Monday, February 29, 2016

வாழ்த்து 01



யாழன் ஆதி Yazhan Aathi,
நான் பெரிதும் மதிக்கும் தோழர்களுள் ஒருவர். காக்கையின் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்.
முந்தாநாள்தான் எனது “வலைக்காடுகள்” நூலை நாட்றாம்பள்ளியில் வைத்து வெளியிட்டார்.
மிக நல்ல பேச்சாளர்.
இன்று காலைகூட பேசினேன் அவரோடு. அப்போது விஷயம் தெரியவில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கலை இலக்கிய அமைப்பின் மாநில பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
இது நானே அப்படியான ஒரு பொறுப்பிற்கு வந்ததுபோன்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
எனது மற்றும் காக்கையின் அன்பும் முத்தங்களும் யாழன்

அறிவியல் தினம்


(28.02.2012 அன்று எழுதியது)
” ராமன் விளைவு” களுக்காக சர் சி வி ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்ட தினம் இது என்பதை கீதா வெங்கட் எழுதியிருந்தார்.
இந்த செய்தியை ஞாபகப் படுத்தியமைக்காக மிகுந்த நேர்மையோடு அவர் இருக்கும் திசை நோக்கி வணங்கிக் கொள்கிறேன்.
கொல வெறி பாடல் கொண்டாடப் படும் அளவிற்கு அல்லது அதில் ஒரு புள்ளியளவு கூட ராமனைப் போன்றவர்கள் கொண்டாடப் படாமைக்கு பிள்ளைகள் காரணமே அல்ல.
அவர்களிடம் ராமனை தேவையான அளவு கொண்டு சேர்க்காத நம் குற்றம்.
மீண்டும் ஒரு முறை நன்றி கீதா.
நான் 28 02 1931 அன்று அவருக்கு நோபல் வழங்கப் பட்டதாக நினைத்திருந்தேன். அவருக்கு 1931 லும் தாகூருக்கு 1913 லும் நோபல் கிடைத்ததாக வாசித்திருந்தேன். கீதாவை வாசித்தபோது அது 1928 என்று இருந்தது.
விக்கி பீடியாவில் 1930 என்றிருக்கிறது.
இதில் எதுவும் இல்லை தான். ஆனாலும் தெரிந்து கொள்ள முடிந்த விஷயம் இது என்பதால் எந்த வருடம் என்பதை யாரேனும் சொன்னால் நன்றிக்கு உரியவர்களாவோம்.
ஒரு செய்தி சொல்ல வேண்டும்,
தாகூரும் ராமனும் கிடைத்த பரிசுத்தொகையை வங்கிகளில் போட்டனராம். அவர்கள் போட்ட வங்கிகள் இரண்டுமே திவாலாகிப் போனவாம். இதுவும் சரிதானா என்று யாரேனும் சொன்னால் கடமைப் படலாம்.
இன்று அறிவியல் தினமென்பது எத்தனை பேருக்குத் தெரியும். கீதாவை வாசித்த பின்புதான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.
முட்டாள்கள் தினத்தைக் கூட இன்னும் கொஞ்சம் கூடுதல் முனைப்போடு கொண்டாடுகிறோம்

Sunday, February 28, 2016

நா. கோகிலன் என்ற அன்பு



உரையாற்றி முடித்த அரைமணிநேரத்திற்குள் பேருந்து ஏறிவிடுவதுதான் வழக்கம். தங்கிப்போகச் சொல்லி சண்டை போட்டவர்கள் ஏராளம். தங்க வைப்பதில் யாரும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் நேற்று நானே "தங்கிதான் கிளம்ப முடியும். எனவே அறையை நீட்டிப்பா" என்று பரிதியிடம் கேட்டபோது அவனுக்கு ஆச்சரியம். 

காலையில் ஏலகிரிமலையில் அண்ணா கல்வியியல் கல்லூரி மாணவர்களோடும் மதியம் நாட்றாம்பள்ளி கலைமகள் கல்வியியல் கல்லூரி மாணவர்களோடும் உரையாடிவிட்டு திரும்பும்போதுதான் அறையை நீட்டிக்கச் சொல்லி பரிதியிடம் சொன்னேன். இருசக்கர வாகனத்திலேயே மலை ஏறி இறங்குவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.

என்னமோ தெரியவில்லை தங்கிப் போகவேண்டுமென்று தோன்றியது

இரவு உணவு முடித்துவிட்டு வெகுநேரம் கழித்து வீடு திரும்பி காலை வந்து பேருந்தில் ஏற்றிவிட்டு திரும்பிய பிள்ளை நா. கோகிலன்.

Saturday, February 27, 2016

அழைப்பு 26


 28.02.2016 ஞாயிறு மாலை ஆறுமணி அளவில் புறத்தாக்குடியில் உரையாற்றுகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வந்தால் சந்திக்கலாம் 

19 எழுபத்திநான்கிற்கு எழுபத்திமூன்று

ஜப்பான். அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட முப்பத்திநான்கு நாடுகள் ஒன்றிணைந்து ORGANISATION FOR ECONOMIC COOPERATION AND DEVELOPMENT என்றொரு அமைப்பினை தங்களுக்குள் உருவாக்கியுள்ளன. OCED என்று இந்த அமைப்பு சுறுக்கமாக அழைக்கப் படுகிறது. அந்த அமைப்பின் முப்பத்திநான்கு உறுப்பு நாடுகளும் OCED நாடுகள் என்றழைக்கப் படுகின்றன.

இந்த நாடுகள் தங்களது மாணவர்களின் கல்வித் தரத்தை சுய மதிப்பீடு செய்து கொள்வதன் மூலம் தங்களது குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த முடியும் என்பதை உணர்ந்தன. பதினைந்து வயதுள்ள தங்களது பள்ளிக் குழந்தைகளின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்ய PROGRAMME FOR INTERNATIONAL STUDENT ASSESSMENT என்றொரு அமைப்பை இதற்காக அவை உருவாக்கின. சுறுக்கமாக இந்த அமைப்பு PISA (பிசா) என்று அழைக்கப் படுகிறது.

பாரிசை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘பிசா’ இந்த முப்பத்துநான்கு நாடுகளைத் தவிர எந்த ஒரு நாட்டையும் தனக்குள் இணைத்துக் கொள்வதில்லை. ஆனால் தனது நாட்டுக் குழந்தைகளின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்து தருமாறு எந்த ஒரு நாடு கோரினாலும் அந்தப் பணியை பிசா செய்து தருகிறது.

வாசித்தல், கணிதம், அறிவியல் ஆகிய மூன்று தளங்களிலும் பிசா மாணவர்களை ஆய்விற்கு உட்படுத்துகிறது. உள்வாங்குதல், உள்வாங்கியதை நடைமுறைக்கு பயன் படுத்துதல் (adaption and application) என்பதையே கற்றலின் சாரமாக, அறிவாக பிசா கருதுகிறது.

நிறைய நாடுகளுக்கு பிசாவின் மதிப்பீடு பிடித்துப் போகவே அவை தங்களது குழந்தைகளின் கல்வித் தரத்தையும் மதிப்பீடு செய்து தருமாறு பிசாவைக் கோரின. 2009 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவும் பிசாவை அணுகியது.

இந்த வகையில் இந்தியாவையும் சேர்த்து எழுபத்திநான்கு நாடுகளை 2009 ஆம் ஆண்டு ஆய்வு செய்தது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் இமாசலப் பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களை மட்டுமே அது ஆய்விற்கு எடுத்துக் கொண்டது.

நமது நாட்டைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் மட்டுமே பிசா தனது ஆய்வை நடத்தியது.

நமது நாட்டைப் பொறுத்தவரை எழுத்துக்கூட்டி வாசித்தலும் ஏறத்தாழ பதினைந்து வளைவுகளுடன் இந்த மூலையில் தொடங்கி அந்த மூலை வரைக்கும் கந்தசாமி என்ற தனது பெயரை காந்தசமி என்று எழுதத் தெரிந்தவரும் எழுத்தறிவு பெற்றவரே. ஆனால் எழுத்துகூட்டி வாசிப்பதையோ மனனம் செய்து ஒப்பிப்பதையோ எழுத்தறிவு என்று பிசா ஏற்பதில்லை. மாறாக செய்திகளையோ தகவல்களையோ வாசித்துப் புரிந்து கொள்வதும், வாசித்துப் புரிந்து கொண்டதை பிறர் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொல்வதுமே எழுத்தறிவு ஆகும் என்று பிசா கருதுவதாக ‘ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே’ எனும் தனது நூலில் கூறுகிறார் தோழர் நலங்கிள்ளி.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள். சுயநிதிப் பள்ளிகள் என்று பரந்த தளத்திலிருந்து மாணவர்களை தனது ஆய்விற்காக பிசா தெரிவு செய்தது. இரண்டு மணி நேரம் அது தனது தேர்வை நடத்தியது.

சில செய்தித் துணுக்குகளை அது மாணவர்களுக்கு வழங்கியது. அதற்கு கீழே சில கேள்விகள் கொடுக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு கேள்விக்கு கீழும் நான்கு விடைகள் கொடுக்கப் பட்டிருந்தன. கொடுக்கப் பட்டுள்ள நான்கு விடைகளில் இருந்து சரியானதொரு விடையை தேர்ந்தெடுத்து மாணவர்கள் எழுத வேண்டும்.

ஒரு சம்பவமோ அல்லது கதையோ கொடுக்கப் பட்டிருக்கும். பிறகு அதன் சாரம் மாறாமல் ஆனால் வரிசை மாற்றப்பட்டு நான்கைந்து வாக்கியங்கள் கொடுக்கப் பட்டிருக்கும். அவற்றை சரியான வரிசையில் மாணவர்கள் எடுத்து எழுத வேண்டும்.

மிக எளிதான இந்தத் தேர்வில் நாம் எழுபத்தி மூன்றாவது இடத்தில் இருக்கிறோம். அதாவது பிசா ஆய்வு செய்த எழுபத்திநான்கு நாடுகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளின் கல்வித் தரப் பட்டியலில் நாம் எழுபத்திமூன்றாவது இடத்தில் இருக்கிறோம். அதாவது எழுபத்திநான்கிற்கு எழுபத்தி மூன்று.

புரிந்து கொள்வதும், விவாதித்து தெளிவு பெறுவதும் அதன் மூலம் சமூகச் சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்துவதும்தான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக எப்படியேனும் தேர்ச்சி பெறுவதும் மதிப்பெண் பெறுவதுமே நம் நாட்டில் கல்வியின் நோக்கமாகிப் போனது. அதன் விளைவாகத்தான் எழுபத்திநான்கிற்கு எழுபத்திமூன்று என்ற இடத்தில் நாம் இருக்கிறோம்.

கல்வி சிறந்த தமிழ்நாடு என்றான் பாரதி. பிசா அறிக்கையை முன்னிறுத்தி கல்வியில் தாழ்ந்த தமிழகம் என்கிறார் நலங்கிள்ளி.

தோழர் நலங்கிள்ளிக்கு தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்விமீது அப்படி என்ன கோவம்? வேறொன்றும் இல்லை, பாரதி காலத்தில் மாணவனை சான்றோனாக்க முயற்சித்த கல்வி கட்டமைப்பு இன்று அவனை மனனம் செய்யும் எந்திரமாக மாற்றி வைத்திருக்கிறது.

மாணவனுக்கு புரிய வைக்க வேண்டும், அவன் தெளிவு பெறும் வரை திரும்பத் திரும்ப நடத்த வேண்டும் என்பதில் அக்கறையோடிருந்த கல்விக் கட்டமைப்பு இன்று காணாமல் போனது. மொட்ட மனப்பாடம் பன்னாத, புரிந்து படி என்று ஆசிரியர்கள் மாணவர்களை நெறிப்படுத்திய காலம் மாறி புரியுதோ புரியலையோ மனப்பாடம் செய் என்று குழந்தைகளை எந்திரமாக மாற்றியிருக்கிறோம்.

அதுவும்கூட ப்ளூபிரிண்ட் (BLUE PRINT) நகலை அட்டையில் ஒட்டி வகுப்பறைச் சுவர்களில் மாட்டி வைத்திருக்கிறோம். பிள்ளைகள் அதையும் பிசிறு இல்லாமல் மனப்பாடம் செய்து விடுகிறார்கள். இப்போது எந்தப் பாடம் வாழ்க்கைக்கு முக்கியமானது என்பது பற்றியெல்லாம் மாணவர்களுக்கு தெரிவதில்லை. தெரிவதில்லை என்பதுகூட அல்ல, அக்கறை இல்லை என்பதே உண்மை. எந்த பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் என்பதைத்தான் பிள்ளை பாடங்களை படிக்கும் முன்பு படித்து தெளிவு பெறுகிறான். மதிப்பெண்கள் இல்லாத அல்லது மதிப்பெண்கள் குறைவாக உள்ள பாடத்தை அது வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியமானதாக இருந்தாலும் படிக்காமல் கடந்துவிடுகிறான்.

