Friday, September 4, 2015

9 வாசகர் மணிவண்ணன்

எப்படி யோசித்தும் என்ன கூட்டம் என்று நினைவில்லைஆனால் சென்னை இக்ஷாவில் நடந்தது இது.


கூட்டம் முடித்துவிட்டு வழக்கம் போல அரங்கத்தின் வெளியே அங்கங்கே குவியல் குவியலாய் நின்றுபேசிக் கொண்டிருக்கிறோம்.

எங்களது விவாதம் ஜெயமோகனைச் சுழன்று சுற்றியதுஅவரை எப்படி எப்படியோ விமர்சித்துக்கொண்டிருந்த நாங்கள் அவரது “ காடு” பற்றி பேச ஆரம்பித்தபோது அதன் அழகியல் மற்றும்பிரமாண்டம் குறித்து கொஞ்சம் வியப்போடே நகர்ந்தது எங்களது உரையாடல்.

அப்போது பக்கத்து குவியலில் நின்று பேசிக் கொண்டிருந்த இயக்குனர் மணிவண்ணன் எங்கள் பக்கம்திரும்பி சொன்னார்,

“ ரொம்ப அருமையான நாவல்.  ரொம்பவே பிருமாண்டம். என்ன, அந்த நாவல்ல கொஞ்சம் சாரு இருப்பார். போக, கம்யூனிஸ்டுகள டேமேஜ் பண்றதுதான் அவரோட பர்பஸ். அவரோட விஷ்ணுபுரம் கூட அப்படித்தான்.”

எல்லா இடங்களிலும் இதை அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

இரண்டு விஷயங்கள் என்னை வியக்கவைத்தன,

1 யாரென்றே தெரியாத நபர்கள் , இன்னும் சொல்லப்போனால் முகவரியற்ற யாரோ பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தில் தனக்கு சொல்ல ஏதோ இருந்தால் அதில் பங்கேற்கும் அவரது பிரபலம் துறத்தல்.

2 மற்ற சினிமாக்காரர்களைவிட கொஞ்சம் கூடுதலாக வாசிப்பார் என்று மட்டுமே என் புத்தியில் கிடந்ததை சுத்தமாய் துடைத்துப் போட்ட அவரது
ஆழமான வாசிப்பு.

கலகக்காரர், நல்ல நகைச்சுவை நடிகர், அரசியல் பகடியோடு படங்களைத் தருவதில் வல்லவர், எல்லாவிதமான படங்களையும் இயக்கியவர், போக தமிழ்த் தேசியக் குழுக்கள் எதுவாயினும் அது எவ்வளவு சின்னதாயினும்
அது நடத்தும் கூட்டங்களில் சிரமம்பாராது பங்கேற்பவர் என்பதுதான் பொதுவாக அவர் குறித்த தமிழ் மண்ணின் பொது அபிப்பிராயம்.

ஆனால், பெரியாரையும் , மார்க்ஸையும் கையில் எடுக்காமல் தமிழ்த் தேசியம் யாருக்கும் சாத்தியப் படாது என்பதில் அவர் உறுதியாய்த்தான் இருந்திருக்கிறார். ஆரம்பக் காலத்தில் அவர் இரண்டு பொது உடைமைக் கட்சிகளுக்கும் வேலை பார்த்திருக்கிறார். சுவர் எழுத்து எழுதியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் இரண்டு இடதுசாரிக் கட்சிகளிடமும் அவர் நம்பிக்கை இழக்கிறார். அவர்கள் மீது ஊழல், ஒழுக்கமின்மை, அர்ப்பணிப்பின்மை
போன்ற குற்றசாட்டுகள் எதுவும் இல்லை அவருக்கு. அவர்கள் தொழிற்சங்கங்களைச் சார்ந்துமட்டுமே இயங்குகிறார்கள். ஆகவே
அவர்களால் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே
செயல்பட முடிகிறது. இது போதாது. போகவும் தொழிற்சாலைகள் மூடப்படும்போது கட்சி அந்த இடத்தில் இல்லாமல் போகும் என்பதுதான்
அவரது குற்றச்சாட்டு.

இந்த வகையில் ஒரு தீவிரவாத இடதுசாரிக் குழுவில் இணைகிறார். இவரோடு இயங்கிய இரண்டு தோழர்கள் இல்லாமல் போகவே ஒரு இடதுசாரியாய் இயங்க இயலாமையால் மட்டுமே அவர் சென்னைக்கு வருகிறார்.

மட்டுமல்ல, எந்த இடத்திலும் மற்ற தமிழ்த் தேசியத் தோழர்கள் முன் வைப்பது போன்ற கடுமையான விமர்சனங்களை இவர் இடதுசாரிக் கட்சிகள் மேல் வைத்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் இணக்கமாகவே இருந்திருக்கிறார்.

காளிமுத்து என்கிற இவரது ஆசிரியர்தான் இவரது ஆளுமைக்கெல்லாம் காரணம் என்கிறார். தமிழ்வாணனை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தவரை
அவர்தான் “ தாய்”  நாவலைத் தந்து மடை மாற்றம் செய்திருக்கிறார். சிலந்தியும் ஈயும்கூட அவர்தான் தந்திருக்கிறார். நாமும்தான் 25 ஆண்டுகளாக ஆசிரியராக இருக்கிறோம். இப்படி எதுவும் செய்யவில்லையே என்ற கோவம் நம் மீது இயல்பாகவே வருகிறது.

கணக்கற்ற முறை இவர் “ கம்யூனிஸ்ட் அறிக்கை” யை வாசித்திருக்கிறார். ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் புதிது புதிதாய் கற்றுக் கொள்வதற்கு அதில் இருந்ததாய்  சொல்லியிருக்கிறார். இடது சாரித் தலைவர்கள் தங்களது இளைஞர்களை இதை வாசிக்கச் செய்வதில் இன்னும் கொஞசம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது கொஞ்சம் குறைந்து இருப்பதாகப் படுகிறது.

ஏறத்தாழ 40000 நூல்கள் அவரது வீட்டில் இருப்பதாகத் தெரிகிறது. இயக்குனர்கள் சங்கத்தில் ஒரு நூலகம் அமைத்து அவற்றை அங்கு வைக்கவேண்டும் என்று நந்தன் ஸ்ரீதரன் உள்ளிட்ட திறைத் துறையினர் ஆசைப் படுவதில் அர்த்தம் இருக்கிறது.

துணை இயக்குனர்கள் நிறைய வாசித்தால்தான் தமிழ்த் திரையுலகம் வளப்படும் என்று மனதார நம்பியவர் மணிவண்ணன். வாசிக்க நல்ல நூல்களைக் கொடுத்து வாசிக்கத் தூண்டியவர்.

எனவே அவரது குடும்பத்தினர் இதைக் கொஞ்சம் கருணையோடு அணுக வேண்டும்.

கொஞ்சம் பழசாய்த்தான் தோன்றும் ஆனாலும் அதுதான் சரியெனப் படுகிறது,

“ வாசிப்பதை நிறுத்திக் கொண்ட தேர்ந்த வாசகனுக்கு எங்கள் அன்பும் வணக்கமும்.

நன்றி : “ புதிய தரிசனம்”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...