ராஜ்ய சபாவின் காலி இருக்கைகளுக்கு ஆள் நிரப்பும் திருவிழாவிற்கு அநேகமாக நாள் குறித்ததிலிருந்து குழந்தைகளிடமிருந்த "காயா பழமா?" விளையாட்டு அரசியலுக்கு நகர்ந்திருக்கிறது.
காய் விட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் வசைந்து கொண்டிருந்தவர்கள் "பழம்" விட்டுக் கொள்ளலாமா என்று பரிசீலிக்கத் தொடங்கி விட்டார்கள். "காய்" காலத்தின் லாப நட்டக் கணக்கே பழம் விடுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கப் போகிறது.
"காய்" , "பழ" சைகைகளால் " தோட்டங்களும்" , "ஆலயங்களும்" , சந்தடி சாக்கில் சில "பவன்" களும் சுறு சுறுப்பாய் மாறும்.
"லாபம்" மட்டுமே குறியாகிப் போன "காய்" , "பழ" கூட்டணி விளையாட்டு ஏதோ அரசியலில் மட்டுமல்ல , வாழ்க்கையில், வணிகத்தில், தொழிலில் என்று சகல தளங்களுக்கும் விரிந்து பொருந்தும்.
" இல் வாழ்க்கை கூட்டணியே" கூட இவரோடு சம்பந்தம் கொண்டால், இவரோடு இணைந்தால், பிள்ளை கண்ணை கசக்காமல் இருப்பாள், அல்லது சாகிற வரைக்கும் நமக்கு நிம்மதியான சோறு என்கிற வகையில் ஏதாவது ஒரு லாபக் கணக்கோடுதான் பெரும்பாண்மை அமைகிறது.
இன்னொரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். "காய்" விட்டு பிரிவதில் பெரும் பகுதி கூட லாபம் கருதிதான்.
விடுங்கள் போகட்டும்.
" நட்டம்" தான் என்பது உறுதியாய் தெரிந்த பின்பும், அது சமூகத்திற்கு நன்மை தருமெனில் அதை மகிழ்வோடு ஏற்று அமைந்து விடும் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி ஒரு அபூர்வ கூட்டண் "தியாக தீபங்கள்" மோகன கிருஷ்ணனுக்கும் "யுகமாயினி" சித்தனுக்கும் இடையில் வாய்த்திருக்கிறது.
அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து கை காசை செலவழித்து
, "நட்டம்" விரும்பி ஏற்று ஊர் ஊராய் சென்று விழா எடுத்து கொண்டாடி நல்ல புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அதில் இரண்டு ஊர்களில் பேசுகிற வாய்ப்பை பெருந்தன்மையோடு தந்தார்கள்.
அதிலொன்று சென்னை கருணாநிதி நகரின் பிரதான சாலையில் முதல் தளம் முழுவதும் வியாபித்து நிற்கும் "டிஸ்கவரி புக் பேலஸில்" . மிகப் பெரிய தளம். கூட்டத்திற்காக புத்தகங்களை ஒதுக்கி வைத்து உதவிக் கொண்டிருந்தார்கள் புத்தகக் கடையின் உரிமையாளர் வேடியப்பனும் அவரது மொத்தக் குடும்பமும். சழுவாய் கசியக் கசிய யாரைப் பார்த்தும் பொக்கை வாய் புன்னகைத்து வரவேற்றாள் அவரது ஒரு வயது குழந்தை.
இத்தனை சின்ன வயதில் இத்தனை பெரிய முதலீட்டை ஒரு புத்தகக் கடையில் முடக்குவது சற்றேரக் குறைய தற்கொலைக்கு சமமான ஒன்றாகவே எனக்குப் பட்டது.
வேடியப்பனிடம் கேட்டேன்.
"யோசித்துப் பார்த்ததில் தற்கொலைக்கு புத்தகக் கடை கொஞ்சம் தேவலாம் எனப் பட்டது. அதுதான்."
எத்துனை மேன்மை. எத்தகைய மேன்மை. மோகனக் கிருஷ்ணனும் , சித்தனும் நட்டம் ஏற்று விழா எடுப்பதில் எனக்கான வரவு வேடியப்பன்.
விழா தொடங்கியது. பேசப் போனால் எதிரே ஐயா இ.பா. எத்தனை அழகு எத்தனை இளமை, அடடா, எத்தனை இனிமையான கம்பீரமான உடை ரசனை. அவரைப் பார்த்ததும் நான் எண்பதுகளிலும் அவர் இன்னு நாற்பதுகளிலுமாய் வாழ்வது புரிந்தது.
அவரது மேன்மைகளுள் ஆகப் பெரியதாய் நான் பார்ப்பது வேலு சரவணனை குழந்தைகள் வெளிக்கு மடை மாற்றம் செய்தது.
சித்தன் குழந்தைகளிடமிருந்து களவாடப் படும் குழந்தைத் தனம் குறித்தும், வெம்பிப் போன பக்குவத்தை குழந்தைகளின் மீது திணிப்பதோடு அதைக் கொண்டாடி ரசிக்கும் பெரியவர்களின் அயோகியத் தனம் குறித்தும் கொஞ்ச நாட்களாக மனதுக்குள் அழுது கொண்டிருந்தார். அதனால்தான் அன்றையக் கூட்டத்தில் "மழலைப் பக்குவம்" குறித்து பேசுவது என்று முடிவெடுத்தோம்.
