைப்பு3




இன்று மாலை பெரம்பலூர்மாவட்டமைய நூலகத்தில்பேசுகிறேன்.வாய்ப்புள்ள தோழர்கள் வாருங்கள்சந்திப்போம்



Wednesday, August 20, 2014

கவிதை 15

நனைய மறுத்தவனை
சபித்தபடி
நகர்நது போனது
மழை

Tuesday, August 19, 2014

கவிதை 14

வைப்பர் வேகத்தினும்
வேகமாய்
சலிக்கவே சலிக்காமல்
எழுதிக் கொண்டிருக்கிறது
மழை
எனக்கான கடிதத்தை

குட்டிப் பதிவு 7

அதிகாலை மூன்று மணி சுமாருக்கு பொள்ளாச்சி போய் சேர்ந்தேன். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் பேசவேண்டும்.
வந்ததும் வாசுதேவன் அய்யா வீட்டிற்கு போய்விடுமாறு அம்சப்பிரியா சொல்லியிருந்தார்.
இரண்டும் கெட்டான் நேரமாக இருந்ததால் தொந்தரவைத் தவிர்க்க விரும்பி லாட்ஜ் தேடினேன். கிடைக்காது போகவே வாசுதேவன் அய்யா வீடு போக ஆட்டோ எடுத்தேன்.
அய்யாவைத் தொடர்பு கொண்டேன். வடுகபாளையம் பூங்காவில் இறங்கி நிற்குமாறும், தான் வந்து அழைத்து போவதாகவும் சொன்னார்
விவரத்தை ஆட்டோ தோழரிம் சொன்னேன்.
பூங்காவில் இறங்கியதும் பணம் கொடுத்தேன். அவரும் இறங்கி என்னோடு நின்று கொண்டார்.
ஊருக்கு புதிதாய் தெரிவதாலும் இரண்டுங் கெட்டான் நேரமாக இருப்பதாலும் அய்யா வரும் வரை இருப்பதாவும் ஒருக்கால் முகவரி தவறெனில் விசாரித்து அவர் வீட்டில் கொண்டுவந்து விடுவதாகவும் சொன்னவர் அய்யா வரும்வரை இருந்துதான் சென்றார்.
ஆட்டோக்கள் வெறும் பெட்ரோலால் மட்டும் ஓடவில்லை

Monday, August 18, 2014

கவிதை 13

நனைதலுக்கான
அவர்களது
தவம்
ஆசீர்வதிக்கப் பட்டபோது
நனைந்தன
அவர்களது குடைகள்

Sunday, August 17, 2014

குட்டிப் பதிவு 6

முன்பு மாண்பமை சிதம்பரம் அவர்கள் பல ஆண்டுகளாக சொல்லி வந்த அதே வளர்ச்சி அளவு வாய்ப்பாட்டை இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு மாண்பமை ஜெட்லி அவர்களும் இன்னும் கொஞ்சம் உரக்கவே சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்.
வங்கத்து தனி மனிதனின் வருமானத்தைவிட வெறும் ஐம்பது விழுக்காடு மட்டுமே உயர்ந்து நின்ற இந்தியத் தனி மனிதனின் வருமானம் தாராள மயமும் உலக மயமும் வந்து இருபதே ஆண்டுகளில் நூறு சதம் உயர்ந்து நிற்கிறது என்பதும் அவர் அடுக்கக் கூடிய மேன்மைகளுள் ஒன்றாக இருக்கவும் கூடும்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மனிதனின் சராசரி ஆயுளானது வங்கத்து மனிதனின் சராசரி வயதைவிட மூன்று நான்கு வருடங்கள் அதிகம். இப்போது இந்தப் பெருமகனார்கள் குறிப்பிடும் வளர்ச்சிக்குப் பின் வங்கத்து மனிதனைவிட இந்திய மனிதனின் சராசரி ஆயுள் நான்கு குறைந்திருக்கிறது என்கிறார் அமர்த்தியா சென்.
இந்திய தனி மனித ஆயுளில் ஏழு ஆண்டுகளை கபளீகரம் செய்த வளர்ச்சி என்ன வளர்ச்சி?

