Friday, December 31, 2021

குறுவையையும் ஒரு கை பார்க்கலாம்

 


என்னோடு பணியாற்றும் அன்பழகன் கொள்ளிடப் பாசனத்தில் விவசாயமும் பார்ப்பவர்
”குறுவை” போச்சு சார், “குறுவை போச்சு சார்”
என்று அடிக்கடி புலம்பிக் கொண்டே இருப்பார்
தண்ணீர்ப் பிரச்சினை குறுவையை இல்லாமல் செய்துகொண்டு வருவதாகக் கூறுவார்
சம்பாவில் டெல்டா பகுதியில் ஏறத்தாழ மூன்றரை லட்சம் ஏக்கருக்கு சாகுபடி நடக்கும்போது
குறுவைக்கு எழுபது அல்லது எழுபத்தி ஐந்தாயிரம் ஏக்கர்தான் சாகுபடி செய்யப்படுவதாகக் கூறுவார்
இந்த நிலையில் இன்று தஞ்சையில் பேசும்போது
ஒருலட்சத்தி ஆறாயிரத்தி சொச்சம் ஏக்கர்தான் இந்தக் குறுவைக்கு இலக்காக வைக்கப்பட்டது என்றும்
ஆனால் ஒரு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் ஏக்கரில் சாகுபடி நடக்கிறது என்றும்
பெருமையும் மகிழ்ச்சியும் பொங்க முதல்வர் கூறுவதை தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது
சத்தியமாக எனக்கு கண்கள் ஈரமாயின
இதற்கு பத்துப் பதினோறு காரணங்கள் இருக்கலாம்
ஆனால் தண்ணீர் என்பது எதைவிடவும் முக்கியமானது
இந்த ஆண்டு பெரு மழை சம்பாவை சாய்த்தாலும் குறுவையை ஆசிர்வதித்திருக்கிறது
மழை தரும் நீரையும், காவிரி உரிமையை நீரையும் சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் அவசியம்
வாய்க்கால்களை நீர்நிலைகளை தூர் எடுப்பது
போதும்

குறுவையையும் ஒரு கை பார்க்கலாம்

#சாமங்கவிய 46 நிமிடங்கள்
30.12.2021

Thursday, December 30, 2021

இந்தாங்க சட்டம் என்கிறார் முதல்வர்

 தமிழ்த்தாய் வாழ்த்து நாட்டுப்பாடலாக அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாமல் தவிக்கும் H.ராஜாவும்

ஒரு வகையில் அது நாட்டுப் பாடலாக அரசானை வந்ததற்கு ஒரு காரணம் என்றால் ஏற்க முடியாதுதானே
ஆனால் அதில் உண்மை இருக்கிறது
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருநாள் சென்னை ம்யூசிக் அகாதமியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விஜயேந்திரர் கலந்து கொள்கிறார்
தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விஜயேந்திரரைத் தவிர அனைவரும் எழுந்து நிற்கிறார்கள்
பொதுவகவே தலைவர்களின் உரைகளும் நேர்காணல்களுமே முக்கியம் என்பதால் தமிழ்த்தாய் வாழ்த்தை பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்கவில்லை
ஆனால் தினத்தந்தி தொலைக்காட்சியின் நிரூபர் அதையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்
பாதியில் அவருக்கு பொறி தட்டுகிறது
தனது அலுவகத்தை தொடர்பு கொள்கிறார்
இதை செய்தியாக்கலாமா என்கிறார்
வேண்டாம் என்கிறார்கள்
நிகழ்ச்சி முடிந்ததும் அங்கு வந்திருந்த H.ராஜாவிடம் இது குறித்து விடாமல் கேட்கிறார்
அவர் பதில் ஏதும் கூறாமல் கடக்கிறார்
இவரது கேள்விதான் மற்ற நிரூபர்களுக்கு நடந்த விஷயத்தைக் கடத்துகிறது
இது பெரிய செய்தி என்பது அவர்களுக்குப் புரியவே அவரை அனுகி க்ளிப்பிங் பெற்று தங்களது சேனல்கள்ளில் போடுகிறார்கள்
இவர் வேலையைவிட்டு விலகுகிறார்
செய்தி பற்றிக் கொள்கிறது
விஜயேந்திரர்மீது வழக்கு போடப்படுகிறது
நீதியரசர் சாமிநாதன்,
எழுந்து நிற்க வேண்டும் என்று சட்டம் இல்லை என்கிறார்
இந்தாங்க சட்டம் என்கிறார் முதல்வர்
இப்போது சொல்லுங்கள் இந்த சட்டம் வந்ததற்கும் திரு H.ராஜாவிற்கும் தொடர்பு உண்டுதானே?
மற்றொன்று அந்த நிரூபரின் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
#சாமங்கவிய ஒரு மணி நாற்பது நிமிடங்கள்
25.12.2021

