Saturday, September 12, 2015

6 பெரம்பலூர் வாசிக்கிறது

பாக்தாத் வசப்பட்டு விட்டதால் ஏகத்துக்கும் மகிழ்ச்சி தைமூருக்கு. குதூகலத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தான்.


சுற்றி நிற்பவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உற்சாகமும் துள்ளலுமாய் ஓடி வருகிறான் அவனது தளபதி.

“ இங்கிருக்கிற வழிபாட்டுத் தளங்களையெல்லாம் அழித்து விடலாமா மன்னா?”

பொதுவாகவே ஒரு நாடு வெற்றி கொள்ளப் பட்டபின் அங்கிருக்கக் கூடிய புராதன சின்னங்களையும் வழிபாட்டுத் தளங்களையும் அழித்துவிட்டு செல்வங்களை, அடிமைகளை, அழகு நங்கைகளை, அள்ளிக்கொண்டு போவதுதான் வழக்கம். எனவேதான் அப்படிக் கேட்டான்.

“ அவை என்ன செய்தன உன்னை?. இருக்கட்டும் விடு”

அழிப்பதற்கான அவனது நீண்ட பட்டியல் ஒவ்வொன்றாய் முற்றாய் நிராகரிக்கப் பட்டபின் கேட்டான்,

“ அப்புறம் என்னதான் செய்யட்டும் மன்னா? ”

எதையுமே அழிக்க வேண்டாம் என்றால் பிறகெதற்கு இவ்வளவு சிரமப்பட்டு கைப்பற்ற வேண்டும் என்ற கவலை அவனுக்கு.

“போ, போய் கல்வி நிலையங்கள், நூல் நிலையங்கள், அனைத்தையும் அழித்துப் போடு. கவனத்தில் கொள், பாக்தாத்தில் ஒரு புத்தகம் இருக்கக் கூடாது. கொளுத்திப் போடு”

“ இதில் என்ன லாபம் மன்னா? ” கொஞ்சம் அப்பாவியாய்த்தான் கேட்டான்.

“ முட்டாளே ! நூல்கள் மனிதனுக்கு புத்தியைத் தரும். புத்தி விடுதலைக்காக அவனைப் போராடத் தூண்டும். பாக்தாத் தொடர்ந்து நமது ஆளுகையின் கீழ் இருக்க வேண்டுமென்றால் இவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும். புத்தகங்கள் இதைக் கெடுத்துப் போடும். தொணத் தொணவென்று பேசிக்கொண்டு நிற்காமல் சொன்னதை செய் விரைவாய்”

தொண்ணூற்றி ஒன்பது விழுக்காடு சரியாய்தான் இருக்கும்.

ஆனாலும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கமில்லாத காலத்தில் எங்கோ வாசித்தது என்பதால் பெயர் அல்லது இடம் தவறாகவும் இருக்கலாம். இருந்துவிட்டு போகட்டும். அதனால் ஒன்றும் முழுகி விடாது.விஷயம்தான் முக்கியம்.

ஆக, அடிமைகளாகவே மக்கள் இருக்க வேண்டுமெனில் அவர்களிடமிருந்து புத்தகத்தை அப்புறப் படுத்திவிட வேண்டும்.

புத்தகங்களை வாசிக்காத மனிதன் தன் அடையாளம் இழப்பான். யாருக்கும் தானே விரும்பி அடிமையாவான்.

இதற்காகத்தான் யாழ் நூல் நிலையம் கொளுத்தப் பட்டது. உணர்வுள்ள தமிழ் பேசும் யாவரும் கண்ணீர் விட்டு அந்தத் தருணத்தில்அழுததும் அதனால்தான்.  ஈழத் தமிழினத்தின் அடையாளத்தை, சுயத்தை, வேட்கையை வேரறுக்கும் முயற்சியாகவே யாழ் நூல் நிலையம் கொளுத்தப் பட்டது.

எனில்,

சுதந்திரமாய் சிந்தித்து தமக்கான அடையாளத்தோடும், பகுத்தறிவோடும், எவனுக்கும் பணிய மறுக்கும் சுயமரியாதையோடும்,   மக்கள் இருக்க வேண்டும் என்று ஒரு அரசும் அரசு இயந்திரமும் விரும்பும் என்றால் அது தன் மக்களின் முன் புத்தகங்களைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.

