Tuesday, September 1, 2015

65/66, காக்கைச் சிறகினிலே, செப்டம்பர் 2015

அந்தக் கடிதத்தின் இறுதிப் பத்தியில் அப்படி ஒரு வெடி குண்டு இருக்கும் என்று அந்தத் தலைமை ஆசிரியர் கனவிலும் எதிர் பார்த்திருக்கவில்லை.  அதை அவரிடம் படிக்கும் பதினோறாம் வகுப்பு மாணவன்தான் எழுதியிருந்தான்.

அது ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி. ஒவ்வொரு வகுப்பாக வந்த தலைமை ஆசிரியர் பொதுக் கல்வியின் அவசியம் குறித்தும் அரசுப் பள்ளிகளைக் காக்க வேண்டிய அவசியம் குறித்தும் நீண்டு உரையாற்றுகிறார். இறுதியாக மாணவர்கள் தங்கள் வீடுகளின் அருகில் இருக்கக் கூடிய மாணவர்களை தங்கள் பள்ளியில் கொண்டு வந்து சேர்ப்பதற்கான முயற்சியினை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் அவரது பேச்சின்பால் பெரிதும் ஈர்க்கப் பட்டனர்.

அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. ஐந்தாம் வகுப்புவரை படித்துவிட்டு பிறகு பள்ளிக்கே போகாமல் சுற்றிக் கொண்டிருக்கும் மாணவர்களின் பட்டியலையும், பல்வேறு காரணங்களால் பல்வேறு பள்ளிகளிலிருந்தும் இடைநின்ற மாணவர்களின் பட்டியலையும் தத்தமது ஆசிரியர்களிடம் கொடுத்தனர். மாணவர்களின் உதவியோடு அந்தக் குழந்தைகளின் பெற்றோரை அணுகினர். விளைவாக சற்றேக் குறைய நிரவல் பட்டியலில் இருந்து ஒரு ஆசிரியரைக் காப்பாற்றி விடும் அளவிற்கு மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது.

தலைமை ஆசிரியர் மகிழ்ச்சியின் விளிம்பிற்கே போகிறார். அப்போதுதான் அவருக்கு அந்தக் கடிதம் வருகிறது.

பள்ளியின் மாணவர் சேர்க்கைக்காக தலைமை ஆசிரியர் எடுத்துக் கொண்ட அர்ப்பணிப்போடு கூடிய முயற்சியை வெகுவாகப் பாராட்டியிருந்தான். மட்டுமல்ல அந்தத் தலைமை ஆசிரியரின் வருகைக்குப் பிறகு கூடியிருந்த பள்ளியின் தேர்ச்சி விழுக்காடும் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான முதன்மையான காரணங்களுள் ஒன்று என்பதையும் சரியாக அந்தக் கடிதத்தில் பதிந்திருந்தான்.

 வாசிக்க வாசிக்க மகிழ்ந்துபோன அந்தத் தலைமை ஆசிரியரை அந்தக் கடிதத்தின் இறுதிப் பத்தி கோவத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.

தங்களது பெற்றோர்கள் தங்களது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோளில் இருந்த நியாயத்தை உணர்ந்து தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியான தங்களது பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள் என்றும் தங்களது வேண்டுகோளில் இருந்த நியாயத்தை தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் உணர்ந்திருக்கிறார்களா? என்பதை தான் அறிந்துகொள்ள விரும்புவதாகவும் சொல்லியிருந்தான். ஆகவே தங்கள் தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்களா என்பதையும் அப்படி இல்லாது போயின் அதற்கான காரணம் என்ன என்பதையும் அடுத்த திங்கள் கிழமை கூட்டு வழிபாட்டுக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் கூறினால் மகிழ்ச்சியாய் இருக்கும் என்றும் கடிதத்தை முடித்திருந்தான்.

ஆசிரியர்களை, தலைமை ஆசிரியரை இப்படிக் கேள்வி கேட்கும் அதிகாரத்தை இவனுக்கு யார் கொடுத்தது?

துடைக்கத் துடைக்க வியர்த்துக் கொண்டே இருந்த்து அவருக்கு. அந்தப் பையனை கூப்பிட்டு நாலு தப்பு தப்பினால்தான் மனது ஆறும் போலிருந்தது அவருக்கு. ஆனால் நாடு இப்போதிருக்கும் போக்கில் அதை செய்ய இயலாது.

அவர் அந்தப் பையனது வகுப்புத் தலைவனை அழைத்து அவனிடம் விவரத்தை சொல்லி ஆசிரியர்களை, தலைமை ஆசிரியரை இப்படி கேள்வி கேட்பது குற்றம் என்று அந்த மாணவனுக்கு புரிய வைத்து அவனை தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்குமாறு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

வகுப்புத் தலைவனோ அந்த மாணவன் கேட்பது நியாயம் என்றும் அப்படிக் கேட்பதற்கான உரிமை அவனுக்கு இருக்கிறது என்றும் ஆகவே இதை தன்னால் செய்ய இயலாது என்றும் சொல்லி விடுகிறான்.

தலைமை ஆசிரியருக்கு கோபம் உச்சத்திற்குப் போகிறது. ஒரு வழியாக அதை அடக்கிக் கொண்டவர் பள்ளி மாணவத் தலைவனை அழைத்து அதே கோரிக்கையை வைக்கிறார். அவனும் ஏறத்தாழ வகுத் தலைவன் சொன்னதையே சொல்லவே அவரே அந்த மாணவனை நேரடியாக அழைத்து நேரடியாகவே கோரிக்கையை முன் வைக்கிறார்.