மனனம் செய்து மதிப்பெண் குவிக்கும் குழந்தைகளுக்கு புரிந்து கொள்ளும் ஞானம் இல்லாமல் போகிறது. பிசா வைத்த மிக எளிய தேர்வுகளில்கூட நம் குழந்தைகளால் தேர்ச்சிபெற இயலாமல் போகிறது. எழுபத்திநான்கு நாடுகளில் எழுபத்திமூன்றாவது இடத்திற்கு நாடு வந்திருக்கிறது.

அவர்கள் வைத்த தேர்வில் ஒன்றைப் பார்ப்போம். குருதிக்கொடையின் அவசியம் குறித்த விளம்பரம் ஒன்றினைக் கொடுக்கிறார்கள். அந்த விளம்பரத்தின் இறுதியில் பதினெட்டு வயது முதல் அறுபது வயதுவரை உள்ளவர்கள் குருதியைக் கொடையளிக்கலாம் என்றும் ஒருவர் எட்டுவார இடைவெளியில் எத்தனைமுறை வேண்டுமானாலும் குருதியைக் கொடை அளிக்கலாம் என்றும் இருக்கிறது. இப்போது கீழே உள்ளவாறு ஒரு கேள்வியை அவர்கள் கேட்கிறார்கள்,

பத்தொன்பது வயது பெண் ஒருவர் கடந்த பன்னிரெண்டு மாதங்களில் இரண்டுமுறை குருதியைக் கொடையளித்திருக்கிறார். இப்போது மீண்டும் கொடை அளீக்க ஆசைப் படுகிறார். அவருக்கு நீங்கள் என்ன ஆலோசனை கூறுவீர்கள் என்பதே கேள்வி.

மிகவும் எளிதான கேள்வி. நம்மிடம் ஆலோசனைக்காக வந்துள்ள பெண்ணிடம் ஒரு வருடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் குருதியை கொடை அளிக்கலாம். அனால் ஒரு முறைக்கும் மறு முறைக்கும் இடையே குறைந்தது எட்டு வாரங்களேனும் இடைவெளி இருக்க வேண்டும். அவள் குருதி கொடையளித்து எட்டு வாரங்கள் கடந்திருக்கும் எனில் தாராளமாக இப்போதும் தரலாம் என்று ஆலோசனை தர வேண்டும்.

இந்த எளிய வினாவிற்கான விடையைத் தருவதில் தமிழத்து மாணவர்கள் தடுமாறியிருக்கிறார்கள். முப்பத்தி ஐந்து விழுக்காடு மாணவர்களே இதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

இதுதான் தோழர் நலங்கிள்ளியை கவலைப் படுத்தியிருக்கிறது. ‘கவியில் தாழ்ந்த தமிழகமே’ என்ற அவரது குரல் கவலை தோய்ந்த குரல். அக்கறை கசியும் குரல்.

பூச்சியத்திற்கே மதிப்பைக் கொடுத்த தமிழ் மண்ணில், கட்டிடத் தொழில் நுட்ப அறிவிற்கு சான்றாக பல்வேறு ஆலயங்களை அணைகளை கொண்டிருக்கும் நாட்டில் இதுமாதிரி எளிய வினாக்களுக்குக்கூட நம் குழந்தைகள் தடுமாறுகிற நிலை ஏன் வந்தது?

இதற்கான ஆகப் பெரிய காரணாங்களுல் ஒன்று தேர்ச்சி விழுக்காட்டிலும் மதிப்பெண் குவிப்பதிலும் நாம் காட்டிய கவனத்தை நாம் அறிவைக் கொடுப்பதில் நாம் செலுத்தவில்லை. ஆசிரியர்கள் குழந்தைகளிடம் ‘பார்த்து, கவனமா நினைவில் வைடா. குறைந்த பட்சம் தேர்வு நாள் வரைக்குமாவது எப்படியாவது நினைவில் வைத்திரு. தேர்வு அறையை விட்டு வெளியே வந்ததும் மறந்துடு’ என்பது மாதிரி கெஞ்சுகிற சூழல்தான் தமிழகத்தில் இருக்கிறது.

மனனம் ஒழிந்தால்தான் கல்வியின் தரம் உயரும். மனனம் ஒழிய வேண்டுமெனில் தேர்வுமுறை மாற வேண்டும். கேரளா பள்ளிக் கல்வித் துறை நடத்தும் தேர்வுகள் நம் கவனத்தை ஈர்க்க வேண்டும். ஒருமுறை கேரளாவில் இருந்து ஏழாம் வகுப்பிற்கான சமூக அறிவியல் கேள்வித்தால் கிடைத்தது.

அதில் பகத்சிங் இந்தியப் பாராளுமன்றத்தில் குண்டுவீசிய சம்பவம் விரிவாக, அடிக்கோடிட்டு வாசியுங்கள் விரிவாக கொடுக்கப் பட்டிருந்தது. அது குறித்து நேரு, காந்தி, படேல் ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகளின் சுறுக்கமும் பகத்தின் வாக்குமூலமும் கொடுக்கப் பட்டிருந்தது. ஏறத்தாழ வினாத் தாளின் இரண்டு பக்கங்களை இவை நிறப்பி இருந்தன. இப்போது மாணவனிடம் கேள்வி கேட்கப் பட்டிருந்தது,

குண்டு வீசிய சம்பவத்தை ஒட்டிய நான்கு தலைவர்களின் கருத்து கொடுக்கப் பட்டிருக்கிறது. அவற்ரை கவனமாக வாசித்து யார் கருத்தோடு உனக்கு உடன்பாடு என்பதையும் அதற்கான காரணத்தையும் சுறுக்கமாக கூறு.

இப்போது மாணாவன் யார் கருத்தோடு ஒன்றிப் போனாலும் அவனுக்கு மதிப்பெண் உண்டு. கருத்துத் திணிப்பு என்பது தேர்வறையிலும் இல்லை. ஆனால் ஏனந்த கருத்தோடு ஒன்றிப் போகிறான் என்பதற்கான காரணத்தை அவன் தெளிவு படுத்த வேண்டும்.

எட்டு பாராக்களில் கேள்வி, இரண்டு மூன்றே வாக்கியங்களில் விடை. போக, இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. இந்தத் தேர்வு முறை மாணவனை தேர்வறையிலும் சிந்திக்க வைக்கிறது. இன்னும் சொல்லப் போனால் வினாத் தாளிலும் கற்றுக் கொள்ளும் விஷயமும் இருக்கிறது.

வினாத் தாள்களைவிடவும் விடைத் தாள்களின் எடை குறைவாக இருக்கிறது. ஒரு பக்கக் கேள்விக்கு ஒரே வரியில் விடை சொல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் அதற்கு வினாத்  தாளையும் மிகக் கவனமாகப் படிக்க வேண்டியிருக்கிறது.

அதனால்தான் கேரளக் கல்வித் தளம் சிறந்திருக்கிறது.

நமது கல்வித் திட்டம் மாறவேண்டும்
கல்வித் திட்டம் மாற வேண்டுமானால் அதற்குமுன் தேர்வுமுறை மாற வேண்டும்
எப்படி மாற்றுவது என்பதற்கும் அருகிலேயே மாதிரிகள் இருக்கின்றன.

கேள்வி இதுதான்,

எழுபத்திநான்கிற்கு ஒன்று என்பதை நோக்கி பள்ளிக் கல்வித்துறை  நகரப் போகிறதா? இல்லை நூற்றுக்கு நூறு என்ற தேர்ச்சி விழுக்காட்டிலேயே சரிந்து கிடக்கப் போகிறதா?

Friday, February 26, 2016

சூடான தேநீராய் ஷோபனாவின் கவிதை

 (சா. ஷோபனாவின் “ அடர் மௌனம்” கவிதை நூலை முன்வைத்து)  

“காலைப் பரபரப்பில்
குடிக்க முடியாமல் ஆறிபோன
தேநீராய் என் கவிதை”

என்று தனது கவிதைகளைப் பற்றி ஷோபனா எழுதுகிறார். இதில் ‘என்’ என்பது ஏறத்தாழ எல்லாப் பெண் படைப்பாளிகளுக்குமே பொருந்தக் கூடிய வார்த்தையாகவே படுகிறது. மூன்று வரிகளுக்குள் பெண் ஆளுமைகள் எதிர்கொள்ளும் தடைகளை, இன்னல்களை, வலிகளை எப்படி இவ்வளவு அழகாக இவரால் சொல்ல முடிகிறது என்பது வியப்பாய்தான் இருக்கிறது.

ஒரு பெண், அதுவும் குடும்பத் தலைவியாய் உள்ள ஒரு பெண் படைப்பாளியாய் உருப்பெறுவது என்பது ஆயிரம்தான் மாநாடுகள் போட்டு மறுத்தாலும் ஒரு ஆண் படைப்பாளியாய் உருப்பெறுவது மாதிரி அப்படி ஒன்றும் எளிதானதல்ல. ஆணுக்குள்ள அத்தனை தடைகளோடும் தான் ஒரு பெண் என்ற தடையையும் தாண்டித்தான் ஒரு பெண் தன்னை படைப்பாளியாய் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஒரு கவியரங்கத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்தே கவிதை வாசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் எந்த வேலையும் பார்க்காமல் கவிதை எழுதுவதிலேயே கவனமாக இருப்பார். அந்த நேரத்தில் குழந்தை பாடத்தில் தனக்கிருக்கும்  சந்தேகத்தை தெளிவுபடுத்துமாறு கேட்டால் தான் கவிதை எழுதிக் கொண்டிருப்பதாகவும், எனவே தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்றும் கூறி காலை சிற்றுண்டி தயாரித்துக் கொண்டிருக்கும் மனைவியிடம் அனுப்பி வைப்பார். அவருக்கும் குழந்தைகளுக்கும் சுடுதண்ணீர் வைப்பதிலிருந்து, அனைவருக்கும் சமைத்து, பாத்திரங்கள் கழுவி, வீடு சுத்தம் செய்து, அனைவர்து துணியையும் சேர்த்தே துவைத்துப் போட்டு எஞ்சிக் கிடைக்கும் நேரத்தில்தான் இவர் கவியரங்கத்திற்கான கவிதையை எழுத வேண்டும். நாள்பூராவும் ஓய்வாய் அமர்ந்து கவிதை எழுதி வரும் ஆண்களை எல்லா வேலைகளையும் முடித்து கிடைக்கும் சன்னமான பொழுதில் கவிதை எழுதி மேடையில் நின்று காண்பிப்பது என்பது இருக்கிறதே, அப்பப்பா அதை அனுபவித்தால்தான் அதன் வலி புரியும்.

“முகமூடி” என்றொரு கவிதை. சந்தேகப் பிராணிகளை பகடி என்றால் பகடி அப்படி ஒரு பகடி செய்கிறார். இந்த சந்தேக சாம்பிராணிகள் மனைவியின் அலைபேசியை ஏதோ காரணம் சொல்லி வாங்கி எண்களை அழுத்துகிற சாக்கில் வந்த போன அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளின் வரலாறை ஆராயும். சோபனா எழுதுகிறார்,

“ முக்கியமான எதையோ
  பார்ப்பதான பாசாங்கில்
  தொடர்பு எண்களின்
  பெயர்களைப் பார்க்கிறாய்”

தெரியும்டா, என்ன செய்கிறாய் என்று. பார், மகனே, பார் என்பதான பகடி பெண்களின் வலியிலிருந்து பிறப்பது என்பதுதான் கொள்ள வேண்டிய விஷயம்.

“என்
ஒவ்வொரு அசைவையும்
 கண்காணிக்கும் கண்கள்
 முகமூடியை மீறியும்
 வெளியே தெரிவதை
 மறைக்க முடியவில்லையென
 உணராமல் இருக்கிறாய் பாவம்”

நீ கண்காணிப்பது தெரியும்டா, எனக்குத் தெரியாது என்று நினைக்கும் அசடே, நீ பாவம்டா என்கிற பகடி தொடக்கம்தான். கண்காணிக்கிறாய் என்பது தெரியும், இனியும் தொடர்ந்தால் செத்தடா மகனே என்பது எம் பெண்களின் அடுத்த நிலையாக இருக்கும், இருக்க வேண்டும்.

”தொலைந்த பொழுதுகள்” என்றொரு கவிதை.

