Monday, June 30, 2014

நிலைத் தகவல் 45

பெற்றோர்களை அழைக்கும் பள்ளிகளில் பலவற்றில் தாய்மார்கள் சென்று விட்டால் அப்பா எங்கே போனார் என்றும், இதைவிட அப்படி என்ன முக்கியமான வேலை அவருக்கு என்றும் கேட்கப் படுவதாக அறிகிறோம்.

அம்மா பெற்றோரில்லையா?

Saturday, June 28, 2014

நிலைத் தகவல் 44


ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு கொஞ்சம் முன் வசிஷ்டர் ராமனுக்கு சொல்வது போல ஆட்சித் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் கம்பன் சொல்வான்,
" யாரொடும் பகை கொள்ளலன் என்றானபின்
போரொடுங்கும்
புகழொடுங்காது
தன் தார் ஒடுங்குதல் செல்லாது
அது தந்தபின் வேரொடும்
கெடல் வேண்டல் உண்டாகுமோ"
பகை தவிர். போர் இருக்காது. அன்பாயிரு. புகழுண்டாகும் என்கிறது ராமாயணம் என்பதை
ஆயுதக் கொள்முதலுக்கு முன்னுரிமை கொடுக்கப் படும் என்று பேசும் ராம பக்தர் நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் மாண்பமை அருண் ஜேட்லி அவர்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

Friday, June 27, 2014

நிலைத் தகவல் 43


May 13 · 
இன்று சமயபுரம் SRV மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் திரு துளசி அவர்களை நண்பர் கனகராஜோடு சென்று சந்தித்தேன்.
பேசிக்கொண்டிருந்தபோது எனது “ இவனுக்கு அப்போது மனு என்று பேர் “ என்ற நூலில் வரும் சம்பவத்தை ஸ்கிட்டாக மாற்றி 10 நிமிடம் நிகழ்த்தியிருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் என்பதைச் சொன்னார்.
தயாரித்த ஆசிரியையிடம் எப்படி இதை தேர்வு செய்தீர்கள், எட்வின் யார் என்பதோ தனது நண்பர் என்பதோ தெரியுமா என்று கேட்டிருக்கிறார். தெரியாது என்று சொன்னவர் பள்ளி நூலகத்தில் படித்ததிலிருந்து அதே நினைவில் இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். அநேகமாக மகள், அல்லது மகன் வயதுதான் இருக்கிறது அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு. அந்த மகளை வாழ்த்தி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
எத்தனையோ அமைப்புகளுக்கு எத்தனையோ நூல்களைப் பற்றி பேசப் போனாலும் ஒரு அமைப்பேனும் விவாதிக்க எடுத்துக் கொள்கிறமாதிரி ஒரு நூலையும் இன்னும் எழுத வில்லையே என்று என்னையே நான் நொந்து கொள்வது உண்டு.
ஆனாலும் தொடர்ந்து இயங்க இதுமாதிரி நிகழ்வுகளே நம்மை உந்தித் தள்ளுகின்றன.
நன்றி மகளே. நன்றி துளசி.

நிலைத் தகவல் 42


கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ( மகளிர் ) அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் அருந்ததிய மாணவிகளுக்கான இடங்கள் யாரும் சேராததால் அப்படியே காலியாக இருப்பதாகவும் யாரேனும் ஏதாவது செய்தால் நல்லது என்பது மாதிரியும் தோழர் அ. மார்க்ஸ் ( Marx Anthonisamy ) வேதனையோடு எழுதியிருந்தார்கள்.
அதற்கு பின்னூட்டம் இட்டிருந்த ஒரு தோழர் அங்கு மட்டுமல்ல மாயவரம் , தஞ்சை உள்ளிட்ட இடங்களிலும் இப்படித்தான் என்று சொல்லியிருந்தார்.
அநேகமாக மாநிலம் முழுக்கவும் இதுதான் நிலையாக இருக்கக் கூடும்.
த.மு.எ.க.ச, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அருந்ததிய அமைப்புகள், அனைத்து இடதுசாரி அமைப்புகள் மற்றும் தோழர்கள் மட்டுமல்லாது விடுதலைச் சிறுத்தை அமைப்பினரும் இது விசயத்தில் கவனம் கொள்வது அவசியம்.
ஒவ்வொரு ஊரிலும் படிப்பைத் தொடர இயலாத அருந்ததிய குழந்தைகள் குறித்த விவரங்களை சேகரிப்பது என்பது அனைத்து ஊர்களிலும் கட்டமைப்பை வைத்திருக்கக் கூடிய மேற்சொன்ன அமைப்புகளுக்கு கடினமானது அல்ல.
அமைப்புகளை முடுக்கி விட்டு பட்டியல் தயாரித்து, அவர்களை பள்ளிகளில் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்.
பொருளாதார விஷயத்தில் தேவைப் பட்டாலும் நண்பர்களிடம் திரட்டி விடலாம்.

