Saturday, October 6, 2018

ஒன்றிணையுங்கள்

இந்த வரிசையில் இந்த செய்திகளை முந்தாநாள் (04.10.2018) நான் வாசித்தது தற்செயலாகத்தான்
1) ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் நடக்க இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதிக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்பதாக இன்றைய THE HINDU வில் வந்திருக்கக் கூடிய அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதியின் அறிக்கை
2) ”கூட்டணி என்பதே காங்கிரஸ் கட்சியின் ரத்தத்திலே கிடையாது. காங்கிரசைப் பொறுத்தவரை நேரு குடும்பம்தான்” என்பதாக இந்திய சட்ட அமைச்சர் மாண்புமிகு ரவி ஷங்கர் பிரசாத் இன்றைய THE HIIDU வில் தந்திருக்கும் அறிக்கை
3) பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியாக திரட்டுவது உறுதி என்பதாக இன்றைய தினமணியில் வந்திருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சசி தரூர் அவர்களின் அறிக்கை
இந்தியாவிற்கான மிகப் பெரிய அச்சுறுத்தலாக, உலகமே பொறாமைப்படும் இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்துப்போடும் செயலில் தனது அதிகாரம் செல்வாக்கு அனைத்தையும் கையெடுத்து அதிதீவிரமாய் வெறிகொண்டு இயங்கும் பாஜகவை, எந்தக் கேள்விக்கும் பதில்தரத் தேவையில்லை என்று மக்களை அவமதிக்கும் பாஜகவை, எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் எதுகடந்தும் ஒன்றிணைவது அவசியமாகப்படும் இந்த நேரத்தில் மாயாவதி அவர்கள் இப்படி பேசியிருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது.
“they (congress) are getting arrogant and are under the misconception that they can defeat the BJP on their own, but the ground reality is that people haven’t forgiven the congress for mistakes and corruption. They don’t seem to be ready to rectify themselves”
என்று மாயாவதி அவர்கள் கூறியிருப்பதை காங்கிரஸ் எப்படி எடுத்துக் கொள்கிறது என்று தெரியவில்லை. ஆனால் மிகுந்த அக்கறையோடும் கவனத்தோடும் இதை காங்கிரஸ் அணுகவேண்டும் என்று இந்த மண்ணின்மீது நேசம் வைத்திருக்கிற ஒவ்வொருவரும் விரும்புகிறோம்.
காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது இருந்த விலையைவிட ஒன்பது சதவீதம் குறைவான விலையில் ரஃபேலிடம் இருந்து தாங்கள் விமானங்களை வாங்குவதாக பாஜக கூறுகிறது. எனில் விலை குறையும்போது வாங்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கூடுவதற்கு பதில் குறைந்திருப்பது ஏன்? இதுவே சந்தேகத்தைத் தருகிறது. கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்கள். மாற்று அரசாங்கம் வந்தால்தான் என்ன நடந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்று செய்தியாளார்கள் சந்திப்பில் திரு ப.சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளதை காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் உணர வேண்டும்.
1) ரஃபேலில் என்னதான் நடந்திருக்கிறது
2) பணமதிப்பிழப்பு ஏன் கொண்டுவரப்பட்டது?
3) இதனால் பலனடைந்தவர்கள் யார்?
4) வங்கிகளை ஏமாற்றிவிட்டு பெருமுதலாளிகள் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு தப்பித்துச் செல்வதின் பின்னனியில் உள்ள அரசியல் என்ன?
5) பெட்ரோல் டீசல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இதனால் பலனடைந்தவர்கள் யார்?
போன்ற விவரங்கள் எல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும். இது சாத்தியப்பட வேண்டுமானால் மத்தியில் பாஜக அல்லாத மாற்று அரசு வரவேண்டும்.
குறைந்தபட்சம் இதற்காகவேனும் மத்தியில் ஒரு மாற்று ஆட்சி வரவேண்டும் கனவான்களே. இன்னொருமுறை பாஜக வந்துவிட்டால் அகிலேஷ் சொன்னதுமாதிரி நாமெல்லாம் பக்கோடா விற்க போவதைத் தவிர வேறு வழியில்லை தலைவர்களே.
செல்வி மாயாவதி அவர்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு. காங்கிரஸ் தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை. காங்கிரஸ் ஊழலே செய்யவில்லை என்றும் சொல்லவில்லை. ஆனால் அவை எதைவிடவும் பாஜக என்பது கொடிதானது என்பதை இந்த நான்கரை ஆண்டுகால அவர்களது ஆட்சி எழுத்துக்கூட்டி நமக்கு பாடம் நடத்துகிறது என்பதை நீங்கள் உணரவேண்டும் மாயாவதி. நீங்களேகூட சோனியா காந்தியும் ராகுலும் நேர்மையான அணுகுமுறையோடு இருப்பதாகக் கூறியுள்ளீர்கள் என்று ”இந்து” சொல்கிறது.
இதை திரு ராகுலுக்கும் திருமதி சோனியா அவர்களுக்கும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி நிச்சயம் எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் திரு சசி தரூர் கூறியுள்ளதாக “04.10.2018 தினமணி” கூறுகிறது.
மாநிலத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளை உதாசீனம் செய்துவிட்டு பாராளுமன்றத்தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்பது அயோக்கியத் தனமானது மட்டுமல்ல நடைமுறை சாத்தியமில்லாததும் ஆகும்.
மாயாவதி அவர்களின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து திரு திக் விஜயசிங் பதில் அளித்துள்ளார்.
எல்லோருக்கும் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
திரு O.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னை சந்தித்ததாக திரு டிடிவி தினகரன் கூறியதும் சிலர் பதறினார்கள். சிலர் சிரித்தார்கள். சிலர் கடந்து போனோம். அது நல்லது என்றும், டிடிவி தினகரனும் O.பன்னீரும் எடப்பாடி அவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அப்போதுதான் திமுகவை வெற்றிகொள்ள முடியும் என்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கனகராஜ் கூறுகிறார்.
சுருட்டுவதைத் தவிர எந்தவிதமான கோட்பாடுகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத அதிமுக அணியினர் தங்களது எதிரியான திமுகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும் என்று கனகராஜ் போன்ற மனிதர்களே யோசிக்கும் போது,
தலைவர்களே எதுகடந்தும் ஒன்றிணைய முயற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...