Wednesday, October 31, 2018

சீன நிலா

சீனாவின் “செயற்கை நிலா”  குறித்து  கொஞ்சம் உரையாட இருக்கிறது.

”தூரத்து ஊரின் தெருவிளக்கு” என்று நிலவை பாரதிதாசன் எழுதியுள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இல்லை என்றாலும் அதனால் ஒன்றும் பாதகம் இல்லை. இதை யார் எழுதியது என்று யாரேனும் கூறினால் அதை சேர்த்துக் கொள்ளலாம்.

அப்படி யாரும் இதுவரை எழுதவில்லை என்றாலும் பாதகம் இல்லை. நான் இப்போது அதை எழுதியாகக்கூட இருக்கட்டும்

நிலா எல்லோருக்கும் பிடித்தமானதாகவே எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. அதுவும் தமிழ் மண்ணில் நிலாவிற்கு எப்போதும் உன்னதமான ஒரு இடம் இருக்கிறது.

எமது அன்னைகள் எமக்கு நிலாவைக் காட்டிதான் சோறு ஊட்டினார்கள்.

இடுப்பின் இடதுபுறம் பிள்ளை, பிள்ளையை வளைத்துப் பிடித்திருக்கும் கை விரல்கள் பிள்ளைக்கான அமுதுக்கிண்ணியை பிடித்திருக்க, வலதுகையின் ஆட்காட்டி விரல் தவிர்த்து மற்ற நான்கு விரல்களும் பாப்பா அல்லது தம்பிக்கான ஒரு கவளம் உணவமுதை கவ்வியபடி சுட்டு விரலால்   பிள்ளைக்கு நிலாவைக் காட்டி ரசனையில் பிள்ளை விழும் சந்தர்ப்பத்தில் லாவகமாக ஊட்டிவிட்டு உதடு துடைத்துவிடும் காட்சி எங்களின் அடையாளம்.

என் தாத்தனும் பாட்டியும் தங்களது குழந்தைப் பருவத்தில் இப்படித்தான் உணவெடுத்தார்கள். அவர்கள் எம் பெற்றோருக்கும் அவர்கள் எமக்கும் நாங்கள் எங்கள் பிள்ளைகட்கும் இப்படித்தான் ஊட்டினோம்.

”நிலா இங்கே வா வா” என்று அழைத்துப் பார்த்தோம். நிலவிற்குப் போனவர்கள் மொழியில் அதற்கான கனவு பதியப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ் சினிமாப் பாடலில் அந்தக் கனவை நாம் பதிந்து வைத்திருக்கிறோம்.

“நிலவே உன்னை அறிவேன்
அங்கே நேரே ஓர்நாள்
வருவேன்”

என்று பதிந்து வைத்தோம்.

வெட்டவெளி, இருட்டு, வானத்தை ஒருவன் அன்னாந்து பார்க்கிறான். உயரத்தில் வெகு தூரத்தில் ஒரு விளக்கு கணக்காய் நிலவு காய்கிறது. அது தூரத்து ஊரின் தெருவிளக்காய் நம் கவிஞனுக்குப் படுகிறது.

ஆக நிலவை தெருவிளக்காய் நம் கவிஞன் பார்த்திருக்கிறான். இதை சீன விஞ்ஞானி படித்தானோ என்னமோ தெரியவில்லை. தமிழ்க்கவி கண்ட கனவை நனவாக்கும் முயற்சியில் வெற்றியின் வெகு கிட்டத்திற்குப் போய்விட்டான்.

சீனாவில் பேரதிக எண்ணிக்கையில் தெருவிளக்குகள் உள்ளன. அவை இரவு வேளைகளில் தொடர்ந்து எரிகின்றன. இதனால் அரசுக்கான மின் செலவு எகிறிக்கொண்டு போகிறது. எப்படியாவது இந்த செலவினைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சீன அரசு முடிவெடுத்த்து. செலவைக் குறைக்க வேண்டும் என்ற முடிவு தெருக்களை இருட்டுக்குள் தள்ளிவிடக்கூடாது என்றும் அது கருதியது.

இதற்கான மாற்று ஏற்பாட்டை ஆய்வு செய்யுமாறு அது “டியான் பூ நியூ ஏரியா சயின்ஸ் சொசைட்டி” என்ற அமைப்பைக் கேட்டுக் கொண்டது.

இந்த நிறுவனம் அரசு தம்மைக் கேட்டுக்கொண்டபடி ஒரு மாற்று நோக்கி தீவிரமாக ஆராயத் தொடங்கியது. அவர்களது ஆராய்ச்சி அவர்களை செயற்கை நிலாவை நோக்கி இட்டுத் தள்ளியது.

சூரிய ஒளியை உள்வாங்கி வெளிக்கக்கும் ஒரு ரிஃப்லெக்டர் போன்ற அமைப்புதான் நிலா என்ற உண்மை அவர்களை அதுநோக்கியே சிந்திக்க வைத்தது. அவர்களும் அதை நோக்கியே சிந்தித்தார்கள்.

சூரியனிலிருந்து வெப்பத்தை எடுத்து மின்சாரம் தயாரித்து அதிலிருந்து விளக்குகளை எரியவிடுவதைவிட சூரியனிலிருந்து ஒளியை எடுத்து பயன்படுத்துவது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

அதுகுறித்தே ஆராய்ந்தார்கள். இப்போது அவர்களது ஆய்வு முடிவுகளை அமல்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். வானத்தில் செயற்கை நிலவை இருத்துவது. அந்த செயற்கை நிலவின்மேல் விழும் சூரிய ஒளியை சேமித்து இரவில் எடுத்துக் கொள்வது என்கிற முடிவில் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.

பகலில் உள்வாங்கும் சூரிய ஒளியை இரவில் தெருக்களில் இறைக்கப் போகிறார்கள். தேவைப்படாத நேரத்தில் அணைத்து வைக்கவும் முடியும் என்கிறார்கள்.

ஒளியை சேமிக்க முடியும் என்பது எனக்குப் புதியதாய் இருக்கிறது.

2020 ஆம் ஆண்டு  நிலாவைவிட எட்டு மடங்கு ஒளியைத் தரக்கூடிய முதல் செயற்கை நிலாவை சீனா ”ஜிசாங் செயற்கைகோள் ஏவுத் தளத்தில்” இருந்து ஏவ உத்தேசித்திருக்கிற தகவலை 21.10.2018 நாளிட்ட ”தமிழ் இந்து” கூறுகிறது.

இது வெற்றி பெற்றால் அடுத்தடுத்து செயற்கை நிலாக்களை ஏவுவதற்கு சீனா திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

கம்பம் தேவை இல்லை, விளக்குகள் தேவை இல்லை, கம்பிகள் அறுந்து உயிர்ப்பலிகள் ஏற்படுமோ என்ற கவலை தேவை இல்லை.

சீனா தயாரித்துக் கொண்டிருக்கும் செயற்கை நிலா 50 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு ஒளி தரும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் 170 மில்லியன் அமெரிக்க டாலரை மிச்சப்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள். அதாவது 1700 லட்சம் அமெரிக்க டாலர்கள் மிச்சமாகும் என்று கணக்கிடுகிறார்கள்.

ஒரு டாலர் என்பது இந்திய மதிப்பில்  கிட்டத்தட்ட 80 ரூபாய். எனில், 50 சதுர கிலோமீட்டர் அளவிற்கான செயற்கை நிலா பயன்பாடு ஒரு லட்சத்து முப்பத்தி ஆறாயிரம் லட்சம் ரூபாய் மிச்சமாகும்.

எனில் மொத்த சீனாவும் இந்தப் பயன்பாட்டிற்குள் வரும்போது எவ்வளவு மிச்சமாகும். அவ்வளவு தொகையையும் ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் அந்தச் சமூகம் எவ்வளவு முன்னேறும்.

நினைக்க நினைக்க கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது,

என்றேனும் ஒரு நாள் நம் பிள்ளை செயற்கை சூரியனை ஏவக்கூடும்.

       
#சாமங்கவிந்து 34 நிமிடங்கள்
30.10.2018

Monday, October 29, 2018

தன்னை ஆண்டவரே என்று அழைக்கும் ஒரு அருட்சகோதரியையே....

