Thursday, July 18, 2024

கவிதை 78

 

மகளுக்கு
நன்னடத்தை சான்றிதழ் வாங்குவதற்காக
அவள் படித்த பள்ளிக்கு
அவளோடு சென்றிருந்தேன்
தலைமை சகோதரி
பள்ளி குறித்தும்
குழந்தைகள் குறித்தும்
உரையாடிக் கொண்டிருந்தபோது
திடீரென ஒரு தாய்
ஆறாம் வகுப்பு படிக்கும்
தன் மகளோடு வருகிறார்
அவரைப் பார்த்ததும்
அருட்சகோதரி கலங்குகிறார்
அந்தத் தாயும் கலங்குகிறார்
அந்தக் குழந்தைக்கு உடம்புக்கு ஏதோ போல
என்னவென்று புரியவில்ல
உளறிக்கொண்டே இருக்கும்
ஓட்டை வாய் என்பாள் கலை
அது உண்மைதான் போல
ஏதும் அறியாமலே
இது பெரிய நோயே அல்ல
மருந்து வந்துடுச்சும்மா என்கிறேன்
அந்த தாய் சிரிக்கிறார்
சிரித்து காலமாயிற்றுபோல
விடைபெறுகிறார்
தைரியமா போங்க தாயி
கும்பிட்டபடி நகர்கிறார்
என்ன நோய்னு தெரியுமாப்பா
வரும்போது
மருத்துவ மகள் கேட்கிறாள்
தெரியாது
அடிச்சு உடற
நோயைக் கண்டுபிடிக்கவும்
மருந்தளித்து குணப்படுத்தவும்தான்
அறிவும் படிப்பும் தேவை
ஏதுமற்ற தாயின் கண்ணீரைத் துடைக்க
ஈரத்தைத் தவிர ஏதுமற்றவனின்
ஆறேழு சொற்கள் போதும்


Wednesday, July 17, 2024

விக்கிரவாண்டி தரும் பாடம் இதுதான்

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பெருவெற்றியைப் பெற்றிருக்கிறது
இந்தத் தேர்தலில் அதிமுக பங்கேற்கவில்லை
அதிமுகவிற்கென்று அந்தத் தொகுதியில் நிச்சயம் 50,000 வாக்குகளாவது இருக்கும்
அவை எங்கு போயின?
அதிமுக ஊழியன் ஒருபோதும் திமுகவிற்கு ஓட்டு போடமாட்டான்
அதிமுக என்பது திமுக எதிர்ப்பில் வளர்வது
திமுக ஒழிக, கலைஞர் ஒழிக, உதயசூரியன் ஒழிக என்பவை அதிமுக கொள்கை என்பதே
இப்போது வேண்டுமானால், ஸ்டாலின் ஒழிக, உதயநிதி ஒழிக ஆகிய இரண்டையும் கொள்கையில் சேர்க்கலாம்
என்றெல்லாம் சொல்லப்படுவது வழக்கம்
இது உண்மையும்கூட
இப்போது பாமக பெற்றிருக்கும் வாக்குகளைப் பார்த்தால்
உதயசூரியன் ஒழிக என்று சொல்லும் அதிமுக ஊழியனே திமுகவிற்கு வாக்களித்திருப்பது புரிகிறது
பாஜககாரர்கள் சொல்கிறார்கள்,
அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்தால் திமுக காலியாகி இருக்கும்
அய்யோ அய்யோ
பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்தால் அதிமுக தோழன் திமுகவிற்கு வாக்களிப்பான்
பாஜக வெறுப்பு என்பது திமுக வெறுப்பைவிட அதிகமாகி இருக்கிறது அதிமுக தோழனுக்கு
விக்கிரவாண்டி தரும் பாடம் இதுதான்

Sunday, July 14, 2024

கவிதை 77

 
அந்த கிறுக்கனை
பத்து வருடங்களாகப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
பார்ப்பவர்களிடமெல்லாம்
எதையாவது உளறிக்கொண்டே இருக்கிறான்
அந்த பள்ளியின் விளையாட்டு விழா
மைதானத்தை ஒட்டி நின்று
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என் அருகே வந்து நின்று
அவனும் வேடிக்கைப் பார்க்கிறான்
பிரம்பை நீட்டியவாறும்
தரையில் தட்டியவாறும்
காற்றில் சுழற்றியவாறும்
விசிலடித்த படியுமாக
குழந்தைகளை வரிசையாக நடக்க வைக்க
படாத பாடு படுகிறார் விளையாட்டு ஆசிரியர்
பக்கத்தில் நின்ற இவனோ
குழந்தைகள்
கோணல் மாணலாக நடந்தாலும்
வரிசைதானே என்கிறான்
மூன்று
குழந்தைகள்
கோணல் மாணலாக நடந்தாலும்
அது வரிசைதான்
என்பது ஒன்று
அவன் கிறுக்கனல்ல
என்பது இரண்டு
அவன் உளறவில்லை
பேசிக்கொண்டிருக்கிறான்
என்பது மூன்றுSaturday, July 13, 2024

