அதுகுறித்து ஆளாளுக்கு ஆயிரம் சொல்கிறார்கள். அது அவரவர் உரிமை.அதற்குள் சென்று விவாதிக்குமளவிற்கு நமக்கு அவகாசம் இல்லை. ஆனால்அதுகுறித்து வைக்கப் பட்டுள்ள மூன்று வகையான கருத்துக்களுக்கு நாம்வினையாற்ற வேண்டிய கடமை உள்ளது.
1) “இந்தப் பாழாப் போன கடவுள் தன்னோட பக்தர்களை இப்படியா கொன்றுகுவிப்பான்?” என்பது மாதிரியாக...
2) இப்படி ஒரு பேரிடர் வரப்போவதைக் கூட சொல்ல முடியாத வானிலைமுன்னறிவிப்பு மையம் இருந்தென்ன? இல்லாமல் போனால்தான் என்ன? என்பதுமாதிரியாக...
3) உத்திரகண்ட் பகுதியில் இந்துக்களை ஒரு பேரிடர் மூலம் அழிப்பேன் என்றுஏசுநாதர் தன்னிடம் முன்னதாகவே சொன்னதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா ஷங்கர்சொல்லியுள்ளது.
இந்திய ஆட்சிப் பணியின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரி எப்படிஇப்படி பேச முடியும் என்று தெரியவில்லை. அல்லது இப்படி பேசிய ஒருவரை இன்னமும் உயர்ந்த பொறுப்பில் வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
கடவுள் இல்லை என்று நம்புகிற நமக்கு இது ஒரு நமட்டுச் சிரிப்போடு நகர்ந்து போவதற்கான ஒரு விஷயம்தான்.
நம்மைப் பொருத்தவரை இது ஒரு இயற்கைப் பேரிடர். இதற்கு முழுக்க முழுக்கநாம்தான் காரணம். இது குறித்துதான் இங்கு பேச இருக்கிறோம்.
இல்லாத கடவுள் இதை செய்திருக்க வாய்ப்பில்லை. அல்லது அப்படியே கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், அவர் கருணையே வடிவானவர் என்று நம்புபவர்கள் கருதுவதால் இந்தப் பேரழிவை அவர் செய்திருக்க வாய்ப்பில்லை.
ஏசு என்று ஒருவர் இருந்தாலும் உமா ஷங்கர் சொல்வதைப் போல் அவர்செய்திருக்கவோ அல்லது உமா ஷங்கரோடு பேசியிருக்கவோ இயலாது.
எனவே ஏசு உள்ளிட்ட இருப்பதாய் நம்பப் படுகிற எல்லாக் கடவுள்களையும்இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தள்ளுபடி செய்து விடலாம்.
இந்தப் பேரிடர் குறித்து ஏற்கனவே வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்திருந்த எச்சரிக்கை உரிய முறையில் கண்டுகொள்ளப் படாமல் அலட்சியப் படுத்தப்பட்டதன் விளைவே இத்தனை இழப்புகளும் என்று சொல்கிறார்கள் . எனவேவானிலை ஆராய்ச்சி மையத்தையும் இந்தக் குற்றச் சாட்டிலிருந்து தள்ளுபடிசெய்து விடலாம்.
இப்போது இந்தப் பேரிடரோடு கடவுளை இணைத்துப் பேசியவர்களோடு பேச ஒன்றும் கொஞ்சம் யாகவா முனிவர் அளவிற்கு உளறி வைத்துள்ள உமா ஷங்கரோடு கொஞ்சமும் பேச இருக்கிறது, அதை முடித்துவிட்டு இந்தப் பேரிடர் ஏன் வந்தது என்பது குறித்தும், இதனை தடுக்கவே முடியாதா என்பது குறித்தும் பேசலாம்.
கடவுள்தான் இந்தப் பேரழிவுக்கு காரணம் என்றால் மரணமுற்றதாக நம்பப் படும் 35000 பேரின் மரணத்திற்கும் அவன்தானே காரணம். எனில் இத்தனைபேரைக் கொன்ற கொலைக் குற்றவாளியல்லவா அவன்.
அதுவும் அவன் உமா ஷங்கர் சொன்னதுபோல் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களை மட்டுமே குறி வைத்து கொன்றிருப்பான் எனில் அவன் மிகவும் அயோக்கியத்தனமான, பாசிசத்தால் பிசைந்து செய்யப்பட்ட கொலைகாரன் அல்லவா?
இன்னொரு கேள்வி நமக்கு உமா ஷங்கரிடம் இருக்கிறது. இந்திய ஆட்சி[ப் பணியில் மிக முக்கிய இடத்தில் இருக்கும் நீங்கள் இத்தனைபேரை அழிக்கப் போவதாக ஏசு உங்களிடம் சொன்னதும் அதை அரசுக்கும் மக்களுக்கும் ஏன் சொல்லவில்லை. இதன்மூலம் இந்தப் பேரழிவில் உங்களுக்கான பங்கு அதிகம் அல்லவா?
