Thursday, December 31, 2015

7 மாப்பிள்ளை பெஞ்ச்

முதல் பெஞ்ச் மாணவர்கள் மீது கவனம் குவிக்கும் ஆசிரியர்களை விடவும் கடைசி பெஞ்ச்சான மாப்பிள்ளை பெஞ்ச் மாணவர்கள் மீது கவனம் குவிக்கும் ஆசிரியர்கள் மீதே எனக்கு மரியாதை அதிகம். காரணம் முதல் வரிசை பெஞ்ச்சுகளிலிருந்து ஒரு மருத்துவரோ அல்லது ஒரு வழக்கறிஞரோ அல்லது ஒரு ஒறியியல் மேதையோ அல்லது அதிக பட்சமாக என்னை மாதிரி ஒரு அதிகாரியோதன் உருவாக முடியும். ஆனால் மாப்பிள்ளை பெஞ்ச்சுகளில் இருந்துதான் தலைவர்கள் உருவாகிறார்கள்.

நல்ல மருத்துவரைவிடவும், நல்ல வழக்கறிஞரை விடவும், நல்ல அதிகாரியை விடவும் நல்ல தலைவருக்கான தேவை மிகவும் அவசியமாக இருக்கிறது. காரணம் நல்ல தலைவனால் மட்டுமே இந்த மண்ணின், மக்களின் தலை எழுத்தை சரியாக மாற்றி எழுத முடியும்.

ஆகவேதான் என் அன்பிற்குரிய ஆசிரிய நண்பர்களே, இந்த தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் தலைவர்கள் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை பெஞ்ச்சுகளின் மீது நீங்கள் பேரதிக கவனம் செலுத்த வேண்டுமாய் உங்களை மிகுந்த உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்

என்று எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் திண்டுக்கல்லில் நடைபெற்றதமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகமண்டல மாநாட்டில் என் பெருமரியாதைக்குரிய பள்ளிக் கல்வித்துறையின் அன்றைய இணை இயக்குனரும் இன்றைய தமிழ்நாடு பாட நூற்கழகத்தின் இயக்குனருமான திரு கார்மேகம் அவர்கள் பேசியபோது மாநாடே அதிர்ந்தது.

இதைக் கேட்டதும் அந்த மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்த அன்றைய அமைச்சர் மாண்பமை .பெரியசாமி அவர்களும் அன்றைய திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய சிந்தன் அவர்களும் வெடித்துச் சிரித்து கைதட்டி ஆரவாரித்தனர். காரணம் அந்தக் கோரிக்கையின் ஆழத்தையும் அவசியத்தையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.

மாப்பிள்ளை பெஞ்ச் என்று ஏன் பெயர் வந்ததென்று சரியாய் தெரியவில்லை. மாமியார் வீட்டிற்கு வருகை தரும் மாப்பிள்ளைகள் அங்கு எந்த விதமான வேலைகளையும் செய்யாமல் ஒருவிதமான அலட்சியமான மனப்போக்குடனும், தேவைக்கு மேலான மிகை மிடுக்குடனும் இருப்பார்கள் என்ற பொதுப் புத்தியிலிருந்து இந்தப் பெயர் பிறந்திருக்கக் கூடும்.

ஒரு காலம் வரைக்கும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உயரத்திற்கு தகுந்தமாதிரிதான் அமர வைத்தார்கள். அதவது உயரம் குறைந்தவர்கள் முதல் வரிசையிலும் அவர்களை விடவும் கொஞ்சம் உயரமானவர்கள் அடுத்த வரிசையிலும் அதைவிட அதிக உயரமானோர் அதற்கடுத்த வரிசையிலும் என்பதுமாக நகரும். ஆசிரியரையும் கரும்பலகையும் அனைவரும் பார்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தோன்றிய ஏற்பாடு இது.

ஏதோ ஒரு புள்ளியில் இது அதிகமாய் படிப்பில் கவனம் இல்லாத, அதிகமாய் சேட்டை செய்யக் கூடிய பிள்ளைகளின் வரிசை என்றாகிப் போயிருக்க வேண்டும். இத்தகைய ஏற்பாடானது தவறானது மட்டுமல்ல, தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்,

ஒரு கட்டத்தில் பின் வரிசைகளில் ஒடுக்கப் பட்ட ஜாதிகளைச் சேர்ந்த குழந்தைகள் அமர வைக்க படிருந்திருக்கின்றனர். அதுவும் ஆதிக்க ஜாதி மற்றும் இடைசாதிப் பிள்ளைகள் முன் வரிசைகளில் பெஞ்ச்சுகளில் அமர்ந்திருக்க ஒடுக்கப் பட்ட ஜாதிப் பிள்ளைகள் பின் வரிசைகளில், அதுவும் தரையில் உட்கார வைக்கப் பட்டிருந்திருக்கின்றனர். இத்தகைய வர்ணத்தின்பாற்பட்ட ஒதுக்குமுறை எவ்வளவு இழிவானது அயோக்கியத்தனமானது என்பதையெல்லாம் அடுத்தடுத்த பாராக்களுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு இது எவ்வளவு பயனற்றது என்பதைப் பார்ப்போம்.

