Tuesday, May 5, 2020

மாமா, செத்துட்டியா?”

தூங்கிக்கொண்டிருந்தவனின் காலைத் தட்டி எழுப்புகிறார் லேஷந்த்
நல்ல தூக்கம்
“ஏந்தம்பி?”
“எங்க அப்பா துப்பாக்கி வாங்கித் தந்தாங்க”
“அதுக்கு என்னடா?”
“எந்திரி, நான் உன்ன சுடறேன்”
“தூக்கமா இருக்கு தம்பி”
“எந்திரி மாமா, சுடறேன். செத்து விழுவில்ல. அப்படியே தூங்கு. எந்திரி மாமா”
சுடறான்
செத்து விழுந்தேனா?
விழுந்து செத்தேனா?
என்ன நடந்தது என்று தெரியவில்லை.
சிரித்துக் கொண்டே கேட்கிறார்,
“மாமா, செத்துட்டியா?”
“செத்துட்டேன்”
“குட் பாய்”

Monday, May 4, 2020

கோயம்பேட்டை மூடினால்...

ஆண்டவன் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவைத் திறப்பான்
ஆள்பவர் கோயம்பேட்டை மூடினால் டாஸ்மாக்கைத் திறப்பார்

04.05.2020

லாரி வாடகை கூடினால்...

மதிப்புக் கூட்டு வரியின் மூலம் பெட்ரோல் டீசல் விலை ஏறியிருக்கிறது
டீசல் விலை உயர்ந்தால்
லாரி வாடகை கூடும்
லாரி வாடகை கூடினால்
காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் விலை கூடும்
அது ஏழைகளை பாதிக்கும்
இரு சக்கர வாகனங்களில் பால் மற்றும் காய்கறி விற்கும் ஏழை வியாபாரிகளையும் பால்காரர்களையும் பாதிக்கும்
வாடகைக்கு ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டும் ஆட்டோ ஓட்டுனர்களை பாதிக்கும்
கண்டனங்கள்
03.05.2020

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய ....







திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய ஏறத்தாழ 1300 துப்புறவு ஊழியர்களை வேலையில் இருந்து அப்புறப்படுத்தி இருக்கிறது ஆலய நிர்வாகம்
காரணம்
அவர்கள் ஆலயத்தின் ஊழியர்கள் அல்ல. out sourcing ஊழியர்கள்
இத்தகைய இக்கட்டான சூழலில் ஆலய நிர்வாகம் இந்த ஊழியர்களின் பக்கம்தான் நின்றிருக்க வேண்டும்.
கவலையே படாதீர்கள், நிர்வாகம் இருக்கிறது என்று ஆறுதல் கூறியிருக்க வேண்டும்
ஆலய நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்காக நமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்
இந்த இடத்தில் எனக்குப் பட்டது சிலவற்றை இங்கு வைக்க விரும்புகிறேன்
out sourcing மூலமாக ஆலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இவர்கள் என்றால் இவர்கள் ஏதோ ஒரு நிறுவத்தின் company act இன் கீழ் வரும் ஊழியர்கள் ஆவார்கள்
இவர்களுக்கு PF உண்டு
இவர்கள் அந்த தனியார் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள்தான்
எப்படி?
இவர்களது உடையில் இவர்களது நிறுவனத்தின் இலச்சினை இருக்கும்
அந்த இலச்சினைக்கு உரிய நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் இவர்கள்
அந்த நிறுவனம் நிறைய ஊழியர்களை பணிக்கு அமர்த்தி இருக்கும்
அந்த நிறுவனம்தான் மாதா மாதம் இவர்களுக்கு ஊதியம் கொடுக்கும்
இவர்களுக்கு 5000 அல்லது 6000 என்பதுமாதிரி ஊதியம் கொடுக்கும்
இப்போது ஆலய நிறுவனம் இவர்களிடம் 1300 துப்புறவு ஊழியர்கள் வேண்டும் என்று கேட்டால் தாங்கள் எடுத்து வைத்திருந்த அல்லது கூடுதலாக எடுத்து அனுப்பி வைக்கும்
ஒரு ஒப்பந்தம் போடப்படும்
உதாரணமாக ஒரு ஊழியருக்கு 10000 தருவதாக ஆலயம் ஒப்புக் கொள்ளலாம்
இது அந்த நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையேயன ஒப்பந்தம்
ஊழியர்கள் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள்
அந்த நிறுவனம் போகச் சொல்லும் இடத்திற்கு வேலைக்குப் போக வேண்டும்
திடீரென ஆலயம் தனக்கு 1200 ஊழியர்கள் போதும் என்று கூறினால் மிச்சம் இருக்கும் நூறுபேரை வேறு ஏதாவது பணிகளுக்கு அனுப்பும்
இந்த ஆயிரத்து முன்னூறு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது என்பது ஆலயத்திற்கு ஒரு பொருட்டே இல்லை
அதை செய்ய வேண்டும்
எது எப்படியோ
அந்த நிறுவனம் இந்த ஊழியர்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்
அவுட்சோர்சிங் ஆபத்தானது என்று சொல்லி வருகிறோம்
ஆனால் அது தவிர்க்க முடியாத பட்சத்தில்
அவுட்சோர்சிங் நிறுவனக்களைக் கூட்டாக இந்த ஊழியர்களே அமைத்துக் கொள்வதற்கு ஏன் உதவக் கூடாது