Thursday, June 26, 2014

நிலைத் தகவல் 41

இந்தி எம் மீது திணிக்கப் படுவதை மட்டுமல்ல, ஒருக்கால் பீஹாரி மீதோ, வங்காளி மீதோ அல்லது யார் மீதோ தமிழ் திணிக்கப் பட்டாலும் அதை எதிர்க்கவே செய்வோம்.

Thursday, June 19, 2014

நிலைத் தகவல் 40

குஜராத்தில் சனந்த் பகுதியில் உள்ள நானோ கார்த் தொழிற்சாலையை 35 முதல் 40 நாட்களுக்கு மூடுவது என்று டாடா நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக 15.06.2014 நாளிட்ட தீக்கதிர் சொல்கிறது.

இது அது தொடர்ந்து சந்தித்து வரும் நட்டத்தை ஈடு கட்டுவதற்கான முயற்சி என்றும் தெரிகிறது.

நண்பர்கள் எனக்குத் தெளிவு படுத்த வேண்டும்.

தொடர் நட்டம் என்று காரணம் சொல்லி இதை சிக் யூனிட் என்று இவர்களால் ஏதோ ஒரு புள்ளியில் சொல்லிவிட இயலுமா?

அப்படி இவர்கள் சொல்லும் பட்சத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியை செலுத்தத் தொடங்கினால் போதும் என்கிற சலுகையோடு வங்கி இவர்களுக்கு கொடுத்துள்ள 9000 கோடிக்கு நெறுக்கமான தொகையை வங்கி ரைட் ஆஃப் செய்து விட வாய்ப்புள்ளதா?

அதற்காகவே இவர்கள் இப்படி செய்வதற்கும் வாய்ப்பு உள்ளதா?

ஏன் கேட்கிறேன் எனில்,

வங்கிக் கடன் ஏறத்தாழ 9000 கோடி ரூபாய். ஆனால் நானோவின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 3000 கோடி மட்டுமே.

ஒருக்கால் கொடுத்த தொகைக்காக வங்கி சொத்துக்களை அப்போது எடுத்துக் கொண்டாலும் இவர்களுக்கு 6000 கோடி லாபமாகிறதே.

தெரிந்து கொள்வதற்கான சந்தேகங்களே இவை.

என் அய்யங்கள் சரி எனும் பட்சத்தில் இது குறித்து தரவு திரட்டி எழுதவும் இல்லாத பட்சத்தில் உண்மையை என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்கிறேன்.

Tuesday, June 17, 2014

நிலைத் தகவல்39

போனவாரம் ஒரு வேலையினிமித்தம் திருச்சி பெரிய கடை வீதி போயிருந்தேன்.

ஒரு இளைஞனை அடித்து காவல் நிலையத்திற்கு இழுத்துக் கொண்டு போனார்கள். விசாரித்தபோது அந்த இளைஞன் 300 ரூபாயை ஜேப்படி செய்து விட்டதாக அறிந்தேன்.

அந்தப் பகுதியின் காற்றுவெளி " 10 ரூவாயா இருக்கட்டும். திருட்டு திருட்டுதானே சார். " என்பது மாதிரியான பேச்சுக்களால் நிரம்பிக் கசிந்தது.

