Wednesday, October 3, 2018

நட்புறவையும் மனித மாண்புகளையும் விரும்பும் க்யூபா

பதவி இருக்கிறது
மேடை கிடைக்கிறது
அதற்காக எதை வேண்டுமானாலும் எந்த அளவிற்கும் மலினமாக பேசிவிட எத்தனிக்கிறார்கள் அமைச்சர் பெருமக்கள்
அவர்கள் அப்படித்தான் என்பதாக ஒரு புன்னகையோடு கடந்துவிட முடிகிறது என்னால்
ஆனால் படிக்கிறபோது நீங்கள் இந்திய மாணவர் சங்கத்தில் (SFI) இருந்ததாக எங்கோ படித்து தொலைத்ததால் உங்களை அப்படி எளிதாகக் கடந்துவிட முடியவில்லை மாண்பிற்குரிய ஜெய்குமார் அவர்களே
SFI யில் இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு சே குறித்தும் காஸ்ட்ரோ குறித்தும் நிச்சயம் தெரிந்திருக்கும்.
தெரிந்திருந்தும் இவ்வளவு மலினமாக எப்படி உங்களால் அவர்கள் இருவரையும் மாண்புமிகு எடப்பாடி பழநிச்சாமி மற்றும் மாண்பமை பன்னீர்செல்வம் ஆகியோரோடு ஒப்பிட முடிகிறது. உண்மையை சொல்லுங்கள்,
அன்று இரவு உங்களால் நிம்மதியாக உறங்க முடிந்ததா?
1966 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள் அமெரிக்க உளவுத்துறையின் உதவியோடு சே பிடிபடுகிறார். அவரை ஜூலியா கோர்ட்ஸ் என்ற இளம் ஆசிரியை பணிபுரியக்கூடிய ஒரு பள்ளியிலே இருத்துகிறார்கள். எந்த நேரத்திலும் அவர் சுட்டுக் கொல்லப் படலாம். வானொலியில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து விட்டார்கள். ஆகவே அவரது மரணம் எந்த நிமிடமும் நிகழலாம்.
அந்த நேரத்தில் அங்கு அவருக்கு உணவு எடுத்து வந்த ஜூலியாவிடம் அது என்ன இடம் என்று கேட்டிருக்கிறார் சே.
அது ஒரு பள்ளி என்றும் தான் அங்கு ஆசிரியையாகப் பணிபுரிவதாகவும் கூறியிருக்கிறார் ஜூலியா.
இவ்வளவு மோசமான, ஏறத்தாழ மாட்டுக் கொட்டகை போல உள்ள இடமா பள்ளிக்கூடம்? இந்த மோசமான இடத்திலா குழந்தைகளை அமர்த்தி பாடம் சொல்லித் தருகிறீர்கள் என்று கேட்டுவிட்டு, ”பரவாயில்லை ஒருக்கால் நான் உயிரோடு இருந்து புரட்சியும் வென்றுவிட்டால் உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடத்தைக் கட்டித் தருவேன்” என்று கூறியதாக வாசித்திருக்கிறேன்.
பிடிபட்டுவிட்டார்
இறந்துவிட்டார் என்று வானொலியில் அறிவித்து விட்டார்கள்
சுடுகிற நேரம் வரைக்குமான சன்னமான இடைவெளியில் ஒரு பள்ளியில் இருத்தவைக்கப் பட்டிருக்கிறார்
எந்த நிமிடமும் அவர் கதை முடிந்துவிடக் கூடியது என்பதை அவர் உணார்ந்திருக்கிறார்
மரணத்தின் நெருக்கத்திலும் எந்தவிதமான பயமோ சொர்க்கத்திற்கான வேண்டுதலோ அவரிடம் இல்லை. மாறாக அந்த நேரத்திலும் குழந்தைகள் படிப்பதற்கு நல்ல வசதியான பள்ளிகளின் அவசியம் குறித்து பேசுகிறார்.
மண்டேலாவின் நினைவேந்தல் நடந்து கொண்டிருக்கிறது. அன்றைய அமரிக்க அதிபர் திரு ஒபாமா மேடையேறுகிறார். அவர் இருக்கைநோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். வழியில் இருப்பவர்கள் எழுந்து அவரோடு கைகுலுக்குகிறார்கள்.
அடுத்த மனிதர் எழுகிறார்
அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் எதோ ஒரு காரணத்தினால் செத்துப்போக மாட்டார்களா என்றுகூட அமெரிக்க அதிபர்கள் எண்ணக்கூடிய மண்ணின் பிரதிநிதி
எத்தனைமுறை என்று என்று எண்ணிச் சொல்லமுடியாத அளவு எண்ணிக்கையில் அமெரிக்க அதிபர்கள் கொல்வதற்கு முயற்சி செய்து தோற்றுப்போன ஒரு தலைவனின் தம்பி
அவரும் ஒபாமாவிடம் புன்னகையோடும் அன்போடும் கைநீட்டுகிறார்
“My president, I am castro”
ஒபாமாவும் ரால் காஸ்ட்ரோவின் கைகளைக் குலுக்கியபடி நகர்கிறார்
அடுத்தநாள்
“பகை முடிந்துவிட்டது என்று பொருள் அல்ல” என்று அந்த இரண்டு தலைவர்களின் கைகுலுக்கலுக்கு விளக்கம் தருகிறது வெள்ளை மாளிகை
”மனித நாகரீகத்தை பறை சாற்றுகிற நிகழ்வு அது. நட்புறவையும் மனித மாண்புகளையும் க்யூபா விரும்புகிறது” என்கிறார் கேஸ்ட்ரோ
தம் மீது அவ்வளவு பகை பாராட்டும் அமெரிக்காவிலிருந்து தினந்தோறும் ஏழை மக்களை ஹெலிகாப்டரில் க்யூபா அழைத்து வந்து இலவசமாக கண்புரை அறுவை செய்து திரும்ப அழைத்துப் போய் அமெரிக்காவில் விட்டு வருவார்கள் என்று படித்திருக்கிறேன்.
அப்படியொரு மனிதமாண்பினை பேணும் கேஸ்ட்ரோ.
இவர்கள் இருவரையுமா எடப்பாடி அவர்களோடும் OPS அவர்களோடும் ஒப்பிட்டீர்கள்?
ஒன்று நிச்சயம் ஜெயகுமார் சார்,
காலம் உங்களை நிச்சயம் இதற்காக கேள்வி கேட்கும்.
#சாமங்கவிய ஒரு மணி 16 நிமிடங்கள்
02.10.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...