லேபில்கள்

Wednesday, August 3, 2016

வறண்டாலும் வாழி காவேரி

“காவிரியைக் கடக்க
ஓடங்கள் தேவையில்லை
ஒட்டகங்களே போதும்”
என்று ஒரு முறை தோழர் தணிகைச் செல்வன் எழுதினார்.
“விற்பதற்கு
சிலம்பிருந்த காரணத்தினால்
என்னை விற்கவில்லை
கோவலனின்
குணம் புரிந்ததா?”
என்று கண்ணகி சொல்வதாய் தோழர் எழுதியபோது எவ்வளவு கொண்டாடினோமோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இதற்கும் கொண்டாடி மகிழ்ந்தோம். எங்கள் தோழர் எதை எழுதினாலும் அது இப்படித்தான் கொண்டாட்டத்திற்கு உரியதாகவே இருக்கும். “எங்கள் தோழர் தோழர் எழுதி எது தவறாய்ப் போகும்?” என்ற திமிறே உண்டு எங்களுக்கு.
ஆனால் எங்கள் செம்மாந்தத் திமிரில் மண் அள்ளிப் போட்டார்கள் மணல் கொள்ளையர்கள்.
காவிரியைக் கடக்க ஓடமா? என்று சிலர் நக்கலாய் சிரிக்கக் கூடும். ஆனால் உண்மை அதுதான். நானே சிறு பிள்ளையாய் இருந்த பொழுது குளித்தலையிலிருந்து முசிறிக்கு பரிசலில் போன அனுபவம் உண்டு. இவ்வளவு பாலங்கள் இல்லாத காலத்தில் ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு போவதற்கு ஓடங்களே பயன் பட்டன.
ஆனால் அதற்கு ஆற்றில் தண்ணீர் வர வேண்டும். கர்நாடகத்து நதி அரசியல் கறைபட்டு போனதிலிருந்து காவிரியில் தண்ணீர் வராது வறண்டு கிடந்த மணல்பரப்பாய் காவிரி காட்சியளித்தபோது அது தந்த வலியை தனக்கே உரிய எள்ளலோடு தணிகை அப்படி எழுதினார்.
அன்றைக்கு காவிரியில் தண்ணீர் இல்லை. எனவே காவிரியைக் கடக்க ஓடங்கள் தேவைப் படவில்லை. கொதிக்கும் மணல் பரப்பைக் கடக்க ஒட்டகங்கள்தான் பொருத்தமாகப் பட்டது.
ஆனால் இன்றைக்கு அவரது கவிதையையும் பொய்யாக்கிக் காட்டினார்கள் இந்தச் சண்டாளர்கள். “ஒட்டகங்களே போதும் ” என்று அவர் எழுதிய காலத்தில் காவிரியில் மணல் இருந்தது. மணலே இல்லாமல் கட்டாந்தரையாக காவிரி காட்சியளிக்கும் போது ஒட்டகம் எப்படிப் பொருத்தமாய்ப் போகும்.
நானும் கூட ஒரு முறை,
“யாரது
ஆடிப் பெருக்கன்று
நடுக்காவிரியில்
ஊற்று தோண்டுவது?”
என்று ஆடிப் பெருக்கன்றும் நீரற்றுக் காட்சியளித்த காவிரி தந்த வலியை எழுதினேன். இன்று ஊற்றுத் தோண்டுவதற்கு காவிரியில் மணலேது? கிணறு வேண்டுமானால் காவிரியில் வெட்டலாம். இப்படியாக என் கவிதையும் பொய்த்துப் போனது. என் கவிதை பொய்த்துப் போனதில் எனக்கொன்றும் வருத்தமெல்லாம் இல்லை. தணிகைக் கவிதையே சாலையைக் கிழித்துப் பறக்கும் மணல் லாரிகளில் நசுங்கும் போது என் கவிதை எம்மாத்திரம்?
எவ்வளவு முயன்றும் கவிதை முழுமையாக சரியாக நினைவிற்கு வரவில்லை. எழுதிய திருவைக் குமரனையும் அலை பேசியில் பிடிக்க இயலவில்லை.