300 ரூபாய் திருடியவனையே தரும அடியோடு சிறைக்கும்
அனுப்பும் இந்த மண்ணில்தான்,

2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ONGC கு சொந்தமான எண்ணெய் வயல்களில் இருந்து ஏறத்தாழ 18 பில்லியன் கனமீட்டர்கள் இயற்கை வாயுவை ரிலையன்ஸ் நிறுவனம் திருடியிருப்பதாகவும் அதன் மதிப்பு கிட்டத் தட்ட 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்றும் ONGC வழக்குத் தொடுத்திருக்கிறது.

ONGC பொதுத்துறை நிறுவனம். எனில் மக்களது நிறுவனம். எனில் மக்களது பணம் 30 ஆயிரம் கோடியை ரிலையன்ஸ் திருடியிருப்பதாகத்தான் ONGC கூறுகிறது.

சும்மா சொல்லி வைத்தேன்.

Sunday, June 15, 2014

நிலைத் தகவல் 38

சிதம்பரம் அருகில் உள்ள பாலுத் தங்கரை பகுதியில் வசிக்கும் 20 நரிக் குறவ குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் படிக்காமல் சுற்றிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

இவர்களில் சிலர் துவக்கப் பள்ளி முடித்தவர்கள்.

இதை அறிந்த சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் அவர்கள் அந்தக் குழந்தைகள் தங்களது கல்வியைத் தொடர எடுத்த முயற்சியின் விளைவாக சிதம்பரம் நந்தனார் பள்ளியில் சில குழந்தைகள் எட்டாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளிலும் சேர்க்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது.

அதிலும் அதிலொரு குழந்தை பெண் குழந்தை என்பதும் அவளது பெயர் தமிழ்ச் செல்வி என்பதும் கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

குழந்தைகளை இன் முகத்தோடு வரவேற்று வாஞ்சையோடு அரவணைத்துக் கொண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்ராஜ் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் அவர்களையும் மனதார பாராட்டுகிறோம்.

கல்வி யாவருக்கும் பொதுவானது.

Tuesday, June 10, 2014

நிலைத் தகவல் 37

இங்க விட்டா சமயபுரம், தோல்கேட், சத்திரம்தான் நிக்கும் என்று படிக்கட்டில் நின்று கொண்டிருந்த நடத்துனர் சொல்லிக் கொண்டே இருந்தார்.

புறப்பட்ட பேருந்து சிறுவாச்சூரில் நின்றது.

அங்கும் ஏற வந்தவர்களிடம் இத உட்டா சமயபுரம், தோல்கேட், சத்திரம்தான் நிற்கும் என்றார்.

ஆலத்தூர் கேட், இரூர், பாடாலூர், நெடுங்கூர், அகரம், சிறுகனூர், கொணலை எல்லா இடங்களிலும் ஏற வந்த பயணிகளிடம் இதையே சொன்னார்.

சமயபுரம் வந்தது.

ஏறவந்த பயணிகளிடம் சொன்னார்,

” இதவிட்டா சமயபுரம், தோல்கேட், சத்திரம்தான் நிற்கும்.”

வாக்கு மாத்திப் பேசாதவர்கள் இப்பவும் இருக்கிறார்கள்தான்.

Monday, June 9, 2014

மீண்டுமொருமுறை நிகழ்ந்துவிடக் கூடாது…


மோடி வென்றிருக்கிறார். அதனை மனப்பூர்வமாக ஏற்போம். நாம் தோற்றிருக்கிறோம். அதையும் மனப்பூர்வமாக ஏற்போம். இதில் ”நாம்” என்பதில் யாருக்கேனும் கருத்துக்கள் இருப்பின் அவர்களையும் வென்றவர்களாகக் கருதி வாழ்த்திவிடுவோம். ஆனால் அவர் வந்துவிடக் கூடாது என்று நாம் ஒன்றும் பொழுது போகாததால் உழைக்கவில்லை. அதற்கு சில வலுவான காரணங்கள் இருந்தன. தேர்தல் முடிந்து விட்டதால் அந்தக் காரணங்கள் ஒன்றும் காணாமல் போய்விடவில்லை. கொஞ்சம் அசுர பலத்தோடான அவர்களது வெற்றி என்பது நம்மிடமிருந்த காரணங்களை இன்னும் கொஞ்சம் கூடுதாலாக பலப்படுத்தியுள்ளது என்றே கொள்ள வேண்டும்.

