இன்றையத் தேதியில் பெரும்பான்மைக் கவனம் இந்தப் படத்தின் மீதே இருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ அதைவிட பேருண்மையாக இருக்கும் இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பெரும்பான்மை பேருக்கு இது ஏதோ ஒரு கருப்புக் காகிதத்தால் சுற்றப்பட்ட பொட்டலமாகத் தெரியும் என்ற எதார்த்தம்.
நீண்டப் பொட்டலமாகக் கிடத்தப் பட்டிருப்பவர் உலகம் எழுந்து நின்று தொழும் வள்ளுவர்.
கிடத்தப் பட்டிருக்கும் வள்ளுவரின் சிலை இந்நேரம் ஹரித்துவாரில் உள்ள CENTRAL CONTROL ROOM TOWER இல் நிறுவப் பட்டிருக்கும். அல்லது நிறுவப் பட்டுவிடும்.
இதை கங்கைக் கரையில் உள்ள ‘ஹர் கி பூரி’ யிலோ அல்லது ஷன்கராச்சார்யாவில் உள்ள ஆதி சங்கரர் அருகிலோ ஒருபோதும் நிறுவ இயலாது என்பது தருணுக்கு நன்கு தெரியும்.
வள்ளுவரின் “பிறப்பொக்கும்” என்பதை ஒருபோதும் தருணால் ஏற்க இயலாது. ஏற்க இயலாது என்பதைவிட எதிரானது என்பதே சரியானது.
சரி, வள்ளுவரின் கொள்கைக்கு நேரெதிரான ஒருவர் ஏனிப்படி வள்ளுவருக்கு சிலை வைக்கிறேன் என்று அலையாய் அலைந்தார்? அதுவும் வள்ளுவரின் இந்தக் கொள்கைகு நேரெதிராக என்பதையே மூச்சாகக் கொண்டுள்ள சாமியார்கள் அதிகமாய் ஆதிக்கம் செலுத்துமிடத்தில் இதை நிறுவ ஏன் ஆசைப்பட்டார். ஆசைப்பட்டார் என்பதை அப்படியே ஏற்குமளவிற்கு நமக்கின்னும் பெருந்தன்மை வரவில்லை.
எனக்கென்னவோ ‘உறவாடிக் கெடுத்தலின்’ ஒரு பகுதியாகவே அது படுகிறது.
சாமியார்களின் எதிர்ப்பு இந்த சிலைமீதென்பதிலும் நான் மாறுபடுகிறேன். ‘பிறப்பொக்கும்’ , ‘ முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ போன்ற சித்தாந்தங்களின் மீதான எதிர்ப்பே அவர்களது இந்த சிலை மீதான வெறுப்பு.
அடிமடியில் நெருப்பள்ளி முடிந்துகொள்ள அவர்கள் என்ன கிறுக்கர்களா?
வள்ளுவனின் நேரெதிர் சித்தாந்தம் அவர்களது. வள்ளுவத்தின் வளர்ச்சி அவர்களது இருத்தலை எதிர்த்து கலகம் செய்யும்.
அவர்கள்மிகச் சரியாய் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பொட்டலத்திற்குள் கிடப்பதல்ல வள்ளுவர். அவரை பொட்டலமாய் மடிப்பதற்கான காகிதத்தை யாரும் இதுவரைக்கும் தயாரிக்கவில்லை. தயாரிக்கவும் முடியாது.
விமர்சனத்தோடு வள்ளுவரை ஏற்பது அவசியம்.
வள்ளுவருக்கு மீறி யாரால் என்ன சொல்ல முடியும் என்று இறுமாந்து இருப்பது இதைவிட ஆபத்தாக முடியும்.
கவனமாய் மொழிப்படுத்துவோம், கலை இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் வள்ளுவரை ஊர் ஊராய் கொண்டு போய் சேர்ப்போம்.
**************************************************************
ஆட்டோ ஓட்டுனரான ராஜா, துப்புரவு தொழிலாளியான அவரது மனைவி உஷா அவர்களது மகன் சூர்யா ஆகிய மூவரும் செங்கம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏதோ பிரச்சினை வந்திருக்கிறது. ராஜா உஷாவை அடித்திருக்கிறார்.
அப்போது அந்தப் பக்கம் வந்த மூன்று காவலர்கள் ராஜாவையும் சூர்யாவையும் சகட்டு மேனிக்கு தாக்கியிருக்கின்றனர். பொது மக்கள் முன்னிலையில் இது நடந்திருக்கிறது.
குடும்பமே மருத்துவ மனைக்கு போயிருக்கிறது. அவர்களை வலுக்கட்டாயமாக இடைமறித்த காவலர்கள் அவர்களைபேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே இந்தக் காட்சியின் க்ளிப்பிங் தொலைக் காட்சிகளில் வந்திருக்கிறது. சமூக வலைதளங்களிலும் இது பெரிதாக அலசப் பட்டிருக்கிறது. ராஜாவின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை இட்டிருக்கிறார்கள்.
இதன் விளைவாக அந்தக் காவலர்கள் மூவரும் ஆயுதப்படைக்கு மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவர்களை பணிநீக்கம் செய்யக் கோறி சாலை மறியல் நடக்கிறது.
இது நமக்கு கிடைத்திருக்கும் தகவல்.
பொது இடத்தில் அத்தனை மக்களுக்கு முன்னால் மனைவியை கணவன் அடிப்பது என்பது ஆணாதிக்கத்தின் உச்சம். வன்மையாக கண்டிக்கப் படவும் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப் படவும் வேண்டும்.
அந்த வழியே வந்த காவலர்கள் சமாதானப் படுத்தி ராஜாவை கடுமையாகக் கண்டித்து அனுப்பியிருக்க வேண்டும். அல்லது அவரை கைது செய்து வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.
