Friday, February 24, 2012

வீட்டிற்கு அனுப்பிய இருட்டு

காலையில் தலைமை ஆசிரியர் ஏதோ வேலையாக இருந்தார். அநேகமாக சுற்றுச்சுவர் குறித்தான வேலையாக இருக்க வேண்டும். வகுப்புகளை ஒரு சுற்று முடித்துவிட்டு எனது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். என்ன பிரிவென்று ஞாபகம் இல்லை. அது தேவையும் இல்லை. பத்தாம் வகுப்பு மாணவி ஒரு பையனை ஏறத் தாழ இழுத்துக் கொண்டு என்னிடம் வந்தாள். அநேகமாக வகுப்புத் தலைவியாக இருக்க வேண்டும்.

“சார் டீச்சர் இவன உங்ககிட்ட கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க”

“ எந்த டீச்சர்?”

“ மலர் விழி டீச்சர்”

“ அப்ப டென்த் ஏ. “

“ஆமாம் சார்”

“சொல்லு என்ன தப்பு செஞ்சான்?”

“கரண்டு மாதிரி எப்பவாதுதான் வரான் சார். வரதும் தெரியல. போறதும் தெரியல”

வெடித்துச் சிரித்ததில் சத்தம் கேட்டு சேவியர் ஆசிரியர் அறையிலிருந்து வெளியே வந்து விட்டார். “ ஒன்னும் இல்ல சேவி” என்று நடந்ததை
சொன்னேன். அவரும் சிரித்தார்.

”சரி, சரி பள்ளி விட்டதும் என்னை வந்து பார்”

அவனை அனுப்பிவிட்டு அறைக்குள் நுழைந்தேன்.

போகிற போக்கில் எப்படி சொல்லிவிட்டாள். ஒழுங்காக வருவதில்லை, எப்போதாவது வருகிறான் என்பதை எப்போதாவது வரும் மின்சாரத்தோடு ஒப்பிட்டு விட்டாளே. இந்தச் சின்னக் குழந்தைக்குள் இவ்வளவு அரசியலா?

அவளுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக் கொணர்ந்தால் பெரிய படைப்பாளியாக அவள் மாறவும் கூடும். அது குறித்து அவளிடம் பேசவில்லை,. தேர்வுநேரம் என்பது மட்டுமல்ல, ஒரு பள்ளிக்கு ஒரு லூசு போதாதா என்ன?

எப்பேர்பட்ட ராட்ஷச இயந்திரங்களையெல்லாம் இயக்கி உயிர் கொடுக்கும் மின்சாரம் ஒழுங்காக பள்ளிக்கு வராத மாணவனோடு ஒப்பிடுமளவிற்கு சன்னமாய் சிறுத்து கீர்த்தியிழந்து கீழ்மைப் படக் காரணம்தான் என்ன?

முன்னர் ஒரு முறை அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொன்னார்,

“ ஒருக்கால் அடுத்த தேர்தலில் கழகம் தோற்குமானால் அதற்கு நான்தான் காரணமாக இருப்பேன்,” என்று . அன்றைய தினத்தில் மின்வெட்டு அவ்வளவு கடுமையாக இருந்தது. அப்போதெல்லாம் ஆற்காடு வீராசாமி அவர்களை தமிழக மின்வெட்டுத் துறை அமைச்சர் என்றே பெரும்பான்மைத் தமிழர்கள் அழைத்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி. மு. க படு தோல்வி அடைந்ததற்கு அவர் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட இயலாது என்றாலும் அவரது துறையின் மோசமான செயல்பாடுகள் அதற்கு பெருமளவு பங்காற்றியதையும்   மறைக்க இயலாது.

இவ்வளவு கடுமையான மின்வெட்டிற்கு என்னதான் காரணம்?

தயாராகும் இடங்களில் இருந்து பயனாளியை அடைவதற்குள் விணாகக் காரணமாகும் கசிவு,

அரசியல் கூட்டங்களுக்கு அதற்கு இதற்கு என்று கொக்கிப் போடும் வகையில் ஏற்படும் மின்திருட்டு,

பெரும் வணிக நிருவனங்கள் வைக்கும் விளம்பர பலகைகளுக்கு அநியாத்திற்கும் போடப்படும் அதிக மின்சாரத்தை உறிஞ்சக் கூடிய மின் விளக்குகள்,

பெரியப் பெரிய வணிக நிருவனங்கள் அலங்காரம் , அழகு, குளிர் சாதன வசதி என்று ஆடம்பரமாய் நீட்டும் ஊதாரித்தனம்,

போக பன்னாட்டு நிருவனக்களின் ஆலைகள் அள்ளிக் குவிக்கும் மின்சாரம்,

போதுமான அளவு மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யாமை,

இவை எல்லாம் கடந்து இப்படி ஒரு கடுமையான மின்வெட்டைக் கொடுத்தால் மக்கள் பையப் பைய கூடங்குளத்தின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை என்பதைக் கூட நிராகரிக்க இயலாதுதான்.