‘எனக்கான உன் நேரம்
எப்போதோ மிக அரிதாய்”

என்று தொடங்குகிறார். மனைவியிடம் செலவு செய்வதற்கு அரிதாய் அவன் ஒதுக்கும் அந்த நேரத்தில் தனது சந்தோசத்தை, ரணத்தை, வலியை அவனோடு பகிர்ந்துகொள்ள துடிக்கும் அவளிடம்

“ ‘ம்’ என
 ஒற்றைச் சொல்லால்
 ஒதுங்கிச் செல்கிறாய்”

என்று முடிக்கிறார். தனக்காகவும் தன் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்காவும் தேய்ந்து அழியும் தனது மனுஷியிடம் பேச நேரற்று காட்டிக் கொள்ளும் ஆண்களை என்ன செய்வது?

“அடர் மௌனம்” இந்தத் தொகுப்பில் உள்ள மிக முக்கியமான கவிதைகளுள் ஒன்று.
இருவருக்கு இடையே இருக்கும் மௌனத்தை யார் உடைப்பது என்பதை மிக அழகியலோடு சொல்லும் கவிதை.

அவரது முதல் தொகுப்பு இது. முதல் தொகுப்பிற்கே உரிய மழலைத் தனங்களும் இவற்றில் உண்டு. இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு செதுக்கியிருக்கலாம் என்கிறமாதிரியான இடங்களும் தொகுப்பில் உண்டுதான். ஆனால் பெண்ணின் வலியை, அதன் ஆழம் கெடாமல் இவ்வளவு மென்மையான வார்த்தைகளால் சொல்வதென்பது யாருக்கும் சிரம்மான விஷயம்தான்.

மிக நல்ல தொடக்கம். சுறு சுறுப்பான குடும்பத் தலவி, நல்ல அலுவலர், அது கடந்தும் தான் சார்ந்த ஊழியர் சங்கத்தின் டிவிஷனல் பொறுப்பாளர் என்கிற எல்லா நிலைகளையும் தாண்டி கவிதைக்கும் அவர் எப்படி நேரம் ஒதுக்குகிறார் என்பது வியப்பாய்த்தான் இருக்கிறது.

ஒரே ஒரு வேண்டுகோள்தான் அவரிடம் இருக்கிறது. கவிதை வருகிறது, விடாது தொடர்ந்து எழுதுங்கள்.

“ஒவ்வொரு பறவைக்கும்
வானில் இடம் உண்டு”

என்று எழுதுகிறார். கவிதை வானில் இவரது கவிதைகளுக்கும் நிச்சயமாய் இடம் உண்டு.

தொடர்புக்கு,
ரங்கநாயகி பதிப்பகம்
33,ஏ, நித்யா நகர் இரண்டாவது தெரு,
கன்ன்ங்குறிச்சி
சேலம் 636008

Thursday, February 25, 2016

பஜ்ஜி அவ்வளவு சூடாயிருக்கிறதாம்.

அப்போது கிருத்திகா கிருஷ்ணகிரியில் இருந்தாள். அவளை பார்த்துவிட்டு  திரும்பிக் கொண்டிருந்தேன். நல்ல அசதி. அப்படியே கண்ணயர்ந்து விட்டேன்.
திடீரென்று ஒரு பையனின் குரல் என்னை எழுப்பியது.
பஜ்ஜி விற்றுக் கொண்டிருந்தான்.
“ சூடான பஜ்ஜி, சுவையான பஜ்ஜி. சூடோ சுவையோ இல்லாமப் போனா பணம் வாபஸ்”
அப்படியே இழுத்துப் போட்டது.
ஒரு சின்னத் தாளால் பஜ்ஜியை விசிறிக் கொண்டே போனான். பஜ்ஜி அவ்வளவு சூடாயிருக்கிறதாம்.
பஜ்ஜி என்ன விலை என்பதல்ல பிரச்சினை. அதை விற்க அவன் கையாளும் யுக்திதான் அலாதியானது.
நல்ல யுக்திகளை விற்பனைக்கு பயன் படுத்துபவனுக்கு நோபல் உண்டென்றால் சத்தியமாய் அவனுக்கு அதற்கான தகுதி உண்டு.
அவனை பாராட்ட வேண்டும் என்று எனக்கு உறைக்கும் முன்னமே பேருந்து புறப்பட்டு விட்டது.
தர்மபுரி பேருந்து நிலையத்தில் பேருந்து பேருந்தாய் ஏறி பஜ்ஜி விற்கும் அவனை யாராவது பார்த்தால் ஒரு லூசு உன்னை பாராட்டி எழுதியிருக்கிறான் என்று சொல்லுங்கள்.

அழைப்பு 25


நாளை பிற்பகல் மூன்று மணிக்கு நாட்றாம்பள்ளி ‘கலைமகள் கல்வியியல் கல்லூரி’ மாணவர்களிடம் உரையாற்றுகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வந்தால் சந்திக்கலாம்

அழைப்பு 24



நாளை காலை பத்து மணிக்கு ஏலகிரிமலை தொன்பொஸ்கோ வளாகத்தில் ‘அண்ணா அறிவகம் கல்வியியல் கல்லூரி’ மாணாவர்களோடு உரையாடுகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வந்தால் சந்திக்கலாம்

Wednesday, February 24, 2016

உங்களால் முடியும்

                                         
தோழர்கள் Meena SomuGeeta Ilangovan, மற்றும் தயாமலர்ஆகியோர் தினமும் அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை முகநூல் வழியாக எடுத்துச் சொல்வது என்று முடிவெடுத்து சிறப்பாக அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர். இன்னும் இதை யாரேனும் செய்கிறார்களா என்று தெரியவில்லை. இருப்பின் அவர்களையும் இவர்களோடே சேர்த்து நன்றியோடு பாராட்டிவிடுவோம்.
மிகச்சரியான நேரம், மிகச்சரியான ஊழியம்.


இந்த மூன்று தோழர்களையும் மரியாதையோடு கவனித்தே வருகிறேன். அவலங்களைச் சுட்டுவது என்பதே பெரிய விஷயம். அதற்கே ஒரு தைரியம் வேண்டும். அது கடந்து அவலங்களை சரி செய்ய முயற்சித்தலை இவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.


ஒருமுறை முன்னாள் மத்திய அமைச்சர் மாண்பமை ராசா அவர்களின் சகோதரர் திரு கலியபெருமாள் அவர்களோடு ஒரு கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. “நண்பர் ராசா போன்றவர்கள் இன்று தெருவிலே நடந்தால் ஆதிக்கத் திரள்கூட எழுந்து நிற்கிறது. மடித்துக் கட்டியுள்ள வேட்டியை அவிழ்த்து விடுகிறது. இது அம்பேத்கரால் கிடைத்த மரியாதை. அம்பேத்கர் காலத்தில் அவருக்கே கிடைக்காத மரியாதை” என்று அப்போது பேசினேன். கலியபெருமாள் அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு சரியாய் சொன்னீர்கள் என்றார்.
இப்போது நமக்கு கிடைக்கும் மரியாதைக்கு அண்ணலின் பங்கு அளப்பரியது.
மீண்டும் அந்தத் தோழர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் அவர்கள் அடுத்த கட்டத்திற்கும் நகரவேண்டும் என்று விண்ணப்பிக்கின்றேன்.
வாய்ப்பு கிடைக்கும் போது ஒத்திசைந்த தோழர்கள் ஒன்று கூடுங்கள், உரையாடுங்கள், எண்ணிக்கையை அதிகப் படுத்துங்கள், துண்டறிக்கை போடுங்கள், நகருங்கள்.
நம்புகிறேன், உங்களால் முடியும்.
நாங்களுமிருக்கிறோம்.

நெஞ்சறிந்து பொய்சொன்னீர்கள்

எல்லாம் பொய் என்று நிரூபணமாகி விட்டது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டார்கள் என்று அந்தக் குழந்தைகள்மீது தேசவிரோத வழக்குத் தொடுத்தீர்கள்.
ஊடகம் வெளியிட்ட ஆவணம் பொய் என்றும் தாங்கள்தான் வேண்டுமென்றே அதைச் செய்ததாகவும் அந்த தொலைக்காட்சி நிறுவனமே ஒத்துக் கொண்டிருக்கிறது.

அந்தக் குழந்தை உமர்காலித் பதினெட்டுமுறை பாகிஸ்தான் சென்று பயிற்சி எடுத்து வந்த தீவிரவாதி என்று குற்றம் சுமத்தினீர்கள்.
அவன் ஒருமுறைகூட பாகிஸ்தானுக்கு போனதில்லை என்பதும் அவனிடம் கடவுச்சீட்டே இல்லை என்பதும் நிரூபணமாகியிருக்கிறது.
திரும்பத்திரும்ப ஊடகங்களிலும் தெருக்களிலும் இறங்கி எங்களை எங்கள் பிள்ளைகளை தேசத்துரோகிகள் என்று நெஞ்சறிந்து பொய்சொன்னீர்கள்
பெற்றோரை தாக்கினீர்கள்
இந்தக் குழந்தைகளின் சகோதரிகளை வன்புணரப் போவதாகவும் ஆசிட் ஊற்றி சிதைக்கப் போவதாகவும் மிரட்டினீர்கள்
ஒரு பெரியமனிதர் எங்கள் குழந்தையை அவளது தந்தையே சுட்டுக்கொல்ல வேண்டுமென்று வெறிகொண்டு கூச்சலிட்டார்
ஒரே கேள்விதான்,
எல்லாம் பொய் என்று நிரூபணமாகியுள்ள நிலையில் புரளியைப் பரப்பியவர்களை, எங்கள் குழந்தைகளை வன்புணர்வோம் என்றும் அவர்கள்மீது ஆசிட் ஊற்றுவோம் என்றெல்லாம் மிரட்டியவர்களையும் எப்போது கைது செய்யப் போகிறீர்கள்?

Tuesday, February 23, 2016

முதலில் கொஞ்சம் வெட்கப்படுங்கள்


நேற்று நான் சொன்னதை அப்படியே அச்சுப் பிசகாமல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் மாண்பமை வெங்கையநாயுடு அவர்கள் கூறியுள்ளார்.
"இடதுசாரிகள்மீது ராஜா கூறியுள்ளவை ஏற்புடையவையல்ல. ராஜா நாகரீகமாக பேசுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் " என்று கூறியிருக்கிறார்.
திரு.ராஜாவிடத்து ஒன்றும் திரு.வெங்கையநாயுடு அவர்களிடம் ஒன்றும் நமக்குண்டு.
1) நீங்கள் நாகரீகம் கற்கவேண்டும் என்று சொல்பவர் உங்கள் எதிரியல்ல திரு. ராஜா அவர்களே. உங்கள் கட்சியின் முன்னாள் தலைவர், மிக மூத்த தலைவர். உங்கள் கட்சியே நீங்கள் கூறியவற்றை நிராகரிதிருக்கிறது.
முதலில் கொஞ்சம் வெட்கப்படுங்கள். பிறகு வருத்தப்படுங்கள். நாவடக்குங்கள்.
2 ) உங்கள் கூற்றுப்படியே திரு ராஜா அவர்கள் அநாகரீகமாகப் பேசியுள்ளார். நீங்களே ஏற்கமுடியாததை பேசியிருக்கிறார். நீங்கள் ஏற்கமுடியாததை பேசிய கீர்த்தி ஆசாத்மீது எடுத்த நடவடிக்கையையேனும் திரு ராஜாமீது எடுக்க வேண்டாமா?
இப்படி இன்னொருமுறை உளறினால் நடவடிக்கை எடுப்போம் என்றாவது நீங்கள் சொல்லியிருக்க  வேண்டாமா?

மன்னார்குடி உரை குறித்து தினமணி


Monday, February 22, 2016

உங்களுக்கும் சொல்லிவிட்டேன்

பள்ளிக்குப் போய்க்கொண்டிருந்தேன். கல்லூரி மாணவர்கள் சிலர் அலை பேசியில் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தனர்.

எல்லா பயணிகளுக்கும் பயணச்சீட்டுகளை வழங்கி முடித்ததும் ஒரு மாணவனிடம் வந்தார் நடத்துனர்,

“இப்ப யாருக்கு  எஸ் எம் எஸ் அனுப்புற?”

“கோபிக்குத்தான்”

“ இங்க இருந்து ரெண்டாவது சீட்ல இருக்கவனுக்கு எஸ் எம் எஸா?”

எல்லோருக்கும் நன்கு தெரிந்த நடத்துனர் போலும்.

“க்ளோபல் வார்மிங்னா என்னான்னு தெரியுமாடா சதீஷ்?”

“அதுக்கென்னங்கண்ணே?”

”இல்லடா முன்னெல்லாம் நிறைய சிட்டுக்குருவிகளப் பார்க்க முடியும். நம்ப வீட்டு சைடு எவ்வளோ பார்க்கலாம். இப்ப எங்கயாச்சும் தட்டுப் படுதாடா?”

“இல்ல”

“ இவ்வளோ எஸ் எம் எஸ் அனுப்பினா எப்படி இருக்கும்?”

