எவ்வளவுதான் இனிமையாக ஒலித்தாலும் இப்போதெல்லாம் அலை பேசியின் அழைப்பொலியினை ரசிக்க முடிவதில்லை . எந்தக் கடன்காரனோ, எப்படித்திட்டப் போகிறானோ, என்ன சொல்லி சமாளிக்கப் போகிறோமோ என்று மனதுகிடந்து பதை பதைக்கிறது.
அழைப்பொலி கேட்டவுடன் எண்ணைப் பார்க்காமல் அலை பேசியை எடுத்து யாராவது பேசினால் ஒன்று அவன் கடனற்றவனாக இருக்க வேண்டும் அல்லது எதற்கும் பயப்படாதவனாக இருக்க வேண்டும்.
"அப்பா குளிக்கிறாங்க", "அப்பா செல்ல வச்சிட்டுப் போய்ட்டாங்க" இப்படி ஏதாவது சொல்லி கடன் காரர்களை சமாளிக்கப் பழக்கியிருக்கிறேன் பிள்ளைகளை.
"அம்மா, கடங்காரங்களுக்கு பயந்துகிட்டு அப்பா இருபத்தி நாலு மணி நேரமும் குளிச்சுகிட்டே இருக்கப் போறார், வேணாப் பாரேன்" பையனின் எள்ளல்இப்போதெல்லாம் எல்லையைத் தாண்டினாலும் இனிக்கவே செய்கிறது. ரசிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். கடன் ரசனையை மெருகு செய்திருக்கிறது.
பேப்பர்காரனுக்கு நான்கு மாத பாக்கி. காலையில் அவன் வரும் நேரம் பார்த்து டாய்லெட்டில் நுழைந்து கொள்வேன். இன்னும் மூன்றுதெருக்களாவது போக வேண்டும் அவன். எனவே எனக்காக அவனால் காத்திருக்கஇயலாது. " சாரக் கொஞ்சம் கவனிக்க சொல்லுங்க" என்றபடி ஓடி விடுவான். இன்றுகாலை வரை இதுதான் வாடிக்கை.
சனிக் கிழமைகளில் நான் வீட்டில்தான் இருப்பேன் என்பதை தெரிந்துகொண்டு அன்று மதியம் வீட்டிற்கு வந்து விட்டான். ஏறத்தாழ விடாக் கண்டனாய்மாறியிருந்தான். என்ன சொல்லியும் நகர மறுத்தான். " அக்காட்ட இருக்கும் கொஞ்சம் வாங்கிக் கொடுங்க சார். இல்லாட்டி மேல் வீட்டிலாச்சும்கொஞ்சம் கேட்டு வாங்கிக் கொடுங்க சார்." என்று நச்சிக் கொண்டே நகர மறுத்தான்.
இந்த நேரம் பார்த்து உதவுகிறோம் என்று தெரியாமலேயே சரியாய் உதவிக்கு வந்தான் பையன். " அப்பா அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுன்னு "ப்ளாஷ்"ஓடுது, வந்து பாரேன்.
"அடுத்த புதன் வந்து வாங்கிக்கப்பா" பட படவென்று சொல்லிட்டு "ப்ளாஷ்"பார்க்கிற சாக்கில் உள்ளே ஓடினேன். போனானோ இல்லை அங்கேயே நின்றுமுனகிக் கொண்டிருக்கிறானோ தெரியவில்லை.
அக விலைப்படி எட்டு சதவிதம் உயர்த்தப் பட்டிருப்பதாய் "ப்ளாஷ்"ஷில்ஓடிக் கொண்டிருந்தது. "டிஏ போட்டாச்சு. வந்து பாரேன் "விட்டு" உற்சாகத்தில் கத்தினேன்.
அக விலைப்படி எட்டு சதவிதம் உயர்த்தப் பட்டிருப்பதாய் "ப்ளாஷ்"ஷில்ஓடிக் கொண்டிருந்தது. "டிஏ போட்டாச்சு. வந்து பாரேன் "விட்டு" உற்சாகத்தில் கத்தினேன்.