கவிதை 76

 

காதலுக்கு
கண் இல்லை
காதலித்தால்
தலையே இல்லை

கவிதை 75

 

ஏதும் தோன்றவில்லை என்று
தோன்றுவதால்
ஏதும் தோன்றவில்லை என்று
சொல்ல தோன்றவில்லை

கவிதை 74

 

வர சொல்லேன் என்னை
மீண்டும் ஒருமுறை
“ புறப்பட வேண்டாம் “ என்று
மீண்டும் ஒருமுறை
தடுப்பதற்கேனும்

Friday, July 12, 2024

கவிதை 73

 


கொஞ்சமா
கொஞ்சறாங்க மிஸ்
என்பதைத் தவிர
பள்ளிக்கு
மட்டம் போடுவதற்கான
எந்தக் காரணமும் இல்லை
கிரிஷிடம்

Wednesday, July 10, 2024

கவிதை 72

 

நாளை வருவாயா?
என்ற உன்
உசிரின் அழைப்பு கேட்கிறதா
என்று முந்தாநாள் கேட்டாயே
காற்றில் உன் கண்ணொதுங்கிய
துரும்பாகவேனும்
நாளை
நான் வந்தேனா?

கவிதை 71

 

கனவில் வந்த நான்
காதலை சொன்னதாய் சொல்கிறாய்
வந்திருப்பேன்தான்
சொல்லி இருப்பேன்தான்
நீ
இப்படியாக
சொல்லிவிட்டாய்

கவிதை 70

 


அப்பத்தா வீடு
சாமி தாத்தா வீடு
டாடி தாத்தா வீடு
அங்கிள் தாத்தா வீடு என்று
நான்கு வீடுகள் கிரிஷ் சாருக்கு
இதில் அப்பத்தா வீடு என்பது
உங்களைக் குழப்பப் போவதில்லை
அவனை
சாமி என்றழைப்பதால்
நான் சாமி தாத்தா
அவன் அம்மா
டாடி என்றழைப்பதால்
அவர் டாடி தாத்தா
அவள்
அங்கிள் என அழைப்பதால்
அவர் அங்கிள் தாத்தா
அப்பத்தா வீட்டைக் காலி செய்துவிட்டு
குடி போன
புது வீட்டிற்குத்தான்
அங்கிள் தாத்தா வீடு என்று
பெயர் வைத்திருக்கிறான்
தாத்தாக்கள் வீடுகள் எல்லாம்
போர் என்றும்
அப்பத்தா வீடுதான் அழகென்றும்
அங்குதான் போக வேண்டுமென்றும்
அடம் பிடிக்கவே
காட்டி வரலாமென்று
தூக்கிப் போனால்
அது
தாத்தா வீட்டைக் காலி செய்து வந்திருந்த
ஒரு குழந்தையின்
அவ்வா வீடாகி இருந்தது
அவ்வா வீடென்றும்
அப்பத்தா வீடென்றும்
சண்டையிட்டுக் கொண்டிருந்த
குழந்தைகள்
கொஞ்ச நேரத்தில் ஒன்றாய்
விளையாட ஆரம்பித்தபோது
வெங்காயம் உரிப்பதில்
அவ்வாவிற்கு
அப்பத்தா உதவ ஆரம்பித்திருந்தார்
வீடும் அவ்வப்பத்தா வீடாகியிருந்தது
விட்டுவிடுவோம்
அப்படியே இருக்கட்டும்

கவிதை 69

 

சுவரில்
மோன்வி வரைந்த பூச்செடியில்
யானையையோ
வேறெதையோ
பார்ப்பவர்களால்
அந்தச் செடியிலிருந்து
அவள்
ஒரு பூவைப் பறித்ததையோ
அதைத்
தலையில் சூடிக்கொள்ள
எத்தனித்தபோது
அது கீழே விழுந்து
காணமல் போனற்காக
அவள் அழுவது கண்டோ
சிரிக்கத்தான் முடியும்
அவர்களை
உறவு துறந்த கையோடு
சோபாவிற்கடியில் கிடந்த
அந்தப் பூவை எடுத்து
அவள் தலையில் வைக்கிறேன்
அப்படிச் சிரிக்கிறாள்
பூ அப்படித்தான் சிரிக்கும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...