Monday, October 8, 2018

மாற்று மருத்துவம் என்பது...

அன்புள்ள கீர்த்தி,
மீண்டுமொருமுறை உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்
இன்று காலையே இதை எழுத நினைத்தேன். பிறந்தநாளன்று உன் தோழிகளுடனான உனது கொண்டாட்ட மனநிலையைத் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதால் அப்போது இதை செய்யவில்லை.
அது வடிந்து இயல்பு நிலைக்கு நீ இப்போது வந்திருப்பாய். அதனால்தான் இதை இப்போது உனக்கு எழுதுகிறேன்.
இப்போது உனக்கு இது புரியாவிட்டால் அருள்கூர்ந்து இதை பத்திரப் படுத்து. படிப்பை முடித்து நீ மருத்துவப் பணியைத் தொடங்கும் நாளில் மறக்காமல் இதை எடுத்து வாசி. அதற்கு எதற்கு இவ்வளவு அவசரம்? அப்போதே கூறலாமே என்று நீ கேட்கலாம். ஒருக்கால் அப்போது நான் இல்லாமல் போய்விட்டால்?
உன்னையும் அண்ணனையும் பொதுப்பள்ளியில், தமிழ்வழியில் படிக்க வைத்ததைத் தவிர உங்கள்மீது எனது விருப்பத்தையோ கோட்பாடுகளையோ நான் ஒருபோதும் திணித்தது இல்லை. நீங்கள் விரும்பியதை எல்லாம் தந்திருக்கிறேனோ இல்லையோ ஆனால் நீங்கள் விரும்பாத எந்த ஒன்றையும் உங்கள்மீது ஒருபோதும் திணித்தது இல்லை, கடவுள் உட்பட. அண்ணன் இறைநம்பிக்கையற்று வளர்கிறான், நீ கடவுள் நம்பிக்கையோடு வளர்கிறாய். இவற்றுள் நான் ஒருபோதும் தலையிட்டது இல்லை.
யோசித்து பாரேன், ஹோமியோ என்பதுகூட நீ விரும்பித் தேர்வு செய்ததுதான்.
என் பிள்ளைகளிடம் எனக்கு ஒரு கோரிக்கை உண்டு மகளே. ஆனாலும் இதுகூட கையேந்திய நிலையிலான என் இறைஞ்சல்தானேதவிர கட்டாயப்படுத்துவதாய் நீ கொள்ளத் தேவை இல்லை. நான் கூறுவதை பரிசீலனை செய்யுமாறான கோரிக்கைதான். இது குறித்து என்னோடு உரையாடலாம், விவாதிக்கலாம், ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.
அண்ணனது பணிநிலை என்னவாக இருக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. உனது பணிநிலை உறுதியாகிவிட்டது. ஆகவேதான் இதை முதலில் உன்னிடத்தில் வைக்கிறேன்
ஹோமியோ மருத்துவராக வேண்டும் என்பது உனது ஆசைகளுள் ஒன்று. அநேகமாக பதினோராம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே உனக்குள் இந்தக் கனவு இருப்பதை என்னால் உணர முடிந்தது. நானுமே ஹோமியோ நோயாளியாகவே இருந்தவன் என்பதாலும் ஹோமியோ மக்களுக்கான மாற்று மருத்துவம் என்பதாலும் உன்னை இதுநோக்கி கொஞ்சம் உற்சாகப் படுத்தினேன்.
உன்னை மருத்துவம் படிக்க வைப்பது பணம் செய்வதற்காக அல்ல சாமி.
ஹோமியோ என்பது மாற்று மருத்துவம் என்பதும், அது மக்கள் மருத்துவம் என்பதும் ஏழைகளுக்கான மருத்துவம் என்பதும் பாமர மனிதனான அப்பாவின் கருத்து. அப்படி எல்லாம் இல்லை என்றாலும் நான் உன்னை ஹோமியோ படிக்க வைத்துதான் இருப்பேன். அது ஏழை எளிய மக்களுக்கான மாற்று மருத்துவம் என்பதால்தான் இவ்வளவு மகிழ்ச்சியோடும் கொண்டாட்டத்தோடும் படிக்க வைக்கிறேன்.
இந்த நேரத்தில் இந்த பாமரத் தந்தையின் பார்வையில் மாற்று மருத்துவம் என்றால் என்ன என்பது குறித்தும் உன்னோடு உரையாட விரும்புகிறேன்.
டெராமைசினுக்கு பதில் ஏதாவது ஹோமியோ மருந்து கொடுப்பதற்கோ அல்லது ஊசிக்கு பதில் ஏதோ ஒரு திரவத்தை க்ளோப் என்றழைக்கப்படும் உருளைகளில் கலந்து கொடுப்பதற்கோ மட்டும் மாற்று மருத்துவம் என்று பெயரல்ல என்று நான் கருதுகிறேன். பக்க விளைவுகள் இல்லாத மருந்து என்பதுகூட மாற்று மருத்துவத்தின் ஒரு சிறு கூறுதானே தவிர அதுவே மாற்று மருத்துவம் அல்ல.
பல நோய்களுக்கு அறுவைசிகிச்சை இல்லாமலே ஹோமியோ மூலம் குணப்படுத்த முடியும் என்று நம்புபவன் நான்.
இவை எல்லாமும் மாற்று மருத்துவத்தின் கூறுகள்தான். ஆனால் மாற்று மருத்துவம் என்பது இவை மட்டும் அல்ல கீர்த்தனா. அது இன்னும் நுட்பமானது, உன்னதமானது.