இதே ஆதிக்கத் தெறிப்பினை இன்றும்கூட கிராமங்களில் நடக்கும் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் காண இயலும். அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆண்கள் எல்லாம் நாற்காலிகளில் அமர்வதும், பெண்கள் தரையில் அமர்வதுமான ஒரு நடைமுறை வாடிக்கையாகும். இதில் கொடுமை என்னவெனில் அழுக்கு கைலியோடு இருக்கிற, சாப்பாடும் சீட்டுக் கட்டும் தவிர காலணா சம்பாரிக்காத ஆண், அவர் ஆண் என்ற ஒரே காரணத்திற்காக நாற்காலியில் அமர்ந்திருப்பார். பத்தாயிரம் ரூபாய் பட்டு சேலையோடு நன்கு படித்த நல்ல அரசுப் பணியில் இருக்கிற பெண், அவர் பெண் என்ற காரணத்திற்காக தரையில் அமர்ந்திருப்பார். பட்டு புடவை அழுக்கானால் துவைப்பது சிரமம் கைலியை சுலபமாகத் துவைத்து விடலாம் என்கிற நடைமுறை எதார்த்தத்தைக் கூட இந்த ஆணாதிக்கத் திமிர் கணக்கிலெடுக்க மறுத்து வந்தது. நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் அல இடங்களில் இன்னும் இந்த நிலை மாறாமல்தான் இருக்கிறது.

ஆனால் இங்கும்கூட தரையில் அமர்கிற பெண்களுக்கு முன் வரிசைகளும் நாற்காலியில் அமர்பவர்களுக்கு தரையில் அமர்ந்திருப்பவர்களுக்கு பின்னால் உள்ள வரிசைகளும் என்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும். இதற்கான காரணம் எளிதானது. தரையில் அமர்ந்திருப்பவர்கள் முன்னால் அமர்ந்தால்தான் அவர்களால் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு பின்னால் பெண்களை தரையில் அமரச் செய்தால் அவர்களால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு இயலாது.

இத்தகையொதொரு நடைமுறைகூட அந்தக் காலத்தில் வகுபறைகளில் கடைபிடிக்கப் படவில்லை. பெஞ்ச்சுகளில் அமரக் கூடிய மாணவர்களுக்கு முன் வரிசைகளில்கூட தரையில் அமருமாறு நிர்ப்பந்திக்கப் பட்ட ஒடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு வழங்கப் படவில்லை. தரையில் அமரக் கூடிய பெண்கள் நாற்காலிகளுக்கு பின்னால் அமர்ந்தால் அவர்களுக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்க இயலாது எனவே அவர்களை நாற்காலிகளுக்கு முன்னால் அமரவைக்க வேண்டும் என்று படிக்காத கிராமத்து பெரிசுகளுக்கு இருக்கிற நடைமுறை ஞானம் நன்கு படித்த, கல்வியைப் போதிக்கிற ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தெரியாமல் இருக்கும் நம்புமளவிற்கு நாமொன்றும் கிறுக்குகள் அல்ல. இன்னும் சொல்லப் போனால் கிறுக்குகளுக்கே இந்த நடைமுறையில் உள்ள சூதும் அயோக்கியத் தனமும் புரியவே செய்யும்.

அவர்களது இந்தக் கொடூரமான நடைமுறைக்கு பின்னால் ஒரு தெளிவான வர்ணங்களால் நெய்யப் பட்ட ஒரு தெளிவான திட்டம் இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை ஒடுக்கப் பட்ட ஜாதிக் குழந்தைகளுக்கு கல்வியைத் தரக் கூடாது. அப்படி அவர்கள் கல்வியைப் பெற்றுவிட்டால் அவர்கள் தங்களுக்கு அடங்க மறுப்பார்கள். எதை சொன்னாலும் கேட்டுக் கொண்டு தங்களுக்கு தொண்டூழியம் செய்து கொண்டிருக்கும் இவர்கள் அள்ளிக்கு வந்து கல்வியைப் பெற்றுவிட்டால் அவர்களுக்கு விடுதலைத் தாகம் வந்து விடும். காலங்காலமாக கட்டப்பட்டு கிடக்கும் அடிமைக் கைகள் காற்றைக் கிழித்துக் கொண்டு தங்களது உரிமைகளுக்காக உயரும். இடுப்பிலிருந்து துண்டு தோளுக்கு இடம் மாறும் எனவே இவர்களுக்கு கல்வி கிடைத்துவிடாமல் என்னென்னவெல்லாம் செய்ய இயலுமோ அத்தனையையும் செய்து பார்த்தனர்.