இவை எல்லாம் இருக்க வேறு சில காரணங்களும் உள்ளன.

எங்கள் பள்ளியின் ஆசிரியர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்த போது டால்மியா சிமிண்ட் ஆலையில் இரண்டு உலைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு வந்ததாகவும் , அவர்களிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதை தமிழ் நாடு மின்சார வாரியம் நிறுத்திக் கொண்டதால் ஒரு உலை மட்டுமே தற்போது இயங்குவதாகவும் சொன்னார்,

அந்தப் பகுதிக்காரர் அவர். மின் உலை மூடப் பட்டதால் அவர் பகுதி மக்கள் சிலர் வேலை வாய்ப்பை இழப்பார்களே என்ற கவலை அவருக்கு.

ஏறத்தாழ இருபது மெகாவாட் மின்சாரத்தை டால்மியா சிமிண்ட்டிடமிருந்து வாங்குவதை தமிழ் நாடு மிசார வாரியம் நிறுத்திக் கொண்டிருக்கிறது.

இதேபோல இன்னும் பல ஆலைகளிடம் இருந்தும் மின்சாரம் பெறுவதை தமிழ் நாடு மின்சார வாரியம் நிறுத்திக் கொண்டிருக்கிறது என்றும் தெரிய வருகிறது.

இது குறித்து முக நூலில் எழுதியபோது நூற்றுக் கணக்கான சின்ன சின்ன குட்டி ஆலைகள் கூட அவர்களுக்குத் தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை த. நா. மி. வாரியத்துக்கு வழங்கி வந்ததாகவும், அவையும் தற்போது முற்றாக நின்று போனதாகவும் ஒரு நண்பர் எழுதியிருந்தார்.

மட்டுமல்ல,

தமிழ் நாட்டில் பயன் படுத்தப் படும் குண்டு விளக்குகளை குழல் விளக்குகளாக மாற்றினால் ஏறத்தாழ 640 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்றும் , இது கூடங்குளம் உலையிலிருந்து தமிழ் நாட்டிற்கு கிடைக்கப் போகும் மின்சார அளவை விட அதிகம் என்றும் ஓ ஞாநி எழுதியிருந்ததாக ஞாபகம்.

பல மாநிலங்களில் குண்டு விளக்குகளை குழல் விளக்குகளாக மாற்ற மானியம் வழங்கப் படுவதாக அறிகிறோம்.

காற்றாலைகள் தொடங்கவும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் மக்களுக்கு வேண்டிய அளவிற்கு ஊக்கம் தர அரசு தயங்குவதுதான். ஏனென்று புரியவில்லை.

இந்தப் பாராவை எழுதும்போது தமிழக முதல்வர் அறிவிக்கிறார்,

“தமிழகத்தில் முதல் தவனையாக 20000 தெரு விளக்குகள் சூரிய ஒளி மின் விளக்குகளாக மாற்றப் படும், 19000 இடங்களில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையங்கள் நிறுவப் படும்.

மெய்யாகவே இதற்காக முதல்வரை பாராட்டத்தான் வேண்டும். வஞ்சனையே இல்லாமல் பாராட்டி விடலாம்.

20000 மின் விளக்குகள் வெய்யிலைப் பயன்படுத்தத் தொடங்கினால் ஏறத்தாழ ஒரு மெகாவாட் மிச்சமாகும். தமிழ் நாடு முழுவதும் இருக்கும் கடைசி தெரு விளக்கு வரைக்கும் இதை விரிவு படுத்தினால்...?

சரிதானா தெரியாது, ஒரு குத்து மதிப்பாக தமிழ் நாட்டில் ஒரு கோடி தெரு விளக்குகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இவை அனைத்தையும் வெயிலோடு இணைத்தாலேறக்குறைய 1000 மெகாவாட் மிச்சமாகும்.

போக, உடன்குடி அனல் மின் நிலையத்தைத் துவக்கினால் 1600மெகாவாட் கிடைக்கும். அதற்கான அறிவிப்பு கூட வந்து விட்டது.

முக நூலில் எழுதிய நண்பர் போன அரசாங்கம் ஆலைகளில் இருந்து பெற்ற மின்சாரத்திற்கு நிறைய நிலுவை வைத்திருப்பதுதான் இப்போது அவர்களிடம் வாங்க இயலாமைக்கு காரணம் என்றும் சொல்லியிருந்தார். அந்த நிலுவைத் தொகையை கட்ட போதுமான அளவு பணம் அரசிடம் இல்லை என்பதுதான் காரணம் எனில் அரசு தைரியமாக மக்களிடம் வரலாம். inverter வாங்க ஏராளம் செலவு செய்யும் மக்கள் தட்டுப் பாடற்ற மின்சாரம் கிடைக்குமெனில் நிச்சயம் உதவுவார்கள். இதற்கென்று கடன் பத்திரமே வெளியிடலாம்.

இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் தமிழ் மண்ணை இருட்டுக்குத் தின்னக் கொடுக்கக் காரணம் என்ன?

ஒரு காரணம் சொல்லப் படுகிறது. நாட்டை இருளில் தள்ளிவிட்டு, கூடங்குளம் மட்டுமே வெளிச்சத்தைக் கொண்டு வரும் என்ற எதிபார்ப்பை மக்களிடம் விதைக்க அரசு முயல்கிறது என்றால் அது மிகவும் ஆபத்தானது.

 அணு ஆலையில் மோசமான விபத்து ஒன்று நிகழுமானால் அதன் விளைவு இந்த இருளை விடவும் அதி பயங்கரமானதாக இருக்கும்.

ஒன்றை மட்டும் சொல்லலாம்,

ஏராளம் காரணங்கள் வரிசையாய் நின்றாலும் மூக்கைத் துருத்திக் கொண்டு முந்திச் சென்று போன ஆட்சியை வீட்டிற்கு அனுப்பியது இந்த இருட்டுதான்.

  நன்றி :  ”குறி”

Thursday, February 23, 2012

தள்ளிவிடாதீர்கள் பெரியவர்களே

 ஊருக்கு இளைத்தவன் அரசமரத்து பிள்ளையாராண்டி, அவனுக்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தியாராண்டி” என்று கிராமத்தில் வேடிக்கையாக சொல்வார்கள்.

ஒரு கமாவையேனும் தள்ளுபடி செய்துவிட முடியாத உண்மை அது என்பதையே அழுத்தமாய் உணர்த்தியிருக்கிறது மாண்பு மிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் நேற்றைய பேச்சு.

அமைச்சர் அவர்களின் தந்தை ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர். அவரது சகோதரரும் ஆசிரியர். ஆக, பாரம்பரியமான ஆசிரியக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரின் பேச்சு என்பதுதான் மிகுந்த மன வேதனையையும் கவலையையும் தருகிறது.

”ஆசிரியர்கள் கந்து வட்டிக்கு விடுகிறார்கள், சிராக்ஸ் கடை வைத்திருக்கிறார்கள்” என்பதாகப் பேசியிருக்கிறார். இது இர்ஃபான் செய்த கொலையைவிடவும் கொடூரமானது. 

ஏதோ ஆசிரியர்கள் என்றால் வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்றோ, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றோ நாம் என்றைக்கும் வரிந்து கட்டியதும் இல்லை, இனி அதை செய்யப் போவதும் இல்லை.

எல்லாத் துறைகளிலும் இருப்பதைப் போலவே இங்கும் மேன்மைகளும் உண்டு கீழ்மைகளும் உண்டு. உச்சங்களும் உண்டு அதலப் பள்ளங்களும் உண்டு.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெளிவாக “ஆசிரியர்கள் கந்து வட்டிக்குவிடுகிறார்கள்” என்று சொல்கிறார் என்றால் தெரியாமல் சொல்ல மாட்டார். அவர் பொய் சொல்கிறார் என்றும் சொல்லவில்லை. 

கந்து வட்டிக்கு எதிராக மிக மூர்க்கமாக கரம் நீட்டி அதன் கோரப் பிடியிலிருந்து பாதிக்கப் பட்ட மக்களை பாதுகாக்க முயற்சித்தவர் நமது முதல்வர். அப்படியிருக்கும் போது கந்து வட்டிக்கு விடுபவர்களை அம்மாவின் கவனத்திற்கு கொண்டு போய் அவர்கள் மீது கடுமையான தண்டனை எடுத்திருக்க வேண்டுமே அதை ஏன் செய்ய வில்லை.

நம்மை பொருத்தவரை கந்து வட்டிக்கு ஏழைகளை வீழ்த்துபவன் ஆசிரியனே ஆயினும் அவன் கந்து வட்டிக்காரனே, அசிங்கமான சமூக விரோதியே.

அவனை நிரந்தரமாய் பணி நீக்கம் செய்வதிலும் நமக்கு எந்த விதமான கருத்து மாற்றமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அதுவே நமது கோரிக்கையும் கூட.

ஆகவே அதை பொதுப் படுத்துவதை அமைச்சர் தவிர்த்திருக்க வேண்டும். இப்போது கூட அவர் அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றே விரும்புகிறோம். செய்வார் என்றும் நம்புகிறோம்.

ஒரு குழந்தை கத்தியால் குத்தினான், பல குழந்தைகள் கத்தியோடு எங்களை மிரட்டத் தொங்கி விட்டார்கள். அதிகாரிகள் மனிதாபிமானமே இல்லாமல் நெருக்குகிறார்கள். 

