உங்கள் பெயர் என்ன?” என்று எப்போதாவது அவர்கள் உங்களைக் கேட்டிருக்கிறார்களா?. ஆம் எனில் நீங்கள் அவர்களால் நேர்மையாக பதிலளிக்க முடியாத கேள்வியை அவர்களைக் கேட்டிருக்கிறீர்கள் என்று பொருள். இல்லை எனில் அப்படி ஒரு கேள்வியை நீங்கள் அவர்களை இதுவரை கேட்டதில்லை என்று பொருள்.
வழக்கமாக இந்தக் கேள்வியை அவர்கள்
செய்தியாளார்களிடம்தான் வைப்பார்கள். இப்போது தம்மைக் கேள்வி கேட்ட ஒரு ஆசிரியரிடத்தில் அவரது பள்ளியில் வைத்தே கேட்டிருக்கிறார்கள். அவருடன் பணிபுரியும் அத்துணை நண்பர்கள் முன்னிலையிலும் அவரிடம் படிக்கும் குழந்தைகள் முன்னிலையிலும்தான் ஒருவர் கேட்டிருக்கிறார். துயரம் என்னவெனில் “எங்கு வந்து யாரைக் கேட்கிறாய்? என்று அவர்களில் எவரும் அவரை நோக்கி ஒரு முனகலைக்கூட வைக்கவில்லை.
பெயரைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதில் என்ன பிழை இருக்கிறது என்று சிலர்
கேட்கக்கூடும். பெயரைத் தெரிந்துகொள்வதற்கான கேள்வி அல்ல இது. நம்முடைய சமூக அடையாளத்தைத் தெரிந்துகொள்வதற்கான அவர்களது கூர்மையான முயற்சி இது.
ஒரு நேர்காணலில் சிக்கலான ஒரு கேள்வியை ஒரு பிள்ளை திரு சீமானைக் கேட்டபோது அவர் இதே கேள்வியை அந்தப் பிள்ளையை நோக்கிக் கேட்டார். இஸ்லாமியப் பெயராக இருக்கவே, “அப்ப, அப்படித்தான் கேட்ப நீ” என்கிறார்.
இந்த பதிலே அசிங்கமானது. அதைக் கேட்ட தொனியும் அப்போது அவர் வெளிப்படுத்திய உடல்மொழியும் அதைவிடவும் அசிங்கமானது.
நீ இஸ்லாமியனா எனில் நீ அந்நியன், அப்படித்தான் கேட்பாய் என்பது அதன் பொருள். தொனியும் உடல்மொழியும் அசிங்கம் எனில் அதன்மூலம் அவர்கள் சொல்ல வருவது இந்திய இறையாண்மைக்கு ஆபத்தானது.
இதேதான் சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்திருக்கிறது.. மகாவிஷ்ணு என்பவர் அந்தப் பள்ளிக் குழந்தைகளின் இறுக்கத்தைக் களைந்து அவர்களை உற்சாகப்படுத்தும் முகத்தான் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு RSS மற்றும் பாஜகவின் பின்புலம் இருப்பது தெரிகிறது. அவர் மீதான காவல்துறை நடவடிக்கைகளை முன்வைத்து அவர்களது நடவடிக்கைகள் இதை உறுதி
செய்கின்றன. அவரை “ஆன்மீக உரையாளர்” என்று அழைக்கிறார்கள். 09.09.2024 நாளிட்ட “விடுதலை”கூட அவரை ஆன்மீக உரையாளர் என்றே அழைக்கிறது.
நாம் இதிலிருந்து வேறுபடுகிறோம். நாம் ஆன்மீகவாதிகள் இல்லை. ஆனால் ஆன்மீகத்தின்மீது வெறுப்போடு இருப்பவர்களும் இல்லை. எது ஆன்மீகம் என்பதில்தான் நமக்கும் அவர்களுக்கும் இடைவெளி இருக்கிறது.
மனிதனை மனிதனோடு இணைப்பது ஆன்மீகம் என்கிறோம். அவர்கள் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே வெறுப்பை விதைக்கிறார்கள். ஆகவேதான்
அவர்களை ஆன்மீகவாதிகள் என்று நம்மால் ஒருபோதும் ஏற்பதற்கு இயலவில்லை.மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே வெறுப்பை விதைப்பது நல்ல ”நம்பிக்கை”கூட இல்லை.
மகாவிஷ்ணு என்ன உரையாற்றுகிறார்?
இந்தியாவிற்கு
வந்த ஆங்கிலேயர்கள் இங்கு இருந்த ஓலைச் சுவடிகளை எல்லாம் தீ வைத்து அழித்து
விட்டதாகக் கூறுகிறார். அவர்கள் அழித்த ஓலைச்சுவடிகளில் நிறைய மந்திரங்கள் இருந்ததாகக் கூறுகிறார்.
அப்படி அழிக்கப்பட்ட மந்திரங்கள் இப்போது இருந்திருக்குமானால் அவற்றில் ஒரு மந்திரத்தைச் சொன்னால் நம்மால் பறக்கமுடியும் என்றும்,
இன்னொரு மந்திரத்தைச் சொன்னால் சொன்ன மாத்திரத்தில் அக்கினி மழை பெய்யும் என்றும்,
நமது இந்தப் பிறவி என்பது நமது முற்பிறப்பில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் விளைவு என்றும் கூறி இருக்கிறார்.