அதுதான் நமது கவலைக்கு காரணமே அல்லாமல் வேறு விகிதாச்சார கணக்குகள் எல்லாம் இல்லை. மூன்று சதவிகிதத்தை ஒட்டி வாக்குகள்  பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி ஒன்பது இடங்கள் பெற்றிருக்கும் போது 32 சதம் பெற்ற அவர்கள் 90 தானே பெற்றிருக்க வேண்டும் என்றோ அல்லது 3 சதவிகித்தத்தை ஒட்டிய வாக்குகள் பெற்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 37 இடங்களைப் பெற்றிருக்கும் போது அவர்கள் 370 இடங்களை அல்லவா வென்றிருக்க வேண்டும் என்றோ விகிதாச்சார கணக்குகளை எல்லாம் விவாதிக்க விரும்பவில்லை. இந்த ஜனநாயக நடை முறையில் நீங்கள் வென்றிருக்கிறீர்கள். அதைவிட முக்கியம் உங்களை மக்கள் வெற்றிபெற செய்திருக்கிறார்கள். அதை தலை வணங்கி ஏற்கிறோம்.

மோடி அவர்கள் கூறியுள்ளபடி வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பிறகுப் பிறந்த ஒருவர் முதன்முறையாக பிரதமர் பதவிக்கு வந்திருக்கிறார். இதற்காக மட்டும் நாம் இவரை வாழ்த்தவில்லை. ஒருக்கால் காங்கிரஸ் வென்றிருந்தால் இவரைவிடவும்  இளைய மனிதர் இந்த இடத்திற்கு வந்திருப்பார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவரே பல இடங்களில் குறிப்பிட்டபடி தேநீர் விற்றுக் கொண்டிருந்த திரு மோடி பிரதமராகியிருக்கிறார். இதில் இந்த உலகிற்கு உரத்துக் கூற ஒரு விஷயம் நமக்கிருக்கிறது. மக்கள் விரும்பினால் மிகச் சாமானியரான தேநீர் விற்றுக் கொண்டிருந்தவராலும் எங்கள் மண்ணில் பிரதமராகலாம் என்பதே அது. இது எங்கள் மண்ணின் மாண்பு. ஆனால் இவை யாவும் கடந்து நாம் கவலைப் படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.
அனால் அவை பற்றி பார்க்கும் முன் தவறாகக் கட்டமைக்கப் பட்டுள்ள ஒரு பிம்பத்தை நாம் உடைத்தாக வேண்டும். இது திடீரென்று மிக வலுவாக உருவான மோடி பேரலை என்று ஒரு பொய்யை சொல்லி சொல்லியே உண்மையாக்கப் பார்க்கிறார்கள். இது திரு மோடி மற்றும் RSS அமைப்பின் பத்தாண்டுக் கால உழைப்பின் பலன் என்பது பெரும்பான்மை பாரதிய ஜனதாக் கட்சி ஊழியர்களே அறிந்திராத உண்மை.

இது முழுக்க முழுக்க மோடி அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்றுகூட கொள்ள முடியாது. தேசம் முழுக்கப் பார்த்தால் காங்கிரசையும் அதனை ஆதரித்த கட்சிகளையும் மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். காங்கிரசைஆதரிக்காத கட்சிகளை மக்கள் ஆர்வத்தோடு தேர்ந்தெடுத்திருப்பதை நாமிங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். காங்கிரசை ஆதரிக்காத கட்சிகள் வேறு இல்லாத இடங்களில்தான் பி.ஜே.பி எளிதாக வென்றிருக்கிறது.

போக இடதுசாரிகள் தேர்தலுக்கு முன்பே மூன்றாவது அணியினை உருவாக்காமல் போனதும்கூட இவர்களது பெரு வெற்றிக்கான வலுவான காரணம்தான்.

எது எப்படியோ ஒரு மாபெரும் வெற்றியை மக்கள் அவர்களுக்கு தந்திருக்கிறார்கள். ஐந்தாண்டுக் காலம் இந்த மண்ணை ஆளுகிற உரிமை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதில் அச்சப் படுவதற்கு நமக்கென்ன இருக்கிறது?. நிறைய இருக்கிறது.