ஒன்றை சொல்லி வைப்போம்,

ஒரு ஆதரவற்ற நாயினை நிறைய நாய்கள் துரத்தினவாம், நாய் ஓடிக்கொண்டே இருந்ததாம், துரத்தும் நாய்களும் துரத்திக் கொண்டே இருந்தனவாம். அடுத்த தப்படி எடுத்து வைத்தால் பெரிய பள்ளம். விழுந்து செத்து விட வேண்டியதுதான். பயந்து ஓடிக்கொண்டிருந்த நாய் வேறு வழியே இல்லாத நிலையில் திரும்பி எதிர்த் தாக்குதலை, விளைவுகள் பற்றி கவலைப் பட வாய்ப்பே இல்லாமல் தொடங்கியதாம்.

வேறு வழியே இல்லாத நிலைக்கு ஆசிரியர்களத் தள்ளிவிடாதீர்கள் பெரியவர்களே.

Friday, February 17, 2012

தக்காளி என் ஆசான்

அப்போது கீர்த்தனா நான்காவதோ ஐந்தாவதோ படித்துக் கொண்டிருந்தாள்.

குழந்தைகள் தினத்திற்காக அவர்கள் பள்ளியில் ஒரு பேச்சுப் போட்டி வைத்திருந்தார்கள். தயாரித்து தரும்படி நச்சரித்துக் கொண்டிருந்தாள்.

“அப்பாக்கு வேலை கொஞ்சம் இருக்குடா. அடுத்த முறை எழுதித் தறேனே”

“இப்பவே வேணும்”

 “அப்பா பேப்பர் திருத்தணும்டா”

“ நீ என்ன வேணா திருத்து. ஆனா எழுதிக் கொடுத்துட்டு திருத்து”

“ஏண்டி உங்க மிஸ் கிட்ட கேக்க வேண்டியதுதானே”

“ஏன் எங்க மிஸ்சா பஸ்ஸுக்கு சில்லறை இல்லேன்னு ஏங்கிட்ட நூறு ரூபா கடன் வாங்கினாங்க”

“ சரி இந்தா பிடி உன் நூறு ரூபா,” நீட்டினேன்.

“ எனக்கு இதெல்லாம் வேணாம். உனக்கு தேவைப் பட்டப்ப நான் பணம் கொடுத்தேன்ல. இப்ப எனக்கு பேச்சு வேணும் எழுதிக் குடு”

ஒரு நூறு ரூபாய்க்கே இந்த நெருக்கடி எனில் பாரதப் பிரதமர்கள் உலக வங்கியிடம் ஏன் இப்படி கை கட்டி வாய் மூடுகிறார்கள் என்று புரிகிறது. இனி  கந்துக்காரனிடம் வாங்கினாலும் வாங்கலாம் கடனை இந்த வெள்ளைச்சியிடம் மட்டும் வாங்கக் கூடாது என்று முடிவெடுத்தவனாக,

“ சரி எழுத்தித் தரேன். நச்சரிக்காமப் போ”

“அது, ஆமா, அந்த நூறு ரூபாய்க்கு எப்ப கேட்டாலும் பேச்ச எழுத்தி தரணும் “

ஓடி விட்டாள். உலக வங்கிக்கே பிள்ளைகள்தான் பயிற்சி கொடுத்திருப்பார்கள் போல.

இரண்டு பக்கங்களுக்கு எழுதி முடித்து தேடிய போது அவள் குளிக்கப் போயிருந்தாள்.

விக்டோரியாவிடம் கொடுத்தேன்.

“ வெள்ளச்சி இம்ஸ தாங்கல பாப்பா. அவகிட்ட கொடுத்து மனப்பாடம் செய்யச் சொல்” சொல்லி வண்டியை எடுக்க நகர்ந்தேன்.

மாலை வீடு திரும்பும் போது கீர்த்தியும் தக்காளியும் வாசலில் கொட்டப் பட்டுக் கிடந்த மணலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

”ஐ அப்பா”

“பேச்சு நல்லா இருந்துச்சா?”

“ சரியான லூசாப்பா நீ”

விக்டோரியாவும் கிஷோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். மணல் இறைந்து வீணாவதில் இருந்த எரிச்சல்கூட விக்டோரியாவிடமிருந்து பறந்து போயிருந்தது.

”ஏண்டி பாப்பா?”

“பின்ன என்னப்பா? அவருக்கு, இவருக்கு, நிக்கறவருக்கு, ஒக்காந்து இருக்கறவருக்கு, போறவருக்கு, வரவருக்குன்னு ஒரு பாரா முழுக்க வணக்கத்துக்கே வேஸ்டாக்கிட்டியேப்பா”

” வேற எப்படி சொல்றது?”

“ எல்லோருக்கும் வணக்கம்னு ஒத்த வரியில சொன்னாப் போதாதா?”

”ஒங்க அப்பா எதுலயுமே வழ வழாதான்”

விக்டோரியா முடிக்கும் முன் உள் புகுந்தான் தக்காளி. நீங்கள் அவனை ஹேமா என்று அவன் பட்டப் பெயரை சொல்லி அழைப்பதில் எனக்கு ஒன்றும் சங்கடம் இல்லை.