03.05.2020

மேலேயிருந்து பூக்கொட்டி

மேலேயிருந்து பூக்கொட்டி அவர்கள் நன்றி சொல்கிறார்களாமாம்
கீழே நின்று மேலே ஹெலிகாப்டர்களைப் பார்த்து கைதட்டி அவர்களுக்கு இவர்கள் பதிலுக்கு நன்றி சொல்கிறார்களாமாம்
இந்தக் காசில் வெண்டிலேட்டர்கள் வாங்கி இருக்கலாம்
என்னென்னவோ செய்திருக்கலாம்
என்பதெல்லாம் உண்மைதான் என்பது கடந்து
இத்தனை சிரமங்களுக்கு இடையேயும்
இன்னுமொரு சிரமமாக
இந்தப்பூக்களை சுத்தம் செய்யும்
துப்புரவு பணியார்களின் வேதனை குறித்தான
தோழர் கருப்பு கருணா வின் வேதனை கலந்த கோவத்தில்
அவர் கரம்பற்றி நானும் இணைகிறேன்

Sunday, May 3, 2020

ஒரு திருடனுக்கு தெரிந்திருப்பது




மும்பை
அன்றைக்கு பம்பாய்
அந்தச் சாலையின் இருமருங்கும் கூட்டம்
கூட்டத்தோடு கூட்டமாய் நிற்கிறார் பஷீர்
அப்போது அவர் எழுதவெல்லாம் தொடங்கி இருக்கவில்லை
ஒரே பரபரப்பாய் இருக்கிறது
கொஞ்ச நேரத்தில்
ஒரு மனிதனை காவல்துறையினர் சங்கிலியால் கட்டி இழுத்து வருகிறார்கள்
இவரை அவர்கள் நெருங்க இருக்கிறபோது அந்த மனிதனை பஷீருக்கு அடையாளம் தெரிந்து விடுகிறது
அந்த மனிதனுக்கு பஷீர் கடன்பட்டிருக்கிறார்
எப்படியேனும் அந்த மனிதனது பார்வையில் பட்டு வணங்கி நன்றியைத் தெரிவித்துவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்
முடியவில்லை
அவர்கள் கடந்துபோனதும் பஷீருக்கு பக்கத்தில் நின்றவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே கூறுகிறார்,
“அப்பாடா, ஒரு வழியா அந்தத் திருட்டுப் பயல புடிச்சுட்டாங்க. இனி திருட்டு பயம் கொறஞ்சிடும்”
திருடனா?
அதிர்கிறார்
என்றாலும் அவன் செய்த உதவியைத் தன்னால் காலத்திற்கும் மறக்க முடியாது என்று நினைக்கிறார்
அப்படி என்ன செய்துவிட்டான் அந்த மனிதன்
ஒரு நாள் சாலை ஓரமாக நடந்து கொண்டிருக்கிறார் பஷீர்.
பசி மயக்கத்தைத் தரவே மயங்கி கீழே வீழ்கிறார்
முகத்தில் தண்ணீர் தெளிக்கப்படவே எழுகிறார்
ஒரு மனிதனின் மடியில் இவர் தலை இருக்கிறது
அந்த மனிதன் கடையில் வாங்கி வந்த உணவைத் தருகிறான்
உணவு உள்ளே போனதும் தெம்பு வருகிறது
எழுந்தவரிடம்
இன்னொரு பொட்டலத்தைக் கொடுத்து மதியம் சாப்பிட சொல்கிறான்
”சாப்பாடு முக்கியம், பசியோடு நடக்காதே”
நகர்ந்து விடுகிறான்
பொட்டலத்தில் காசு இருக்கிறது
அவன்தான் அன்று இழுத்துச் செல்லப்பட்ட திருடன்
எந்தவிதமான முன்னேற்பாடும் செய்யாமல் ஊரடங்கைத் தொடர்ந்து கொண்டுவந்திருக்கிறீர்கள்
இதன் விளைவாய் பசியோடு சுருண்டு கிடக்கிறார்கள் பலர்
சொந்த ஊருக்கு வெருங்காலோடும் ஒருவாரப் பசியோடும் நடக்கிறார்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்கள்
சிலர் செத்தே போயிருக்கிறார்கள்
தன்னார்வளர்கள் மட்டும் இல்லாவிட்டால்
இருப்பவர்களில் பலர் செத்திருப்பார்கள
அன்பிற்குரிய ஆளும் கனவான்களே,
பசியோடு இருக்கக் கூடாது, பசியோடு நடக்கக்கூடாது என்று ஒரு திருடனுக்கு தெரிந்திருப்பது
உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது?

Saturday, May 2, 2020

என்னதான் அம்பின்மீது நமக்கு கோவம் இல்லை எனினும்





கடலூரில் அண்ணலின் சிலைக்கு நேற்று காலை செருப்பு மாலை அணிவித்தவரை கைது செய்துள்ளது காவல்துறை
அண்ணலின் சிலைக்கு செருப்பு மாலையிட்டவர் இவர்தானென்று தம்பி ஸ்டாலின் தி யின் பக்கவழி அறிய முடிகிறது
பொதுவாக அம்புகளோடு நமக்கு ஒருபோதும் பிணக்கு இல்லை
அம்புகளுக்கும் அவை தைத்துக் கிழிக்கும் உடல்களின்மீது ஒருபோதும் பகை எதுவும் இருப்பது இல்லை
பாவமாக இருக்கிறது
எவர் தலைமீது வேண்டுமாயினும் கைவைத்து சத்தியம் செய்வேன்
இந்த மனிதனுக்கு அண்ணல் குறித்து எதுவும் தெரியாது
கொஞ்சம் போதை
சில துண்டு கோழி வருவல்
கையில் கொஞ்சம் காசு
போதையோடு சேர்த்து சாதி வெறியூட்டல்
செய்திருக்கிறார்
நமது கோரிக்கை இதுதான்
எய்தவன் யாரென்று விசாரிக்க வேண்டும்
அவர்களைக் கைது செய்து கடுந்தண்டனை வாங்கித் தரவேண்டும்
என்னதான் அம்பின்மீது நமக்கு கோவம் இல்லை எனினும்
உடலைத் தைத்ததும் பிடுங்கி உடைத்து எறிவோமல்லவா
ஆக இவருக்கும் தண்டனை வேண்டும்
இனியொருமுறை இதுபோல காரியங்களைத் திட்டமிடக்கூடாது
அப்படி ஒரு தண்டனை எய்தவனுக்கும்
இனியொருமுறை இப்படி ஒரு செயலை எவனும் செய்யக்கூடாது
அப்படி ஒரு தண்டனை இந்த மனிதருக்கும் வழங்க வேண்டும்