மூன்று நான்கு விஷயங்களை இன்று சொல்ல இருக்கிறது. அவற்றை திரும்பத் திரும்ப ஜனங்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய அவசியம் இருப்பதாகப் படுகிறது. நான்கையும் இன்றே முடியுமா என்று தெரியவில்லை. முடியாத பட்சத்தில் மிச்சத்தை நாளை வைத்துவிடுவோம்.
அவ்வப்போது நாம் பரபரப்பதற்கு ஏதேனும் நடந்துகொண்டே இருக்கின்றன. நாமும் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்குத் தாவி அதில் கரைந்து தீவிரமாகி விடுகிறோம். இந்த மாற்றம் நிகழும்போதே பழையதை மறந்துவிடுகிறோம்.
புதிதில் கரைந்து தீவிரமாவதும் மட்டும் அல்ல புதிதில் கரையும்போதே பழையதை மறந்து கடப்பதும்தான் மாற்றத்தின் கூறாகவும் உள்ளது.
மக்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் பழையதை மறப்பதும் ஒன்றும் குற்றம் அல்ல. அவர்கள் மறக்கிறார்கள் என்பது அந்த விஷயத்தின் நியாயத்தில் இருந்து விலகிப் போகிறார்கள் என்று பொருள் அல்ல. வழக்கமாக புதிய ஒன்று வரும்போது அதிலேயே ஈர்க்கப்படுவது என்பது இயல்புதான்.
அவர்கள் மறக்க மறக்க அவர்கள் மறந்தவற்றை அவர்களுக்கு ஞாபகப் படுத்துவது மக்கள்மேல் அக்கறை உள்ளவர்களின் கடமை.
அந்தவகையில் ஆகச் சமீபத்தில் மறந்துபோனதும் நாம் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியதும் பாதிரியார் குரியாகோஸ் அவர்களது மர்ம மரணம் குறித்தே ஆகும்.
கேரளாவில் ஒரு கன்னிகாஸ்திரி, தான் பிஷப் பிராங்கோ முளய் கல்லினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக புகார் கூறியதும் ஒட்டுமொத்த இந்தியாவும் பற்றிக்கொண்டது. பார்க்கிற இடமெல்லாம் இதுவே பேச்சாக இருந்தது.
இதில் ஆணாதிக்கம் இருந்தது மட்டுமல்ல பதவி ஆதிக்கமும் இருந்தது. அந்த வகையில் இது இரட்டைக் குற்றமாகிறது.
அந்த பிஷப்பிற்கு எதிராக ரகசிய சாட்சி அளித்திருந்தவர் பாதிரியார் குரியாகோஸ் அவர்கள். அவர் பிஷப்பிற்கு எதிராக சாட்சி சொன்னதுமே திருச்சபை அவரை ஜலந்தருக்கு மாற்றியது. இதுவே சாட்சியை மிரட்டுவதுதான்.
இதற்காகவேகூட திருச்சபைமீது வழக்கு போடலாம்.
இதுகுறித்தும்கூட பரபரப்பாகவே இந்தச் சமூகம் இயங்கியது. குறையற்று இயங்கியது. பாதிக்கப்பட்ட அந்த சகோதரிக்காக கொதித்தெழுந்து குரல் கொடுத்தது.
அடுத்தடுத்து விஷயங்கள் வரவர மக்களும் அவைநோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள்.
சிலநாட்களுக்கு முன்னால் ஜலந்தரில் தனது அறையில் பாதிரியார் குரியாகோஸ் அவர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று 23.10.2018 நாளிட்ட தீக்கதிர் சொல்கிறது.
தனது அண்ணனது மரணத்தில் தமக்கு சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி ஜோஸ் கூறியுள்ளார். தனது அண்ணன் உயிரோடு இருந்தால் பிஷப்பிற்கு எதிரான சாட்சியங்கள் வலுப்பெறக்கூடும் என்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் சந்தேகப்படுகிறார்.
அவர் இதுகுறித்து ஆலப்புழா காவல்துறையின் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்துள்ளார்.
பொதுவாக பிஷப்பை அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் “ஆண்டவர்” என்றே அழைப்பார்கள். கன்னிகாஸ்திரிகளும் பிஷப்பை “ஆண்டவர்” என்றே அழைப்பார்கள். நிச்சயமாக பாதிக்கப்பட்ட அந்த சகோதரியும் அந்த பிஷப்பை :”ஆண்டவர்” என்றே அழைத்திருக்கக் கூடும்.
அப்படிப்பட்ட உயர்வான இடத்தில் இருந்த அந்த பிஷப் மூன்று குற்றங்களை செய்திருக்கிறார்
1) தன்னை ஆண்டவரே என்று அழைக்கும் ஒரு அருட்சகோதரியையே வல்லுறவு கொண்டிருக்கிறார்
2) தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கு எதிராக சாட்சி சொன்னவரை பணியிடமாற்றம் செய்திருக்கிறார்
3) பாதிரியார் குரியாகோஸ் அவர்களது மரணம் ஒரு கொலைமூலம் நிகழ்ந்திருக்குமானால் அதில் அவருக்கும் பங்கிருக்கும்
இவ்வளவும் நடந்திருக்கிறது என்பதை அதை மறந்திருக்கும் மக்களுக்கு நினைவூட்டுவதுகூட என் வேலை என்று நினைத்தேன்.
அவ்வளவுதான்.
*
தேதி சரியாக நினைவில் இல்லை. அநேகமாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று என்று கருதுகிறேன். இது தவறாக இருக்கும் பட்சத்தில் அதற்காக வருத்தம் தெரிவிக்கவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. எனவே செப்டம்பர் மூன்று என்றே கொள்வோம்.
அன்று தூத்துக்குடி நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் திருமதி தமிழிசை அவர்கள் பயணிக்கிறார். அதே விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் சோஃபியா என்ற பெண்ணும் பயணித்திருக்கிறார்.
விமானம் தரை இறங்குகிறது.
விமான நிலையத்தில் உள்ள காவலர்களிடம் திருமதி தமிழிசை சோஃபியாமீது புகார் தருகிறார்.
”பாசிச பாஜக ஒழிக” என்று கோஷமிட்டார் என்பதுதான் சோஃபியாமீதான புகார்.
அந்தப் புகாரை அவர் மறுக்கவில்லை. ”ஆமாம் கூறினேன்தான், இனியும் கூறுவேன்தான்” என்று தைரியமாக கூறியிருக்கிறார் சோஃபியா.
சோஃபியா கைது செய்யப்படுகிறார்.
இதைக் காவலர்கள் விசாரித்தார்களா என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஒருக்கால் திருமதி தமிழிசைமீது யாரேனும் புகார் அளித்தால் அவரை சோஃபியாவைக் கைது செய்ததுபோல் கைது செய்திருப்பார்களா என்றால் இல்லை என்று உறுதியாகக் கூறமுடியும்.
விமானத்தில் இருந்து இறங்கிய தனது மகளை திருமதி தமிழிசையும் அவரது சகாக்கள் சிலரும் மறித்து அங்குள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துக்கொண்டுபோய் கைது செய்ய வைத்தனர் என்று புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சோஃபியாவின் தந்தை டாக்டர் சாமி புகார் அளித்திருக்கிறார்.
அந்தப் புகார் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கவே அவர் நீதிமன்றத்திற்குப் போகிறார்.
தூத்துக்குடி மூன்றாவது நடுவர் நீதிமன்றம் அந்தப் புகாரை விசாரித்து அதன் விவரங்களை தமக்கு நவம்பர் 20 குள் தமக்குத் தரவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது என்ற செய்தியை 26.10.2018 தமிழ் இந்து கூறுகிறது.
விமானத்தில் இருந்து இறங்கிய ஒரு பெண்ணை ஏறத்தாழ பத்துபேர் பலாத்காரமாக அது காவல்நிலையமாக என்றாலும் அழைத்துக் கொண்டு போகலாம் என்பது எந்த விதத்தில் நியாயம்.
எதிராகப் பேசினால் பலாத்காரமாக அடக்குவார்கள், எந்த நியாயமும் இல்லாத பூமியாகப் போனது என்று நொந்துபோய் இந்த சம்பவத்தில் இருந்து கடந்து போனவர்களின் தகவலுக்காக இது.
#சாமங்கவிய சரியாக ஒரு மணி நேரமிருக்கிறது
28.10.2018