அவன் சொன்னான்,

”ஏங்க அக்கா இவ்வளோ நீளமா எல்லோருக்கும் வணக்கம்னு சொல்லிகிட்டு”

“அப்புறம்?”

கேட்டது கீர்த்திதான் என்றாலும் எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு ஒட்டிக் கொண்டது.

தொடர்ந்தான்,

“எல்லோரையும் பார்த்து கும்பிட்டாப் போதாதா?”

பொடிசு அன்றையத் தேதியில் யூ.கே.ஜி தான் படித்துக் கொண்டிருந்தான்.

இப்பவும் சொல்கிறேன் கற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளிடம் ஏராளம் இருக்கிறது.

Monday, February 13, 2012

ஞாயிற்றுக் கிழமையும் மாணவர்க்கில்லை

” நெடு நாள் திரு முருகா
 நித்தம் நித்தம்
இந்தெழவா?
இந்த வாத்தியாரு சாவாரா?
என் வயித்தெரிச்சல் தீராதா?”

என்ற ஒரு பழைய பாடலை எங்கள் தமிழாசிரியர் திருஞானம் அய்யா அவர்கள் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறோம்.

அவர் மாணவராயிருந்த காலத்தில் அதிக நெருக்கடி கொடுக்கும் ஆசிரியர்களைப் பார்த்து மாணவர்கள் இப்படித்தான் பாடுவார்கள் என்றும், மிக நீண்ட செய்யுளை மனப்பாடம் செய்து வரச் சொல்லும் தன்னைப் பார்த்தும் அநேகமாக நாங்களும் இப்படித்தான் பாடுவோம் என்றும் சிரித்துக் கொண்டே சொல்வார்.

“எனக்கு சாவைத் தரச் சொல்லி முருகனிடம் இறைஞ்சினாலும் சரி, பாடலை மட்டும் அவசியம் மனப்பாடம் செய்துவிட்டு வாருங்கள்” என்று எங்களிடம் கறப்பதில் கறாராக இருப்பார்.

ஆக, படிக்கச் சொல்லியோ, அல்லது ஒழுக்க நெறி முறைகளில் அதிக நெருக்கடி கொடுக்கிறவராகவோ இருக்கும் ஆசிரியரை ஏதாவது செய் என்று இறைவனிடம் இறைஞ்சுகிற மாதிரி அமைந்துள்ள இந்தப் பாடலுக்கு வயது எப்படியும் ஓரிரு நூற்றாண்டுகள் இருக்கும்.

எந்தத் தன்னடக்கமும் இல்லாமல் எந்த இடத்திலும் என்னால் ஆகச் சிறந்த ஆசிரியர்களுள் என் தந்தையும் ஒருவர் என்பதை உரத்தக் குரலில் சொல்ல முடியும்.எங்கள் கிராமமான கடவூரில் இன்று இத்தனை பேர் நன்கு படித்து வளமாக இருக்கிறோம் எனில் அதில் அவரது பங்களிப்பும் நிச்சயம் இருக்கிறது. சினிமாவில் பார்ப்பது போல் எங்களூரைச் சுற்றிஎட்டுப் பட்டிகள் உள்ளன. இந்த எட்டுப் பட்டிகளிலும் பணி ஓய்வு பெற்ற இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அவர் எட்டாம் வகுப்பு ஆசிரியர் என்றே அறியப் பட்டும் அழைக்கப் பட்டும் வருகிறார்.

இன்னமும் எங்கள் வீட்டுக்கு “எட்டாம் வகுப்பு சார் வீடு” என்பதுதான் அடையாளம்.

இப்படி இன்றளவும் நாங்களே கூச்சப் படுகிற அளவுக்குக் கொண்டாடப் படுகிற என் அப்பா சாக வேண்டும் என்று அவரது மாணவர் ஒருவர் எங்கள் ஊரில் உள்ள கருணைகிரிப் பெருமாள் கோவிலில் தேங்காய் உடைத்து மனமுருகி வேண்டியிருக்கிறார். அப்படி வேண்டிக் கொண்ட கருப்பசாமி அண்ணன் இன்றைக்கும் எங்கள் ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கிறார்.

இது நடந்த போது நான் பிறந்திருக்கவே இல்லை என்று அப்பா அடிக்கடி சொல்வார். எனில் இது நடந்து குறைந்த பட்சம் ஐம்பது ஆண்டுகளாவது கடந்திருக்கும்.

ஆசிரியர் மாணவர் உறவு என்பது எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறது. கடுமையாக நெருக்கடி கொடுக்கும் ஆசிரியர் செத்துத் தொலைத்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் எனில் அப்படியே ஆகட்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் மனப்பான்மை புதிதல்லதான்.

