எத்தனை பொய்கள்? எத்தனை அவதூறுகள்? எத்தனையெத்தனை சாபங்கள்? எந்தவிதமான உச்சவரம்பும் இல்லாமல், எந்தவிதமான வயதுவரம்புமில்லாமல், கூச்சநாச்சம் என்பதே கொஞ்சமும் இல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரப்பிக்கொண்டே இருந்தார்கள்.
நன்றாக இயங்கிக்கொண்டிருந்த நோக்கியோ தொழிற்சாலையை தமிழ்நாட்டைவிட்டே விரட்டியது CITU என்றார்கள். தொழிலாளிகளின் பாதுகாப்பில் கவனமாக இருந்த ஃபோர்ட் தொழிற்சாலைக்கு மூடுவிழா நடத்தியது CITU என்றார்கள். இதைவிட உச்சம் என்னவென்றால் CITU மூடுவிழாவை நடத்தியதாக அவர்கள் சொன்ன சில தொழிற்சாலைகளில் CITU கிளையே இல்லை. அவர்கள் சொன்ன சில மூடுவிழாக்களின்போது CITU பிறந்திருக்கவே இல்லை.
எல்லாவற்றையும்விட உச்சமாக CITU என்பது CPM கட்சியின் தொழிற்சங்கம் என்றும் எனவேதான் அவர்கள் சீனாவின் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக சாம்சங் தொழிற்சாலையை எப்படியேனும் மூடிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள் என்றும் கூறினார்கள்.
வலைதளம் முழுவதும் CITU விற்கு எதிரான வசைகளாலும் சாபங்களாலும் நிரம்பி வழிந்தது. உறக்கத்தில் இருந்து சிறுநீர் கழிப்பதற்காக எழுந்தவர்கள்கூட கழிவறை செல்லும் முன்னர் ஒரு பதிவு கழிவறையில் இருந்து வந்து படுக்கையில் விழுந்ததும் ஒன்று என்று CITU விற்கு எதிரான பதிவுகளை போட்டபிறகுதான் தூங்கினார்கள்.
மூன்று விஷயங்களை தெளிவுபடுத்திவிட்டு இவைகுறித்து உரையாடுவதே சரியெனப் படுகிறது.
1) நோக்கியோ தமிழ்நாட்டில் இருந்த தனது கிளையை மூடியதற்கான காரணங்கள் அதன்மீது சுமத்தப்பட்ட வரி ஏய்ப்பு குற்றச்சாட்டும் அதன்பொருட்டு விதிக்கப்பட்ட அபராதமுமே ஆகும். சரியாக சொல்வதெனில் அந்த நிலையிலும் நோக்கியோவை தக்கவைப்பதற்கான முயற்சியை CITU செய்தது
2) ஃபோர்ட் தொழிற்சாலை மூடப்பட்டதற்கு அது தயாரித்த கார்கள் விற்பனையாகமல் நட்டத்தை சந்தித்ததே ஆகும்
3) அதன் தலைவர்கள் பலர் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைத் தவிர CITU என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் எல்லாம் இல்லை.
நோக்கியோ வெளியேறியதற்கு CITU காரணமில்லை என்பதைக்கூட ஏற்கலாம். ஆனால் அதைத் தக்க வைப்பதற்கு அது முயற்சி செய்தது என்பதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது என்று சிலர் கேட்கலாம்.
அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்த செய்தியை 25.07.2014 அன்று ஒன் இண்டியா வெளியிட்டிருக்கிறது.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் ஆ.சௌந்தரராஜன் நோக்கியாவில் இருந்து இருபத்தி ஐந்து வயதை ஒட்டிய 5600 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார்கள் என்றும் 50 வயதிற்கு குறைவானவர்கள் விருப்ப ஓய்வு எடுக்க இயலாது என்பது விதி என்றும் குறிப்பிடுகிறார். இது விஷயத்தில் அரசு தலையிட வேண்டும் என்றும் அவர் அரசின் கவனத்தை ஈர்க்கிறார்.
அன்றைய அதிமுக அமைச்சராக இருந்த திரு தங்கமணி அவர்கள் இதை எதிர்கொள்கிறார்.