Saturday, October 20, 2018

கோட்சே ஒரு கோட்பாட்டின் கருவி

தந்தை பெரியாரையும் தந்தை அம்பேத்கார் அவர்களையும் எப்பாடு பட்டேனும் இந்த மண்ணை விட்டும் மக்களிடம் இருந்தும் அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதையும் இதையும் எதையாவதையும் செய்துகொண்டே இருக்கிறது ஒரு கும்பல்.
அவர்களது சிலைகளை உடைக்கிறார்கள், கேவலமாகப் பேசுகிறார்கள். அவர்களது சித்தாந்தங்களை பின்பற்றும் தோழர்களை அச்சுறுத்துகிறார்கள், தாக்குகிறார்கள், அவர்கள்மீது வழக்குகளைப் போடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கருப்பைப் பார்த்தாலே அஞ்சுகிறார்கள். அதன் விளைவாக கருப்பு சட்டை அணிந்தவர்களைக் கைது செய்யுமளவுகூடத் துணிகிறார்கள்.
திமிறின் உச்சத்திற்கே போனவராய் பாஜகவின் தேசியச் செயலாளர் திரு H.ராஜா அவர்கள் தந்தை பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்றார். அதையும் இந்தப் பெரியார் மண் பொறுமையோடு சகித்து செரித்தது.
கருப்புச் சட்டை அணியக்கூடாது என்று அவர்கள் அதிகாரப்பூர்வமற்ற வகையில் உத்தரவு போட்ட பிறகு தெருவில் கருப்புச் சட்டைகளின் எண்ணிக்கை அதிகமானது. அதுவரை கருப்புச் சட்டைகளே இல்லாதிருந்த என்னிடம் இப்போது நான்கு கருப்பு சட்டைகள்.
இவ்வளவு அடாவடிகளை செய்தபிறகும் இவர்களை காயம்படாமல் இந்தச் சமூகம் பாதுகாக்கிறதே. அது எப்படி?
இவர்களைக் காயப்படுத்துவதால் இந்தப் பிரச்சினை மாறிவிடாது என்பதை அந்தக் கிழவன் இந்தச் சமூகத்திற்கு புரிய வைத்துவிட்டு போயிருக்கிறார். புரியவைத்து என்றால் சும்மா இல்லை இவர்களைக் காயப்படுத்துவதால் பிரச்சினை தீர்ந்துவிடாது என்பதை இப்படி ஒரு சூழல் வந்தபோது சரியாக அதை எதிர்கொண்டு புரிய வைத்திருக்கிறார்.
அதனால்தான் தமிழ்ச்சமூகம் இவர்களது தொடர் கடுஞ்செயல்களை மென்று செரிக்கிறதே அல்லாமல் இவர்கள் நினைப்பதுபோல் இவர்களைப் பார்த்து பயந்தெல்லாம் இல்லை.
1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முப்பதாம் நாளன்று கோட்சேவால் காந்தி சுட்டு கொல்லப் படுகிறார்.
மராத்தியப் பார்ப்பனர் ஒருவரால் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி காட்டுத் தீயாய் தேசமெங்கும் பரவுகிறது. வட மாநிலங்களில் உள்ள பார்ப்பனர் அல்லாத மக்கள் கொதித்தெழுகிறார்கள். கண்ணில் படும் பார்ப்பனரை எல்லாம் தாக்கத் தொடங்குகிறார்கள். பார்ப்பனர்கள் வசிக்கும் அக்ரஹாரங்கள் தரைமட்டமாக்கப் படுகின்றன. பார்ப்பனர்களுக்கு எதிரான வகுப்புக் கலவரத்தை அடக்க இயலாமல் தான் தவித்துப் போனதாக அப்போதைய மராட்டிய மாநில உள்துறை அமைச்சர் திரு மொராஜி தேசாய் அவர்கள் பிற்காலத்தில் எழுதியிருக்கிறார்.
ஆனால் தமிழ் நாட்டில் அப்படிப்பட்ட கலவரங்கள் ஏதும் இல்லை. திரு H.ராஜாவின் உறவினர்கள் வடமாநிலங்களிலே கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்கு அபயம் தேடி அலைந்த காலகட்டத்தில் அவரது குடும்பம் தமிழ்நாட்டில் இயல்புநிலை மாறாமல் வாழ முடிந்தது.
மற்ற மாநிலங்களைப் போல் அல்லாது தமிழ்நாட்டில்தான் “பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம்” வலுவாக இருந்தது. மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில்தான் பார்ப்பனர்களுக்கு எதிரான கருத்தியக்கம் வலுவாகவும் தொடரச்சியாகவும் நடைபெற்றது.
அப்படி இருக்கும்போது மற்ற வடமாநிலங்களில் இருந்த அளவுக்கு என்றுகூட சொல்ல இயலாது பார்ப்பனர்களுக்கு கொஞ்சம்கூட பாதிப்பே தமிழகத்தில் இல்லாததற்கு எது காரணம்?
பார்ப்பனர்களுக்கு எதிராக மிகக் கடுமையான இயக்கம் கட்டிய தந்தை பெரியார்தான் தமிழகத்தில் பார்ப்பனர்கள் அப்போது பாதுகாப்பாக வாழ முடிந்ததற்கு காரணம். இதில் முரணெதுவும் இல்லை.
31.01.1948 அன்று திருச்சி வானொலி நிலையம் தந்தை பெரியாரிடம் அஞ்சலி உரை ஒன்றை கேட்டு ஒலிப்ரப்புகிறது. அந்த உரையும் அதற்கு முந்தைய அறிக்கையும் அவரது தொடர் அறிவுரைகளுமே இந்தத் தமிழ் மண் காந்தியின் மரணத்தின் பொருட்டு பதட்டமையாமல் இருந்ததற்கான முக்கியமான காரணம்.
நன்னிலம் அருகேயுள்ள சன்னாநல்லூரில் தந்தை பெரியார் பேசுகிறார். அப்போது இளைஞராயிருந்த கலைஞர் காந்தியார் கொலை குறித்து கொந்தளித்துப் பேசுகிறார். இறுதியாக உரையாற்ற வந்த பெரியார் கலைஞரையும் அவரொத்த இளைய சமூகத்தையும் ஆற்றுப்படுத்தும் விதமாக பேசுகிறார்.
“சுட்டதற்காக நாம் துப்பாக்கி மீது ஆத்திரப் படலாமா?” என்று கேட்டார் பெரியார். காந்தியின் கொலை ஒட்டிய நாட்களில் அவர் சுற்றி சுழன்று இப்படிப் பேசி அமைதிப் படுத்தினார்.
“ஒருவன் குற்றம் செய்தால் அவனும் அவனது குடும்பத்தாரும் அவனது குலத்தினரும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இந்துமதத்தின் பழங்கால நீதியை கோட்சே விசயத்திலும் கைகொள்ள வேண்டும் என்று நாம் நம்பவோ விரும்பவோ இல்லை.” அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் தொடர்கிறார்
”அது நியாயமும் இல்லை”
கோட்சே செய்த கொலைக்காக அவனையோ அவனது குடும்பத்தையோ வம்சத்தையோ தாக்குவதோ அழிப்பதோ நியாயம் அல்ல என்பதை புரிய வைக்கிறார்.
காந்தி சுடப்பட்டதற்கு அந்தத் துப்பாக்கி எப்படி ஒரு கருவியோ அதுபோலவே கோட்சேயும் ஒரு கருவிதான் என்று கூறுகிறார்.
ஒரு கோட்பாடு கோட்சேவை இயக்கியது. கோட்சே அந்தத் துப்பாக்கியை இயக்கினான். அந்தத் துப்பாக்கியை உடைத்துப் போடுவதால் கோட்சே உட்கார்ந்து விடமாட்டான். அவனது கைக்கு இன்னொரு புது துப்பாக்கி வந்துவிடும். கோட்சேவைக் கொன்று போடுவதால் அந்தக் கோட்பாடு வாளாய் இருந்துவிடாது. அதன் கைகளுக்குள் இன்னொரு கோட்சே அகப்படுவான். எனவே இந்தக் கொடுமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமெனில் அந்தக் கோட்பாட்டோடு சமர் செய்ய வேண்டும் என்று அவர் தெளிய வைத்ததால்தான் காந்தியின் மறைவை ஒட்டி எந்த விதமான அசம்பாவிதமும் இங்கு நிகழவில்லை.
அதைப் புரிந்துகொண்டதால்தான் தமிழ் மக்கள் H.ராஜா போன்றவர்கள் எது செய்தாலும் சகிக்கிறார்கள். ராஜா அவர்களை எதிர்கொள்வதால் பிரச்சினை தீர்ந்துவிடாது. ராஜா இல்லாவிட்டால் இன்னொரு நபரை அவர்களது கோட்பாடு அடுத்த நொடியே தயாரித்து விடும். எனவே ராஜாவின் கோட்பாட்டோடுதான் நாம் சமர் செய்ய வேண்டும் என்பது நம் மக்களுக்குத் தெரியும்.
அவர்கள் நமது அடையாளங்களோடு மோதுகிறார்கள்.
நாம் அவர்களது கோட்பாடுகளோடே சமர் செய்வோம்.
#சாமங்கவிந்து முப்பது நிமிடங்கள்
19.10.2018

Friday, October 19, 2018

எந்த ஒரு ஆளுநரும் மக்கள் ஆளுநராக முடியாது....