அவனும் வேறு வழியின்றி அவரிடம் மன்னிப்பைக் கேட்டுவிட்டு நகர்கிறான்.

இதைப் படித்ததும் பயங்கரமாய் சிரிப்பு வருகிறது அல்லவா? இப்படியெல்லாம்கூட நடக்குமா? அந்தப் பள்ளியின் சர்வ வல்லமை பொருந்திய தலைமை ஆசிரியர் ஒரு மாணவனை நேரடியாக கூப்பிட்டு கண்டிக்காமல் வகுப்புத் தலைவனை, பள்ளி மாணவத் தலைவனை அணுகுவதாவது? ஏதாவது நடக்கிற காரியமா பேசுங்க சார் என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா?

இது வரை இப்படி ஒரு சம்பவம் பள்ளிக்கூடத்தில் நடக்க வில்லைதான். ஆனால் நடக்கவே நடக்காது என்று சொல்வதற்கில்லை. காரணம் இந்திய உச்ச நீதிமன்றமே உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டு அது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்  உயர்நீதிமன்ற பெஞ்சை அணுகி அங்கும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தன்னிடத்திலேயே அந்த வழக்கை பதிவு செய்து தனக்குத் தானே தீர்ப்பளித்துக் கொண்ட விநோதம் நடந்திருக்கிறது என்கிற விவரத்தை 23.08.15 நாளையதி இந்துவில் நீதிபதி சந்துரு அவர்கள் எழுதியுள்ளார்.

ஒன்றும் இல்லை, 1997 ஆம் ஆண்டு நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் தங்களது சொத்துக் கணக்குகளை தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப் போவதாக அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.

சுபாஷ் சந்திர அகர்வால் என்ற வழக்கறிஞர் எத்தனை நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை தலைமை நீதிபதியிடம் கொடுத்திருக்கிறார்கள் என்ற விவரத்தை அறிந்துகொள்ள தகவல் அறியும் சட்டத்தை நாடுகிறார்.

அந்தத் தகவலை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையர் உச்சநீதி மன்றத்திற்கு உத்திரவிடுகிறார். அதை எதிர்த்துதான் உச்ச நீதிமன்றம் தனக்கு கீழான உயர்நீதி மன்றத்தை அணுகி தோற்கிறது.

இதைப் படித்ததும் சன்னமாகவேனும் கோவம் வராமல் ஒரு நகைச்சுவையை படித்த சுகம் கிடைக்குமானால் இதுமாதிரி நகைச்சுவைகளை நாம் ஏராளம் கடக்க நேரிடும்.

புதுகை வலைப்பதிவர் சந்திப்பு
*******************************************
வலைப் பதிவுகள் வருங்காலத்தைத் தீர்மானிக்கிற சக்திகளுள் முக்கியமானதொன்றாக இருக்கும் என்று மிக உறுதியாய் நம்புபவன் நான். சமூக அக்கறையும் எழுத்தும் கைவரப் பெற்ற பதிவர்களை ஒருங்கிணைப்பதும் நெறிப்படுத்துவதும் மிக அவசியம் என்று நினைக்கிறேன்.

கடந்த காலங்களில் பல சந்திப்புகள் நடக்கவே செய்துள்ளன. அனாலும் ஒரு கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கக் கூடிய மக்கள் சக்தியின் ஒருங்கமர்வாக, நன்கு செதுக்கப் பட்ட வடிவமைப்பாக ஒரு சந்திப்பின் அவசியத்தைப் பேசுகிற இடமெங்கும் பேசியே வருகிறேன்.

ஒரு மாநில அமைப்பாக இந்தச் சக்தியை மாற்றவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.

புதுகை சந்திப்பிற்கான திட்டமிடல்களைப் பார்க்கும்போது அப்படிப் பட்ட கனவினை செயல்படுத்தும் கவனம் அவர்களுக்கு இருப்பதாகவே படுகிறது. நிச்சயமாய் பத்தோடு பதினொறாய் இது முடியப் போவது இல்லை என்றே நம்புகிறேன்.

எனது மேடை குருநாதரும் வழிகாட்டியுமான அண்ணன் முத்துநிலவன் அவர்கள் முன்கை எடுத்திருக்கிறார்கள் என்பதே என் நம்பிக்கையை வலுப்பெறச் செய்கிறது. அவரோடு தோழர்கள் கஸ்தூரி ரெங்கன், வைகறை வைகறை, கீதா போன்றோர் சுழன்றடிப்பதைப் பார்த்தால் மகிழ்ச்சி அப்பிக் கொள்கிறது. எனது சர்க்கரையை சரி பாதியாய் குறைத்ததில் இவர்களது இந்த முயற்சிக்கும் நிச்சயமாய் பங்குண்டு.

நிச்சயமாய் அந்த கூடலில் ஏதோ ஒரு மூலையில் நானும் அமர்ந்திருப்பேன்.

வலை உலக வளர்ச்சியையும் எழுச்சியையும் காக்கை நிச்சயம் கொண்டாடவே செய்யும்.

அண்ணன் நிலவனுக்கும் மற்ற தோழர்களுக்கும் என் அன்பும் மரியாதைகளும்.
******************************************************










   

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...