"என்ன வந்து என்னத்துக்கு ஆகப் போகுது. வானத்தையே வளச்சுக் கொடுத்தாலும் அடகு வச்ச தாலிக் கொடிய மட்டும் திருப்பித் தரப் போறதில்ல. கட்டைல போர வரைக்கும் இந்தக் கவரிங் செயினதான் கட்டிக்கிட்டு மாரடிக்கணும்னு ஆயிடுச்சு. பாசிப் படர்ந்த மாதிரி செயின்பட்ட இடமெல்லாம் பச்சப் பச்சையா , வெயில் நாளைல ஒரே எரிச்சலும் அரிப்பும்தான்... எல்லாம் என் தலை எழுத்து"
கூப்பிடக் கூடாத நேரத்தில் "விட்டு" வைக் கூப்பிட்டால் இப்படிவாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் இது ஒன்றும் புதிதல்ல என்பதோடு இது மாதிரி வாங்கி கட்டிக் கொள்ளாத மத்திய தர புருஷன்மார்கள் இருப்பார்கள் எனில் ஒன்று அவர்களுக்கு வேறு வருமானம் இருக்கும் அல்லது "தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு" என்று சுறுங்கி போன ரகமாக இருக்க வேண்டும். விடுங்கள், என்ன சொல்லி என்ன,வாங்க வேண்டியதை வாங்கியாகி விட்டது.
அப்பொது பார்த்துதான் அலை பேசியில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த மகள் "செல்வ பாண்டியன் மாமா லைன்ல இருக்காங்க. எங்க போயிருக்கீங்கன்னு சொல்லட்டும்?" என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள் .
" வர வர குட்டிப் பிசாசுக்கு குசும்பு ஜாஸ்தியாயிடுச்சு" மகளின் நக்கலை ரசித்த படியே அவளிடமிருந்து அலை பேசியை பிடுங்கினேன்.
அவரது அழைப்புக்காகத்தான் காத்திருந்தேன். அப்பாவை ஒரு நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்துப் போக வேண்டி இருந்தது. ஒரு மாத காலமாகவேகொஞ்சம் கூடுதலான மன அழுத்தத்தோடு இருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செத்துப் போன எனது அம்மா உயிரோடு வந்திருப்பதாகவும் அப்பாவை தேடிக் கொண்டிருப்பதாகவும் அவரை ஒரு ஜோசியக் கும்பல் அவரை உசுப்பி விட்டு அவரது ஓய்வூதியத்தில் பெரும் பகுதியை காலி செய்திருந்தனர்.
அவரது அழைப்புக்காகத்தான் காத்திருந்தேன். அப்பாவை ஒரு நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்துப் போக வேண்டி இருந்தது. ஒரு மாத காலமாகவேகொஞ்சம் கூடுதலான மன அழுத்தத்தோடு இருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செத்துப் போன எனது அம்மா உயிரோடு வந்திருப்பதாகவும் அப்பாவை தேடிக் கொண்டிருப்பதாகவும் அவரை ஒரு ஜோசியக் கும்பல் அவரை உசுப்பி விட்டு அவரது ஓய்வூதியத்தில் பெரும் பகுதியை காலி செய்திருந்தனர்.
தம்பிதான் இதை முதலில் கண்டு பிடித்தான். அந்தக் கும்பலை விரட்டி விட்டு அப்பாவை மீட்டெடுத்து வருவதற்குள் அப்பாவின் மன நிலை மருத்துவர்தேவைப் படுமளவிற்கு பழுது பட்டிருந்தது.
அம்மா படத்திலிருந்த மாலையை கழற்றினார். ஏனென்று கேட்டால் " அவ உயிரோட வந்துட்டாடா" என்றார். சரியாகி விடும் என்றெண்ணி கவனிக்காமல் விட்டதன் விளைவை அனுபவிக்கத் தொடங்கியிருந்தோம்.
