17.12.2012 இல் எழுதியது
****************************************
****************************************
மூன்று மாதங்களாக ஒழுங்காக சர்க்கரை மாத்திரை சாப்பிடாததால் தள்ளத் தொடங்கியது. ஒருமுறை சாலையில் நடக்கும் போதே விழுந்திருக்கிறேன். சென்னை திருச்சி பிரதான சாலை. வாகனம் எதுவும் வராததும், என் பழைய மாணவர்கள் சிலர் அருகே இருந்ததும் கூட இன்று என்னிடம் நீங்கள் இப்படி இம்சைப் படுவதற்கு காரணம் எனலாம்.
பள்ளியில் நண்பர்கள் கடிந்து கொண்டார்கள். மூன்று மாதங்கள் மருந்தினைத் தவிர்த்ததால் மருத்துவரைப் பார்க்கவும் பயம். ஒரேடியாக எகிறிப் போயிருந்தது சர்க்கரை அளவு.
ஒரு வழியாய் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மருத்துவரிடம் போனோம்.
நல்ல கூட்டம். சீரான இடைவெளியில் வரிசை நகர்ந்து கொண்டே இருந்தது.
விக்டோரியாவுக்கு அருகில் ஒரு மூன்று அல்லது நான்கு வயது பையனை மடியில் அமர்த்தியவாறு பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்த படியே அமர்ந்திருந்தார்.
சோதனைக்கு என்று அவருக்கு முன்னால் போனவர் வெளியே வர மிகவும் ஆகவே எரிச்சலாகிப் போனவர்,
“ இத்தனை பேரு வரிசைல இருக்கோம் போனமா வந்தமான்னு வர வேணாம்?”
மடியில் அமர்ந்திருந்த பையன் அவரது வாயில் ஆட்காட்டி விரலை வைத்தவாறு சொன்னான்,
“ அப்படி எல்லாம் சொல்லக் கூடாதும்மா. போன மாமாவுக்கு பெரிய காய்ச்சலா இருக்கும். எனக்கு சின்ன ஜுரம்தானே.”
மீண்டும் மீண்டும் குழந்தைகளே ஜெயிக்கிறார்கள்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்