என்ன, அப்போதெல்லாம் வாதியாரு சாக வேண்டும் என்று வேண்டி விட்டோமே என்று அந்த மாணாவர் வருத்தப் படும் போது “விடுப்பா நான் என்ன அதனால செத்தா போயிட்டேன் “ என்று ஆற்றுப் படுத்த அந்த ஆசிரியரும் இருந்திருப்பார்.

இன்று ஆயிரம்தான் இர்ஃபான் வருத்தப் பட்டாலும், அழுது புரண்டு அரற்றினாலும் அவனை அள்ளி அணைத்து ஆற்றுப் படுத்த அவனது ஆசிரியை உமா உயிரோடு இல்லை என்பதுதான் வித்தியாசம்.

என்ன நடந்தது? எப்படி நடந்தது? என்பது குறித்து கூட தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர் ஒரு அறிவியல் ஆசிரியரா? இல்லை இந்தி ஆசிரியரா? என்பதற்கும் நம்மிடம் தெளிவான பதில் எதுவும் நம்மிடம் இல்லை. அவர் அறிவியலில் Phd முடித்தவர் என்று சொல்கிறார்கள். அது உண்மை எனில் அவர் ஏன் இந்தி வகுப்பெடுக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே துருத்துகிறது.

உணர்ச்சி வசப்படுவதோ, அவசரப் படுவதோ அறவே தவிர்க்கப் பட வேண்டும். ஏற்கனவே நார் நாராய்க் கிழிந்து கிடக்கும் ஆசிரியர் மாணவர் உறவு நிலையை இது மேலும் மோசமாக்கி விடும் என்பதை உணர வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையை தனது ஆசிரியைக்கு எதிராகவே கொலை வாளை சுழற்ற வைத்தது எது?

சத்தியமாய் நம்பலாம், ஒழுங்காகப் படித்து வாழ்க்கையில் உயரச் சொன்ன ஆசிரியையே குத்திக் குத்திக் கொன்று தொலைத்திருக்கிறோமே என்று எஞ்சிய வாழ் நாளெல்லாம் அந்தப் பிள்ளை நிம்மதியற்று அழுவானே. அவனது ஆயுட்கால அழுகைக்கு எது காரணம்?

தகாத சேர்க்கை, சினிமா, ஊடகங்கள் என்று பல்வேறு காரணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப் படுகின்றன. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும் கல்விக் கூடங்களிலிருந்த கல்வி சந்தைக்கு கடத்தப் பட்டு, மாணவனை சான்றோனாக்குவது, மனிதப் படுத்துவது என்கிற கல்வியின் உயரிய செயல் திட்டத்திலிருந்து அவனை மதிப்பெண்களை அறுவடை செய்யும் அறுவை எந்திரமாக மாற்றுவது என்கிற நிலைக்கு கல்வியை தனியார் மயம் உந்தித் தள்ளிய நொடியில் இதற்கான விதை விதைக்கப் பட்டதாகக் கொள்ள வேண்டும்.

கொஞ்சம் மனசாட்சியோடு யோசித்துப் பார்ப்போம்,

தான் கொலை செய்யப் படுமளவிற்கு உமா அப்படி என்ன தவறு செய்தார்? அல்லது பத்துப் பதினைந்து முறை கத்தியால் குத்துமளவிற்கு உமா மேல் இர்ஃபானுக்கு என்ன தனிப்பட்ட கோவம்?

நன்கு படிக்கச் சொன்னார். அதில் கொஞ்சம் கடுமை காட்டியிருக்கிறார்.  அவன் ஒத்துழைக்காத போது அவனது பெற்றோரின் கவனத்திற்கு இதைக் கொண்டு போயிருக்கிறார். இத்தகைய நெருக்கடிகள் ஒரு கொலைக்கான நியாயமான காரணங்கள் தானா?

பிள்ளைகளது படிப்பில் அக்கறை காட்டிக் கொள்வதாக கருதிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நிரலைஎப்படி அமைக்கிறார்கள்?

அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுப்பி “படி” என்கிறார்கள். ஆறு மணிக்கு தனிப் பயிற்சி. அப்புறம் வீட்டிற்குப் போய் அவசர அவசரமாய் புட்டுப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு பாய்ச்சல். சிறப்பு வகுப்பு, பிறகு வகுப்புகள். மாலை சிறப்பு வகுப்பு, பிறகு மீண்டும் தனிப் பயிற்சி, பிறகு வீட்டிற்கு வந்தும் படிப்பு.

இதைப் படிக்கும் போதே நமக்கு தலை சுற்றி ஒரு எரிச்சல் வருகிறதே, அந்தப் பிள்ளைகளுக்கு எப்படி இருக்கும்?

பழைய கட்டமைப்பில் மதிப்பெண் தேர்ச்சி விழுக்காடு எல்லாம் பிரதானமில்லை. இதெல்லாம் பிரதானமில்லாமல் இருந்த போது வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் நடை பெற்றது. மதிப்பெண் பிரதானமான பிறகு கற்றலும், கற்பித்தலும் ஏறத்தாழ வழக்கொழிந்து போய் மனப்பாடம் செய்ய வைப்பதும் எழுதி வாங்குவதுமே பிரதானமாகிப் போனது.