“அதுக்கும் இதுக்கும் என்னண்ணே”

“ படிக்கிறதானே. இதுகூட தெரியாதா”

அவர் பேச ஆரம்பித்ததும் மற்ற பசங்க , “மாட்னாண்டா மாப்ள. நாம பிச்சுக்குவோம் “ என்று  நகர்ந்து போனார்கள்.

அவன் கவனிக்கிரானா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலைப் படவில்லை அவர். முன்பெல்லாம் பெரம்பலூரிலிருந்து திருச்சி வருவதற்குள் ஏராளம் தேன் கூடுகள் தட்டுப்படும் என்றும், தற்போது தேன்கூடுகளையே காண முடியவில்லை என்றும், செல் வந்ததுதான் இதற்கு காரணமென்றும், செல்லை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டே போனார். இல்லாது போனால் இயற்கை சம நிலை பாதிக்கும் என்றும் அவர் சொன்னதை எல்லாம் அவன் கேட்டானோ என்னமோ நான் கேட்டேன்.

உங்களுக்கும் சொல்லிவிட்டேன்

கவிதை 41



நிழலுக்கு ஒதுங்கியவளின்
இடுப்புக் குழந்தையின் 
பொக்கைச் சிரிப்பில்
சரிந்து 
சன்னமாய் ஆசைப்பட்ட புத்தனை
இலைசொரிந்து தீட்சித்தது போதி

Sunday, February 21, 2016

வேண்டுகோள்

என்னதான் எனக்குப் பிடிக்காது என்றாலும் இந்த தேசத்தை ஆளுகின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சியின் தேசியச் செயலாளரான உங்களிடம் கண்ணியத்தையும் நாகரீகத்தையும்  இன்னமும் எதிர்பார்ப்பது தவறா மரியாதைக்குரிய ராஜா அவர்களே

மாத்தி செய்வோம்

நமது மற்றும் நமது குடும்பத்தினரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களின்போது அருகில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இல்லங்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கி அவர்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம். சிலர் ஒரு வேளை உணவினை அவர்களுக்கு வழங்கி மகிழ்கிறோம்.  அந்தக் குழந்தைகளும் நமக்காக பிறந்த நாள் வாழ்த்தோ மணநாள் வாழ்த்தோ பாடி, நமக்காக பிராத்திக்கிறார்கள்.

பல ஆதரவற்றோர் இல்லங்கள் இது மாதிரியான நிகழ்வுகளை தங்களது இல்லங்களில் கொண்டாடி ஆதரவு தருமாறு செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் விளம்பரமே செய்கிறார்கள்.

பிறந்த நாள் மணநாள் தாண்டி சிலர் பண்டிகை நாட்களையும் இத்தகைய ஆதரவற்றவர்களோடு கொண்டாடி மகிழ்கின்றனர்.

தங்கையின் கணவர் சிவா தனது திருமணத்தையே இப்படி ஒரு இல்லத்தில்தான் கொண்டாட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தார். எனக்கும் அதில் முழுக்க முழுக்க உடன்பாடு என்றாலும் இரண்டு குடும்பங்களிலும் எழுந்த நெருக்கடிகளை எங்களால் சமாளிக்க முடியாமல் போனது.

இப்படி ஒருமுறை எனது தங்கை மகள் நிவேதிதாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கருங்குளத்தில் உள்ள ஒரு ஆதரவற்ரோர் காப்பகத்திற்கு சென்றிருந்தோம்.

அப்போது, ஆறு வயது குழந்தைகள் சிலர்கூட பாப்பாவை கொஞ்சி வாழ்த்தினார்கள். இந்தக் குழந்தைகளே கொஞ்சப் படவேண்டியவர்கள் அல்லவா என்கிற எண்ணம் அப்போது வந்தது.

இவர்களுக்கும் பிறந்த நாள் இருக்குமே?

குடைச்சலுக்கு உள்ளானேன்.

நமது பிறந்த நாளை அத்தகைய இல்லங்களில் சென்று கொண்டாடுவதை விடவும் அந்தக் குழந்தைகளின் பிறந்த நாளை அங்கு சென்று கொண்டாடினால் அது இதைவிடவும் பொருளுள்ளதாக அமையுமே என்று தோன்றியது.

முடியுமா?

எத்தனை இல்லங்கள்? எத்தனை குழந்தைகள்?

சாத்தியமா?

முற்சிப்போம் என்று தோன்றுகிறது. முன் முயற்சியாக கருங்குள்ம் இல்லத்தில் உள்ள குழந்தைகளின் பிறந்த நாட்களை வாங்குவது என்று முடிவெடுத்திருக்கிறேன். அநேகமாக 50 குழந்தைகள் இருப்பார்கள்.

என்னால் 4 குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடிவிட முடியும், நிச்சயமாக தங்கையின் கணவர் சிவா ஒரு ஐந்து குழந்தைகளின் பிறந்த நாட்களை எடுத்துக் கொள்வார், தோழர் இஸ்மாயிலோடும் சுரேஷோடும் பேசினால் அவர்களும் சரி என்பார்கள்.

தோழர்கள் கை கொடுத்தால் இந்த ஒரு இல்லத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஜமாய்த்து விடலாம் என்று தோன்றுகிறது.

அவரவர் அவரவர் பகுதியில் விரித்துச் சென்றால் ...

தோழர்கள் இருக்கிறார்கள்...

தொடங்க இருக்கிறேன்.

பின் குறிப்பு: சென்ற ஆண்டில் இதை செயல்படுத்த முடியாமல் போனது. இந்தக் கோடையிலாவது முயற்சியைத் தொடங்க வேண்டும். 

உலகத் தாய்மொழி நாள்



'உலகத் தாய்மொழி நாள்' நிகழ்ச்சியில் உரையாற்ற மன்னார்குடி வரவேண்டும் என்று கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் தோழர் காமராசு அழைத்தபோது அப்படி ஒரு மகிழ்வோடு ஒத்துக் கொண்டேன். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் இருக்கும் மன்னார்குடியில் உரையாற்றி.

'காட்' எப்படி மொழியைக் காவு வாங்கும் என்பது குறித்தும்,

பிசா ஆய்வில் இந்தியா அதள பாதாளத்தில் விழுந்து கிடப்பதற்கு தாய்மொழிவழி கல்வியிலிருந்து நாம் விலகி நிற்பதன் காரணம் குறித்தும் உரையாற்றினேன்

இதுமாதிரி சிறிய அளவிலான கூட்டங்களே பேரதிகமாய் நம்பிக்கையளிக்கின்றன.

Saturday, February 20, 2016

வினாவை மாற்றியதற்கே...

பொதுவாகவே அறமாக இருப்பினும் இலக்கணமாக இருப்பினும் குழந்தகளுக்கு சொல்லிக் கொடுக்கும் போதும் வினாத் தாள்களிலும், முதலாளிகளை புத்திக் கூர்மையானவர்களாகவும், யோக்கியர்களாகவும் வேலையாட்களை முட்டாள்களாகவும், திருடர்களாகவும் சித்தரிப்பதென்பது வழக்கமாக உள்ளது.
நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய கேள்வித் தாள்களைக் கொண்டு நடத்திக் கொண்டிருந்த போது,
"The servant was faithless to his master. He stole his watch"
என்றிருந்தது. நானதை மாற்றி,
“ The master was faithless to his servant. He stole his sweat"
என்றெழுதி நடத்தினேன். முடித்து வரும் போது ஒரு குழந்தை என்னைத் தொடர்ந்து வந்தாள்,
“ என்ன சாமி?”
“ ரொம்ப தேங்க்ஸ் சார்”
“ எதுக்குடா?”
” கொஸ்டீன மாத்தி எழுதி நடத்துனதுக்கு”
“ என்னடாம்மா”
“ தெரியும் சார். இதே கொஸ்டீன பக்கத்து வீட்டு அக்கா எனக்கு நடத்துனாங்க சார்”
அவள் கண்களில் ஈரம் படர்ந்திருந்தது. வினாவை மாத்தினதுக்கே இப்படி நெகிழ்கிறாளே இந்தக் குழந்தை. சமூகமே மாறினால் எப்படி இருக்கும்?
அப்படி ஒரு நிலமை வராதா?
வரும்

ஒரு அழைப்பு



2013 ஆம் ஆண்டு இதே நாளில்
***********************************   

ஒரு அலைபேசி அழைப்பு ஒரு மனிதனை உசுப்பி உற்சாகத்தின் விளிம்புக்கு அழைத்துப் போகுமா?

போனது.

இன்று மதியம் பேராசிரியர் கல்யாணி அவர்களிடமிருந்து அழைப்பு.

” இவனுக்கு அப்போது மனு என்று பேர்” பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். 5 நூல்களை அனுப்புமாறு கேட்டபோது என்மீது எனக்கொரு பிடிப்பும் மரியாதையும் வந்தது.

வீட்டிற்கு வருவேன் எட்வின். விக்டோரியாவையும், கீர்த்தனாவையும் பார்த்து பேசனும் என்று அவர் பேசிய பொழுது கண்கள் துளிர்க்க ஆரம்பித்துவிட்டது.

தோழர் Thaai Thaai Suresh அவர்களுக்கு நான் இரண்டு வகைகளில்கடமை பட்டிருக்கிறேன்.

அவர் உரிமையோடு கேட்ட ஒரு உதவியை செய்ய இயலாத நிலையில் இருந்தேன். அது ஒன்று.

சொல்லுக்கும் வாழ்க்கைக்கும் கொஞ்சமும் இடைவெளியற்ற ஒரு மனிதரோடு தொடர்பேற்பட காரணமாய் இருந்தது இரண்டு.

நன்றி சுரேஷ்.

பேராசிரியர் அய்யா உங்களது வருகைக்காக ஏங்கித் தவமிருக்கிறது நம்ம வீடு

Friday, February 19, 2016

கண்டணம்


1) உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது மாதிரி  அரசுப் பணிகளில் மூன்று சதவிகித ஒதுக்கீடு கேட்கிறார்கள்.

இதில் பிழையேதுமில்லை என்பது மட்டுமல்ல சரி என்றும் படுகிறது.

2)   நாற்பது விழுக்காட்டிற்கும் மேல் ஊனம் உள்ளவர்களுக்கு மற்ற சில மாநிலங்களில் உள்ளதுபோல் மாதம் ₹ 5000   உதவித்தொகை கேட்கிறார்கள்.

இதுவும் சரிதான்

இவற்றையும் இன்னபிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்தான்.

இவற்றை நிறைவேற்றுவதில் சிக்கலிருப்பின் அது குறித்து தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தையாவது நடத்தியிருக்க வேண்டும் குறைந்த பட்சம்.

அதை முறைப்படி செய்யாதது ஆணவமெனில் அவர்களை நடத்திய விதம் ஆணவத்தின் உச்சம்.

எற்கனவே நொந்து போயிருக்கும் அவர்களை அலட்சியப் படுத்துவது கண்டனத்திற்குரியது.

ஒரு மரணத்திற்குப் பிறகும் பதறாத அரசைக் கண்டிக்க வேண்டும்.

இளைய மகன்


உள்ளே அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று வெளியே விக்டோரியாவின் குரல் உரத்துக் கேட்டது.

“ இதெல்லாம் உங்க அப்பாகிட்ட வச்சுக்கனும். நம்மகிட்ட கத ஆகாது. கரியப் பிச்சுப் புடுவேன் பிச்சு”

கீர்த்தி ஏதாவது செய்து வாங்குகிறாளா?

” சொன்னா கேக்க மாட்டியா? ஒரே திருகு வீசம் கரிய எடுத்துடுவேன். இதெல்லாம் உங்க அப்பாகிட்ட”

சத்தம் உரக்கவே வெளியே எட்டிப் பார்த்தேன்.

கீர்த்தியில்லை.

தோனி விக்டோரியாவை உள்ளே விடாமல் தொத்துக் கால் போட்டு மறித்துக் கொண்டிருந்தான்.

ஒரு புன்னகையோடு உள்ளே திரும்பினேன். திரும்பும் போது எதிர்த்த வீட்டு பாட்டியும் சேட்டுவும் சிரித்துக் கொண்டே உள்ளே போவதைப் பார்த்தேன்.

புரிந்தது,

என்னை மட்டுமே டோனியின் அப்பாவாய் சொல்லிக் கொண்டிருக்கும் விக்டோரியாவை தோனி தாயாகவே பாவிப்பதும்  விக்டோரியாவும் தோனிக்கு தாயாகவே இருப்பதும்.

அழைப்பு 23



நாளை 20.02.16 மாலை மன்னார்குடியில் உரையாற்ருகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வந்தால் சந்திக்கலாம்.