மணல் காற்றில் பறக்கக் கூடாது என்பதற்காக லாரி மணலில் நீர் ஊற்றுவார்கள். அப்படி ஊற்றப்பட்ட தண்ணீர் போகிற வழியெங்கும் சாலையில் கசிந்து கொண்டே போகும். அந்த நீரின் கசிவை திருவைக் குமரன் “ நதியின் கண்ணீர்” என்பார். ஏனடா கழிசடைகளே என் மணலை கொள்ளையடிக்கிறீர்கள் என்று கதறும் நதியின் கண்ணீராக அது அவருக்குப் பட்டிருக்கிறது.
ஆடி மாதத்து தமிழ் நாட்டுக் காவிரியை இளங்கோ வர்ணிப்பார்,
“உழவர் ஓதை
மதகோதை
உடை நீர் ஓதை
தன் பதங்கொள் விழவர் ஓதை
சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி”
தமிழ் பூமிக்கு வருகிற காவிரியை தமிழகத்து விவசாயிகள் பெரும் சந்தோசக் கூச்சலிட்டும் பெண்கள் குழவி ஒலியோடும் வரவேற்க, மதகு தாண்டி வரும் நீர் மகிழ்ச்சியாய் சளசளவென்று சத்தமிட்டு நடந்து வரும் காவேரி என்கிறார் இளங்கோ.
எவ்வளவு பெரிய விஞ்ஞானக் கூற்று இது. நதி நீர் நடக்க வேண்டும் .ஓடக்கூடாது. னதி நீர் பைய நடந்து போகும் பூமிதான் வளப்படும்.. பயிர் செளிக்கும் , நிலத்தடி நீர் செழித்தோங்கும். ஓடுகிற நீர் விரந்து கடலில் போய் தனது கதையை முடித்துக் கொள்ளும். பூமியும் செழிக்காது நிலத்தடி நீரும் உயராது.
இளங்கோ காலத்தில் நடந்த காவேரி ஓடும் காவேரியாய் மாறி இப்போது வறண்ட காவேரியாய் மாறியிருக்கிறது. நடந்த காவேரி ஓடும் காவேரியாய் மாற மணல் கொள்ளையே காரணம். நீரும் மனிதன் போலத்தான், மணலில் ஓட முடியாது.
ஒலிம்பிக்கோ, ஆசிய விளையாட்டுப் போட்டிகளோ, எதுவென்று சரியாய் நினைவில்லை அப்போதைய அமைச்சர் காளிமுத்து அவர்கள் எழுதினார்,
“சடு குடு போட்டி
நடத்த இடம் தேடி அலையாதீர்
இங்கே அனுப்புங்கள்
நீரா இருக்கிறது
மணல்தானே காவிரியில்” என்று
இப்போது காவிரியில் சடுகுடுவும் விளையாட இயலாது.
ஆடிப் பெருக்கன்று காவிரிக்கு வரும் புது மணத் தம்பதிகள் நீராடி மகிழ்ந்தார்கள். பிறகு ஊற்று தோண்டி தலையில் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொண்டார்கள்.
இனி ஆடியில் காவிரியில் நீராட வரும் புது மணத்தம்பதிகள் குடங்களில் நீரெடுத்து வர வேண்டியதுதான்.
இன்று ஆடி 18.
நமக்கு கிடைத்த வாய்ப்பு நம் பிள்ளைகளுக்கு இல்லை. இரண்டு மோசமான சக்திகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளது.
ஒன்று,
கர்நாடகாவோடு நீருக்காய்
இரண்டு
மணல் கொள்ளையை எதிர்த்து
இதை செய்யாது போனோமெனில் ஆடி 18 கும் ஏப்ரல் ஒன்றிற்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels