Tuesday, February 2, 2016

உங்களுக்கே ஏற்புடையதா ஞானி?




ஏதேனும் ஒரு பகலை அல்லது ஒரு மாலையை அல்லது ஒரு இரவை ராஜா இல்லாமல் உங்களால் கடக்க முடியும் என்றால் உறுதியாக உங்களை ஒரு காட்டு மிராண்டி என்று அழைத்துக் கொள்ளலாம்என்று தோழர் பழ.தங்கராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிந்திருந்தார். இதில்காட்டு மிராண்டிஎன்பது ரொம்பவே அதிகம். அதை எடுத்துவிட்டுப் பார்த்தால் அவரது கூற்று எவ்வளவு அழுத்தமானது என்பது பளிச்சிடும். ஐம்பதை ஒட்டிய பெரும்பான்மைத் தமிழ்க் காதுகளால் நீங்கள் இல்லாமல் ஒரு போதையும் கடக்க இயலாது.

இதுகூட என்னைப் போன்ற ஒரு பாமர ரசிகனின் கூற்று.

இந்திய திரைப்பட இசையின் சிகரம் தொட்ட ஆர்.டி பர்மன் ஒருமுறைஅடுத்த நூற்றாண்டின் இசையை இந்த நூற்றாண்டிலேயே கொண்டு வந்து சேர்க்கிறார் இளையராஜாஎன்று கூறினார். இப்படிச் சொன்ன பர்மனே என்னைப் போன்ற உங்கள் முறட்டு ரசிகர்களுக்கு கொஞ்சம் கஞ்சனாகத்தான் தெரிந்தார். தெரிந்தார் என்ன, கஞ்சன்தான்.

புதிது புதிதான சத்தங்களை துருவித் துருவி தேடித் தேடிக் கண்டெடுத்து எங்கள் காதுகளுக்கு தானமளிக்கிறீர்கள். சத்தங்களுக்கு நீங்கள் சொடுக்கெடுக்கிற பாங்கும் சிக்கெடுக்கிற அழகும் எத்துனை அற்புதமானவை. சத்தங்களை மட்டுமல்ல மௌனத்தைக் கூட நீங்கள் இசையாக்கிக் காட்டினீர்கள் என்று சொல்வது ஏதோ வார்த்தை அலங்காரத்திற்காக அல்ல ராகவேந்தனே.

காட்டுக் குயிலு மனசுக்குள்ள
 பாட்டுக்கொன்றும் பஞ்சமில்ல பாடத்தான்

என்றொரு பாடலைதளபதிபடத்தில் வைத்திருப்பீர்கள். அதில் ஒரு பல்லவிக்கும் மறு பல்லவிக்கும் இடைப்பட்ட இசைக் கோர்வைக்கிடையில் ஓரிரு நொடிகள் கருவிகளை மௌனப் படுத்தியிருப்பீர்கள். எங்கே அந்த மௌனத்தைக் கேட்காமல் கடந்துவிடுமோ என்ற அச்சத்தில் என் செவிட்டுக் காதுகளை ஒவ்வொரு முறையும் கூர்படுத்திக் கேட்பவன் நான்.

நாட்டுப்புற இசைக் காட்டுக்குள் தவத்தோடு பயணிக்கும் இசை மாமுணி நீங்கள். அந்த அடரிசைக் காட்டுக்குள்ளிருந்து வரம்பெற்று கொண்டு வந்த பாடல்களை எங்களுக்கான சூட்டில் எங்களுக்கான சுவையில் கொடுத்தவர் நீங்கள்.

ஆண வாரத பாருங்கடி அது அசஞ்சு வாரத பாருங்கடிஎன்பதை இன்னும் அழகாக்கிஆயிரந்தாமரை மொட்டுக்களேஎன்று அள்ளிக் கொடுத்தவர் நீங்கள். இது ஏதோ எளிதுபோல தோன்றும். ஆனால் அதற்கான ஞானமும் உழைப்பும் பேரதிகம் என்பது எனக்குத் தெரியும்.