Thursday, February 18, 2016

மீண்டும் மீண்டும் குழந்தைகளே ஜெயிக்கிறார்கள்.

17.12.2012 இல் எழுதியது
****************************************

மூன்று மாதங்களாக ஒழுங்காக சர்க்கரை மாத்திரை சாப்பிடாததால் தள்ளத் தொடங்கியது. ஒருமுறை சாலையில் நடக்கும் போதே விழுந்திருக்கிறேன். சென்னை திருச்சி பிரதான சாலை. வாகனம் எதுவும் வராததும், என் பழைய மாணவர்கள் சிலர் அருகே இருந்ததும் கூட இன்று என்னிடம் நீங்கள் இப்படி இம்சைப் படுவதற்கு காரணம் எனலாம்.
பள்ளியில் நண்பர்கள் கடிந்து கொண்டார்கள். மூன்று மாதங்கள் மருந்தினைத் தவிர்த்ததால் மருத்துவரைப் பார்க்கவும் பயம். ஒரேடியாக எகிறிப் போயிருந்தது சர்க்கரை அளவு.
ஒரு வழியாய் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மருத்துவரிடம் போனோம்.
நல்ல கூட்டம். சீரான இடைவெளியில் வரிசை நகர்ந்து கொண்டே இருந்தது.
விக்டோரியாவுக்கு அருகில் ஒரு மூன்று அல்லது நான்கு வயது பையனை மடியில் அமர்த்தியவாறு பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்த படியே அமர்ந்திருந்தார்.
சோதனைக்கு என்று அவருக்கு முன்னால் போனவர் வெளியே வர மிகவும் ஆகவே எரிச்சலாகிப் போனவர்,
“ இத்தனை பேரு வரிசைல இருக்கோம் போனமா வந்தமான்னு வர வேணாம்?”
மடியில் அமர்ந்திருந்த பையன் அவரது வாயில் ஆட்காட்டி விரலை வைத்தவாறு சொன்னான்,
“ அப்படி எல்லாம் சொல்லக் கூடாதும்மா. போன மாமாவுக்கு பெரிய காய்ச்சலா இருக்கும். எனக்கு சின்ன ஜுரம்தானே.”
மீண்டும் மீண்டும் குழந்தைகளே ஜெயிக்கிறார்கள்.

Wednesday, February 17, 2016

18 விலை அதிகம் சரக்கு மோசம்

‘காட் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டால் கல்வி என்ன செத்தா போய்விடும்?’ என்று கேட்ட என் தோழனை, ‘ஆமாம், செத்துதான் போகும், செத்தேதான் போகும்’ என்ற என் பதிலை விடவும் அதை சொன்னபோது எனக்கேற்பட்ட படபடப்பு மிகவும் பாதித்திருக்க வேண்டும். 

‘என்னதிது ஒரு சாதாரண விஷயத்திற்கு இவ்வளவு பதறுகிறாயே? நான்கூட உனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்தே போனேன்’ என்று சொன்ன என் தோழன் ஒரு முனைவர். இரண்டு விஷயங்கள் எனது முகத்தில் அறைந்தன.

உயர் கல்வியை உடனடியாக காவு வாங்கும் காட் ஒப்பந்தம் ஒரு சீரான வேகத்தில் மொத்தக் கல்வியையும் அழித்துப் போடும் என்ற விவரம் முனைவர் ஒருவரையே இன்னும் சென்றடையவில்லை என்பது.
ஒரு முனைவரையே இந்த ஆபத்து குறித்த தகவல் போய் சேராத பட்சத்தில் பொதுத் தளத்தில், சமூக வளைதளங்களில் நாம் என்னதான் செய்து கிழித்தோம் என்ற ஆற்றாமை.

அந்த நண்பரது அறிவாற்றலும் சமூக அக்கறையும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. வாசித்துக் குவிக்கிற வெறிகொண்ட வாசகர் அவர். இன்றைய பாடத்திட்டம், தேர்வுமுறை போன்றவற்றோடு வெகுவாக முரண்பட்டு அவற்றிற்கான எதிர்ப்பியக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். அப்படிப் பட்டவருக்கே இதன் பின் விளைவுகள் இன்னமும் போய்ச் சேரவில்லை எனில் சராசரி ஜனங்களுக்கு எப்படிப் போய்ச் சேரும்.

காட் ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டால் நாட்டில் புதிது புதிதாய், பெரிது பெரிதாய், தரமான உயர் கல்விக் கூடங்கள்  வந்து சேரும் என்று ஒரு மாயை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த மாயையின் கவர்ச்சிகரமான வெளிச்சத்தில் மத்திய மற்றும் நடுத்தர மக்களில் ஒரு பகுதியினர் அரசு இதை எப்போது செய்யும் என்றுகூட எதிர்பார்க்கவும் செய்கின்றனர்.

காட் ஒப்பந்தத்தின் வழியாக உயர் கல்வி நிறுவனங்களுக்கு வாசலைத் திறந்துவிடும் பிரிவில் கையெழுத்துப் போடும் உரிமை இந்த நாட்டின் கல்வி அமைச்சருக்கு இல்லை. அதை செய்ய வேண்டியது வர்த்தகத் துறை அமைச்சர் என்ற உண்மையே இந்தப் பிரிவின் சாரத்தை நமக்குத் தெளிவு படுத்துகிறது. 

இது மட்டுமல்ல, அயல்நாட்டு கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தும் கல்வி நிலையங்கள் சர்வதேசத் தரத்துடன்தானே இருக்கும் என்பதுகூட பொய்களைப் பிசைந்து செய்த ஒரு ஏமாற்றுப் பிம்பம்தான். 

2004 ஆம் ஆண்டு அன்றையப் பிரதமர் மாண்பமை நரசிம்மராவ் அவர்கள் காட் ஒப்பந்தத்தில் விருப்பக் கையெழுத்திட்டபோது சில விஷயங்கள் பளிச்செனத் தெரிய ஆரம்பித்தன. காட் எந்தவிதமான ஒளிவு மறைவும் இன்றி நிதி முதலீட்டார்களின் நலன்தான் இதில் பிரதானம் என்பதைத் தெளிவு படுத்தியது. நடைமுறைப் படுத்தப் படும் திட்டம் வெற்றி பெறுகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை. நடைமுறை பலனளிக்காவிட்டாலும் முதல் போட்டவனுக்கு நட்டம் வராமல் அந்தந்த அரசாங்கங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவுபட சொன்னது.

நாடே சந்தையாய் மாறிப்போன ஒரு சூழலில் கல்வி சரக்காகவும் மாணவர்கள் நுகர்வோராகவும் மாறிப் போக வேண்டும் என்கிறது. 

தரமான கல்வியும் மருத்துவமும் தேவை எனக் கோரும் மக்கள் அதற்கான செலவை செய்துதான் ஆகவேண்டும் என்று காட்டின் ஒரு ஷரத்து சொல்கிறது.  

நுகர்வோரைப் பற்றியோ அவனுக்கு கிடைக்கும் கல்வியின் தரம் பற்றியோ எந்தக் கவலையும் கொள்ளாத ழதே நேரம் முதலுக்கு மட்டும் சேதாரம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அந்நிய கல்வி என்பது வடிகட்டிய மூன்றாம்தர வியாபாரம்.

லாபமோ நட்டமோ அதுபற்றி நமக்கென்ன கவலை? அந்நிய மூலதனம் கொண்டு கட்டப்படும் கட்டமைப்பு தரமானதாகத்தானே இருக்கும் என்கிற சராசரி பொதுப் புத்தியையும் தவறென்று சொல்கிறது உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு கருத்து. ‘வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த, கல்விக்கு பெயர்போன பல்கலைக் கழகங்கள்கூட பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் கொஞ்சமும் தரமற்ற பல்கலைக் கழகங்களையே கட்டமைத்துள்ளன’ என்கிற உலக வங்கியின் 2000 வருடத்தின் ஆய்வறிக்கையின் ஒரு பகுதியை தோழர் நியாஸ் அவர்கள் இயல்வாகை வெளியிட்டுள்ள ‘களவு போகும் கல்வி’ என்கிற தனது குறுநூலில் வைத்திருக்கிறார். இந்தக் கருத்தை இடதுசாரிகளோ அல்லது அவர்களின் மாணவர் அமைப்புகளோ கூறியிருந்தால்கூட இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கூறலாம். காட் ஒப்பந்தத்தை ஆதரிக்கக் கூடிய இன்னும் தெளிவாக சொல்வது என்றால் கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட எது ஒன்றும் சேவை அல்ல என்பதை அரசாங்கங்களுக்கு தெளிவாக அறிவுறுத்தக் கூடிய ‘உலக வங்கி’ தான் இதை சொல்கிறது என்பதால் இதில் சன்னமான அளவிற்குக் கூட பொய் இருக்க வாய்ப்பில்லை.

மேல்தட்டு வர்க்கமும், மத்தியதர வர்க்கமும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை வரவேற்பதற்கு அவை அரசு மற்றும் உள்ளூர் தனியார் பல்கலைக் கழகங்களை விடவும் தரமான கட்டமைப்போடு தரமான பேராசிரியர்களைக் கொண்டு நல்ல உயர் கல்வியை தம் பிள்ளைகளுக்கு கொடுக்கும் என்ற நம்பிக்கையில்தான்.

‘குறைவான விலை தரமான சரக்கு’ என்பதுதான் மக்களை ஈர்க்கும் விளம்பரமாக ஒரு காலம் வரைக்கும் இருந்தது. இந்த விளம்பரம் மக்களை ஈர்ப்பதில் பிரச்சினை ஏற்பட்டபோது ‘ஈகிள் சீயக்காய்’ நிறுவனம், ‘விலை அதிகம் சரக்கு நயம்’ என்கிற விளம்பரம் மூலம் மக்களை சலனப் படுத்துவதில் வெற்றி கண்டது. அதிக விலை கொண்ட சரக்குதான் தரமானதாக இருக்க முடியும் என்கிற ஒரு மோசமான விஷயத்தை பொதுப் புத்தியில் விதைக்கிற முயற்சியில் வெற்றி பெற்ற விளம்பர யுக்தி அது. இன்னொரு புள்ளிக்கு மேல் நகர்ந்து மக்கள் மத்தியில் நல்ல சரக்கை குறைந்த விலைக்குத் தர இயலாது என்கிற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைத்தது. இன்னும் கொஞ்சம் மேலே போய் குறைவான விலைக்கு கிடைக்குமானால் அது தரமற்றதாகத்தான் இருக்கும் என்றும் மக்களை பையப் பைய நம்ப வைத்தது.

இலவசமாக அல்லது குறைந்த செலவில் கிடைக்கிற காரணத்தினாலேயே பொதுக் கல்வி தரமற்றதாகத்தான் இருக்கும் என்று கட்டமைக்கப்பட்ட பொதுப் புத்தி மக்களை தனியார் கல்வி நிலையங்களை நோக்கி விரட்டித்தள்ளிய முக்கியமான காரணிகளுள் ஒன்றாகக் கொள்ளலாம்.

ஆனால் ‘விலை அதிகம் சரக்கோ மோசம்’ என்று உலக வங்கியே சான்றளித்த பின்பும் அதைத் தன் மண்ணில் கொண்டு வந்துவிடத் துடிக்கும் அரசாங்கத்தின் வெறிகொண்ட ஆசையைத்தான் அம்பலப் படுத்தி அதற்கெதிராக மக்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு ‘தேசம் காத்தலின்’ ஒரு கூறே ஆகும்.

இதைவிட மிக முக்கியமான ஆபத்தான ஷரத்தொன்றும் காட்டில் இருக்கிறது. Government procurement article X111 என்கிற காட்டின் ஷரத்தொன்றினை தோழர் நியாஸ் தனது ‘களவு போகும் கல்வி’ யில் வைத்திருக்கிறார்.

இந்த ஷரத்தைப் புரிகிறமாதிரி சொல்வது அவசியம் என்று தோன்றுகிறது. ‘ஒரே வகைக்குள் அடங்குகிற கல்வி நிலையங்களுக்கு ஒரே விதமான சலுகைகளை அரசாங்கம் வழங்க வேண்டும்’ என்கிறது அந்த ஷரத்து.

மேலோட்டமான ஒரு வாசிப்பில் இது சரியானதென்றே தோன்றும். எல்லா கல்வி நிலையங்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்றுகூட தோன்றும்.

‘ஒரே வகையான கட்டமைப்பிற்குள் அடங்குகிற’ என்றால் என்ன என்று பார்ப்போம். இலவசமாக கல்வி வழங்குகிற தனியார் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் யாவும் இவை இலவசமாக கல்வியைத் தருவதால் இவை யாவும் ‘ஒரே வகையான கட்டமைப்பிற்குள் அடங்குகிற’ தன்மை கொண்டவை.