அலோபதி மருத்துவம் என்பது அதிக செலவு வைப்பதாக இருக்கிறது. நாளுக்குநாள் ஏழைகளுக்கும் மருத்துவத்திற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது.
மருத்துவம் முற்றாய் முழுதாய் கார்ப்பரேட் கைகளுக்குள் போய்விட்டது. ஏழைகளுக்கு வைத்தியம் இல்லை என்பதே இன்றைய எதார்த்தமாக இருக்கிறது.
தலைவலிக்காகப் போனால்கூட ஆயிரக் கணக்கில் பணம் கறக்கிற வித்தையில் கார்ப்பரேட் மருத்துவம் கற்றுத் தேர்ந்திருக்கிறது. ஒன்று தெரியுமா கீர்த்தி, பிணங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வித்தையிலும் கார்ப்பரேட் மருத்துவம் பிஎச்டி முடிந்திருக்கிறது.
மருத்துவமே பார்க்காமல் இன்சூரன்ஸ் க்ளைம் செய்து அதன்மூலம் வருகிற தொகையை நோயாளியோடு பங்கு போட்டுக்கொள்ளும் மருத்துவமனைகளும் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
யாரும் அறியாமல் அழுதுகொண்டிருக்கிறேன் கீர்த்தி.
அதற்கு எதிரான ஒரு மாற்று மருத்துவ இயக்கம் இப்போது அவசியமான தேவையாகிறது. இந்த இயக்கம் அலோபதிக்கு எதிரான வறட்டு இயக்கமாக மாறிவிடக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் அத்தகையதொரு இயக்கத்தில் ஹோமியோ, சித்தா, ஆயூர்வேதம் போன்ற மருத்துவர்களோடு அலோபதி மருத்துவர்களும் அவசியம் இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்
மாற்று மருத்துவத்தின் இரு முக்கிய கூறுகளாக நான் பார்ப்பது
1) மாற்று மருந்துகள் மற்றும் மாற்று சிகிச்சை
2) காசுக்கான மருத்துவம் என்பதில் இருந்து ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்குமான மருத்துவம்
மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் மருத்துவத்திற்கெதிரான மாற்றைத் தருகிற திரளில் என் மகளும் ஒரு புள்ளி என்றால் நான் பெரிதும் மகிழ்வேன்.
நெருக்கடிநிலை காலத்தில் கலைஞருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் இன்று இறந்துவிட்டார். அவரைப் பற்றி குறிப்பிடும்போது இருபதுரூபாய் டாக்டர் இறந்துபோனதாக திரு மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
கலைஞருக்கே வைத்தியம் பார்த்தவர் என்று இதைப் பார்ப்பது ஒரு விதம். 20 ரூபாய்க்குமேல் அவர் மருத்துவக் கட்டணம் பெற்றதில்லை. எனவே அவர் ஏழைகளுக்கான மருத்துவர் கொண்டாடுவது இன்னொரு விதம். அவர் கலைஞருக்கு சிகிச்சை அளித்தவர் என்பது பெருமைக்குரியதுதான். ஆனால் 20 ரூபாய் மருத்துவர் என்பதுதான் அவருக்காக நான் கை எடுத்துக் கும்பிட்டதற்கான காரணம்.
மருத்துவர் ராமதாசு அவர்களை கூட்டங்களிலும் எழுத்திலும் எவ்வளவோ விமர்சித்திருக்கிறேன். ஆனால் மருத்துவர் அய்யா என்றே விளிக்கிறேன். காரணம் அவருக்கு திண்டிவனத்தில் ரெண்டுரூபா டாக்டர் என்று ஒரு பெயர் உண்டு. ஏதோ ஒரு காலத்தில் ஏழைகளிடம் ரெண்டு ரூபாயை மட்டும் வாங்கிக் கொண்டு ஏழைகளின் மருத்துவராக அவர் செயல்பட்டிருக்கிறார். அதற்கான எனது மரியாதை இது.
மருத்துவம் முடித்ததும் உனக்கு இரண்டு வழிகள் உள்ளன
1) காசு சம்பாதித்து சொகுசாய் வாழலாம்
2) ஏழைமக்களின் மருத்துவராய் வசதி குறைவான ஒரு வாழ்க்கையை வாழலாம்
மரிய எலேனா என்ற இடத்தில் இருந்த செம்புச் சுரங்கத்தில் வேலைபார்த்த தொழிலாளத் தோழர்களைப் பார்க்க பாப்லோ நெருடா போகிறார். அப்போது தோழர் உங்களை எங்களுக்குத் தெரியும். நீங்கள் எங்கள் கவிஞர் என்று சொன்னபோது நெகிழ்ந்து கலங்கி “எனக்கு கிடைத்த விருதுகளிலேயே இதுதான் பெரிய விருது” என்று கூறினார் நெருடா.
அப்படியான ஒரு அனுபவத்தில் என் மகள் நெகிழ்ந்து கலங்கினால் நான் பெரிதும் மகிழ்வேன்.
ஒருக்கால் அப்போது நான் இல்லை என்றால் அதுதான் நீ ஆசையாய் ‘லூசு அப்பா’ என்று அழைப்பாயே அந்த லூசு அப்பாவிற்கான உன் பொருளுள்ள அஞ்சலியாகும்
மகிழ்ந்து நீண்டு வாழ்க கீர்த்தி
அன்புடன்,
அப்பா.
#சாமங்கவிய ஒரு மணி ஆறு நிமிடங்கள்
07.10.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...