நோக்கியோ தனது தொழிற்சாலையை மூடிவிட்டு போனதற்கு தாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பேற்க இயலாது என்றும் அது அப்போது திமுகவும் அங்கம் வகித்த ஒன்றிய அரசின் நடவடிக்கையினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறினார். அதுமட்டுமல்ல, விருப்ப ஓய்வு கொடுத்தவர்கள் நான்கு லட்சம் ரூபாய் முதல் பத்து லட்சம் ரூபாய் வரைக்கும் இழப்பீடு பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுருக்கமாக சொன்னால் நோக்கியோ வரி ஏய்ப்பு செய்திருந்தது. அதை அன்றைய ஒன்றிய அரசு கண்டுபிடித்தது. உடனடியாக கட்ட வேண்டிய வரியை அபராதத்தோடு கட்டவேண்டும் என்று சொன்னது. அவர்களுக்கிடையில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை, தனது முடிவில் ஒன்றிய அரசு பிடிவாதமாக இருந்தது. தொழிற்சாலையே கையைவிட்டு போனாலும் பரவாயில்லை வரியையும் அபராதத்தையும் கட்டுவதில்லை என்பதில் நோக்கியோவும் பிடிவாதமாக இருந்தது.
அந்த இருவரின் பிடிவாதத்தின் விளைவாக நோக்கியோ ஸ்ரீபெரும்புதூரில் இருந்த தனது தொழிற்சாலையை மூடியது. என்னென்ன வகைகளில் இந்த விஷயத்தில் CITU தலையிட்டது என்றால்,
1) வரியையும் அபராதத்தையும் உடனடியாக, ஒரே தவனையில் என்பதை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அது கோரியது. குறைந்தபட்சம் ஒரு கால அவகாசத்தையேனும் நோக்கியோவிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் அது கோரியது
2) வேறு வழியே இல்லை, நோக்கியோ தனது தொழிற்சாலையை மூடவே செய்யும் என்ற நிலை வந்தபின் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகைக்காகப் போராடி பெற்றுக் கொடுத்தது
ஃபோர்ட் விஷயத்தில் அது தொழிலாளிகளின் பாதுகாப்பிற்காக நிறைய ஏற்பாடுகளை செய்தது என்பது உண்மை. ஃபோர்ட் தரமான கார்களுக்காக செயல்பட்டது என்பதும் உண்மை. அதற்காக நிறைய செலவு செய்தது. இதனால் அதன் உற்பத்தி செலவு அதிகரித்தது. எனவே அதன் விலையும் பெருமளவு அதிகமாக இருந்தது.
அதன் விளைவாக சந்தையில் விற்பனை மந்தப்பட்டது, நட்டம் ஏற்பட்டது. இந்த நட்டத்தின் காரணமாகத்தான் ஃபோர்ட் தனது தொழிற்சாலையை மூடியது.
இப்படி ஒரு போரட்டத்தின் மூலமாகத்தான் CITU சென்னையில் அற்புதமாக இயங்கி வந்த “பின்னி” மில்லை இழுத்து மூடியது என்றவொரு வதந்தியையும் அவர்கள் பரப்பினார்கள். இதுவரை உலகில் பரப்பப்பட்ட மிக உச்சமான பத்து வதந்திகளுள் நிச்சயமாக இதையும் ஒன்றெனக் கொள்ளலாம்.
உண்மை என்னவெனில் பின்னி மில் பிரச்சினை நடைபெற்றது 1952 ஆம் ஆண்டுவாக்கில். அந்த நேரத்தில் CITU பிறந்திருக்கவே இல்லை. அந்த சம்பவம் நடந்தபோது தோன்றியே இருக்காத ஒரு சங்கம்தான் அதற்கு காரணம் என்று பொய்யைப் பரப்புவதற்கு எவ்வளவு வன்மம் வேண்டும். பின்னி மில்லில் தொழிலாளர்கள் சங்கமென ஒன்றிணைந்ததற்கான காரணம் சுவாரஸ்யமானது.
பின்னி தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் உழைக்கவேண்டி இருந்தது. வீட்டில் இருந்து வீட்டை அடையும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் 18 மணிநேரம் என்று இருந்தது. வாரத்திற்கு ஆறு நாள் பணி.