ஒரே கட்டமைப்பில் அடங்குகிற கல்வி நிலையங்களுக்கு ஒரே மாதிரி அசலுகைகளைத்தான் அரசு வழங்க வேண்டும் என்று தெளிவு படுத்துகிறது காட். 

இலவசமாக கல்வியைத் தரும் தனது கல்வி நிலையங்களுக்கான இடத்தை அரசாங்கம் வழங்கும். மின்சாரம் மற்றும் தளவாட செலவுகளை அரசு ஏற்கும். இது சரியான நடைமுறை என்பதில் கிறுக்கனுக்கும் இரண்டாவது கருத்திருக்காது. காட் அமலுக்கு வந்தால் ஒரே வகை கல்வி நிலையங்களுக்கு ஒரே சலுகை என்பதும் அமலுக்கு வரும். இதன் பொருள் என்னவெனில் அந்நிய கல்வி நிலையமும் அரசு கல்வி நிலையமும் ஒரே வகைக்குள் அடங்குகின்றன. எனவே ஒரே வகையான சலுகைகளையே இரண்டு நிறுவனங்களுக்கும் அரசு வழங்க வேண்டும்.

எனில், அரசு கல்வி நிலையத்திற்கு அரசு நிலம் ஒதுக்கியதைப் போலவே அந்நிய கல்வி நிலையத்திற்கும் நிலத்தை அரசு இலவசமாக ஒதுக்க வேண்டும். மின்சாரத்தை தனது கல்வி நிலையத்திற்கு இலவசமாக வழங்குவது போலவே வெளிநாட்டு கல்வி நிலையங்களுக்கும் வழங்க வேண்டும். அவற்றிற்கு தளவாடச் சாமான்களை வாங்கிப் போட வேண்டும்.

இதைவிட நுணுக்கமாகப் பார்க்க வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. அது என்னவெனில், அரசாங்கமே கூட இலவசமாக கல்வியைத் தருவதில்லை ஏதோ ஒரு வகையில் ஒரு சிறிய தொகையினை அரசு மாணவனிடம் இருந்து வசூலிக்கிறது.  அல்லது மாணவனுக்கான கட்டணத்தை அரசு கட்டுகிறது.

ஒரு அரசு கல்வி நிலையம் ஒவ்வொரு மாணவனிடம் இருந்தும் கட்டணமாக 100 ரூபாயும்  அந்நிய நாட்டு கல்வி நிறுவனம் ஒரு லட்ச ரூபாயும் வசூலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கட்டணம் என்ற ஒன்றை வசூலிக்கிற காரணத்தால் இரண்டு கல்வி நிலையங்களும் ‘ஒரே கட்டமைப்பிற்குள் அடங்குகிற’ கல்வி நிலையங்களாகின்றன. ஆகவே இரண்டிற்கும் ஒரே விதமான சலுகைகளைத்தான் அந்தந்த அரசாங்கங்கள் வழங்க வேண்டும் என்று காட் உத்தரவு இடுகிறது.

மின்சாரம், தளவாடம், தண்ணீர் போன்றவறோடு அந்நிய நாட்டு கல்வி நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ளாது. மெல்ல மெல்ல காலூன்றுவதில்தான் அவை ஆரம்பத்தில் கவனம் செலுத்தும். காலூன்றிய பிறகு அவை அடுத்த கட்டத்திற்கு நகரும்.

இவ்வளவும் கொடுத்தாயிற்று இனி அடுத்த கட்டத்தில் என்ன பெரிதான சேதாரம் வந்து கிழித்துவிடப் போகிறது?

இரண்டும் ஒரே கட்டமைப்பிற்குள் அடங்குகிற கல்வி நிலையங்கள். எனவே இரண்டிற்கும் ஒரே விதமான சலுகைகளைத்தான் வழங்க வேண்டும். அதைத்தான் வழங்குகிறோமே பிறகென்ன இருக்கிறது? 

இன்னுமொன்று இருக்கிறதே.

என்ன இருக்கிறது இதற்கும் மேலாக?

தனது கல்வி நிலையத்தில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறதே.

அதில் என்ன தவறு? தனது ஊழியர்களுக்கு அரசுதானே ஊதியம் வழங்க வேண்டும்.

அதென்னவோ சரிதான். ஆனால் இரண்டும் ஒரே கட்டமைப்பிற்குள் அடங்குவதாலும் இரணாஇயும் சமமாக பாவித்து ஒரே சலுகைகளையே வழங்க வேண்டும் என்று இருப்பதாலும் எங்களது ஊழியர்களுக்கும் அரசுதானே ஊதியம் வழங்க வேண்டும் என்று அவை கோர ஆரம்பிக்கும்.   

எனில், 

இடம் நாம் தரவேண்டும். தளவாடம் நாம் தர வேண்டும். மின்சாரம் நாம் தர வேண்டும். தண்ணீர் நாம் தர வேண்டும். இறுதியாக அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நாம் ஊதியம் தர வேண்டும்.

அப்போது அவன் என்னதான் தருவான்? அவனுக்கு நாம் ஏன் கம்பளம் விரிக்க வேண்டும்?

இதைத்தான் நாம் அரசிடம் கேட்க வேண்டும், ஒரே குரலில்.

Tuesday, February 16, 2016

16 தெளிவு

எதிர் பார்த்ததுதான்.


நான் பள்ளியில் நுழையும் போது ஏழெட்டுபேர் அலுவலக வாயிலில் நின்று
கொண்டிருந்தார்கள்.

வணங்கினார்கள்.

வணங்கினேன்.

"தலைமை ஆசிரியர் வரட்டும். பேசிக்கலாம் ," சொல்லிவிட்டு கையொப்பமிட்டு
விட்டு ஆசிரியர் அறைக்குப் போய் விட்டேன்.

நாங்கள்தான் வரச் சொல்லியிருந்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் மதியம் மூன்று மணிபோல பதினோராம் வகுப்பு
பெண் குழந்தைகள் அலறிக் கொண்டு ஓடி வந்தனர்.

"சார், சிலம்பு  தண்ணியப் போட்டுட்டு வந்து வாந்தி எடுத்துகிட்டு
கிடக்கிறான் , சார்." பயமும் அழுகையுமாய் நின்றார்கள்.

வகுப்புக்குப் போனோம். பெண் பிள்ளைகள் வகுப்பிலிருந்து வெளியேறி
மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்கள்.மாணவர்கள் வகுப்புக்குள்ளேயே
சுவரோரமாய் ஒதுங்கிக் கிடந்தார்கள்.

மூக்கைப் பிடித்துக் கொண்டோம். தாறு மாறாய் விழுந்து கிடந்தான்.

தலைமை ஆசிரியர் தமிழாசிரியர் செல்வத்தைப் பார்த்தார். பொருளறிந்த செல்வம்
ஆட்டோவிற்கு ஏற்பாடு செய்தார்.

ஆட்டோவில் தூக்கிப் போட்டு பையனை வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.
பணியாட்களைக் கொண்டு வகுப்பைக் கழுவி சுத்தம் செய்தோம்.

மிரண்டுபோய் நின்ற பெண்பிள்ளைகளிடம் சென்ற தலைமை ஆசிரியர்
"பயப்படாதீங்கம்மா, நான் பார்த்துக்கிறேன்" என்றார்.

எப்பப் பார்த்தாலும் இப்படித்தான் சார் .  பான்பராக் போடுவது,
தண்ணியடித்துவிட்டு வருவது என்று ரகளை சார்," கொதித்துப் பதறினார்கள்.

" சரி, நான் பார்த்துக்கரேம்மா. நீங்க அப்பவே சொல்லியிருந்தா கண்டிச்சிருப்பேன்ல,"

"சொன்னாத் திட்டுவான்னு பயம் சார்"

சரி, சரி , நான் பார்த்துக்கறேன் " என்றவர்

" கொஞ்சம் கூட வா எட்வின்" என்றார்.

அதை அவர் சொல்லியிருக்கவே தேவையில்லை.

"என்ன செய்யலாம். ஒரு ஸ்டாப் மீட்டிங் போடலாமா?"

"போடாலாம்னே. நாளைக்குப் போடுவோம். நாமளும் பதறவேண்டாம்."

"ஆமாம் சார். அதுதான் சரி.," என்று நான் சொன்னதை ஆமோதித்தார் கனகராஜ் சார்.

"நாளைக்கு உணவு இடை வேளையில் ஸ்டாப் மீட்டிங். சர்குலர் ரெடி பண்ணுங்க."

" சரிங்கண்ணே" என்றேன்.

"அடுத்த நாள் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர்.
அவர்களது கொதிநிலை அதிகமாக இருந்தது. அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இறுதியாக பேசிக்கொண்டு வந்து எல்லோரும் ஒரே குரலெடுத்து சொன்னார்கள்,

"அவனுக்கு டி.சி யக் குடுங்க சார். இல்லேன்னா நாங்க எங்க புள்ளைங்க டி.சிய வாங்கிட்டு வேற பள்ளிக்கூடம் போய்விடுவோம்," எனப் பொரிந்தனர். மிகுந்த
பொறுமையோடும் அக்கறையோடும் அவர்களை அணுகிய தலைமை ஆசிரியர் "பயப்படாதீங்க. எனக்கும் இருபது வயசுல ஒரு பொண்ணு இருக்கா. உங்க வலி என்னன்னு எனக்கும் தெரியும். நான் பார்த்துக்கிறேன். நம்பிப் போங்க," என்றார்.

கட்டுப் பட்டார்கள், கலைந்து போனார்கள்.

மதியம் கூடிய ஆசிரியர் கூட்டத்திலும் மாற்றுச் சான்றிதழ் கொடுப்பது என்றே
ஏக மனதாய் முடிவெடுக்கப் பட்டது.
அவன் பள்ளிக்கு வரவில்லை. அவனது பெற்றோரை வரச்சொல்லியிருந்தோம்.

அவர்களுக்கு வேண்டியவர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தலைமை ஆசிரியர் வந்ததும் வணங்கியிருக்கிறார்கள்.

" கொஞ்சம் பொறுங்க, பிரேயர் முடிஞ்சதும் கூப்பிடறேன்."

"சரிங்க சார்"

வகுப்புகள் தொடங்கியதும் சில ஆசிரியர்களை அழைத்தார் தலைமை ஆசிரியர்.
அந்தப் பையனது பெற்றோர்களையும் வரச் சொன்னார்.

" ஓங்கப் பையன் என்ன காரியம் செஞ்சிருக்கான் தெரியுமா?,"

"கேள்விப் பட்டோங்க சார் இனிமே இப்படி நடக்காமப் பார்த்துக்கறோம் சார்.
கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க சார். அவன் செஞ்ச தப்புக்கு நாங்க மன்னிப்பு
கேட்டுக்கறோம்."

"ஆயிரம் பொம்பளப் பசங்க படிக்கிற பள்ளிக்கூடம்  இது. ஓங்கப்
பொண்ணு இங்க படிச்சா  சும்மா விட்டுடுவீங்களா?"

" தப்புதாங்க, தயவு பண்ணி மன்னிச்சுக்கங்க சார்."

இப்படியாகத் தொடங்கிய பேச்சுவார்த்தை ஒருமணி நேரம் நீண்டது.

எப்படியாவது மாற்றுச் சான்றிதழை வழங்கிவிட வேண்டும் என்பதில் நாங்கள்
பிடிவாதமாய் இருந்தோம். இல்லாது போனால் வருங்காலத்தில் மாணவர்களிடம் பயம்
இருக்காது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அப்போதுதான் பெண் பிள்ளைகளின்
பெற்றோர்கள் சமாதானமடைவார்கள் என்பது எங்கள் எண்ணம்.

அவர்களொஅ என்ன செய்தேனும் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றி
சேதாரமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாயிருந்தார்கள்.

இறுதியாக வேறு வழியேயின்றி உரத்தக் குரலெடுத்து தலைமை ஆசிரியர் சொன்னார்,
"வேற வழியே இல்ல, டி.சி ய வாங்கிட்டுப் போங்க."

அதுவரை கைகளைக் கட்டிக் கொண்டு கண்ணீரோடு சுவரோடு சுவராய் சாய்ந்து
நின்று கொண்டிருந்த அவனது அம்மா வெடித்தார்,

"கொடுங்க சார், ஏம்புள்ள எப்படியோ நாசமாப் போகட்டும். நீங்க ஒங்க
பள்ளிக்கூடத்தக் கட்டிக்கிட்டு நல்லா இருங்க"

"என்னம்மா பேசுற நீ"

கூட வந்தவர்களும் , "நீ செத்த சும்மா இரும்மா. நாங்க பார்த்துக்கறோம்,
கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு நில்லு," என்றனர்.

இந்த அம்மாவின் பேச்சினால் காரியம் கேட்டுவிடக் கூடாது என்று பயந்தனர்.