ஒரு புள்ளிக்குமேல் அவர்கள் பள்ளிகளுக்கு வருவதை தடுக்க இயலாது என்பதைப் புரிந்து கொண்டபின் உள்ளுக்குள் அனுமதிப்பது அதே நேரத்தில் அவர்கள் கற்றுக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது என்கிற திட்டத்தின் தெறிப்புதான் பெஞ்ச்சுகளில் அமர்ந்திருக்கும் ஆதிக்க மற்றும் இடைசாதிக் குழந்தைகளுக்கு பின்னால் தரையில் அமர்ந்து வகுப்புகளை கவனிக்கச் செய்வது. இந்த படிநிலை அவர்களிடம் உளவியல் ரீதியாக தான் கீழ்தான் என்பதை ஒருவிதமான உறுத்துதலோடு சொல்லிக் கொண்டே இருக்கும்.

இப்படி ஒடுக்கப் பட்டத் திரள் குழந்தைகள் பள்ளிகளுக்கு வரும் வரைக்கும் அநேகமாக மாணவர்கள் உயர வரிசைப்படிதான் அமரவைக்கப் பட்டிருக்க வேண்டும்.

இதற்கெல்லாம் பிறகுதான் மாப்பிள்ளை பெஞ்ச் என்ற ஒரு கருத்தாக்கமே நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். படிப்பு வராத பிள்ளைகளை மாப்பிள்ளை பெஞ்ச்சில் அமரவைப்பது என்கிற நடைமுறையில்கூட சாதி அரசியல் இருப்பதாகவேத் தோன்றுகிறது.

பெஞ்ச்சுகளுக்குப் பின்னால் தரையில் அமர்ந்திருந்த குழந்தைகளை நீண்ட போராட்டங்களே பெஞ்ச்சுகளை நோக்கித் தள்ளியிருக்க வேண்டும். இனியும் இவர்கள் பெஞ்ச்சுகளில் அமர்வதைத் தடுக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட ஆதிக்க வர்க்கம் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. பெஞ்ச்சுகளில் அமர்வதைத் தடுக்க முடியாது. குறைந்த பட்சம் நமது குழந்தைகளுக்கு பின்னால் அமருமாரேனும் ஆர்த்துக் கொள்வது என்று முடிவெடுத்துதான் அடிக்கிற குழந்தைகள் முதலில் என்கிற நடைமுறையைக் கொண்டு வந்திருக்க வேண்டும். இந்த ஏற்பாட்டின்படி தலைமுறைத் தலைமுறையாக கல்விபெற்று வரும் தங்கள் வீட்டுக் குழந்தைகளோடு இந்த முதல் தலைமுறைக் குழந்தைகளால் போட்டிபோட முடியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

இவை எல்லாம் கடந்து எல்லோரும் சமம் என்கிற இன்றைய எழுத்தளவு நிலை என்பதற்கு பின்னால் மிகப் பெரிய போராட்டங்களும் தியாகங்களும் உள்ளன. கடந்த காலங்களைப் போலெல்லாம் இல்லை என்றாலும் இந்த நவீன காலத்து இருக்கை ஒதுக்கீட்டிலும்கூட சாதி அரசியல் இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

சாதி மட்டுமல்ல படிப்பும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாப்பிள்ளை பெஞ்சுகளை தீர்மானிக்கக் கூடாது என்பதில் சட்டம் தெளிவாகவே இருக்கிறது. அப்படி உட்கார வைத்தால் அது குற்றம். படிப்பை அளவுகோளாகக் கொண்டு ஒரு மாணாவனின் அமர்விடத்தைத் தீர்மானித்தாலும் அதைச் செய்பவர் தனது வேலையை இழப்பதோடு சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் அவர் ஆளாக நேரிடும்.

இவை மாதிரியான கறார் நடவடிக்கைகள் பெருமளவு மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. ஆனால் எந்தவகை திணித்தலுமின்றியே கடைசி வரிசை பெஞ்சுகள் எரும்பான்மை இடங்களில் மாப்பிள்ளை பெஞ்சுகளாகவே மாறிவிடுவதை தவிர்க்க இயலவில்லை என்பதை நம்மால் மறுக்க இயலாது.

இப்போது அவரது உரைக்கு வருவோம். பின்வரிசை மாணவர்கள்மீது ஏன் அதிக கவனம் குவிக்க வேண்டும். அதனால் என்ன விளைந்துவிடப் போகிறது?