Saturday, August 16, 2014

தோழர் ஜோதி



தோழர் ஜோதிமணி.
நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்.
என் சொந்தக் கிராமம் இவர் நின்ற தொகுதியில் . ஆக எனது தொகுதி வேட்பாளர்.
கொஞ்சம் கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பதுகூட தவறு. தன்னை கவனிக்க வைக்கிறார்.
ஈழம், மூன்றுபேர் தூக்கு குறித்த நிலை , பொருளாதாரம் , பொதுத்துறை விற்பனை போன்றவற்றில் இவரோடு முரட்டுத்தனமாக முரண்படுபவன்.
நிறைய முதல்வர்களோடும் கட்சியின் தலைமையோடும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பினை பெற்றிருந்தபோதும் இன்னும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர். இதில் இன்னொரு விஷயம், இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் பொதுப் போக்குவரத்தைத் தாண்டி வர இயலாத பொருளாதாரம். இதை கௌரவமாகக் கருதும் பேசும் நேர்மை. உழைத்து சாப்பிடவேண்டும் என்று கருதுகிற வெகுஜன அரசியல்வாதி. 
மட்டுமல்ல
அவரது வருமானத்திற்கு வியர்வைக்கும் சரியான விகிதத்தில் பொருத்தமிருப்பதாக அவரை எதிர்த்து தேர்தல் வேலைபார்த்த என் தம்பி சொல்கிறான். ஒங்க கட்சியில இருக்கவேண்டிய பொண்ணு காங்கிரசில எப்படி இருக்குன்னு தெரியல என்கிறான்.
.அவரது எளிமையும், அப்பழுக்கின்மையும், மக்களுக்குழைத்தலையும் காசு பண்ணத் தெரியாத இளிச்சவாய்த் தனத்தையும் பார்த்து அவன் இப்படி சொல்லியிருக்கக் கூடும்.
நான் பார்த்தவரை கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முயற்சிக்கிறார்.
வன்மமான விமர்சனங்களையும் புன்னகையோடும் மென்மையாகவும் எடுத்து வைக்கிறார்
இவையும் இவரது எழுத்தும் என்னை மரியாதை கொள்ள வைத்தன
மாண்பமை தம்பிதுரை அவர்கள் மக்களவை துணை சபாநாயகராக பொறுப்பேற்றவுடன் வாழ்த்து தெரிவித்திருந்தார்
இந்தச் செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் திரு தம்பித்துரை அவர்களை எதிர்த்து தேர்தலில் நின்ற வேட்பாளர் இவர்.
இது இந்திய அரசியலில் அபூர்வம்
வாழ்த்துக்கள் ஜோதிமணி

பின்குறிப்பு: இவரது பிறந்த நாளன்று வாழ்த்திக் கொண்டிருந்தபோது தாளாளர் வந்துவிட்டார். பேசிட்டு வாங்க என்றபோதும் அவருடனான அழைப்பைத் துண்டித்துவிட்டு போக வேண்டிய அவசரம். பிறகு அவர் பிசியாகிவிட்டார். அவரது நேரச் சிக்கலை நான் உணர்ந்து வைத்திருப்பதைப் போலவே எனதையும் புரிந்து வைத்திருக்கிறார்.

இன்னொன்று ஜோதி,

உங்கள் கொங்கு மொழியும் குரலும் அடிக்கடி தொந்தரவு செய்ய வைக்கும்

அழைப்பு 1



17.08 2014 அன்று பொள்ளாச்சியில் பேசுகிறேன். வாய்ப்புள்ள பொள்ளாச்சி தோழர்கள் வாருங்கள். சந்திப்போம்

Friday, August 15, 2014

குட்டிப்பதிவு 5

முற்றாய் கிடைத்து விட்டதாகவோ இனி போராடுவதற்கென்று எதுவுமில்லையென்றோ நினைக்கவில்லை.

அரசியல் தரகர்களிடமிருந்து,
ஆதிக்க சாதிக்காரர்களிமிருந்து,
மதவாதிகளிடமிருந்து,
கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து,
இன்னபிற சமூக நச்சுகளிடமிருந்து
விடுலைக்கான போரை நடத்தியே ஆகவேண்டும்தான்.