பொருளாதாரத் தளத்தில், அசுர ஊழலில், கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் உறவில் இவர்களுக்கும் காங்கிரசிற்கும் எந்தப் புள்ளியிலும் விலகல் இருக்காது என்பதால் அது குறித்தும் நாம் குறிப்பாக கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் வந்திருந்தால் எதை செய்திருப்பார்களோ அதையேதான் இவர்களும் செய்வார்கள் என்கிற அளவில் பெரிய வேறுபாடு ஏதுமிருக்கப் போவதில்லை. எனவே பொருளாதாரத் தளத்தில் நமது நேற்றையப் போராட்டத்தை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கும் தொடரவேண்டிய கட்டாயம் உள்ளது. அது ஒன்றும் புதிதல்ல.

ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள் என்ற ஒரு நினைவே சிறுபான்மையினரது மத்தியில் ஒரும் பெரும் பதட்டத்தை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்த பொழுது ஒருநாள் நான் பெரிதும் மதிக்கிற ஆசிரியை ஒருவர் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் தினமும் தினமும் இஸ்லாமியர்களைக் கொன்றுகொண்டா இருக்கப் போகிறார்கள்?. ஏனிப்படி மிகையாக பதறுகிறீர்கள்? என்று கேட்டார். நாம் ஏதோ கூடுதலாகத்தான் அச்சப் படுகிறோமோ என்றுகூட எண்ணத் தோன்றியது. அதற்கு அடுத்த நாள் தேர்தல் முடிந்ததும் மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என்று கிரிதரன் சொன்னார்.

இந்துக்களைத் தவிர ஏனையோர் என்பதிலிருந்து மோடியை எதிர்ப்பவர்கள் என்ற நிலைக்கு பந்து வந்து நிற்கிறது. எனில், மோடியை ஆதரிப்பதே இந்துவின் அடையாளம் என்றாகிறது. மோடியையை ஆதரிக்காதவன் இந்துவாக இருப்பினும் அவன் இந்து அல்ல என்பதே இதன் பொருளாகிறது. இதுதான் பாசிசத்தின் கொடூர உச்சம்.

அதற்கும் சில நாள் கழித்து தொகாடியா ஒரு காரியத்தை செய்தார். ஒரு இஸ்லாமியர் ஒரு வீட்டை ஒரு இந்துவிடமிருந்து விலைக்கு வாங்குகிறார். குடியும் வந்துவிட்டார். ஒரு பெரிய கும்பலை அந்த வீட்டின் முன் திரட்டி அசிங்கமானதொரு போராட்டத்தை நடத்தினார் தொகாடியா. அந்த இஸ்லாமியர், வீட்டை விட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேறிவிட வேண்டும் என்கிறார். இஸ்லாமியர்கள் இடம் வாங்கும் உரிமை அற்றவர்கள் என்றும், அதுவும் இந்துக்களிடமிருந்து வாங்கும் உரிமை இல்லை என்றும் கூறுகிறார். ஒருக்கால் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் வீட்டைக் காலி செய்யா விட்டால் என்ன செய்தேனும் அவரைக் காலி செய்ய வைக்க வேண்டும் என்று கூட்டத்தினரிடம் கூறுகிறார். மட்டுமல்ல அராஜகத்தின் எந்த உசரத்திற்கும் போகலாமென்றும் வழக்கு என்று வருமானால் பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார். வழக்கென வந்தால் குறைந்த பட்சம் 25 ஆண்டுகளாவது ஆகும். நமது ஆட்சி வரப் போகிறது. தைரியமாக நடத்துங்கள் என்று கூடியிருந்த திரளை உசுப்பேற்றிவிடுகிறார்.

தொகாடியாவும் கிரிதரனும் சாதாரண ஆட்கள் இல்லை. ஒருவர் பி.ஜே.பி யின் ஒரு மாநிலத் தலைவர், இன்னொருவர் RSSஅமைப்பின் மாபெரும் தலைவர்.  ஒன்றும் நடந்துவிடாது ஏன் பதறுகிறீர்கள் என்று கேட்பவர்கள் நம்மைப் போல சாமானியர்களாக உள்ளனர். அச்சமூட்டுபவர்களோ சர்வ பலம் பெற்றவர்களாக உள்ளனர்.

