Saturday, April 30, 2016

தேசத்தின் வளங்களை அழித்தொழிப்பது என்பது தேசவிரோதமல்லவா?

மதச்சார்பற்ற” என்பதை அனைத்து மதங்களையும் சார்ந்திருத்தல் என்றே பெரும்பாலும் தவறாகக் கொள்கிறோம். உண்மையில் மதச்சார்பற்ற என்பதன் பொருள் எந்த மத்த்தையும் சாராதிருத்தல் என்பதே ஆகும். இப்படிக் கொள்வதால் என்ன குடியா முழுகிவிடப் போகிறது என்று கேட்கிறவர்களும் எனது நட்பு வட்டத்தில் உண்டு. குடிதான் முழுகிப்போகும் என்பதே எப்போதும் அவர்களுக்கான நமது பதிலாக இருந்திருக்கிறது. காரணம் “எல்லா மதங்களையும் சார்ந்திருத்தல்” என்பது மதவாதிகளின் முகமூடியாக இருக்கிறது. எல்லா மதங்களையும் சமமாகப் பாவித்தல் என்பதற்கும் எல்லா மதங்களையும் சார்ந்திருத்தல் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதிலும் குறிப்பாக ஒரு அரசாங்கம் எந்த ஒரு மதத்திலிருந்தும் தள்ளியே தன்னை கட்டமைத்துக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. அப்படி இல்லாதபோது இதுமாதிரியான கார்பரேட் மதவாதிகள் சகல மதங்களிலிருந்தும் தோன்றவே செய்வார்கள்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்பது மத்திய அரசையும் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பு. அது பிறப்பிக்கும் ஒரு உத்தரவை மத்திய அரசே மீறமுடியாது. அப்படி எதாவது செய்யவேண்டிய நிலை அரசுக்கு வந்தாலும் அது உச்சநீதி மன்றத்தை நாடிதான் அதை செய்ய முடியும். அதற்குமிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அத்தகைய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ‘வாழும் கலை’ என்ற அமைப்பின் நிறுவனரான கார்ப்பரேட் சாமியார் ரவி சங்கருக்கு யமுனை நதியை மாசுபடுத்தி பாழடித்தமைக்காக ஐந்துகோடி ரூபாய் அபராதம் விதிக்கிறது. “ஒரு பைசா கூட அபராதம் கட்டமுடியாது. என்ன முடியுமோ செய்துகொள்ளட்டும்” என்று சவால் விடுகிறார். ஒரு சாமியாருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது. யார் இவர்?

ரவிசங்கர் என்ற ஒரு சாமியார் ”வாழும் கலை” என்ற தனது இயக்கத்தின் மூலம் பிரபலமடைகிறார். அவருக்கு அமைச்சர்கள் பிரதமர் உள்ளிட்ட முக்கியமானவர்களின் ஆதரவு கிட்டுகிறது. ’வாழும் கலை” என்ற இவரது இயக்கத்தை நாடு முழுவதும் கிளைகளை அமைத்து கிராமம் கிராமமாக கட்டமைக்கிறார். மேற்சொன்ன பிரபலங்களின் ஆதரவும் மத்திய மற்றும் பல மாநில அரசுகளின் ஆதரவும் ஊடகங்களின் பெருவெளிச்சப் பாய்ச்சலும் அவரே நினைத்துப் பார்த்திராத ஒரு உசரத்திற்கு அவரை கொண்டு போகிறது.

சகல வியாதிகளுக்கும் தனது ஒரே லேகியம் நிவாரணமளிக்கும் என்று தெரு ஓரத்தில் கடை விரித்து வியாபாரம் செய்யும் லேகிய வியாபாரி மாதிரி சகல நோய்களையும் யோகாவே தீர்க்கும் என்று கடை கட்டுகிறார். அமோகமாய் போகிறது. தலைவர்கள், வியாபாரிகள், ஊடகக்காரர்கள் உள்ளிட்டு ‘ஆமாம், ஆமாம்’ என்கிறார்கள்.

இவர்மீது அவ்வப்போது பல தரப்பில் இருந்தும் புகார்களும் வந்தபடியேதான் இருக்கிறது. அவ்வப்போது இவர்மீது வழக்குகளும் பதியப்பட்டப்படியேதான் இருக்கிறது. ஆனாலும் எதுகுறித்தும் கவலைப்படாதவராகவே இவர் வளர்கிறார். அதுவும் இவருக்கு மிக வேண்டிய ஆட்சி அமைந்தபிறகு இவருக்கு எந்த அச்சுறுத்தலும் பெரிதாகப் படவில்லை.

இவ்வளவு பலமுள்ள ஒருவரால் சுருங்கி சும்மா இருக்க முடியாது அல்லவா. பொதுவாகவே அவரவர் இருத்தலை அவ்வப்போது வெளிக்காட்டிக்கொள்ள எதையாது செய்வோமல்லவா. அதுமாதிரி ஒரு ஆசை இவருக்கும் வருகிறது. அவரவர் தகுதிக்குத் தக்கவாறு வெளிப்படுத்துதலின் அளவும் செலவும் கூடும் குறையுமல்லவா. இவர் தனது இருத்தலை வெளிப்படுத்தவும் விஸ்தீரிக்கவும் தில்லியில் யமுனை ஆற்றங்கரையில் “உலக கலாச்சாரத் திருவிழா” நடத்துகிறார். உலகம் முழுவதிலுமிருந்து பல லட்சம் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் ரவி கூறுகிறார்.

விளைநிலங்களும் பழத்தோட்டங்களும் அழிக்கப் படுகின்றன. யமுனை நதியில் கொட்டப்படும் என்சைம் உயிரிகளையும் தாவரங்களையும் அழித்துப் போடுகிறது. விவசாயிகள் நீதி கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகுகிறார்கள். உச்சநீதிமன்றம் அவர்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகுமாறு பணிக்கிறது. விவசாயிகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகுகிறார்கள். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சாமியார் ரவி அவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் அபராதம் விதிக்கிறது. இவரால் நிகழ்த்தப்பட்ட இயற்கை அழித்தை தடுத்து கட்டுப் படுத்தாத காரணத்திற்காக தில்லி வளர்ச்சி குழுமத்திற்கு ஐந்து லட்சமும், தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவிற்கு ஒரு லட்சமும் அபராதம் விதிக்கிறது.

இந்தத் தீர்ப்பை பெற்றுக்கொண்ட பின்புதான் சாமியார் ரவி அவர்கள் ‘ஒரு பைசாவும் அபராதமாக கட்ட முடியாது. முடிந்ததை செய்’ என்று ஆணவம் கொப்பளிக்க பேசுகிறார்.

மட்டுமல்ல, மாநாட்டுத் திடலை கட்டமைக்கும் பணியிலும் யமுனையின் குறுக்கே ரப்பர் பாலங்களை நிர்மாணிக்கும் பணியிலும் ராணுவத்தை பயன்படுத்தியதில் தவறேதும் இல்லை என்று கூறுகிறார். இதில் பிரச்சினை என்னவெனில் ஒரு சாமியார் ஏற்பாடு செய்ய்ம் மாநாட்டுப் பணிகளுக்கு ராணுவத்தைப் பயன்படுத்துவது சரியா என்று எதிர்கட்சிகள் கொந்தளித்தபோது இந்த அளவு தைரியத்தோடு ‘ஆமாம், அதிலென்ன தவறு?’ என்று கேட்கும் தைரியம் எந்த மத்திய அமைச்சருக்கும் இருக்கவில்லை. ’அவர்கள் ராணுவத்தினர் இல்லை. ராணுவ உடையில் பணியாற்றும் கூலிகள்’ என்பதாகத்தான் அவர்கள் நழுவினார்கள்.

1)   மத அமைப்பின் நிறுவனர் ஒருவர் ஏற்பாடு செய்யும் ஒரு மாநாட்டின் பணிகளை செய்வதற்கு ராணுவத்தை அனுப்பியது எப்படி சரியாகும்? இல்லை ராணுவ வீர்ர்களை நாங்கள் இதற்கு அனுப்பவில்லை என்று மத்திய அரசு சொல்லுமானால் ‘இந்த வேலையை ராணுவ வீர்ர்கள் செய்ததில் என்ன தவறு?’ என்று சாமியார் ரவி அவர்கள் கேட்டிருக்கிறாரே. அதற்கு என்ன பொருள்? ராணுவ வீர்ர்களை பயன்படுத்தாமலே அவர்களை இந்த வேலைக்கு பயன்படுத்தியதாக சொல்வது இந்திய ராணுவத்தை அவமானப் படுத்துவதாகாதா? எனில், ராணுவத்தை அவமானப் படுத்திய ரவி அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
2)   இவ்வளவு பிரச்சினகள் உள்ள மத அமைப்பொன்றின் மாநாட்டிற்கு கோடிக்கணக்கில் நன்கொடையை அரசே வழங்குவது தவறென்று படவில்லையா?
3)   இதேபோல வேறொரு மதஅமைப்பின் மாநாடு நடந்தால் அதற்கும் ராணுவத்தை அனுப்புவீர்களா? நன்கொடை தருவீர்களா? அப்படியே தந்தாலும் ஒரு தவறை ஆதரித்ததற்காக எல்லாத் தவறுகளையும் ஆதரிப்பது போலாகாதா?

இவை யாவினும் அதிர்ச்சியான விஷயம் இந்த மாநாட்டில் இந்திய ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொள்வதாக வெளியான செய்திதான். தான் கலந்துகொள்வதில்லை என்று ஜனாதிபதி அறிவித்திருப்பது சற்றே ஆறுதல் தரும் விஷயம். அநேகமாக பிரதமரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என்றே எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் எதுபற்ரியும் கவலை கொள்ளாமல் தனது வருகையை மாண்பமை பிரதமர் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்.

இந்த நேரத்தில் 24.08.1957 அன்று அன்றைய இந்தியப் பிரதமர் மாண்பமை ஜவஹர்லால் நேரு அவர்கள் அன்றைய இந்திய ஜனாதிபதி மாண்பமை ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு எழுதிய கடிதத்தை நினைவூட்டுவது அவசியமாகிறது.

1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் சர்வ சமய மாநாடு என்பதாக பொருள்படும் ‘விஷ்வ தர்ம சம்மேளனம்” என்ற ஒரு மாநாடு தில்லியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் அதிர்ச்சியளிக்கும் விதமாக குடியரசுத் தலவர் மாளிகையில் 1957 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  23 மற்ரும் 24 ஆம் தேதிகளில் நடை பெற்றிருக்கிறது. இந்த அமர்வுகளில் ‘விஷ்வ தர்ம சம்மேளத்தினை’ நேரு அவர்கள் துவங்கி வைப்பது என்றும் துணைக் குடியரசுத் தலைவர் மாண்பமை முனைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்குவது என்றும் முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் தன்னால் தலைமை தாங்க இயலாது என்றும் ஆனால் அந்த மாநாட்டில் உரை நிகழ்த்துவதாகவும் உறுதி கூறியிருக்கிறார்.

நேரு அவர்கள் தனது கடிதத்தில் தம்க்கோ தமது அரசுக்கோ தெரியாமலேயே இப்படி ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும் கூறுகிறார். இப்படி ஒரு பெரிய அளவிலான சர்வதேச மாநாட்டினை நடத்துவதற்கு மிகப்பெரிய கட்டமைப்பும் பொருளாதாரமும் தேவைப்படும். அவை இரண்டையும் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் இந்த சர்வதேச மாநாட்டின் அமைப்பாளர்களிடம் இருக்கிறதா என்பது தமக்கு அச்சமளிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

பிற நாடுகளின் அயலுறவுத் துறை அமைச்சகங்கள் அந்த மாநாட்டினை இந்திய அரசு நட்த்துகிறதா? அல்லது தனி அமைப்பு ஏதேனும் நடத்துகிறதா என்ற அய்யத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விசாரிப்பதாகவும் அந்தக் கடித்த்தில் நேரு கூறுகிறார்.  அந்த மாநாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த விதம் அதை அரசுதான் செய்கிறதோ என்கிற அய்யம் வருகிறமாதிரி இருந்ததாகவும் வருத்த்த்தோடு சொல்லியிருக்கிறார் நேரு.

வரம்புகளை மீறி தேசத்தின் இயற்கைவளம் சூறையாடப் பட்டிருக்கிறது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியிருக்கிறது. சூறையாடியவருக்கு மட்டுமல்ல அதை கட்டுப் படுத்தத் தவறிய குற்ரத்திற்காக தில்லி வளர்ச்சி குழுமத்திற்கும், தில்லி மாசு கட்டுப்பாட்டு குழுவிற்கும் அபராதம் விதிக்கிறது.

அப்படியான ஒரு நிகழ்வில், இன்னும் சொல்லப்போனால் குடியரசுத் தலைவர் நிராகறித்த ஒரு விழாவில் மாண்பமை பிரதமர் அவர்கள் கலந்து கொள்வதென்பது தேசத்தின் இயற்கை வளத்தை சூறையாடியவர்களை ஆதரிப்பதாகாதா?

தேசத்தின் வளங்களை அழித்தொழிப்பது என்பது தேசவிரோதமல்லவா? அழித்தொழிப்பவர்கள் தேசவிரோதிகள் அல்லவா?

எனில், அத்தகையதொரு நிகழ்வில் இந்த தேசத்தின் மாண்பமை பிரதமர் கலந்து கொள்வதை எப்படி கொள்வது?


25 பள்ளிக்கொரு இன்சினரேட்டர்

சமீபத்திய பெருமழை எத்தனையோ பேரழிவுகளை கொண்டு வந்திருந்தாலும் சில நல்லதுகளையும் சேர்த்தே நமக்கு கொடுத்தது. அவற்றில் மிக முக்கியமான மூன்று விஷயங்களாக நான் கருதுவது

1)   இஸ்லாமிய சமூகத்தின் மீதான பொய்யான பிம்பங்களை அழித்தொழித்த  இஸ்லாமிய பிள்ளைகளின் தியாகம் செறிந்த மக்கள் சேவையும், அது கொடையளித்த மதம் கடந்த மனித நேயமும்.
2)   கூவத்தை சில காலம் சுத்தமாக வைத்திருந்தது
3)   ‘நாப்கின்’ என்கிற வார்த்தையைக் கேட்டாலே தீட்டுப் பட்டுவிட்டதுபோல் இருந்துவந்த அசூசையை பெருமளவு துடைத்துப் போட்டது.

வெள்ளக் காலத்தில் கடலூருக்கு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் நாப்கின்களாவது என் மூலமாக சென்றிருக்கும். ’தோழர் இங்க எல்லா பெண்களும் பேண்டீஸ் போடறது இல்ல. எனவே பெல்ட் வைத்த நாப்கினாக வாங்கி அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்’ என்று களத்தில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்த தோழர் ஜோதிமணி என்னோடு எந்த விதமான அசூசையும் இல்லாமல் இயல்பாக என்னோடு பேச முடிந்தது. எந்தவிதமான முகச் சுளிப்பும் அசூசையும் என்றி என்னால் கேட்கவும் முடிந்தது. 

‘நாப்கின்’ பற்றிய விளம்பரங்கள் வந்த புதிதில் ‘சேய், இதுக்கெல்லாம் கூடவா விளம்பரம் போடுவாய்ங்க?’ என்று முகம் சுளித்த நண்பர்களை எனக்குத் தெரியும் என்பதுகூட பொய்யானதுதான். காரணம், நானே அந்த விளம்பரங்கள் வந்த புதிதில் ஒருவிதமான அசூசையோடு முகம் சுளித்திருக்கிறேன். இன்னும் சிலர் அந்த விளம்பரங்கள் வந்ததும் சேனலை மாற்றுவதை பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சிப் பெட்டிகளின் மீது தண்ணீர் விட்டுக் கழுவாத குறையாக ‘தீட்டுத் துணிக்கெல்லாம் விளம்பரம் போட வந்துட்டாய்ங்க’ என்று அங்கலாய்த்தவர்களை எனக்குத் தெரியும். ‘குடும்பத்தோடு பார்க்கக்கூடாத திரைப்படங்கள்’ என்பதுபோல் ‘குடும்பத்தோடு பார்க்கக்கூடாத விளம்பரங்கள்’ என்பதாக நாப்கின் விளம்பரங்கள் பச்சைக் குத்தப் பட்டிருந்தன.

’அந்த மூன்று நாட்கள்’ என்று மாதவிடாய் நாட்களுக்கு பொதுப்புத்தியில் பெயர். ‘அம்மா தீட்டாயிட்டா, அவளத் தொடக்கூடாது’ என்று தங்கள் குழந்தைகளிடம் சொன்ன தகப்பன்மார்களை, பாட்டிகளை, அத்தைகளை எனக்குத் தெரியும். வீட்டில் ஒரு இருட்டு மூலையில் அவர்களுக்கான இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். இன்னும் கொஞ்சம் காலம் கடந்து முன் சென்று பார்ப்போமெனில் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு அத்தகைய இருட்டு மூலையும் இல்லாமல்தான் இருந்தது. ‘இதுமாதிரி காலத்தில் பொண்டுக ஒதுங்கறதுக்குன்னு ஊருக்குள்ள சத்திரம் மாதிரி பொது இடம் இருக்கும். அங்கன போயி ஒண்டிக்குவாக. இப்ப என்னடான்னா ஊருக்குள்ள எவ தீட்டு? எவ சுத்தம்னே? தெரிய மாட்டேங்குது’ என்று ஆசிரியர் அறியில் புலம்பிய ஆசிரியர்களை பார்த்திருக்கிறோம்.

‘எவ தீட்டு?, எவ சுத்தம்னே? தெரிய மாட்டேங்குது’ என்ற புலம்பல் தீட்டு என்பது அசுத்தம் என்ற பொருளாகப் பார்க்கப் பட்டிருப்பதை உணர்த்துகிறது.

1)   இவள் அசுத்தம், இவள் சுத்தம் என்பதை தீர்மானிக்கிற அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது?
2)   எவள் சுத்தமாயிருந்தாள் இவளுக்கென்ன? எவள் அசுத்தமாயிருந்தால் இவர்களுக்கென்ன?

முன்பெல்லாம் கடைக்கு டிபன் வாங்கப் போனால் ‘என்ன சார் அம்மா வீட்டுக்கு வெளியவா?’ என்று கடைக்காரரே கேட்கிற நிலை இருந்தது.
எனில் மாதத்தில் மூன்று நாட்கள் பெண்கள் வீடற்றவர்களாகவே ஒரு காலம் வரைக்கும் இருந்திருக்கிறார்கள். மட்டும் அல்ல, இந்த மூன்று நாட்களில் அவர்களை மூலைக்குள் முடக்கிப் போட்டு மாதத்தில் மூன்று நாட்களுக்கான அவர்களது செயல்பாட்டை முடக்கி வைத்திருக்கிறார்கள்.