ஆனாலும் இந்த அளவு எங்களது சுதந்திரத்திற்கு நீங்கள் தந்த விலை மிக அதிகம்

பெயரற்று செத்தெமை சுதந்திரப் படுத்திய உங்களுக்கென் வீர வணக்க

Thursday, August 14, 2014

உங்களுக்கு ...?

இன்றைய இடைநிலைக் கல்வித் திட்டம் குறித்து நாம் அவசியம் கவலைப் பட்டே ஆக வேண்டும் என்பதை நாள்தோறும் ஏதாவது ஒன்று நியாயப் படுத்திக் கொண்டே இருக்கிறது.

அப்படி ஒரு சம்பவம் இன்றும் நிகழ்ந்தது.

இன்று பதினோராம் சி வகுப்பு நோட்டு திருத்திக் கொண்டிருந்தேன். ஒரு குழந்தை அளவிற்கு அதிகமான எழுத்துப் பிழைகளோடு எழுதியிருக்கவே அவளை அழைத்துப் பேசலாம் என்று தோன்றியது. யாராயிருக்கும் என்பதை அறிய முதல் பக்கத்தைத் திருப்பினேன்.

priyaha என்றிருந்தது.

இன்றைக்கு அந்த வகுப்பில் பாடமெடுத்து முடிந்ததும் அந்த நோட்டைக் காட்டி யாருடைய நோட்டு இது என்றேன்.

ஒரு குழந்தை எழுந்து நின்றாள். அழைத்து நோட்டைக் கொடுத்துவிட்டு ஆசிரியர் அறையில் என்னை வந்து பார்க்கச் சொன்னேன்.

வந்தாள்.

”பெயரென்னப்பா?”

”பிரியங்கா”

“நோட்டில் என்ன எழுதியிருக்க பாரு” என்றதும் பார்த்துட்டு சரியாகவே எழுதியிருப்பதாகச் சொன்னாள்.

சரி உன் பெயருக்கு ஸ்பெல்லிங் சொல்லு என்றால் piriyaha என்கிறாள்.

”இப்படித்தான் எப்பவும் எழுதுவியா?”

“ ஆமாம் சார்”

பயந்து போனவனாய் அலுவலகம் சென்று அவளது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை எடுத்துப் பார்த்தால் piriyanga என்றிருந்தது.

அவளது பெயரை அவளுக்கு எழுதச் சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

அவள் இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் 50 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள்.

மூன்றாம் தரத்தில் பேசுபவரிடம் இது போனால் “ பாரு பேரே எழுதத் தெரியவில்லை. இதல்லாம் பதினொன்னாங்கிளாசு படிக்குது. வெளங்குன மாதிரிதான்” என்று சொல்லக் கூடும்.

பெயரையே எழுதக் கற்றுக் கொள்ளாமல் கூட ஒரு குழந்தையால் பத்தாம் வகுப்பைக் கடந்து வந்துவிட முடியும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையின் தகப்பன் என்கிற முறையில் இந்தக் கல்வித் திட்டத்தில் எங்கோ குறை இருக்கிறது என்று நினைக்கிறேன்.

என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது ரிசல்ட் வேண்டும் என்று பிழியும் இந்தக் கல்வி அமைப்பு பெயர் எழுதத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை தேர்ச்சி பெறச் செய்துவிட வேண்டும் என்று ஆசிரியரை உந்தித் தள்ளுகிறது.

இந்த அணுகுமுறை மிக மோசமான பின் விளைவுகளை, ஒரு பலவீனமான சமூகத்தைக் கட்டமைக்கும் என்பதால் இது பற்றி எனக்கு கவலையாயிருக்கிறது.

உங்களுக்கு

Tuesday, August 12, 2014

காக்கை ---- இரண்டு கோரிக்கைகள்

                                                                         1

காக்கைச் சிறகினிலே வாசகர்களிடம் உரிமையோடு ஒரு வேண்டுகோளை வைப்பது அவசியம்.