தேர்தலுக்காக பறந்து பறந்து தேநீர் குடிப்பதும் பிரச்சாரம் செய்வதுமாக மோடி இருந்த காலத்தில்தான் மேற்சொன்ன இரு சம்பவங்களும் நிகழ்ந்தன. அவர்களது செய்கை தேர்தலில் பாதகத்தை உண்டுபன்னிவிடுமோ என்ற கால கட்டத்திலேயே அவர்கள் இப்படி என்றால் பதவியேற்றபிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதே சிறுபான்மையினரிடையே அதிலுங் குறிப்பாக இஸ்லாமியரிடையே உள்ள பதட்டத்திற்கு காரணம்.

ஒரு குறிப்பிட்ட மக்கள் திரள் பதட்டத்தோடு இருப்பது எந்த ஒரு மண்ணுக்கும் சமூகத்திற்கும் நல்லதல்ல என்பதோடு இந்தப் பிரச்சினையை முடிப்போம்.

முதலில் அனைத்து இந்துக்களையும் இந்துக்களாகவே இவர்கள் பார்க்கவேண்டும் என்பதே நமது கோரிக்கை. அன்புமணியை மட்டும் இந்துவாகப் பார்ப்பதும் இளவரசனை அப்படிப் பார்க்காமல் தவிர்ப்பதும் தொடர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே நாம் கவலைப் படுகிறோம். வரலாறு நெடுக எல்லா இந்துக்களும் இந்துக்களாகப் பார்க்கப் படவில்லை.சாதி இந்துக்களே இந்துக்களாக பார்க்கப் பட்டனர். அவர்கள் எப்படி இந்துக்களாக பார்க்கப் படவில்லை என்பதை நாம் சுட்டிக் காட்டுவதென்பதுகூட அது தொடராமல் ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.

இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையை ஒட்டி இந்தியாவிற்கு வந்துவிட விரும்பிய இந்துக்கள் இந்தியாவிற்கும் இங்கிருந்து பாக்கிஸ்தான் செல்ல விரும்பிய இஸ்லாமியர்கள் பாகிஸ்தானிற்கும் புலம் பெயர்ந்தனர். இந்திய எல்லையில் இரண்டு விதமான முகாம்கள் இருந்தன. ஒன்று இங்கிருந்து பாகிஸ்தான் போக விரும்பிய இஸ்லாமியர்களுக்கானது. மற்றொன்று பாக்கிஸ்தானிலிருந்து இந்தியா வந்த இந்துக்களுக்கானது.

இதில் இஸ்லாமியர்களுக்கான முகாம்களில் இஸ்லாமியர்கள் தங்கினார்கள். இந்துக்களுக்கான முகாம்களில் அங்கிருந்து வந்த சாதி இந்துக்கள் மட்டுமே தங்கவைக்கப் பட்டனர். இரண்டு முகாம்களிலும் தங்க இயலாத தலித்துகள் தவித்தார்கள் என்பது பிரச்சார மேடைகள் தோறும் வரலாற்று நிகழ்வுகளாக சொல்லி நம்மை மெய் சிலிர்க்கவைத்த மோடி அவர்களுக்கு நினைவு படுத்த வேண்டியது நமது கடமையே ஆகும்.
இந்துக்களாகவும் இல்லாமல் இஸ்லாமியராகவும் இல்லாமல் தவித்த தலித்துகள் தங்களுக்காக ஒரு தனிநாடு கேட்டு இயக்கம் தொடங்கினார்கள் என்பதுதான் வரலாறு. சாதி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் அப்போதிருந்த சகலவிதமான பலத்தில் ஒரு சிறு துளியும் தலித்துகளிடம் அப்போது இருக்கவில்லை. அதனால்தான் அந்த இயக்கம் வலுப்பெற்று வெற்ரி பெறாமல் போனது மட்டுமல்ல வரலாற்றிலும் வஞ்சகமாக மறைக்கப் பட்டுவிட்டது.  1946 வாக்கில் தலித்துகள் தாங்கள் இந்துக்களும் இல்லை என்றும் இஸ்லாமியர்களும் இல்லை என்றும் மேல் சாதியினர் பார்வையில் தாங்கள் தீண்டத் தகாதவர்கள், அசுத்தமானவர்கள் என்றும் கூறினர். எனவே தங்களுக்கு அசுத்தஸ்தான் என்ற ஒரு நாட்டைத் தந்துவிடுங்கள் என்றும் தலித்துகள் கோரியிருக்கிறார்கள். இயக்கம்கூட கண்டிருக்கிறார்கள் என்பதை மோடி அவர்களின் கவனத்திற்குகொண்டு வருகிறோம்.