02.04.2020

அசாதாரணமான சூழல்

அசாதாரணமான சூழல்
வருபவர்கள் வரட்டும்
வீடியோ கான்பிரன்ஸ் வழி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை தோழர் யெச்சூரி கூட்டலாம் என்று படுகிறது

01.05.2020

நீங்களேதேனும் செய்வீர்களா இல்லையா?

இன்னும் 15 நாள் வீடடங்கச் சொல்கிறீர்கள்
சரி
செய்கிறோம்
ஏற்கனவே 40 நாள் வீடடங்கினோம்
பிரதமர் அவர்களே,
இப்போதேனும்
நீங்களேதேனும் செய்வீர்களா இல்லையா?

01.05.2020

இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது





இது இடைச்சாதி ஆதிக்கவெறியின் தெறிப்பு
இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது
இனியொரு தடவை இப்படி நிகழாதபடி
கடுந்தண்டனையாக வழங்கவேண்டும் இதை செய்த சாதி வெறியன்களுக்கு

01.05.2020

பூமி சிவக்கும் என்கிறது இந்த மே ஒன்று

முதலாளித்துவத்தின்
செவிட்டில் அறைந்து
அதை
சுருக்கிச் சாய்த்த கொரோனா
நம் வேலைகளையும் சாய்த்திருக்கிறது
கொஞ்சம் மெனக்கெட்டால்
இடது வலுக்கும்
பூமி சிவக்கும் என்கிறது
இந்த மே ஒன்று
மெனக்கெடுவோம்
வாழ்த்துக்கள்

எதை வெட்டிக் கூட்டம் என்கிறீர்கள்

“அரசை எதிர்க்கக் கூடாது”
என்று சொல்பவர்
எத்தனை பெரிய விருது பெற்றவர் ஆயினும்
அல்லது இப்படி சொன்னதற்காகவே சில விருதுகளைப் பெற இருப்பவராயினும்
நீங்கள்
“எங்கள் எழுத்தாளர்”
என்ற இடத்தினை இழக்கிறீர்கள் தர்மன் அய்யா
இதிலென்ன நட்டம் என நீங்கள் கேட்கலாம்
ஒருமுறை
மரியெலேனாவில் உள்ள ஒரு செம்புச் சுரங்கத்திற்கு செல்கிறார் நெருதா
சுரங்கத்திலிருந்து ஊர்ந்து வந்த தோழர்கள்
உடல் முழுக்க அழுக்கு
கைகளை நீட்டுகிறார்கள்
கைகுலுக்குகிறார்
“உங்களை எங்களுக்குத் தெரியும் தோழர்
நீங்கள் எங்கள் கவி”
என்கிறார்கள்
நெகிழ்ந்த நெருதா
“நான் எத்தனையோ விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.
நீங்கள் எங்கள் கவி என்ற உங்களது வார்த்தைகளுக்கு முன்பு அவையெல்லாம் தூசு”
என்கிறார்
எதை இழந்திருக்கிறீர்கள் என்று புரிகிறதா தர்மன் அய்யா
ஆமாம்
எதை வெட்டிக் கூட்டம் என்கிறீர்கள்
ட்ரம்ப் வந்தபோது திரட்டப்பட்ட கூட்டத்தையா?
அல்லது
“வேலை இல்லை,
சோறும் இல்லை
எங்களை எங்கள் ஊர்களுக்கு அனுப்புங்கள்”
என்று திரண்ட கூட்டத்தையா?

30.04.2020

தேடிச்சென்று சோதிக்கத் தொடங்கும்போதுதான்

தினமும் கொரோனா தொற்று குறித்த பட்டியல் வருகிறது
ஒருநாள் கூடுகிறது
ஒருநாள் குறைகிறது
நீங்கள் தருகிற புள்ளிவிவரங்களில் எமக்கேதும் அய்யமில்லை
சோதித்துதான் சொல்கிறீர்கள்
ஆனால் யாரை சோதிக்கிறீர்கள்?
ஏதோ ஒருவகையில் நலமின்மை காரணமாக சிகிச்சைக்காக உம்மிடம் வருபவர்களை கொரோனா தொற்றியிருந்தால் கணக்கில் சேர்க்கிறீர்கள்
பிறகு அவரோடு சம்பந்தப்பட்டவர்களை சோதிக்கிறீர்கள்
தொற்றிருந்தவருக்கு நலமின்மை ஏற்படாது உம்மிடம் சிகிச்சைக்காக உம்மிடம் வராதிருந்தால்
அவரும் கணக்கில் இல்லை
அவரோடு தொடர்புடையோரும் கணக்கில் வரப்போவதில்லை
வருபவர்களில் இருந்து சோதனையைத் தொடங்காமல்
தேடிச்சென்று சோதிக்கத் தொடங்கும்போதுதான் நிலவரம் தெரியும்