தோழர்களே,

இந்த இதழ் எங்களது தவத்தின் விளைவு.

ஒவ்வொரு மாதக் கடைசியிலும் மரணித்து அடுத்த மாதம் 5 ஆம் தேதி வாக்கில் உயிர்த்தெழுகிறோம். உயிர்த்தெழுவதற்காகவே மரணிக்கிறோம்.

காக்கை நீண்டு பயணிக்க நல்ல படைப்புகளும் சந்தாவும் அவசியம்.

ஒவ்வொருவரும் தத்தமது மாவட்டத்திலுள்ள படைப்பாளிகளை காக்கைக்கும், காக்கையை அவர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்.

உங்கள் மாவட்டத்திலிருந்து ஒரு பத்து சந்தாக்களையாவது சேகரித்து உதவுங்கள்.

மாவட்டம் மாவட்டமாக வாசகர் கூட்டம் நடத்த ஆசை.

எங்கிருந்து தொடங்கலாம்?


                                                                            2

தோழர்களே,

நேற்று “காக்கைச் சிறகினிலே” இதழுக்காக அணுகியிருந்தேன்.நிறைய நண்பர்கள் விளக்கம் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கான விவரங்கள் கீழே ஒவ்வொன்றாய்...

அதற்கிடையில் சில இனிப்பான செய்திகள். வாசகர் கூட்டங்களை நடத்த இயலுமா என்று கேட்டிருந்தேன்.

ஏற்கனவே என்னிடம் ஆகஸ்ட் 17 நாளினை வாங்கியிருந்த இரா. பூபாலன் அதை காக்கை அறிமுகத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார். அவருக்கும் அம்சப் பிரியாவிற்கும் நன்றி.

தோழர் Mani Rathnam திருநெல்வேலியில் ஏற்பாடு செய்ய முயல்வதாக சொல்லியுள்ளார். இயலுமெனில் திருநெல்வேலி தோழர்கள் அவரைத் தொடர்பு கொள்ளவும். அவரது தொடர்பெண் 9788096216

தோழர் Madurai Saravanan மதுரையில் நடத்தலாம் என்று சொல்லியுள்ளார்

பெரம்பலூர் குறித்து தோழர் ப. செல்வகுமார் என்ன சொல்கிறார் என்று கேட்க வேண்டும்.

இவை எல்லாம் சாத்தியப் பட்டால் காக்கைச் சிறகினிலே விரிந்து பறக்கும்.

எல்லா ஊர்களிலும் பாரதி புத்தகாலயம் மற்றும் என்.சி.பி.ஹெச் இல் கிடைக்கும்.

ஆண்டு சந்தா 275 ரூபாய்

மேலதிக விவரங்களுக்கு தோழர் முத்தையாவைத் தொடர்பு கொள்ளுங்கள்.அவரது எண் 9841457503

முகவரி

காக்கை
288, டசக்டர் நடேசன் சாலை
திருவல்லிக்கேணி
சென்னை 600005

எதற்கும் எனது எண் 9842459759

Monday, August 11, 2014

குட்டிப் பதிவு 4

நான் வழக்கமாக பயணிக்கும் பேருந்து மழையில் குளித்து வந்தது. அந்தப் பக்கம் நல்ல மழையா என்ற என் கேள்விக்கு சங்கரா புரத்திலிருந்து இருந்து கிருஷ்ணாபுரம் வரைக்கும் சரி மழை என்றார் நடத்துனர்.

ம்ம்ம்... எங்கெங்கையோ பெய்யுது. எங்க ஊருலதான் பெய்ய மாட்டேங்குது என்றவனிடம் மழை எங்க பேஞ்சாலும் சந்தோஷப் படனும்பா. மழைனாலே சந்தோஷம்னுதான் அர்த்தம் என்றார் பக்கத்தில் அமர்ந்திருந்த கிராமத்து பெரியவர்.

ஆஹா, நானும் வழிமொழிகிறேன்,

மழைனாலே சந்தோஷம்னுதான் அர்த்தம்.