09.01.2018 அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நேருக்கு நேர்” நிகழ்ச்சியினை இணையத்தில் இன்று பார்த்தேன். தம்பி கரு.பழநியப்பன்தான் Karu Palaniappan சிறப்பு விருந்தினர்.
மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பையப் பையக் கைப்பற்றுகிறது என்று பழநியப்பன் அழுத்துகிறார். மைய அரசு மெல்ல மெல்ல மாண்புமிகு எடப்பாடி பழநிச்சாமி அவர்களின் உரிமைகளையும் வேலைகளையும் ஆளுநர் மூலமாக கைப்பற்றத் தொடங்கி இருப்பதாக பழநியப்பன் கூறுகிறார்.
இப்படியாக நேர்காணல் மெல்ல மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மாநில அரசின் செயல்பாடுகளுக்குள் அத்துமீறி தலையிடுவதைக் குறித்து நகர்கிறது.
அவரும் சேர்ந்துதனே மாநில அரசு. இன்னும் சொல்லப்போனால் ஆளுநர்தானே மாநில அரசின் தலைவர். அப்படி என்றால் அவரது தலையீடு என்பது நியாயமானதுதானே என்பதுமாதிரி புன்னகை மாறாமல் கேட்ட நெறியாளாரிடம் புன்னகை மாறாமலே பழநியப்பன் சொல்கிறார்,
“நியாயம் இல்லை”
பிறகு என்னதான் அவர் செய்வதாம்?
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பிரச்சினை வந்தால் அதை எண்ணி முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு அறிக்கை ஏதும் கேட்டால் தரவேண்டும்.
கேட்பவருக்கும் சொல்பவர்க்கும் மட்டுமல்ல நிகழ்ச்சியைப் பார்க்கும் நமக்கும் சிரிப்பு வருகிறது.
”அப்படி என்றால் மற்ற காலங்களில் அவர் சும்மா உட்கார்ந்து இருக்க வேண்டியதுதானா?. ஆளுநர் என்பவர் ஆளுநர் மாளிகைக்கு வருபவர்களோடு தேநீர் பருகிக் கொள்வதோடு நின்றுகொள்ள வேண்டியதுதானா?”
சட்டென தெறிக்கிறார் பழநியப்பன்,
கொஞ்சமும் சலனமே இல்லாமல் பதில் வருகிறது,
“ஆமாம்”
அந்த நேர்காணலில் மரியாதைக்குரிய அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் கிட்டத்தட்ட மத்திய அரசின் முகவராகவே மாறியிருப்பதை நிறுவுகிறார் அவர். அதற்கு மூன்று விஷயங்களை கூறுகிறார்
1) மத்திய அரசின் விரும்பியதால் திரு பாண்டியராஜன் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களோடு வெளியேறுகிறார்
2) மீண்டும் மைய அரசு விரும்பியபடி அதிமுகவின் இரண்டு பிரிவுகளும் இணைந்தபோது அவற்றின் ஒரு பிரிவில் இருந்து பாண்டியராஜன் மட்டுமே அமைச்சராகிறார்
3) இப்போது ஆளுநரை வைத்து மாநில அரசின் உரிமைகளை மைய அரசு கைப்பற்றும் போது திரு பாண்டியராஜன் ஆளுநரை “மக்கள் ஆளுநர்” என்கிறார்
இந்த மூன்று விஷயங்களும் தமிழகத்தில் விவாதிக்கப் படாதவை. விவாதிக்கப் படாதவை என்பதைவிட இவை இன்னமும் அதிமுகவிற்கு எதிர் அரசியல் புரிபவர்களாலேயே உரிய முறையில் புரிந்துகொள்ளப் படாதவை
இதை இன்னும் வெளிப்படையாகப் புரிந்து கொள்வதெனில் “அதிமுக அமைச்சரவையில் இருக்கக்கூடிய பிஜேபி பிரதிநிதி பாண்டியராஜன்”. அவர் பிஜேபியிலும் இருந்தவர் என்பது இந்த அய்யத்தை இன்னும் இன்னுமாய் வலுவாக்குகிறது. இதுகுறித்து நமக்கென்ன? அதுகுறித்து கவலைப்பட வேண்டிய எடப்பாடி அவர்களே கொஞ்சமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே என்ற கூற்றும்கூட உண்மைதான்.
அவருக்கு அதிமுகவை காப்பாற்ற வேண்டும், மாநில உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. அவருக்குத் தெரியும், தமது எல்லை எதுவரை என்பது. ஆகவே இருக்கும் வரைக்கும் முடிந்த வரைக்கும் பார்த்துக் கொள்வது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார்,
ஆனால் பொது மக்களாகிய நமக்கு இந்த மண்ணும் இந்த மண்ணின் விழுமியங்களும் மிகவும் முக்கியமானவை. இத்தகைய முதல்வரையும் அவரது சகாக்களையும் வேண்டிய மட்டும் “பார்த்துக் கொள்ள” அனுமதித்துவிட்டு தங்களது மதவெறி பாசிசத்தை இந்த மண்ணில் அவர்கள் தெளிக்க முயற்சிப்பதை பொது மக்கள் பார்த்துக் கொண்டு வாளாயிருந்துவிட முடியாது.
எந்த ஒரு ஆளுநரும் மக்கள் ஆளுநராக முடியாது என்கிறார் பழநியப்பன்
மக்கள் இயக்குநராக பழநியப்பன் இருக்கிறபோது மக்கள் ஆளுநர் இருக்கக்கூடாதா?
ஒரு நொடிகூட இடைவெளி விடாமல் இடைமறிக்கிறார் பழநியப்பன்,
முடியாது, முடியவே முடியாது.
”எனக்கு மக்கள் பணம் தருகிறார்கள். அவர்கள் தரும் பணத்திற்காக நான் இயக்குகிறேன். ஆகவே நான் அவர்களுடைய இயக்குநன். மக்கள் இயக்குநன். ஆனால் ஆளுநர் ஆளுநரானதற்கும் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை”
சரி,
இவர்கள் ”பார்த்துக் கொண்டே” இருப்பார்கள்.
அவர்கள் இவர்களைப் பார்த்துக்கொள்ள விட்டு தங்களது சாம்ராஜ்யத்திற்கு கால்கோள் செய்ய பாடு படுகிறார்கள்.
நாமென்ன செய்யப் போகிறோம்?
#சாமங்கவிய 23 நிமிடங்கள்
18.10.2018

Thursday, October 18, 2018

இல்லாட்டி அவங்க மது மிஸ்ட சொல்லி கொட்ட சொல்லுவாராம்

இந்தத் தெருவுல...
இந்த ஊருல...
இந்த வட்டாரத்துல....
இந்த மாநிலத்துல....
இந்த தேசத்துல...
ஏன் இந்த உலகத்துல 


எங்க லேஷந்த் சார் மாதிரி யாரால இவ்வளவு அழகா "அ" எழுத முடியும்?


இவ்வளவு அழகா "1" எழுத முடியும்
எல்லாரும் ஒழுங்கா "V GOOD" போடனுமாம்
இல்லாட்டி அவங்க மது மிஸ்ட சொல்லி கொட்ட சொல்லுவாராம்
லேஷந்த் சார் சொன்னத சொல்லிவிட்டேன்
அப்புறம் உங்க இஷ்டம்

“வரி விதிப்பின் அரசன் இந்தியா”

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? என்று செய்தியாளர்கள் கேட்டபோது

"அமெரிக்க அதிபரை மகிழ்விக்கத்தான்" என்று ட்ரம்ப் சொன்னதாக 03.10.2018 ஆம் நாளிட்ட "தமிழ் இந்து" கூறுகிறது

ஒரு தனிமனிதரை மகிழ்விப்பதற்காக ஒரு தேசத்தை அதன் தலைவர் ஒரு ஒப்பந்தத்திற்குள் கொண்டு சேர்க்கிறார் என்றால் அவர் தனது தேசத்தை விற்கத் துணிகிறார் என்று அர்த்தம்

இந்த இடத்தில் இந்தியா என்பதை இந்தியப் பிரதமர் என்று கொள்வதும் சரிதான்.