நாம் கேட்டது வந்திருக்கிறது

 உசிலம்பட்டியில் மீண்டும் சிசுக்கொலை தொடங்கி இருப்பதற்கான அறிகுறி தெரியவே

அய்யத்திற்குரிய அந்த சம்பவத்தை எழுதி
அரசு இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று நள்ளிரவிற்கு 53 நிமிடம் முன்பு எழுதினேன்
சிசுக்கொலை தடுப்பதற்கு ஒரு குழுவை அரசு அமைத்திருக்கிறது
நாம் கேட்டதால் வந்ததல்ல
ஆனாலும்
நாம் கேட்டது வந்திருக்கிறது
மகிழ்ச்சியும் நன்றியும் முதல்வரே

https://www.facebook.com/permalink.php?story_fbid=6662445800463540&id=100000945577360


Wednesday, December 29, 2021

மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது உசிலம்பட்டி

 அதே காரணத்திற்காக

மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது உசிலம்பட்டி
ஆமாம்,
பெண் சிசுக்கொலை செய்யப்பட்டிருப்பதற்கான அய்யக்குரல் அங்கிருந்து எழுந்திருக்கிறது
உசிலம்பட்டி அருகில் உள்ள பெரிய கட்டளை கிராமத்தில் வசிக்கும் கௌசல்யா என்ற பெண்ணிற்கு சேடப்பட்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 21.12.2021 அன்று ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது
26.12.2021 அன்று அந்தக் குழந்தை இறந்துள்ளது
மூச்சுத் திணறலால் இறந்ததாக சொல்லப்பட்டாலும்
கௌசல்யாவிற்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால் சிசுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அய்யம் எழுந்திருக்கிறது
கௌசல்யாவும் அவரது கணவர் முத்துப்பாண்டியும் தலைமறைவாகியுள்ளது அய்யத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது
குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய சேடப்பட்டி வட்டாட்சியர் அனுமதித்திருப்பதாக 29.12.2021 தமிழ் இந்து சொல்கிறது
தமிழ்நாட்டில்
2016 -17 இல் 1000 ஆண்குழந்தைகளுக்கு 954 பெண் குழந்தைகள் என்றிருந்த பாலியல் விகிதாச்சாரம்
2020 -21 இல் 1000 ற்கு 878 என்று குறைந்திருப்பதாக
தேசியக் குடும்பநல கணாக்கெடுப்பு - 5 கூறுவதாக 19.12.2021 நாளிட்ட தமிழ் இந்து கூறுகிறது
அந்தக் குழந்தையின் மரணம் இயற்காயானது என்று பரிசோசனை முடிவுகள் வரவேண்டும் என்று மனது கிடந்து தவிக்கிறது
ஒருக்கால் மாறாக அய்யப்படுவதுபோல் அது சிசு கொலையாக இருக்குமானால்
அது மிக மிக ஆபத்தானது
இது எதிர்காலத்தில் ஆண் பெண் விகாதாச்சாரத்தில் பெரும் பாதிப்பை கொண்டு வரும்
பெண்கள் குறைவாய் இருக்கும் சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறையும்
அது பாலியல் வன்முறைகளுக்கும் பெண் கொலைகளுக்கும் வழி வகுக்கும்
வக்கிரமும் வறட்சியுமான ஒரு சமூகத்தை இது உருவாக்கும்
எனவே அரசு பெண் சிசுக்கொலை மீண்டும் ஆரம்பித்துவிட்டதா என்பதைக் கண்டறிந்து
கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
#சாமங்கவிய 53 நிமிடங்கள்
29.12.2021

பட்டைய கிளப்பலாம் வாங்க தோழர்

 தோழர் மாதவன் மற்றும் கேத்தரீன் இணையரின் இயக்க வாழ்க்கை என்பது அவர்களது இரண்டு குழந்தைகளையும் இணைத்தவாறே தெளிந்த நீரோடைபோல ஓடக்கூடியது


கட்சிக் குடும்பம் என்ற வகையில் இவர்களது குடும்பம் என்னை எப்போதும் பொறாமைப்பட வைத்துக்கொண்டே இருக்கிறது

மாணவப் பருவம் தொட்டே தங்களது இயக்க வாழ்க்கை தொடங்கியதில் ஏதோ போதாமையை உணர்ந்த இவர்கள்