Sunday, August 10, 2014

கவிதை 12

கொத்தாமல் போனதால் குடும்பத்திற்காகாதாம்
கொத்த இறைஞ்சிடத் தேடிக் கொண்டிருக்கிறேன்
நேற்றென் கனவில் வந்தப் பாம்பை

Saturday, August 9, 2014

குட்டிப் பதிவு 3

சராசரியாக வருடத்திற்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகவும், அவர்களில் பெரும்பான்மையோர் பெண் குழந்தைகள் என்றும் மத்திய அரசு கூறியுள்ளதாக இன்றைய BETAவிகடன் செய்திகள் சொல்கிறது.

இப்பிரச்னையில் அரசு அக்கறையற்று இருப்பதாக கடுமையாக சாடியதோடு, காணாமல் போகும் குழந்தைகள் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை என்றும் உச்சநீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தி சொல்கிறது.

என்ன சொல்லுங்கள், பல நேரங்களில் உச்சநீதி மன்றம் நல்ல எதிர்க் கட்சியாக செயல்படுகிறது. அது வீசிய ஒரு கேள்வியின் சூடு நெஞ்சைக் கிழிக்கிறது

”காணாமல் போகும் குழந்தைகள் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை”

Friday, August 8, 2014

அவனுக்கே முந்திப் பிறந்தவர்கள்....

மஹாராஸ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ளது மலின் என்ற பழங்குடிகள் வாழும் கிராமம். இன்று அது உலகெங்கும் பரபரப்பாய் பேசப்படுவதறது. அதற்கான காரணம் மிகவும் சோகமானதும் வலியினைத் தருவதுமாகும்.

சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்த கிராமத்தில் வாழ்ந்த ஏறத்தாழ 250 பழங்குடி இன மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த நிலச்சரிவு இயற்கையாய் ஏற்பட்டது அல்ல என்றும், மாறாக சில மனிதர்களால் உருவாக்கப் பட்ட பேரழிவு என்றும் என்றும் தெரிய வருவதாக மார்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் அறிக்கை கூறுவதாக இன்றைய தீக்கதிர் ( 02.08.2014) சொல்கிறது.

மலினுக்கு அருகில் உள்ள திண்டா அணையிலிருந்து வெள்ளக் காலங்களில் நீர் திறந்து விடப் பட்டபோது நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் சேதம் இந்த அளவிற்கு இல்லை. ஆனால் இப்படி நிகழக் கூடும் என்ற எச்சரிக்கை மாநில மற்றும் மத்திய அரசுக்கு தரப் பட்டிருக்கிறது.

இங்கு பழங்குடிகளுக்கு நல்லது செய்வதாக சொல்லிக் கொண்டு
ஜே பி சி இயந்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதுதான் பேரழிவிற்கான பெருங்காரணமாக சொல்லப்படுகிறது.

பழங்குடிகளை எப்படியேனும் அப்புறப் படுத்திவிட வேண்டும் எனும் நோக்கமே என்றும் தெரிகிறது. உள்ளூர் அரசியல் வாதிகள் , இயந்திர உரிமையாளர்கள் மற்ரும் பேராசை பிடித்த அதிகாரிகள் இணைந்து இதை செய்திருக்கக் கூடும் என்றும் தீக்கதிர் சந்தேகப் படுகிறது.

அந்த சந்தேகத்தில் நியாயம் இருப்பதாகவே படுவதால் தீவிர விசாரனையும் நிரூபனமானால் கடுந்தண்டனையும் உரியவர்களுக்கு போய் சேரவேண்டும்.

கடவுள் என்றொருவன் இருந்தால் அவனுக்கே முந்திப் பிறந்தவர்கள் பழங்குடிகள்.

Thursday, August 7, 2014

கவிதை 11

நாய் வாலை நிமிர்த்த முடியாதென்ற
நாய் பாஷை புரியாதவனுக்கு
எப்படி புரியும்
எதற்கு நிமிர்த்தனுமென்ற 
நாயின் எதிர்க் குரல்

Wednesday, August 6, 2014

வன்கிர்க்

ஹிரோஷிமாவில் குண்டு வீசப்பட்ட தினம் இன்று








தியோடர் வன்கிர்க் தனது 93 வது வயதில் சென்ற வாரம் காலமானார்.

