Sunday, July 14, 2024

கவிதை 77

 
அந்த கிறுக்கனை
பத்து வருடங்களாகப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
பார்ப்பவர்களிடமெல்லாம்
எதையாவது உளறிக்கொண்டே இருக்கிறான்
அந்த பள்ளியின் விளையாட்டு விழா
மைதானத்தை ஒட்டி நின்று
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என் அருகே வந்து நின்று
அவனும் வேடிக்கைப் பார்க்கிறான்
பிரம்பை நீட்டியவாறும்
தரையில் தட்டியவாறும்
காற்றில் சுழற்றியவாறும்
விசிலடித்த படியுமாக
குழந்தைகளை வரிசையாக நடக்க வைக்க
படாத பாடு படுகிறார் விளையாட்டு ஆசிரியர்
பக்கத்தில் நின்ற இவனோ
குழந்தைகள்
கோணல் மாணலாக நடந்தாலும்
வரிசைதானே என்கிறான்
மூன்று
குழந்தைகள்
கோணல் மாணலாக நடந்தாலும்
அது வரிசைதான்
என்பது ஒன்று
அவன் கிறுக்கனல்ல
என்பது இரண்டு
அவன் உளறவில்லை
பேசிக்கொண்டிருக்கிறான்
என்பது மூன்றுSaturday, July 13, 2024

கவிதை 76

 

காதலுக்கு
கண் இல்லை
காதலித்தால்
தலையே இல்லை

கவிதை 75

 

ஏதும் தோன்றவில்லை என்று
தோன்றுவதால்
ஏதும் தோன்றவில்லை என்று
சொல்ல தோன்றவில்லை

கவிதை 74

 

வர சொல்லேன் என்னை
மீண்டும் ஒருமுறை
“ புறப்பட வேண்டாம் “ என்று
மீண்டும் ஒருமுறை
தடுப்பதற்கேனும்

Friday, July 12, 2024

கவிதை 73

 


கொஞ்சமா
கொஞ்சறாங்க மிஸ்
என்பதைத் தவிர
பள்ளிக்கு
மட்டம் போடுவதற்கான
எந்தக் காரணமும் இல்லை
கிரிஷிடம்

Wednesday, July 10, 2024

கவிதை 72

 

நாளை வருவாயா?
என்ற உன்
உசிரின் அழைப்பு கேட்கிறதா
என்று முந்தாநாள் கேட்டாயே
காற்றில் உன் கண்ணொதுங்கிய
துரும்பாகவேனும்
நாளை
நான் வந்தேனா?

கவிதை 71

 

கனவில் வந்த நான்
காதலை சொன்னதாய் சொல்கிறாய்
வந்திருப்பேன்தான்
சொல்லி இருப்பேன்தான்
நீ
இப்படியாக
சொல்லிவிட்டாய்

கவிதை 70

 


அப்பத்தா வீடு
சாமி தாத்தா வீடு
டாடி தாத்தா வீடு
அங்கிள் தாத்தா வீடு என்று
நான்கு வீடுகள் கிரிஷ் சாருக்கு
இதில் அப்பத்தா வீடு என்பது
உங்களைக் குழப்பப் போவதில்லை
அவனை
சாமி என்றழைப்பதால்
நான் சாமி தாத்தா
அவன் அம்மா
டாடி என்றழைப்பதால்
அவர் டாடி தாத்தா
அவள்
அங்கிள் என அழைப்பதால்
அவர் அங்கிள் தாத்தா
அப்பத்தா வீட்டைக் காலி செய்துவிட்டு
குடி போன
புது வீட்டிற்குத்தான்
அங்கிள் தாத்தா வீடு என்று
பெயர் வைத்திருக்கிறான்
தாத்தாக்கள் வீடுகள் எல்லாம்
போர் என்றும்
அப்பத்தா வீடுதான் அழகென்றும்
அங்குதான் போக வேண்டுமென்றும்
அடம் பிடிக்கவே
காட்டி வரலாமென்று
தூக்கிப் போனால்
அது
தாத்தா வீட்டைக் காலி செய்து வந்திருந்த
ஒரு குழந்தையின்
அவ்வா வீடாகி இருந்தது
அவ்வா வீடென்றும்
அப்பத்தா வீடென்றும்
சண்டையிட்டுக் கொண்டிருந்த
குழந்தைகள்
கொஞ்ச நேரத்தில் ஒன்றாய்
விளையாட ஆரம்பித்தபோது
வெங்காயம் உரிப்பதில்
அவ்வாவிற்கு
அப்பத்தா உதவ ஆரம்பித்திருந்தார்
வீடும் அவ்வப்பத்தா வீடாகியிருந்தது
விட்டுவிடுவோம்
அப்படியே இருக்கட்டும்

கவிதை 69

 

சுவரில்
மோன்வி வரைந்த பூச்செடியில்
யானையையோ
வேறெதையோ
பார்ப்பவர்களால்
அந்தச் செடியிலிருந்து
அவள்
ஒரு பூவைப் பறித்ததையோ
அதைத்
தலையில் சூடிக்கொள்ள
எத்தனித்தபோது
அது கீழே விழுந்து
காணமல் போனற்காக
அவள் அழுவது கண்டோ
சிரிக்கத்தான் முடியும்
அவர்களை
உறவு துறந்த கையோடு
சோபாவிற்கடியில் கிடந்த
அந்தப் பூவை எடுத்து
அவள் தலையில் வைக்கிறேன்
அப்படிச் சிரிக்கிறாள்
பூ அப்படித்தான் சிரிக்கும்

கவிதை 68

 

ஒய்யாரமாய் படுத்திருக்கிறது
அவனுக்கும்
அவளுக்குமிடையையே
அழகானதொரு நாய்க்குட்டி

கவிதை 67

 

நீ குடித்த சொம்பில்
அவன் குடிக்கத் தவிர்ப்பது
குற்றம்
கோவில் கருவறைக்குள் நீ நுழையக்கூடாதென்று
அவன் தடுப்பதும் குற்றம்
ஆனால்
ஓந்தெருவழியா ஏம்புள்ள சைக்கிளில் போகக்கூடாது
நான் தொட்ட சொம்பை
நீ தொடமாட்ட
நியாயம் சாமி நியாயம்

கவிதை 66

 

நீ சொன்னபடியே
ஆறாவது வரியின் மூன்றாவது வார்த்தையில்
விடுபட்டுப்போன ஒரு ர வையும்
கடைசி வரிக்கு முந்தைய வரியின்
கடைசி வார்த்தையில்
விற்கு பதில் ர வையும் போட்டதோடு
நீ பெருந்தன்மையோடு சுட்ட மறந்த
ஏழாவது வரியின் ரெண்டாவது வார்த்தையின் கடைசியில்
விடுபட்டுப்போன க் கையும்
வைத்துவிட்டேன்

கவிதை 65

 

கவிதை 64

 


ஏன்
என்னை
என் வீட்டருகே
தொலைத்துப் 
போனாய்


கவிதை 63

 

ஜன்னலில்
வந்தமர்ந்த குருவியிடம்
கையை நீட்டினேன்
கொஞ்சமும்
பயமின்றி
உள்ளங்கையை
ஒரு கொத்து கொத்திவிட்டு
பறந்துவிட்டது
ரெண்டு
அரிசிக் குருணையோடு
நீட்டியிருக்கலாம்

கவிதை 62

 

துருப்பிடித்து
கதவில் தொங்குகிறது
அன்று மாலையே
திறக்கும் நம்பிக்கையோடு
பூட்டப்பட்ட பூட்டு

கவிதை 61

 

உதடுகளுக்கும்
ஈறுகளுக்குமிடையே தேக்கி
யாருக்கும் தெரியாமல்
குதப்பிக்கொண்டே இருக்கிறாள் கிழவி
முப்பது ஆண்டுகளுக்கு முன்
தொங்கிச் சாக
சேலைச் சுறுக்கிற்குள்
கழுத்தை
நுழைத்துக் கொண்டிருந்த சமயம்
சரியாய்
அழைப்பொலியை அழுத்திவிட்டு
ஓடி
ஒளிந்துகொண்ட
அந்த
சேட்டைக்காரப் பொடிசுக்கான
முத்தத்தை

கவிதை 60

 

மழையை ரசித்தபடி
பொறிகடலை
கொறித்துக் கொண்டிருக்கும் என்னை
உன்னை ரசித்துக் கொண்டே
பொறிகடலை
கொறிக்கிறேனென்றும்
மழையை ரசித்துக் கொண்டே
உன்னைக்
கொறிக்கிறேனென்றும்தான் கொள்கிறார்கள்