கற்றல் ஒரு மாணவனுக்கு சிறகைத் தரும். மனப்பாடம் ஒரு வித தளர்ச்சியைத் தரும். கற்றலும் கற்பித்தலும் நடக்கும் போது மாணவனுக்குப் புரிய வேண்டும் என்றத் தேவை இருந்தது. கற்றல் கற்பித்தலில் மாணவன் ஒரு பொருட்டான இடத்தைப் பெற்றான். மனப்பாடம் என்று வரும் போது இயந்திரமாகிப் போனான்.

இது இயல்பாகவே மாணவர்களிடம் ஒரு ஒவ்வாமையை, கோவத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. நூறு டிகிரிக்கு வரும் வரை எப்படி நீரின் கொதி செயல் வெளியே தெரியாதோ அப்படித்தான் இதுவும். பெற்றோர் மீது, ஆசிரியர்கள் மீது, கல்விக் கட்டமைப்பின் மீது ஒரு வித கோவத்தை விதைத்து வைத்திருக்கிறது.

அதன் முதல் பலி உமா. ஆனால் கொஞ்சம் பொருப்போடு அணுகினால் இந்த மோசமான கல்விக் கட்டமைப்பின்பால் உள்ள மாணவக் கோவத்தின் முதல் பலி உமாவும் இர்ஃபானும்.

இதை இர்ஃபான் என்ற மாணவனின் கோவமாகப் பார்த்தால் நாம் தோற்போம். இது ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் இருக்கும் கோவத்தின் பிரதிபலிப்பு.

அன்றைய இந்தி வகுப்பிற்கு இர்ஃபான்தான் முதல் ஆளாக வந்திருக்கிறான்.  அவனை ஒரு புன்னகையோடு உமா வரவேற்றிருந்தால் ஒருக்கால் உமா இன்று உயிரோடு இருந்திருப்பதற்கும் ஒரு பெரு வாய்ப்புண்டு என்று மாதவராஜ் சொல்வதை மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்க வேண்டும்.

எதிர் பார்க்குமளவிற்கு தேர்ச்சி விழுக்காட்டையோ, மதிப்பெண்களையோ, அறுவடை செய்து தராவிட்டால் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பில்லை.

இப்படிச் சொல்வதால் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை ஆரோக்கியமானது என்று இல்லை. இப்பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் முன்பெல்லாம் தனது பதவி காலத்திற்குள் ஒரு பத்து அல்லது பன்னிரண்டு தலைமை ஆசிரியர் கூட்டங்களை சந்தித்திருப்பார்கள். ஆனால் இப்போதோ ஒரு மாதத்திற்கு மூன்று வருகிறது.

தலைமை ஆசிரியர் கூட்டமென்றால் தொடங்கியது முதல் முடிக்கும் வரை தேர்ச்சி விழுக்காடு தேர்ச்சி விழுக்காடு தேர்ச்சி விழுக்காடுதான்.

சமீபத்தில் நடந்த ஒரு தலைமை ஆசிரியர் கூட்டத்தில் ஒரு முதன்மைக் கல்வி அலுவலர் பேசியதைக் கேட்டால் இது விளங்கும். தேர்வெழுதி நேரடியாக அதிகாரியாக வந்தவர் அவர். எவ்வளவுதான் இரக்கமற்று கூட்டிச் சொன்னாலும் முப்பத்தி ஐந்துக்குமேல் இருக்காது. அந்தக் கூட்டத்தில் இருந்த தலமை ஆசிரியர்களின் சராசரி வயதை எவ்வளவுதான் பெருந்தன்மையோடு சொன்னாலும் ஐம்பத்தி நான்கிற்கு குறையாது. அவர் பேசினார்,

”தேர்ச்சி விழுக்காடு மட்டும் குறைந்தது பந்தாடிடுவேன் ஆமாம்.” தேர்ச்சி விழுக்காடே இலக்கு என்றானபின் எந்த வயதுக்காரரை எந்த வயதுக்காரர் எப்படி பேசுகிறார் பாருங்கள்.

அவரை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத தலைமை ஆசிரியர்கள் அடுத்த நாள் ஆசிரியர் கூட்டத்தை கூட்டி கொந்தளித்து தங்களது காயத்துக்கு களிம்பு தடவிக் கொள்கிறார்கள்.

இப்போது ஆசிரியர்களுக்கு அதை வகுப்பறையில் இறக்கி வைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இந்த இறுக்கம்தான் அவர் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் ஒரு மாணவன் சிரித்து விட்டால் “என்னடா இளிப்பு” என்று எரிந்து விழ வைக்கிறது. பிள்ளைகளின் சிரிப்பைக் கூட ரசிக்க விடாமல் நோகச் செய்கிறது இந்தக் கல்விக் கட்டமைப்பு.