அது சரி, யார் இந்த தியோடர் வன்கிர்க்?

இரண்டாம் உலகப் போரின் நாயகன் என்று தியோடர் வன்கிர்க்கை அழைப்பார்கள். நெதர்லாந்தில் பிறந்த அவர் பிறகு அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். அமெரிக்க ராணுவத்தில் விமானியாகப் பொறுப்பேற்றார்.

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க அரசு அவரை “ எனோலா கே “ (enola gay ) என்ற இருபத்தி நான்குபேர் கொண்ட விமானக் குழுவில் ஒருவராக நியமித்தது.

”லிட்டில் பாய்” என்ற அந்தக் கொடூரமான அணுகுண்டை ஹிரோஷிமாவில் அவர்தான் வீசினார். அதன் விளைவாக இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

அவர்தான் இப்போது மரணமடைந்திருக்கிறார்.

சற்றேரக் குறைய இரண்டு லட்சத்து இருபதாயிரம் பேரை பழிவாங்கிய, இன்றுவரை சபிக்கப் பட்டப் பகுதியாகவே அதை மாற்றிப் போட்டதைப் பற்றி அவர் எள்ளளவும் வருத்தப் பட்டதில்லை. மாறாக இரண்டாம் உலகப் போர் முடிவு பெற தான் ஒரு கருவியாக இருந்ததற்காக மகிழ்ச்சியோடே இருந்தார் என்று அவரது மகன் தோம் வன்கிர்க் தெரிவித்ததாக 31.07. 2014 ஜனசக்தி சொல்கிறது.

அவர் அணுகுண்டு வீசியதை விடவும் அதை அவர் நியாயப் படுத்திப் பேசியது கொடூரத்தின் உச்சம்

Tuesday, August 5, 2014

நிலைத் தகவல் 62

தில்லியைச் சேர்ந்த நடத்துனர் ஒருவர் 15 பைசாவிற்கு தரவேண்டிய பயணச்சீட்டிற்கு பதிலாக 10 பைசா பயணச்சிட்டு கொடுத்தமைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டு அந்த வழக்கு ஏறத்தாழ 40 வருடங்களுக்கும் மேல் நடந்துள்ளதாக போன வாரம் பத்திரிக்கைகளில் பார்க்க முடிந்தது.

அரசுக்கு 5 பைசா இழப்பு ஏற்படுத்திருக்கிறார் எனவே ஓய்வூதியப் பலன்கள்கூட அவருக்கு வழங்க இயலாது என்று தில்லி அரசு போக்குவரத்துக் கழகம் சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.

மாண்பமை அருண் ஜேட்லியோ தினம் தினம் 200 ரூபாய் சம்பாரிக்கும் செல்வந்தன் மானிய விலையில் சமையல் எரிவாயு வாங்குவது எப்படி சரியாகும். அரசுக்கு இழப்பல்லவா? என்கிறார்.

இப்படி மானிய விலையில் எரிவாயு வாங்குவது தேசத் துரோகமென்றும். அதை விடுத்து தேசப் பற்றாளர்களாக மாறுமாறும் சித்தாள்களுக்கும் தள்ளு வண்டி வியாபாரிகளுக்கும் எங்கிருந்தோ அசிரீரி குறுஞ்செய்திகள் வருகின்றன.

தேவையற்ற செலவுகளில் இருந்து அரசைக் காப்பாற்றும் தேச பக்தர்களைப் பார்த்து நெசத்துக்குமே புல்லரிக்கத்தான் செய்கிறது.

2007 ஆம் ஆண்டு தொலை தூரத்தில் உள்ள 27 மாநிலங்களைச் சார்ந்த 500 மாவட்டங்களுக்கு தொலை தொடர்பு இணைப்பு கொடுக்கும் திட்டம் தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டது.