இன்னும் கொஞ்சம் சரியாய் சொல்வதெனில் அப்படி சொல்வதுதான் சரி.

எனில்,, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதில் இந்தியா ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? என்பதை அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியப் பிரதமர் ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளார்? என்றுதான் கொள்ள வேண்டும்.

வழக்கமாக ஒரு நாடு மற்ற நாடுகளோடு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள ஆசைப்படுவது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் அமெரிக்காவோடு இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவது என்பதும் இயல்பானதுதானே. பிறகு ஏன் அப்படி ஒரு கேள்வியை அந்த செய்தியாளர் திரு ட்ரம்ப் அவர்களிடம் கேட்கவேண்டிய தேவை ஏன் வந்தது?

பொதுவாகவே இதுமாதிரிக் கேள்விகளோடு “இவ்வளவுக்குப் பிறகும்” என்ற இரண்டு வார்த்தைகள் மறைந்திருக்கும்.

கடை வைத்திருக்கும் ஒருவருக்கு வர்த்தகமே நோக்கம். தம்மிடம் இருக்கும் பொருட்களை கொண்டு சேர்க்க அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் யாரோடு வேணுமானாலும் பேசுவார். அவர் ஏன் அவரிடம் வியாபாரம் செய்ய ஆர்வமாயிருக்கிறார்? என்று யாரும் கேட்பதில்லை. உண்மையை சொல்லப் போனால் யாரையாவது அவர் தவிர்ப்பார் என்று சொன்னால் வியாபாரத்துல யாரு என்னன்னு எல்லாம் பார்க்கக் கூடாது என்றே அவருக்கு அறிவுரை கூறுவார்கள்.

”அவங்கிட்ட போயி எதுக்கு இந்த ஆளு வியாபாரம் செய்ய அலையறான்? என்று யாரேனும் கேட்டால்,

1) அவன் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசுபவனாக இருக்க வேண்டும்
2) வாங்கிய பொருளுக்கு உரிய விலையை உரிய நேரத்தில் தராமல் இழுத்தடிப்பவனாக இருக்கும்

இவை இங்கும் பொருந்துமா?

சத்தியமாய் பொருந்தும்.

இந்த உரையாடலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் “வரி விதிப்பின் அரசன் இந்தியா” என்று அவர் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக அளவில் இறக்குமதி விதிப்பதாக அவர் கூறியிருந்தார்.

”ஹார்லி டேவிட்சன்” என்பது அமெரிக்காவின் மிகப் பிரபலமான மோட்டார் நிறுவனம். அதன் உரிமையாளர் அரசியல் செல்வாக்கும் உள்ளவர். அவரது நிறுவனத்தில் இருந்தும் மோட்டார் சைக்கிள்களை இந்தியா இறக்குமதி செய்கிறது.

அதற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியின் அளவு அதிகமாக இருப்பதாக ட்ரம்ப்பிற்கு புகார் செல்கிறது. அதன்பொருட்டுதான் அவர் மிகக் கோவமாக “வரி விதிப்பின் அரசன் இந்தியா” என்று கூறினார்.

அவர் இது விஷயத்தில் மிகவும் வெளிப்படையாகவே உரையாடினார்.

மோட்டர் சைக்கிள்மீது 100 சதவிகித வரி என்பது மோசடியானது என்பது மாதிரி பேசிய அவர் விலை அதிகமாக இருந்தால் மக்கள் எப்படி அதை வாங்குவார்கள்? மக்கள் வாங்கவில்லை என்றால் அதன் உரிமையாளர் நட்டமடைய மாட்டாரா என்பதே அவரது ஆதங்கம்.

இந்தியப் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களோடு நேரிடையாகவே இதுகுறித்தும் அவர் பேசி இருக்கிறார். திரு மோடி அவர்களும் வரியைக் கணிசமாக்க் குறைத்திருக்கிறார். ஆனாலும் இன்னமும் வரி அதிகமாய்த்தான் உள்ளது என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்

இந்த இடத்தில் மூன்று விஷயங்களைப் பார்க்க வேண்டும்

1) அமெரிக்கப் பொருட்களுக்கு விலையைக் குறைப்பதன் மூலம் ட்ரம்ப்பின் நண்பர்களான அமெரிக்க முதலாளிகளுக்கு நம் பிரதமர் நட்டம் வராமல் பார்த்துக் கொள்கிறார்
2) பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை ஏற்றுவதன் மூலமும் ரஃபேல், நிலக்கரி உள்ளிட்ட விஷயங்கள் மூலமும் உள்ளூரில் உள்ள தனது முதலாளி நண்பர்கள் பெரு லாபம் அடையவும் நடவடிக்கை எடுக்கிறார்.
3) இவ்வளவு வக்கனையாகப் பேசும் ட்ரம்ப் தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிலும் குறிப்பாக சீனப் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதித்திருப்பதாக 17.06.2018 நாளிட்ட “விடுதலை” கூறுகிறது

குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் இரும்பிற்கே இத்தனை கூடுதலாக வரி விதிக்கப் பட்டிருப்பதாக விடுதலை கூறுகிறது. இறக்குமதி செய்யப்படும் இரும்பின் விலை கூடினால் இரும்பினால் செய்யப்படும் பொருட்களின் விலை கூடும். அதை எப்படி அமெரிக்க மக்கள் வாங்கு இயலும் என்று யோசிக்க மறுப்பவர் ட்ரம்ப்.

ட்ரம்ப்பிற்கு அக்கறை அமெரிக்க மக்கள் மீது அல்ல. அவரது அக்கறை அவரது நண்பர்களான அமெரிக்க முதலாளிகள்மீது.

இங்கும் நமது பிரதமரின் அக்கறை தமது மக்கள் மீது அல்ல. அவரது முதாலாளி நண்பர்கள் மீதே அவர் அல்லும் பகலும் அக்கறையோடு இருக்கிறார்.

மோசமான நாடான இந்தியா அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்தம் செய்யத் துடிக்கிறதே கவனம் இருக்கிறதா? என்பதல்ல அந்த செய்தியாளரின் கேள்வி.

அமெரிக்க இவ்வளவு மோசமான நாடு என்று தெரிந்தும் ஏன் இந்தியா இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? என்பதே அவரது கேள்வியின் நுட்பமான பொருள்

எனது கவலை எல்லாம்

இத்தனை நிபந்தனைகளுக்குப் பிறகும் அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்?

பெரு முதலாளிகளின் பிடியில் இருந்து எப்போது விடுபட்டு மக்களைப் பற்றி எப்போது சிந்திப்பீர்கள்?

என்றெல்லாம் எப்போது நமது செய்தியாளர்கள் திரு மோடி அவர்களை நேருக்கு நேராய் கேட்பார்கள்