ஆனால் உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு அதிகாரி ( அவரது கடந்தகால நேர்மைக்காகவும், அநியாயத்திற்கெதிரான போராட்டங்களுக்காகவும் வணங்குகிறோம் ) மாற்று மதத்தினர் இத்தனை ஆயிரம்பேர் ஒரே சமயத்தில் மரணமுற்ற துயரத்தை இப்படி ஒரு மனநிலையில் ஏற்பார் எனில் அவர் பணித்தளத்தில் எப்படி மதச் சகிப்புத் தன்மையோடு நடந்து கொள்வார்?
இப்போது இந்தப் பேரிடர் குறித்து வருவோம். நமக்குள் ஒரு கேள்வி இயல்பாகவே எழுகிறது. வரலாறு காணாத மழை. வரலாறு காணாத பெருவெள்ளம் என்றெல்லாம் சொல்கிறோமே இந்த வரலாறுக்கு வயது எத்தனை?
புரியும்படியாகவே கேட்டுவிடலாம் இதற்கு முன்னால் இதுபோன்ற பெரு மழையோ ,பெருவெள்ளமோ ஏற்பட்டதேயில்லையா? இதைவிடவும் அதிகமான மழையும் வெள்ளமும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அப்போதெல்லாம் இவ்வளவு உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.
இன்னும் கொஞ்சம் தெளிவாய் பேசினால், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இந்த அளவிற்கு வளராத காலகட்டத்தில் இதைவிட பெரு மழையில், இதைவிட பெரு வெள்ளத்தில் இவ்வளவு உயிர்ச்சேதம் இல்லாத போது இத்தனை தொழில்நுட்பமும் வசதிகளும் குவிந்து கிடக்கும் இந்தக் காலகட்டத்தில் ஏன் இப்படி?
ஒரே காரணம்தான். சின்னக் குழந்தைக்கும் புரியும் எளிய காரணம். விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் இருந்திராத அந்தக் காலத்தில் மலைகளில் காடுகள் செழித்திருந்தன. காடுகள் செழித்திருந்ததால் விலங்குகளும் செழித்திருந்தன. இது ஒரு இயற்கைச் சம நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தன. இதுதான் மண் அரிப்பிலிருந்து மலைகளைக் காத்தன. இப்போது காடுகளை நம்மால் எந்த அளவு முடியுமோ அந்த அளவிற்கு அழித்துவிட்டோம். மழை நீர் கட்டுக்கு அடங்காமல் வெள்ளமெனப் பெருக்கெடுத்து பேரழிவை கொண்டு வருகிறது.
ஏகப் பட்ட காரணங்கள் வரிசைகட்டி நின்றாலும் மரங்களை அதிகமாய் வளர்க்கச் சொல்வதற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு.
1) மரங்கள் மழையை ஆசைகாட்டி அழைத்து வரும்
2) மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கும்.
இப்போது நாம் புரிந்து கொள்ளவேண்டியது ஒன்று. மரங்கள் இல்லாததால் மண் அரிப்பு ஏற்பட்டு இவ்வளவு பெரிய பேரிடர் வந்ததென்றால் மரங்கள் இல்லாததால் மழையும் பெய்ய வேண்டிய அளவிற்கு பெய்யவில்லை என்றுதானே பொருள். எனில் மரங்கள் இருந்திருப்பின் மழையும் இதைவிடக் கூடியிருக்கும். கிடைத்த மழை நீரை ஒழுங்காக சேமித்து வைத்திருப்பின் தண்ணீர் பிரச்சினையும் தீர்ந்திருக்கும்.
வெள்ளமாய் பெருக்கெடுத்த நீர் போதிய மரங்களும் புதர்களும் இல்லாமையால் பெரும் மண் சரிவை உண்டு செய்து ஏறத்தாழ ஐம்பதாயிரம் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. இப்போது ஒரு கேள்வி வருகிறது.
வரலாறு காணாத அளவிற்கு ஏன் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது?
பெரு மழை, பெரு வெள்ளம், பெரும் சேதம் என்று சொல்வதில் உண்மை இருப்பினும் அதுமட்டுமே உண்மையல்ல.
ஷோலாஷ் காடுகள் அழிக்கப் பட்டமையே இந்த வெள்ளப் பெருக்கிற்குக் காரணம் ஆகும்.
ஷோலாஷ் என்பவை ஒருவிதமான நார்ப் பயிர்ப் புதர் ஆகும். இது அநேகமாக கோரை போன்ற ஒரு பயிர். தன்னில் விழும் மழைத் தண்ணீரரை அப்படியே உறிஞ்சி பாதுகாத்து வைத்துக் கொள்ளும். எவ்வளவு காலம் நீர் இருந்தாலும் அழுகாது. நீரற்ற போது காய்ந்து விரைத்துக் கொள்ளும். இந்த ஷோலாஷ் காடுகள் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும். எவ்வளவு மழை பெய்தாலும் ஷோலாஷ் காடுகள் அவற்றை ஈர்த்து வைத்துக் கொள்ளும். பிறகு அங்கிருந்து கசிய ஆரம்பிக்கும் நீர். இது ஒரு பாதுகாப்பான அமைப்பு. இயற்கை நமக்கு அளித்த கொடை.