இதில் நடந்த முறை கேடுகள் கண்டு பிடிக்கப் பட்டு அந்த 14 நிறுவனங்களுக்கும் 600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது. 600 கோடியிலிருந்து அபராதமானது 5 கோடிக்கு இறங்கிவிட்டதாகவும் இந்த வகையில் அரசுக்கு 595 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய தலைமை கணக்காயர் (சிஏஜி) கூறியுள்ளார் என்ற தகவல் இன்றைய (03.08.2014) தீக்கதிரில் கிடைக்கிறது.

மாண்பமை ஜேட்லி அவர்களுக்கு இந்தத் தகவலை ஃபார்வர்ட் செய்கிறேன்.

இது கண்டுபிடிக்கப் பட்டால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் பிரச்சினை.

ஆனாலும் செய்யமாட்டார். காரணம் அந்த நிறுவனங்கள் காங்கிரசுக்கும் வேண்டியவர்கள், இவர்களுக்கும் வேண்டியவர்கள்.

Monday, August 4, 2014

கவிதை 10

மௌனப் படுத்தி சட்டைப் பையில் போடப்பட்ட
அவரது எத்தனையோ அழைப்புகளைப் போலவே
இன்றைக்கும் செய்திருக்கலாம்
எடுத்ததால் 
ராமசாமிக்கு எழுபத்தியெட்டு பைசாவும்
எனக்கு ராமசாமியும் இழப்பு

Sunday, August 3, 2014

சிசுக்கொலை போய் கருக்கொலை

முற்றிலும் ஒழிந்த பாடில்லை என்றாலும் தற்பொழுது சிசுக் கொலைகள் பெருமளவு குறைந்திருக்கின்றன.

ஆனால் பெண் கருக்கொலைகள் வளர்ந்திருக்கின்றன என்கிற அதிர்ச்சி தரும் தகவலை ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி சங்கத்தின் இயக்குனர் ஜீவா அவர்கள் வேதனையோடு சொல்கிறார்.

தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ 550 ஸ்கேன் செண்டர்கள் பெண் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருப்பதாகவும் அது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். 

பெண் கருக்கொலை என்ன விலை கொடுத்தேனும் தடை செய்யப்பட வேண்டியது.

காவல்துறையும் அரசும் கவனம் குவிக்க வேண்டும்.

Saturday, August 2, 2014

குட்டிப் பதிவு 2

வீட்டில் ஒரு செல் இருக்கும். அது முழுக்க முழுக்க கீர்த்தியின் கட்டுப்பாட்டில். விக்டோரியா பெயரை அம்மா என்றும் கிஷோர் பெயரை அண்ணன் என்றும் தீபா பெயரை அத்தை என்றும் என் பெயரை எட்வின் லூசு என்றும் பதிந்து வைத்திருக்கிறாள்

Friday, August 1, 2014

உசிரையாவது....

முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்குமேயான அரசு தங்களது அரசு என்பதை நி்ருவ இவர்களுக்கு 100 நாட்கள்கூட தேவைப்படவில்லை.

ஏழைகளும் நடுத்தர மக்களும் பயணிக்கும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஒன்று எடுக்கப் பட்டு அதற்குப் பதிலாக மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்று இணைக்கப் படும் என்று ரயில்வே திட்டமிட்டுள்ளதாக இன்றைய தினகரன் செய்தி சொல்கிறது

பணக்காரர்கள் காத்துக் கிடக்க ஏழைகளுக்கு ரயில் பயணம் ஒரு கேடா? நடந்து போங்கள் பித்துக்குளிகளா என்றிருக்கிறார்கள்.

ஏழைகளுக்கான ரயில் பெட்டி இன்று....

மருத்துவம் நாளை....

கல்வி நாளை மறுநாள்....

எல்லாம் ஒவ்வொன்றாய் பிடுங்கப் படும்....

அரசைப் பற்றி விமர்சிக்க ஆறு மாதமேனும் அவகாசம் கொடுங்கள் என்றவர்களிடம் ஒரு கேள்வி,

ஆறுமாதம் கழித்து உங்களது அரசை விமர்சிக்கவேனும் அதுவரை ஏழைகளின் உயிரையாவது விட்டு வைத்திருப்பீர்களா?

2023 http://www.eraaedwin.com/search/label/2023