பின் வரிசை மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள் என்று சொல்வதிற்கில்லை. ஆனால் பின்வரிசை மாணவர்களை விடவும் முன்வரிசை மாணவர்களுக்கு படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் என்பதை அப்படி ஒன்றும் போகிற போக்கில் மறுத்துவிட்டுப் போய்விட முடியாது. அதேபோல முன் வரிசை மாணவர்களுக்கு சமூக அக்கறையோ செயல்பாடோ இருக்காது இருக்காது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் முன்வரிசை மாணவர்களைக் காட்டிலும் பின்வரிசை மாணவர்கள் இதுமாதிரி விஷயங்களில் கூடுதல் கவனம் இருக்கும் என்பதையும் நம்மால் மறுத்துவிட முடியாது.       

முன் வரிசை மாணவர்கள் அல்லது பெரும்பான்மையான முன் வைசை மாணவர்கள் படிப்பு, படிப்பு, படிப்புஇதைக் கடந்து உனக்கு எதுவும் இல்லை என்பதை பெற்றோர், உறவினர், ஆசிரியர் இவர்களைக் கடந்து சமூக நெறியாளர்கள் என்று வரிசைகட்டி நின்று ஊட்டிவிட்டதை அபடியே உள்வாங்கிக் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். அப்பாவே இறந்துபோனாலும் நீ பள்ளிக்கு போக வேண்டும் உனக்கு உரிய தேர்வுகளை மனம் பிசகாமல் எழுத வேண்டும். நல்ல மதிப்பெண், நல்ல வேலை, நல்ல பேக்கேஜ் அதுதான் உனது ஒரே இலக்காக இருக்க வேண்டும்.

சினிமா, தொலைக் காட்சி, நல்லது, கெட்டது, கோவில், திருவிழா என்று எதன்மீதும் உன் கவனம் திரும்பிவிடக் கூடாது என்ற அவர்களது மீண்டும் மீண்டுமான போதனைகளில் வடிவமைக்கப் பட்ட இயந்திரமாகவே மாறிப் போகிறான். எல்லோருமே இந்த வரையறைக்குள் சிக்கிக் கொள்வார்கள் என்றோ விதி விலக்குகள் இல்லை என்றோ நான் சொல்லவில்லை.

சாலையோரத்து விபத்துக்களைக்கூட எதையோ மனனம் செய்தவாறே கடக்கும் குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் அவனது தெருவில் யாரேனும் மரணித்தாலும் பள்ளிக்குப் போகாமல் அந்த மரண வீட்டு வேலைகளை பின்னிருக்கைப் பிள்ளைகள் செய்து கொண்டிருப்பார்கள். வகுப்புத் தோழனது அல்லது தோழியினுடைய அப்பாவோ அம்மாவோ இறந்துவிடுகிற பட்சத்தில் படிக்கிற மாணவன் மிகுந்த வருத்தத்தோடு பள்ளிக்கு வருவான். ஒருக்கால் அனுமதி கிடைத்தால் வீட்டிற்கோ அல்லது தனி பயிற்சிக்கோ போகிற வழியில் ஒரு எட்டு தலையைக் காட்டிவிட்டு போவான். பின்னிருக்கை பிள்ளையோ தனது பெற்றோர் அல்லது ஆசிரியரின்  அனுமதியை எல்லாம் எதிர்பார்க்காமல் தனது தோழனோடு கூட இருப்பான். ’ஃப்ரெண்டோட அப்பா செத்துட்டாங்க அதவிட படிப்பு ஒன்னும் பெரிசில்லஎன்பான் அவன்.

படிப்பில் கவனமாக இருக்கக் கூடிய குழந்தைகளை இன்னும் இன்னும் செதுக்கி முழுமையானவனாய் உருவாக்கிவிட வேண்டும் என்பதில் நமக்கிருக்கும் அக்கறை சமூகத்தினால் அக்கறையோடிருக்கும் குழந்தையை இன்னும் இன்னும் செதுக்கி அவனது சமூக ஆளுமைப் பண்பை முழுமையாக்க வேண்டும் என்பதில் இல்லை.

முன்வரிசை பிள்ளைகளில் இருந்து நம்மால் சான்றோனை, மருத்துவனை, வழக்கறிஞனை, பொறியியல் வல்லுனரை, பெரிய அதிகாரிகளை நம்மால் உருவாக்க முடியும். அதைச் செய்வோம். அதே வேளை சமூக அக்கறையுள்ள கங்குகளை தலைவர்களை பின்னிருக்கைகளிலிருந்து உருவாக்க முடியும்.    

அதையும் தவிர்க்காமல் செய்வோம்

   

         


  
                         
              


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...