எனது இசை ஞானம் சுழியம்தான். ஆனால் முறட்டுத் தனமான ரசிகன். ‘சங்கீத ஜாதி முல்லை’ மற்றும்அந்திமழை பொழிகிறதுஇரண்டையும் மெச்சி ரசித்ததனாலேயே என்னைப் போன்றவர்களும் நல்ல ரசிகர்களானோம்.

எத்தனை தற்கொலைகளை உங்கள் இசை தடுத்திருக்கும். ‘a penny saved is a penny earned’ என்று சொல்வார்கள். காப்பாற்றப்பட்ட ஒரு உயிர் என்பதை ஜனனிக்கப்பட்ட உயிர் என்றே கொள்ள வேண்டும். உயிர் காக்கும் இசையே மேன்மையானது. இத்தகைய மேன்மைகளுக்கெல்லாம் மேன்மையானது எங்கள் ராஜாவின் இசை. உயிர் கொடுக்கும் ஆற்றல் உங்கள் இசைக்கு உண்டு.

நீங்கள் இசை அமைக்க வந்த புதிதில் வாடகைக்கு வயலின் கேட்டு அலையாய் அலைந்திருக்கிறீர்கள். நிறைய இடங்களில் நீங்கள் அவமானப் படுத்தப் பட்டதாய் பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். உறுதியாக சொல்வேன் உங்களுக்கன்று வயலின் தர மறுத்த வாடகைக் கடைகளின் சுவர் முழுக்க இன்று உங்கள் படங்கள்தான் வியாபித்து இருக்கும்.

இந்த உயர்வுக்கு நீங்கள் ஏதேதோ தெய்வங்களை எல்லாம் காரணமாக்கக் கூடும். எங்களைப் பொறுத்தவரை இதற்கான காரணம் உங்களின் அயராத, வெறிகொண்ட உழைப்பும் ஞானமும்தான். உங்களது இன்றைய உசரத்திற்கு நீங்கள், நீங்கள், நீங்கள் மட்டுமே காரணம்.

இப்போது உங்களுக்குப் பிடிக்காத உங்களது பழைய நண்பர் வைரமுத்து பாஷையில் சொல்வதெனில்,

நீங்கள் உங்கள் ஒரு கையால் உங்கள் நிர்வாணத்தை மறைத்துக் கொண்டே இன்னொரு கையால் உங்கள் நிர்வாணத்தை மறைப்பதற்கான உடை நெய்த பேராளுமை

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள். ஆயிரம் திரைப் படங்கள். எனில், வருடத்திற்கு இருபத்தி ஐந்து படங்கள் என்றாகிறது. எனில், மாதத்திற்கு இரண்டு படங்கள். சுருக்கிச் சொல்வதெனில் இரண்டு வாரத்திற்கு ஒரு படம். அய்யோ சாப்பிட நேரம் கிடைத்ததா ஞானியே?

உங்களைஇசைஞானிஎன்பதுகூட உங்கள் உசரத்திற்கு கொஞ்சம் குறைச்சலானது என்று கருதுபவன் நான்.

நீங்கள் இசைக்கும்போது நெடுஞ்சான் கிடையாக விழுந்து விடுகிறோம் நாங்கள். உங்களை இந்த அளவிற்கு வளர்த்து விட்டவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள் இசை வேந்தே? அறுபதுகளில், எழுபதுகளின் தொடக்கத்தில் கொட்டும் பனியில், தலையில் துண்டு போர்த்தியமர்ந்து கைதட்டி விசிலடித்துஎங்க ராசாடாஎன்று உங்களைக் கொண்டாடிய உங்களின் உழைக்கும் ஜனங்கள். எங்களைவிட்டு நீங்கள் வெகுதூரம் போனாலும் இன்னமும் எங்கள் வெகுஜனத் திரளுக்கான இசையின் ஐகான் நீங்கள்தான்.

ஆஸ்கார் இதுவரை உங்களுக்கு கிடைக்கவில்லை. அதற்காக எம் மக்கள் உங்களிடம் ஒருபோதும் குறை கண்டதில்லை. ஆஸ்காரிடத்துதான் அவர்களது கோவமும் குறையும். ஆஸ்கர் உங்களுக்கு கிடைக்கும்போது இதுவரை ஆஸ்கார் பெற்ற எந்த மனிதனுக்கும் கிடைக்காத வரவேற்பை எம் மக்கள் உங்களுக்களித்து கொண்டாடுவார்கள்.