29.04.2020

சிதம்பரம் சார் ஏன் ஆதரிக்கிறார் என்று புரியும்

ப்ராங்ளின் டெம்லட்டான்
இந்தியாவில் இயங்கி வரும் அமெரிக்க ம்யூச்சுவல் பண்ட் நிறுவனம்
அமெரிக்காவின் நிதி நிலைமையால் தள்ளாடி வருகிறது
நிதித் தள்ளாட்டத்தில் இருந்து அந்த நிறுவனத்தை மீட்கும் முயற்சியாக மத்திய அரசு 50000 கோடியை நேற்று கடனாக அனுமதித்திருக்கிறது
அதை மேநாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றிருக்கிறார்
என்ற தகவலை மிகுந்த கோவத்தோடு பதிந்திருக்கிறார் தோழர் புலியூரார் (புலியூர் முருகேசன்)
ஒன்றுமில்லை தோழர்,
50000 கோடி அவர்களுக்குப் போனபிறகு ஒரு வாரம் கவனியுங்கள்
அந்த நிறுவனத்தில் இருந்து யார் யாருடைய டெபாசிட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன என்று
அவர்கள் ஏன் கொடுக்கிறார்கள்
சிதம்பரம் சார் ஏன் ஆதரிக்கிறார் என்று புரியும்

29.04.2020

ஓவர் டு ஜீயர் சாமிகள்

ஜீயர் சுவாமிகள்:
சொன்னதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் தீக்குளிப்பேன்
சூர்யா:
சொன்னதில் உறுதியாக இருக்கிறோம்
ஓவர் டு ஜீயர் சாமிகள்

29.04.2020

சாப்பாட்டு அரிசியில் எத்தனால் எடுப்பது நியாயந்தானா?

அன்னதானத்திற்கு அரசி கேட்கிறீர்கள் திரு முருகன்
நல்லது
எனில்
அன்னதானத்தை நம்பி எம் மக்கள் இருக்கிறார்கள் என்று பொருள்
உண்மைதான்
இத்தனை மக்கள் சாப்பாட்டிற்கு அரிசி இல்லாமல்அலையும்போது
சாப்பாட்டு அரிசியில் எத்தனால் எடுப்பது நியாயந்தானா?

27.04.2020

இன்று எத்தனை பேருக்கு சோதிக்கட்டது என்ற தகவலையும்

மூன்று மாவட்டங்களைத் தவிர எந்த மாவட்டத்திலும் இன்று புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை
மகிழ்ச்சிதான்
கோரிக்கை ஒன்று
எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று என்ற பட்டியலைத் தருவது போலவே
எந்தெந்த மாவட்டத்தில் இன்று எத்தனை பேருக்கு சோதிக்கட்டது என்ற தகவலையும் தருவதுதான் சரி

27.04.2020

வாங்கிய பால் திரிந்துவிட்டது

வாங்கிய பால் திரிந்துவிட்டது
ஏன் திரிந்தது
என்ன சனாதனக் குற்றம் நடந்தது வீட்டில்
சுத்தப்பத்தக் குறைச்சலா
என்ன பரிகாரம் செய்யலாம் என்றெல்லாம் யோசிக்காமல்
புகார் செய்தது வரவேற்கத் தக்கது
ஆனால் வாங்கிய பால் திரிந்தது என்றால் முதலில் வாங்கிய பால்பூத்தில்தானே முறையிட வேண்டும்
இத்தகைய அசாதாரணமான சூழலிலும்
நேரடியாக முதல்வருக்கே புகார் போகிறது என்பதும்
அதிகாரி மூலமாக பால் அவரது வீட்டிற்கே போவதும்
ஆவின் பால் நிறுவனத்தையும் அதன் அதிகாரிகளையும் அவமதிக்கிற செயல் அல்லவா

27.04.2020

ஏன் குழந்தைகளை சித்திரவதை செய்கிறார்கள் என்று விளங்கவில்லை

பள்ளிகளில் இணையம் மூலமாக பாடங்களை நடத்துவதை எதிர்த்து நீதிமன்றத்தில் தடை வாங்கினால் என்ன?
பள்ளிகளைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
பதினோராம் வகுப்பிற்கான ஒருநாள் தேர்வு
என்பதைத் தவிர இந்த விடுமுறை என்பது வழமையானதைவிட ஒருவாரம் அல்லது ஒன்றரை வாரம் கூடுதல் அவ்வளவே
ஏன் குழந்தைகளை சித்திரவதை செய்கிறார்கள் என்று விளங்கவில்லை

26.04.2020

உடல்களைப் பெற்று அவர்களிடம் வழங்க வேண்டும்

அரபு மண்ணில் வேலை பார்த்த நான்கு இந்தியர்கள் உடல்நலமின்மையால் இறந்திருக்கிறார்கள்
அவர்களில் மூவரின் உடல் முறைப்படி விமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது
சில நடைமுறைகள் மிச்சமிருந்ததால் ஒருவரின் உடல் சேர்த்து அனுப்பவில்லை
தில்லி வந்தடைந்த மூன்று உடல்களையும் வாங்க மறுத்து இந்தியா திருப்பி அனுப்பி இருப்பது கண்டனத்திற்குரியது
அமீரக அரசு கண்டனம் தெரிவித்து இருப்பதாக திரு வைகோ அவர்களது அறிக்கை வழி அறிய முடிகிறது
இந்தியா மாதிரி மாபெரும் தேசத்திற்கு இது அழகல்ல என்பதோடு தலைகுனிவு என்பதை அரசு உணரவேண்டும்
நான்கு குடும்பங்களிடமும் வருத்தம் தெரிவிப்பதோடு உடல்களைப் பெற்று அவர்களிடம் வழங்க வேண்டும்