இந்த ஷோலாஷ் காடுகளைத்தான் நாம் தேயிலைத் தோட்டத்திற்கென்றும் , காபி தோட்டத்திற்கென்றும் அழிக்கத் தொடங்கினோம். போதாக் குறைக்கு பன்னாட்டு நிறுவனக்களின் மற்றும் பெரு முதலாளிகளின் தேவைக்கென்றும் இந்தக் காரியத்தை கொஞ்சமும் மனசாட்சியே இன்றி செய்தோம்.
மலைகளில் இப்போது ஷோலாஷ் இல்லாததாலும் அல்லது பெருமளவு அழிந்து விட்டதாலும் விழுகிற மழை நீர் அப்படியே பெருக்கெடுத்து கீழ் நோக்கி ஓடி வரத் தொடங்குகிறது. ஷோலாஷ் தேவையான அளவு இருந்திருப்பின் பெய்த மழை நீர் ஷோலாஷில் தேங்கி ஆறு அல்லது ஏழு மாதங்களாக கசிந்து கொண்டிருந்திருக்கும். இப்போது ஆறேழு மாதங்களில் கசிந்து கீழிறங்க வேண்டிய தண்ணீர் உடனடியாக ஒரே நேரத்தில் பாயத் தொடங்குவதால் இத்தகையப் பேரழிவுகள் நடக்கின்றன.
இதுதான் குடகிலும் நடக்கிறது. அதனால்தான் காவிரிப் பிரச்சினையே நமக்கு எனலாம். அல்லது குடகில் இருந்த ஷோலாஷ் காடுகள் அழியாமல் இருந்திருப்பின் காவிரியில் நமக்கு இந்த அளவிற்கு பிரச்சினைகள் இருந்திருக்காது.
மணிமுத்தாறு மலைகளிலும் புதிதாக தேயிலைத் தோட்டங்களையும் காபி தோட்டங்களையும் ப்பெரு முதலாளிகள் ஏற்படுத்தி வருவதாகத் தெரிகிறது. இதுவும் அநேகமாக ஷோலாஷ் காடுகளை அழித்துத்தான் இருக்கும்.
புலிகளும், யானைகளும், காட்டெருமைகளும், வித விதமான காட்டெருமைகளும் வாழும் பகுதி அவை. இதன் மூலம் அவையும் இடமின்றி மக்கள் வாழும் கிராமங்களுக்குள் புகும். நாமுன் கொஞ்சமும் இரக்கமின்றி புலிகள் அட்டகாசம், யானைகள் அட்டகாசம் என்று சொல்லிக் கொண்டிருப்போம்.
நாம் சொல்ல வருவது என்னவெனில், இத்தகையப் பேரழிவுகளுக்கு காரணம் என்னவென்று கூடி ஆராய்ந்து கண்டுணர வேண்டிய தேவையே இல்லை. பாமரனுக்கும் பளிச்சென்று புரியும் விஷயங்களே இவை. இத்தகைய அழிவுகளில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் இருக்கிற வனப் பகுதியை முதலில் நாம் சேதப் படாமல் பாதுகாக்க வேண்டும்.
இதன் மூலம் பெருமளவு இத்தகைய இடர்களில் இருந்து நம்மால் தப்பிப் பிழைக்க முடியும். இருக்கிற வனங்களைப் பாதுகாத்தாலே அங்கு இருக்கக் கூடிய பழங்குடி மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப் படும். விலங்குகளின் அழிவு தடுக்கப் படும். ஆனால் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடும் பழங்குடி இன மக்களை நாம் தேசத் துரோகிகளாகவே சித்தரிக்கத் தொடங்கியிருக்கிறோம்.
“நாங்கள் கடவுளுக்கு முந்திப் பிறந்தவர்கள்” என்று பழங்குடினர் பாடலொன்று உண்டு. ஆக கடவுளுக்கு முந்திப் பிறந்தவர்களின் அடிப்படை வாழ்வுரிமை குறித்த அக்கறையின்றி அலட்சியத்தோடு நாம் நடந்து கொண்டால் அவர்களது சாபமே நம்மை சாய்த்துப் போடும்.
நாம் உடனடியாகச் செய்யவேண்டியவையாகத் தோன்றுவது,
1) இருக்கிற வனங்களையும் ஷோலாஷ் காடுகளையும் மேலும் சேதப் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
2) மேலும் புதிய வனப் பகுதிகளை மண்ணெங்கும் குறிப்பாக மலைகளில் உருவாக்க வேண்டும்.
3) ஷோலாஷ் காடுகளை மீண்டும் தேவையான அளவு உருவாக்க முடியுமா என்பதை உரிய முறையில் அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் ஆராய்ந்து அவற்றை உருவாக்குவதில் கவனம் குவிக்க வேண்டும். இதைச் செய்வதற்காக எத்தகைய பணப் பயிர்த் தோட்டமாயினும், கட்டடங்களாயினும் அவை அழிக்கப் பட்டே ஆக வேண்டும்.
நன்றி: காக்கைச் சிறகினிலே