பெண்களுக்கே இந்த நிலை என்றால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் நிலை எவ்வளவு கொடுமையானதாக இருந்திருக்கும். ஒன்று அந்த மூன்று நாட்களும் பள்ளிக்கு செல்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும். அப்படி மாதாமாதம் மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலம் மாதாமாதம் மூன்று நாட்களுக்கான படிப்பை அவர்கள் இழந்திருக்க வேண்டும். ஒரு வருட்த்திற்கு என்று பார்ப்போம் எனில் குறைந்த பட்சம் முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்து நாட்கள் இவர்களது கல்வி நாட்கள் சேதப் பட்டிருக்கும். இதுவே ஆண்களைவிட பெண்கள் படிப்பில் தாழ்ந்து கிடப்பதற்கான காரணமாகிப் போயிருக்கவும் கூடும்.

அல்லது அந்த நாட்களிலும் அவர்கள் பள்ளிக்குப் போகும் பட்சத்தில் அவமானப் பட்டு இடைநின்றிருக்க வேண்டும்.

‘நாப்கின்கள்’ வந்திருக்காத காலத்தில் பெண்கள் துணியைத்தான் பயன் படுத்தி வந்தார்கள். அந்தத் துணிக்கு ‘தீட்டுத் துணி’ என்று பெயர். அந்தத் துணியை மிக மிக கேவலமான ஒன்றாகத்தான் பார்த்தனர். இன்னும் சொல்லப்போனால் கேவலமான ஒரு மனிதனைப் பற்றிப் பேசும்போதோ அல்லது அவனை திட்டும் போதோ ‘எந் தீட்டுத் துணிக்குப் பொறாத பய’ என்று திட்டுவது வழக்கமாக இருந்தது. அந்த அளவிற்கு கேவலமானதாக ஒருகாலம் வரைக்கும் தீட்டுத் துணி பார்க்கப் பட்டது.

இவ்வளவு கேவலமாக பார்க்கப் பட்ட ‘தீட்டுத்துணி’ பெரும்பாலும் பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற பழந்துணியாகவே இருக்கும். தீட்டுத் துணியை பயன்படுத்துவது மிகவும் சிரமமான காரியம். அதை துவைத்துப் பராமரிப்பது என்பது அதைவிடவும் சிரமமான காரியம். ஈரப்படுத்தி நன்கு பிழிந்த துணியைத்தான் இதற்குப் பயன் படுத்த வேண்டும். அவ்வப்போது துணியை மாற்ற வேண்டும். துணியை நனைப்பதற்கும், பயன்படுத்திய துணியை அலசித் துவைப்பதற்கும் தண்ணீர் வசதி வேண்டும். துணியை மாற்றியபிறகு துவைத்த துணியை காய வைப்பதற்கு இடம் வேண்டும். யார் பார்வையிலும், குறிப்பாக ஆண்கள் பார்வையில் படாமல் அவற்றை காய வைக்க வேண்டும். தப்பித்தவறி ஆண்கள் பார்வையில் பட்டுவிட்டால் அவர்களது வாழ்க்கையே நாசமாகப் போனதுபோல் ஆண்வர்க்கம் சபிக்கும்.

பெண்கள் முடங்கிப் போன வீடுகளே இருளடைந்து கிடக்கும். இரண்டு மூன்று பெண்கள் இருக்கும் வீடுகளில் மாதவிடாய் கண்டுள்ள பெண்ணின் வேலையையும் மற்றவர்கள் சேர்த்து செய்து வந்தனர். அப்படி இல்லாமல் ஒரே ஒரு பெண் இருக்கும் வீடுகளிலோ அல்லது இருக்கும் இருவருக்கும் ஒரே காலத்தில் மாதவிடாய் வந்து விட்டாலோ அந்த வீடு இருண்டே போகும். வீடு பெருக்குவதிலிருந்து, பாத்திரம் கழுவுவதிலிருந்து, சிமிளி மற்ரும் அரிக்கேன் விளக்குகளின்  கண்ணாடிகளைத் துடைத்து விளக்கேற்றுவதிலிருந்து அனைத்து வேலைகளையும் ஆண்களே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ஆண்களுக்கு உலகம் மட்டும்தானே வீடு. வீடென்பது அவர்களுக்கு ஓய்வெடுக்கும் ஒரு சத்திரம். வீட்டு வேலைகளை செய்வது அவர்களது ஆண்மைக்கே இழுக்காயிற்றே.

இந்தப் புள்ளியில்தான், தங்களது வேலைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு ஆண்கள் பெண்களை அந்தக் காலத்திலும் வீட்டிற்குள் இயங்குவதற்கு அனுமதித்திருக்கக் கூடும்.

இந்தப் புள்ளி பெண்களின் வரலாறில் மிக முக்கியமானது. ஆனால் மிகவும் அசுகரியமான தீட்டுத் துணியோடு வீட்டிற்குள் வளைய வந்து தங்களது அன்றாட பணிகளை செய்வது அவர்களுக்கு மிக மிக சிரம்மாக இருந்தது. அடிக்கடி துணி மாற்ற வேண்டும். வேலைகளை செய்யும்போது இன்னும் பேரதிகமாய் துணியை மாற்ற வேண்டும். பயன் பட்டவற்றை சுத்தம் செய்து யாருக்கும் தெரியாத மறைவிடத்தில் உலர்த்த வேண்டும். வேலை செய்ய செய்ய அதிகமாய் உதிரம் கசியும். சக்தியனைத்தும் வற்றிப் போகும். பெருத்த உதிரப்போக்கு சக்தியை அழித்துவிடும் இந்தக் கால கட்ட்த்தில் பெண்கள் பேரதிகமான சத்துள்ள உணவினை உட்கொள்வதன் மூலம் இழந்த சக்தியை மீட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் வழக்கமாக உட்கொள்ளும் உணவினைக்கூட அவர்கள் அந்தக் காலத்தில் ‘இயலவில்லை’ என்று எடுத்துக் கொள்வதில்லை. உணவு உண்ணும் அளவிற்கே தெம்பில்லாத அவர்களிடம்தான் அனைத்து வேலைகளையும் இந்தச் சமூகம் வாங்கித் தொலைத்தது.