திருவையாறு இசைக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு யாருமறியாமல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து வந்து வகுப்பெடுத்திருக்கிறீர்கள். அது அறிந்த ஆதிக்கசாதி கொதித்துப் போய், தங்களது முழு சக்தியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி அதற்கு காரணமான அந்தக் கல்லூரியின் அந்நாள் முதல்வரை இடமாற்றம் செய்ததுவரை நானறிவேன்.

அது மட்டுமல்ல எப்போதும்போல் ஒருமுறை கும்பகோணம் ராஜன் சிற்பக் கூடத்திற்கு வருகிறீர்கள். ஒரு அழகான சிலையை பார்த்ததும் அதைத் தொட்டுப் பார்க்கலாமா என்கிறீர்கள். இப்ப யார் வேணாலும் தொடலாம் என்றும் கோவிலுக்கு போன பிறகு இரண்டுபேர் மட்டுமே தொடமுடியும் என்றும் ராஜன் சொல்கிறார். நூலை அபிநயத்தபடியே ஒருவரைத் தெரியும் மற்றொருவர் யார் என்று நீங்கள் வினவதிருடன்என்று சொல்கிறார் ராஜன். விழுந்து விழுந்து சிரித்தீர்களாம். திருடனே தொடக்கூடிய சிலையை நாங்கள் தொட்டால் தீட்டாகிப் போகுமாடா என்றுதான் உங்களது சிரிப்பின் சுரம் பிரித்து பொருள் கொண்டோம் நாங்கள்.  

தீண்டாமையின் வலி உங்களுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும். ஒரு பாமரனுக்கும் தெரியும் உங்களது உசரம் நிச்சயமாய் உங்களுக்கும் தெரியும். ஆனாலும் அவ்வப்போது மடாதிபதிகளின் காலடியிலும் தவம் கிடக்கவே செய்கிறீர்கள். அதுகூட உங்களது பெர்சனல் என்பதால் அதற்குள் தலையிடும் உரிமை எனக்கில்லை.

கொஞ்ச காலத்திற்கு முன்னால்தான் இருதய அறுவை செய்து கொண்டீர்கள். ஆனாலும் இந்தப் பெருமழையின்போது சென்னையிலும் கடலூரிலும் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு நேரடியா சென்று உதவியதோடு ஆறுதலையும் தந்தீர்கள். நீங்கள் நினைத்திருந்தால் வீட்டில் இருந்தபடியே இதை செய்திருக்க முடியும். ஆனால் உங்களது வருகை அவர்களைத் தேற்றும் என்று நீங்கள் சரியாகவே உணர்ந்திருந்தீர்கள்.

வியந்துங்களைக் கொண்டாட இத்தனை விழுமியங்களை வைத்திருக்கும் நீங்கள் நெருடலுக்கான காரணங்களையும் வைத்திருக்கிறீர்கள். அவ்வப்போது எதையாவது பேசி விடுகிறீர்கள்.

நீங்கள் பேசும்போது இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் கையேந்தி யாசிப்பதற்கு காரணம் இருக்கிறது. உங்களைப் போல் வெகுளி அல்ல ஊடகங்கள். அவை மிகவும் பொல்லாதவை ஞானி. நீங்கள் சொல்லும் ஒரு வார்த்தை பொதுவெளியில் கொண்டாடப் படுமானால் அதன் லாபத்தை அவை அறுவடை செய்யும். அதேபோல நீங்கள் உங்களையே அறியாமல் சறுக்கிவிடும் பட்சத்தில், அதனால் ஏற்படும் உங்களுக்கு எதிரான கொந்தளிப்பின் லாபத்தையும் அது வாரி சுருட்டிக் கொள்ளும். உங்களது ஸ்டுடியோவிற்கும் ஊடக ஸ்டுடியோவிற்கும் ஆறு அல்ல ஆறாயிரம் என்ற எண்ணிக்கையில் இருக்கிறது வேறுபாடுகள்.