26.04.2020

இப்போது காலம் ஒரு நல்ல வாய்ப்பை தந்திருக்கிறது

ஒரு சிலைக்கு ஆர்டர் கொடுப்பதற்காக ஒரு கலைக் கூடத்திற்கு அவரது நண்பர் வந்திருக்கிறார்
அங்குள்ள சிலைகளை ரசித்துக் கொண்டே வந்தவர்
ஒரு சிலையின் அழகில் லயித்துப் போய் நின்றிருக்கிறார்
“ராஜன், இந்த சிலையைக் கொஞ்சம் தொட்டுப் பார்த்துக்கவா?”
“தாரளமா” என்று சொன்ன ராஜன் கோவிலுக்குப் போகிற வரைக்கும் யார் வேண்டுமானாலும் தொடலாம் என்றும் கோவிலுக்குப் போனதும் இரண்டுபேரைத் தவிர வேறு யாரும் தொட முடியாது
”ரெண்டுபேரா?
ஒருத்தர தெரியுது,
இன்னொருத்தர் யாரு?”
என்று சிரித்துக் கொண்டே கேட்டிருக்கிறார்
திருடன்”
விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள்
நான் தொட்டதுனால சாமி தீட்டுப் பட்டுடாதா?
விடுப்பா, ஒரே டம்ளர் தண்ணில தீட்டக் கழிச்சிடுவாங்க
பாபு ஜெகஜீவன் அவர்கள் அப்போது மத்திய அமைச்சர்
ஒரு ஆலயத்திற்குள் போகிறார்
வழிபடுகிறார்
திரும்பிவிட்டார்
ஆலயம் தீட்டுப் பட்டுவிட்டது என்று ஆலயத்தைத் தீட்டுக் கழிக்கிறார்கள்
இன்றைய குடியரசுத் தலைவர் இறைவழிபாடு செய்வதற்காக ஒரு ஆலயத்திற்குள் நுழைய முற்படுகிறார்
தடுக்கப்படுகிறார்
வாசலில் அமர்ந்து வழிபாட்டை முடித்துக் கொண்டு கிளம்புகிறார்
அது எப்படி ஜெகஜீவன் உள்ளே போக முடிந்தது?
அது எப்படி குடியரசுத் தலைவர் ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை?
இப்படிக் கேட்போம்
ஒரு அமைச்சரே உள்ளே போக முடிந்த பொழுது இந்த நாட்டின் தலைமகனால் ஏன் நுழைய முடியாமல் போனது?
காரணம்
அப்போது காங்கிரஸ் ஆட்சி
இப்போது பிஜேபி ஆட்சி
காங்கிரஸ் ஆட்சி உள்ளே அனுமதித்தது. பிறகு தீட்டுக் கழித்தது
இன்றைய ஆட்சி அனுமதியை மறுக்கிறது
எதார்த்தம் இப்படி இருக்கையில்
ஆலயத்திற்குள் நம் மக்கள் உள்ளே செல்வதும்
மருந்து அடிப்பதும்
தீர்வே ஆகாது
என் அன்பிற்குரியவர்களே
இப்போது மட்டும் அல்ல
ஆலயக் கட்டுமானத்தின் போதும் நம் மக்கள் உள்ளே சென்றவர்கள்தான்
கொரோனா போனதும் மீண்டும் அவர்கள் வருவார்கள்
தீட்டுக் கழிப்பார்கள்
அவரவரும் அவரவர் இடத்தில் நிற்க சொல்வார்கள்
பதட்டப் படாமல்
கவனமாக செயல்பட வேண்டும்
இன்றைக்கும் பல ஊர்களில்
ஊருக்கு ஒன்று
சேரிக்கு ஒன்று என்று
இரண்டு தேவாலயங்கள் இருக்கின்றன
தொண்டமாந்துறை என்ற இடத்தில் மாதாவின் தேர் சேரிக்குள் வராது என்றார்கள்
ஏன் என்று கேட்டபோது
மாதா சேரிக்குள் வந்தால் மாதா தீட்டுப்படும் என்றார்கள்
சரி என்று
அவர்கள் தங்களுக்கு ஒரு தேரை நிறுவினார்கள்
ஊருக்குள் தேர் வரக்கூடாது என்றார்கள்
ஏன் என்று இப்போதும் கேட்டார்கள்
உங்கள் மாதா எங்கள் தெருவிற்கு வந்தால் தெரு தீட்டுப் பட்டுவிடும் என்றார்கள்
இப்போது காலம் ஒரு நல்ல வாய்ப்பை தந்திருக்கிறது
ஆலயங்கள் எல்லோருக்குமானது
யாரும் பிரவேசிக்கலாம் என்ற நிலை காண என்ன செய்யலாம் என்று யோசிப்போம்