வீட்டிலிருக்கும் பெண்களுக்கே இப்படி என்றால், பணிக்கு செல்லும் பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? அதையே நினைத்துப் பார்க்க முடியாதபோது பள்ளிக்கு செல்லும் பெண்களின் நிலையை எப்படி கொள்வது?

துணியை ஈரப் படுத்த, அலச, எத்ட்ஷனைப் பள்ளிகளில் அந்தக் காலத்தில் போதுமான வசதி இருந்தது. அந்தக் காலத்தில் துணியின் அசௌகரியம் அவர்களது நடையை வித்தியாசப் படுத்திக் காட்டும். இருபாலர் படிக்கும் பள்ளியெனில் அந்தப் பெண் குழந்தைகள் எவ்வளவு சிரமத்திற்கு ஆட்பட்டிருப்பார்கள். இத்தகைய அவமானங்களும் அசௌகரியங்களும் எத்தனை குழந்தைகளின் படிப்பில் மண்ணள்ளிப் போட்டிருக்கும்?

இதற்கு மாற்றாக, வரமாக வந்ததுதான் ‘நாப்கின்’. ஒழுங்கான ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம் என்றால் ‘நாப்கின்’ வரவிற்குப் பிறகு பெண்களின் பள்ளி வருகை அதிகமானது. ஒரு உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.  இப்போதெல்லாம் வருடா வருடம் பள்ளியிருதித் தேர்வுகளில் முதல் பத்து இடங்களில் கணிசமான எண்ணிக்கையில் பெண் குழந்தைகளே வருகிறார்கள். இதற்கு ஆசிரியர்களின் உழைப்பு, பெற்ரோரின் பங்களிப்பு, குழந்தைகளின் ஓயாத உழைப்பு என்பவற்றோடு ‘நாப்கின்’ களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

நாப்கின்கள் வந்த பிறகும் அனைத்துக் குழந்தைகளாலும் அவற்றை வாங்கிப் பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது. இப்போது வரத்தை ஏழைக் குழந்தைகளால் அனுபவிக்க இயலாமல் போனது. இன்னும் சொல்லப் போனால் ’அந்தக் காலத்தில்’ பணக்காரப் பெண்குழந்தைகளை ஒருவிதமான பொறாமையோடு ஏழைக் குழந்தைகள் பார்த்த்தை நானறிவேன். இதை உணர்ந்து கொண்ட தமிழக அரசு பருவம் எய்திய அனைத்து குழந்தைகளுக்கும் நாப்கின்களை வழங்குகிறது. இது பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கல்வியையும் மிகப் பெரிய அளவில் ஊக்குவிக்கும். இதற்காக பள்ளி செல்லும் ஒரு பெண் குழந்தையின் தகப்பன் என்கிற வகையில் தமிழக அரசிற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாகவே இருக்கிறேன்.

இப்போது அடுத்த சிக்கல் ஒன்று வருகிறது. பயன் படுத்திய நாப்கின்களை எப்படி அழிப்பது?

நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி குப்பை வண்டிகளில் நாப்கின்களை சேகரிப்பதற்கென்று ஒரு தனித் தொட்டியை அமைத்து அவற்றில் நாப்கின்களை சேகரித்து தனியாக அவற்றை அழிப்பதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதன் தேவையை கலைநிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட அனைத்து வடிவங்களையும் கையிலெடுத்து இருக்கிற எல்லா ஊடகங்களின் வழியாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

பள்ளிகளில் பெண் குழந்தைகள் பயன்படுத்தும் நாப்கின்களை சேகரித்து அழிப்பதற்கான வசதிகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கே உள்ளன. செய்வதறியாது குழந்தைகள் எங்காவது வீசிவிடுகிறார்கள். சில குழந்தைகள் டாய்லெட்டில் விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். இது அடைத்துக் கொண்டு இருக்கிற கழிவறை வசதியையும் முடமாக்குகிறது. பல பள்ளிகளில் பயன்படுத்தப் பட்ட நாப்கின்கள் இங்கும் அங்குமாக கிடப்பதை பார்க்கிறோம். பள்ளிகளுக்கு இருக்கிற கட்டமைப்பு வசதிகளுள் இவற்றை அப்புறப் படுத்த அவர்கள் படாத பாடு படுவதைப் பார்க்க முடிகிறது.

இது உறுத்திக் கொண்டே இருந்த சூழலில் ஒருநாள் அருப்புக் கோட்டையிலிருந்து நண்பர் ஒருவர் தானும் தனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து அருப்புக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு இன்சினரேட்டர் வாங்கித் தர முடிவெடுத்திருப்பதாகவும். அது குறித்த விவரங்களை சேகரித்து தருமாறும் கேட்கவே அது குறித்த விசாரனையில் இறங்கினேன்.

மேனுவலாக எரிக்க்க்குமளவு உள்ள இன்சினரேட்டர்களும் மின்சாரத்தால் இயங்க்க் கூடிய இன்சினரேட்டர்களும் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது. இவற்றில் மிசாரத்தால் இயங்குவது பாதுகாப்பானதாகவும் சுகாதாரத்திற்கு ஏற்றதாகவும் இருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு நாளைக்கு 250 நாப்கின்களை எரிக்கும் வசதி கொண்ட இன்சினரேட்டர் 29,000 ரூபாய் விலையில் கிடைப்பதாகத் தெரிகிறது. இது போக குழாய்கள் மற்றும் சில உதிரி பாகங்கள், எடுத்து வந்து நிறுவுவதற்கான செலவு என்கிற வகையில் ஒரு 20,000 ரூபாய் ஆகிறது. ஆக ஒரு 50,000 ரூபாய் செலவழித்தால் இது சாத்தியம். இதில் பேரத்திற்கு இடம் இருப்பதாகவும் தெரிகிறது.

ஆக, ஒரு 50,000 ரூபாய் செலவு செய்தால் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு இன்சினரேட்டர் சாத்தியம் என்பதை அரசிற்கும் நல்ல உள்ளங்களுக்கும் கோரிக்கையாக வைக்கிறேன்.