பல ஊர்களில், ஏன், பல மாவட்டத் தலை நகரங்களில் நல்ல புத்தகக் கடைகளே இல்லை என்பதுதான் இன்றைய எதார்த்தம்.

வாசிக்கிற பழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டுமெனில் நாம்தான் புத்தகங்களோடு மக்களை நோக்கிப் போக வேண்டும். புத்தகச் சந்தைகளை ஊர் ஊருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சந்தைக்குள் மக்களைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்.

இதுவெல்லாம் சாத்தியமா?

சாத்தியம் என்பதை புன்னகையோடு செய்து காட்டியிருக்கிறார் பெரம்பலூர் மாவட்ட ஆட்ச்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது.

அவர் பெரம்பலூருக்கு வந்தவுடன் வேறு எதைப் போலவும் வாசிப்புத் தளமும் இங்கு வறண்டு கிடப்பதை உணர்ந்து கொண்டார். ஒரு பெரிய நகரத்தின் பரப்பளவே கொண்ட இந்த மாவட்டத்தை சுற்றி சுற்றி எதை எதையோ செய்தவர் வறண்டு வெடித்துக் கிடக்கும் வாசிப்புத் தளத்தை வளப் படுத்த முடிவெடுத்தார்.

பெரம்பலூர் என்பது கல்வி நிலையங்களின் நகரம். எனவே கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து,

“ஒரு புத்தகத் திருவிழாவை இங்கு நடத்த வேண்டும். பத்து நாட்களுக்கு ஆகும் செலவை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இயலுமா? ”

“செய்துடலாம் சார்”

சென்ற ஆண்டு ஏறக்குறைய 50 கடைகளோடு புத்தகத் திருவிழாவைத் தொடங்கினார்.

ஒவ்வொரு நாள் செலவையும் ஒவ்வொரு கல்வி நிறுவனங்கள் ஏற்றன. தத்தமது மாணவர்களையும் ஊழியர்களையும் அவை தமது வாகனங்களில் கொண்டு வந்து சேர்த்தன. பார்வையாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிடவும் எகிறியது.

கடை எடுத்திருந்தவர்கள் புன்னகையோடு ஊர் கிளம்புமளவிற்கு வணிகம் அமைந்தது.

சென்ற ஆண்டின் அனுபவத்தை நன்கு படித்துக் கொண்ட ஆட்சித் தலைவர்
இந்த ஆண்டு ஒரு பெரும் பாய்ச்சலுக்குத் தயாரானார். அரசு ஊழியகளும் ஆசிரியர்களும் தங்களது குல தெய்வ கோயிலின் கும்பாபிஷேகத்தைப் போலவே பாவித்து சுழன்று சுழன்று உழைத்தார்கள்.

பப்பாசி வழிகாட்டுதலைப் பெற்றார். இந்த ஆண்டு 104 கடைகள். இதில் 64 பதிப்பகங்கள்.

உண்மையை சொல்லிவிட வேண்டும் சென்னை புத்தகக் காட்சியின் பிரமாண்டமே அசைத்துவிட முடியாத என்னை இந்தப் புத்தகத் திருவிழா நிறைய அசைத்துப் போட்டது.

என் மண்ணில் ஒரே இடத்தில் இத்தனைக் கடைகளா? குவியல் குவியலாய் இத்தனை நூல்களா? உணர்ச்சிவசப்பட்டதில் ஓரிரு துளி கசியவே செய்தது.

“ இது கொஞ்சம் அதிகமா தெரியலையா எட்வின்?” என்று கேட்கக் கூடும்.

சத்தியமாய் இல்லை. கை நிறைய புத்தகங்களோடு நடக்கும் எம் மண்ணின் இளைஞர்களையும் யுவதிகளையும் குழந்தைகளையும் பார்க்கும்போது நான் உணர்ச்சி வசப்படுவதை உணர வேண்டுமெனில் எங்கள் மாவட்டத்தின் வாசிப்பு வறட்சி பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

இதில் இருக்கும் தன்னடக்கம் தினசரி மாலையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எனக்கு இல்லை. பெரம்பலூர்க் காரன் என்பதில் அதில் எனக்குத் திமிரே உண்டு. நிகழ்ச்சிகளை கண்கள் திறந்து காது கொடுத்து அனுபவித்தார்கள் எம் மக்கள்.