அவினாசி மணி என்று நினைக்கிறேன், ’ஆயிரந்தாமரை மொட்டுக்களேவந்த நேரத்தில் ஒரு முறைவைரமுத்து ஒரு கண்ணதாசன்தானே?’ என்று உங்களைக் கேட்கிறார். ‘இல்ல, இல்ல அஞ்சாறு கண்ணதாசன்என்று சொல்கிறீர்கள். அது கடந்து சொற்ப காலத்திற்குள்ளேயேகண்ணதாசன் இடம் இன்னும் நிறப்பப் படாமலே இருக்கிறதுஎன்றீர்கள். அதில் ஒன்றும் பிரச்சினை எழவில்லை, காரணம் உங்களது இரண்டு நிலைப்பாடுகளுமே விமர்சனத்திற்கு உரியவை.

ஆனால் தோழர் ஐ.மா.பா குறித்த உங்களது கூற்று உங்களுக்கே ஏற்புடையதா ஞானி? எங்களுக்கு உங்களைத் தெரிந்த அளவிற்கு தோழரைத் தெரியாது. ஆனால் அவரோடு நெருங்கிப் பழகியவர் நீங்கள்.

எத்தனை ஆண்டுகள் சிறை வாழ்ந்தவர். எத்தனை பேரை வளர்த்தெடுத்தவர்? திருநெல்வேலி ரயில் கவிழ்ப்பு சதி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுஇதை செய்யச் சொன்ன உன் தலைவனின் பெயர் என்ன?’ என்ற ஒற்றைக் கேள்விக்குசொன்னால் உங்களுக்குத்தான் ஆபத்துஎன்று சொன்னவர். அழுத்திக் கேட்டபோது, ‘அவர் மீசையப் பார்த்தாலே அதிர்ந்திடுவீங்கஎன்றவர். இன்னும் அழுத்தவேஸ்டாலின், ரஷ்யால இருக்கார். வேணா போய் கைது செய்துக்கஎன்று சொல்லி பேரதிகமாய் மிதி பட்டவர். அப்படி ஒரு தியாக ஆளுமை.

அவர் உங்களுக்கு செய்ததாக சொல்லப்படும் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம், அல்லது அவர் உங்களுக்கு ஏதும் செய்யவே இல்லை என்றுகூட கொள்வோம். அப்போதும் அப்படிப் பட்ட  நீங்கள் நன்கறிந்த ஒரு தியாகச் சுடரை போகிற போக்கில் தூக்கிக் கடாச உங்களுக்கு எப்படி மனம் வந்தது எங்கள் ராசா.

உங்கள் கூற்றுப் படியே பார்த்தால்கூட தோழர் மாயாண்டி அவர்கள் எந்தக் குற்றம் செய்தவராகவும் தெரியவில்லை. அவரிடம் வாடகைக்கு வீடு கேட்டிருக்கிறீர்கள். அவரது வீட்டை அவர் கட்சிக்கு எழுதிக் கொடுத்திருந்த படியால் அந்த நேரத்தில் வீட்டின் உரிமையாளராக அவர் இல்லை. ஆகவே அப்போதைய உரிமையாளரான அவரது கட்சியிடம் கேட்டு சொல்வதாக சொல்லியிருக்கிறார். இதில் நீங்கள் இவ்வளவு நக்கல் செய்யுமளவிற்கு என்ன இருக்கிறது இசை ஞானியே?

இசையில் ஆளுமை நீங்கள் எனில் தியாகத்தில், தேச பக்தியில் ஆளுமை அவர். இன்னும் சொல்லப் போனால் உங்களது உழைப்பிற்கு உரிய விருதுகள் கிடைக்காது போயினும் நல்ல ஊதியம் கிடைத்தது. அவரது உழைப்பிற்கோ சிறையும் தடியடியும்தானே ராகவேந்தா.