Saturday, April 9, 2016

அருள்கூர்ந்து இவற்றைப் பேசுங்கள்

மத்திய அரசின் பிடியிலிருந்து கல்வியை முற்றாக மாநில ஆளுகையின் கீழ் கொண்டு வரும் செயல் திட்டம் யாரிடம் இருக்கிறது?
மதுவை ஒழித்தே ஆக வேண்டும். ஆனால் அதனால் ஏற்படும் நிதிச் சுமையை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
டாஸ்மாக்கைவிடவும் ஆயிரம் மடங்கு தீங்கு விளைவிப்பவை தனியார் பள்ளிகள். கல்வியை பொதுப் படுத்தும் எண்ணம் யாரிடம் இருக்கிறது. என்ன செய்யப் போகிறீர்கள்?
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு என்ன திட்டங்கள் உங்களிடம் உள்ளன?
மெல்ல அழிந்துவரும் மொழிகளில் ஒன்றாக தமிழ் இருப்பதாக கூறப்படுகிறதே. இதற்கென்ன திட்டம் இருக்கிறது உங்களிடம்?
மணல், மற்றும் கிரானைட் கொள்ளையை தடுத்து நிறுத்த என்ன செய்வீர்கள்?
பல நகரங்களில் மூத்திரம் போவதற்கு இடமற்று மணிக்கணாக்கில் அடக்கவேண்டிய அவஸ்தை இருக்கிறதே. என்ன மாற்று வைத்திருக்கிறீர்கள்?
ஒரே இடத்திற்கான பயணக் கட்டணம் ஒவ்வொரு பேருந்திற்கும் மாறுகிறதே. என்ன செய்வீர்கள்?
கடைக்கோடி குடிமகனுக்கும் அனைத்து வகையான சிகிச்சைகளுக்குமான உங்களது மாற்று ஏற்பாடு என்ன?
சாதியை ஒழிக்க முடியாது என்று ஒருவர் சொல்கிறார். உங்களது நிலைப்பாடு என்ன?
சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பேசுங்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்கள் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
பொதுத் தொகுதிகளில் தலித்துகளை நிறுத்தும் தைரியம் யாரிடம் இருக்கிறது?
அருள்கூர்ந்து இவற்றைப் பேசுங்கள்

Friday, April 8, 2016

24 பொருள்நனிக் கொடுப்போனுக்கல்ல…

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின்அமைப்பாளர் சு.மூர்த்தி அவர்கள் இன்று மாலை அலைபேசியில் வந்தார். எல்லோரையும் கல்வி வந்தடையாமல் இருப்பதற்கான தடைகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். இந்தக் காலத்திலும் கல்வியை எல்லோருக்கும் சாத்தியமாக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் கொஞ்சம் விட்டால் அழுதேவிடுவார் மனிதர் என்று தோன்றியது. தேர்தல் நேரமாக இருப்பதால் கல்வி குறித்த தங்களது கோரிக்கைகளின்மீது அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக படாதபாடு படுகிறார்.

1950 ஆம் ஆண்டு அரசியல் சாசனம் வகுக்கப்பட்டபோது பத்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வி வழங்கப்படும் என்று கூறினார்கள். அவர்களது கூற்றுப்படி1960 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2016 ஆம் ஆண்டிலும்அனைவருக்கும் கல்விஎன்ற கோஷத்தை இயக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் அனைவருக்கும் கல்வி கூடாது என்று யாராலும் பேசமுடியாத குறைந்தபட்சம் வெளிப்படையாக பேசமுடியாத ஒரு நிலை இப்போது வந்திருக்கிறது. ‘அனைவருக்கும் கல்விஎன்பதை யாராலும் வெளிப்படையாக எதிர்க்க முடியாது என்பதே இன்றையத் தேதிக்கான சாதனை என்றால் இதற்கு முன்னால் அப்படி யாராலுமேனும் அதை எதிர்க்க முடிந்ததா? எதிர்த்திருக்கிறார்களா? என்ற கேள்வி எழுவது இயல்பே.

ஆம், கல்வி அனைவருக்குமானது அல்ல. அனைவருக்கும் கல்வியை வழங்கக் கூடாது என்று வெளிப்படையாகவே மதப் பழமைவாதிகள் தடுத்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன், நன்னூல் யார் யாருக்கெல்லாம் கல்வியைத் தரக்கூடாது என்று ஒரு நீண்ட பட்டியலையே தருகிறது.

களிமடி
மானி
காமி
கள்வன்
பிணியன்
ஏழை
பிணக்கன்
சினத்தன்
துயில்வோன்
தொன்னூற்கு அஞ்சி தடுமாறுளத்தோன்
தறுகணன்
பாவி
படிநன்

ஆகியோருக்கு கல்வியைத் தரக்கூடாது என்று நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் கூறுகிறார்.

கள்போதையில் இருப்போன், தன்னைப் பற்றியே பெருமை பேசிக்கொண்டிருப்போன், காமுகன், நோயாளி, ஏழை, கோவக்காரன், பாவச் செயல்களுக்கு அஞ்சாதவன் ஆகியோருக்கு கல்வியைத் தரக்கூடாது என்கிறார். இதுபோன்றஅறம்என்று அவர் கொள்வதற்கு மாறாக நடந்துகொள்வோருக்கு கல்வியை வழங்கக் கூடாது என்று அவர் கூறுவதைப் பார்க்கும்போது இரண்டு வகையான அய்யப்பாடுகள் நமக்குள் இயல்பாகவே எழுகின்றன.

பொதுவாகவே போதை, தற்பெருமை பேசுதல், களவு, காமம், நோய், பாவம் போன்றன இளவயதில் ஒட்டிக்கொள்வன. எனில் நன்னூல் காலத்தில் இளவயதில்தான் கல்வி தரப்பட்டதா? சிறுவர்களுக்கு அந்தக் காலத்தில் கல்வி வழங்கப்படவில்லையா?
சிறுவர்களுக்கும் நன்னூல் காலத்தில் கல்வி வழங்கப்பட்டது எனில் மேற்சொன்ன குணங்கள் சிறுவர்களுக்கும் இருந்ததா?

யாருக்கெல்லாம் கல்வி தரக்கூடாது என்று பட்டியலைத் தந்தவருக்கு ஒரு அய்யம் வந்திருக்க வேண்டும். ஒருக்கால் அந்தப் பட்டியலில் இல்லாத அனைவருக்கும் கல்வியைத் தரலாம் என்று யாரும் கருதி விடுவார்களோ என்ற அச்சத்தில் யார் யாருக்கெல்லாம் கல்வியை வழங்க வேண்டும் என்றும் ஒரு பட்டியலைத் தருகிறார்.