தங்களது பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே கைகளில் செங்கொடியைக் கொடுத்தவர்கள்

வீசிங் இருந்தபோதிலும் பிள்ளை கடலூரில் இருந்து திருச்சிக்கான SFI சைக்கிள் பேரணியில் மகிழ்ச்சியோடு கலந்து கொள்கிறான்

வட மாநிலத்தில் நடந்த SFI மாநாட்டில் குழந்தை பங்கேற்கிறாள்




குழந்தையாயும் செந்தொண்டர் பேரணியில் பங்கேற்ற குழந்தைகள்

அதே செந்தொண்டர் அணிவகுப்பில் இளைஞனாய் யுவதியாய்






தோழர் மாதவன் கட்சியின் மாவட்டச் செயலாளாராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக தோழர் ரமேஷ்பாபு முகநூலில் பதிவிடுகிறார்

மகிழ்ச்சியாக இருக்கிறது

மாவட்ட மாநாடுகளும் தேர்வுகளும் மகிழ்வையும் நம்பிக்கையையும் ஒருசேர தருகின்றன

பட்டைய கிளப்பலாம் வாங்க தோழர்

29.12.2021
இரவு 7.52

Tuesday, December 28, 2021

அருள்கூர்ந்து மாற்றித் தொடங்குங்கள்

 வீடு வந்ததும் பேத்தியிடம் காண்பிக்கிறேன்

கொள்ளுத்தாத்தனின் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் கொள்ளுப்பேத்தியாய்
என் சட்டை ஜோபியின்மேல் வந்து ஒட்டிக் கொண்ட
அந்த வண்ணத்துப்பூச்சியை
”நோட்லதான வரைஞ்சேன்
தாத்தாட்ட ஏன் போன”
அதட்டலுக்கு பயந்து
மீண்டும் அது
பேத்தியின் நோட்டில் படமானது
“ஐ, குட் பாய்” என்று
கைதட்டி குதித்து குதூகலிக்கிறாள் பேத்தி
‘கொள்ளுத்தாத்தனின் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் கொள்ளுப்பேரனாய்’ என்று
அருள்கூர்ந்து மாற்றித் தொடங்குங்கள்
இரண்டாவது பத்தியை

நல்லவர்களா இருந்தா மட்டும் போதுமா?

 நல்லவர்களே இல்லை என்கிறார்கள்.

இருக்கிறார்களே தோழர் என்று தொடங்கினால்

நல்லவர்களா இருந்தா மட்டும் போதுமா? என்கிறார்கள்.

இந்தக் குரலை வைத்துக்கொண்டு இவ்வளவு சீக்கிரமா எங்கய்யா போனீங்க மாணிக்கம்





இசை அமைப்பாளரும் பிரபலத் திரைப்படப் பாடகரும் திரைப்பட நடிகருமான மாணிக்க விநாயகம் அவர்கள் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது

சமீபத்தில்தான் ”மனதோடு மனோ” நிகழ்ச்சியில் மாணிக்க விநாயகம் அவர்களது நேர்காணல் ஒன்றினைப் பார்க்க நேர்ந்தது பார்த்து பதினைந்து நாட்களுக்குள் இப்படி ஒரு செய்தி வரும் என்று நினைக்கவில்லை இசை மேதையான C.S.ஜெயராமன் அவர்களின் மருமகனும் சிஷ்யனுமான இவர் 1980 ஆம் ஆண்டில் வானொலி நிலையத்தின் A GRADE MUSIC COMPOSER ஆகிறார் 1984 இல் இருந்து கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்கள, என்று ஏறத்தாழ 15,000 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் இசை அமைப்பாளர் பர்வீன் மணி அவர்களும் இவரும் இணைந்து “மேக்னோ சவுண்ட்” நிறுவனத்திற்காக ஒரு இசை ஆல்பம் வெளியிடுகிறார்கள் ஒரு நட்சத்திர ஓட்டலில் ”மேக்னோ சவுண்ட்” ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இவர் அந்த ஆல்பத்தில் இருந்து இரண்டு பாடல்களைப் பாடுகிறார் “வீட்டுக்குள்ள இருந்துகிட்டே கதவ சாத்தறா விதிய நெனச்சு அழுதுகிட்டே இருக்கச் சொல்லறா” என்ற பாடலால் ஈர்க்கப்பட்ட வித்யாசாகர் ”தில்” என்ற படத்தில் வாய்ப்பு தருகிறார் “சின்ன வீடா வரட்டுமா” என்ற பாடல் உலகத் தமிழ் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறது எப்படி இவ்வளவு நேர்த்தியாக உங்களை செதுக்கிக் கொண்டீர்கள் ? என்ற கேள்விக்கு நிறைய நல்ல பாடல்களைக் காதுகொடுத்துக் கேட்டேன் என்கிறார் எவ்வளவுப் பெரிய ஞானம் இது ஒருமுறை இலங்கையில் இசைநிகழ்ச்சியில் பாடுகிறார் “விடைகொடு எங்கள் நாடே” என்ற பாடலைக் கேட்ட ஒரு தாயார் இவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, எங்களது வலிய உணர்ந்து பாடுறப்பா இந்தக் குரலை வைத்துக்கொண்டு இத்தனை வருஷமா எங்கப்பா இருந்த? என்று கேட்டதை நெகிழ்ந்தபடியே மாணிக்கம் கூறுகிறார் நாம் கேட்பது இதுதான் இந்தக் குரலை வைத்துக்கொண்டு இவ்வளவு சீக்கிரமா ஏம்ப்பா போன? #சாமங்கவிய சரியாக ஒருமணி நேரம் 26.12.2021