எனக்குத் தெரியும் தோழர் மாயாண்டி பற்றி நீங்கள் சொன்ன மாதிரி வேறு ஒருவர் உங்களிடம் சொல்லியிருந்தால் அதை நீங்கள் ரசித்திருக்க மாட்டீர்கள். எனது இந்த நம்பிக்கையும் பொய்த்துதான் போகுமெனில் நாங்கள் நெஞ்சிலே சுமக்கும் இளையராஜாவும் கண்ணெதிரே பார்க்கும் இளையராஜாவும் ஒன்றல்ல என்று தலை தலையாய் அடித்துக் கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய இயலும் எங்களால்.

இப்போது தோழர் மாயாண்டி இருந்திருந்தால் தோழர் குமரேசன் சொல்வதுபோல இதுமாதிரி எழுத யாரையும் அனுமதித்திருக்க மாட்டார். ‘விடுங்கப்பா இளையராஜாதானேஎன்றிருப்பார். நல்ல வேளை இசைஞானி அவர்களே, நீங்கள் இப்படிக்கூட கேவலப் படுத்துவீர்கள் என்று அறியாத நிலையிலேயே அவர் சென்று சேர்ந்தார்


அவர் மட்டுமா தோழர்? நீங்கள் சிம்பொனி இசைத்து திரும்பியபோது அழுக்கு வேட்டி சட்டையோடு காசு புரட்டி ஒரு மாலை வாங்கிக் கொண்டு உங்களைப் பார்க்க விமான நிலையம் வந்தார் தோழர் நல்லசிவம். விமான நிலையத்தில் அவர் யாரென்று தெரியாமல் தடுக்கப் பட்டதாகவும், நீக்கள் அவரைப் பார்த்ததும் ஓடோடி சென்று அவரது வாழ்த்துக்களையும் வாங்கிக் கொண்டதாகவும் கேட்டிருக்கிறேன். அது எதற்காக இசை வேந்தே? உங்கள் பெயரைச் சொல்லி நான்கைந்து வாக்குகளைப் பெறுவதற்கா? கூச்சப் பட்டுக் கொண்டு அவர்கள் செய்தவற்றையே சொல்லி ஓட்டு கேட்கத் தயங்குபவர்கள் அவர்கள்.

இடதுசாரிகள் எந்தக் கட்டத்திலும் உங்களை விட்டுக் கொடுக்காமல் நெஞ்சில் தூக்கித் திரிகிறார்கள்.

திரையுலகில் உங்களது இன்றைய இட்த்திற்கு நீங்கள் மட்டுமே காரணம். ஆனால், அன்னக்கிளி படம் உங்களுக்குக் கிடைத்ததில் இடதுசாரிகளின் பங்கில்லையா, இசைஞானி? அன்னக்கிளி செல்வராஜ் தோழர் சங்கரையாவின் மருமகன் என்று நினைக்கிறேன்.

மீண்டும் கையேந்திக் கேட்கிறேன், பேசும்போது இனி கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். உங்களிடம் எதைக் கேட்டுப் பெற்று மக்களுக்குத் தருவது என்ற தயாரிப்போடு அவர்கள் ஒருபோதும் உங்களிடம் வரப் போவதில்லை. பாருங்களேன் உலகையே தன் இசையால் கட்டிப் போட்ட ஒரு ஆளுமையை நேர்காண வரும்போது எந்தவிதமான தயாரிப்புகளோடு அவர்கள் வந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் கோபி போன்றவர்களையாவது உங்களிடம் அனுப்பியிருக்க வேண்டும். உங்களிடமிருந்து எதைப் பெற்று மக்களுக்குத் தருவது என்ற தெளிவாவது இருந்திருக்க வேண்டும். உங்களைப் போன்ற ஆளுமைகளை நேர்காணும் வாய்ப்பு கிடைத்தால் ஒருவாரம் விழித்து எதையெல்லாம் கேட்பது என்று உழைத்து வந்திருப்பேன். உங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதல்ல, அவர்கள் விரிவடைய உங்களைப் பயன்படுத்தவே முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். இனி நேர்காணல்களின்போது எதை எங்களுக்குத் தருவது என்ற தயாரிப்போடு வாருங்கள். அல்லது அருள்கூர்ந்து தவிர்த்து விடுங்கள்.

நன்றி: காக்கைச் சிறகினிலே







    


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...