#சாமங்கவிய 42 நிமிடங்கள்
17.10.2018

Tuesday, October 16, 2018

வலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்

"Teachers who are reluctant to express or scared of expressing their views on issues that affect the society they are part of shouldn't call themselves educators. A society that is gifted with critical educators is a blessed society"
என்று இன்றைய “THE HINDU” வில் எழுதியிருக்கிறார் முனைவர் ஆல்பர்ட். இதைத்தான் நாமும் கரடியாய் கத்திக்கொண்டிருக்கிறோம் பேசத் தெரிந்த காலம் முதலாய்.
என்ன செய்வது? நாம் தமிழில் கத்துகிறோம். அவர் ஆங்கிலத்தில் கத்துகிறார். ஆயிரம் இருந்தாலும் ஆங்கிலத்திற்கு மவுசு அதிகம்தானே. இதையே டிசைன் டிசைனாக கத்திய நாமே அவர் ஆங்கிலத்தில் கத்துவதை மேற்கோள் காட்டுகிறோமே.
ஆங்கிலத்தில் அல்ல எந்த மொழியில் ஒருவர் இதைப் பேசியிருந்தாலும் இதை எடுத்தாளவே செய்வோம்.
தங்களது சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்களைப் பற்றி பேச மறுக்கிற அல்லது பேசப் பயப்படுகிற எந்த ஒரு ஆசிரியரும் தன்னை கல்வியாளர் என்று அழைத்துக் கொள்கிற அருகதையை இழக்கிறார்கள் என்கிறார் ஆல்பர்ட்.
நானெல்லாம் என்னை ஆசிரியர் என்றுகூட கொள்வதில்லை. உண்மையை சொல்வதெனில் நானொரு பள்ளிக்கூடத்து ஊழியன், அவ்வளவே.
நாம் மாதாமாதம் கட்டிய போட்ட சீட்டுப் பணத்தை எடுப்பதற்கு GST கேட்கிறார்களா?
எவ்வளவோ தள்ளி எடுக்கிறோம், கூடக் கொஞ்சம் தள்ளி எடுத்துட்டோம்னு போயிடுவோம். தெரியாமலா சொன்னாங்க எவ்வளவுதான் எண்ணெய தடவிகிட்டு உழுந்து பொறண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும்னு. என்ன எழுதியிருக்கோ அதுதான் வரும் என்று ஒதுங்கிப் போகிற ஆசிரியர்களை நமக்குத் தெரியும்.
இதெல்லாம் நியாயமாப்பா? என்று கேட்டால், வேற என்ன செய்யச் சொல்ற? இதுக்காகப் போயி அவங்கிட்ட மல்லுக்கு நிக்கச் சொல்றியா? புடிக்கலையா இனிமேல் சீட்டுப் போடாம இருந்துக்கனும். படிச்ச நாம வம்புக்கு போறதெல்லாம் அழகல்ல.
தன்னைப் பாதிக்கிற விஷயத்திற்கே எதிர்வினையாற்ற மறுக்கிறவர் எப்படி அய்யப்பன் ஆலயத்திற்குள் பெண்கள் போகலாமா வேண்டாமா என்பது குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு வினையாற்றப் போகிறார்.
பெட்ரோல் விலை தினமும் தினமும் தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கிறதே என்றால் முடியலைனா சைக்கிளில் போகலாம்பா. காசும் மிச்சம். போக, உடம்பிற்கும் நல்லது என்கிற ஆசிரியர்களை எனக்குத் தெரியும்.
ரஃபேலில் ஊழல் பார்த்தாயா என்றால் அதனால நமக்கென்ன நஷ்டம் என்கிற ஆசிரியர்கள் நிறைய.
நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? நம்மக் கடிக்காம போனால் சரி என்கிற ஆசிரியர்கள் வலம் போகும் நரியும் நம்மை கடிக்கும், இடம் போகும் நரியும் நம்மைக் கடிக்கும் என்பதை முதலில் உணர வேண்டும்.
எது நடந்தா நமக்கென்ன எட்வின்? நமக்கு வர சம்பளத்துல பைசாவ குறைக்க ஒருத்தனாலயும் முடியாது. நம்ம வேலை எதுவோ அத மட்டும் பார்ப்போம் என்று ஒவ்வொருநாளும் என்னை நெறிப்படுத்த முயற்சி செய்து தோற்றுப்போகிற நண்பர்கள் ஏராளம்.
”படிச்ச நாம வம்புக்குப் போறதெல்லாம் அழகல்ல” என்கிறார்களே. எனில் எதுதான் அழகு?.
“நம்ம வேலை எதுவோ அதை மட்டும் பார்ப்போம்” என்கிறார்களே, அவர்களையும் உள்ளடக்கிய நம்ம வேலைதான் எது?
மேலே கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் ஒரே விடைதான்.
பாதிப்பு நமக்கு மட்டுமல்ல. அது எல்லோருக்குமானது என்கிறபோது அதற்கான எதிர்வினையை யாராவது பார்த்துக் கொள்வார்கள். நாம் நமது வேலையை பார்ப்போம். நமது வேலை பள்ளிக்குப் போவது ஒழுங்காக பாடங்களை நடத்துவது, பிள்ளைகளை படிக்க வைப்பது, மிக நல்ல மதிப்பெண்ணோடு அவர்களை தேர்ச்சிபெற செய்வது, உயர் கல்விக்கு அவர்களை வழிநடத்துவது, நன்கு சம்பாரித்து தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு அவர்களை வழிநடத்துவது போன்றவை என்கிறார்கள்.
இவை நல்ல விஷயங்கள்தான். இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் உயர் கல்வியே நமது பிள்ளைகளுக்கு கிடைத்துவிடக் கூடாது என்று அடம் பிடிக்கும் அரசுகளும் கனவான்களும் அசுர பலத்தோடு எழுந்து சண்டமாருதம் செய்துகொண்டிருக்கும்போது நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தோம் எனில் நமக்கு கல்வி இல்லை வேலை இல்லை வாழ்க்கையும் இல்லை என்று சொல்வார்கள். சொல்வார்கள் என்ன ஏற்கனவே சொல்லத் தொடங்கி விட்டார்கள்.
ஆயிரத்து இருநூறு மதிப்பெண்ணிற்கு ஆயிரத்தி நூற்றி எழுபத்தி ஆறு மதிப்பெண் பெற்ற நமது மகள் அனிதாவை அவர்கள் ஏற்கனவே தற்கொலை செய்து விட்டார்கள்.
இப்போதும் ஒதுங்கிப் போவோம் எனில் நேற்று அரியலூரில் நடந்தது நாளை நம் ஊரில் நடக்கும். நாளை மறுநாள் நமது தெருவிலும் அதற்கு அடுத்த நாள் நமது வீட்டிலும் நடக்கும்.
சராசரி ஆசிரியனுக்கு நல்ல துணை, நல்ல மக்கள், நல்லதொரு வீடு, நல்லதொரு மகிழுந்து என்று கனவு நீளும்
நல்ல ஆசிரியனுக்கு நமது கடமை பிள்ளைகளுக்கு ஒழுங்காக போதிப்பது என்ற வகையில் கனவு இருக்கும்
ஒரு மிகச் சிறந்த ஆசிரியனுக்கு தான் ஒரு கல்வியாளனாக வேண்டும் என்ற கனவு அவனைத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும்.
ஆசிரியனுக்கும் கல்வியாளனுக்கும் என்ன வேறுபாடு என்று ஆல்பர்ட் சொல்வதை நாம் நம் பாஷையில் சொல்வோம்
நமக்கு மட்டுமா பிரச்சினை? அனைவருக்கும்தானே அது. எனில் அடுத்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் நாம் வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை பார்ப்போம் என்று கருதினால் அவர் ஒரு நல்ல ஆசிரியர்.
அவர்களை மட்டுமா பாதிக்கும்? அவர்களை பாதிக்கும் எதுவும் நம்மையும் பாதிக்கும். எனவே சமூகத்தைப் பாதிக்கும் எது குறித்தும் மாணவர்களுக்குப் புரியும் பாஷையில் எடுத்து அம்பலப்படுத்துவதும் அதை கேள்வி கேட்டு எதிர்வினையாற்றும் உணர்வையும் தைரியத்தையும் பிள்ளைகளுக்கு ஊட்டினால் அவன் கல்வியாளான்.
விமர்சனம் செய்கிற கல்வியாளர்களைப் பெற்றிருக்கக் கூடிய சமூகம் ஆசிர்வதிக்கப்பட்ட சமூகம் என்கிறார் ஆல்பர்ட்.
நமக்கு ஏக்கமாய் இருக்கிறது.
#சாமங்கவிந்த நேரம் சரியாய்
15.10.2018

Monday, October 15, 2018

லேஷந்த் சொல்றதுதான் ஞாயிறு திங்கள்

மின்சாரம் எங்களோடு காய் விட்டுவிட்டு மூன்றுதெரு தாண்டி நடைபயிற்சிக்கு சென்றுவிட்ட அந்த இருட்டுப் பொழுதில் அவரது அம்மாவோடும் அக்காவோடும் நம்மவீட்டு மொட்டை மாடிக்கு வந்திருந்தார் லேஷந்த் சார்.
தெருவே இருண்டு கிடந்த அந்தப் பொழுதில் நம்மவீட்டு மொட்டைமாடி மட்டும் வெளிச்சமாயிற்று.
மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கொண்டே இருந்தார்.
அவர் பின்னால் அவரை விரட்டிக்கொண்டே ஓடியது வெளிச்சம்
வெளிச்சத்தை வெளிச்சம் விரட்டியது
வெளிச்சமும் வெளிச்சத்தை விரட்டிய வெளிச்சமும் இசையை இறைத்துக்கொண்டே போயின
அந்தப் பொழுதில் நான் அங்கிருந்தது ஒரு கொடுப்பினை
ஒரு புள்ளியில் விட்டு அவரை இழுத்து தன் மடியில் கிடத்தியவாறே
”எங்க, ஞாயிறு, திங்கள் சொல்லு”
திமிறினார், திமிறினார் ஒருவாறாக மனம் இறங்கினார்,
“ஞாயிறு, திங்கள், செவ்வாய். வியாழன், வெள்ளி, புதன், ம்ம்ம்ம்...,சனி”
“டேய் செவ்வாய்க்கு அப்புறம் வியாழானாடா. செவ்வாய் , புதன்... எங்க சொல்லு”
“ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, புதன், வியாழன், சனி”
”என்னடா இப்படி மாத்தி மாத்தி சொல்ற”
“நான் சொல்றதுதான் ஞாயிறு திங்கள்”
எனக்கென்னமோ லேஷந்த் சார் சொல்ற வரிசையில்தான் கிழமைகளை வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
உங்களுக்கு?

