22 ஆம் தேதி 11 மணிக்கு ஒரு அழைப்பு,
” எலெக்ஷன் கமிஷனிலிருந்து பேசறோம். நீங்க எட்வின் தானே?”
“ஆமாம்”
“ சரி வச்சுடுங்க”
பிறகு 12 மணி வாக்கில் அங்கிருந்து வந்த இன்னொமொரு அழைப்பு அடுத்த நாள் 9 மணிக்கே வந்து அப்பாயின்மெண்ட் ஆர்டெர் வாங்கி கொண்டு பூத்திற்கு செல்ல ஆணையிட்டது.
அன்று இரவு 8 மணிக்கு வந்த அழைப்பு அடுத்த நாள் சரியாக 7 மணிக்கெல்லாம் வந்து உத்தரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தவறினால் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் கனிவாக மிரட்டியது.
வீட்டை விட்டு 4 மணிக்கு கிழம்பி ஏழுக்கெல்லாம் போனால் ஏழரைக்குப் பிறகே அவர்கள் ஒவ்வொருவராய் வந்தார்கள். உத்தரவை 11 மணிக்கு கொடுத்தவர்கள் உடனே வாக்குச் சாவடிக்கு போய் காத்திருக்க வேண்டும் என்றும் வாக்களிக்கும் கருவிகளைக் கொடுக்க உடனே வருவார்கள் என்றும் அப்போது இல்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் வரும் என்றும் மிரட்டி அனுப்பினார்கள்.
போய் காத்திருந்தால் ஆறு மணி வாக்கில் நிதானமாக வந்தார்கள்.
முதல் நாள் மதியம் சாப்பிட்டது. 24 ஆம் தேதி இரவு 7 மணிக்குத்தான் சாப்பிட முடிந்தது. இடையில் ஒரே ஒரு கப் தேநீர்தான். இதுகூட பல இடங்களில் இல்லை என்பதுதான் செய்தி. ஏற்கனவே சாப்பாட்டிற்கு முன்னர், பின்னர் என்பதெல்லாம் தாண்டி சாப்பிடும் போது ஒரு மாத்திரை சாப்பிடவேண்டிய ஆள் நான்.
இவை போக வாக்கெடுப்பை அமர்ந்து நடத்த நாற்காலிகளைத் தேடிய ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
ஏற்கனவே தேர்தல் வகுப்புகள் எடுத்து மிக நேர்த்தியாக ஆசிரியர்களை அசிங்கப் படுத்தினார்கள்.
தேர்தல் கமிஷனே இப்படித்தான் வழிகாட்டியதா? இல்லை வருவாய்த்துறை வரம்பு மீறினார்களா தெரியாது.
தேர்தல் கமிஷன் அவ்வப்போது ஆசிரியர்களை கலந்தாலோசித்தாலே தேர்தல்களை இதைவிடச் சிறப்பாக நடத்த முடியும்.