மகளுக்கு
நன்னடத்தை சான்றிதழ் வாங்குவதற்காக
அவள் படித்த பள்ளிக்கு
அவளோடு சென்றிருந்தேன்
தலைமை சகோதரி
பள்ளி குறித்தும்
குழந்தைகள் குறித்தும்
உரையாடிக் கொண்டிருந்தபோது
திடீரென ஒரு தாய்
ஆறாம் வகுப்பு படிக்கும்
தன் மகளோடு வருகிறார்
அவரைப் பார்த்ததும்
அருட்சகோதரி கலங்குகிறார்
அந்தத் தாயும் கலங்குகிறார்
அந்தக் குழந்தைக்கு உடம்புக்கு ஏதோ போல
என்னவென்று புரியவில்ல
உளறிக்கொண்டே இருக்கும்
ஓட்டை வாய் என்பாள் கலை
அது உண்மைதான் போல
ஏதும் அறியாமலே
இது பெரிய நோயே அல்ல
மருந்து வந்துடுச்சும்மா என்கிறேன்
அந்த தாய் சிரிக்கிறார்
சிரித்து காலமாயிற்றுபோல
விடைபெறுகிறார்
தைரியமா போங்க தாயி
கும்பிட்டபடி நகர்கிறார்
என்ன நோய்னு தெரியுமாப்பா
வரும்போது
மருத்துவ மகள் கேட்கிறாள்
தெரியாது
அடிச்சு உடற
நோயைக் கண்டுபிடிக்கவும்
மருந்தளித்து குணப்படுத்தவும்தான்
அறிவும் படிப்பும் தேவை
ஏதுமற்ற தாயின் கண்ணீரைத் துடைக்க
ஈரத்தைத் தவிர ஏதுமற்றவனின்
ஆறேழு சொற்கள் போதும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்