1946 இல் திரு பியாலால் “அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை” நிறுவியதாக 1947 என்ற தனது அழுத்தமான குறுநூலில் தமிழ்செல்வன் கூறுகிறார்.

இதெல்லாம் முன்பு எப்போதோ நடந்தது. சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகு நிலைமை வெகுவாக மாறியிருக்கும் என்று யாரேனும் நம்பினால் ஏமாந்து போவோம். எல்லாம் வளர்ந்துபோன நிலையைப் போலவே தலித்துகளது துயரங்களும் வளர்ந்துகொண்டுதான் போகின்றன.

பொதுத் தொகுதி ஒன்றில் தலித் ஒருவர் நிற்க முடியாத சூழல் இந்த நாட்டில் இன்றைக்கும் இருக்கிறது. நிற்கலாமே? யார் தடுத்தது? என்றெல்லாம்கூட கேட்கலாம். நிற்க முடியவில்லை என்பதுதான் இன்றைக்கு நாம் காணும் எதார்த்தம். ஏறத்தாழ பத்தாண்டுக்காலம் மத்திய அமைச்சராக பணியாற்றிய ஆ.ராசா அவர்களே தனது சொந்தத் தொகுதி பொதுத் தொகுதியானதும் வேறு ஒரு தொகுதிக்கு பயணப்பட வேண்டி வந்தது. உலகமே அவரை ஒரு ஊழலோடு சம்பந்தப் படுத்திப் பார்த்தாலும் பெரம்பலூர் மக்கள் அவரை பெரிய ஊழல் வாதியாக பார்க்கவில்லை. இந்த மண்ணின் மைந்தனாகவே அவர் இன்றும் கொண்டாடப் படுகிறார். அப்படிப் பட்டவருக்கே இன்று இதுதான் நிலைமை.

இந்த வகையில் எல்லாத் தொகுதிகளுமே பொதுத் தொகுதியாகிவிட்டால் தலித்துகளின் பிரதிநிதித்துவம் இல்லவே இல்லாமல் போய்விடாதா? இதைவிட இன்னுமொருபடி மேலே போயும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்தப் படும் என்றும், ரிசர்வேஷன் முறை எடுக்கப் பட்டுவிடும் என்றும் ஒரு அச்சம் நம்மிடம் இருக்கிறது. ஒருக்கால் இதை இவர்கள் செய்தால் படிப்பில், வேலை வாய்ப்பில் கொஞ்ச நஞ்சம் தலித்துகளுக்கு இருக்கிற வாய்ப்பும் இல்லாமல் போய்விடுமே என்கிற அச்சம் பி.ஜே.பி யைப் பற்றி அறிந்த சமூக அக்கறையுள்ள மக்களிடம் இயல்பாகவே எழுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

பாப்பாபட்டியும் கீறிப்பட்டியும் தலித்துகளுக்காக ஒதுக்கப் பட்ட பிறகு அங்கு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கட்டம் வரைக்கும் யாரையும் நிற்கவிடாமல் தடுத்தனர். பிறகு தங்கள் சொல்பேச்சைக் கேட்கக் கூடிய, பச்சையாக சொல்லப் போனால் தங்களது பண்ணையாட்களை போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்து உடனேயே ராஜினாமா செய்துவிட செய்தனர்.