பையனுக்குப் புரிகிறதோ இல்லையோ எதையாவது செய்து பெரும்பகுதி மாணவர்கள் ஆயிரத்தி நூறுக்கு குறையாமல் மதிப்பெண்களை எடுத்துவிட வைக்க வேண்டும் என்ற நெருக்கடியிலோ, அல்லது எல்லோரையும் தேர்ச்சி பெற வைத்து விட வேண்டும் என்ற நெருக்கடியிலோதான் தாயாய் தகப்பனாய் நடக்க இயலாமல் சர்க்கஸ் ரிங் மாஸ்டர்களாய் மாற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆசிரியர்கள் ஆளாகிறார்கள்.

இந்தப் புள்ளியில்தான் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே இருந்த ஒரு பெயர் தெரியாத பந்தம் அறுந்து போனது.

 நாட்டில் உள்ள எல்லா மாணவர்களும் நிறைய மதிப் பெண்கள் பெற்றுவிட வேண்டும் என்கிற அக்கறையிலா சுய நிதிப் பள்ளி தாளாளர்கள் இது விசயத்தில் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள்? சத்தியமாய் இல்லை.  அப்போதுதான் அவருக்கு சேர்க்கையும் கல்லாவும் வழியும்.

கல்லாவும் கல்வியும் கை கோர்த்த இந்த நொடிதான் சபிக்கப் பட்ட நொடி எனலாம்.

மனிதப் படுத்தவும் சான்றோனாக்கவும் ஆசிரியர் காட்டிய கடுமைக்கும், தனது பணியை தக்க வைத்துக் கொள்ளவும் முதலாளியின் கல்லாவை வழியச் செய்யவும் ஆசிரியர் காட்டும் கடுமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இந்த இரண்டாவது வகைக் கடுமைதான் இன்றைய ஆசிரியர் மாணவர் உறவின் விரிசலுக்கானக் காரணம்.

மட்டுமல்ல, அப்போதெல்லாம் எதையும் கடந்து தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்ள மாணவனுக்கு வாய்ப்பு இருந்தது. விளையாட நேரமிருந்தது. இப்போதோ அப்படியல்ல கந்தர்வன் பெண்களின் அவஸ்தைக் குறித்து இப்படிச் சொல்வார்,

“ நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும்
பெண்களுக்கில்லை” என்று.

இதை கொஞ்சம் மாற்றி மாணவர்களின் அவஸ்தையோடு பொருத்தி இப்படிச் சொல்லலாம்

” நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும்
மாணவர்க்கில்லை “ என்று.

கம்பியில் நடக்க வேண்டிய தருணமிது. ஒரு நூல் சலனப் பட்டு சாய்ந்தாலும் அது மாணவர்களுக்கும் ஆசிரியகளுக்கும் இடையே பகைமையை உண்டாக்கும்.

அழகான, ஒன்றுமறியாத, இரண்டு குழந்தைகள் அன்பான அம்மாவை இழந்து அநாதைகளாய் தவிக்கும் சோகம் ஒரு புறமெனில், ஒரு குழந்தையை உயிரோடு பறி கொடுத்து தவிக்கும் குடும்பம் இன்னொரு புறம்.

போதும்,

இனி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

தேர்வுகளை மையப் படுத்தாத, மனித மாண்புகளை மையப் படுத்தக் கூடிய , மாணவர்களின் குறும்பை குதூகலத்தை அங்கீகரிக்கிற கல்விக் கட்டமைப்பும், லாப நோக்கில் குழந்தைகளை இயந்திரங்களாக மாற்றக் கூடிய சந்தையிலிருந்து கல்வியைப் பொதுப் படுத்தவும் வேண்டும்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மாணவர் மற்றும் சமூக அமைப்புகள் அடிக்கடிக் கூடி அக்கறையோடு விவாதிக்க முன்வர வேண்டும்.

பெரும்பான்மை வகுப்பறைகளில் ஆசிரியர் இறுக்கத்தோடு நுழைகிறார். மாணவர்கள் இறுக்கத்தோடு எழுந்து நின்று வணங்குகிறார்கள். இறுக்கத்தோடே நகர்கிறது வகுப்பு. முடிந்ததும் மாணவர்கள் இறுக்கத்தோடே வெளியேறும் ஆசிரியரை அதை விட இறுக்கத்தோடு வழி அனுப்பி வைக்கிறார்கள். இனி அடுத்ததாய் இறுக்கத்தோடு வரப்போகும் ஆசிரியரை எழுந்து நின்று வரவேற்க இறுக்கத்தோடு தவம் இருக்கிறார்கள்.

ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு புன்னகையோடு வகுப்பினைத் தொடங்கி ஒரு புன்னகையோடு அதை நிறைவு செய்யும் வகையில் கல்வி கட்டமைக்கப் பட வேண்டும்.


 நன்றி ; “ காக்கைச் சிறகினிலே”


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...