Sunday, October 14, 2018

மேல்நிலை முதலாமாண்டுப் பொதுத்தேர்வின் அவசியம்


பதினோராம் வகுப்பு மதிப்பெண் எதற்காகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாதுஎன்று கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அது குறித்து உரையாடவேண்டிய அவசியம் இருக்கிறது.

அது எந்தக் கோடை என்று சரியாய் நினைவில்லை. அநேகமாக 2015 கோடையாக இருக்க வேண்டும். பள்ளிக்கல்விக் கட்டமைப்பில், பாடத்திட்டத்தில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதைக் கண்டடைய கருத்துக் கேட்புக் கூட்டங்களை பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது.

அந்தக் கோடையின் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முற்பகல் ஒரு அமர்வு பிற்பகல் ஒரு அமர்வு என ஒவ்வொரு வாரமும் நான்கு அமர்வுகளாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. அப்போதைய தமிழ்நாடு தொடக்கப்பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் திரு கார்மேகம் இதற்காக அழைக்க வேண்டியவர்களின் முகவரிகளைக் கேட்டார். நான் கொடுத்த பட்டியலில் இருந்தும் ஏறத்தாழ பதினைந்து தோழர்களை அழைத்திருந்தார்கள்.

தமிழ்நாடு இணையக் கழகத்தில்தான் அமர்வுகள் நடந்தன.

ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், கலைஞர்கள், திரைத் துறையினர், அரசியல்வாதிகள் என்று சகல தரப்பிலிருந்தும் தகுதி வாய்ந்தவர்களை அழைத்து அவர்களாது கருத்துக்களை அறிந்து அவற்றிற்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வருமாறு கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் உத்திரவிட்டிருந்ததாகவும் அறிய முடிந்தது.

நிறைய திட்டுவார்கள். கோவப்படாமல் காது கொடுத்து கேளுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளட்டும். ஆனால் எதற்காகத் திட்டுகிறார்களோ அதற்கான மாற்றத்தையும் அவர்கள் சொல்லவேண்டும். அத்தகையோரை மட்டுமே அழைத்து உரையாடுங்கள் என்று மாண்பமை அமைச்சர் கூறினார் என்பதைக் கேள்விபட்டபோது அப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.

அந்த அமர்வுகளை பள்ளிக் கல்வித்துறையின் அன்றைய முதன்மைச் செயலாளரான திரு உதயச்சந்திரன் சார் அவர்கள் வழிகாட்டுதலில் பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர்கள் திரு கார்மேகம் மற்றும் திரு இளங்கோவன் ஆகியோர் சிறப்புறச் செய்திருந்தனர்.

முதல் சனி பிற்பகல் அமர்வில் நான் கலந்துகொண்டேன். என்னோடு எழுத்தாளர்கள் பிரபஞ்சன், இமையம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ரவிக்குமார், மற்றும் பேராசிரியர் கல்யாணி அய்யா ஆகியோர் கலந்து கொண்டோம்.  

அன்றைய முற்பகல் அமர்வில் தோழர் கஜேந்திரபாபு கலந்து கொண்டார்.

பன்னிரண்டிலிருந்து பதினைந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதிகாரிகள் அனைவரும் நாங்கள் பேசியதை கூர்ந்து கவனித்த்தோடு நாங்கள் பேசியவற்றை குறிப்பும் எடுத்துக் கொண்டனர். வழக்கமாக அதிகாரிகள் பேசுவதை கர்ம சிரத்தையோடு குறிப்பெடுப்பது எங்கள் வழக்கம். வழக்கம் என்பதைவிட அப்படி குறிப்பெடுக்க வேண்டும் என்பது எங்களுக்கான உத்தரவு. அப்படி எழுதுகிறோமா என்று சோதிக்கிற அதிகாரிகளும் உள்ளனர். அப்படிப்பட்ட எங்களுக்கு எங்களது கருத்துக்களை கவனமாக குறிப்பெடுக்கும் அதிகாரிகளைப் பார்க்க மகிழ்ச்சியாயிருந்தது.   

எனக்கு வலப்புறம் பிரபஞ்சனும் இடப்புறம் கல்யாணி அய்யாவும் அமர்ந்திருந்தனர். எனக்கு நேரெதிரே உதயசந்திரன் சார் அமர்ந்திருக்கிறார்.

அமெரிக்கா, ஜப்பான்,ஜெர்மன் உள்ளிட்ட 34 நாடுகள் இணைந்து  ”ORGANAISATION FOR ECONOMIC COOPERATION AND DEVELOPMENT” என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த 34 நாடுகளும் தங்களை ”OCED நாடுகள்என்றும் அழைத்துக் கொள்கின்றன.

இந்த நாடுகள் தங்களது குழந்தைகளின் கல்வித் தரம் வலுவாகவும் எதிர்காலத்தை சிறந்த முறையில் கட்டமைக்க உதவுவதாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதின. இதற்கு தங்களது குழந்தைகளின் கல்வியை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கருதின. இந்த வேலையை செய்வதற்காக “PROGRAMME FOR INTERNATIONAL STUDENT’S ASSESMENT” என்றொரு அமைப்பை ஏற்படுத்தின. இந்த அமைப்பு சுருக்கமாக PISA என்று அழைக்கப் படுகிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது இல்லை என்று அந்த அமைப்பு முடிவு செய்தது. அதே நேரம் எந்த நாடு கேட்டுக் கொண்டாலும் அந்த நாட்டு மாணவர்களின் கல்வித் தரத்தை சோதித்து அறிக்கைத் தர முன்வந்தது.

அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு இந்தியா தனது குழந்தைகளின் கல்வித் தரத்தை ஆய்ந்து சொல்லுமாறு அந்த அமைப்பைக் கேட்டுக் கொண்டது. அந்த ஆண்டு அந்த அமைப்பைத் தவிர 40 நாடுகள் தங்கள் பிள்ளைகளின் கல்வித் தரத்தை ஆய்ந்து சொல்லுமாறு கோரின.

ஆய்வு நடத்தப்பட்ட 74 நாடுகளுள் இந்தியா 73 வது நாடாக வந்தது. இது குறித்து விரிவாக பேசிக் கொண்டே வந்த நான் இதற்கு காரணம்புரிந்துகொண்டு கற்றலில்நம் குழந்தைகளுக்கு உள்ள போதாமைதான் என்றேன். தற்போது உள்ள தேர்வு முறையே இதற்கு காரணம் என்று கூறினேன்.

சரி என்ன செய்யலாம்?” என்றார் உதயசந்திரன் சார்.

பத்தாம் வகுப்பு வரைக்கும் தேர்வே வேண்டாம். பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு செமஸ்டர் முறையில் தேர்வு வைக்கலாம்என்றேன்.

இதை செய்தால் உங்களுக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் சார்என்றபோது சார் சிரித்து வைத்தார்.

இதே விஷயத்தை இன்னும் விரிவாகவும் இன்னும் ஆழமாகவும் கல்யாணி அய்யா எடுத்து வைத்தார். என்ன அவர் நீட் வேண்டும் என்றார். நான் கூடாது என்றேன்.

நாங்கள் முடித்தபோது எட்வினும் சாரும் பாதி கோவில் கட்டலாம்என்றபோது தன்னையும் அறியாமல் கல்யாணி அய்யா என் கையைப் பிடித்து அழுத்தினார்.

ஆக, பதினோராம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு என்பதற்கான குரல்களுள் என்னுடைய குரலும் ஒன்று.