சொல்லொன்னா துரத்தில் இருந்த தொழிலாளிகள் தங்களது துயரத்தை பகிர்ந்துகொள்ளக்கூட ஆளற்று இருந்தார்கள். அந்த நேரத்தில் தங்களது ஊழியர்களுக்காக ஆன்மீகக் கூட்டங்களை ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்காக திரு.வி.க வருகிறார்.
அவரிடம் ஊழியர்கள் தங்களது குறைகளைக் கூறினால் மனது ஆறுதலடையும் என்று கருதுகிறார்கள். அப்படித்தான் சாய்ந்து படுக்கக்கூட தங்களுக்கு ஓய்வற்று கிடப்பதாக அவரிடம் புலம்புகிறார்கள்.
திரு.வி.க அவர்களது நிலையை சரியாகப் புரிந்துகொள்கிறார். தொழிற்சங்கத்தில் அனுபவம் உள்ள அவரது நண்பர் ஒருவரிடம் விஷயத்தைக் கூறுகிறார். அவரது நண்பரும் திரு.வி.க அவர்களோடு ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு வருகிறார்.
அவரடிம் தங்களது துயரங்களைக் கூறுமாறும் அவர் அவர்களுக்கு மன ஆறுதலைத் தருவார் என்றும் தொழிலாளிகளிடம் திரு.வி.க கூறுகிறார்.
அந்த மனிதர்தான் தமக்கு மன ஆறுதலைத் தரவல்ல மானுட ரட்சகர் என்று தொழிலாளார்கள் நம்புகிறார்கள். அவரிடம் தமது மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்க்கிறார்கள். அவர் மற்றதைப் பார்த்துக் கொள்கிறார்.
இதுதான் வரலாறு. இதற்குமேல் இந்த விஷயத்தை நீட்டுவது இந்தக் கட்டுரைக்கு தேவை இல்லை.
இப்படியாக ஆன்மீகக் கூட்டங்களின் வழியாக நடந்த ஒரு சம்பவத்திற்கு CITU வை கொண்டுவந்து நிறுத்துவது உள்நோக்கம் கொண்டது என்பதை உணர்த்துவதற்காகத்தான் இதை சொல்லவேண்டி வந்தது.
தற்போது சாம்சங் தொழிலாளார்கள் ஒன்றிணைந்து CITU சங்கம் கட்டு தங்களது கோரிக்கைகளைக் கட்டி வேலைநிறுத்தத்தை தொடங்கியதால்தான் இந்த வதந்திகளை அவர்கள் பரப்ப ஆரம்பித்தார்கள்.
அவர்கள் எரிச்சல் கொள்வதற்கு காரணங்கள் இரண்டு
1) அவர்கள் தாராளமயவாதிகள்
2) சாம்சங் தொழிலாளர்கள் CITU பதாகையின்கீழ் ஒன்றிணைந்திருப்பது
CITU உள்ளே புகுந்தால் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிடும் என்றார்கள். மோதலும் தாக்குதலும் பூமியை ரத்தக் கறையாக்கும் என்றார்கள். ஒருபோதும் இந்தப் பதாகையின்கீழ் தொழிலாளார்கள் வெற்றிபெற முடியாது என்றார்கள்.
அத்தனையையும் பொய்யாக்கி சாம்சங் தொழிலாளர்கள் CITU பதாகையின்கீழ் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
சாம்சங் பிளைகளுக்கு CITU கையளித்த நம்பிக்கை வார்த்தைகளில் ஒன்றைக்கூட பூமியின்மேல் சிந்தவிடாமல் பத்திரமாக பாதுகாத்துக் கொடுத்திருக்கிறது.
17.10.2024 காலை 10.15 மணிக்கு இந்தப் பகுதியை நான் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். இந்த நொடியில் சாம்சங்கில் வேலைபார்க்கும் நம் பிள்ளைகள் 38 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வேலை செய்துகொண்டிருப்பார்கள்.
அவர்களது மகிழ்ச்சி நிலைக்கட்டும்.
புதிய ஆசிரியன்
நவம்பர் 2024