கவிதை 59

 

உன்னோடான
உரையாடலின்
தொடக்கமாட்டம்
தொடங்கியிருக்கிறது
பெய்ய

கவிதை 58

 

குறு
அடர்காடு
ஒன்றினை
புதரென கூறுதல்
மனசின் சுருக்கம்

கவிதை 57

 

கடலைப் பற்றிப்
பேசிக்கொண்டிருப்பவன்
கடலைப் பற்றிதான்
பேசிக்கொண்டிருப்பதாக
நம்புவது
எத்தனை சுவாரசியம்

கவிதை 56

 

நலமா
என்று
உன்னிடமிருந்து
குறுஞ்செய்தி வந்தபோது
மழை பெய்துகொண்டிருப்பதாக
சொல்கிறார்கள்
நனைந்துகொண்டுதானிருக்கிறேன்
என்கிற என்னை
நக்கலித்துவிட்டு
அவர்கள் நகர்ந்ததும்
நலம் என்றனுப்புகிறேன்
ஜடத்தோடு பேசுவதுணர்ந்து
கேட்கலதான்
ஆனாலும்
நாங்களும் நலம்தானென்கிறாய்
கேட்டுதான்
நலமுணரமுடியுயமென்றால்
அன்பல்ல
கணக்கென்கிறேன்
நீ சொன்ன நன்றி சொல்கிறது
"ஆறு மாசத்துக்கு காய்
சாவு சனியனே"

கவிதை 55

 

இன்று வந்து பெய்ததற்கு
மழையின்
சாயல் இருந்தது
மழை வந்தால்
தகவல் சொல்கிறேன்

கவிதை 54

 

இங்கு
பெய்கிறதென்கிறேன்
அருமை
என்கிறாய்
அங்கு
காய்கிறதென்கிறாய்
அருமை
என்கிறேன்
நீ
ஏன்
காய்கிறாய்

கவிதை 53

 

கனவிலும் இல்லை
சாத்தியமே இல்லை
எனவே
நனவிலும் இல்லை
எது அது எனவும் அறுதியிட இயலவுமில்லை
ஆனால் அது உறுத்திக்கொண்டே இருந்தால்
வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்

கவிதை 52

 

நேற்று
உனக்குப்
பெய்தது
இன்று
எனக்குப்
பெய்கிறது
நாளைக்கு
யாருக்கோப்
பெய்யும்
ஏன்
அது
உனக்கேப்
பெய்யலாம்
மீண்டும்
காயாது
மகிழ்ந்திரு

கவிதை 51

 

எருமையின் மீது
அமர்ந்திருந்த
காகத்திற்கு
கடவுளில்லை என்ற
ஞானம் வந்த போது
தான்
கடவுளின் தந்தையென்று
கரைந்தது

கவிதை 50

 

யாருமென்னைக்
கவனிக்கவில்லை என்பது
வசதியாக இருக்கிறது
யாருமென்னைக்
கவனிக்கவில்லை என்பது
வருத்தமாகவும்
இருக்கிறது
யாருமென்னைக்
கவனிக்கவில்லை
என்பது தகவல்

கவிதை 49

 

ரயில்
வந்துகொண்டிருந்தது
ரயில்
வந்துகொண்டிருக்கிறது
ரயில்
நின்றுகொண்டிருக்கிறது
யாரோ
படுத்திருந்த பர்த்தில்
படுத்துக் கொள்கிறேன்
ரயில்
சென்றுகொண்டிருக்கிறது
நிற்கிறது
செல்கிறது
நிற்கிறது
இறங்கிக் கொள்கிறேன்
எனக்கு
ரயில்
சென்றுகொண்டிருக்கிறது
யாருக்கோ
அது
வந்துகொண்டிருக்கும்

கவிதை 48

 

விளக்குகள்
அணைக்கப்பட்ட
ரயில் பெட்டியில்
அலைபேசிகள்
எரிந்து கொண்டிருக்கின்றன
நீயும்
நானும்
சாட்டிக்
கொண்டிருப்பதைப் போலவே
எல்லோரும்
யாரோடோ
சாட்டிக்
கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும்
யாராவது
தூங்கிக்
கொண்டுமிருப்பார்கள்தான்