இதன் விளைவுகளை நாம் புரிந்து கொள்வதற்கு நாம் இன்னும் ஐந்து ஆண்டுகளேனும் காத்திருக்க வேண்டும். ஒரு தேர்வு மட்டுமே நடந்திருக்கக் கூடிய சூழலில் அதன் விளைவுகளை ஆராய்தல் என்பது ஏறத்தாழ சிறுபிள்ளைத் தனமே ஆகும்.

பதினோராம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு என்று வந்ததுமே மெட்ரிக் பள்ளிகள் அதைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கின. அவர்களது எதிர்ப்பிற்கு வலுவான காரணம் உண்டு.

நான் உட்பட பதினோராம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு என்றே தவறாகவே சொல்கிறோம். அது அப்படி அல்ல. பத்தாம் வகுப்பு வரைக்கும்தான் எண்களில் வகுப்புகளைச் சுட்ட வேண்டும். அதன்பிறகு ஒன்று +1, +2 என்று சுட்டலாம் அல்லது மேல்நிலை முதலாமாண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு என்று சுட்டலாம்.

எனில் +1 ற்கு 600 மதிப்பெண். +2 ற்கு 600 மதிப்பெண். இப்படியான கட்டமைப்பில் குழந்தைகள் +1 பாடங்களையும் +2 பாடங்களையும் கற்றுத் தேர்ந்தால்தான் தேர்ச்சிபெற முடியும். எனில், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிபெற்று வரும் குழந்தை இரண்டு ஆண்டு பாடங்களையும் கற்றிருப்பார்கள். அது அவர்களுடைய மேல்படிப்பிற்கு உதவும். இப்படி இருக்க தரமான கல்விக்கான பள்ளிகள் என்று தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்ளும் மெட்ரிக் பள்ளிகள் இதை ஏன் எதிர்க்க வேண்டும்?

அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிளும் +1 இல் + பாடங்களையும் +2 இல் +2 பாடங்களையும் மட்டுமே நடத்த முடியும். ஆனால் மெட்ரிக் பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளிலும் இரண்டாமாண்டு பாடங்களை மட்டுமே நடத்துவார்கள்.

சில பள்ளிகளில் காலாண்டிற்குப் பிறகு இந்த பாதகத்தை செய்வார்கள். பல பள்ளிகளில் ஜூன் முதலே +2 பாடங்களை ஆரம்பித்து விடுவார்கள். ஆக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஒரு ஆண்டில் படிக்கும்  +2 பாடப் புத்தகங்களை மெட்ரிக் குழந்தைகள் இரண்டு ஆண்டுகள் படிப்பார்கள். நீட் வருவதற்குமுன் +2 பாடங்களை மூன்று ஆண்டுகள் படிக்க வைத்த பள்ளிகளும் உண்டு. சமயபுரம் SRV மாதிரி விதிவிலக்குகளும் உண்டு.

பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் +2 வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு மெட்ரிக் பள்ளிகள்தான் சரியான இடம் என்று கருதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிராகரித்து தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்தார்கள். இதன் விளைவாக மெட்ரிக் பள்ளிகள் செழித்துப் பெருத்தன அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் பல மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன.

இப்போது +1 லும் பொதுத் தேர்வு உண்டென்பதால் அந்தந்த வருடத்திற்கு அந்தந்த பாடம் என்று வந்து விட்டதால் இதற்கு ஏன் மெட்ரிக் பள்ளிகளில் காசைக் கொட்டிக்கொண்டு என்று பெற்றோர்கள் பிள்ளைகளை மீண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்தார்கள். மெட்ரிக் பள்ளிகள் பாதிப்பைச் சந்தித்தன.

மெட்ரிக் பள்ளி கனவான்கள் அதிர்ந்து போனார்கள். தங்களது கல்லா இளைப்பதை சொல்லி இந்த முறையை மாற்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே அவர்கள் வேறு ஒரு காரணத்தைத் தேடினார்கள்.

இந்த ஆண்டு குழந்தைகள் +1 பொதுத் தேர்வை எழுதினார்கள். முதல்முறையாக இருப்பதால் குழந்தைகளுக்கு சிரமம் இருந்தது என்பது உண்மைதான்.

இத்தனை ஆண்டுகளாக இல்லாத வகையில் +1ல் பொதுத்தேர்வு என்பது சில குழந்தைகளுக்கு குழப்பத்தைத் தந்தது. அப்படித்தான் சொல்வார்கள் ஆனால் பொதுத் தேர்வு இருக்காது என்றுகூட சில குழந்தைகள் நம்பினார்கள். ஏன், சில ஆசிரிய நண்பர்களுக்கேகூட +1ல் பொதுத் தேர்வு நடக்காது என்று நம்பினார்கள்.

+1ல் சரியாக தேர்வு எழுதாத பிள்ளைகளுக்கு போன வருடம்தான் தேர்வு, இந்த வருடமும் தேர்வு, அடுத்த வருடமும் தேர்வு என்றால் சோர்வாகக்கூட பட்டது. பெற்றோர்கள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். ஆனால் காலப்போக்கில் இது சரியாகக்கூடியது என்பதை இவர்கள் உணர்ந்துவிடக் கூடாது என்பதில் சிலர் கவனமாக இருந்தார்கள். அவர்களுள் மெட்ரிக் பள்ளி முதலாளிகளும் அடங்குவர்.

இவர்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வா? பிள்ளைகளது உடலையும் மனதையும் இது பாதிக்காதா? என்று குமுறத் தொடங்கி விட்டார்கள்.

இவர்களது குரலைத்தான் மாண்புமிகு அமைச்சர் அவர்களும் ஒலிக்கத் துவங்கி இருக்கிறார்.

+1 குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு உண்டு. தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் +1 மதிப்பெண்ணை கணக்கில் கொள்ள மாட்டோம். +2 மதிப்பெண்ணைக் கொண்டுதான் அவனது மேல்படிப்பு தீர்மானிக்கப்படும் என்கிறார்.

இதைத்தான் மெட்ரிக் பள்ளி கனவான்கள் எதிர்பார்த்தார்கள்.

இப்பொழுது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் முதலாமாண்டு முதலாமாண்டு பாடங்களையும் இரண்டாமாண்டில் இரண்டாமாண்டு பாடங்களையும் நடத்த வேண்டும். ஆனால் மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சிக்குரிய அளவு மட்டும் முதலாமாண்டு பாடங்களை நடத்திவிட்டு முதலாமாண்டிலேயே இரண்டாமாண்டு பாடங்களை நடத்த ஆரம்பித்து விடுவார்கள். இனி, மீண்டும் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கைக்காக மைல் கணக்கில் வரிசை நிற்கும். அவர்களது கல்லா நிரம்பி வழியும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்கை குறையும். பையப் பைய இந்தப் பள்ளிகள் மாணவர்கள் இன்மையால் பூட்டப்படும்.

+1 பொதுத் தேர்வு மெட்ரிக் பள்ளிகளைக் கொஞ்சம் பாதித்தது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சன்னமாக நிமிர்த்தியது. நடைமுறையில் பொதுப்பள்ளிகளின் நிர்வாகி மாண்பமை அமைச்சர். இன்னும் கொஞ்சம் சரியாய் சொன்னால் பொதுப்பள்ளிகளின் முதலாளி அவர். எனில் தனியார் பளிகளுக்கு நட்டம் பொதுப்பள்ளிகளுக்கு லாபம் என்று வரும் இந்தப் புள்ளியில் அவர்தான் லாபத்தை அனுபவிக்கப் போகிறவர்.

அவர் எப்படி தனக்கு நட்டமும் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு லாபமும் வருகிறமாதிரி மட்டுமே சிந்திக்கிறார் என்று தெரியவில்லை.

மூன்றாண்டு தொடர் பொதுத்தேர்வுகள் பிள்ளைகளை பாதிக்குமா? என்று கேட்டால்பாதிக்கலாம்என்பதே பதில்.

எனில், மாற்ற வேண்டாமா?”

மாற்ற வேண்டும்தான்

அதைத்தானே செய்திருக்கிறோம்என்றால் இப்போதும் மூன்றாண்டுகளுக்கு தொடர்ந்து பொதுதேர்வு வருகிறதே.

என்னதான் செய்யலாம்?

+1 ற்கும் +2 விற்கும் பொதுதேர்வு இருக்கட்டும். +1 இல் 600 +2 வில் 600 ஆக 1200 மதிப்பெண் இருக்கட்டும்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எடுத்துவிடலாம்.

நன்றி: காக்கைச் சிறகினிலே அக்டோபர் 2018

             






இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...