Thursday, February 23, 2012

தள்ளிவிடாதீர்கள் பெரியவர்களே

 ஊருக்கு இளைத்தவன் அரசமரத்து பிள்ளையாராண்டி, அவனுக்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தியாராண்டி” என்று கிராமத்தில் வேடிக்கையாக சொல்வார்கள்.

ஒரு கமாவையேனும் தள்ளுபடி செய்துவிட முடியாத உண்மை அது என்பதையே அழுத்தமாய் உணர்த்தியிருக்கிறது மாண்பு மிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் நேற்றைய பேச்சு.

அமைச்சர் அவர்களின் தந்தை ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர். அவரது சகோதரரும் ஆசிரியர். ஆக, பாரம்பரியமான ஆசிரியக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரின் பேச்சு என்பதுதான் மிகுந்த மன வேதனையையும் கவலையையும் தருகிறது.

”ஆசிரியர்கள் கந்து வட்டிக்கு விடுகிறார்கள், சிராக்ஸ் கடை வைத்திருக்கிறார்கள்” என்பதாகப் பேசியிருக்கிறார். இது இர்ஃபான் செய்த கொலையைவிடவும் கொடூரமானது. 

ஏதோ ஆசிரியர்கள் என்றால் வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்றோ, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றோ நாம் என்றைக்கும் வரிந்து கட்டியதும் இல்லை, இனி அதை செய்யப் போவதும் இல்லை.

எல்லாத் துறைகளிலும் இருப்பதைப் போலவே இங்கும் மேன்மைகளும் உண்டு கீழ்மைகளும் உண்டு. உச்சங்களும் உண்டு அதலப் பள்ளங்களும் உண்டு.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெளிவாக “ஆசிரியர்கள் கந்து வட்டிக்குவிடுகிறார்கள்” என்று சொல்கிறார் என்றால் தெரியாமல் சொல்ல மாட்டார். அவர் பொய் சொல்கிறார் என்றும் சொல்லவில்லை. 

கந்து வட்டிக்கு எதிராக மிக மூர்க்கமாக கரம் நீட்டி அதன் கோரப் பிடியிலிருந்து பாதிக்கப் பட்ட மக்களை பாதுகாக்க முயற்சித்தவர் நமது முதல்வர். அப்படியிருக்கும் போது கந்து வட்டிக்கு விடுபவர்களை அம்மாவின் கவனத்திற்கு கொண்டு போய் அவர்கள் மீது கடுமையான தண்டனை எடுத்திருக்க வேண்டுமே அதை ஏன் செய்ய வில்லை.

நம்மை பொருத்தவரை கந்து வட்டிக்கு ஏழைகளை வீழ்த்துபவன் ஆசிரியனே ஆயினும் அவன் கந்து வட்டிக்காரனே, அசிங்கமான சமூக விரோதியே.

அவனை நிரந்தரமாய் பணி நீக்கம் செய்வதிலும் நமக்கு எந்த விதமான கருத்து மாற்றமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அதுவே நமது கோரிக்கையும் கூட.

ஆகவே அதை பொதுப் படுத்துவதை அமைச்சர் தவிர்த்திருக்க வேண்டும். இப்போது கூட அவர் அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றே விரும்புகிறோம். செய்வார் என்றும் நம்புகிறோம்.

ஒரு குழந்தை கத்தியால் குத்தினான், பல குழந்தைகள் கத்தியோடு எங்களை மிரட்டத் தொங்கி விட்டார்கள். அதிகாரிகள் மனிதாபிமானமே இல்லாமல் நெருக்குகிறார்கள். 

ஒன்றை சொல்லி வைப்போம்,

ஒரு ஆதரவற்ற நாயினை நிறைய நாய்கள் துரத்தினவாம், நாய் ஓடிக்கொண்டே இருந்ததாம், துரத்தும் நாய்களும் துரத்திக் கொண்டே இருந்தனவாம். அடுத்த தப்படி எடுத்து வைத்தால் பெரிய பள்ளம். விழுந்து செத்து விட வேண்டியதுதான். பயந்து ஓடிக்கொண்டிருந்த நாய் வேறு வழியே இல்லாத நிலையில் திரும்பி எதிர்த் தாக்குதலை, விளைவுகள் பற்றி கவலைப் பட வாய்ப்பே இல்லாமல் தொடங்கியதாம்.

வேறு வழியே இல்லாத நிலைக்கு ஆசிரியர்களத் தள்ளிவிடாதீர்கள் பெரியவர்களே.

3 comments:

 1. ஆசிரியர் தொழிலில் இருப்பதால் உங்கள் தார்மீகக் கோபம் புரிந்து கொள்ள முடிகிறது. இதே அமைச்சர் வேறு தொழிலில் இருப்பவரைப் பற்றி பேசினால் இந்தக் கோபம் இருக்குமா? மற்றபடி தவறிழைத்தவர் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அரசில் இருப்பவர்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டும்.

  ReplyDelete
 2. னான் இதுவரை 17 முறை மறியலில் கைதாகி உள்ளேன். அனைத்துமே ஒரு நாள் கைதுகள் தான். இதில் நான்கு அல்லது ஐந்து மட்டுமே ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டவை.

  ReplyDelete
 3. \\\ G.M Balasubramaniam said...
  ஆசிரியர் தொழிலில் இருப்பதால் உங்கள் தார்மீகக் கோபம் புரிந்து கொள்ள முடிகிறது. இதே அமைச்சர் வேறு தொழிலில் இருப்பவரைப் பற்றி பேசினால் இந்தக் கோபம் இருக்குமா? மற்றபடி தவறிழைத்தவர் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அரசில் இருப்பவர்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டும். ///

  என் எழுத்துக்களை விடாமல் வாசிக்கும் அய்யாவிற்கு இப்படி ஒரு சந்தேகமே தேவை இல்லை. யார் காயம் பட்டாலும் எனது நிலை இதுதான் அய்யா

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...