26.04.2020

இவர்களது உணவிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

இன்று முதல் நான்கு நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு
எங்கள் ஊரில் நேற்று முதலே முழுமையான ஊரடங்கு
இப்படி திடீரென அறிவித்தால் பொதுமக்கள் மளிகை மற்றும் காய் கறிகளை எப்படி வாங்குவார்கள் என்ற கோவம் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டு எல்லோருக்கும் இருந்தது
நியாயம்தான்
இன்று முதல் என்றதும் நேற்று கடைகளில் அப்படி ஒரு நெரிசல்
தனக்கு முன்னால் நின்ற குடும்பம் ஒன்று ஏதோ தாங்கள் இந்த பூமியையே காலி செய்துவிட்டு வேறு கிரகத்திற்கு போவதுபோல் கடையில் இருந்த ஏறத்தாழ மொத்தத்தையும் வாங்கிச் சென்றதாக மதுக்கூர் ராமலிங்கம் (Mathukkur Ramalingam) எழுதியிருந்தான்
இதுமாதிரி கோமாளித் தனங்களும் அரங்கேறி இருக்கின்றன
இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கான பிரச்சினை இருக்கிறது
உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க சென்ற தன்னார்வலர்களிடம் காவலர்கள் நாளைக்கெல்லாம் நாங்கள் கடுமையாக இருப்போம் என்பதாக காவலர்கள் எச்சரித்து அனுப்பியிருப்பதாகவும்
சமைக்கிற தோழர்கள் வருவதிலும்கூட சிக்கல்கள் இருப்பதாகவும் ஆன்மனும்(ஆன் மன்) கவினும் (Kavin Malar) தங்கள் பக்கங்களில் எழுதியுள்ளனர்
ஆக சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு அரசு ஏதேனும் செய்யாவிட்டால் நான்கு நாட்களும் உணவு கிடைக்கப் போவதில்லை
இரண்டுதான்
அரசு இவர்களது உணவிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்
அல்லது
தன்னார்வலர்கள் உணவு சமைப்பதற்கும் வழங்குவதற்குமான அனுமதியையும் பாதுகாப்பையும் தர வேண்டும்

26.04.2020

பாவம் 20 ஆண்டுகளாக உங்களுக்கே வாக்களித்த மக்கள் அவர்கள்

தோழர் Shahjahan R வைத்திருந்த ஒரு வீடியோ பார்த்தேன்
ஒன்றை உறுதியாக சொல்லலாம்
எத்தனை நெருக்கடியான காலத்திலும் அப்படி ஒரு ரேஷன் கடை தள்ளுமுள்ளு தமிழகத்தில் இருந்ததில்லை
சமூக இடைவெளி இல்லையென்றால் தொற்று வரும் என்கிறீர்கள்
தொற்று மரணத்தில் முடியலாம் என்கிறீர்கள்
ஆனால் நீங்கள் 13 ஆண்டுகாலம் ஆண்ட,
ஏறத்தாழ 19 ஆண்டுகாலம் உங்கள் கட்சியின் ஆட்சி இருக்கிற
குஜராத்தில்
ரேஷனுக்காக அப்படி ஒரு தள்ளுமுள்ளு
என்ன தருகிறீர்கள் என்று தெரியவில்லை
இந்தத் தள்ளுமுள்ளு தொற்றில் கொண்டுபோய் விடும் என்பது அவர்களுக்கும் தெரியும் அன்பிற்குரிய பிரதமர் அவர்களே,
தெரிந்தே குஜராத் மக்கள் இப்படி செய்வதற்கு காரணம் இதுதான்
சாகிற வரைக்கும் உயிரைத் தாங்குகிற தெம்பு உடலுக்கு வேண்டும்
ஒன்று சொல்கிறேன்
எந்த ஈகோவும் பார்க்காமல் என்ன நடக்கிறது கேரளாவில் என்று ஒரு சுற்று பரிசீலியுங்கள்
பாவம் 20 ஆண்டுகளாக உங்களுக்கே வாக்களித்த மக்கள் அவர்கள்

கோவிட் கிருமியிடம் இருந்தும் ட்ரம்ப்பிடம் இருந்தும்

சுனாமி நம் மக்களைக் கொன்று குவித்திருந்த நேரம்
சோகத்தில் இருந்து நாம் அப்போது முற்றாய் மீண்டிருக்கவில்லை
ஓரு கூட்டம்
எனக்கு முன்னால் கவிதை வாசித்த தோழர்
ஒரே குழியில் நூற்றுக் கணக்கான மக்களை, குழந்தைகளைப் புதைத்த சோகத்தை கண்ணீரோடே வாசித்தார்
அழுதோம்
அடுத்து நான்
சுனாமி இந்தியாவைத் தாக்கப் போவது அமெரிக்காவிற்கு முன்பே தெரியும் என்பதையும்
சுனாமி தொடர்பான அந்த அமைப்பு இதை ஏற்கனவே கணித்திருந்தது
அதை முன்னமே இந்தியாவிடம் சொல்லி இருந்தால் இத்தனை பெரிய இழப்பை நாம் தவிர்த்திருக்க முடியும் என்பதையும்
அந்த அமைப்பில் இந்தியா உறுப்பு நாடல்ல என்பதால் சொல்லவில்லை என்று திமிரோடு அமெரிக்கா சொன்னதையும் சொன்னேன்
ஒரே குழியில் குழந்தைகள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கான மக்களைப் புதைத்த சோகத்தை சொல்லிப் புலம்பியவன்
நமது எதிரிக்குக் கூட
ஏன்
அமெரிக்காவிற்கேகூட இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று பேசினேன்
அந்த நிலை அமெரிக்காவிற்கும் வந்திருக்கிறது
அங்கே பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் படங்களும்,
ஒரே குழியில் நூற்றுக் கணக்கான பிணங்களைப் புதைக்கும் படங்களும் வருகின்றன
நம் மக்கள் மரணத்திற்காக மட்டுமல்ல,
உலக மக்களுக்காகவும்
அமெரிக்க மக்களுக்காகவும் சேர்த்தே இந்திய மக்கள் அழுகிறோம்
ஆனால்
திரு ட்ரம்ப் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதே அய்யமாக இருக்கிறது
பல ஆண்டுகளுக்கு முன்னமே பில் கேட்ஸ் இப்படியான ஒரு வைரஸ் தாக்குதலைக் குறித்து அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார்
சோம்ஸ்கி எச்சரித்திருக்கிறார்
ஆனால் அமெரிக்கா இது குறித்து அக்கறை எடுத்துக் கொள்ளவே இல்லை
எச்சரிக்கைகளுக்குப் பிறகு மருத்துவ ஆராய்ச்சிக்கான நிதியைத் தொடர்ந்து அமெரிக்கா குறைத்துக் கொண்டே வந்திருக்கிறது
கோவிட் வந்தபிறகும் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் அசிங்கமாகவே உள்ளது
WHO விற்கு நிதியை ரத்து செய்கிறார்
கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்த முடியுமா என்று யோசிக்கிறார்
கோவிட் கிருமியிடம் இருந்தும் ட்ரம்ப்பிடம் இருந்தும் அமெரிக்க மக்களைக் காப்பாற்று என்று புலம்ப ஒரு கடவுள் இருந்தால் தேவலாம்தான்
#சாமங்கவிந்து 23நிமிடங்கள்
24.04.2020