Monday, December 27, 2021

ஆணிற்கும் 18 என்க

 

இன்று தமிழ்மார்க்ஸ் ட்விட்டர் ஸ்பேசில்

தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கத்தின் தோழர் சுகந்தி அவர்களின்

பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்ற எத்தனிக்கும் ஒன்றிய அரசின் முயற்சி குறித்த உரை குறித்து கேட்க வாய்த்தது

தற்போதைய பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் சராசரி வயது இருபத்தி இரண்டிற்கும் இருபத்தி நான்கிற்கும் இடையில் ஊடாடும் உண்மையை ஆய்வுகள் தருகின்றன

தற்போது 18 வயது என்று இருக்கும்போதே 15 வயது குழந்தைகளுக்கும் சில நேரங்களில் திருமணம் நடக்கத்தான் செய்கின்றன

குறைந்த வயது திருமண முயற்சிகள் பல தடுத்து நிறுத்தப்படுவதும் வழக்கம் என்பதையும் பள்ளி ஊழியத்தில் 35 ஆண்டுகளாக இருக்கும் நாம் அறிந்ததுதான்

இதுவரைக்கும் நாம் அறிந்ததுதான்

ஆனால் அப்படி தடுத்து நிறுத்தப்பட்ட திருமணப் பெண் குழந்தைகளின் இன்றைய நிலை என்ன என்று தோழர் சுகந்தி கேட்டபோது

தடுத்ததோடு சில நேரங்களில் நாமடைந்த திருப்தியின் அல்ப ஆயுளை நினைத்து கவலை பிறந்தது

பெண்கள் அனைவரும் உயர் கல்வி பயில்வதற்கான சூழலை ஏற்படுத்தினாலே 26 அல்லது 27 வயதுக்கு முன்பாக யாருக்கும் திருமணம் செய்வதற்கான வாய்ப்பே அமையப் போவதில்லை

வேலைக்காக புலம் பெயர்ந்து செல்லும் பெற்றோர் அப்படி புறப்படும் முன் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள் என்கிறார் தோழர்

இது உண்மையும்கூட

அனைவருக்குமான வேலைக்கு உத்திரவாதம் தருகிற ஏற்பாட்டை அரசுகள் செய்தாலே எந்த சட்டமும் இல்லாமலே பெண்களின் சராசரி திருமண வயது 25 ஐத் தாண்டிவிடும்

போக,

21 என்ற சட்டம் வருமானால் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளுக்கான வாய்ப்புகள் உண்டு என்று தோழர் சுகந்தி சொல்வதை போகிற போக்கில் யாரும் நிராகரித்துவிட முடியாது

ஆண்களின் வயது 21 என்பதே ஆணாஅதிக்கத்தின் குறியீடுதான் என்றும் தோழர் சொல்வது நியாயம்தான்

ஆணுக்கும் பெண்ணிற்கும் திருமண வயது 18 என்பதே சரி என்பதை அனைவரும் ஏற்கவேண்உம் என்றுகூட சுகந்தி சொல்லவில்லை

விவாதிக்கலாம் வாங்க என்றுதான் அழைக்கிறார்

இதுமாதிரி நல்ல முன்னெடுப்புகளை எடுக்கிற தமிழ் மார்க்சிற்கு என்னுடைய அன்பும் நன்றியும்


சாமங்கவிய 52 நிமிடங்கள்

27.12.2021

 

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...