சாலையில் ஏதேனும் ஆட்டோ சத்தம் கேட்டுவிட்டால்கூட போதும் அம்மாவாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்போடு எட்டிப் பார்க்க ஆரம் பித்தவர், நாளாக நாளாக பேரனை அழைத்து "தம்பி, அப்பாயிதானான்னு பாரு. அவளாயிருந்தா பையக் கொஞ்சம் தூக்கிட்டு வாடா பாவம்" என்று பிதற்றவே ஆரம்பித்து விட்டார்.
"அப்பாயி எங்க தாத்தா வெளிய போச்சு ஆட்டோல வரதுக்கு. அது பாட்டுக்குதோசை சுட்டுட்டு இருக்கு. பொலம்பாம தூங்கு தாத்தா" சலித்துக்கொள்கிறான் பையன்.
"இவள சொல்லலடா. ஒங்க பெரிய அப்பாயிய சொன்னேன்"
"அப்பாயி தாத்தாவ வந்து என்னன்னு கேளு. செத்துப் போன அப்பாயி கல்லறையிலிருந்து எழுந்து வருதாம். நீ கட்டிக்கிட்டதும் லூசு பெத்துப்போட்டதும் லூசு அப்பாயி"
" எம் மவன இன்னொருதரம் லூசுன்னு சொன்ன அப்படியே கொமட்லயே குத்திப் புடுவேன் ஆமா"
"மகன சொன்னதும் அப்படியே பொத்துக்கிட்டு வருது பார்டா ஒங்க அப்பாயிக்கு. தங்கமாமே, அப்படி கிப்படி தங்கமா இருந்தாதான் பரவாயில்லையே அப்படியே தூக்கிட்டுப் போய் அந்த அறுபது கிலோவையும் அடகு வச்சுட்டு அந்த அருமத் தங்கம் வாங்கிவச்சிருக்க கடனையெல்லாம் அடச்சிருக்கலாமே"
"ஏம்மா அடகெல்லாம் வச்சுகிட்டு. பேசாம வித்துட்டே செட்டிலாயிருக்கலாமே."பையன் முடிக்கவும் அம்மா உட்பட எல்லோரும் சத்தமாய் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இப்படித்தான் அப்பாவை வார ஆரம்பித்து என்னில் வந்து முடியும் ஒவ்வொரு முறையும்.
இப்படித்தான் அப்பாவை வார ஆரம்பித்து என்னில் வந்து முடியும் ஒவ்வொரு முறையும்.
செல்வ பாண்டியன் மருத்துவத் துறையில் இருப்பதால் அவரிடம் ஆலோசனை கேட்டிருந்தேன். அவருக்குத் தெரிந்த மருத்துவரிடம் நேரம் வாங்கிக் கொண்டுதெரிவிப்பதாக சொல்லியிருந்தார். அநேகமாக அதற்காகத்தானிருக்கும்.
அதற்கேதான்.
தான் மருத்துவர்.முருகன் கிளினிக்கில் இருப்பதாகவும், கிளினிக்கில் தற்போது கூட்டமே இல்லை என்றும் , ஆகவே இயலுமெனில் அப்பாவை உடனே அழைத்து வரும்படியும் சொன்னார்.
பி.பி செக் அப்பிற்கு என்று பொய் சொல்லி அப்பாவை அழைத்துக் கொண்டு கிளினிக்கிற்கு போனேன்.
கூட்டமில்லாத காரணத்தால் காத்திருக்கத் தேவையில்லாமல் போனது. மருத்துவரிடம் ஏற்கனவே செல்வபாண்டியன் எல்லாவற்றையும் சொல்லியிருந்தகாரணத்தால் மருத்துவரிடம் பேசவும் தேவையற்றுப் போனது.
ஒரு சன்னமான புன்னகையோடு அப்பாவை வரவேற்றார் மருத்துவர்.
