அன்பின் முதல்வருக்கு,
வணக்கம்.
நான் கண்ட இரண்டு சம்பவங்களும்
முதல்வராகப் பதவியேற்ற நாளில் நீங்கள் போட்ட கையெழுத்துகளில் ஒன்றும்
ஒன்றோடு ஒன்றைப் பொருத்திப் பார்க்குமாறும்
அது குறித்து தங்களுக்கு கடிதம் எழுதுமாறும் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன
முதல் சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்னர் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்தது
புதுக்கோட்டையில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சென்றுகொண்டிருக்கிறேன்
பேருந்தைப் பிடிப்பதற்குமுன் தேநீர் பருகத் தோன்றியதால் ஆவினுக்கு செல்கிறேன்
ஆவினுக்கும் பெரியார் புத்தக நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் ஆண்களும் பெண்களுமாய் இருநூறிலிருந்து இருநூற்றி ஐம்பது பேர் நின்றுகொண்டிருக்கிறார்கள்
கைகளிலே தூக்குப்போனி
அவர்களது கலகலப்பான உரையாடல் என்னை அந்த இடத்திலேயே கட்டிப்போடுகிறது
அவர்கள் கொத்தனார்களும் சித்தாள்களும்
வரப்போகும் மேஸ்திரிகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்
மேஸ்திரிகள் வந்தால்தான் அவர்களில் எத்தனைபேருக்கு அன்று வேலை கிடைக்கும் என்பது தெரியும்
தேநீரை முடித்துக் காசு கொடுப்பதற்குள் பத்துப் பதினைந்துபேர் அங்கே வருகிறார்கள்
அவர்கள் அனைவரும் மேஸ்திரிகள் என்பது புரிகிறது
அவர்கள் தலைக்கு பத்திலிருந்து பதினைந்துபேர் வரை தேர்ந்தெடுக்க மிச்சம் ஒரு இருபது அல்லது இருபத்தி ஐந்துபேர் சோகத்தோடு ஒதுங்குகிறார்கள்
இவர்களுக்கு அன்று வேலை இல்லை
இப்படித்தான்ஒவ்வொரு நாளும் சிலருக்கு வேலை கிடைக்காது என்கிறார்கள்
அதுவரை இருந்த கலகலப்பு மாறுகிறது
அந்தக் கலகலப்பான அரட்டையும் அதன்பிறகான இந்த சோகமும் அன்றாட வாடிக்கை என்கிறார் டீமாஸ்டர்
வேலை கிடைக்காத ஆண்கள் மிக சொற்பம்.
அவர்கள் தங்களது அல்லது தங்கள் நண்பர்களது இருசக்கர வாகனங்களில் புறப்படுகிறார்கள்
வேலை கிடைக்காத பெண்களில் சிலருக்கு கண்கள் கலங்கிவிட்டது
அவர்கள் நகரப் பேருந்தில் வந்து திரும்ப வேண்டும். போக வர இருபது ரூபாயாவதும் அன்றைக்கு அவர்களுக்கு இழப்பு
அன்றில் இருந்து இன்றுவரை வேலை கிடைக்காது பேருந்துக்கு காசு செலவு செய்ய வேண்டிய அந்தப் பெண்களின் கண்ணீர் என்னை உலுக்கிக்கொண்டே இருக்கிறது முதல்வர் அவர்களே
மூன்று நாட்களுக்கு முன்னால் பெரம்பலூர் அய்யங்கார் பேக்கரி அருகே அதே மாதிரி ஒரு கூட்டத்தைக் கண்டேன்
ஏறத்தாழ அதே நடைமுறை
இங்கும் இருபது அல்லது இருபத்தி ஐந்து பேருக்கு வேலை இல்லை
ஆனால் அன்று திருச்சியில் கண்ட சோகம் இல்லை
வேலை கிடைத்த ஒரு பெண் வேலை கிடைக்காத தன் தோழியிடம் தனது சாப்பாட்டுக் கூடையைக் கொடுக்கிறார்
“இன்னைக்கு மோல்டு மலரு, சாப்பாடு தருவாங்க. எடுத்துட்டுப் போ”
இவரும் கை அசைத்து வழி அனுப்பிவிட்டு பேருந்திற்காக காத்திருக்கிறார்
வேலை கிடைக்காத வருத்தம் தெரிகிறது. ஆனால் அன்று திருச்சியில் அந்தப் பண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் சுவடுகளை இப்போது இவர்களிடத்திலே காணவில்லை
இதற்கு காரணம் முதல்வராகப் பதவியேற்ற அன்று
“இனி சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை” என்று நீங்கள் போட்ட உத்தரவு
திருச்சியில் அந்தப் பெண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் தழும்புகளை உங்களது ஒற்றைக் கையெழுத்து துடைத்துப் போட்டிருக்கிறது
ஒருமுறை சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் ”லோட் மேன்கள்” என்று அழைக்கப்படும் மூட்டை தூக்கும் தோழர்கள் அன்றைய முதல்வர் கலைஞரை ஒரு கோரிக்கையோடு சந்திக்கிறார்கள்
தாங்கள் சுமக்கும் மூட்டை ஒன்றிற்கு பத்துப் பைசாவோ இருபது பைசாவோ கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை
அவர்களுக்கு “TIME SCALE” நிர்ணயித்து அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றுகிறார் கலைஞர்
அவர்களை நிரந்தரப்படுத்தி கலைஞர் அன்று போட்ட கையெழுத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல நிங்கள் போட்ட இந்தக் கையெழுத்து
இதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு வரும் என்று பொருளாதார மேதைகள் கணக்குப் போட்டு கதறுவார்கள்
அவர்கள் கதறட்டும்
இது இழப்பல்ல,
கூடுதல் செலவு,
அவ்வளவுதான் என்பதை நீங்கள் அறிவீர்கள்
அதை வருவாயைக் கூடுதலாக்குவதன் மூலம் சரிசெய்துவிடலாம் என்பதையும்
வருவாயை எப்படிக் கூட்டுவது என்பதையும் நீங்களும் அறிவீர்கள்
அதை அறிந்தவர்களை கூடவே வைத்திருக்கவும் செய்கிறீர்கள்
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு”
“இயற்றவும் ஈட்டவும் ஈட்டியதைக் காக்கவும்”
உங்களால் முடியும்
வல்லமையோடு வகுத்தலை செய்கிறீர்கள்
ஒன்று சொல்ல வேண்டும்,
எங்கள் பள்ளியின் ஆசிரியைகள் சிலரும் கட்டணமில்லா பேருந்தில் வருகிறார்கள்
இதுபோல் ஏராளம்
இவற்றைத் தடுக்கலாம்
தொடருங்கள்
வாழ்த்துகள்
அன்புடன்,
இரா.எட்வின்.