கவிதை 47

 

பேத்தியிடம்
முத்தத்திற்காக
கெஞ்சிக் கொண்டிருந்த
அப்பர்
பர்த் பாட்டி
குழந்தை
இரங்கியபோது பார்த்து
சரியாய்
அலைபேசியை ஆட்டிவிட
என்
கன்னத்தில்
உடைந்து விழுந்த
சிறு துண்டு போக
எஞ்சிய முத்தமே
பாட்டிக்கு
போதுமாயிருந்தது

கவிதை 46

 

திண்டுக்கல்
வந்தது
மதுரை
வந்தது
விருதுநகர்
வர இருக்கிறது
இந்தப்
பாழாய்ப் போன
தூக்கம்தான்

கவிதை 45

 

அந்த
மூங்கில் காட்டிற்கு வந்த
குயில்
மூங்கிலிசையில் சொக்கி
மௌனமானது
குயிலைப் பார்த்த காற்று
அது பாடட்டுமென்று
மூங்கிலை இசைப்பதை நிறுத்த
காடெங்கும் விரவிக் கசிந்த
அந்த மௌனம்
காடும்
குயிலும்
சேர்ந்தளித்த
கூட்டிசையானது

கவிதை 44

 

இதத்தின் உச்சம்
கிளைகளிடை உள்புகுந்து
வெயில்வரைந்த
நவீன ஓவியம் ஜொலிக்கும்
நேற்று மழையில் நனைந்த
அடர்வனத் தரையின் பிசுபிசுப்பு

கவிதை 43

 

பிசுறு
வழிந்தோடும்
ஒரு
பெருங்கனவொத்த
பேரழகு
அடர் காடு

கவிதை 42

 

மழையில்
நனைந்து கொண்டே
நடந்த உரையாடலை
கடுங் கோடை நாளொன்றில்
நினைத்தாலும்
நினைவில்
மழை பெய்யும்

கவிதை 41

 

காட்டை
எதற்கு
திருத்திக் கொண்டிருக்கிறாய்?
இன்னும் காடாக்க

கவிதை 40

 

நரைப்பெய்தும்
காடுகள்
அழகுதட்டும்
ஒருபோதும்
கிழடுதட்டாது

கவிதை 39

 

ஒரு முகவரியைத் தேடியபடி
மேற்காகப் போய்க்கொண்டிருந்த
நான் யாரென்று
அவனுக்குத் தெரியாதது போலவே
ஒரு முகவரியைத் தேடியபடி
கிழக்காக வந்துகொண்டிருந்த
அவன் யாரென்று
எனக்கும் தெரியாது
அவன் வீட்டை நானும்
என் வீட்டை அவனும்
தேடிக்கொண்டிருக்கிறோம் என்பதுகூட
இருவருக்கும் தெரியாது

கவிதை 38

 

நீ
பேசவில்லை
எனவே
நான்
பேசவில்லை
நான்
பேசவில்லை
எனவே
நீ
பேசவில்லை
இவ்வளவுதான்
நாம்
பேசாததற்கு
எதையெதையோ
காரணமாய்
ஊர் பேசுகிறது
பேசாமல்
நாம்
பேசிவிடலாம்
வா

கவிதை 37

 

சுரக்கச் சுரக்க
அதுவரை சேமித்து வைத்த
அன்பனைத்தையும்
உன்னிடம் தந்தபின்புதான்
உன்னோடான
எனது ஒவ்வொரு உரையாடலும்
முடியும் ஆகையால்
அன்றைய உரையாடல் முடிந்ததும்
என் சட்டை பட்டனோரம் மீந்திருந்த
ஒரு சின்னப் பிசிறளவுத் துண்டு அன்பு
அதிர்ச்சியைத் தந்தது
அதிர்ச்சியில்
பேயறைந்ததுபோல் இருந்த
என்னிடமிருந்த
அந்த
சிறு துண்டு அன்பை
எடுத்துக் கொண்டு
அறுபது கிலோ என்னையும் அன்பாக்கி
உன்னிடமளிக்கச் சொல்லிவிட்டுப் போகிறாள்
பல்லே முளைக்காத
குழந்தை ஒருத்தி

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...