மாறாக இவ்வளவு வன்மமாகவும் மோசமாகவும் நடந்துள்ளது கண்டிக்கத் தக்கது.
இத்தோடு நிறுத்திக் கொள்வோமா?
அல்லது முகநூல் என்பது சமூக வலைதளத்தின் ஒரு கூறு. ஆகவே இது மாதிரி இனியேனும் நடக்காதிருக்க ஏதேனும் நம்மால் செய்ய இயலுமா என்று பரிசீலிக்கலாமா?
கூடி முடிவெடுப்போமா?
*************************************************************************************
கொஞ்சம்
அண்ணாந்து பாருங்களேன்..
அந்த மேகத்தை நிச்சயம்
ஒரு குழந்தை தான்
வரைந்திருக்க வேண்டும்.
இத்தனை அலங்கோலமாய்.
இத்தனை அழகோவியமாய்
என்று நான் ராம் எழுதுகிறான். எப்படித்தான் இப்படி எழுத வருகிறதோ இந்தப் பசங்களுக்கு. இதை இன்னும் செதுக்கினால் இதன் உசரம் எங்கேயோ போகும். இதை இவனது உள்டப்பியில் போய் சொன்னாலே போதும். அதுதான் நாகரீகமும்கூட. ஆனாலும் இங்கேயே சொல்வது வளரும் பிள்ளைகளுக்கு உதவும் என்பதால் இங்கேயே வைக்கிறேன்.
ஒரு குழந்தைதான்
வரைந்திருக்க வேண்டும்
அந்த மேகத்தை
இது போதும் என்று பார்க்கிறேன். இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். எழுதியதை சரி செய்வது எளிது. எழுதுவது கஷ்டம்
பொறாமையா இருக்குப்பா ராம்.
************************************************************************
நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது .
முன்பெல்லாம் எங்களூரில் வருடா வருடம் "கட்டபொம்மன் "நாடகம் நடைபெறும். எங்களூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாய் தலையணையோடு நாடகம் பார்க்க. வந்துவிடுவார்கள்.
உரையாடல்கள் பாடல்களாகவே இருக்கும் . ஆச்சரியம் என்னவென்றால் கட்டபொம்மனாய் நடித்தவரிலிருந்து பல நடிகர்களுக்கு எழுதப் படிக்கவே தெரியாது. எப்படி அவ்வளவு நீளமான வசனங்களை மனப்பாடம் செய்து அவ்வளவு நேர்த்தியாக பிரயோகம் செய்தார்கள் என்பது இன்றும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.
"போனவருஷம் இந்த வசனத்ததானே குட்டியண்ணன் மறந்துபோனான்" என்று பெரிசுகள் பேசிக்கொள்வதையும் கேட்டிருக்கிறேன் .
எழுதப் படிக்கத் தெரியாதவரிடமும் இலக்கியத்தை கொண்டுசேர்த்த ஜனநாயக வடிவம் இசை
******************************************************************************
தோழர் குப்பு வீரமணி அவர்களோடு தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தகவலை சொன்னார்.
பொதுவாக கப்பல் மற்றும் படகுகளின் கட்டுமானத்தில் பயன் படுத்தப்படும் ஆணிகள் துறுபிடித்துப் போகும்போது தமிழ்நாட்டிலிருந்து தயாரிக்கப்படும் கப்பல்களின் ஆணிகள் மட்டும் துறுபிடித்து இத்துப் போகாமல் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்ததாம்.
சோதித்துப் பார்த்ததில் தமிழன் ஆணியை மாட்டின் கொம்பிலிருந்து செய்யப்பட்டுள்ளது தெரிய வந்ததாம்.
கட்டுமரங்ளையும் கட்டிப் பிணைக்காமல் இதே வகை ஆணிகளையே பயன்படுத்தி கட்டமைத்திருப்பதும் அவர்களை ஆச்சரியப் படுத்தியதும் தெரிய வந்ததாம்.
பழந்தமிழ் மூளையின் வீரியம் வியப்பைத் தருகிறது.
***************************************************
அந்த நிறுத்தத்தில் நகரப்பேருந்துகளைத் தவிர புறநகர் பேருந்தெதுவும் நிற்காது . மிகவும் வயதான பெரியவர் ஒருவர் கைநீட்டவே மனிதாபிமானத்தோடு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.
"எங்கங்கய்யா?" என்ற நடத்துனரிடம் "இருங்கலூர் கைகாட்டி" என்றார்.
சென்னையிலிருந்து வரும் மதுரை போகும் வண்டி அது.
சென்னையிலிருந்து மதுரை போற வண்டி கைகாட்டியெல்லாம் நிற்க முடியுமா? என்று கேட்ட நடத்துனரிடம் அகரத்துல பஸ் நிக்கும்னா இருங்கலூர் கைகாட்டியிலும் நிக்கனும். அகரத்தவிட எங்க ஊர் எதுல கொறஞ்சு போச்சு? என்றதும் நடத்துனரும் ஓட்டுனரும் சிரித்து விட்டனர்.
இருங்கலூர் கைகாட்டியில் பேருந்து நின்றது
***************************************************
வேறு வழியே இல்லை. இந்த மாதமும் ஒரு கவிதை.
கேட்டிருக்கக் கூடாதா?
என்றழுது புலம்பும் அவனுக்கு
கேட்டிருக்க நியாயமில்லை
நான் கேட்டிருக்கவே தேவையில்லை
நட்பு அசலெனில்
கேட்டிருந்தாலும் புண்ணியமில்லை
அப்படியில்லையெனில்
என்ற
வயித்து வலிக்கு மருந்து வாங்க
காசற்று
நாண்டு கொண்டவனின்
பிணத்தின் குரல்