இப்படியாக அவர் அடுக்கிக்கொண்டே சென்றிருக்கிறார். அவர் சொன்னவை அறிவியல் பூர்வமாக இல்லை என்பதைக்கூட
விட்டுவிடலாம். “நம்பிக்கை”க்குள்கூட அடங்காத மூட நம்பிக்கைகளாக அவை
இருப்பதையும், போக, அவரது இந்த உரை
கிறிஸ்தவர்கள்
மீதான வெறுப்பினை குழந்தைகளிடம் கொண்டு வரும் என்பதையும்
உணர்ந்த அந்தப் பள்ளியின் தமிழாசிரியர் திரு சங்கர் அவர்கள் அவரது உரைக்கு எதிராக் குரல் கொடுக்கிறார்.
அரசுப் பள்ளியில் இதுமாதிரி பேசக்கூடாது என்கிறார் ஆசிரியர்
சங்கர்.
அதற்கு விஷ்ணு கூறியவற்றில் மூன்றை உற்று நோக்குவது அவசியம்,
1)
அந்தத் தமிழாசிரியரின் பெயரைக் கேட்டிருக்கிருக்கிறார் விஷ்ணு.
2)
திரு சங்கரது பார்வைக் குறைபாடு என்பது அவரது போன ஜென்மத்து கர்மவினை என்றிருக்கிறார்
3)
தான் பேசியவற்றை எல்லாம் பள்ளிகள் தாமே சொல்லிக் கொடுத்திருக்கும் என்றால் தான் பள்ளிகளுக்கு வரவேண்டிய தேவையே இருந்திருக்காது என்றிருக்கிறார்
ஆக, அவரது அந்த உரையை எந்த விதத்திலும் தற்செயலானது என்று கொண்டுவிட இயலாது. திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட உரை அது.
சங்கரது பெயர் ஜான் என்பதாகவோ அல்லது
இஸ்மாயில் என்பதாகவோ இருந்திருந்தால் அவரை தேசத்துரோகி என்கிற நிலைக்கு நகர்த்தி இருப்பார் விஷ்ணு. அது முடியாமல் போனதும் அவரது உடல் குறைபாட்டை அவரது முற்பிறவியின் பாவத்தின் கொடை என்று கூறுகிறார்.
இதை எல்லாம் நீங்கள் சொல்லிக் கொடுத்திருந்தால் எனக்கு இங்கு வரவேண்டிய அவசியமே இருந்திருக்காது என்கிறார்.
தமிழ்நாட்டில்
பள்ளிகளில் ஆன்மீகத்தின் பெயரில் மூடநம்பிக்கைகளை சொல்லித் தருவதில்லை. இது இவர்களை உறுத்தி இருக்கிறது. ஆகவேதான் தான் உள்நுழைவதாக விஷ்ணு கூறுகிறார். எனில், இதற்குப் பின்னால் ஒரு திட்டமிடல் இருக்கிறது.
ஆன்மீகம் என்றால் என்னவென்று இவர்களுக்கு இரண்டு திருவாசகப் பாடல்கள் மூலம் சொல்லலாம் என்று தோன்றுகிறது.
”நமச்சிவாய
வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகிநின்று அ@ண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க”
இதுதான் தமிழ் கையளிக்கும் ஆன்மீகம். எல்லா
மதங்களும் தம் கடவுள் மட்டுமே உண்மை என்று பிரச்சாரம் செய்யவும் அப்படியான பிரச்சாரத்தின் மூலம் சங்கடங்களைக் கொண்டுவரவும் முனைகிறபோது தமிழ் வேறுவிதமாக சகலரையும் இணைக்க முயற்சிக்கிறது.
“ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க”
அநேக பெயர்களில், அநேக வடிவங்களில் இருக்கும் ஒரே இறைவனே உன்னை வணங்குகிறேன் என்கிறது தமிழ் ஆன்மீகம்.
இது, இதுதான் ஆன்மீகம்.
இதை சொல்லிக் கொடுத்து ஒற்றுமையை வளர்த்தால் கொண்டாடலாம்.
”தென்னாடுடைய
சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
இதுவும் திருவாசகம்தான்.
தென்னாட்டில் நாங்கள் சிவனே என்று அன்போடு அழைத்து வணங்கும் உலகின் அனைத்து மக்களுக்குமான இறைவனே உன்னை வணங்கிப் போற்றுகிறோம் என்பதுதானே இதன் பொருள். உலகில் ஒவ்வொரு பிரிவினரும் உன்னை ஒவ்வொரு பெயரால் அழைக்கிறார்கள். நாங்கள் உன்னை சிவனே என்று அழைக்கிறோம் எங்கள் இறைவனே. அவர்களுக்கு நீ ஏசு, இன்னும் சிலருக்கு நீ அல்லா, இன்னும் சிலருக்கு நீ விஷ்ணு, எல்லோருக்கும் நீ இறைவன். இதை சொல்லுங்கள், ஏன் சண்டை வரப்போகிறது.
இவைதான் இறை நம்பிக்கை இல்லாத நாத்திக மனிதனையும் முகம் சுளிக்காது புன்னகைக்க வைக்கும் தமிழ் ஆன்மீகம்.
வள்ளுவர் இன்னும் ஒரு படி மேலே போகிறார்,
”வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
இந்த வாழ்க்கையை செம்மையாக, உத்தமமாக வாழ்ந்தால் அவன் வானுறையும் தெய்வமாக்க் கொள்ளப்படுவான் என்கிறார்.
இது ஒருவகையான ஆன்மீகம்.
இந்த நேரத்து அவசியத் தேவையாக நாம் கருதுவது எது ஆன்மீகம் என்கிற ஒரு உரையாடல்
தீக்கதிர்
12.09.2024
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்