"உங்க பிறந்த நாள் என்னங்க சார்?" என்ற எளிய கேள்வியோடுதான் மருத்துவர் தொடங்கினார்.
அப்பாவின் தெளிவும் தமிழ்த் தேசிய அரசியலும் மருத்துவரோடு ஒத்திசைந்து போகவே இருவரும் நண்பர்களாய் மாறி நிறைய பேசினார்கள். நானும் செல்வபாண்டியனும் பார்வையாளர்களாய் மாறிப் போனோம்.
இறுதியாய் அந்தக் கேள்வியைக் கேட்டார்.
"மரித்தவர்கள் உயிரோடு வர இயலும் என நம்புகிறீர்களா?"
"நிச்சயமாய் இல்லை" என்ற அப்பா "ஆனா என்னோட வொய்ப்பை மீண்டும் உயிரோடு பார்த்ததாய் சொல்கிறார்கள்" என்றார்.
மருத்துவர் எதுவுமே பேசவில்லை. " பண்டியன், சாரை பக்கத்து ரூமுக்கு கூட்டிட்டு போய் பி.பி செக் பண்னுங்க" என்றவர் ஒரு புன்னகையோடு அப்பாவைவழி அனுப்பி வைத்தார்.
எழுந்த என்னை அமரச் செய்தார்.
" ஒன்னும் பயப்பட வேண்டாம். ஆறு மாசத்துல எல்லாம் சரி ஆகிவிடும். தொடர்ந்து மாத்திரைகளை கொடுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைகூட்டிட்டு வாங்க. அதிகமா தூங்கினாலோ, அல்லது சரியா தூங்கலைன்னாலோ உடனே கூட்டிட்டு வந்திடுங்க."
ஒரு புன்னகையோடும் ஏராளமான நம்பிக்கையோடும் அப்பாவை அழைத்துக் கொண்டு வீடு வந்தேன்
அம்மாவிடமும் விட்டுவிடமும் விவரங்களை சொல்லி விட்டு வாங்கி வந்த வண்ண வண்ண மாத்திரைகளை டப்பாக்களில் கொட்டிக் கொண்டிருந்தேன். ஓடி வந்த மகள் கேட்டாள :
"இந்த மாத்திரை எதுக்குப்பா?"
"இது தாத்தாவுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்?"
"இது?" அடுத்த மாத்திரையைக் காட்டினாள்.
"இது தாத்தாவுக்கு மன அமைதியையும் நிம்மதியையும் கொடுக்கும்"
" அப்படின்னா நீயும் சித்தப்பாவும் தாத்தாவுக்கு என்னத்ததான் கொடுப்பீங்க?"
நன்றி: கல்கி ( 16.05.2010)
அன்பு எட்வின்..அவர்களே..
ReplyDeleteநிறுத்தி நிதானமாக இந்தப் பதிவைப் படிக்கலாம் என்று தொடங்கினே. எங்கும்
நிற்க முடியாத வாறு கண்கள் பாய்ந்து கொண்டே சென்றது.... விறு
விறுப்பு....
//அப்படின்னா நீயும் சித்தப்பாவும் தாத்தாவுக்கு என்னததான் கொடுப்பீங்க?//
என்ற வினாவில் கண்கள் வியந்து நின்றது... எதைக் கூற வருகிறீர்கள்.. எப்படி முடிக்கிறீர்கள் யூகிக்க முடியா சஸ்பென்ஸ்..
ஆமாம்...உங்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கிறது கதைக்கு இப்படியெல்லாம் கரு.....
இன்னும் மனதில் அதிர்வுடன்....
வாழ்த்து சொல்ல நான் பெரிய ஆளாக இல்லையே என்ற ஏக்கத்துடன்...
தங்கள் நட்பு கிடைத்த மகிழ்வுடன்.....
என்றும் அன்புடன்...
இந்த நட்புக்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்
ReplyDelete