குழந்தைகளிடமிருந்து கேள்விகளை அப்புறப் படுத்தி விட்டோம். அதற்கு ஒரே காரணம் அவர்களின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்பதுதான் எனப் பேசிக் கொண்டே வந்தவன் "எங்க பக்கத்து வீட்டுப் பையன் மறக்குறதுன்னா என்ன மாமாங்கறான். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் என்றேன். என் பேச்சில் இந்த இடம் சேர்த்து ஆறேழு முறை
இ.பா சிரித்தார். அது போதும்.
பேசிக் கொண்டிருக்கும் போது தொண்டை பழுது படவே தண்ணீர் பாட்டிலை மூடி திறந்து நீட்டுகிறார் தோழர். மோகனக்கிருஷ்ணன். எவ்வளவு பெரிய பாரம்பரியம். அப்ப அந்தக் காலத்திலேயே பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். அண்ணன் பத்திரிக்கை ஆசிரியர். இவர் பதிப்பகம் நடத்துகிறார். மூன்று பேரும் எழுத்தாளர்கள். மூன்று பேருமே எழுத்து கொண்டு சம்பாரிக்காதவர்கள்.
மோகனக்கிருஷ்ணன் நல்ல நூல்களாகத் தேடிப் பிடித்து வெளியிடுகிறார் என்பதுகூட அல்ல விஷயம். எனது நூல்களை நூலகங்களுக்கு தர மாட்டேன் என்ற அடத்தோடு கூடிய இவரது வைராக்கியத்தின் கம்பீரமே இங்கு கொள்ளத் தக்கது.
இதுவும் மேன்மைதான். ஆனாலும் தோழர் அவர்கள் தனது விரதத்தை கூடிய விரைவில் முரித்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடும் மிகுந்த அக்கறையோடும் வேண்டுகிறோம். நூலகங்களை மட்டுமே நம்பி சார்ந்து நிற்கும் சில நூறு ந்ல்ல ஆழமான படிப்பாளிகளையாவது எனக்குத் தெரியும்.
டஜன் கணக்கில் நூல்களை ஒரே மேடையில் வெளியிடுவது என்பது தற்போது மிகச் சாதாரன நிகழ்வுகளாய் போனது. தினமும் தினமும் புத்தக வெளியீடுகள். வரவேற்கத்தான் வேண்டும். ஆனால் வருகிற விளைச்சலில் எத்தனை தேறும்?
பணம் இருக்கிற காரணத்தால் "போல" படைப்புகளும் குப்பைகளும்கூட வெளி வந்து விடுவதும் , வாய்ப்பும் போதிய வழி முறைகளும் தெரியாத காரணத்தால் வீரியமிக்க படைப்புகள் கூட கை எழுத்துப் பிரதிகளாகவே செல்லரித்து, மக்கி மண்ணோடு மண்ணாய் அழிந்து போவதும் நடக்கிறது.
"உலகம் உன்றன் கைகளில்தான்
உருளுமோ?----ஏழை
உரிமை பெற்றால் இயற்கை என்ன
மருளுமோ?
கலகம் செய்யும் ஏற்றத்தாழ்வை
நீக்கடா---- பேதம்
முறைமயைத்
தூள் ஆக்கடா"
உருளுமோ?----ஏழை
உரிமை பெற்றால் இயற்கை என்ன
மருளுமோ?
கலகம் செய்யும் ஏற்றத்தாழ்வை
நீக்கடா---- பேதம்
முறைமயைத்
தூள் ஆக்கடா"
என்று கொதித்த தமிழ் ஒளிக்கே இதுதான் நடந்திருக்கிறது. நல்ல வேளையாக படாத பாடு பட்டு அய்யா செ. து. சஞ்சீவி அவர்கள் தமிழ் ஒளி நூல்களை தனது "புகழ் புத்தகாலயம்" மூலமாக கொண்டு வந்திருக்கிறார். அதற்காக தமிழ் வாசகர்கள் அவருக்கு நிறையவே கடன் பட்டிருக்கிறோம்.
கொள்ளுதலுக்கும், விமர்சனத்திற்குமான படைப்புகளை சகல வடிவங்களிலும் போதும் போதும் என்கிற அளவிற்கு எழுதித் தளியிருக்கிறார்.
சாகிற காலமட்டும் சரியான வெளிச்சமின்றியே இருந்திருக்கிறார்.
பாரதி தாசனுக்கும் இவருக்கும் நண்பராயிருந்ஹ ஒருவர் இவரது படைப்புகளை நூலாக்க வாங்கி சென்றிருக்கிறார். நூல் வெளி வரவே இல்லை. அதற்கு காரணமாக கையெழுத்துப் பிரதி தொலைந்து போனதாக தமி்ழ் ஒளியிடம் சொல்லியிருக்கிறார்.
அதே நண்பர் பிரிதொரு நண்பரிடம் பேசும் போது " இருபது வயதுகூட ஆகல. அதுக்குள்ள புத்தகங்கள் வந்துட்டா பிறகு நம்ம எப்படி மதிப்பான். அடான் போடல" என்று சொன்னதாகவும் தகவல்கள் உண்டு.
இன்னொரு பக்கம், தமிழ் ஒளி போக வேண்டிய உயரம் போகாததற்கு அவர்தான் காரணம். யாரோடும் ஒத்துப் போகாதவர் எங்இற கருத்தும் உள்ளது.
இன்றைக்கும் தமிழ் மண்ணில் கவனம் பெறாத தமிழ் ஒளிகள் ஏராளம்.
சமூகம் அவர்களை கண்டு கொள்ள வேண்டுமென்பதும் தமிழ் ஒளிகள் புரிதலோடு கொஞ்சம் ஒத்திசைய வேண்டும் என்பதும் நம் ஆசை.