உங்களிடம் இருந்து இது புதிது

ரம்ஜான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அனைவரது நலத்திற்காகாகவும் வளத்திற்காகவும் தான் பிரார்த்திதுக் கொள்வதாகவும் மாண்பமை பிரதமர் கூறியுள்ளார்.
இந்தப் புனிதமான ரம்ஜான் மாதம் அன்பையும், நல்லிணக்கத்தையும் கருணையின் ஈரத்தையும் கொண்டு வரட்டும் என்றும்
கொரோனாவிற்கு எதிரான இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெறுவோம்.வளமான உலகத்தைப் படைப்போம்
என்று பிரதமர் தமது ரம்ஜான் வாழ்த்தைப் பதிந்துள்ளார்.
உங்களிடம் இருந்து
இது புதிது.
வரவேற்கத் தக்கது
எந்த பண்டிகைக்கும் வாழ்த்து சொன்னதில்லை நான்
இனி சொல்லப் போவதும் இல்லை
இப்போதும் ரம்ஜான் வாழ்த்தையும் சொல்லப்போவது இல்லைதான்
ஆனாலும்
நல்லிணக்கம், இரக்கம் என்றெல்லாம் ரம்ஜானை ஒட்டி நீங்கள் வாழ்த்தியுள்ளது எனக்குப் பிடித்திருக்கிறது
அதற்காக நன்றி சொல்லி உங்களை வாழ்த்துகிறேன்

24.04.2020

கொரோனாவால் வீழ்த்தப்பட்ட பொருளாதாரமும் மக்களை வீழ்த்தும்

மனிதர்களையும் பொருளாதாரத்தையும் சேர்த்து வீழ்த்திக் கொண்டிருக்கிறது கொரோனா
இரண்டாண்டுகளுக்குப் பிறகு கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்தால்
கொரோனாவைவிட பொருளாதாரம் வீழ்த்திய மக்களின் எண்ணிக்கை பல மடங்கு இருக்கும்
அதாவது
கொரோனாவும் மக்களை வீழ்த்தும்
கொரோனாவால் வீழ்த்தப்பட்ட பொருளாதாரமும் மக்களை வீழ்த்தும்
“ஒன்னும் கவலப்படாதீங்க,
நானிருக்கேன்
என் மக்களைவிட எதுவும் பெரிசில்ல எனக்கு
எதை செய்தேனும் என் மக்களே உங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்வேன்
தைரியமாக இருங்கள்
வீட்டோடு இருங்கள்
தேவையானவை உங்களைத் தேடி வரும்”
என்று சொல்லக்கூடிய ஒரு தகப்பனாக பிரதமர் மாறவேண்டிய நேரம் இது

24.04.2020

வெடிப்பதற்குள் திருந்திவிடுங்கள்

ஐந்து ஆண்டுகள் இருக்கும்
ராஜ முருகு பாண்டியன் (Arasa Murugu Pandian) ”போதி” யில் உரையாற்ற என்னை காரைக்குடிக்கு அழைத்திருந்தான்
பசிக்கு ஒருமணி நேரத்திற்குமுன் ஒலிவாங்கியைத் தந்தார்கள்
பசி தொடங்கி அரைமணி நேரத்தில் உரையை முடித்தேன்
பிறகு உரை குறித்தும் அது ஒட்டியும் சில நண்பர்கள் பேசினர்
அதில் ஒரு ஆசிரியர்,
“தோழர் பேசியது நெஞ்சை உலுக்கியது” என ஆரம்பித்தவர்
தனது பள்ளியில் மற்ற வேலைகளுக்கெல்லாம் மற்ற ஆசிரியர்களை அழைக்கும் தலைமை ஆசிரியர் கழிவறை போன்ற பணிகளுக்கு மட்டும் தன்னை அணுகி ஆள் ஏற்பாடு செய்யுமாறு கூறுவதாகவும்
கோவத்தில் உடைந்தார்
அது அப்படியாக இருக்கும் பட்சத்தில் அதை கோவத்தோடு மறுக்குமாறு நானும் பாண்டியனும் சொன்னோம்
சமீபத்தில்
பள்ளிக்கரணையில் தனது பக்கத்து வீட்டில் துப்புறவு பணியை மேற்கொள்ள வந்த எம் தோழர்களிடம் தன் ஜாதித் திமிரோடு ஒரு மனிதன் தனது சக மனிதனோடு பேசத் தகாத அளவில் ஒரு பார்ப்பனர் பேசியதைப் பார்த்தோம்
வழக்கு பதியப்பட்டதாக அறிய முடிகிறது. கைது செய்யப்பட்டாரா தெரியவில்லை
ஒருக்கால் கைது செய்யபடவில்லை என்றால் இந்த சமூகக் கட்டமைப்பின்மேல் சந்தேகம் எழுகிறது
ஆறு மாதங்களுக்கு முன்னால்
தென்கொரியா சென்றுவந்த இணை செயலாளர் ஒருவர் என்னோடு பேசிக் கொண்டிருந்தார்
அங்கு டிப்பர் லாரிகளில் குப்பைகள் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டும் நிலையங்களில் கொட்டப்படுமாம்
1300 என்றார், அது டிகிரியா வேறு ஏதேனும் அளவு முறையா என்று தெரியவில்லை அந்த அளவு வெப்பத்தில் எரிக்கப்படுமாம்
புகைகூட வருவதில்லையாம்
குப்பை எரிகிற வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தாயாரிக்கப் படுகிறதாம்
பிறகு அந்த டிப்பரை ஸ்டீமரில் விட்டு ஸ்டெர்லைஸ் செய்கிறார்களாம்
ஸ்டெர்லைஸ் செய்தபின்பு அந்த டிப்பரில் குப்பை அள்ளுவார்களாம்
ஸ்டெர்லைஸ் செய்யப்பட்ட டிப்பரில்தான் குப்பையே அங்கு ஏற்றுகிறார்களாம்
ஆனால் கொரோனா காலத்தில் உயிரைக் கொடுத்து பணியாற்றும் எம் துப்புறவு மக்களுக்கு
குப்பைக் கொட்டிய அதே லாரியில் அவர்களுக்கான சாப்பாட்டைக் கொண்டுவந்து தருவதான செய்தித்தாள் நறுக்கினை பிள்ளை தமிழ்ப்பித்தன் (Poondi Jeyaraj) வைத்திருக்கிறான்
வலிக்கிறது என்ற தகவலையும்,
வெடிப்பதற்குள் திருந்திவிடுங்கள் என்ற கோரிக்கையையும் வைக்கிறேன்