தன் மகன்
ஆசான் மகன்
மன்மகன்
பொருள்நனி கொடுப்போன்
வழிபடுவோன்

ஆகியோருக்கு மட்டுமே கல்வியை வழங்க வேண்டும் என்று கூறுகிறார். அதாவது தன்னுடைய வாரிசு, தனது ஆசானுடைய வாரிசு, தன் மண்ணை ஆளக்கூடிய மன்னனுடைய வாரிசு ஆகியோரைத் தவிர பணம் அள்ளி இறைத்து கல்வியை கேட்பவனுக்கும் தன்னை வழிபடுவோனுக்கும் மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நன்னூல் கூறுகிறது. வழிபடுவோன் என்பதற்கு இந்த நேரத்து சரியான வார்த்தை என்றால்ஜால்ராஎன்று கொள்ளலாம். அல்லது எதையும் கேள்வி கேட்காது அண்டிப் பிழைக்கும் பிழைக்கத் தெரிந்தவன் என்றும் கொள்ளலாம். இன்னும் சரியாய் சொல்வதெனில்நாயும் பிழைக்கும் பிழைக்குமிந்தப் பிழைப்புஎன்பானே பாரதி அந்த நாயொத்த பிழைப்புவாதிகள் என்றும் கொள்வதற்கு நமக்கு உரிமை உண்டு.

நன்னூல் இலக்கணம் வழிகாட்டுவது போல் என்பது இன்றைய புரிதல். இன்றைய புரிதல் ஒரு காலத்தில் உத்தரவாக இந்த சமூகத்தால் ஏற்கப்பட்டிருக்கிறது. நன்னூல் உத்தரவிற்கு கட்டுப்படுகிற அல்லது ஏற்றுக்கொள்கிற அளவிலிருந்த சமூகம் பவணந்தி முனிவர் யார் யாருக்கெல்லாம் கல்வியைத் வழங்குமாறு சொன்னாரோ அவர்களுக்கு கல்வியை வழங்கியிருக்கும். அவர் யாருக்கெல்லாம் கல்வியை வழங்க்க் கூடாது என்று கூறினாரோ அவர்களுக்கெல்லாம் கல்வியை வழங்கியிருக்காது. நூறு விழுக்காடு இப்படித்தான் இருந்திருக்கும் என்று உறுதியாய் கூற இயலாது என்றாலும் தொண்ணூற்றி ஐந்து சதத்திற்கும் மேல் இப்படித்தான் இருந்திருக்கும்.

பவணந்தி சாமிகளை மற்ற மதவாதிகளைப் பார்ப்பதுபோல பார்த்திட முடியவில்லை. இவர் நீயெல்லாம் படிக்கக் கூடாது, நீயெல்லாம் படிக்கலாம் என்பதாக எந்த உத்திரவையும் நீட்டவில்லை. மிகவும் சாதுரியமாக ஆசிரியர்களுக்கு அதாவது அந்தக் காலத்து குருமார்களுக்கு யாருக்கெல்லாம் கற்றுத் தரக் கூடாது என்றும் யாருக்கெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார்.

தன் மகன், அதாவது தன் வாரிசு. அடுத்ததாக தன் ஆசான் மகன். தனக்கு கற்றுக் கொடுத்த குருவின் வாரிசு கற்றுக் கொள்கிற வயதடைகிறபோது அவனுக்கு கற்றுக் கொடுக்கிற திடமற்றவனாகவோ அல்லது நோய்வாய்பட்டோ தனது குரு இருக்கலாம். அல்லது இறந்துபோயோ இருக்கலாம். அந்த நேரத்தில் தனது குருவின் மகனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதன்பிறகு மன்னனின் மகன் கல்வியைப் பெறுகிற தகுதியைப் பெறுகிறான். மன்மகன் என்பதைக்கூட நாட்டாமை போன்ற அந்தஸ்தில் இருப்பவர்கள் வீட்டு வாரிசுகள் என்பதுவரைக்கும்கூட சற்று நீட்டிக் கொள்ள இயலும். மேற்சொன்ன மூன்றில் ஒன்று தன் வாரிசு, இரண்டாவது தனக்கு சொல்லிக் கொடுத்தவன் வாரிசு, தன்னை ஆள்கிறவன் வாரிசு  என்கிற வகையில் தவிர்க்க முடியாதவர்கள் என்பதால் இதுவரைக்கும்கூட போகட்டும் என்று விட்டுவிடலாம்.

அடுத்து தவிர்க்க முடியாதவர்கள் பட்டியலைத் தாண்டி பொது ஜனங்களில் யாருக்கு கற்றுக் கொடுக்கலாம் என்று கூறுகிறார் பாருங்கள்.  

பொருள்நனி கொடுப்போனுக்கு கல்வியைத் தருமாறு உத்தரவிடுகிறார். அதாவது காசள்ளிக் கொடுப்பவனுக்கு கல்வியை வழங்குமாறு கூறுகிறார். அதாவது கல்வியை விற்கச் சொல்கிறார். அதுவும் பொருள்நனி கொடுப்போருக்கு என்கிறார். இதற்கு அநேகமாக காசள்ளிக் கொடுப்போர் என்று பொருள் கொள்ள இருக்கும் வாய்ப்பினை யாராலும் மறுக்க இயலாது. இன்னும் கொஞ்சம் ஜனரஞ்சகமான பொருள் கொள்வதெனில் கல்வியை அநியாய விலைக்கு விற்க சொல்லியிருக்கிறார். ஐந்து முதல் ஏழாம் நூற்றாண்டிற்குள் அநேகமாக இவரது காலம் வரக்கூடும். எனில் கல்வியை வணிகப் படுத்தும் வேலை என்பது ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டிலேயே தொடங்கியிருக்க வேண்டும். எனில், கல்வி சந்தைக்கு வந்து ஏறத்தாழ ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக வழிபடுவோனுக்கு கல்வியை வழங்கக் கூறுகிறார். வழிபடுவோன் எனில் யார் என்று கொஞ்சம் அலசவேண்டிய அவசியம் இருக்கிறது. வழிபடுவோன் எனில் குருவை தெய்வமென மதித்து தொழுதேற்பவன் என்று ஆகிறது. அதாவது குரு சொல்வதை ஒருபோதும் கேள்வி கேட்காது ஏற்பவன். பச்சையாக சொல்வதெனில் தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று பிழைக்கத் தெரிந்தவனுக்கு கல்வியை தரலாம் என்கிறார்.