அடிமைகளாக இறுக்கப் பொறுக்காமல் பௌத்தம் தழுவிய பிறகும் கயர்லாஞ்சியில் பய்யலால் குடும்பத்தினரை ஆதிக்க சாதியினர் செய்த கொடுமையையும் இந்த நேரத்தில் கவனத்திற்கு கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. பய்யலால் மனைவி சுரேகாவையும் அவரது மகள் பிரியங்காவையும் மகன்களையும் நடுச் சந்திக்கு இழுத்தே வந்தனர். அம்மாவையும் சகோதரியையும் எல்லோர் முன்னாலும் புணரச் சொல்லினர். மறுத்த இரு சகோதரர்கச்ளின் ஆணுறுப்பையும் வெட்டுகின்றனர். ஊரில் உள்ள ஆண்களெல்லாம் சுரேகாவையும் பிரியங்காவையும் வன்புணறுகின்றனர். கொன்று இருவரையும் வாய்க்காலில் வீசுகின்றனர். இவ்வளவு நடந்த இடத்திற்கு காவலர்கள் அடுத்த நாள் வருகிறார்கள். பரிசோதனை செய்த மருத்துவர் அவர்கள் புணரப் படவில்லை என்று சான்றளிக்கிறார். இதையே நீதி மன்றர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிய முடியாது என்கிறது. இதையே முடியாது என்று சொன்னால் வேறு எதை இந்தச் சட்டத்தின் கீழ் பதிவது.
நிலைமை இப்படி இருக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுவதால் அதை முற்றாக ஒழித்துவிட வேண்டும் என்று ஆசைப் படுவதோடு பொதுக் கூட்டங்களிலும் பேசி வருகிறார் மருத்துவர் ராமதாசு அவர்கள். அதை செய்துவிடக் கூடிய பலமும் அவருக்கு இப்போது கிட்டியிருப்பது நமது பதட்டத்தையும் பொறுப்பையும் கூட்டியிருக்கிறது.

இப்போது ஒரு ஊரில் தலித்துகள் ஊர்விலக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. எனில் அந்த ஊரில் உள்ள ஆதிக்க சாதியினர் தலித்துகளோடு பேசுவது உள்ளிட்டு எந்த உறவையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தண்ணீர் தர மாட்டார்கள். வேலை தர மாட்டார்கள். ஒருவருக்கு கடுமையான தலைவலி என்றால் ஒரு ரூபாய்க்கு அனாசின் வாங்க போக பத்து ரூபாயும் வர பத்து ரூபாயும் ரெண்டுமணி நேரமும் செலவு செய்தாக வேண்டும்.

இன்னும் நிறைய ஊர்களில் தீண்டாமைச் சுவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

மேற்சொன்ன பாதிப்புகளுக்கு ஆளான அனைவரும் இந்துக்களே. இவற்றை சொல்வதற்குக் காரணம் இவற்றை நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் இவை தொடரும் என்பதாலேயே.
அவர்கள் பொறுப்பேற்க இருக்கும் தருணத்தில்  மேற்சொன்ன பாதிப்புகளுக்கு ஆளானோர் அனைவரும் இந்துக்கள்தான் என்பதையும், மீண்டுமொருமுறை இதுபோன்ற பாதிப்புகள் அவர்களுக்கு நிகழ்ந்து விடக் கூடாது என்பதையும் உலகில் எந்த மூலையில் இந்துக்கள் பாதிக்கப் பட்டாலும் தங்களது அரசு தலையிட்டு சரி செய்யும் என்ற அவர்களது தேர்தல் அறிக்கையையும் மீண்டுமொரு முறை நினைவூட்ட கடமை பட்டிருக்கிறோம்.

அத்தோடு சிறுபான்மையினரின் பதட்டத்தையும் இவர்கள் தனிக்க முயல வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். பூமி பதட்டப் பட்டால் முதலாளிகள் மகிழ்வார்கள். கொண்டாடுவார்கள், செலவு செய்வார்கள். ஆனால் வரலாறு தினம் தினமும் சித்திரவதை செய்து சிறுமை படுத்தும் என்பதையும் சொல்லி வைப்போம்.

நன்றி : காக்கைச் சிறகினிலே
  
                                                                                        


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...