24.04.2020

இதுதான் எங்கள் அரசியல்

”கோட்சேயின் குருமார்கள்” தோழர் அருணனின் மிக முக்கியமான நூல்களுள் ஒன்று.
72 பக்கம் உள்ள அந்த நூலில் எந்த ஒரு பகுதியையும் ஒதுக்கிவிட முடியாது
அதிலும் முதல் பதிப்பிற்கான முன்னுரையில் ஒரு பகுதி இன்றைக்கு முக்கியமானது
”இது (இந்த நூல்) தொடர்பான நூல்களைத் தேடத் தொடங்கினேன். கீர் எழுதிய ‘வீர் சவார்கர்’ என்கிற பழைய நூல் கிடைத்தது. டாமேங்கர் எழுதிய ‘சர்தார்’ ‘நள்ளிரவில் சுதந்திரம்’ ‘சதார் படேலின் கடிதங்கள்’ ‘இந்திய விடுதலை இயக்க வரலாறு’, காந்தியின் தொகுப்பு நூல்கள்’ ஆகியவை கைவசம் இருந்தன
ஆனாலும் ஒரு இடைவெளி இருந்தது. அது கோட்சே தரப்பு வாதம்.”
கோட்சேவை அம்பலப்படுத்துகிற நூலை எழுதுகிறபோதும் கோட்சேயின் தரப்பு வாதமும் தேவை என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் தோழர்
“கோட்சேயின் வாக்குமூலம் நூலினைத் தேடி அலைந்திருக்கிறார்.
நூலகம் நூலகமாக அலைந்திருக்கிறார்
அறிஞர்களிடம் உதவி கோரியிருக்கிறார்
கோன்ராட் எழுதிய “காந்தியும் கோட்சேயும்” நூல் கிடைக்கிறது
இரண்டே நாட்களுக்குள் திருப்பித் தரவேண்டும்
இந்த நூலுக்குத் தேவையானவை அங்கே இருக்கின்றன
வேக வேகமாக குறிப்பெடுக்கிறார்
நூலினை உரியவரிடம் சேர்ப்பிக்கிறார்
அதன் பிறகுதான் இந்த நூலை எழுதத் தொடங்குகிறார்
ஒருவர்மீதான குற்றசாட்டை ஆவணப்படுத்தும் முன்
குற்றம் சாட்டப்பட்டவரின் கருத்தையும் பரிசீலிக்கவும் ஆவணப் படுத்தவும் வேண்டும் என்ற அறத்தின் வெளிப்பாடு இது
தோழர் அருணன் எனக்கு முந்தையத் தலைமுறையைச் சார்ந்தவர்
இன்று மதுரையில் ஒரு பட்டருக்கு தொற்று இருப்பதாக ஒரு செய்தியை ஒரு சேனல் வெளியிடுகிறது
இதுவரை இஸ்லாமியர்கள்தான் தொற்று பரவுவதற்கான ஒரே சோர்ஸ் என்று பெருமக்கள் வெறுப்பினை விதத்துக் கொண்டிருந்த நேரத்தில் இது அந்தக் கருத்திற்கு எதிர்வினையளிப்பதற்கான வாய்ப்பினைத் தருகிறது
ஆனால்
பட்டருக்கு தொற்று இல்லை என்றும் சேனல் பொய் கூறுகிறது என்றும் சக பட்லர்கள் கூறுகிறார்கள்
இதுவரை சிங்கிள் சோர்ஸ் என்பதை மறுத்து எழுதி வந்த இளந்தோழன் ப்ரதாபன் (Prathaban Jayaraman)
செய்தியையும் பதிகிறான்
பட்டர்களது மறுப்பையும் பதிகிறான்
சேனலின் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் கூறுகிறான்
இவன் எனக்கு அடுத்த தலைமுறை
பட்டருக்கு இருந்தாலும் அவருக்காகவும் வருத்தப் படவே செய்வோம்
ஆனால் இதுவரை சிங்கிள் சோர்ஸ் என்று பொய்யுரைத்தோரையும் எதிர் கொள்வோம்
இதுதான் எங்கள் அரசியல்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...