போதையில் இருப்பவன், திருடுபவன், தற்பெருமை கொள்வோன், பாவி, சோம்பேறி போன்றோருக்கெல்லாம் கல்வியைத் தருவது கூடாது என்று கூறுகிறார். மேலோட்டமாக பார்த்தால் இவை எல்லாம் சரிதானே என்று தோன்றும். இவர்கள் எல்லாம் நல்லவர்கள் அல்லவே, நல்லவர்கள் அல்லாதவர்களுக்கு கல்வி தரக்கூடாது என்று சொல்வது நியாயம்தானே என்று தோன்றும்.

அலுவலக குமாஸ்தாக்களாக்குவதா கல்வியின் நோக்கம். அதுதான் நோக்கம் என்றால் அது அய்யோ என்று நாசமாய்த்தானே போகும். கல்வியின் பிரதான் நோக்கம் என்பது நெறியற்ற தனிமனிதனை நெறிப்படுத்தி யோக்கியமான சமூகத்தை கட்டமைப்பதுதானே. அதுவிடுத்து கெட்டவன் எக்கேடோ கெட்டு போகட்டும் நல்லவனை மட்டும் நல்வழி படுத்துவோம் என்று சொல்வது எப்படி சரியாகும். கெட்டதை நல்லதாக்க முயற்சிக்காவிட்டால் அது வளரும். அதற்கும் நல்லதுக்கும் முரண் வந்துகொண்டே இருக்கும். ஆளும் வர்க்கம் இரண்டு பிரிவினருக்கும் நாட்டாமை செய்கிற வேலையை மட்டும் கவனித்துக் கொண்டு இருக்கும். ஆளும் வர்க்கத்தின் அட்டூழியங்களை எதிர்த்து கேள்வி எழாது.

காசிருப்பவனும் பிழைப்பு வாதியும் தனக்கான வசதிகள் குறித்து மட்டுமே கவலை கொள்வான். எனவே அல்லதை எதிர்க்க ஒருபோதும் நேரத்தை செலவிட சம்மதிக்க மாட்டான்.

இவை எவற்றினும் ஏழைக்கு கல்வி தரக்கூடாது என்பதில்தான் நமக்கு பெருங்கோவமே.

பவணந்தி முனிவர் சமணர். சமணர் காலத்தில் கல்வியை பொதுப்படுத்தும் முயற்சி இருந்ததாகவே தெரிகிறது. அவரே இப்படி ஏன் கூறுகிறார், அல்லது அப்படி கூறவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததா என்பது குறித்தும் என்று காய்தல் உவத்தல் இன்றி ஆய்வது அவசியம். அப்படி நிர்ப்பந்தம் இருந்திருப்பின் அது எங்கிருந்து வந்தது? அதற்கு பணிய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பவைகுறித்தும்கூட ஆய்வுகள் அவசியம்.

இன்னொரு விஷயத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டிய தேவை இருக்கிறது. தன் மகன், ஆசான் மகன், மன்மகன், பொருள் அள்ளிக் கொடுக்க வசதியுள்ள பணக்காரன், வழிபடுவோன் ஆகிய யாவரும் ஆண்பாலாகவே இருப்பது சத்தியமாய் தற்செயலானது அல்ல. ஆக, கல்வியை பெண்களுக்கு வழங்கக் கூடாது என்பதும்கூட நன்னூலில் மறைமுகமாக இருப்பதாகவே படுகிறது.

ஆக, கல்வி என்பது எல்லோருக்குமான உரிமை என்பதை நிலைநிறுத்த ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர்ப்பியக்கங்கள் தொடர்ந்து நடந்தபடியேதான் இருந்திருக்க வேண்டும். சன்னமான எதிர்ப்பியக்கங்கள் சலசலப்புகளாக கொச்சைப் படுத்தப்பட்டு பதியப்படாமல் போயிருக்க வாய்ப்புண்டு. அவற்றைத் துருவி எடுத்து பதிதல் வருங்கால எதிர்ப்பியங்களை கூர்மைபடுத்தும் என்ற வகையில் அதை முன்னுரிமை கொடுத்து செய்தல் வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டம் 2009’ கல்வியை அடிப்படை உரிமை என்று உரத்து சொல்கிறது. ‘கட்டாயக் கல்விஎன்கிற பதப் பிரயோகமே அரசிடம் இருந்து வந்துவிட்டது. கல்வி கட்டாயம் என்று பிரகடனப் படுத்தப்பட்ட பின்பும் கல்வியை ஒடுக்கப் பட்டவனிடம் இருந்தும் ஏழைகளிடம் இருந்தும் பறித்தெடுப்பதற்கான சதிகளை தேன்தடவி விநியோகம் செய்வதற்கு ஒரு கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

கல்வி உரிமச் சட்டம் 2009 கூட ஆறு முதல் பதினான்கு வயதுடைய குழந்தைகளுக்கு மட்டுமே கட்டாயக் கல்வி என்கிறது. ஆறு வயதிற்கு முன்னால் உள்ள குழந்தைகளின் கல்வி குறித்தும் பதினான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் கல்வி குறித்தும்கூட அது கவலைப் படுவதாகத் தெரியவில்லை.

பதினெட்டு வயதுவரை குழந்தைகள்தான் என்று இருந்தது. அதை எப்படியேனும் குறைத்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கு பெருகிய சிறார் குற்றங்கள் பெருவாய்ப்பாய் போகவே அதை சாதித்து முடித்துக் கொண்டார்கள்.

ஆக, ’எல்லோருக்கும் கல்விஎன்ற கோஷத்தையோ, அதற்கான இயக்கங்களையோ நாம் இன்னும் பேரதிக வெறியோடு கையெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. எழுதப் படிக்கத் தெரியாத நம் முன்னோர்கள் நமது கல்விக்காக அவர்கள் அளவிற்கு போராடியிருப்பார்கள். அந்த போராட்ட வரலாறுகளை திரட்டி பதிவோம். அவர்கள் தியாகத்திலிருந்து கனலெடுப்போம்.

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்என்று கல்வி யாருக்கானது என்று தெளிவாய் சொன்ன பாரதி எனும் காட்டுத்தீ நமக்கு வெளிச்சங்காட்டும்


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...