"உடுங்கய்யா எல்லோரும். ஏம்புள்ள எப்படியோ  நாசமாப் போகட்டும்" மீண்டும்
வெடித்தார்.

ஓம் பய என்ன செஞ்சிருக்கான்., நீ ஏன்னா பேசுற" தலைமை ஆசிரியர் கேட்கவும்

"அவன் யோக்கியன்னா சார் சொல்றோம். அவன் குடிச்சுட்டு பள்ளிக் கூடத்துக்கு
மட்டுமா சார் வரான். தண்ணியப் போட்டுட்டுதான் பல நேரம் வீட்டுக்கும்
வரான்."

" அப்பா கண்டிச்சு வைக்க வேணாமா?"

"கண்டிச்சுதான் வைக்கிறேன் சார். ஆனா வீட்ட விட்டு வெளிய துரத்துல"

இதற்கு அடுத்து அந்த அம்மா பேசியதுதான் எங்களை அதிரச் செய்தது.

"வீட்டுக்கு குடிச்சுட்டு வரானேன்னு என்னைக்காச்சும் அவங்கிட்ட 'இப்படிக்
குடிச்சுப் புட்டு வீட்டுக்கு வாரயே யாரடா ஒன்னோட கிளாஸ் சார், அவர
கூட்டிட்டு வான்னு என்னைக்காவது சொல்லியிருக்கேனா? சார்"

கிறுக்கு புடிச்சுருக்காமா ஒனக்கு?"

"கெட்டுப் போற புள்ளைங்கள வீட்டுக்கு அனுப்பிட்டு மத்தப் புள்ளைங்களுக்கு
பாடம் நடத்தறதுக்கா சார் ஸ்கூலு? கெட்டு சீரழியிற பசங்கள நல்ல
வழிப்படுத்தி திருத்தரதுக்குத்தான் சார் பள்ளிக்கூடம், சம்பளம் எல்லாம்"

அந்த அம்மாவை இழுத்துக் கொண்டு போனார்கள்.

பள்ளிகளில், கல்லூரிகளில் , ஆசிரியர் பயிற்சியில் விளங்காத ஏதா ஒன்றை
அந்த அம்மாவின் பேச்சு தெளிவு படுத்தியது

சொந்த முகத்தோடும் சுய முகவரியோடும் வருக


1948 ஆம் ஆண்டு சுன்னத் செய்துகொண்டும் கையிலே ‘இஸ்மாயில்’ என்ற பெயரைப் பச்சைக் குத்திக் கொண்டும் காந்தியின் படுகொலையில் ஆரம்பித்தீர்கள் உங்களது அருவருப்பான, கோழைத்தனமான அயோக்கியத்தனத்தின் அரசியல் பயணத்தை.

பிறகு அவ்வப்போது நீக்களே பாகிஸ்தான் கொடியை ஏற்றினீர்கள். பழியை அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது சுமத்தினீர்கள். அவர்கள்தான் செய்திருப்பார்கள் என்பதுபோன்ற ஒரு மாயையை ஏற்படுத்தினீர்கள். அம்பலப் பட்டும் போனீர்கள். ஆனாலும் என்ன தண்டனைக்கு தப்பினீர்கள்.

அவ்வப்போது பெட்ரோல் குண்டுகளை உங்கள் வீடுகள்மீதும் அலுவலகங்கள் மீதும் நீங்களே வீசினீர்கள். கையும் களவுமாய் அம்பலப் பட்டாலும் தண்டனைகளை உங்கள் எதிரிகளுக்கே கொடுத்தீர்கள்.

இப்போது இப்படி ஒரு கோஷத்தையும் நீங்களே போட்டது அம்பலப் பட்ட பின்பும் மாணவர்கள் மீது வழக்கிருக்கிறது.

ஆமாத்மி வேஷத்தில் இப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் பெயர்ப் பலகையின்மீது கரியால் எழுதி அசிங்கப் பட்டிருக்கிறீர்கள்.

உங்களிடம் ஒரு கோரிக்கை உண்டு,

“சொந்த முகத்தோடும் சுய முகவரியோடும் எதை செய்ய முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள்.”

டைரக்டர்தாண்டா...



இன்று மாலை ஏதோ ஒரு தொடரில் பரணி பரணி என்று எல்லோரும் தேடிக் கொண்டிருந்தனர். காணாமல் போனாளா யாரும் கடத்திக் கொண்டு போனார்களா எதுவும் நமக்குத் தெரியாததால் அதில் கொஞ்சம் எரிச்சலே வந்தது.
நம்மைப் போலவே நொந்துபோன ஒரு பொடிசு சொன்னது,
“டைரக்டர் சொல்லிதானே அவ எங்கையோ போயிருக்கா, இந்த லூசுங்க ஏன் இவ்வளவு அலப்பற செய்யுதுங்க?”
இன்னொரு பொடிசு தெறித்தது,
“இந்த லூசுங்களையும் டைரக்டர்தாண்டா தேட சொல்லியிருக்கார்”

Monday, February 15, 2016

17 பூக்களை விற்ற காசில்...

" நன்றாயிருந்தது
வடை சுற்றிய தாளில்
கவிதை"
என்று ஒரு முறை எழுதினேன். எப்போதாவதுதான் அப்படி ஒரு அபூர்வமான வாய்ப்பு கிடைக்கும். கிடைத்தற்கரிய  அபூர்வமான வாய்ப்பு அன்று கிடைத்தது.

நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே தேநீர் குடித்து வரலாம் என்று கடைக்குப் போனோம். தேநீர் கேட்டால் ஆளுக்கொரு வடையையும் கட்டாயப் படுத்தித் தந்தார் கடைக்காரர்.

ஒரே உப்பு. வாயில் போட்ட துண்டு வடையைத் துப்பி விட்டு எஞ்சிய வடையை தொட்டியில் கிடாசிவிட்டு வடைத் தாளைக் கசக்கி எறியப் போனபோதுதான் அதில் கவிதை மாதிரி ஏதோ கண்ணில் பட்டது.

பார்த்தேன். கவிதையேதான்.

"பூக்களை
விற்ற காசில்
என்ன
வாங்கிவிடப் போகிறீர்கள்
பூக்களை விட அழகாய்"  

என்ற துருக்கிக் கவிதையோடு ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.

ஆஹா! என்னமாய் எழுதியிருக்கிறான். ஆமாம் பூக்களை விற்ற காசில் பூக்களை விட அழகாய் எதை வாங்கி விட முடியும்? அழகான அழகியல்.

ஒன்று துருக்கியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது துருக்கி படைப்புகளின் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்து வாசித்துவிட வேண்டும். இப்படியாக அந்தக் கவிதையின் அழகில் லயித்து மூழ்கத் தொடங்கிய போது எங்கோ ஒரு மூலையில் உறுத்தவும் தொடங்கியது.

இது மேல் தட்டு மற்றும் நடுத் தட்டு வர்க்கச் சிந்தனையல்லவா? நமக்குள்ளும் இது வந்துவிட்டதா? நாம் வரட்டுத்தனமான அழகியலுக்கு அப்பாற்பட்டவன் என்பதுதானே நமது அடையாளம். அது பொய்யா? என்று ஏதோ ஒன்று குறுகுறுக்க ஆரம்பித்தது.

சாலை ஓரத்தில் வெயில் என்றால் காய்ந்து கொண்டும், மழை என்றால் நனைந்துகொண்டும் பூ விற்கும் பெண்ணிற்கு கவிழ்த்துப் போட்ட கூடையில் சுற்றப் பட்டுள்ள பூ முழுக்க விற்றால்தான் கந்து வட்டிக் காரனுக்கு அழுதது போக வீட்டில் உள்ள நான்கு வயிருகளுக்கும் அரை வயிறாவது நிறையும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வழக்கமாய் பேருந்துகள் நிற்குமிடங்களிலும், ரயில்வே கேட்டுகளிலும் சின்னஞ்சிறிய பையன்களும், பெண் குழந்தைகளும் கைகளிலே சின்ன சின்னதாய் மல்லிககை மற்றும் கனகாம்பரப் பூப் பந்துகளை வைத்துக் கொண்டு பூ விற்கும் காட்சிகளை பயணங்களின் போது நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

எவ்வளவு கடினமான வேலை தெரியுமா இது? தேசிய நெடுஞ்சாலைகளை உயிரை வெறுத்துக் கடப்பதும், பேருந்து நின்று பயணிகளை அவசரம் அவசரமாய் ஏற்றி, இறக்கி விட்டு மீண்டும் கிளம்பும் முன் கிடைக்கும் அந்த சின்ன கால இடைவெளிக்குள் கஸ்டமர்களை பிடிக்க வேண்டும், பூவைக் கொடுத்து, காசு வாங்கி மீதியைத் தரவேண்டும்.

சில நேரங்களில் பூவைக் கொடுத்துவிட்டு அந்தப்  பிள்ளை, காசுக்காக காத்து நிற்கும் அவஸ்த்தை இருக்கிறது பாருங்கள், அதைச் சொல்லி மாளாது. பல நேரங்களில் காசைப் பெறுவதற்குள் பேருந்து நகரத் தொடங்கி விடும்.காசினை வாங்குவதற்காக அந்த சிறுவர்கள் பேருந்தோடே கூட ஓடி வருவதையும் பார்க்க முடியும்.

பூவை வாங்கியவர்கள் காசை எடுத்து வெளியே எறிவதையும் நம்மால் பார்க்க முடியும். அதைப் பொறுக்க அந்த சிறுவர்கள் படுகிற அவஸ்தை இருக்கிறதே, அப்பப்பா உசிரே போய்விடும். சரியான சில்லறை எடுக்க இயலாத சிலர் பூக்களை எறிந்துவிடுவதும் உண்டு. கீழே விழுந்த பூவை மீண்டும் விற்கவும் முடியாது.

சிலரோ இரண்டையும் செய்யாமல் போய் விடுவதும் உண்டு.

இந்தக் குழந்தைகளின் அவலத்தை, துயரத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?

இந்தக் குழந்தைகளிடமும், பூக்காரப் பெண்களிடமும் போய்
"பூகளை விற்ற காசில்
என்ன வாங்கிவிடப் போகிறீர்கள்
பூக்களை விட அழகாய்?
என்று கேட்டால் நம்மை கொன்று போட மாட்டார்களா?

அவர்களைப் பொறுத்தவரை பூ என்பது ஒரு வணிகப் பொருள் என்கிற எல்லை தாண்டி அவர்களை இந்தச் சமூகம் எங்கே யோசிக்க அனுமதித்திருக்கிறது? பூக்களின் மலர்ச்சியையோ அழகையோ ரசித்து அனுபவிக்கிற அவகாசத்தை அவர்களது வயிறுகள் அவர்களுக்கு வழங்கியதே இல்லை.

எனில் இந்தக் கவிதை அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனதா? இதை ரசிக்க முடிகிறதே என்னால். என்றால் நான் உழைக்கும் திரளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறேனா?

இரண்டும் இல்லை. உழைக்கும் மக்களும் பூக்களின் அழகை, இந்தக் கவிதையின் அழகை ரசிக்கிற வாய்ப்பை பெறுகிற மாதிரி அவர்களது வாழ்க்கையை மாற்றித் தருகிற ஒரு போராட்டத்தை நோக்கி பயணப்பட வேண்டும் என்கிற சிந்தனை இல்லாமல் போனதுதான் குற்றம்.

அந்தத் தாளில் இருந்த செய்தியை வாசித்தேன்.

கஸ்தூரி என்கிற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிற மாணவி பள்ளிக்குப் போன நேரம் போக ஒரு பேருந்து நிலையத்தில் அமர்ந்து பூ விற்கிறாள். வியாபாரம் இல்லாத நேரத்தில் அங்கேயே அமர்ந்து படிக்கிறாள். அங்குள்ள  ஆட்டோ ஓட்டுநர்கள் அவளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பூ விற்ற காசைக் கொண்டுதான் அந்தக் குழந்தை படிக்கிறாள் என்பதாக அந்த செய்தி நகர்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி அபாண்டமாக  பேசும் உத்தம சிகாமணிகளுக்கு இந்தச் செய்தி வாசிக்க கிடைக்குமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்.

" மலை வாழையல்லவோ கல்வி" என்கிறார் பாரதுதாசன். வாழைப் பழங்களிலே  மலை வாழை மிகவும் சுவையானது என்பதால் அப்படிச் சொன்னார். வாழைப் பழங்களிலேயே மலை வாழைப் பழம் மிகவும் அதிக விலையானது. கல்வியும் இன்று எதையும் விடவுமதிக விலையில் விற்பதால் "மலை வாழை அல்லவோ கல்வி" என்பது இன்னொரு விதத்திலும்  மிக அசிங்கமாகப் பொருந்தவே செய்கிறது.