தினசரி மாலை ஆட்சியர் வந்து விடுவார். பதிப்பகத்து உரிமையாளர்களை வசதி எப்படி, எப்படி போகிறது என்பதை விசாரித்து அறிந்தார்.

தரமான, தீவிர இலக்கியங்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகங்களில் வியாபாரம் கொஞ்சம் மந்தமாகப் படவே ஊராட்சி மன்றத் தலைவர்களை அழைத்து அது மாதிரி ஸ்டால்களில் ஆளாளுக்கு நூல்கள் வாங்க வேண்டும் என்றும், இல்லாது போனால் வரும் காலங்களில் இவர்கள் வராமாட்டார்கள் என்றும் சொன்னார்.இவர்கள் வராது போனால் தரமான நூல்கள் வருங்காலத் தலைமுறையினருக்கு வாய்க்காமல் போய் விடும் என்று புரிய வைத்தார். அது நல்ல பயனைத் தந்தது.

பிறகு போய் அரங்கில் அமர்ந்தால் முடிகிறவரை அமர்ந்து விருந்தினர்களை கை கொடுத்து அனுப்பிவிட்டுதான் திரும்புவார்.

அப்படித்தான் ஒருநாள் ஸ்டால்களை சுற்றி வரும்போது சந்தியா பதிப்பகத்தினுள்ளே நுழைந்தார். அவர்கள் எனக்கும் சின்னதாய் ஒரு கட்வுட் வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கிறார், என்னைப் பார்க்கிறார், அதைப் பார்க்கிறார்...என்னைப் பார்க்கிறார்,

“நான்தான் சார்”

“ கடை உங்களுதா? எப்படிப் போகுது?”

பதறிக் கொண்டு வந்தார் சந்தியா சௌந்திரராஜன்,

“ சார் அவர் எழுத்தாளர். இந்த ஊர்க்காரர்.”

”எங்க ஊர் எழுத்தாளருக்கு கட் அவுட்டா?” என்பது போல் பார்த்தார். இருபது நிமிடம் பேசிக் கொண்டிருந்தோம்.

“நாளை நீங்க அவசியம் பேச வேண்டும்”

உத்தரவோடு விடை பெற்றார்.

அடுத்த நாள் ஆள் அனுப்பி அழைத்து பேச வைத்தார்.

பெரம்பலூரின் தொன்மச்சிறப்புகளைப் பற்றி பேசினேன். பெரம்பலூரின் வரலாறு எழுதப் படவேண்டும் என்று பேசினேன்.

அதற்கான ஒரு குழுவை அமைத்து வேலையை ஆரம்பித்துவிட்டார். ஆக புத்தகத் திருவிழாவின் உப விளைவாக பெரம்பலூர் வரலாறு வரப் போகிறது.

இன்னொரு பக்கம் உலகத் திரைப் படங்களும் குறும்படங்களும் தினமும் திரையிடப் பட்டன. வழிதக் கூட்டம் சொன்ன தகவல்கள் இரண்டு,

நல்லதைக் கொடுத்தால் நிச்சயம் பார்ப்பார்கள் என்பது ஒன்று.

குறும்பட ரசனை பெரம்பலூரில் தழைத்து வளரும் என்பது இரண்டு.

65000 புத்தகங்கள், 9500000 ரூபாய்க்கன விற்பனை என்பது எங்களுக்கு நம்பிக்கை தரும் விசயங்களே. 120000 பார்வையாளர்கள் , அதில் குறிப்பிடத் தகுந்த அளவு மாணவ மாணவியர் என்பது என்னைப் பொறுத்தவரை தித்திப்பான செய்திகளே.

கனரா வங்கியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் ஸ்டால் எடுத்து புத்தகங்கள் வாங்க கடன் கொடுத்ததன என்பதை கண்ணால்பார்த்த என்னாலேயே இன்னும் நம்ப முடியவில்லை.

பெரம்பலூர் நூலக வாசக வட்டம் ஒரு ஸ்டால் எடுத்து நூல் தானம் கோரியது. மிக நல்ல அறுவடை. ஏறத்தாழ 45000 ரூபா மதிப்பிலான புத்தகங்களை மக்கள் எங்கள் ஊர் நூலகத்திற்கு வழங்கியிருக்கிறார்கள்.

திரைப்பட இயக்குனர் தாமிரா பேச வந்திருந்தார். மிரண்டுப் போய் சொன்னார், “பெரம்பலூரில் நல்ல வாசகத் திரள் உருவாகும் பாரேன்”

நல்லவன் வாக்கு. பலிக்கும்.

இரண்டுமுறை வந்திருந்த மனுஷ்யப் புத்திரனுக்கு இந்தத் திருவிழாவில் கிடைத்த மகிழ்ச்சி வேறு எங்கும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

மற்ற ஊர்க்காரர்களைப் போல எங்களால் விமர்சனம் எல்லாம் செய்ய இயலாது. எங்களைப் பொறுத்தவரை வறண்ட மணற்பரப்பில் நா வறள பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு சுணை கிடைத்திருக்கிறது.

வருங்காலங்களில் எங்கள் பிள்ளைகள் ஏராளமாய் எதிர்பார்ப்பார்கள், நிறைய வளர்ந்து நிறைய விமர்சிப்பார்கள்.

அடுத்தமுறை உறவினர்களையும் நண்பர்களையும் புத்தகத் திருவிழாவிற்கு அழைக்க எண்ணியிருக்கிறேன். கும்பாபிஷேகத்திற்கும், கிடா வெட்டிற்கும் அவர்கள் அழைத்து போய் வெட்டிவிட்டு வரும் நாம் எதுவும் செய்ய இயலவில்லையே என்ற ஏக்கத்தை நேர் செய்ய ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது

ஸ்டால் எடுத்திருந்தவர்கள் சாப்பாடு, தேனீர் போன்றவற்றிற்கு மிகுந்த சிரமப் பட்டதை உடனிருந்து பார்க்க முடிந்தது. பார்வையாளர்களுக்கும் அதே சிரமம் இருக்கவே செய்தது. அடுத்த முறை உள்ளேயே நல்லதொரு கேண்டீன் ஏற்பாடு செய்யப் படுவது நல்லது.

இதைவிடவும் மிகுந்த அத்தியாவசியமானது கழிவறை வசதி.

அடுத்தது சில்லறைப் பிரச்சினை. இதை நானே ஆட்சியரிடம் சொன்னபோது என்ன செய்யலாம் என்று கேட்டார். சென்னையில் ஒரு வங்கி தினமும் சில்லறை பொட்டலங்களை ஸ்டால்களுக்கு விநியோகித்ததை சொன்னேன். கடைசி இரண்டு நாட்களில் இதற்கான முயற்சிகளை அவர் செய்திருந்தார்.

இவை கடந்து எதை வாங்குவது என்பதில் நிறைய குழப்பம் இருந்ததை உணர முடிந்தது. பட்ஜட்டுக்குள் எதை வாங்குவது என்பதில் தெளிவற்று தடுமாறியவர்களையும் பார்க்க நேர்ந்தது. 4000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன். அப்புறம்தான் “தோல் “ பற்றி தெரிந்தது. வாங்க பைசா இல்லை என்றார் நண்பர் ஒருவர்.

எதை வாங்குவது, தங்களது பட்ஜெட்டுக்குள் எதை எதை வாங்குவது என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனில் நல்ல நூல்கள் குறித்த புரிதலை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இதனை இங்குள்ள இலக்கிய அமைப்புகள்தான் செய்ய வேண்டும். இதற்கு தொடர்ந்து கூட்டங்களை இவர்கள் நடத்த வேண்டும். இதற்கு எளிய வாடகையில் அரங்குகள் கிடைக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் ஆனதை சேய்ய வேண்டும். உள்ளூர் கல்லூரிக்ளும் இதில் தங்களது பொறுப்பை உணர வேண்டும்.

இவை எல்லாம் கடந்துஎங்களூர் புத்தகத் திருவிழா இரண்டு விசய ங்களை சொல்கிறது,

ஒன்று,

மாவட்ட ஆட்சியர்கள் நினைத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழாக்கள் சாத்தியம்.

இரண்டு,

பெரம்பலூர் வாசிக்கத் தொடங்கியிருக்கிறது.

நன்றி : “காக்கைச் சிறகினிலே”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...