" சொட்டுக் குழம்புக்கும்
சோற்றுக்கும்
கையிலொரு துட்டுக்கும்
கண்ணயர்ந்து தூங்குவதற்கும்
கட்டத் துணிக்கும்
நல்ல
பணக்காரணாக்கும் படிப்பு"  
என்றும் படிப்பு என்னத்தையெல்லாம் தரும் என்றும் சொன்ன பாரதி தாசன் மட்டும் படிப்பை வாங்க இந்தப் பிள்ளைகள் படும் பாட்டை பார்க நேர்ந்திருந்தால்  நொந்தே போயிருப்பான்.

பூக்களை விற்று அதைவிட அழகாய் என்ன வாங்கப் போகிறீர்கள் என்கிறான் கவிஞன். பூக்களை விற்றுதான் கல்வியை வாங்குகிறேன் என்கிறாள் குழந்தை கஸ்தூரி.

ஒருமுறை சமயபுரம் டோல்கேட்டில் பூ விற்கும் ஒரு சிறுவனைக் கேட்டேன்,

"இப்படி ரிஸ்க் எடுத்து ஓடி ஓடி பூ விற்க்கிறாயே, எதுக்குப்பா?"

"டியூஷன் பீஸ், எக்ஸாம் பீஸெல்லாம் கட்டனும் சார்."

சாலையில் உயிரையேப் பணயம் வைத்து பூக்களை விற்கும் குழந்தைகளின் வருமானம் எதற்காக செலவிடப் பட்டாலும் அது குறித்து மொத்த சமூகமும் கவலை கொள்ளவே வேண்டும்.

குழந்தைகள் கல்வி கற்பதற்காக இப்படி உயிர் போக உழைக்க வேண்டிய நிலமை கண்டு நாம் சத்தியமாய் வெட்கப் படத்தான் வேண்டாமா?

ஒன்று திரண்டு அரசைக் கேள்வி கேட்க வேண்டாமா?
அதற்கு தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு தாண்டி கொஞ்சம் சொரனையோடு கூடிய அக்கறை வேண்டு
ஆமாம் அது நமக்கு எப்போது வரும்?

Sunday, February 14, 2016

18 ஏற்க இயலவில்லை ...

(முன் குறிப்பு : 16.12.2010 அன்று எழுதியது)

ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு என்கிறார்கள். எனில் இதில் எத்தனை ஆயிரம் கோடிகள் ஊழலாய் மாறியிருக்க வாய்ப்புண்டு என கணக்கிட்டுப் பார்க்கிறார்கள். எனில் யார் யாருக்கு எவ்வளவு கை மாறியிருக்கும் என ஊருக்கே கேட்கும்படி ரகசியமாய் கிசுகிசுக்கிறார்கள்.  இது குறித்து பாராளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு விசாரனை நடத்த வேண்டும் என்கிறார்கள்.

அமைச்சர் மீது வழக்குப் போட அனுமதி கேட்டபோது எதுவுமே பேசாமல் மௌனம் காத்தமைக்காக பிரதமர் அலுவலகத்தை உச்சநீதி மன்றம் கண்டனித்துள்ளது. இன்னின்ன காரணங்களால் அனுமதிக்க இயலாது என்றாவது சொல்லியிருக்க வேண்டாமா என்று கேட்கிறார்கள் நீதியரசர்கள். அந்த மௌனத்தை உள்நோக்கம் கலந்த அலட்சியத்தின் உச்சம் என்றே அவர்கள் பார்க்கிறார்கள்.

தனது அறுபது ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் உச்சநீதி மன்றத்தின் அதிருப்தி இந்த அளவுக்கு முன்னெப்போதும் பிரதமர் அலுவலகத்தின் மீது விழுந்ததில்லை என்கிறார் அத்வானி. பிரதமர் ஒருவரிடம் உச்சநீதி மன்றம் கேள்வி கேட்பது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை என்கிறார்கள் யெச்சூரியும், பிருந்தா காரத்தும்.

இந்த விஷயத்தில் தான் சட்டத்திற்கு உட்பட்டும்,  பிரதமரின்  வழிகாட்டுதலின்  படியும்தான்  நடந்து  கொண்டுள்ளதாகவும், முடங்கிக் கிடக்கும் பாராளுமன்றம் சீராய் நடைபெற வேண்டும் என்பதற்காகவே தான் பதவி வில்கியுள்ளதாகவும், இதை செய்ததனால் தன் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச் சாட்டுகளைத் தான்  ஏற்பதாகக்  கொள்ளக் கூடாது என்றும் ராசா சொல்கிறார்.

ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடியை சாக்கிலே கட்டினால் எத்தனை லாரிகளுக்கு தேறும் என்பது குத்து மதிப்பாகக் கூட நமக்குத் தெரியாது. திரும்பிய திசையெங்கும், கண்னில் படுகிற யாவரும் இது பற்றியே பேசுகிறார்கள். போக இதை விட முக்கியமான விஷயம் குறித்து தேவையான அளவிற்கு விவாதம் தொடங்கப் படவேயில்லை என்று படுவதால் அது குறித்து பேசலாம் என்று படுகிறது.

எந்த தொலைக் காட்சி என்று சரியாய் நினைவில்லை. சுப.வீரபாண்டியன் அய்யாதான் தலைமை. அந்த நிகழ்ச்சியில் உச்சத்துக்கே ஏறி நின்று பேசினார் ராசா. " நிரம்பி வழியும் இந்த அவையில் வேண்டுமானால் ஜாதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனது கிராமத்தில் எனது ஜாதிதான் எனது முகவரி" என்கிற மாதிரி உணர்ச்சிப் பிழம்பாய் ராசா அவர்கள் வெடித்தபோது அதில் உள்ள நியாயம் சுட்டது. சத்தியமாய் சொல்கிறேன், பனித்த கண்களோடுதான் கை தட்டினேன். கலைஞரும், கனிமொழியும், ரஜினியும் கூட அதே மனநிலையில் இருந்ததையே தொலைக் காட்சியில் பார்க்க முடிந்தது.

ஸ்பெக்ட்ராம் விஷயம் கசியத் தொடங்கிய நாள் முதலே "ராசா ஒரு தலித் என்பதால் எப்படி வேண்டுமானாலும்  அபாண்டமாக பேசலாமா?" என்கிற  தொனியில்  தொடர்ந்து  பேசி  வருகிறார்  கலைஞர். நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாக நம்பப் படுகிறபெரும் இழப்பிற்கு பெருமளவு பொறுப்பு ராசாவுக்கு என்பது  குற்றச்சாட்டு. இது பொய்யென நிரூபிக்கப் படுமானால் அந்த நிமிடமே( அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் படுகிறது ) இப்போது உள்ள உசரத்தைவிட பல மடங்கு உசரத்திற்கு அவர் போய்விடுவார் என்பதும் மாறாக ருசுப்பிக்கப் படுமானால் அதன் விளைவுகள் என்ன என்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.

எதிர்வாதம் செய்வதற்கும்,  தன்னை நிரபராதி என மெய்ப்பித்துக் கொள்வதற்கும் சகல உரிமைகளையும்  சேர்த்தே  தந்துதான் இந்தக் குற்றச் சாட்டும் வைக்கப் படுகிறது.  " தலித் என்பதால் இத்தனை அபாண்டமா?" என்கிற மாதிரி வெதும்பும் கலைஞரின் மேலான பார்வைக்கு சில சந்தேகங்களை, தெளிவு பெறும் பொருட்டு வரிசைப் படுத்துகிறேன்.

திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகே, இன்னும் புரியும்படிக்கு  சொல்வதெனில் கலைஞர் அவர்கள் தண்டவாளத்தில் தலை வைத்துப் புரட்சித்த கல்லக்குடிக்கு மிக அருகே திண்ணியம் என்றொரு சின்ன கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவராய் செயல் படும் தலைவியின் கணவரிடம்  (அவர் ஓய்வு பெற்ர தலைமை ஆசிரியர் என்பதுதான் கொடுமயிலுங் கொடுமை ) தனது தங்கைக்கு தொகுப்பு வீடு ஒதுக்கித் தருமாறு ஒரு தொகையினத் தருகிறார் ஒருவர். அவர் ஒரு தலித். அநேகமாக அவர் அந்த ஊரின் தலையாரியாக இருக்கக் கூடும். வீடு ஒதுக்கப் படாதததல் கொடுத்த்ப் பணத்தைத் திரும்பக் கேட்கிறார். கிடைக்காது போகவே தண்டோரா போட்டு விஷயத்தை மக்களிடம் கொண்டு போகிறார்.

கொடுத்தப் பணத்தை திருப்பிக் கேட்டதற்காகத்தான் கலைஞர் அவர்களே திண்னியத்தில் ஒரு தலித் பீத் தண்ணீ குடிக்க நேர்ந்தது.

"தலித் என்பதால் ராசா மீது அபாண்டமாய் குற்றம் சுமத்துகிறீர்களே. நியாயமா?  என்று கொதிக்கும் கலைஞர் அவர்களே...

திண்ணியத்தில் ஒரு தலித் வாயில் ஆதிக்க சாதிகள் பீத் தண்ணியை ஊற்ரியபோது " தலித் என்பதால் பீத் தண்ணியை ஊற்றுவீர்களா பாவிகளே" என்று ஏன் கலைஞரே நீங்கள் குமுறவே இல்லை?

உத்தப்புரத்தில் தலித்துகளுக்கு நிழற்குடை அமைப்பதற்கு திரு. டி.கே.ரெங்கராஜன் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொகை தருகிறார். ஆனால் அங்கே நிழற்குடை அமைத்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என சொல்லி அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மறுத்து விட்டார் என்ற சேதி எனக்கே தெரியும் போது உங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்ல இயலாது.

தலித்துகளுக்கு நிழற்குடை அமைத்துக் கொடுத்தால் என்ன மாதிரியான சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும்?. பச்சையாக சொல்வதெனில் அங்கே நிழற்குடை அமைத்தால் தலித்துகள் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்வார்கள். இது ஆதிக்க சாதிக் காரர்களை கொதிப் படையச் செய்யும். அதனால் அங்கு சட்டம் ஒழுங்கு கெடும் என்பதுதானே மாவட்ட ஆட்சித் தலைவரின் தயக்கம்.

தலித்துக்கள் என்றால் அவ்வளவு கேவலமா? அவர்கள் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்வதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வருமா?. வரட்டுமே.  அதை எதிர் கொள்ளத் துப்பில்லை  என்றால் எங்காவது ஓடி விடுங்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்த்து ஏன் கலைஞரே நீங்கள் கேட்க வில்லை?

உச்சமாக ஒன்றை சொல்லிவிட வேண்டும். எது எப்படியோ அதை விசாரனை தீர்மானிக்கட்டும். ஆனால் பெரம்பலூர் கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே பெரம்பலூருக்கு  அதிகம் செய்தவர் ராசா அவர்கள்.
பெரம்பலூர் தனித் தொகுதியிலிருந்து மாறி பொதுத் தொகுதியானவுடன்  நீங்கள் என்ன செய்தீர்கள்?  பெரம்பலூர்க் காரரான ராசாவை நீலகிரிக்கு அனுப்பினீர்கள். 

பொதுத் தொகுதியாய் மாறினாலும் ராசாதான் பெரம்பலூர் வேட்ப்பாளர் என்று ஏன் கலைஞரே நீங்கள் அறிவிக்க வில்லை.

பொதுத் தொகுதியில் தலித் ஒருவருக்கு கட்சிக்காரர்கள் வேலை பார்க்க மாட்டார்கள் என்று அஞ்சினீர்களா? அல்லது பொதுத் தொகுதியில் தலித் நிற்க்கக் கூடாது என்பதுதான் உங்கள் முடிவுமா? எனக்கென்னவோ அப்படித்தான் என்று தோன்றுகிறது கலைஞர் அவர்களே.

எனில், சேரியில் பிறந்த தலித்  சேரியில்தான் வாழ வேண்டும்,  தனித் தொகுதியில்தான் நிற்க வேண்டுமா கலைஞர் அவர்களே?

இதை, உங்களுக்குத் தனித் தொகுதி இருப்பதால் பொது தொகுதி கிடையாது என்றும்  கொள்ள  முடியுமே  கலைஞர் அவர்களே? 

ஆமாம் எனில் உங்களுக்கு சேரி இருப்பதால் பொதுத் தெரு கிடையாது என்றும் ஆகாதா கலைஞர் அவர்களே.

"ஒரு தலித் என்பதால் ராசாவின்  மீது அபாண்டமாக குற்றம் சுமத்தலாமா? என்ற உங்கள் கூற்றை ஏற்க இயலவில்லை , மன்னியுங்கள் கலைஞர் அவர்களே.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...